Advertisement

இரவு உணவு முடிந்து, தனது அறைக்கு சென்ற யாழினி, தன்னை சுத்தப்படுத்தி கொண்டு, எளிமையான உடைக்கு மாறிய பின்னர் தான், தந்தைக்கு செய்வதாக சொல்லிய உதவி நினைவு வந்தது.
முடியை அள்ளி கொண்டையிட முயன்ற யாழினிக்கு, துண்டு துண்டாக நறுக்கிய முடியை, மொத்தமாக அள்ளி முடிய முடியவில்லை.
அப்படியே முயன்று கொண்டையிட்டாலும், அடுத்த இரண்டே நொடிகளில் அவிழிந்து அவளை பார்த்து பல்லிளித்தது.
கடுப்புடன் முடியை உச்சியில் மட்டும் எடுத்து கிளிப் போட்டவள், மீதி முடியை அப்படியே விட்டு விட்டாள்.
பெரியவர்கள் எல்லாம் உறங்க சென்றிருக்க, வீட்டின் அநேக விளக்குகள் எல்லாம் கூட அணைக்கப்பட்டிருக்க, வரவேற்பறையில் மட்டும் விளக்கு எரிய, அங்கு தான் அமர்ந்து இருந்தான் இளவளவன்.
மாடி படியில் இறங்கிய யாழினியை பார்த்த, இளவளவனின் காதல் நெஞ்சம் ஒரு நிமிடம் நின்று துடிக்க,
“எப்பா என்னா அழகா இருக்கா”
என்று மூச்சு விட மறந்தவனாக தன்னவளை பார்த்தவன்,
“ஒரு வேளை இது நம்ப யாழினியோ இல்லாம நையிட்ல வரும்னு சொல்ற மோகினி பிசாசா இருக்குமோ”
என்ற ஐயத்தில் கண்ணை கசக்கி விட்டு பார்த்தவன், அது அவனுடையவள் தான் என்று உறுதியாக தெரிய,
“மனுஷனை கொல்றாளே”
என்று சிணுங்கியவனுக்கு, இந்த மோகன இரவில், அந்த மோகினியுடன் தான் வேலை பார்க்க வேண்டும் என்ற எண்ணமே, அவனின் சித்தம் தடுமாற போதுமாய் இருந்தது.
படியிறங்கும் தன்னவளை மனம் முழுவதும் நிரப்பி கொண்டவன், அவள் தன்னை நெருங்கும் முன், தன் முகபாவனையை மாற்ற முயன்று கொண்டிருந்தான்.
ஆனால் அதற்கு எல்லாம் அவசியமே இல்லை என்பது போல, கீழே இறங்கி வந்த யாழினி, இளவளவனை கண்டும் காணாதவள் போல, பெற்றோரின் அறையை நோக்கி சென்றாள்.
தன்னவளின் செயலில் பல்லை கடித்த இளவளவன்,
“இவளை என் வழிக்கு கொண்டு வரதுக்குள்ள, இவ எனக்கு இருக்குறதுல பாதி பல்லை பொடி பொடியாக ஆக்கிடுவா போல”
என்று முணுமுணுத்தவன், அவள் தன்னை கடக்கும் முன், அவளின் வழியை மரித்தவாறு முன்னாள் சென்று நிற்க, யாழினி,
“வழியை விடுங்க, நான் போய் பைல்ஸ் எடுக்கணும்”
என்று சொல்ல, அவளை கேலியாக பார்த்தவன், தன் முன் இருந்த கோப்புகளையும், மடிக்கணினியையும் சுட்டி காட்ட, அதை பார்த்த யாழினியோ,
“இது எல்லாம் ஏன் இங்க இருக்கு”
என்று வேண்டுமென்றே அவனை சந்தேகமாக பார்த்து வைக்க, அவளின் பார்வையில் கடுப்பான அவனோ,
“ஜம்பமா நான் பார்த்துகிறேனு சொல்லிட்டு, பொறுப்பே இல்லாம பைல்ஸ் அஹ கூட எடுக்காம, கையை வீசிக்கிட்டு ரூமுக்கு போய்ச்சி”
