Advertisement

     “அதான் சாப்டு முடிச்சிட்டியே. இந்த நாலு நாள் என்ன செஞ்ச. சொல்லு சொல்லு”
     சித்து கேட்டதிற்கு அரவிந்தும் தன் அரும் பெரும் சாதனைகளை எடுத்துரைக்க தலையிலே அடித்துக் கொண்டான் சித்து. திடீரென எதோ தோன்ற
     “அப்போ காலைல என் ஆபிஸ்ல கலாட்டா செஞ்சது நீதானா?” பல்லை கடித்து கொண்டு சித்து கேட்க “ஹீஹீஹீ…” என கேவலமாக ஒரு சிரிப்பை தந்த அரவிந்த் ஆம் என்றார்.
     “யோவ் மனுஷனாயா நீ. ஒழுங்கா வேலை பாக்குற என் ஆபீஸ் ஆளுங்களையே கடைத் தெருவில சண்டை போடுற மாதிரி சண்டை போட விட்டுருக்க. நீ செஞ்ச வேலைக்கு அவங்க திட்டு வாங்கிட்டு போறாங்க”
     சித்தார்த் மூச்சு வாங்க பேசி நிறுத்த ஹாயாக அமர்ந்திருந்த அரவிந்த் தன் காதை விரல்களால் நோண்டியபடி “சின்ன திருத்தம்டா மகனே. நான் மனுஷன் இல்ல ஆவி.
     அப்புறம் அது என்ன ஆபீஸா. எல்லாரும் விட்டா அந்த கம்ப்யூட்டரையே கட்டி குடும்பம் நடத்திருவானுங்க போல. அதான் அவனுங்க மைண்ட் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக சின்ன கேம் விளாட விட்டேன்” என சட்டம் பேச அவரை முறைக்க மட்டுமே முடிந்தது சித்துவால்‌.
     “சரி நீ தூங்கு சித்து. நான் சாப்பிட்டு வயிறு புல்லா நிறைஞ்சு போச்சு. நான் போய் ரெஸ்ட் எடுக்க போறேன். பாய்டா”
     சாப்பிட்டு முடித்து கிளம்ப போன அரவிந்த் போகிற போக்கில் “அப்புறம் இருந்த பசில உன் தோசையையும் சேத்து எடுத்து சாப்பிட்டேன். நீ போய் உனக்கு வேற தோசை ஊத்தி சாப்புட்டுக்கடா. வரட்டா” என்றவர் விருட்டென்று வெளியே பாய்ந்து சென்றார்.
     “என்னாது என் தோசையையும் தின்னுட்டியா” என அதிர்ந்து போய் சித்து கத்த, அதற்குள் அரவிந்தோ வாசலருகே நின்று பாய் காட்டிவிட்டு சென்றிருந்தார்.
     “யோவ் நைநா எங்க சுத்தியும் மறுபடியும் திங்க வீட்டுக்கு தானே வரனும். அப்போ பேசிக்கிறேன்”
     கத்திய சித்து பாத்திரங்களை பார்க்க அங்கே தோசை மட்டுமின்றி சட்டினியையும் காலி செய்திருந்தார் அவன் அருமை தந்தை.
     “என்ன சட்டினியுமா ஐயோ” என தலையில் துண்டை போட்ட சித்து நொந்தவாரே மீண்டும் மூன்று தோசை வார்த்து பொடியை வைத்து உண்டு முடித்து படுக்க சென்றான்.
————————————-
     காலை எழுந்தது முதலே பரபரப்பாக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் வீரா. தினமும் செய்வது தான் என்றாலும் இன்று மனதும் பரபரப்பாகவே இருந்தது.
     ஏனெனில் இன்றேனும் எப்படியாவது தன் தம்பிக்கு கொடுக்க பணத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் என முடிவு செய்திருந்தாள்.
     அதற்கு தன் கொள்கையான ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் மட்டும் திருடும் ஸ்கீமை ஒதுக்கி வைத்துவிட்டு லம்ப்பாக அடித்து கொண்டு வர வேண்டும் என முடிவு செய்து விட்டாள்.
