Advertisement

யாழினிக்கு சில வேலைகளை சொன்னவன், அவள் மறுக்கவோ தன்னை திட்டவோ வாய்பளிக்காமல் ஓடிவந்து விட்டான்.
தனது அறையின் வாசலுக்கு வந்த பின்பே, நின்று யாழினி என்ன செய்கிறாள் என்று எட்டி பார்த்தான் இளவளவன்.
தன் நீண்ட கூந்தல், ஆழியின் அலைபோல முன்னும், பின்னும் புரள படியேறி கொண்டிருந்தால் யாழினி.
யாழினியின் முகம் தெரியவில்லை என்றாலும், நிட்சயம் தன்னை அவள் திட்டி கொண்டு தான் இருப்பாள் என்பதில், அவனுக்கு சிறிதும் ஐயமில்லை.
அந்த எண்ணம் அவனின் முகத்தில் ஒரு இளநகையை தோற்றுவிக்க, செல்லும் தன்னவளை பார்த்த இளவளவனுக்கு, அவள் மீது அளவில்லா காதல் சுரக்க,
“எனக்கு தெரியும்டா, இது எல்லாம் உனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும்னு, உனக்கு பிடிக்காததை தான் போர்ஸ் பண்ணி உன்னை செய்ய வச்சி கிட்டு இருக்கேன் நான்”
என்றவன் ஒரு பெரு மூச்சு விட்டவனாக,
“இது எல்லாமே உன்னை பழைய யாழினியா திருப்பி கொண்டு வரதுக்கு தான்”
என்று தன்னை தானே தேற்றி கொண்டவன், பின்பு ஏதோ நினைத்து சிரித்தவனாக,
“நான் ஏற்கனவே உனக்காகனு நிறைய பிளான் பண்ணி வச்சி இருக்கேன், ஆனா அதை எல்லாம் தூக்கி சாப்பிடற மாதிரி, நீயே எனக்கு இப்படி ஒரு மாஸ்டர் பிளான் போட்டு கொடுப்பனு, நான் நினைக்கவே இல்லடா”
என்று பொங்கி சிரித்தவன், பின்பு உருக்கமான குரலில், ஏதோ யாழினி தன் முன்னாள் நிற்பது போல பாவித்து,
“யாழிமா, நீயும் ஜூனோ மாதிரி சீக்கிரம் முழிச்சிக்கோயேன்டா”
என்று ஏக்கத்துடன் சொன்னான்.
அவன் குறிப்பிட்ட திருவாளர்.ஜீனோ அவர்கள், எழுத்தாளர் சுஜாதா, அவர்களின் ‘என் இனிய இயந்திரா’ எனும் புத்தகத்தில் வரும் இயந்திர நாய்.
புத்தகம் பிரியர் ஆன, சுயமாய் யோசிக்கும் திறமையுள்ள ஜீனோவுக்கு, மரணத்திற்கான அர்த்தம் புரிந்து, மரணத்தை தவிர்க்க, எதிரிகளை எதிர்க்க ஆரம்பிக்கும் போது தான், சூடு பிடிக்கும் கதை.
இளவளவனுக்கு அந்த கதையில் மிகவும் பிடித்த பகுதி அது தான். ஒரு இயந்திரம் மனிதனை போல சிந்திக்க ஆரம்பிக்கும் இடம். அதன் வரையறைக்கு உட்படாத உணர்வுகளை, உணர ஆரம்பிக்கும் இடம்.
ஒரு இயந்திரமே விழித்து யோசிக்க ஆரம்பிக்கும் போது, தன் தலைவியும், எதாவது ஒரு தருணத்தில், தான் உழலும் துன்பம் மட்டுமே நிறைந்த உலகத்தில் இருந்து, விழித்து கொள்ள மாட்டாளா என்ற ஏக்கம் தலைவனுக்கு.
தான் இழந்தவற்றை தாண்டி, எல்லாரையும் போல சகஜமாக தன்னாலும் வாழ முடியும், என்று எப்போது யாழினி உணர்வாள் என்ற எதிர்பார்ப்பும், உள்ளுக்குள் கனன்று கொண்டேயிருந்தது இளவளவனுக்கு.
இப்படி சிந்தனையுடனே இளவளவன் உறங்க சென்று விட, அடுத்த நாளும் அழகாக விடிந்தது.
