Advertisement

     “அக்கா” கத்தியபடி வந்த கதிரை புன்னைகையுடன் பார்த்த வீரா “வாடா கதிரு” என்று அழைத்தாள்.
     “அக்கா பணம் ரெடி பண்ணிட்டியா. இன்னும் எட்டு நாள் தான் இருக்கு. மிஸ் வேற எப்போ காசு தருவன்னு கேட்டுட்டே இருக்காங்க”
     வந்ததும் வராததுமாக கதிர் பண விஷயத்தை ஞாபகப்படுத்தினான். அவனும் தயங்கி தயங்கியே கேட்டு மெல்ல நிமிர்ந்து அவன் அக்காவை பார்த்து வைத்தான்.
     கதிருக்கும் அவன் குடும்ப சூழல் நன்றாகவே தெரியும் ஆதலால் டீச்சர் தினமும் பணத்தை பற்றி கேட்டும் அவன் அதை தன் அக்காவிடம் சொல்லாமல் இருந்தான்.
     ஆனால் இன்று டீச்சர் மிகவும் வற்புறுத்தி கேட்ட காரணத்தால் தான் மெதுவாக தன் தமக்கையிடம் கேட்டுவிட்டான்.
     “கண்டிப்பா ரெடி பண்ணிடுவேன் கதிரு‌. நான் வேலை பாக்குற எடத்துல கேட்டு வச்சிருக்கேன். அவங்க தரேன்னு சொல்லியிருக்காங்க. இன்னும் எட்டு நாள் இருக்குல்ல. எப்படியும் ரெடி பண்ணிருவேன் கதிரு”
     வீரா தன் தம்பிக்கு கூட தெரியாமல் தான் இந்த திருட்டு தொழிலை பார்த்து வருகிறாள். எங்கோ ஒரு கடையில் வேலை பார்ப்பதாக கூறியிருந்தாள்.
     இந்த வாழ்க்கையையே அவள் தம்பிக்காக வாழும் போது அவனை நன்றாக கவனிக்க வேண்டும் என்று முடிவு செய்து அவனை நல்ல பள்ளியிலே படிக்க வைக்கிறாள்‌.
     அவன் கேட்டதை எல்லாம் மறுக்காது செய்து முடித்து வைப்பாள். கதிரும் அவளிடம் அப்படி எதுவும் தேவையில்லாமல் கேட்கவும் மாட்டான். எனவே எப்படியும் நாளை எங்காவது பல்க்காக அடித்து கதிரிடம் கொடுக்க முடிவு செய்து விட்டாள் வீரா.
     “க்கா நான் விளையாட கிரவுண்டுக்கு போறேன்” சொல்லிவிட்டு கதிர் வீட்டை விட்டு கிளம்பி ஓடினான்.
     “ம்ம் எப்படி எட்டாயிரம் ரெடி பண்றது. நான் வேற கதிருக்கிட்ட அவ்ளோ உறுதியா சொல்லி அனுப்பிட்டேன். எங்க போய் ஆட்டைய போட. ஒன்னுமே புரிய மாட்டேங்குதே”
     தனக்குள் புலம்புவதாக எண்ணி வாய்விட்டே புலம்பிய வீரா “என்னடா இது இந்த வீராக்கு வந்த சோதனை. முழுசா ஒரு எட்டாயிரம் ஆட்டைய போடுறதுக்கு என்ன எல்லாம் குட்டிக்கரணம் அடிச்சாலும் முடியலையே” என்று நொந்து விட்டாள்.
     “சரி நாளைக்கு நமக்குனு ஒரு இளிச்சவாயன் சிக்காமலா போவான்” அவள் தன்னையே சமாதானம் செய்தவள் வேலையை தொடர்ந்தாள்.
—————————————
     தன் முன்னால் மயங்கி கிடந்த மகனை கண்ணத்தில் கை வைத்து பார்த்தபடி அமர்ந்திருந்தார் அரவிந்த்.
     “இவன் என்ன பொசுக்குன்னு மயங்கி சரிஞ்சிட்டான். இந்த லூசு பயலை பெத்துட்டு நான் பட்ற பாடு. இவன் உண்மையாவே என் பையனான்னு அடிக்கடி சந்தேகம் வருது.  ச்சே” சலிப்பாக புலம்பி தள்ளினார் அரவிந்த்.