என்று அவளுக்கு ஒரு கொட்டு வைக்க, எப்போது பார்த்தாலும் இப்படி இவன் குற்றம் சொல்லும் படியே தன் செயல் இருப்பதில், தன் மீதே கடுப்பான யாழினி,
“நான் இதை எல்லாம் ரூமுக்கு எடுத்து கிட்டு போய் பார்த்துகிறேன்”
என்று தலையை குனிந்தபடி மொழிந்தவள், கோப்புகளையும் வாரி எடுக்க முயற்சிக்க, அவளை தடுத்த இளவளவன்,
“நீ இதை எல்லாத்தையும் தனியா செக் பண்ணா, எப்படியும் முடிக்க ஒரு முப்பது வருஷம் ஆகும், மேனஜர் வேற ஏதோ முக்கியமான பைல் இருக்கு, நாளைக்கே வேணும்னு சொன்னாரு”
என்று அவளை சீண்டி விட்டவன், ஏதோ போனால் போகிறது என்பது போல,
“உன்னை மட்டும் நம்பி அவ்ளோ முக்கியமான வேலையை விட முடியாது, வேற வழியில்லை வா, நானும் ஹெல்ப் பண்றேன், எல்லாம் அங்கிள்காக தான்”
என்று அவளை தனியே விட மனமில்லாதவன், அதேநேரம் இது அவளின் மீது கொண்ட அக்கறையின் வெளிப்பாடு என்று அவள் புரிந்து கொள்ளாத வகையிலும் பேசி வைத்தான்.
தன் முன் குன்று போல உயர்ந்திருந்த கோப்புகளை பார்த்தவளுக்கு, இதை தன்னால் தனியாக, அதுவும் காலைக்குள் சரி பார்க்க முடியாது, என்பது தெளிவாக புரிந்தது.
தன் முன்னால் நிற்பவன், தன்னை பரிகாசம் செய்வது போல பேசினாலும், உண்மையில் உதவ தான் நினைக்கிறான் என்பதும் புரிய, அவனின் உதவியை ஏற்க சம்மதமாக தலையாட்டினான்.
வரவேற்பரையின் நீள் இருக்கையில் அருகருகே இருவரும் அமர, யாழினி ஒரு கோப்பை எடுக்க போக, அவளை தடுத்து, அந்த கோப்பை தன் வசம் எடுத்து கொண்ட இளவளவன் அவளிடம்,
“எனக்கு உங்க ஷாப் மேனேஜ்மென்ட் பற்றி ஒன்னும் தெரியாது, சோ நான் அக்கவுண்ட்ஸ் பார்க்கிறேன், நீ அங்கிள் சையின் பண்ண வேண்டிய மேனேஜ்மென்ட் ரிலேடட் பைல்ஸ் செக் பண்ணு”
என்று சொல்ல, இருவரும் அமைதியாக தங்களுக்கென பிரித்த வேலையை பார்க்க ஆரம்பித்தனர்.
இடை, இடையில் சில இடங்களில் கணக்கு வழக்கில் ஏற்பட்ட சந்தேகத்தை இளவளவன், யாழினியிடம் கேட்டு தெளிவுப்படுத்தி கொண்டான்.
அதேப்போல கடையின் மேளாண்மை சம்பந்தப்பட்ட விஷயத்தில் யாழினி தடுமாறும் போது, தனக்கு தெரியாது என்று சொன்னதையே, அவளுக்கு விளக்கி சொல்லி, தன்னவளுக்கு உதவி செய்தான்.
இருவருக்கும் சந்தேகமாக இருந்ததை, அல்லது தவறு என்று தோன்றியதை ரவிச்சந்திரனிடம் குறிப்பிட என்று தனியே குறித்து வைத்து கொண்டனர்.
நேரம் நடுநிசி தாண்டி ஓடி கொண்டிருக்க, வேலையோ தொய்வின்றி ஜரூராக நடந்து கொண்டிருந்தது.
