Advertisement

     “நாட்டாம தீர்ப்பை மாத்து….!” என்று ஒரு குரல் கேட்க பழைய துருப்பிடித்த பீரோ கதவை திறந்தது போல் தன் தலையை மெதுவாக திருப்பினார் கார்மேகம்‌.
     “டேய் இங்க என்ன பஞ்சாயத்தா நடக்குது. ஏன்டா அந்த மனுஷன கடுப்பேத்துற” கடுமையாக முறைத்துக் கொண்டிருந்த கார்மேகத்தின் மனைவி அலமேலு பேசிய தன் மகனை கடிந்தார்.
     “பின்ன என்னா ம்மா. உன்ற புருஷன் சுத்த சூனியமா பேசிட்டு இருக்காரு‌‌. அந்த ஆளு அதான் உன் அண்ணன் என் மாமன்காரன் ஊரை விட்டு ஓடி எத்தனை வருஷம் ஆகுது. இனி தான் வந்து அந்த வீட்டை சொத்தை எல்லாத்தையும் உரிமைக் கொண்டாடப் போறாரா.
     இன்னும் சொல்லப்போனா அவரு உசுரோட இருக்காரா இல்ல பரலோகம் போயிட்டாரான்னே தெரியலை. இதுல அவரு இந்த சொத்த கேக்க மட்டும் வரப்போறாராக்கும்”
     கடுப்பில் பேசிய தன் மகன் மாதவனை பார்த்து பல்லை கடித்த கார்மேகம் அவனை விடுத்து இப்போது தன் மனைவியை பார்த்து கத்தினார்.
     “இங்க பாரு அலமேலு உன் புள்ள பேசறது சுத்தமா சரியில்லை. உங்க அப்பாரு அவரு சொத்த சமமா பிரிச்சு உனக்கும் உன் அண்ணனுக்கும் எழுதி வச்சிட்டு ஊரை விட்டு ஓடுன உன் அண்ணன் திரும்பி வந்தா அதை எல்லாம் பத்திரமா தர வேண்டிய பொறுப்பை என்கிட்ட தந்திட்டு செத்து போனாரு. அதை நிறைவேத்த வேண்டியது என் கடமை. அதுனால அந்த வீடு சொத்து எதுலையும் உன் புள்ள கண்ணு போவக்கூடாது சொல்லிட்டேன்”
     கார்மேகம் உறுமலாக பேசி முடித்துவிட்டு தன் துண்டை உதறி தோலில் போட்டுக் கொண்டு வெளியேறினார். போகும் அவரையே கடுப்பாக முறைத்துக் கொண்டிருந்தான் மாதவன்.
     “எம்மா ஓடிபோன என் மாமன் கூட இந்த சொத்த இப்படி பாதுகாக்க மாட்டாரு மா. ஆனா உன் புருஷன் இருக்காரு பாரு. எல்லாரும் பெத்த புள்ளைக்கு சொத்து சேக்க தான் நினைப்பாங்க. இங்க என்னடான்னா எல்லாம் தலைகீழா இருக்கு” மாதவன் தான் புலம்பி தள்ளினான்.
     “ஏன்டா மாதவா அதான் நம்ம சொத்தே அவ்ளோ கெடக்குதேடா. இதுல என் அண்ணனோட சொத்து எதுக்குடா. வீனா உன் அப்பாரோட சண்டை போடாம இருக்கிறத வச்சு ஒழுங்கா பொழைக்க பாரு”
     அலுமேலு கணவனுக்கு ஏற்ற மனைவியாக வரி மாறாமல் பேசிவிட்டு செல்ல, எதுவும் பேச முடியாது பல்லை கடித்து நின்றது என்னவோ மாதவன் தான்.
     ‘ச்சே ஊரு உலகத்தில இல்லாத அப்பா அம்மா எனக்கு தான் கிடைச்சிருக்காங்க. அந்த வீட்டுல என்ன இருக்குன்னு கூட தெரியாம தத்தியா இருக்குதுங்க. இவங்கல வச்சிக்கிட்டு ஒன்னும் பண்ண முடியாது’ என தலையில் அடித்துக் கொண்ட மாதவன்,
     ‘ஆனா யார் என்ன செஞ்சாலும் அந்த வீட்ட மட்டும் நான் யாருக்கும் விட்டு தர மாட்டேன். எவன் எனக்கு போட்டிக்கு வரான்னு நானும் பாத்துக்கிறேன்’ என்று கறுவியபடி சென்றான்‌.
