Advertisement

     ஹர்ஷாவின் உக்கிரமான பார்வையை பார்க்க முடியாது தலையை உயர்த்தி பார்ப்பதும் தலை குனிவதுமாய் இருந்தது அந்த வீட்டின் கடைக்குட்டி ஆதிரா தான். அவனிடம் மாட்டியதும் அவளே.
     ‘போச்சு போச்சு. ஆதி உனக்கு இது தேவையா! இன்னைக்கு ஒரு நாள் இவளுங்க கூப்டாளுங்கன்னு போன உனக்கு இது தேவை தான். சே!! சைலண்ட்டா யாரும் பாக்குறதுக்கு முன்னாடி சமத்தா ரூம் உள்ள போய் படுத்தர்லான்னு தப்பு கணக்கு போட்டுட்டியே டி.
     இப்ப வசமா ஹர்ஷா அத்தான்ட்ட மாட்டிக்கிட்ட. போச்சு வச்சு செய்ய போறாரு’ என மனதில் நினைத்தவள் தலையை மெல்ல நிமிர்த்தி தன் குடும்பத்தை பார்த்தாள்.
     குடும்பம் மொத்தமும் ‘ஆதிரா இப்போது என்ன செய்து ஹர்ஷாவிடம் மாட்டியிருப்பாள்’ என்ற  கேள்வியுடன் பார்த்திருந்தனர்.
     ஏனெனில் எப்போதும் எதாவது குறும்பு செய்து விட்டு ஹர்ஷாவின் முன் முழித்துக் கொண்டு நிற்பது தான் ஆதிராவின் வேலை.
     ஆனால் அவன் அவளை இப்படி குடும்பத்தின் முன் நிறுத்தியது இல்லை. எனவே தான் இன்று என்ன பஞ்சாயத்தோ என்று நின்றிருந்தனர்.
      ‘என்னடா இது குடும்பமே நம்மல கண்ணால ஸ்கேன் பண்ணுறாங்க’ என்று எண்ணிக் கொண்டே திரும்பியவள், அங்கே தன்னை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்த அபிமன்யுவை நோக்கி கோபமான பார்வையை வீசும் போது
     “எத்தனை நாளா இது நடக்குது?” என்ற ஹர்ஷாவின் சத்தமான குரலில் திடுக்கிட்டு திரும்பினாள். “ஹான்… அ.. அத்தான்” என்றாள் திணறலாக.
     ‘நீ எப்போது பதிலை சொல்கிறாயோ அப்போது தான் உன்னை விடுவேன்’ என்னும் விதமாக ஹர்ஷா அவளையே பார்த்து நிற்கவும் எச்சிலை கூட்டி விழுங்கிறவள்
     “அ.. அத்தான். இது.. இது தான் பர்ஸ்ட் டைம்” என்றாள் தயக்கமாக. ‘உண்மை தானா?’ என்னும் கேள்வியோடு அவளை பார்த்தான் ஹர்ஷா‌.
     அவனின் நம்பாத பார்வையை கண்ட ஆதிரா “சத்தியமா அத்தான். இது தான் பர்ஸ்ட் டைம் அத்தான். பிரண்ட்ஸ் எல்லாம் கம்பல் பண்ணவும் தான் போனேன் அத்தான்‌.
     நைட் டைம் இப்படி டிஸ்கோத்தேலா போனா வீட்டுல திட்டுவீங்கனு என் பிரண்ட்ஸ் கிட்ட எவ்வளவோ சொன்னேன். ஆனா அவங்க அதை கேக்கவே இல்லை. அதான் அத்தான் வேற வழி இல்லாம போனேன்‌.
     என் பிரண்ட் திலீப்ம் வைஷூவும் தான் என்னை இப்ப டிராப் பண்ணிட்டு போறாங்க அத்தான். சாரி அத்தான். வெரி சாரி” என்று அவன் ஒரு பார்வைக்கே படபடவென அனைத்தையும் ஒப்பித்து விட்டாள்.
     “சரி நீ அங்க போறத யார்க் கிட்ட சொல்லிட்டு போன?” என்ற ஹர்ஷாவின் கூரான கேள்விக்கு “யார்… யார்கிட்டையும் சொல்லலை அத்தான்” என்றாள் திணறலாக.
