Advertisement

     அரவிந்த் இறந்து சித்துவை விட்டு சென்று நான்கு நாட்கள் முடிந்திருந்தது‌. சித்தார்த்தும் தற்போது அலுவலகம் செல்ல துவங்கி விட்டான். ஆளில்லா அவன் வீட்டில் இருப்பதை விட அலுவலகம் செல்வது கொஞ்சம் மனதுக்கு இதமாக இருந்தது.
     அதே நேரம் ஆன்மாவாக இருந்த அரவிந்த் தன் மகனை பின்தொடர்வதை தன் வேலையாக மாற்றிக் கொண்டார்.
     அதோடு பெண்களை தற்போது தங்குக் தடையின்றி சைட் அடிக்க ஆரம்பித்துவிட்டார் மனிதர். யாரேனும் ரோட்டில் நடந்தால் காற்றை ஊதி புழுதி பறக்க செய்து அவர்களை கலவரப் படுத்துவது,
     தெரு முக்கில் இருக்கும் பிரியாணி கடையில் திருடி தின்னுவது, தன் பரம எதிரியான பாலுவின் வண்டியில் பின்னால் அமர்ந்துக் கொண்டு நாய்களை விட்டு துரத்தவிடுவது போன்ற அரும்பெரும் சாதனைகளையும் சிறப்பாக செய்து வந்தார்.
     எப்போதும் போல் அன்றும் தன் அலுவலகம் கிளம்பி சென்றான் சித்து. அவனை தொடர்ந்து அரவிந்தும் சென்று அலுவலகத்தில் நுழைய முதலில் அவர் பார்வையில் பட்டது அங்கிருந்த அழகழகான பெண்களே.
     “அம்மாடி இந்த புள்ளைங்க எல்லாம் எவ்ளோ அழகா இருக்குங்க. இங்க தானே இந்த சித்து பையலும் ஐஞ்சாறு வருஷமா வேலப் பாக்குறான். ஒரு பொண்ணையாவது உஷார் பண்ணிருக்கலாம். இப்படி எதுக்கும் துப்பில்லாம இவன வளத்து வச்சிருக்கனே. நான்லாம் வயசுல எத்தனை பொம்பள புள்ளைங்க பின்னாடி சுத்திருக்கேன். எனக்கும் தான் ஒன்னு பொறந்திருக்கே‌. சரியான தத்தி தத்தி!”
     அரவிந்த் அங்கே நுழைந்தது முதல் அவர் மகனை போட்டு கழுவி கழுவி ஊற்றியவர் அவனை எண்ணி தலையிலே அடித்துக் கொண்டார். அதன்பின் அவர் வேலையை ஆரம்பித்து விட்டார்.
     ஒரு பெண் கணினியில் தன் முழு கவனத்தையும் வைத்து ஏதோ ஒரு முக்கியமான வேலையை பார்த்துக் கொண்டிருக்க, அவள் அருகே சென்ற அரவிந்த் “கமான் அரவிந்து! யூ கேன் டூ இட்” என தனக்கு தானே ஹை ஃபைவ் கொடுத்தவர் அவள் முடியை அலுங்காமல் குலுங்காமல் எடுத்து நன்றாக பின்னி அருக்காணி சடைப் போல் வளைத்து விட்டு நிமிர்ந்தார்.
     அழகாக இருந்த அந்த பெண்ணின் முடி தற்போது பரிதாபமாய் மாறி இருக்க “வெல் டன் மிஸ்டர். அரவிந்த்” என தன்னையே பாராட்டியவர் அடுத்ததாக இருந்த ஒரு வாலிபனிடம் நகர்ந்தார்.
     அந்த வாலிபனை கண்டு “இந்த ஒல்லிக் குச்சி ஓணான  என்ன செய்யலாம்” என்று அவனை இரண்டு சுற்று சுற்றியவர் ஏதோ தோன்ற “இந்தா வந்துட்டேன்” என அவனிடம் விரைந்தார்.
     அந்த வாலிபனின் இடுப்பில் கை வைத்து கிச்சுகிச்சு மூட்ட தொடங்கிவிட, அவனோ கூச்சம் தாங்காமல் “ஐயோ அம்மா” என்று கத்தியவன் யார் இப்படி செய்தது என்ற கடுப்பில் நிமிர்ந்து தன் அருகே இருந்த பெண்ணை பார்க்க அவளோ அருக்காணி ஸ்டைல் சடையுடன் பயங்கரமாக அமர்ந்திருந்தாள்.
     “ஐயோ! பேய்…” என்று அவன் பயத்தில் அலறி அடிக்க அவன் சத்தத்தில் அந்த பெண்ணை பார்த்த அனைவரும் சிரிக்க துவங்கினர்.