     மாதவன் கார்மேகம் மற்றும் அலமேலு தம்பதியின் ஒரே மகன். இவர்கள் குடும்பம் வத்தலக்குண்டில் பெரும் பேறுடன் செல்வ செழிப்பில் இருக்கும் குடும்பமே. சிம்பிளாக நாட்டைமை வீடு என்று ஊரில் உள்ளவர்களால் செல்லமாக சில நேரம் பொறாமையாக அழைப்படுபவர்கள் இவர்கள்.
     மேலும் உதவி என்று வருவோர்க்கு இல்லை என சொல்லாமல் அள்ளி தரும் வள்ளல் கார்மேகம் மற்றும் அலமேலு. அதனால் ஊராருக்கு சற்று பிடித்த குடும்பமும் கூட.
     வீட்டிற்கு ஒருவர் இதற்கு எல்லாம் விதிவிலக்காக இருக்க வேண்டும் என்ற சட்டத்தின் பேரில் பெற்றோருக்கு எதிர்ப்பதமாய் இருப்பவனே மாதவன். இங்கே கார்மேகம் தன் சொத்துகளையே ஊருக்கு வாரி வழங்க,
     மாதவனோ அவன் தாயின் சகோதரனின் சொத்துக்கு அடிப்போட்டு கொண்டுள்ளான். அதுவும் அந்த வீட்டில் எதுவோ ஒன்று இருக்கிறது என ஊரார் கதை வேறு கட்டியிருக்க அதை எப்படியாவது அடித்து தனக்கு உரிமையாக்கிக் கொள்ள முயற்சி செய்துக் கொண்டிருக்கிறான் மாதவன். பார்ப்போம் அவனது முயற்சிகள் வெற்றி அடையுமா என!
—————————–
     இங்கே கூட்டத்தில் பிரகாஷை போலீசில் வசமாக மாட்டிவிட்டு நிற்காமல் ஓடி வந்து ஒரு இடத்தில் மூச்சு வாங்கி நின்ற வீரா தன் அருகில் இருந்த உருவத்தை கண்டு “தேங்க்ஸ் அங்கிள்” என நன்றி உரைத்தாள்.
     அவளை பார்த்து ஈஈ என பல்லை காட்டிய அந்த உருவமும் “பரவாயில்ல பாப்பா” என்றது பெரிய மனதுடன்.
     வீராவோ இந்த நபர் வராது போயிருந்தால் தான் இன்று எப்படியும் சிக்கி இருப்பது நிச்சயம் என்று உணர்ந்தே இருந்தாள். அவளது நினைவுகள் ஒரு மணி நேரத்திற்கு முன் சென்றது.
     பிரகாஷ் பிரச்சினை செய்ய ஆரம்பித்த நேரம், இனி எல்லாம் அவ்வளவு தான் தனக்கு தான் தர்ம அடி என்று வீரா எண்ணிய நேரம், அவள் அருகே யாரோ வந்து அவள் கையை சுரண்டினர்.
     வீரா திரும்பி பார்க்க அங்கே முப்பத்திரண்டு பல்லையும் காட்டியபடி நின்றிருந்த ஒரு நபர் “அந்த காச சீக்கிரம் எடுமா பாப்பா. இல்ல நீ மாட்டிப்ப” என்று கூற
     “எ.. எந்த காசு” அரண்டு போய் வீரா கேட்டாள். “பாப்பா நீ என்ன செஞ்சன்னு நான் பாத்துட்டேன். அதனால ஓவரா நடிக்காம நீ அடிச்ச பணத்தை எடு. நான் உன்ன இங்க இருந்து காப்பத்தி விடுறேன்” என்றிட
     அந்த உருவத்தை நம்பவும் முடியாது நம்பாமலும் இருக்க முடியாது நின்றிருந்தாள் வீரா.
     அதே நேரம் இந்த விஷயம் போலிசுக்கு தகவலாய் போய்விட, அதற்கு மேல் பேசாது வீராவும் அடித்த பணத்தை சமர்த்தாக எடுத்து நீட்டி விட்டாள்.