மடிக்கணினியில் வேலை பார்த்து கொண்டிருந்த இளவளவன், வலித்த கழுத்தை தடவியபடி நிமிர, யாழினி சோர்வுடன் வேலை பார்த்து கொண்டிருப்பது அவனின் கண்ணில் பட்டது.
யாழினி முன்பு போல உணவை இப்போது தவிர்ப்பது இல்லையே தவிர, விரும்பி உண்பதும் கிடையாது.
ஏதோ உண்பதும் ஒரு கடமை என்பது போல கொஞ்சம் கொறிப்பவள், இன்று தான் முதல் முறையாக அந்த பத்திய உணவு வேண்டாம் என்று வாய் திறந்து சொல்லியிருக்கிறாள்.
முன்பு எல்லாம் உணவை வீணாக்க கூடாது என்ற இவனின் கடுமையான பேச்சில், தட்டில் வைத்து அனுப்பும் உணவை, மிச்சம் வைக்காமல் உண்டு கொண்டிருந்தாள்.
கீழே உண்ண ஆரம்பித்ததில் இருந்து, தேவையான உணவை தட்டில் பரிமாறி உண்ணுகிறேன் பேர்வழி என்று, கால் வயிறு, அறை வயிறு என்று பெயருக்கு உண்டு வைக்கிறாள்.
இப்படி வயிறார உண்ணாமால், சோர்ந்து போய் அமர்ந்திருந்த தன்னவளை பார்த்தவனுக்கு, மனது எல்லாம் சுறு, சுருவென வலி ஒன்று பரவியது.
வெகு இயல்பாக கையை தூக்கி திமிரு முறித்தவன், தன் கையில் இருந்த கோப்பில் மூழ்கி இருந்த யாழினியின் முன்பு கையை ஆட்டி, அவளின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து,
“எனக்கு லைட் அஹ பசிக்கிற மாதிரி இருக்கு, நான் போய் ஸ்னாக்ஸ் எதாவது இருக்கானு பார்க்க போறேன், உனக்கு வேணுமா”
என்று பாவமாக வயிற்றை தடவி கொண்டே சொல்ல, யாழினியோ ஒரு பதிலும் சொல்லாமல், தன் தலையை மீண்டும் கோப்பில் நுழைத்து கொண்டான்.
“ஹுக்கும் வேணும் வேண்டாம்ன்னு வாயை திறந்து சொன்னா முத்து உதிர்ந்திடுமா, ரொம்ப தான் பண்ற, போடி”
என்று எழுந்து சென்ற இளவளவன், இரவின் அகால நேரம் என்பதால் எளிதாக செரிக்க கூடிய வகையில், ரொட்டி துண்டை மிதமான சூட்டில், லேசாக வெண்ணெய் இட்டு வாட்டி கொண்டான்.
பின்பு குளிர்சாதன பெட்டியில் இருந்த பழரசத்தை இரண்டு குவளையில் ஊற்றி கொண்டவன், அதிகம் எண்ணெய் சேர்க்காமல், கொஞ்சம் சோளபொறிகளையும்(Popcorn) பொரித்து எடுத்து கொண்டான்.
தான் தயார் செய்த அனைத்தையும், ஒரு பெரிய தட்டில் எடுத்து வைத்து கொண்டவன் வரவேற்பரையை நோக்கி சென்றான்.
யாழினியின் முன்பு சென்று தட்டை வைக்க, வெண்ணெயில் பதமாக, பொன்னிறமாக வாட்டப்பட்ட ரொட்டி துண்டின் வாசம், யாழினியின் நாசியின் வழி சென்று, அவளே உணராத பசியை, அவளுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது.