     அதற்கு தான் இந்த பரபரப்பு. கதிர் வழக்கம் போல் பள்ளி செல்ல உணவு கட்டி தந்துவிட்டு “நாளைக்கு கண்டிப்பா பணம் தந்துருவேன் கதிரு. அக்கா கேட்ட இடத்துல இன்னைக்கு தரேன்னு சொல்லிட்டாங்க. உங்க மிஸ்ஸூ கேட்டா சொல்லிருடா‌”
     கதிரிடம் ஒரு காரணத்தை சொல்லி விட்டு இன்றைக்கு வரும் போது பணத்துடன் வருவது என்ற முடிவுடன் தன் பணிக்கு அதுதான் திருட்டு தொழிலுக்கு கிளம்பிவிட்டாள் வீரசுந்தரி.
     அது ஒரு முக்கிய பேருந்து நிறுத்தம். மக்கள் கூட்டம் எப்போதும் ஜேஜேவென இருக்கும்‌. அருகிலேயே ஒரு ஏ.டி.எமும் இருக்க இன்று நினைத்து வந்த காரியம் வெற்றி பெற்றுவிடும் என்று எண்ணிய வீரா அங்கேயே தன் ஜாகையை போட்டு விட்டாள்.
     அவள் சாதாரணமாக நடமாடினாலும் இரண்டு ஜோடி கண்கள் அவளை சந்தேகத்துடனே பார்த்து வைத்தது.
     ‘என்ன இத்தனை பேத்துட்ட அடிச்சும் ஆயிரம் தான் தேறி இருக்கு. ரொம்ப நேரம் இங்கையே இருந்தாலும் சந்தேகம் வர சான்ஸ் இருக்கு. என்ன பண்றது’
     வீரா மனதிற்குள் யோசித்தபடியே சுற்றி சுற்றி பார்த்து ஆராய்ந்து கொண்டிருந்தாள்.
     அப்போது ஏ.டி.எம்மில் பணம் எடுத்த ஒரு நபர் பந்தாவாக தன் கையில் வைத்திருந்த பணத்தை எண்ணிக் கொண்டே வெளியே வந்தான்.
     அவனோடு சேர்ந்து தானும் அதை வாய் அசைத்து எண்ணிப்பார்த்தாள் வீரா. ‘என்னாது ஐம்பதாயிரமா!’ என்று ஆனந்த அதிர்ச்சி அடைந்த வீரா
     ‘செம்ம வேட்டை இதை பெர்பெக்டா கரெக்ட் பண்ணுறோம்! பிண்ணுறோம்!’ என மனதிற்குள் எப்படி அதை அடிப்பது என பிளான் போட துவங்கினாள்.
     அதே நேரம் அவளை கவனித்துக் கொண்டிருந்த அந்த இரண்டு ஜோடி விழிகளும் இதை பார்த்து விட்டன. அதில் ஒரு ஜோடி விழிகள் அவள் எப்படி அந்த பணத்தை அடிக்க போகிறாள் என ஆர்வமாக பார்த்தது என்றால்,
     மற்றொரு ஜோடி விழிகளோ நீ செய் அதற்கு பின் இருக்கு கச்சேரி என்று பார்த்திருந்தது.
     அந்த ஆள் பணத்தை பர்சில் வைத்து தன் பின் பாக்கெட்டில் வைத்துவிட்டு அவன் வாகனத்தை நோக்கி போகும் நேரம் அவனின் பின்னாலையே சென்ற வீரா
     லாவகமாக அந்த பர்சை அடித்து அதிலிருந்து பத்தாயிரம் ரூபாயை மட்டும் எடுத்துவிட்டு மீதம் இருந்ததை அந்த பர்சிலே விட்டுவிட்டு அதை அந்த நபரின் பாக்கெட்டிலே மீண்டும் வைத்துவிட்டாள்.
     அதை தூரத்தில் இருந்து பார்த்த இரண்டு ஜோடி கண்களும் ‘சபாஷ்! இந்த பொண்ணு செம டேலண்டட் தான்’  என்றும்
     ‘நீ இவ்ளோ பெரிய கேடியா. இருடி இந்தா வரேன். வந்து உன்னை கையும் களவுமா மாட்டி விடுறேன்’ என இரண்டு விதமாக நினைத்துக் கொண்டது.
     அந்த பணத்தை எடுத்த ஆள் சரியாக வண்டியில் ஏறும் நேரம் ஒருவன் வந்து “சார் நீங்க ஏ.டி.எம்ல பணம் எடுத்துட்டு தானே போறீங்க?” என்று கேட்க
     அந்த ஆள் அவனை மேலிருந்து கீழாக ஒரு மாதிரி பார்த்து வைத்து “அது எதுக்கு உங்களுக்கு. நீங்க எதுக்கு இதையெல்லாம் கேக்குறீங்க” என பதில் கேள்வி கேட்டான்.
