Advertisement

     “ஐயோ பாவம்! யாரு பெத்த புள்ளையோ. இப்படி என் வீட்ல வந்து மயங்கிருச்சே. டேய் மகனே மூச்சு பேச்சு இருக்கான்னு கொஞ்சம் பாருடா” அரவிந்த் சித்துவிடம் புலம்பி தள்ள
     “கொஞ்சம் உன் வாய மூடிட்டு நில்லு ப்பா. உட்டா நீயே கொன்னுருவ போல. மூச்சுலாம் இருக்கு எதோ அதிர்ச்சியில மயங்கின மாதிரி தான் இருக்கு” என கடுகடுத்தான்.
     “எம்மா பொண்ணே! நான் பேசுறது கேக்குதா எழுந்துருமா” சித்து பதட்டத்துடன் வீராவை எழுப்ப
     “சித்து என்னடா ராப்பிச்சைக்காரன் மாதிரியே அம்மா தாயேன்ங்குற. அதான் வீரசுந்திரினு எவ்ளோ அழகான பேர சொன்னுச்சு அந்த பொண்ணு ஒழுங்கா பேரை சொல்லி எழுப்புடா”
     அரவிந்த் வேறு இடையில் புகுந்து சித்துவை வெறுப்பேற்றினார். அதில் தலையை திருப்பி அரவிந்தை சித்து முறைத்து வைக்க வாயை மூடிக் கொண்டார் மனிதர்.
     பின் சித்து தண்ணீர் தெளித்து எழுப்ப சிறிது நேரத்தில் எழுத்துக் கொண்டாள்‌ வீரா. எழுந்தவுடன் திருதிருவென முழித்திருந்த வீரா அரவிந்த் மற்றும் சித்துவை அதிர்ச்சியுடனும் பயத்துடன் பார்த்து வைத்தாள்.
     “ஏங்க என்ன ஆச்சு. ஏன் திடீர்னு மயங்கீட்டீங்க”
     சித்துவிற்கு ஓரளவு காரணம் புரிந்தாலும் அதை உறுதிப்படுத்திக் கொள்ள மீண்டும் கேட்டான்‌. அவன் எண்ணியது போலவே வீரா எச்சிலை கூட்டி விழுங்கியபடி
     “இ.. இவர் உங்க அ.. அப்பா அங்க போட்டோ மா.. மாலை” என திணறினாள்.
     இப்போது அரவிந்திற்கும் அவள் ஏன் மயங்கி விழுந்தாள் என்று புரிந்தது. “ஐயோ வீராமா அது அங்கிளோட போட்டோ தான்‌. நான் செத்துப் போய்ட்டேன்மா. அதான் அதுக்கு மாலை போட்டு விளக்கு ஏத்தி வச்சிருக்கான் என் பையன்” என சோகம் போல் சொல்லி முடித்தார் அரவிந்த்.
     அவர் கூறியதை கேட்டு இன்னும் அதிர்ந்த வீரா இப்போது பயத்தில் சித்துவின் கைகளை இறுக்கமாக பற்றியபடி அவனுடன் ஒன்றிக் கொண்டாள்.
     அவள் முகத்தில் இருந்த அதீத பயத்தை பார்த்து அவளை இன்னும் பதட்டப்பட வைக்காமல் அரவிந்த் பொறுமையாக பேசினார்.
     தான் இறந்து போனது அது தெரியாமல் அவர் ஊர் சுற்றி வந்தது அதன்பின் அவர் இறந்ததை கண்டு அவரே அதிர்ந்தது என அனைத்தையும் எதோ கதை போல் கூறினார்.
     “வீரா என் புள்ள அவ்ளோ பாசக்காரன்னு எனக்கு அதுவரை தெரியவே இல்லை. இவன் ஐய்யோ அப்பா என்ன விட்டு போய்டியேனு அழுத அழுகைல போனா போகுதுன்னு இவனுக்கு நான் தரிசனம் தந்துட்டு இருக்கேன்” என்று அரவிந்த் பேச
     “அதான் எதுக்குங்குறேன். நீ செய்ற திருட்டு வேலை ஆகாத போவத வேலைனு எல்லாத்தையும் என் தலைல கட்ட தானே” என இடைப் புகுந்தான் சித்து.