யாழினி அப்போதும் ரொட்டி துண்டில் கை வைக்காமல் இருக்க, அவளின் பக்கம் தட்டை நகர்த்தி வைத்த இளவளவன், யாழினி நிமிர்ந்து தன்னை பார்த்ததும்,
“ரெண்டு பேருக்கும் சேர்த்து தான் பண்ணேன், எடுத்துக்கோ”
என்று தன் வழக்கம் போல அவளை கிண்டல் செய்யாமல், சாதாரணமாக சொன்னவன், தன் கையில் ஒரு துண்டை எடுத்து கொண்டு, வேலையில் கவனமாக இருப்பதை போல பாவனை செய்தான்.
சற்று யோசித்தாலும், யாழினியின் கை ரொட்டி துண்டை நோக்கி நீள்வதை பார்த்த இளவளவன், அவளை சங்கப்பட வைக்காமல் தலையை இன்னும் குனிந்து கொண்டான்.
இரண்டு மூன்று துண்டுகளை யாழினி உண்டதும், கணிணியில் கண் வைத்தபடியே, ஒரு குவளையை அவளின் பக்கம் நகர்த்திவிட்டு, தானும் ஒன்றை எடுத்து கொண்டான்.
கொஞ்சம் வயிறு நிறைந்ததும் தான், யாழினியின் முகம் கொஞ்சம் தெளிந்தது.
தன்னவளின் முக தெளிவை பார்த்ததும் தான், இளவளவனின் அகம் அமைதி கொண்டது.
இருவரும் வேலையை முடிக்கும் போது மணி காலை இரண்டை தாண்டி விட்டது. வேலைக்கு இடையில் எதையாவது கொடுத்து, யாழினியின் வயிற்றை நிரப்பவும் இளவளவன் மறக்கவில்லை.
வேலை முடிந்ததும், யாழினியை அவளின் அறைக்கு அனுப்பி வைத்தவன், எல்லாவற்றையும் தனது அறையில் வைத்து விட்டு, படுக்கையில் விழுந்தான்.
சில நொடிகளிலே இளவளவனை நித்ராதேவி ஆக்கிரமித்து கொள்ள, உறக்கத்தில் இருந்த இளவளவனின் முகம் புன்னகையில் விரிய, அழகிய கனவு ஒன்று காட்சியாய் விரிந்தது.
பிரகாசமாய் ஒளிர்ந்து கொண்டிருந்த முழுமதி, தன் பளீரென ஒளிவீசும் கிரணங்களினால் கடற்கரை மணலை, வெள்ளை வெளிரென அடித்து கொண்டிருந்தது.
காற்றில் இனிமையான கானம் ஒன்று கசிந்து வர, அந்த குரலுக்கு சொந்தமான, தன்னவளை, இளவளவன் அந்த கடற்கரையில் சுற்றும் முற்றும் தேடலானான்.
அப்போது ஒரு இடத்தில், நிலவொளியில் தேவதையென யாழினி, ஆர்ப்பரிக்கும் கடலில், கால் நனையும் படி நின்றிருக்க கண்டான் அவன்.
இளவளவன் முகம் முழுக்க காதலுடன் தன்னவளை நெருங்கி, அவளின் வலது கையை பிடித்தவன்,
“யாழினி”
என்று மொத்த காதலையும் குரலில் கொட்டி அழைக்க, அவளோ அவனின் கையை தட்டி விட்டு,
“எனக்கு உன்னை பிடிக்கல, எனக்கு இவரை தான் பிடிச்சி இருக்கு”
என்று சொல்ல, அப்போது தான் யாழினியின் இடது கை, வேறு ஒரு கரத்தில், அடைக்கலமாகி இருப்பதை கண்டான் இளவளவன்.
அதை கண்ட இளவளவன் அதிர்ச்சியாகி,
“எது இவரா, யார் அந்த சுவர்”
என்று கோபத்துடன், யாழினியின் அருகில் பார்க்க, அவனின் கண்ணுக்கு யாருமே தெரியாமல் போக, சற்று குனிந்து பார்க்க, அங்கு பன்னிரண்டு வயது சிறுவன் ஒருவன் நின்றான்.