     வீட்டினர் அனைவரும் ஆதிரா ஏதே இரவில் ஹர்ஷாவிடம் வம்பு செய்ததால் தான் அவன் அனைவரையும் அழைத்தான் என்று நினைத்தால் இப்படி ஒரு திருப்பத்தை யாரும் எதிர்ப்பார்க்கவில்லை.
     ஒரு நிமிடம் அவளின் வாக்குமூலத்தை கேட்ட குடும்பத்தாருக்கு கோபம் தாறுமாறாக ஏறியது. இதில் வரும் போது ஏற்கனவே ஒரு பெண்ணின் தற்கொலை கதையை கேட்ட ஹர்ஷாவின் நிலை சொல்லவும் வேண்டுமா!
     ஆனால் அவன் எப்போதும் போல் அமைதியாக இருந்தான்‌. ஹர்ஷாவின் முகத்தையும், அவர்கள் குடும்பத்தினர் முகத்தையும் காணும் போதே ஆதிராவிற்கு வயிறெல்லாம் கலக்க துவங்கியது.
     முதலில் ஆரம்பித்தது அருணாசலமே!! “என்ன அம்மு இது. உன்கிட்ட இருந்து இதை நான் சுத்தமா எதிர்ப்பாக்கலை.
     நீ சின்ன சின்ன குறும்பு பண்ணும் போது எல்லாம், உன்னை சும்மா விடவும் தான் இப்ப இப்படி செஞ்சிருக்கியா மா? என்ன பழக்கம் அம்மு இது. வீட்டில் இருக்க யார்க்கிட்டையும் சொல்லாம நீ தனியா அதுவும் டிஸ்கோத்தேக்கு போய்ட்டு வந்துருக்க.
     நீ என்ன செஞ்சாலும் நாங்க எதுவும் கேக்க மாட்டோம்னு நினைச்சிட்டியா. இல்லை இவங்கலாம் யாரு இவங்க கிட்ட போய் எதுக்கு சொல்லிட்டு செய்யனும்னு நினைச்சிட்டியா” என்று தன் மனக்குமுறலை கொட்டினார்.
     “ஐயோ! இல்லை தாத்தா இல்லை. அப்படிலாம் இல்லை. பிரண்ட்ஸ் சொன்னாங்கனு சும்மா பன்க்கு தான் செய்ய நினைச்சேன் தாத்தா.
     மத்தபடி வேற எந்த ரீசனும் இல்லை தாத்தா. என்னை நம்புங்க தாத்தா பிளீஸ். நான் செஞ்சது தப்பு தான். இனிமே இப்படி பண்ண மாட்டேன் தாத்தா.
     சாரி தாத்தா. ரொம்ப ரொம்ப சாரி” என்றாள் கலக்கமாக. பார்த்த குடும்பத்தினருக்கு ஆதிரா கெஞ்சுவது கஷ்டமாக இருந்தாலும் அவள் தன் தப்பை உணர வேண்டும் என அமைதி காத்தனர்.
     சிறிது நேர அமைதி “அப்புறம் அபி சார் உங்க பாடிகார்ட் வேலைலாம் எப்படி போச்சு?” என்ற ஹர்ஷாவின் நக்கலான கேள்வியில் கலைந்தது.
     ஹர்ஷாவிடமிருந்து தீடீரென தன்னை நோக்கி வந்த கேள்வியின் சாராம்சம் புரிந்த அபி இப்போது திருதிருத்தான். குடும்பம் மொத்தமும் அவனை இப்போது பார்த்தது.
     ‘எந்த கேப்ல நம்மல பாத்தாருனு தெரியலையே. மாட்னடா அபி’ என்று மனதிற்குள் நொத்த அபிமன்யு ஹர்ஷாவை கண்டு “அது… அது வந்து.. அது ண்ணா” என்று திணறினான்.
     பின் தன் மூச்சை நன்றாக இழுத்து விட்டவன் “ண்ணா அது அம்மு அவ பிரண்ட்ஸ் கூட வெளிய போறத பாத்தேன். அதான் அவ பின்னாடியே ஃபாலோ பண்ணிட்டு போனேன்.
     அவ அங்க இருந்து சோஃபா வீடு வர வரைக்கும் அவளுக்கு தெரியாம பின்னால வந்தேன் ண்ணா. அவ உள்ள வந்த அப்புறம் தான் நானும் வந்தேன்” என்றான் சன்னமான குரலில்.