     “போடா போக்கத்தவனே. உனக்கு என் அருமை தெரியலைடா மவனே. ஒரு நாள் என் பெருமைய நீ என்ன இந்த ஊரு உலகமே பேசும் பாரு”
     “ஆமா உயிரோட இருக்கும் போதே நீ செஞ்சு கிழிச்சுட்ட. இப்ப செத்ததுக்கு அப்புறமா தான் எல்லாம் செய்ய போறியா. யோவ் தகப்பா எதாவது அசிங்கமா சொல்லிட போறேன்”
     எங்கையோ ஆரம்பித்த அரவிந்தும் சித்துவும் கடைசியில் சண்டையில் வந்து நிற்க, இருவரையும் மாறி மாறி பார்த்து கொண்டிருந்த வீரா “போதும் நிறுத்துங்க” என கத்தியிருந்தாள்.
     “டேய் லூசு பய மவனே நம்ம பஞ்சாயத்தை அப்புறம் வச்சுக்கலாம். வீட்டுக்கு ஒரு பொண்ணு வந்திருக்கே  அதுவும் மயங்கி வேற விழுந்திருக்கு. அதுக்கு என்ன வேணும் ஏது வேணும்னு உபசரிக்க துப்பு இல்ல. என்கிட்ட பாஞ்சுக்கிட்ட வர. போ போ வீராக்கு குடிக்கு ஜூஸ் போட்டு எடுத்துட்டு வா
     டேய் போறதும்தான் போற அப்படியே எனக்கு ஒரு டம்பளர் ஜூஸை கொண்டாடா. இந்த ஆப்பிள் இருந்தா அதை ஜூஸ் போட்டு கொண்டுவாடா. உன்கிட்ட பேசி பேசி என் தொண்டை வரண்டு போயிருச்சு”
     அரவிந்த் இடையில் பேசிய பேச்சில் கடுப்பான சித்து “செத்தும் என் உயிர வாங்குதே இந்த ஆளு. யோவ் தகப்பா ரொம்ப ஓவரா போற உன்ன பேசிக்கிறேன்யா” சித்து கறுவியவாறே ஜூஸ் போட சென்றான்.
     “அவன் கெடக்குறான்மா தடிமாட்டு தண்டம். அவனுக்கு டிசிப்பிலின் பத்தலை. அதான் வேற ஒன்னும் இல்ல. கழுதைய அடிச்சு வளக்காம விட்டுட்டேன். அதனால அதை விடுமா. அவனை எல்லாம் நீ கண்டுக்காத பாப்பா”
     அரவிந்த் பேசியதை கேட்டு சித்துவிற்கு கடுகடுவென வந்தது என்றால் சிரிப்பு வந்துவிட்டது வீராவிற்கு. அதில் புன்னகைத்த வீரா
     “அங்கிள் எனக்கு ஒரு டவுட். நீங்க உங்க பையன் கண்ணுக்கு தெரியறீங்க ஓகே. ஆனா என் கண்ணுக்கு எப்படி‌ தெரியறீங்க”
     இப்போது சற்று பயம் நீங்க பெற்ற வீரா தன் சந்தேகத்தை அரவிந்திடம் கேட்டாள்.
     “அதுவாமா முதல் தடவை உன்னை அங்க பஸ் ஸ்டாப்ல பார்த்த போதே உன்னோட டேலன்ட்ல நான் இம்ப்ரஸ் ஆகிட்டேன் பாப்பா. நீ எப்படி அந்த பணத்தை ஆட்டைய போட்டு எஸ் ஆக போறேன்னு நான் பாத்துட்டே இருந்தேன். அப்பதான் அந்த பைய கூட்டத்தை கூட்டிட்டான். அதான் உனக்கு உதவி பண்ண உன் கண்ணுக்கு தெரியற மாதிரி வந்தேன்”
     அரவிந்த் அனைத்தையும் சொல்லி முடித்தும் வீரா “ஓஓஓ.. தேங்க்ஸ் அங்கிள்” என்றாள்.
     உள்ளே இருந்து ஜூஸ் எடுத்து வந்த சித்துவோ ‘என்னாது திருடியா..’ எனறு அதிர்ந்து போய் நின்றுவிட்டான்.