     “அது எதுக்கு சார் உனக்கு. நீ உன் பர்ச எடுத்து பாரு அதுல காசு இருக்காது” தைரியமாக கூறி அங்கேயே நிற்க அதிர்ந்து போன அந்த நபர் வேகமாக பர்சை எடுத்து பார்த்தான்.
     அதில் அவன் வைத்த பணம் இருக்க குறைந்த பணத்தை கவனிக்காது “யோவ் மரியாதையா போயிரு. இப்படிலாம் சொல்லி என் பணத்தை அடிச்சிட்டு போலாம்னு நினைக்கிறியா” என திட்டப்போக அங்கே கூட்டம் கூடி விட்டது.
     “என்ன சார் என்ன பிரச்சினை” என ஆளாளுக்கு வந்து கேட்க வீராவிற்கு திக்கென்றது. ஏனெனில் வீராவை மாட்டிவிட சென்ற ஆள் அவளுக்கு நன்கு தெரிந்தவனே.
     அவன் பெயர் பிரகாஷ். ஏற்கனவே வீராவிடம் ஒருமுறை வம்பு செய்து தர்ம சாத்து வாங்கியுள்ளான். அதற்கு அவளை பழிவாங்கவே இப்போது அவளை மாட்டிவிட நினைத்தான்.
     வீராவை பார்த்துக் கொண்டே “சார் நீ பணத்தை எண்ணி பாரு சார் அது கொறஞ்சு போயிருக்கும்” என்று கூறிவிட
     அந்த ஆளும் பணத்தை எடுத்து எண்ணி பார்த்தான். பிரகாஷ் சொன்னது போலவே அதில் பத்தாயிரம் குறைந்திருக்க திடுக்கிட்ட அந்த ஆள் “யோவ் என்னயா காச நீ திருடிட்டியா” என்று கத்த ஆரம்பிக்க
     பிரகாஷோ “இல்ல சார் நான் எடுக்கல. ஆனா யார் எடுத்தான்னு நான் பாத்தேன்” என்று ஆரம்பிக்க வீராவிற்கு தலையே சுற்றி விட்டது‌.
     அங்கே பிரகாஷோ “எடுத்தது யாருன்னு சொன்னா நீங்க எல்லாம் அப்படியே ஷாக் ஆகிடுவீங்க. ஏன்னா அடிச்சது ஒரு பொண்ணு” என்று ராகம் பாட
     அவன் சட்டையை பிடித்த அந்த ஆள் “யோவ் ஒழுங்கா யாருன்னு சொல்லு” என கடுப்பாய் கேட்க அதற்கு மேல் தாமதிக்காமல் வீராவை காட்டி “இந்த பொண்ணு தான் சார்” என்று நேக்காக கோர்த்து விட்டான்.
     அதை கேட்டு அதிர்வது போல் ஒரு ஆக்டிங்கை போட்ட வீரா “சார் நான்லாம் டீசன்டு பேமிலில பொறந்த பொண்ணு சார். அந்த பொறுக்கி பய பேச்சை கேட்டு நீங்க எப்படி என்னை சந்தேகப்படலாம்” என்று சண்டைக்கு இழுத்தாள்.
     “சார் அவ இப்புடி எதாவது பேசி டபாய்க்க பார்ப்பா. நீ அதை கண்டுக்காம போலீசுக்கு போன போடு சார். அவங்க வந்து ரெண்டு தட்டு தட்டுனா எடுத்த காச தந்துருவா”
     வீராவை பார்த்து பி.எஸ்.வீரப்பாவை போல் சிரித்தபடி பிரகாஷ் போட்டுக் கொடுக்க வீராவும் நானும் அசத்தவள் இல்லை என்பது போல் சிறிது நேரம் வேண்டும் என்றே சண்டையிட்டாள். அப்படியே தப்பிவிடலாம் என்ற நோக்கில்.
     ஆனால் அதற்குள் வேறு யாரோ நூறுக்கு அழைத்திருக்க சண்டை நடக்கும் போதே காவல்துறை என்ட்றீ கொடுக்க சத்தம் குறைந்தது.