     “முதல்ல இவனை எழுப்பி விட்டுட்டு அப்புறம் பேசிக்கலாம்”
     தண்ணீரை எடுத்து வந்த அரவிந்த் பொலிச் பொலிச் என சித்துவின் முகத்திலேயே தெளிக்க அதன்பின்னே அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் நினைவு திரும்பியது.
     “அம்மா…” என தலையை பிடித்து கொண்டு எழுந்து அமர்ந்த சித்துவின் அருகே பளிச்சென பேஸ்ட் விளம்பரத்துக்கு வரும் நடிகை போல் பல்லை காட்டிக் கொண்டு அமர்ந்திருந்தார் அரவிந்த்.
     சித்து எழுந்த உடனே “டேய் மகனே என்னடா இப்படி மயங்கிட்ட. நான் உன் அப்பன்டா” என மீண்டும் பேச, தன் தந்தையை பார்த்தது ஏதோ பிரமை என்று எண்ணியிருந்தான் சித்து.
     ஆனால் அவர் மீண்டும் சிரித்துக் கொண்டு பேச “நமக்கு கண்ணுல கோளாறா இல்ல நாம கனவு எதுவும் காணுறோமா” என கண்ணை கசக்கி பார்த்தான்.
     அப்போதும் அசையாது அவன் கண்களில் அரவிந்த் தெரியவே தன் கைகளை கிள்ளி பார்த்தான். ஆனால் சித்து என்ன செய்தாலும் அவன் முன்னால் இருந்த அவன் தந்தை மறையவில்லை.
     “ப்பா உண்மையாவே நீதானா. எப்படி ப்பா வந்த. நீ தான் செத்து போய்ட்டியே. அப்புறம் எப்படி திரும்ப வந்த. நான் தான் நீ உயிரோட இருக்கறத தெரியாம வேற யாரையாவது எரிச்சிட்டு வந்துட்டேனா”
     சித்து பலவித உணர்ச்சிகளில் கண்களில் நீர் ததும்ப பேசி நிறுத்த “இவ்ளோ எமோஷன் உடம்புக்கு ஆகாதுடா மகனே‌. நானே சொல்லுவேன். பொறுமையா கேளு” என்று நிறுத்தினார் தந்தை.
     “நான் உண்மையாவே செத்து தான் போய்ட்டேன்டா மகனே. நீ கொள்ளி வச்சதும் எனக்கு தான். ஆனா அது என்ன மாயமோ தெரியல நான் ஆவியா இங்கையே திரியறேன்”
     அரவிந்த் சொல்லி முடிக்க “என்னாது ஆவியா” என்று அதிர்ந்து போன சித்து “ப்பா நீ பேயாவா சுத்துற” என கலவரமாக கேட்டான்.
     அதற்கு அரவிந்தும் பாவமாக தலை அசைத்து வைக்க, “வாட் எ மெடிக்கல் மிராக்கல். எப்படி இது நடந்திருக்கும்” என அதிர்வில் இருந்து நீங்கிய சித்து குறுக்கும் நெடுக்குமாக நடந்து யோசிக்க, இங்கே அரவிந்துக்கோ பசி காதை அடைத்தது.
     “டேய் சித்து பையா. அதெல்லாம் அப்புறம் யோசிக்கலாம்‌. இப்போ முதல்ல போய் சமைக்கிற வேலைய பாரு‌. பசி உசுரு போகுது”
     “அது எப்படி நைனா செத்துப் போனதுக்கு அப்புறம் கூட உனக்கு டைம்கு பசிக்குது. ஆனா பொதுவா செத்தவங்க சாப்புட மாட்டாங்கன்னு நீயே சொல்லிருக்கியே. உன்னால மட்டும் எப்படி சாப்புட முடியுது”
     சித்து பாயிண்டை பிடித்து தன் தந்தையிடம் கேள்வியை தொடுக்க “அதுதான் எனக்கும் தெரிலடா மவனே. தயவு செஞ்சு போய் சமைடா கொஞ்ச நாளா அந்த முக்கு கடை பிரியாணியை திருடி தின்னு நாள ஓட்டிட்டேன். எங்க திருடும் போதும் மாட்டிக்குவேனோன்னு திக்கு திக்குன்னே இருந்ததுடா. அதனால ஒளிஞ்சு மறஞ்சு திருடருதுக்குள்ள நாக்கு தள்ளிருச்சு”.