     குடும்பத்தினர் அனைவருக்கும் அபிமன்யு ஆதிராவை தனியே விடாததை எண்ணி அப்போது தான் மனது ஓரளவு நிம்மதி ஆனது.
     “இவன் எப்போ நம்ம பின்னாடி வந்தான். இவ்ளோ நேரம் கிண்டலா சிரிச்சான்னு பார்த்தா நம்ம சோஃபா வீடு வர வரைக்கும் கூடவே வந்துருக்கான் பார்ரா!!”என ஆச்சரியமாக பார்த்தாள்.
     “சரி எல்லாரும் போய் படுங்க காலைல பாத்துக்கலாம்” என்ற அருணாசலத்தின் வார்த்தைக்கு அனைவரும் கலைந்தனர்.
     அருணாசலம் அபிமன்யு மற்றும் ஆதிராவின் தலையை தடவிக் கொடுத்தே சென்றார். அபிமன்யு தன் அண்ணன் முன் சென்று “ண்ணா நீ எப்ப என்ன பாத்த.
     ஐ மீன் நான் அம்மு பின்னாடி வந்ததை” என்றான் தயங்கி தயங்கி. அபியை ஒரு பார்வை பார்த்த ஹர்ஷா எதுவும் சொல்லாது இதழில் ஒரு சிரிப்புடன் தன் அறைக்கு சென்று விட்டான்.
     ஆதிரா பால்கனியில் இருந்து உள்ளே வந்து தன் அறை செல்லும் போதே அபியும் அந்த வழியாக உள்ளே குதித்தான்.
     உள்ளே வந்தது ஆதிரா என்று அறிந்த ஹர்ஷாவிற்கு பின்னே ஒளிந்து வந்த அபியும் கண்ணில் பட்டது அவன் அதிர்ஷ்டம் என்பதா? இல்லை துரதிர்ஷ்டம் என்பதா?
     அதே நேரம் அபி ஆதிராவிற்கு பாதுகாவலாக தான், அவள் பின்னே சென்றிருப்பான் என்பது ஹர்ஷாவிற்கு புரிந்தது.
      அது அபியின் மனதை கண்டதாலோ? இப்போது தன் தமையனை எண்ணி மனதிற்குள் பெருமையாக கூட இருந்தது ஹர்ஷாவிற்கு, அவன் தம்பி தங்கை வளர்ந்து விட்டார்கள் என.
     இப்போது அருணாசலம் குடும்ப உறுப்பினர்கள் பற்றி சில வரிகள். அபிமன்யு தற்போது நரம்பியலில் நிபுணத்துவம் பெற முதுகலை இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டு இருக்கிறான்.
     விக்ரம் பொறியியல் முடித்து விட்டு தன் தந்தை வேதாசலத்தின் கட்டிடகலை நிறுவனத்தை நடத்தி வருகிறான்‌.
     வீட்டின் கடைக்குட்டி ஆதிரா தன் அத்தானை பின்தொடர்ந்து இளநிலை மருத்துவம் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறாள். எப்போதும் போல் ஹர்ஷாவே இன்றும் இவர்களுக்கு ஆசானாக இருந்து வழிநடத்தி வருகிறான்.
____________________________________________
     “அத்தான் சாரி. வெரி வெரி சாரி. நான் இப்படி இனிமே பண்ணவே மாட்டேன். தயவு செஞ்சு என் கிட்ட பேசுங்க அத்தான். பிளீஸ் பிளீஸ் அத்தான்” என்று கெஞ்சி கொண்டிருந்தது நம் ஆதிராவே.
     காலை எழுந்தது முதல் தன்னுடன் பேசாது இருக்கும் தன் ஹர்ஷா அத்தானிடம் தான் கெஞ்சி கொண்டிருந்தாள் ஆதிரா.
     “ம்மா அத்தான என்கிட்ட பேச சொல்லு மா‌. பாரு எங்கிட்ட காலைல இருந்து பேசவே இல்லை” என்று தன் அன்னையையும் தன்னோடு கூட்டு சேர்க்க முயன்றாள்.
     ‘ம்ஹூம்’ எந்த முயற்சியும் ஹர்ஷாவிடம் எடுபடவில்லை. வீட்டில் இருந்த யாரும் ஹர்ஷாவிடம் ஆதிராவிக்கு பரிந்து கொண்டு வரவில்லை.