     “சரி பாப்பா உன்னை பத்தி சொல்லு. எதுக்கு இன்னைக்கு பணம் அடிக்க பார்த்த. அந்த பணம் எடுக்க முடியலைனதும்  உன் முகம் வாடி போயிறுச்சே என்ன ஆச்சு”
     அரவிந்த் கேட்கும் நேரம் சித்து ஜூஸை கொண்டு வர அதை எடுத்து வீராவிடம் கொடுத்தபடி என்ன நடந்தது என கேட்க சிறிது தயங்கினாள் வீரா.
     “என்ன மா வீரா என்கிட்ட சொல்ல மாட்டியா‌. என்ன உன் மாமாவா நினைச்சு சொல்லுமா”
     என்று அரவிந்த் கூறி நிறுத்த அதிர்ந்து போய் நெஞ்சில் கை வைத்து அவரை பார்த்தான் சித்து. இத்தனை வருடம் தன் தந்தையோடு குப்பை கொட்டியதில் அவரை பற்றி அறியாதவனா சித்து.
     அவர் எங்கு சுற்றி எங்கே வருவார் என்றுகூடவா தெரியாது. எனவே ‘சித்து இந்த மனுஷன் பேசுற டோனே சரியில்லை சிக்கிடாதடா’ என தனக்கு தானே எச்சரிக்கை செய்து கொண்டான்.
     ஆனால் பாவம் அவன் எவ்வளவு எச்சரிக்கையாய் இருந்தாலும் அவன் தந்தை அவர் நினைப்பதை கச்சிதமாக முடித்து விடுபவர் என்று அந்த நிமிடம் மறந்து விட்டான் சித்து.
     சற்று தயங்கிய வீராவும் மெதுவாக தான் தினமும் எவ்வளவு திருடுவது என்ற அவள் வைத்திருக்கும் கொள்கை, இப்போது தம்பிக்காக பணத்திற்கு அலைவது என அனைத்தையும் கூறினாள்.
     ‘மேய்கிறது எருமை இதுல பெருமை’ என‌ கவுண்டர் கொடுத்துக் கொண்டான் சித்து மனதிற்குள் தான். பின் வாயை திறந்து யார் அரவிந்திடம் பல்ப் வாங்குவது. எனவே மௌனமாக அவர்கள் இருவரின் உரையாடலை கவனிக்க ஆரம்பித்தான்.
     “சரிமா வீரா நாளைக்கு பணத்தை ரெடி செஞ்சிடறேன்னு உன் தம்பிட்ட சொல்லிட்டு வந்துட்டியே. இப்ப பணத்துக்கு என்ன செய்ய போற”
     “அதுதான் தெரியலை அங்கிள். யோசிசிட்டு இருக்கேன்”
     வீராவோடு சேர்ந்து தானும் யோசித்த அரவிந்த் அவர்களை குறுகுறுவென பார்க்கும் சித்துவை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஏதோ முடிவை எடுத்தவராய் சித்துவிடம் பேசினார்‌.
     “டேய் மவனே ஒரு பத்தாயிரம் ருபீஸ் எடுத்து வாடா‌ வீராமாக்கு குடுக்கனும்”
     அரவிந்த் சொல்லி நிறுத்திய நொடி சித்து குடித்துக் கொண்டிருந்த ஜூஸ் புறை ஏறிவிட்டது.
     ” நைனா என்னா சொன்ன” அதிர்ந்து போன சித்து அவசரமாய் மீண்டும் கேட்க
     “காது செவுடா போயிருச்சாடா. போ போய் பத்தாயிரம் எடுத்துட்டு வா. நீதான் ஆயிரம் ஆயிரமா சம்பாதிக்கிரியே. ஒரு பத்தாயிரம் அதுல தந்தா உன் புதையலு ஒன்னும் குறைஞ்சு போயிடாதுடா”
     அரவிந்த் அவர் இஷ்டத்துக்கு பேசி சித்துவை பேசவே விடாது காசை வாங்கிக் கொண்டார்.
     ‘இவரு பேச்சை கேக்கறதுக்கு பதிலா காசை தந்திட்டு போலாம்’ என எண்ணியே சித்துவும் பணத்தை தந்தான்.
     அதேநேரம் வீரசுந்தரி “ஐயோ அங்கிள் எனக்கு பணம் வேணாம் அங்கிள்” என்று தயங்க
     “இந்த அங்கிள் தந்தா வாங்கிக்க மாட்டியா” என பாவமாக முகத்தை வைத்து இன்னும் பேசி பேசியே அவளை சமாளித்த அரவிந்த் அவள் கையில் பணத்தை திணித்து விட்டே ஓய்ந்தார்.