அவனை பார்த்த இளவளவன் திகைக்க, யாழினியோ அந்த சிறுவனின் கையை இருக்கி பிடித்தபடி, இவனை பார்த்து,
“எனக்கு கண்ணாவை தான் பிடிச்சி இருக்கு”
என்று மீண்டும் அறிவிக்க, அப்போது தான் யாழினியின் அருகில் நிற்பது, தனது சிறு வயது பிம்பம் என்பதே புரிந்தது இளவளவனுக்கு.
சற்றே ஆசுவாசமான இளவளவன்,
“அவனும் நானும் ஒன்னு தான் யாழினி, நான் தான் அவன், அவன் தான் நான்”
என்று அவளுக்கு புரிய வைக்க முயல, சிறிய வயது இளவளவன், இவனை பார்த்தபடி யாழினியிடம்,
“அவன் பொய் சொல்றான், அவனை நம்பாதே”
என்றவன் யாழினியின் கையை, பிடித்து தன் அருகில் இழுக்க முயற்சிக்க, அந்த சிறிய உருவத்திற்கு அது கொஞ்சம் கடினான செயலாக தான் இருந்தது.
அதை பார்த்த இளவளவன்,
“அரக்கப்படி உயரம் கூட இல்ல, நீ அவ கையை பிடிச்சி இழுக்கிறயா”
என்று அந்த பிம்பமே தான் தான் என்ற போதும், அது தன்னையும், யாழினியையும் பிரிக்க நினைப்பதால், அதை வைது வைத்தான் இளவளவன்.
இளவளவன் பார்த்து கொண்டிருக்கும் போதே, யாழினியும் சிறுமியாக மாற, இருவரும் ஒருவர் கையை மற்றவர் பிடித்தபடி, முகம் கொள்ளா சிரிப்புடன், வானத்தில் பறந்து செல்ல, அலறி அடித்து கொண்டு எழுந்தான் இளவளவன்.
எழுந்ததும் சற்று நேரத்திற்கு அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
“என்ன கிரகம் பிடிச்ச கனவுடா இது, வேற யாரவது காதலுக்கு எதிரியா இருந்தா பரவாயில்லை, என் காதலுக்கு நானே இல்ல எதிரியா இருக்கேன்”
என்று தலையை பிடித்தபடி அமர்ந்த இளவளவன் இயல்புக்கு திரும்பவே நிரம்ப நேரம் பிடித்தது.
சற்று நேரம் அறையில் எழுந்து நடந்தவன், குவளையில் இருந்த குளிர்ந்த நீரையும் பருகினான்.
மனம் ஓரளவு சமாதனப்படவும் தான், தன் ஆழ்மனதின் பயம் தான், கனவாக வந்திருக்கிறது என்றே புரிந்தது இளவளவனுக்கு.
யாழினியிடம் தொடர்ந்து தான் கடுமையாக நடந்து கொண்டிருக்க, எங்கே தன்னவள் தன்னை வெறுத்து விடுவாளோ என்ற அவனின் ஆழ் மனதின் பயம்.
அதுப்போக இன்று யாழினி, ‘கண்ணா தான் ஸ்வீட், நீ கிடையாது, நீ எப்பவும் என்னை திட்டி கொண்டே இருக்கிறாய்’ என்று வேறு குற்றம் சாற்றி இருந்தாள்.
இளவளவன் வெளியில் எதுவும் காட்டி கொள்ளவில்லை என்றாலும் அவனின் மனம்,
“அப்போ சின்ன வயசு கண்ணாவை தான் உனக்கு பிடிச்சி இருக்கா, இந்த இளாவை பிடிக்கலையா”
என்ற ஏக்கம் கொள்ள, எல்லாம் சேர்ந்ததன் விளைவு தான் இப்படி ஒரு கனவு.
கொஞ்ச நேரம் இப்படியும் அப்படியும், நடந்து யோசித்த இளவளவன், ஒரு முடிவு எடுத்து, அதை அன்றே காலை உணவின் போது சொல்ல, அதை கேட்ட மூவருமே அவனை சற்று அதிர்ச்சியுடன் தான் பார்த்தனர்.
மோகனம் இசைக்கும்…………….

Advertisement