Advertisement

     அரவிந்த் அவர் வீட்டின் உள்ளே சித்துவின் அருகே இருந்த உருவத்தை கண்டு அதிர்ந்து தலை சுற்றி நின்றார்.
     பின்னே இருக்காதா அவர் சித்துவின் அருகே கண்டது அவரின் சொந்த உருவத்தை தான். அதுவும் ஒரு பெஞ்சில் அந்த உருவத்தை படுக்க வைத்திருந்தனர். அந்த உருவத்துக்கு அருகில் அமர்ந்து அவர் மகன் சித்து அழுதுக் கொண்டிருந்தான்.
     “அப்பா! ஐயோ ப்பா.‌ எனக்கு இருந்தது நீ மட்டும் தான். இப்ப என்ன நீயும் அநாதையா விட்டுட்டு போய்ட்டியே. ஏந்திரிப்பா”
     சித்து அங்கே உயிரற்று‌ படுத்திருந்த அவன் தந்தையின் உடலைப் பிடித்து கதறி அழுதுக் கொண்டிருக்க, இங்கே என்ன நடக்கிறது என்றே புரியாமல் அதிர்ச்சியில் உறைந்து நின்றார் அரவிந்த்.
     ஒருவேளை கனவு எதுவும் காண்கிறோமோ என்று அவர் எண்ணிய நேரம், அவர் அருகில் இருவர் பேசுவது நன்றாக காதில் விழுந்தது.
     “என்ன சார் ஆச்சு. நல்லா தானே மனுஷன் சுத்திட்டு இருந்தாரு. தீடீர்னு எப்படி இப்படி?” ஒருவர் வருத்தமாக கேட்க
     “ஹார்ட் அட்டாக்காம் சார். விடியகாத்தால வந்திருக்கு போல. பையனும் விடிஞ்சு ரொம்ப நேரம் இவர் எழுந்து வரலைன்னு போய் பாத்திருக்கான். அசையாம அப்படியே இருக்கவும் பதறிப்போய் டாக்டர கூட்டிட்டு வந்து பாத்தா விடியகாலைலேயே உயிர் போயிருச்சுன்னு சொல்லிருக்காரு”
     “அப்பா பையன்னு ரொண்டு பேரு தான் இருந்தாங்க. இப்படி அவன தனியா விட்டுட்டு போய்ட்டாரு. பாவம் இவரும் ரொம்ப நல்ல மனுஷன் தான். அதான் தூக்கத்திலையே நிம்மதாயா போய் சேந்துட்டாரு”
     இப்படி பேசிக் கொண்டது எப்போதும் இவர்களிடம் மல்லுக்கு நிற்கும் பாலு மற்றும் அவர் நண்பரே. “என்ன நான் செத்து போய்ட்டனா?” அதிர்ந்து போன அரவிந்திற்கு அப்போது தான் புரிந்தது அவர் நிஜமாகவே இறந்தே விட்டார் என.
     அதோடு அங்கே கிடத்தப்பட்டிருந்தது அரவிந்தின் உடல் தான். அவரின் ஆன்மா தான் இவ்வளவு நேரம் வெளியே சுற்றிவிட்டு வந்தது.
     ‘உயிரோட இருந்தா திட்டுறது. செத்தா புகழ்றது. இந்த வாயால தானே இந்த பாலு என்ன எப்படி எல்லாம் திட்டுனான். இப்ப பாரு ரொம்ப நல்லவன் மாதிரி சீன போடுறான்’ அந்த அதிரச்சியான நேரத்தில் கூட தனக்குள் புலம்பியபடி தன் மகன் அருகே போய் நின்றார் அரவிந்த்.
     அவர் உயிரற்ற உடல் அருகே ஆவியாக நின்ற அரவிந்தின் மனம் சொல்லொன்னா உணர்வில் இருந்தது. என்னதான் அது அவர் உடலாகவே இருந்தாலும் அதை உயிரில்லாமல் காண சற்று வருத்தமாக இருந்தது.
     அதிலும் அவர் மகன் அப்படி அடித்துக் கொண்டு அழுவதை காணும் போது அதிகமாய் வருத்தம் சேர்ந்தது. இதற்கு தன்னால் எதுவும் செய்ய முடியாது என உணர்ந்தவர் ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டார்.