யாழினி தனது அறையில் இருந்து வரும் போது, கீழே லீலாவதியும், இளவளவனும் ஒன்றாக நிற்க கண்டாள்.
இளவளவன் ஏதோ சொல்லி கொண்டிருக்க, லீலாவதி அதை புன்னகையுடன் கேட்டு கொண்டிருந்தார்.
அவன் என்ன சொன்னானோ, பெரிதாக புன்னகை செய்த அவர், அதே சிரிப்புடன் அவனின் காதை திருகவும் செய்தார்.
தன் தாய் அனைவரிடமும் பாசமாக பழகுவார் என்றாலும், இப்படி உரிமையாக எல்லாம் பழக மாட்டார் என்பதை யாழினி நன்கு அறிவாள்.
அதுவும் அவர்களுக்கு இடையில் இருந்த பாச பிணைப்பை பார்க்கும் போது, அது ‘அந்த அவன்’ இங்கு வந்த கொஞ்ச நாளில் ஏற்பட்டிருக்கும் என்று எண்ணும் படியாகவும் இல்லை.
“தனக்கு தெரிந்த வகையில், தன்னை தவிர்த்து அவர் உரிமையாக பழகிய ஒரே ஒருவர், அவரின் கண்ணா தான், ஒருவேளை……………”
என்ற யாழினியின் மனதில் முதல் முறையாக இளவளவன், தன் அபி அத்தையின் பையனாக இருப்பானோ என்ற சந்தேக விதை விழுந்தது.
அப்படி யோசித்த நொடி, அவளின் இதயம் வெகு வேகமாக துடிக்க ஆரம்பிக்கவும் செய்தது.
அதே நேரம் அவள் அறிந்த கண்ணாவுக்கும், இப்போது கண் முன் இருக்கும் இளாவுக்குமான, வித்தியாசம் அவளை வெகுவாக குழப்பவும் செய்தது.
தன் குழப்பத்தையோ, சந்தேகத்தையோ வெளியில் வாய்விட்டு சொல்லாத யாழினி, வழக்கம் போல அமைதி என்னும் முகமூடியை சூடி, கொண்டு வந்து சேர்ந்தாள்.
பின்பு இளா, யாழினி, ரவிச்சந்திரன் என மூவரும் சாப்பிட அமர, இன்றும் அதே பெயர் தெரியாத, பத்திய உணவு வகைகளை, தனது தட்டில் பார்த்த யாழினியின் கை உணவை அளந்தபடி,
“இதில் ஒரு சின்ன துணுக்கையாவது எடுத்து வாயில் வைக்கிறேனா பாரு”
என்று சத்தியாகிரகம் செய்ய, வாயோ,
“இனி ஒருவேளை கூட என்னால் இதை எல்லாம் உண்ண முடியாது”
என்று உருண்டு பிரண்டு அழ, அவளின் நாக்கோ,
“இந்த சுவையை உணர்வதற்கு பதிலாக, நான் பற்களிடம் கடி பட்டு, காயப்பபடுவதே மேல்”
என்று புலம்பி தள்ள, அவளின் மனதோ,
“பொறுத்தது போதும், கொஞ்சம் பொங்கி தான் எழேன்”
என்று கெஞ்சோ கெஞ்சன்று கெஞ்ச, இன்று அதிசயத்திலும் அதிசயமாக மனதின் குரல் யாழினியை எட்டி இருக்க, அதற்கு செவி சாய்க்கும் விதமாக யாழினி, சிறிய குரலில்,
“அம்மா எ…ன…க்…கு.., எனக்கு இது வேண்டாம், ஜெயா அக்கா கிட்ட சொல்லி தோசை வார்த்து கொடுக்க சொல்றீங்களா”
என்று தயங்கி தயங்கி கேட்க, அதை கேட்ட லீலாவதிக்கு கண்களில் லேசாக கண்ணீர் திரையிட, செல்லமாக அவளை அதட்டியவர்,
“வேண்டாம்னா வச்சிடுடா, அதுக்கு எதுக்கு இவ்ளோ தயங்குற, இரு நானே நிறைய நெய் போட்டு, உனக்கு பிடிச்ச மாதிரி மொறு மொறுன்னு தோசை சுட்டு எடுத்துட்டு வரேன்”
என்றவர் நீண்ட நாட்களுக்கு பிறகு மகள் வாய் திறந்து கேட்ட மகிழ்ச்சியில், அதை தயார் செய்ய சமையலறைக்கு விரைந்தார்.