     தன் முடியை இப்படி ஆக்கியது அந்த வாலிபன் என எண்ணி “ஏன்டா ஒட்டடகுச்சி! எதுக்கு என் முடிய இப்படி பண்ணுன” என சண்டைக்கு சென்று விட்டாள்.
     எதுவும் செய்யாத அந்த அப்பாவி இளைஞனோ “ஏய் அருக்காணி உன்ன நான் என்ன செஞ்சேன். நீதான் என் இடுப்புல கிச்சுகிச்சு முட்டுன. மரியாதையா அதுக்கு மெத சாரி கேளு” என தன் பங்கிற்கு சண்டைக்கு கிளம்பினான்.
     இவர்கள் சண்டையிடும் கேப்பில் சுற்றி இருந்த கூட்டத்தில் புகுந்த அரவிந்த் அங்கே இருந்த ஒவ்வொருவருக்கும் ஏற்றவாறு ஏதோ ஒரு கலாட்டாவை நிகழ்த்தி அருகில் இருக்கும் நபரை கூடவே கோர்த்தும் விட்டு வந்தார்.
     அதன்பின் என்ன அந்த ஐ.டி அலுவலகமே சிறிது நேரத்தில் சண்டை கடைப் போல் காட்சி அளித்தது. ஆண் பெண் பேதமின்றி அனைவரும் சமமாக கோதாவில் இறங்கிவிட சத்தம் ஜவ்வைய் கிழித்தது.
     இதற்கு உச்சமாக ஒரு பெண்ணோ கேப்டன் ஸ்டைலில் ஒரு ஆளை தூக்கி அடித்து “யாஹூ!” என கராத்தே போஸ் கொடுத்து நின்றாள்.
     இவர்கள் சத்தம் மேனஜரான சித்துவின் அறைக்கு கேட்க “என்ன இவ்ளோ சத்தம்” என்று குழம்பியவன் அறையை விட்டு வெளியே வரும் நேரம் தான் கேப்டன் ஸ்டைலில் அடிவாங்கியவன் அவன் காலருகில் வந்து விழுந்தான்.
     இப்படி தீடீரென ஒருவன் வந்து விழுகவும் அதிர்ந்து நெஞ்சில் கை வைத்த சித்து சுற்றி பார்க்க அலுவலகமே சின்னாபின்னமாகி இருந்தது. அதில் கடுப்பான சித்து
     “நிறுத்துங்க! ஐ சே ஸ்டாப் இட்!” என ஹைப்பிச்சில் கத்த அனைவரும் அமைதியாகினர். இங்கே நடந்த கலவரத்தை ஒரு பேனின் மேல் அமர்ந்து
     “ஆ.. போரு! ஆ… சிக்ஸூ! ஏய் மண்டையா அவனை இன்னும் ரெண்டு அடிப்போடு! ஏம்மா பொண்ணே அந்த பொண்ணு தலைய புடிச்சி இன்னும் நல்லா ஆட்டு” என ரன்னிங் கமெண்டரி தந்து கொண்டிருந்த அரவிந்தும் “எவன் அவன்” என்றவாறு திரும்பினார்.
     “என்ன நடக்குது இங்க. இது ஆபிஸா இல்ல வேற எதாவதா. குழா அடியில சண்டைப் போடுற மாதிரி போடுறீங்க”
     “ஏய் மகனே! இது ஆபிஸ்னு உனக்கே தெரிலையா. இந்த குழா அடி சண்டைக்கு நான் கோல்ட் மெடலே தருவேன்டா”
     பேனில் உக்கார்ந்து ஆடியபடி சித்துவின் பேச்சுக்கு எதிர் பஞ்ச் போட்டுக் கொண்டிருந்தார் அரவிந்த். பாவம் அவர் பேசுவது அவரை தவிர வேறு யாருக்கும் கேட்கப் போவது இல்லை என மறந்துவிட்டார் மனிதர்.
     “இப்போ எதுக்கு நீங்க எல்லாம் சண்டை போட்டீங்கனு எனக்கு தெரிஞ்சாகணும். ஒவ்வொருத்தரா வந்து எக்ஸ்ப்பிளனேஷன் தந்துட்டு போகனும்”
     சித்து ஸிரிக்டாக சொல்லிவிட அனைவரும் முழித்துக் கொண்டு நின்றிருந்தனர். ஏனெனில் அந்த அருக்காணி சடை பெண்ணின் முடியோ பழையபடி அழகாக கர்ஸ் செய்யப்பட்டு இருந்தது.