     “ஐயோ என் ராசா! போய்ட்டியா” அழுதபடி ஓடிவந்த குரல் வந்த திசையை கண்டு ஆச்சரியப்பட்டார் அரவிந்த்.
     அப்படி யார் வந்தார் என்று பார்த்தல், இரண்டு தினங்களுக்கு முன்னர் அரவிந்த் ஒரு கிழவியிடம் வம்பிழுத்து வந்திருந்தாரே. அதே கிழவியே கதறியபடி வந்தது.
     “என் புருசனுக்கு அப்புறம் என்ன பாசமா கூப்புட்டு முத்தம் எல்லாம் குடுத்தியே ராசா. அதுக்குள்ள நீ இப்படி போய்ட்டியே” கிழவி ஊரை கூட்டி ஒப்பாரி வைக்க பார்த்த அரவிந்துக்கு சுவாரஸ்யமாக இருந்தது.
     “உயிரோட இருந்தப்ப வெரட்டி வெரட்டி அடிச்ச கூட்டம் நான் செத்துட்டேன்னு தெரிஞ்சு என்னாம்மா அழுவுறாங்க. உண்மையாவே அழுவுறானுங்களா இல்ல அழற மாதிரி நடிக்கிறாங்களா?”
     அரவிந்த் இப்படி எண்ணியபடி ஒவ்வொருவரின் முகத்தையும் பார்த்து, அதன்பின் யார் யார் தன் இறப்பிற்கு வீட்டிற்கு வந்திருக்கிறார்கள் என பார்த்தார்.
     அவர்கள் என்ன சொல்லி அழுகிறார்கள் என வேடிக்கை பார்க்க துவங்கினார். ‘நான் செத்ததுக்கு அப்புறம் யார் என்ன செய்ய போறாங்கன்னு எனக்கு என்ன தெரியும்’ பலரின் புலம்பல் இதுவே.
     ஆனால் இங்கோ அரவிந்திற்கு அதை கண்கூடாக பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்க, ஒவ்வொருவரின் அருகில் சென்று என்ன பேசிக் கொள்கிறார்கள் என ஆர்வமாய் கேட்க துவங்கி விட்டார் அரவிந்த்.
     அரவிந்தின் உடலை எடுக்கும் நேரம் நெருங்கிவிடவே, கூட்டத்தில் இருந்த பெருசு ஒன்று “நேரம் ஆயிருச்சு. அடுத்து ஆக வேண்டியத பாருங்க ப்பா” என்று எடுத்துக் கொடுக்க
     மற்றவர்களும் அதை ஆமோதிக்க அரவிந்தின் உடலை இடுகாட்டிற்கு எடுத்து செல்ல முடிவானது. அரவிந்த் மற்றும் சித்துவிற்கென சொந்த பந்தங்கள் என யாரும் இல்லாமல் போகவே சுற்றத்தாரே ஒவ்வொரு வேலையாக எடுத்து செய்தனர்.
     பல ஆண்டுகளாக அதே தெருவில் வசித்தபடியால் அவர்களே இருவரின் சொந்தமாக அனைத்திற்கும் துணையாக நின்றனர். அதன் பின்னர் வேலை துரிதமாக நடக்க அரவிந்தின் உடல் அவர் இல்லத்தை விட்டு புறப்பட்டு சென்றது.
     அரவிந்த் அவரின் சொந்த உடல் அவரின் வீட்டை விட்டு போவதை கதவருகில் வருத்தத்துடன் நின்று பார்த்து நின்றிருந்தார். இடுகாட்டிற்கு சென்று அவர் உடல் எரிந்து சாம்பலாவதை பார்க்கும் அளவு அவருக்கு தைரியமும் இல்லை. எனவே வீட்டிலே பின்தங்கி நின்று விட்டார். அதே நேரம் அவருக்கு என்ன நடந்தது என்று யோசித்து பார்த்திருந்தார்.
     காலை அவருக்கு நெஞ்சில் லேசாக சுறுசுறுவென வலி வந்தது சாதாரண வலி அல்ல. அரவிந்திற்கு மேஜர் ஹார்ட் அட்டாக் வந்து அவரின் உயிர் உடலைவிட்டு நீங்கி வெளியே வந்துவிட்டது.