     அப்படியே அது இதுவென பேசி அவள் எங்கிருக்கிறாள் என வீட்டு முகவரி அவள் கைப்பேசி எண் என அனைத்து விவரங்களையும் வாங்கி கொண்டே அவளை விட்டார் மனிதர்.
     பணம் கிடைத்த நிம்மதியில் வீரா அவள் வீட்டிற்கு செல்ல எதுவோ பெரிதாக சாதித்த மிதப்பில் நின்ற அரவிந்தை புரியாது பார்த்து வைத்தான் சித்து.
     “மவனே அந்த பொண்ண நல்லா பாத்துக்கிட்டியா”
     அரவிந்த் கேட்ட கேள்வி எதற்கு என புரியாத போதும் ‘ஆம்’ எனும் விதமாய் சித்து தலை அசைக்க
     “ரொம்ப நல்லதுடா மவனே. ஏன்னா உன்னோட வருங்கால பொண்டாட்டி அந்த பொண்ணு தான். அதனால இனிமே வேற புள்ளைங்கள பேருக்கு கூட நிமுந்து பார்க்கக்கூடாது சொல்லிட்டேன்”
     சித்துவை எச்சரித்த அவன் தந்தை “என் மருமவ எவ்ளோ அறிவு அழகு திறமை. இந்த பய அவளுக்கு கொஞ்சம் கம்மின்னாலும் பெத்த புள்ளையா போய்ட்டானே. ச்சே அரவிந்து உன் செலக்ஷனே எப்பவும் சிறப்பா தான்டா இருக்கும்” என தன்னை தானே பெருமையாக புகழ்ந்து தள்ளியடி நகர்ந்தார்.
     பாவம் தான் கேட்டவற்றில் அதிர்ந்து போய் நின்றது என்னவோ  சித்து தான். அவன் மண்டைக்குள்ளோ “சோலமுத்தா போச்சா!” என்று வடிவேலு வேறு பேசி வெறுப்பேற்றிட தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான் சித்து.
———————————–
     “டேய் மச்சான் உன் அப்பா என்னடா சொன்னாரு. நானும் வந்ததுல இருந்து கேட்டுட்டே இருக்கேன். நீ என்னடான்னு வாயவே திறக்க மாட்டேங்குற. இப்ப நீ பேசப்போறியா இல்லயா”
     அமைதியாக தன் அருகே அமர்ந்திருந்த தன் நண்பன் மாதவனிடம் கேட்டுக் கொண்டிருந்தான் ஷங்கர்.
     “என்னத்தடா சொல்ல சொல்ற. என் அப்பன் தான் பழைய பஞ்சாங்கம் ரூல்ஸ் ராமானுஜம்னு உனக்கு தெரியாதா. என்ன சொல்லி இருப்பார். நமக்கு இருக்க சொத்து போதும் உன் மாமன் சொத்து எல்லாம் வேண்டாம்னு சொல்லுது அந்த ஆளு”
     கடுப்பாக கூறிய மாதவனின் தோளில் தட்டிக் கொடுத்த ஷங்கர் “அவர் அப்படி சொல்றார்னு நீ விட்ராத மச்சான். அந்த வீட்டுல என்னமோ பெரிய புதையல் இருக்கு அது இருக்கு இது இருக்குன்னு ஊரே பேசிக்குது. அது உனக்கு வரனும்னு நான் ஆசைப்படுறேன். பாத்துக்கோடா நான் வரேன்”
     தன்னால் எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் மாதவனை நன்றாக ஏற்றிவிட்ட ஷங்கர் அதன்பின்னரே அங்கிருந்து நகர்ந்தான்.
     தன் நண்பன் கூறியது போல் அந்த வீட்டை எப்படியும் அடைய வேண்டும் என்று இப்போது இன்னும் தீவிரமாக எண்ணி அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தபடி அமர்ந்திருந்தான் மாதவன்.
     அப்போது அவன் மூளைக்குள் சட்டென்று ஒரு எண்ணம் உதிர்க்க அதை அப்படியே செயல்படுத்த திட்டம் தீட்டினான் மாதவன்.
-ரகசியம் தொடரும்

Advertisement