     இந்த காலக்கட்டத்தில் நண்பர்களே ஆனாலும் இரவு வேளையில் சென்றது ஆபத்தில் கொண்டு சென்று விட்டிருந்தால் என்ன செய்திருப்போம் என்று அவர்களால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.
     அதனால் ஹர்ஷாவின் கண்டிப்பை அவர்கள் கண்டும் காணாது விட்டனர். எல்லோரிடமும் பேசி பார்த்து எதுவும் ஆகவில்லை என தெரிந்து சோகமாய் சென்று சோஃபாவில் அமர்ந்து கொண்டாள்‌.
     ஆதிரா தன் பின்னால் சுற்றியது பின் சோகமாக போய் அமர்ந்தது என அனைத்தையும் அமைதியாக ஓரக்கண்ணால் பார்த்திருந்தான் ஹர்ஷா‌.
     இப்போது சோகமே உருவாக அமர்ந்திருந்த ஆதிராவை கண்டு சிரிப்பு தான் வந்தது. அவள் அமர்ந்திருந்த விதம் ஹர்ஷாவிற்கு பத்து வயது அம்முவாக தான் தெரிந்தாள்.
     அவள் விழிகள் நீர் கோர்த்தது போல் தெரியவும் அதற்கு மேல் ஹர்ஷாவிற்கு மனது தாளவில்லை. மெதுவாக போய் அம்மு அருகில் அமர்ந்த ஹர்ஷா “அம்மு” என்றான்.
     அவனின் குரல் கேட்டவுடன் ஆனந்தமாய் நிமிர்ந்த ஆதிராவின் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் கண்ணத்தில் இறங்கிவிட்டது.
     அதன் பின் எங்கே ஹர்ஷாவிற்கோ அவர்தம் குடும்பத்திற்கோ கோபத்தை இழுத்து பிடிக்க. சட்டென அவளின் கண்ணீரை துடைத்தான் ஹர்ஷா. அவளின் தலையை கோதினார் அருணாசலம்.
     “அம்மு அழக்கூடாது டா. இனிமே வீட்ல யார்கிட்டேயும் சொல்லாம இப்படி எங்கையும் போகக் கூடாது. புரியுதா டா” என வார்த்தைக்கும் வலிக்குமா என்று பேசியது ஹர்ஷாவே தான்.
     இதை எல்லாம் பார்த்து கொண்டிருந்த பார்வதி “பாத்து ஹர்ஷா நீ பேசுனதுல அவ பயந்துர ஏதும் போறா!” என நக்கலாக சொல்லி “இவ அழுதா இவன் உருகி போறான். இவளை கெடுக்கிறதே இவங்க எல்லாம் தான்” என ஆனந்த சலிப்புடன் முணுமுணுத்து சென்றார்.
     ஹர்ஷா ஆதிராவிடம் என்று தன் அன்னையின் சாயலை கண்டானோ அன்றிலிருந்து அவளை சிறிதும் காயப்படுத்த மாட்டான். கோபமாக பார்ப்பதோடு நிறுத்திக் கொள்வான்.
     அவளும் ஹர்ஷாவிடம் தன்னுடைய சேட்டைகளை காட்ட மாட்டாள். விக்ரம் அபிமன்யு என அனைவரையும் வைத்து செய்து விடுவாள். ஆனால் சில நேரம் இதுபோல் மாட்டியும் விடுவாள்.
     பல நேரம் சிரிப்புடன் கடந்து விடும் ஹர்ஷா சில சமயம் லேசாக மிரட்டல் தருவான். ஆனால் அதை கூட சாமர்த்தியமாக தகர்த்து விடுவாள் நம் அம்மு.
     ஆனால் தவறான பாதையின் வழி அவளை என்றும் விடவும் மாட்டான். இம்முறை நடந்த தவறு ஹர்ஷாவிற்கே பொறுக்க முடியாமல் போகவும் தான் பெரிதாக கோபப்பட்டான்.
     ஆம் ஹர்ஷாவை பொறுத்த வரை அவனின் மௌனம் தான் அந்த வீட்டினருக்கு அவன் தரும் பெரிய தண்டனை. அடிப்பது திட்டுவதை விட அமைதியால் அடிப்பது தான் பெரிய தண்டனை அவனை பொருத்த வரை. உண்மையும் அதுதானே!!
-மீண்டும் வருவான்

Advertisement