     தான் இறந்தது கூட புரியாத அறிவுஜீவி அரவிந்த் வழமை போல் உடலை பேன பொறுப்பாக வாக்கிங் சென்றுவிட்டார். இதில் வரும் போகும் பெண்களிடம் லவ் பார்வை விட்டு செல்ல பாவம் அவர் யார் கண்களிலும் படவில்லை என்பது அரவிந்திற்கு புரியாது போனது.
     கடைசியாக இவரிடம் காதல் வசனம் பேசியதில் ஒரு பாட்டி பேயிடம் இருந்து தான் அவர் விழுந்தடித்து ஓடி வந்தார் என்பதை அறிந்தால் என்ன செய்வாரோ அரவிந்த்.
     அங்கே ஒருபுறம் அரவிந்த் ஆவியாக ஊர் சுற்ற கிளம்பிய நேரம் வீட்டில், சித்து இன்றென பார்த்து வெகு நேரம் கழித்தே தூக்கத்தில் இருந்து எழுந்தான்.
     எனவே அவசர அவசரமாக சமையல் வேலைகளை கவனித்து அலுவலகம் கிளம்பி வர அதன்பின்னரே வீட்டின் அமைதி அவனை தாக்கியது.
     அதுவரை வராத அவனுடைய தந்தையின் நினைவு அப்போது தான் வர “என்னாச்சு இவருக்கு. ஒரு சத்தமும் காணோம்‌. ஒருவேளை வாக்கிங் போய்ட்டு இன்னும் வரலையோ” என்று தனக்குள்ளே பேசியபடி எதற்கும் அவர் அறைக்கு சென்று பார்ப்போம் என அவரின் அறைக்கு சென்றான்.
     அங்கே சென்று பார்த்த சித்துவிற்கு அதிர்ச்சியே காத்திருந்தது. அசையாத நிலையில் படுத்திருந்த அரவிந்தை கண்டு எப்போதும் போல் ஏதோ வம்பு வளர்த்து வந்தே இப்படி தூங்குவது போல் நடிக்கிறார் என எண்ணிய சித்து
     “அப்பா இன்னைக்கு என்ன பண்ணிட்டு வந்து நல்ல பையன் மாதிரி படுத்திருக்க. நான் எதுவும் சொல்ல மாட்டேன்‌. தயவு செஞ்சு எந்திரி எனக்கு ஆபிஸ்க்கு டைம் ஆகுது” என்றான்.
     சித்து கொஞ்ச நேரம் பேசி பார்த்தவன் அவர் உண்மையாகவே தூங்குகிறாரோ என்று அவரை உலுக்கி எழுப்பிய நேரம் அவரின் தலை ஒருபுறம் சாய்ந்தது.
     அதில் அதிர்ந்த சித்தார்த் “அப்பா என்னாச்சுப்பா எந்திரி ப்பா” என பதறி போய் அழைக்க சிறிதும் அசைவின்றி படுத்திருந்த அரவிந்தை கண்டு மேலும் பதறி போய் மருத்துவரை வீட்டிற்கே அழைத்து விட்டான்.
     அவர் வந்து பரிசோதித்து பார்த்து அவர் நெஞ்சு வலியில் இறந்து சில மணி நேரம் ஆகிவிட்டது என்று ஒரு குண்டை இறக்கி செல்ல கதறி துடித்தான் சித்து.
     அவன் கதறலில் தெருவே அதன்பின் கூடிவிட, இதை எதையும் அரவிந்தே அறிந்திருக்கவில்லை என்பதால் உண்மை அறியாது மண்டை வெடித்தது மனிதருக்கு.
     “நாம எப்படி செத்தோம்” பலவாறு யோசித்தும் எப்படி மனிதர் செத்தார் என்று ஒன்றும் புரியாது போனது. அவர் அவரின் எண்ணத்தில் மூழ்கி இருந்த நேரம் அவர் உடலை எடுத்து சென்ற ஆட்கள் அனைவரும் திரும்பி வந்துவிட்டனர்.
     அதில் அவரின் கவனம் அங்கே திரும்ப, சித்து வந்து அவன் தந்தை புகைப்படத்தின் அருகே அமர்ந்துக் கொண்டான். அங்கே இருந்தவர்கள் ஒவ்வொருவராக கலைந்து செல்ல
     சிறிது நேரத்தில் அரவிந்தின் இல்லம் வெறிச்சோடி போனது. அந்த வீட்டில் தனியாய் தன் தந்தையின் நினைவோடு அனைவரும் சொல்லிக் கொண்டு கிளம்பினாலும் எதையும் உணராது அமர்ந்திருந்தான் சித்து.