     “அங்கிள் இந்த பணத்தை கூட மொத்தமா நீங்களே வச்சுக்கோங்க. ஆனா என்ன போலீஸ்ல மட்டும் கோர்த்தூட்டு போயிராதீங்க அங்கிள்”
     வீரா பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு அந்த நபரை தாஜா செய்ய “நீ அமைதியா இரு பாப்பா நான் பாத்துக்கிறேன்” என வசனம் பேசி நகர்ந்தார் அந்த நபர்.
     அதை வாங்கிய பின் அந்த நபர் நைசாக அங்கே பிரகாஷ் பேசிக் கொண்டிருக்கும் போது அவன் பேண்ட் பாக்கெட்டில் வைத்து விட்டு அமைதியாக நின்றுக் கொண்டார்.
     அதுவரை ஒருவித திகிலுடன் நின்றிருந்த வீராவுக்கு அதை பார்த்த பின்பு தான் உயிரே வந்தது. இனிமேல் யார் வந்தாலும் ஒரு கை பார்த்துவிடலாம் என துணிந்து நின்றாள். அதன்பின் நடந்தது நாம் அறிந்ததே.
     “அதை விடு பாப்பா நீ என்ன பண்ற. பேஷனுக்கு திருடுரியா இல்லை புரபஷனா திருடுரியா”
     நன்றி சொன்ன வீராவிடம் அந்த நபர் எதிர் கேள்வி கேட்க முழித்தாள் வீரா.
     “அது வந்து அங்கிள்…” என இழுத்து நிறுத்தியவள் “பேஷன்னு சொல்ல முடியாது ஆனா புரபஷன்னு சொல்லலாம் அங்கிள்” என்று தயங்கியபடி முடித்தாள்.
     அவள் கூறியதை கேட்டு அவர் அதிர்வார் என வீரா பார்க்க அந்த நபரோ “வாவ் சூப்பர் பாப்பா. செம த்ரில்லான வேலை” என பாராட்ட வீரா தான் குழம்பி போய் பார்த்தாள்.
     “அம்மாடி நடந்தது ஓடுனதுனு உனக்கு டையர்ட் ஆகிருக்கும். பக்கத்து தெருவுல தான் என் வீடு இருக்கு. என்கூட வாமா பாப்பா கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு போவ” என்று வாஞ்சையாக அவர் அழைக்க
     “அதெல்லாம் வேணாம் அங்கிள். நேரமாயிருச்சு என் தம்பி எனக்காவ காத்திட்டு இருப்பான்” என்று வீரா தனியே கழன்று கொள்ள பார்த்தாள்.
     “என்னம்மா பாப்பா நான் எவ்ளோ ஆசையா கூப்பிடுறேன். என் வீட்டுக்கு வரமாட்டியா. உன்னை பார்த்தா என் புள்ள வயசு தான் இருக்கும்னு தோணுது. நீ வந்தா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன். வா பாப்பா” என்று பாவமாக அழைத்தார்.
     அவர் அவ்வளவு கெஞ்சி கூப்பிடவும் “சரி வரேன் அங்கிள்” என்று ஒத்துக் கொண்டு தானும் அவரோடு சென்றாள் வீரசுந்தரி.
     அந்த வீட்டின் முன்னே சென்று நின்ற வீரா நினைத்தது இதுதான் ‘நல்ல பெரிய வீடுதான். இந்த அங்கிள் இவ்ளோ பெரிய பணக்காரரா’.
     “உள்ள வாமா. அப்படியே அந்த காலிங் பெல்லை அழுத்தி விடுமா” என்ற குரல் வந்தவுடன் “ம்ம் ஓகே அங்கிள்” என தானும் வந்த வீரா அழைப்பு மணியை அழுத்தினாள்.
     “இதோ வந்துட்டேன்” ஒரு ஆணின் குரல் உள்ளே இருந்து கேட்க ‘அங்கிளோட பையன் போல’ என்று மட்டும் எண்ணி கொண்டு நின்றாள் வீரா.