அப்படி சந்தோஷ பரபரப்பில் செல்லும் போதும், இளவளவனை நோக்கி ஒரு குற்றம் சாற்றும், பார்வையை வீச தவறவில்லை அவர்.
யாழினி தங்களுடன் உணவு உண்ண ஆரம்பித்த போதே, அவளின் விருப்ப உணவு வகைகளை தான் ஜெயாவிடம் செய்ய பணித்தார் லீலாவதி.
ஆனால் அவரை தடுத்த இளவளவன் தான்,
“யாழினியா எப்போ எனக்கு இந்த சாப்பாடு பிடிக்கலை, வேற கொடுங்கன்னு கேட்குறாளோ அப்போ தான், அவ கேட்குறதை கொடுக்கணும்”
என்று கண்டிப்புடன் சொல்ல, அதில் உடன்பாடு இல்லாத லீலாவதி முகம் சுருக்க, தன் அத்தையின் கையை பாசத்துடன் பற்றி கொண்ட அவனோ,
“இவ்ளோ நாள் தனக்கு என்ன தேவைன்னு யாழினி வாயை திறந்து சொல்லும் முன்னாடியே அதை கொடுத்து, அவளை கைக்குள்ளவே வச்சி வளர்த்தது போதும், இனியாவது அவ அவளுக்கு தேவையானதை வாயை திறந்து கேட்கட்டும்”
என்று சொல்ல, இப்போதும் இளவளவன் சொல்லுவதில் முழு விருப்பம் இல்லாத போதும், இளவளவன் சொல்லுவதை மீறவும் விரும்பவில்லை லீலாவதி.
பின்னே அவன் வந்த கொஞ்ச நாட்களிலே, தங்கள் மகளிடம் பெரும் மாற்றத்தை விளைவித்த ஆசை மருமகன் அல்லவா அவன்.
ஆனாலும் ஒரு தாயாக, இத்தனை மாதங்களுக்கு பிறகு, மகள் ஒழுங்காக உண்ண ஆரம்பிக்கும் போது, அவளுக்கு பிடித்ததை செய்து கொடுக்க பேரவா அவருக்கு.
இளவளவன் குறிப்பிட்டதை போல, குழந்தையை கைக்குள் வைத்து வளர்ப்பதில் என்ன தவறு, என்றும் அவருக்கு புரியவில்லை.
தங்கள் மகளின் பூ பாதங்கள் நடக்கும் பாதையில் எல்லாம் மலர் தூவி, அந்த பாதையிலும் அவளின் கை பிடித்து, அவளுடனே நடந்து, கஷ்டம் என்பதே தெரியாமல், வலி என்பதே உணராமல், பிள்ளையை வளர்ப்பதே பெற்றோரின் கடமை என்பது அவரின் கருத்து.
ஆனால் அவர் இன்னும் உணராத ஒன்று உண்டு.
கை பிடித்து நடந்த பெற்றோரின் பாதுகாப்பை மீறி கீழே விழுந்ததும், இதுவரை விழுந்தே இராத யாழினிக்கு, மீண்டும் எப்படி எழ வேண்டும் என்றே தெரியவில்லை.
பிள்ளையை விழாமல் பார்த்து கொண்ட பெற்றோர்களும், அவள் விழுந்த அதிர்ச்சியில் அவளை விட அதிகம் பயந்திருக்க, அவர்களுக்கும் விழுந்த பிள்ளையை தூக்கிவிட வழி தெரியவில்லை.
பிள்ளைகளை பொறுத்தவரை, அவர்களை முன்னாள் நடக்க விட்டு, பெற்றோர் பின்னால் பாதுகாப்புக்கு சென்றால் போதுமானது.
தவறி விழும் போது, அவர்களே மீண்டும் சுயமாக எழ வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
சின்ன சின்ன வலியை உணர்ந்து, உலக அனுபவத்தை பெறுவதில் ஒன்றும் தவறு இல்லையே.