     அரவிந்த் பெருமூச்சு எடுத்து சொல்லி முடிக்க, அவரை கீழிருந்து மேலாக ஒரு மாதிரி பார்த்த சித்து “எனக்கு ஒரு சந்தேகம் நைனா. நீ உண்மையாவே பேயா இல்ல பேய் மாதிரி சீன் போடுறியா?” என சந்தேகமாய் கேட்க
     “ஏன்டா மகனே உனக்கு இந்த சந்தேகம். டெபனேட்லி ஐ ஏம் அ அக்மார்க் பேய்டா” என பதிலளித்தார்.
     “அப்புறம் ஏன் நீ ஒளிஞ்சு மறஞ்சு போய் சோத்த திருடுன. நேராகவே போய் எடுத்து தின்ன வேண்டியது தானே. நீதான் பேய் ஆச்சே யார் கண்ணுக்கும் தெரிய மாட்டியே” என்று நக்கலடித்த சித்து ஏதோ யோசித்தவன்
     “ஆனா என் கண்ணுக்கு மட்டும் தெரியிற. அது எப்படி நைனா” என கேள்வியோடு நிறுத்தினான்.
     “அட ஆமால்ல இதை நான் யோசிக்காம விட்டுட்டேன்டா. நான் ஏன் உன் கண்ணுக்கு மட்டும் தெரியிறேன்னு எனக்கும் தெரியலை. ஆனா நான் செத்ததுல இருந்து நானும் உன்கூட தான் இருக்கேன். சரி சரி நான் பொறுமையா கதை சொல்றேன். முதல்ல நீ போய் சமைடா. பசி வயித்தை கிள்ளுது”
     அரவிந்த் அப்போதும் சோற்றிலே குறியாய் இருக்க “போறேன் போய் தொலைக்கிறேன்” அலுத்துக் கொண்டே சென்றான் சித்து. அவனை பின்தொடர்ந்தது வந்த அரவிந்தும் சமையல் மேடையில் ஏறி அமர்ந்துக் கொண்டார். அதன்பின் சித்து தன் கேள்விகளை கேட்க ஆரம்பித்தான்.
     “ப்பா நீ எப்படி செத்த. செத்த அன்னைல இருந்து இந்த நாலு நாள் என்ன பண்ணிட்டு இருந்த. இத்தனை நாள் என் கண்ணுக்கு தெரியாத நீ இப்ப மட்டும் எப்படி என் கண்ணுல தெரியிற. முதல்ல இதுக்கு எல்லாம் பதில சொல்லு”
     “அதுதான் எனக்கும் தெரியலைடா மகனே. இந்த நாலு நாள் நானும் உன்கூட தான் சுத்திட்டு இருக்கேன். ஆனா அப்போ எல்லாம் நான் உன் கண்ணுக்கு தெரியவே இல்ல. இப்ப மட்டும் தெரியிறேன். அது எப்படி?”
     சித்துவிடமே கேள்வியை அவன் தந்தை திருப்பி விட, அவரை முறைத்த சித்து “சரி அதைவிடு என் மத்த கேள்விக்கு பதில சொல்லு” என சட்னியை அரைத்துக் கொண்டே கேட்டான்.
     “ஏன்டா மவனே நான் பேய் தானேடா. உனக்கு என்ன பாத்தா பயமாவே இல்லையா. இவ்ளோ கேசுவலா பேசுறா. என்னை பாத்தா‌ டெரர் பேய் மாதிரி இல்லையா” என அரவிந்த் அப்பாவியாக கேட்டு வைக்க சிரித்துவிட்டான் சித்து.
     “நைனா நீ உன்னை பத்தி என்ன நினைச்சுக்கிட்டு இருக்க. உயிரோட இருக்கும் போதே நீ ஒரு காமடி பீஸூ. இதுல நீ செத்தா மட்டும் டெரரா மாறிடுவியா” என்று சிரித்தவன் “அதைவிடு நீ இத்தனை நாள் என்ன பண்ணிட்டு இருந்த. அதை சொல்லு” என்றான்.