     “என்ன என்ன பிரச்சினை” காக்கி உடையில் சூரி கெட்டப்பில் ஒருவர் வந்து நிற்க கூட்டத்தில் யாரோ “இவன் யார்ரா ஓனானுக்கு சட்டை பேண்ட் போட்டுட்டு வந்துருக்கான்” என கலாய்க்க
     அதை யாரும் கவனிக்கவில்லை. அங்கு நடந்த பிரச்சினைகளை அந்த ஏ.டி.எம் ஆள் கூறிவிட “சார் இவங்க வேணும்னே என் பழிய தூக்கி போடுறாங்க.
     நான் அப்படிலாம் பண்ணவே இல்ல. நான் அந்த மாதிரி பொண்ணும் இல்ல சார்” என்று பாவம் போல் முகத்தை வைத்து கூறினாள். ஆனால் மனதிற்குள் திக் திக் என்று தான் இருந்தது.
     ஆளாளுக்கு ஒவ்வொன்று மீண்டும் பேச வீரா அவர்களுடன் சண்டையிட என மறுபடியும் சண்டை ஆரம்பிக்க “ஸ்டாப் இட். யோவ் நிறுத்துங்க” என வந்த போலீஸ் லத்தியை பிடித்து எக்கியபடி பேச அனைவரும் அமைதியாகினர்.
     “எம்மா நீ என்னாம்மா பஜாரி மாதிரி கத்துற. கொஞ்ச நேரம் சும்மா இருமா. இந்த பிரச்சினைய நானே முடிச்சி விடுவிடுறேன். அதுக்கு எம்மா பொண்ணே நீ உன் பைய குடு”
     “இங்க பாருங்க சார் என் காச இந்த நாதாரி அவன் காசுன்னு சொன்னா என்ன பண்றது. என் காச அவனுதுன்னு தர மாட்டேன்னு சத்தியம் பண்ணிக் குடு நான் என் பைய தரேன்” அந்த போலீசிடம் தன் கையை நீட்டியவாறு நின்றாள் வீரா.
     ‘இது என்னடா இது’ என்று நொந்த அந்த சூரி போலீசும் “எம்மா சத்தியம் பண்றேன்மா. போதுமா” என அவன் கையில் அடித்து சத்தியம் செய்த பிறகே தன் கைப்பையை தந்தாள்.
     அதை ஆராய அனைவரும் ஆர்வமாக அங்கே பார்த்தனர். ஆனால் அதில் ஆயிரம் ரூபாய் தான் இருந்தது. அதை அனைவருக்கும் காட்டியது போலீஸ்.
     “இது எப்படி அவ எடுத்தத நான் பாத்தனே” என்று மண்டை காய்ந்தது பிரகாஷூக்கு. “ஹப்பாடா” என்று பெரு மூச்சு விட்டுக் கொண்ட வீரா
     “சார் எனக்கு என்னவோ எல்லாரையும் இப்படி திசத்திருப்பி திருட இந்த பரங்கிக்கா மண்டையன் போட்ட பிளான் இதுன்னு தோனுது. எதுக்கும் அவன புடிச்சு விசாரிங்க”
     போகிற போக்கில் வீரா பிரகாஷை கோர்த்துவிட்டாள். இப்போது அனைவரையும் திரட்டிய பிரகாஷை பார்த்து ஸ்லோ மோஷனில் கூட்டம் திரும்ப ‘என்ன மொத்த கூட்டமும் நம்மல ஒரு மாதிரி பாக்குது’ என பதறினான் அவன்.
     அவனை அமுக்கி பிடித்த போலீஸ் அவன் அனைத்து பொருட்களையும் சோதனை போட பத்தாயிரம் ரூபாய் அவன் பாக்கெட்டில் இருந்தது.
     “பிளடி பக்கெட் நீ திருடிட்டு அந்த அப்பாவி பாப்பா மேல பழிய போட பாக்குறியா” என சூரி அவன் மூஞ்சியிலேயை ஒரு குத்துவிட அடி இடி போல் விழுந்தது‌.
     கூட்டமும் அவனை சேர்ந்து குமுற “ஹே அப்படி போடே போடே” பேக்கிரவுண்டில் பாட்டை போட்டு வீரா எஸ் ஆகிவிட்டாள்.
     சிறிது தூரம் ஓடி சென்று நின்ற வீரா புன்னகையுடன் தன் அருகே நின்ற நபரை பார்த்து “தேங்க்ஸ் அங்கிள்” என்றாள்.
-ரகசியம் தொடரும்

Advertisement