அவர்களால் எழ முடியாமல் துவளும் போதே, தங்களின் உதவி தேவை என்னும் பட்சத்தில் தான், தூக்கி விட வேண்டும்.
இன்னமும் இதை எல்லாம் உணராமல், தன்னை முறைக்கும் அத்தையை பார்க்கும் போது, சிரிப்பதா இல்லை அழுவதா என்றே இளவளவனுக்கு தெரியவில்லை.
அன்றைய நினைவில் இளவளவன் அமைதியாக உண்ண, குழப்பத்தில் இருந்த யாழினியோ, அவ்வப்போது தன்னை மறந்து, வயிற்றை நிரப்பும் பணியோடு சேர்த்து, அவனை ஓர கண்ணில் நிரப்பியும் கொண்டாள்.
அந்த நாளின் மாலை பொழுதில், யாழினியின் இருபுறமும், ரவிச்சந்திரனும் லீலாவதியும் அமர்ந்திருக்க, அவர்களின் கையில் புகைப்படங்களின் தொகுப்பு ஒன்று குடி புகுந்திருந்தது.
ஒவ்வொரு புகைப்படமாக ரவிச்சந்திரன் திருப்ப, லீலாவதி அந்த புகைப்படங்களை எடுத்த சூழ்நிலையையும், அப்போது யாழினி செய்த சேட்டைகளையும் சுவையாக சொல்லியபடி இருந்தார்.
யாழினியும் ஒரு இளநகையுடன் அவற்றை பார்த்து கொண்டிருக்க, அப்போது தான் அறையின் உள்ளே பிரவேசித்தான் இளவளவன்.
அவனை பார்த்த லீலாவதி,
“வா கண்ணா வா”
என்று அன்புடன் அழைக்க, தன் அன்னையை கவனிக்காத யாழினியோ, தன்னுடன் புகைப்படத்தில் இருந்த சிறுவனின் பிம்பத்தையே கண்ணெடுக்காமல் பார்த்து கொண்டிருந்தாள்.
ஐந்து வயது யாழினியும், ஏழு வயது இளவளவனும் மண்ணில் உருண்டு பிரண்டு விளையாடிய தோற்றத்துடன், முகம் கொள்ள புன்னகையுடன், ஒருவர் கையை மற்றவர் பிடித்தபடி நிற்கும் புகைப்படம் அது.
யாழினியின் பார்வை அந்த புகைப்படத்திலே நிலைத்து இருக்க, தன்னை வரவேற்ற அத்தைக்கு பதிலளித்த படி வந்த, இளவளவனின் கண்கள், அந்த புகைப்படத்தில் பதிந்ததும், உதடுகள் புன்னகையை பூசி கொண்டன.
லீலாவதியிடம் இருந்து அந்த புகைப்படத்தை வாங்கியவன் கண்களில் குறும்புடன்,
“யார் இந்த குட்டி பையன், பார்க்க செம கியூட் அஹ இருக்கான்”
என்று கேட்க, புகைப்படம் பிடுங்கப்பட்டதும் தான், அதை எடுத்த இளவளவனின் வருகையை உணர்ந்த யாழினி, அவனின் வார்த்தையை கேட்டதும்,
“அது என்னோட அத்தை பையன், பார்க்க மட்டும் இல்ல கேரக்டரும் செம ஸ்வீட்”
என்று சொல்லி, தன் முன்னால் நிற்பவனின் முகத்தில் தோன்றும் உணர்வுகளை பார்த்தபடி இருக்க, அலட்டி கொள்ளாத இளவளவனோ,
“அப்படி பார்த்தா நான் கூட ஸ்வீட் பர்சன் தான்”
என்று புன்னகையை அடக்கி சொல்ல, தலையை சிலிப்பி கொண்டு, அவனிடம் இருந்து புகைப்படத்தை பறித்த யாழினி,
“நீங்க ஒன்னும் கண்ணா மாதிரி கிடையாது, கண்ணாக்கு கோவமே வராது, நான் என்ன சொன்னாலும் கேட்பான், முக்கியமா என்னை திட்டவே மாட்டான்”
என்றபடி இளவளவனை பார்த்தவளின் பார்வை, மேலே சொன்ன எல்லாவற்றையும் நீ செய்து கொண்டிருக்கிறாய் என்று மறைமுகமாக குற்றம் சாட்டியது.