     “முதல் நாளு அதான் நான் செத்த அன்னைக்கு ஏதோ நெஞ்சுல எறும்பு கடிச்சா மாதிரி சுருக்குன்னு வலிச்சுதுடா. நான் அது எதுவோ பூச்சிக் கடினு தட்டிவிட்டுட்டு எந்திரிச்சு வாக்கிங் போயிட்டேன்” என்று ஆரம்பிக்க
     “நிறுத்து நிறுத்து. நீதான் ஹார்ட் அட்டாக் வந்து பெட்லையே தானே செத்து கெடந்த. எப்போ வாக்கிங் போன” சித்து இடையில் நிறுத்தி கேள்விகளை தொடுத்தான்.
     “அட என்னை முழுசா சொல்ல விடேன்டா. உன் டவுட்டை எல்லாம் கடைசியா கேளு” என்று அலுத்துக் கொண்ட அரவிந்த் தொடர்ந்தார்.
     அவர் வாக்கிங் சென்றது, அங்கிருந்த பெண்களை வளைத்து வளைத்து சைட் அடித்தது, அந்த பெண்கள் இவரை சற்றும் கண்டுக் கொள்ளாமல் சென்றது.
     அதன்பின் ஒரு பாட்டி பேயிடம் பலமாக பல்ப் வாங்கியது, அந்த கிழவியிடம் சிக்காமல் விழுந்து வாரி ஓடி வந்தது என எல்லாவற்றையும் சொல்லி முடித்தார்.
     “நம்ம வீட்டுக்கு வந்து பார்த்தா தெருவே கூடி நிக்குதுடா. அப்புறம் தான் நான் செத்ததே தெரியுது” பாவமாக அரவிந்த் சொல்லி முடித்த நேரம் “ஹாஹாஹா…” என்று வயிற்றை பிடித்து கொண்டு சிரித்து கொண்டிருந்தான் சித்து‌.
     “யோவ் நைனா நீ செத்துட்டன்னு உயிரைக் கொடுத்து நான் அழுதுட்டு இருந்தா. நீ செத்தது கூட தெரியாம ஊரை சுத்திட்டு வந்துருக்க. இதுல ஹைலைட் என்ன தெரியுமா. நீ செத்த நியூஸ் ஊருக்கே தெரிஞ்சு கடைசியா தான் உனக்கே தெரிஞ்சிருக்கு பாரேன்”
     மீண்டும் அரவிந்தை பார்த்து பார்த்து சிரித்தான் சித்து. “சரி சரி ஓட்டாதடா. எதோ என் நேரம் இப்படி ஆகிப் போச்சு. ஆனால் நான் வந்த அப்புறம் நடந்ததை பாக்கனுமே.
     அந்த பாலுல இருந்து பல்லு போன கிழவி வரை எல்லாரும் என்னை பத்தி நல்லவிதமா புகழ்ந்து தள்ளிட்டு இருந்தாங்கடா. நான் உயிரோட இருக்கும் போது சாணில செருப்ப முக்கி அடிச்ச கூட்டம் என் சாவுல நல்லவன் வல்லவன் நாலும் தெரிஞ்சவன்னு பேசுறத கேட்டு உன் அப்பன் நான் செம ஹாப்பிடா”
     அரவிந்த் சிலாகித்து கூற “இதெல்லாம் நடந்துச்சா. நைனா ஒரு நாள்ல நீ ஹீரோ ஆகிட்டியா. சூப்பர் போ” என சித்து அவர் கையில் தட்ட அது காற்றை தொட்டது போல் தான் இருந்தது.
     “சித்து நான் ஆவிடா. என்னை அப்படி எல்லாம் தொட முடியாது. நான் நினைச்சா தான் உன்னை தொட முடியும்” அரவிந்த் கெத்தாய் இல்லாத காலரை தூக்கிவிட
     “செத்தும் உன் கொழுப்பு மட்டும் குறையவே இல்ல ப்பா. சரி பேச்சை குறைச்சிட்டு வா சாப்பிடலாம்” அலுத்துக் கொண்டே சமைத்த உணவை மேசையில் எடுத்து வைத்தான்.
-ரகசியம் தொடரும்

Advertisement