     கிச்சுகிச்சு மூட்டினாள் என்றால் அது எப்படி நடந்தது என்று காட்டவா முடியும். அதனால் அந்த வாலிபனும் திணறினான். அவர்களை போலவே மற்றவர்களிடமும் சொல்வதற்கு ஒன்றும் இருக்கவில்லை.
     ஏனெனில் அதை எல்லாவற்றையும் தான் அரவிந்த் சரி செய்துவிட்டாரே. எனவே அனைவரும் ஒருவர் மற்றவர் முகத்தை பார்த்து கடைசியில் சித்துவின் முகத்தை பரிதாபமாக பார்த்து வைத்தனர்.
     ஒருவரும் பதில் தராமல் அமைதியாக இருக்க சித்தார்த் பேசினான்.
     “என்ன எல்லாரும் சைலண்டா இருந்தா விட்டுருவனா. எல்லாருக்கும் பணிஸ்மென்ட் நிச்சியம் உண்டு. முதல்ல நீங்க ஆபீஸ்ல போட்ட குப்பை எல்லாத்தையும் கிளீன் பண்ணிட்டு எவ்ளோ நேரம் ஆனாலும் வேலைய முடிச்சிட்டு என்கிட்ட வந்து ரிப்போர்ட் பண்ணிட்டு தான் போகனும்”
     அப்போது தான் அங்கிருந்தவர்கள் தங்களை சுற்றியே பார்த்தனர். அவ்வளவு குப்பை கிடந்தது. எல்லாம் அரவிந்தின் லீலையே.
     சண்டை நடக்கும் போது அது லைவ்லியாக தெரிய அங்கிருந்த பேப்பர் தெர்மாக்கோல் என்று கைக்கு கிடைத்தது எல்லாவற்றையும் கிழித்து பிய்த்து பறக்கவிட்டிருந்தார்‌.
     அதுவே அந்த அலுவலகத்தை குப்பை கூலமாக்கி இருந்தது. அந்த ஊழியர்களும் தங்கள் சண்டையில் உடைந்த மண்டை போல் இதுவும் என எண்ணிக் கொண்டு அமைதியாக சுத்தம் செய்ய துவங்கினர்.
     அதை எல்லாம் சுத்தம் செய்து எடுக்கும் முன் அனைவரின் முதுகெலும்பும் ஒடிந்து விட்டது. ‘ஹப்பாடி’ என்று நிம்மதி பெருமூச்சு எடுத்து அவர்கள் வேலை பார்க்க அமர்ந்த நேரம் மதிய உணவு வேலை வந்துவிட்டது என கடிகாரம் பண்ணி ரெண்டு முறை அடித்து காட்டிட,
     நொந்தே விட்டனர் அனைவரும். அவசர அவசரமாக தங்கள் உணவை முடித்து அனைவரும் கணினியின் முன் அமர்ந்து வேலையை தொடங்க, அது முடிய இரவு ஏழு ஆகி போய் நின்றது.
     இதில் சித்து வேறு விளக்கம் கேட்டிருக்க ஒவ்வொருவரும் சென்று தங்களுக்கு நடந்ததை கூற, சித்து தான் ‘பைத்தியமா இதுங்க’ என குழம்பி விட்டான்.
     ஏனெனில் ஒவ்வொருவரும் கூறிய காரணங்கள் ஒவ்வொன்றும் மணி மணியாக இருந்தது. அவற்றுள் சில..
     “சார் யாரோ என் கைய பிடிச்சு கடிச்சு வச்சிட்டாங்க”
     “சார் யாரோ என்னோட தலைல கொட்டிட்டாங்க”
     “என் இடுப்புல யாரோ கிச்சுகிச்சு மூட்டி விட்டுட்டாங்க”
     “யாரோ என் சேரை எட்டி உதச்சு என்ன கீழ தள்ளி விட்டுட்டாங்க”
     இப்படி ஒன்னாங்கிளாஸ் பிள்ளைகளை விட திறமையாக அள்ளிவிட கேட்ட சித்துவிற்கு தான் தலைவலி வந்துவிட்டது.
     அதுவும் கடைசியாக ஒருவன் கூறியதை கேட்டு நிஜமாகவே தலையில் அடித்து கொண்டான். அப்படிப்பட்ட அறிய பதில் என்னவென்றால் “சார் எனக்கு என்னமோ இதெல்லாம் ஏதோ ஒரு பேயோட வேலையோன்னு தோனுது”.
    ஆனால் அவன் கூறிய விடையே உண்மை என யாருக்கும் தெரியவில்லை.