அந்த பார்வையில் சற்றே தடுமாறி போன இளவளவன், தன்னை சுதாரித்து கொண்டு, அவளுக்கு பதில் அளிக்க தயாராகவும், யாரோ கதவை தட்டவும் சரியாக இருந்தது.
கதவை திறந்து, வந்த வேலையாளிடம் ஏதோ சொல்லி அனுப்பிய இளவளவன், தலையில் லேசாக தட்டியபடி உள்ளே வந்து, இவ்வளவு நேரம் தங்கள் இருவரின் சண்டையை சிரித்தபடி வேடிக்கை பார்த்து கொண்டிருந்த தன் மாமனிடம்,
“உங்களை பார்க்க மேனேஜர் வந்து இருக்காரு, அதை சொல்ல தான் நான் வந்தேன்”
என்று சற்றே அசட்டு சிரிப்புடன் சொன்னவன், ரவிச்சந்திரனை அழைத்து கொண்டு வரவேற்பறைக்கு சென்றான்.
இத்தனை நாட்களாக ரவிச்சந்திரன் கடைக்கு செல்லாததால், கணக்கு வழக்குகளையும், அவசியமாக அவரின் கையொப்பம் தேவைப்படும் கோப்புகளையும் அள்ளி கொண்டு வந்திருந்தார் மேலாளர்.
அவரிடம் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசி ரவிச்சந்திரன் அனுப்பி வைக்க, கோப்புகளை கையில் எடுத்து கொண்டான் இளவளவன்.
ரவிச்சந்திரனுடன் அறைக்குள் நுழைந்த இளவளவன், அங்கு இருந்த மேசையின் மேல் அந்த கோப்புகளை அடுக்கியவன், அவரிடம்,
“நீங்க ரொம்ப ஸ்ட்ரைன் பண்ண கூடாதே, இதை எல்லாம் எப்படி செக் பண்ணி சையின் பண்ணுவீங்க”
என்று கோபுரம் போல உயர்ந்திருந்த கோப்புகளை காட்டி கேட்க, அவரோ ஒரு புன்னகையுடன்,
“இது ஒன்னும் அவ்ளோ பெரிய வேலை இல்ல இளா, நான் பார்த்துகிறேன்”
என்று சொல்ல, தங்கள் இருவரின் உரையாடலை கவனித்தும், தந்தையின் அருகில் அமைதியாய் அமர்ந்திருந்த யாழினியை பார்த்தவன்,
“அதுவும் சரி தான், கணக்கு வழக்கு எல்லாம் உடையவங்க பார்த்தா தானே சரியா இருக்கும், ஆண்ட்டிக்கு அது எல்லாம் தெரியாது, இன்னொருத்தவங்க…”
என்று இழுத்து யாழினியை பார்த்தவன், பின்பு தோளை குலுக்கி கொண்டு,
“எல்லாம் தெரிஞ்சாலும் ஒன்னும் பண்ண மாட்டங்க, அப்போ வேற வழியில்லை, உடம்பு சரியில்லைனாலும் நீங்களே தான் பார்க்கனும் போல, வேற என்ன செய்யுறது”
என்று நாசுக்காக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல யாழினியை தாக்க, தாக்குதல் தடம் மாறாமல் இலக்கை தாக்கியதில், சுருக்கென வலித்தது யாழினிக்கு.
“மகள் என்று தான் ஒருத்தி இருக்கும் போது, அப்பா எதற்காக தன்னை வருத்தி கொள்ள வேண்டும், அதுவும் இல்லாமல் இது வீட்டிலிருந்தே பார்க்க கூடிய வேலை தானே”
என்று தன் சிந்தனையின் விளைவாய் யாழினி, தானாக முன் வந்து தன் தந்தையிடம்,
“நீங்க ரெஸ்ட் எடுங்க அப்பா, அதை எல்லாம் நான் செக் பண்ணி தரேன்”
என்று சொல்ல, இளவளவனோ வெற்றி புன்னகையை மறைக்க பெரும்பாடு பட்ட படி நின்றிருந்தான். பின்னே அவன் முக்கிய திட்டத்தின், முதல் படியில் வெற்றி பெற்றாகிவிட்டதே.
மோகனம் இசைக்கும்……………

Advertisement