     சித்து யாரை நினைத்து அப்படி அமர்ந்திருந்தானோ அவரே அவனின் எதிரே தாடையில் கை வைத்து தன் மகனையே உற்று உற்று பார்த்துக் கொண்டிருந்தார்.
     “இவன் நம்ம மகன் தானா. நம்ம புள்ளைக்கு நம்ம மேல இவ்ளோ பாசமா. பரவாயில்ல அரவிந்தா உன் புள்ளை மனசுல நீ எங்கையோ இருக்கடா”
     அரவிந்த் தனக்குள் பேசியபடி தன் தோளிலே தட்டி கொடுத்தார். ஆனால் அவர் மகனுக்கு தான் எதிரே இருந்த அவன் தந்தை தெரியாததால் அவர் புகைப்படத்தை பார்த்து அமர்ந்திருந்தான். அப்படியே அந்த படத்தின் அருகில் படுத்து தானாக உறங்கி போனான்.
—————————–
     “இன்னைக்கு எப்படியாவது ஆயிரம் ரூபாய்க்கு மேல அடிச்சே ஆகனும். அப்பதான் செலவு போக தெனம் ஐநூறு ரூபாய்னு இருவது நாள்ல பணம் சேரும்”
     தனக்குள் கணக்கு போட்டு பார்த்த வீரசுந்தரி தன்னை தானே உற்சாகமூட்டிக் கொண்டு வேட்டைக்கு கிளம்பி விட்டாள்‌. ஆனால் அவள் தேர்ந்தெடுத்த இடம் சற்று பிசகிவிட்டது.
     எப்போதும் போல் ரயில் நிலையத்திற்கோ அல்லது பஸ் நிலையத்திற்கோ சென்றிருந்தால் சற்று பணத்தை தேற்றி இருக்கலாம்.
     அவள் சென்றதோ ஒரே பெரிய மாலிற்கு. அங்கே சென்றால் அனைத்து இந்திய குடிமக்களும் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு மாறி இருக்க முதலுக்கு மோசமாகி விட்டது.
     சுற்றி சுற்றி கேமரா வேறு இருக்க கடைசியில் அவளால் ஒரு ரூபாய் கூட ஆட்டையைப் போட முடியவில்லை. ‘என்னடா இது நமக்கு வந்த சோதனை’ நொந்து போய் அங்கிருந்த ஒரு பொருளின் விலையை பார்த்து நெஞ்சு வலியே வந்துவிட்டது.
     ‘ஆத்தி இந்த துணி ரெண்டாயிரம் ரூவாயா. சாணித் துணி மாதிரில்ல இருக்கு. நம்ம மாரி அண்ணே கொண்டு வர துணியே இதை விட நல்லா இருக்குமே. விலையும் கொறவு  தான். ம்ம் இது தான் மாலு போல’
     வீரா தன்னுள் எண்ணியபடி அந்த மாலை சுற்றிவிட்டு மாலை நேரம் பஸ் ஸ்டாப்பிற்கு வரும் போது ஏதோ ஒரு புண்ணியவான் தவறுதலாக கீழே விட்ட இருநூறு ரூபாய் கிட்ட அன்றைய உணவுக்கு அந்த பணம் சரியாக இருந்தது.
     “ச்சே மாலுக்கு போற பண்ணாடை எல்லாம் பணக்காரண்னு நம்பி போனேன். இப்படி நம்ம வச்சு கழுத்தறுத்துட்டானுங்களே.
     அந்த மாலுல பத்து ரூவா பொருள ஐம்பது ரூவான்னு திருடுறானுங்க. நம்மல ஒரு ஆயிரம் ரூவா திருட விடுறானுங்க. பாவிங்க நல்லா இருப்பானுங்களா. இந்த பாவப்பட்ட திருடியோட சாபம் இவனுங்களை எல்லாம் சும்மாவே விடாது”
     பணக்காரர்கள் மால் உரிமையாளர்கள் என மொத்தமாக அனைவரையும் சாபம் விட்டவாறு தன் இல்லம் நோக்கி நகர்ந்தாள் அந்த நல்ல உள்ளம் கொண்ட திருடி.
-ரகசியம் தொடரும்

Advertisement