     கதவை திறந்த வாலிபன் அங்கே நின்றிருந்த அந்த மனிதரையும் வீராவையும் குழப்பமாக பார்த்துவிட்டு “யார் வேணும்” என்றான் புருவ முடிச்சுடன்.
     ‘வீடு எதுவும் மாறிப் போய் வந்துட்டமா. இந்த ஆள் என்ன இப்படி பாக்குது’ என்று வீராவிற்கு தான் குழப்பமாக இருந்தது.
     “இவன் ஒருத்தன் சும்மா நைய்யிநைய்யின்னு. போட அங்கிட்டு. நீ ஒன்னும் கண்டுக்காத பாப்பா இவன் என் பையன் தான். நீ உள்ள வாமா” என அவர் உள்ளே நுழைய அங்கே நின்ற அவர் பையனோ அவரை அதிர்ச்சியாக பார்த்து வைத்தான்.
     “ஆமா பாப்பா உன்னை பாப்பான்னே கூப்பிடுறேனே உன் பேர் என்னம்மா?” என்று முடிவில் கேட்க ‘ஷப்பா இப்பவாவது என் பேரை கேட்டாரே’ என எண்ணிய வீரா
     “என் பேர் வீரசுந்தரி அங்கிள். எல்லாரும் வீரான்னு கூப்பிடுவாங்க. ஆமா உங்க பேர் என்ன அங்கிள்” என்றாள்.
     “வீரசுந்தரியா பேரே நல்லா வீரமா இருக்கேம்மா. சூப்பர் சூப்பர்” என சிலாகித்து கூறியவர் “என் பேர் அரவிந்த் வீரா” என்றார் கெத்தாய்.
     “இவன் என் பையன் சித்தார்த்மா” ஓரமாய் இங்கே நடப்பதை ஏதோ அதிசயத்தை போல் பார்த்துக் கொண்டிருந்த சித்துவை காட்டி சொன்னார் அரவிந்த்.
     “ஓஓ நல்ல பேரு அங்கிள்” என்ற வீராவுக்கும் என்ன பேசுவது என்று தெரியவில்லை. எனவே அமைதியாக இருக்க அரவிந்தே தொடர்ந்தார்.
     “உனக்கு அப்பா அம்மா இருக்காங்களா?”
     “எனக்கு அப்பா அம்மாலாம் இல்ல அங்கிள். ஆனா ஒரு தம்பி இருக்கான். பேரு கதிர்‌. அவன படிக்க வைக்க தான் நான் இவ்ளோ கஷ்டப்படுறேன் அங்கிள்”
     அரவிந்த் கேள்விகளுக்கு வீரா பதில் சொல்லி கொண்டிருக்க ‘இங்க என்னடா நடக்குது. என் நைனா இந்த பொண்ணு கண்ணுக்கும் தெரியிறார் போலையே. ஆனா எப்படி’ என சித்து குழப்பத்துடன் பார்த்திருந்தான்.
     பேசி முடித்த வீரா அந்த வீட்டை சுற்றி தன் பார்வையை ஓட்ட அங்கே அரவிந்தின் படத்திற்கு மாலை போடப்பட்டு தொங்கிக் கொண்டிருந்தது.
     அதில் அதிர்ந்து போன வீரா அப்போது வரை அவர் முகத்தை மட்டும் பார்த்ததை விடுத்து மெதுவாக அவர் கால்களை பார்க்க அது அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தது.
     தான் கண்டது கனவா நினைவா என்று கண்களை மீண்டும் தேய்த்து கொண்டு பார்த்த வீராவுக்கு மிதக்கும் அரவிந்தே தெரிய உச்சக்கட்ட அதிர்வில் மயங்கி சரிந்தாள்.
     “என்னடா இது இந்த பொண்ணு பொசுக்குன்னு மயங்கிருச்சு. டேய் மவனே வந்து என்னாச்சுன்னு பாருடா” என்று அரவிந்த் கத்த
     “ஏன் ப்பா செத்தும் என் உயிர வாங்குற. யாரோ ஒரு பொண்ண கூட்டிட்டு வந்து இங்க வச்சு சாவடிக்க பாக்குரியா” கடுப்பில் கத்திய சித்துவும் தன் விதியை நொந்தபடி வீராவின் அருகில் சென்றான்‌.
-ரகசியம் தொடரும்

Advertisement