     “எல்லாரும் நிறுத்துங்க. ஸ்கூல் படிக்கிற புள்ளைங்கள விட கேவலமா கம்ப்ளைன் பண்றீங்க” சித்து அனைவரும் பிடித்து லெப்ட் அண்ட் ரைட் வாங்கியே ஓய்ந்தான்.
     அனைவரும் பாவமாக ஒருத்தர் முகத்தை மற்றொருவர் பார்த்து கொள்ளவும் “போய் தொலைங்க” என்று விட்டுவிட்டு தன் இல்லம் செல்லக் கிளம்பி விட்டான்.
    இவ்வளவு நேரம் நடந்தவற்றை கிரிக்கெட் மேட்சை பார்ப்பது போல் சுவாரஸ்யமாக கண்டு முடித்தவர் தன் மகன் பின்னே கிளம்பி விட்டார்.
     சித்து ஆளில்லா தன் வீட்டை சுற்றி பார்த்தவன் சோர்ந்து போய் அமர்ந்து விட்டான். அவன் தந்தை உயிரோடு இருக்கும் போது எவ்வளவு களைப்பாய் இருந்தாலும் அவரின் அலப்பறையை வைத்து தினமும் ஒரு சண்டை நடக்கும்.
     என்னதான் தந்தையை திட்டினாலும் அவனுக்கு அவன் தந்தை செய்வது மிகவும் பிடிக்கும். விளையாட்டுக்காக தான் அவரிடம் வம்புக்கு நிற்பான்.
     இப்போது அவரின் அலம்பல்கள் இல்லாமல் நாள் விடிவது மனதிற்குள் சொல்லொண்ணா வலியை தந்தது. எனவே சமைக்கும் எண்ணம் துளியும் இல்லாது அப்படியே சோபாவில் சாய்ந்திருந்தான்.
     தன் மகன் இப்போது சமைப்பான் அப்புறம் சமைப்பான் என காத்துக் கொண்டிருந்த அரவிந்திற்கு கடுப்பானது.
     “என்னடா இவன் இன்னைக்கு சமைச்சு போடாம நம்மல பட்டினி போட போறான் போலையே. இன்னும் கொஞ்ச நேரம் பாத்துட்டு முக்கு கடைக்கு நடைய கட்டிட வேண்டியது தான். ஆனா யாருக்கும் தெரியாம திருடரது ரொம்ப கஷ்டமா இருக்கு. இவன் சீக்கிரம் எந்திரிச்சா நல்லா இருக்கும்”
     சித்துவை பார்த்து மனதிற்குள் இவ்வாறு எண்ணிய அரவிந்த் அவன் தோளில் பட்டென ஒரு அடிப் போட்டார்.
     தோளில் ஏதோ அடி விழுவது போல் தோன்றவும் தோளை தடவி கொடுத்தான் சித்து‌‌. “நாம அடிச்சது இவனுக்கு உரைக்கிதா” ஆச்சரியப்பட்ட அரவிந்த் மீண்டும் அடித்தார்.
     சித்து மீண்டும் தடவிக் கொடுக்க “டேய் மவனே! எந்திரிச்சு போய் நைட்க்கு எதாவது சோத்த குழம்ப ஆக்குடா”. கர்ணக் கொடுரமாய் ஒரு குரல் கேட்க அதிர்ந்த சித்து சுற்றி சுற்றி பார்த்தான் சத்தம் எங்கிருந்து வருகிறது என.
     “டேய் செவிட்டு பயலே மரியாதையா போய் சமைச்சு வையு. எனக்கு கொல பசி”
     முதல் தடவை கேட்ட குரலில் தனக்கு ஏதோ பிரமை என்றிருந்த சித்து மீண்டும் குரல் கேட்கவும் பயந்து போய்
     “ஏய் யாருயா அது. தைரியம் இருந்தா என் முன்னாடி வந்து பேசுங்கயா. மறைச்சு நின்னு பேசாம”
     “டேய் தண்ட பயலே. நான் உன் முன்னாடி தான் இருக்கேன்டா. நல்லா கண்ண முழிச்சு உத்து பாரு”
     சித்துவின் கேள்விக்கு இடக்காக பதில் அளித்த அரவிந்தின் ஆவி தற்போது மெல்ல மெல்ல தன் உருவை பெற்றது.
     தன் முன்னே இறந்த தன் தந்தை காற்றில் மிதந்து கொண்டு ஆசீர்வதிப்பது போல் கைகளை வைத்து கொண்டு “நான் பெத்த மகனே!” என்று கூறிக் கொண்டு இருப்பதை பார்த்து ஷாக் அடித்தது போல் ஆன சித்து, உச்சபட்ச அதிர்ச்சி தாங்காது மயங்கி சரிந்தான்.
-ரகசியம் தொடரும்

Advertisement