Advertisement

     “மச்சான் இன்னைக்கு உன் வீட்டுல என்னடா சாப்பாடா இருக்கும்? உன் மாமன் குடும்பம் வந்ததுல இருந்து உன் அம்மா நல்லா வகைத்தொகையா நாக்குக்கு ருசியா சமைக்குறாங்களே அதான் கேக்குறேன்”
     நாக்கை சப்புக்கொட்டி இப்படி கேட்டபடி வந்த ஷங்கரை திரும்பி முறைத்த மாதவன் மனமோ பல குழப்பத்தில் இருக்க இருவரும் கொஞ்சம் வெளியே சுற்றி வரலாம் என வெளியே சென்றிருந்தனர்‌.
     “இங்க உசுரே நடு உத்திரத்துல கைய கால ஆட்டிக்கிட்டு பப்பரப்பேன்னு தொங்கிட்டு இருக்கு, இதுல உனக்கு வகைவகையா சோறு கேக்குதாடா தவள வாயா. வாய மூடிட்டு வாரதா இருந்தா வா இல்ல நான் மட்டும் தனியா போறேன்”
     மாதவன் இருந்த பயத்தை எல்லாம் கோபமாய் காட்டி முன்னே சென்றான். காலையிலே வெளியே கிளம்பி சென்றவர்கள் மதிய உணவு நேரம் பார்த்து பெரிய வீட்டிற்கு பேசியபடி வர, வீட்டிலோ அவர்களை கலவரப்படுத்த அங்கு எல்லாம் தயார் நிலையில் இருந்தது பாவம் இருவருக்கும் தெரியவில்லை.
     “என்னடா மாதவா இன்னைக்கு என்ன உங்க வீடு ரொம்ப அமைதியா இருக்க மாதிரி இருக்கு. நம்ப முடியலையே? உன் அம்மா மாமன் மகன் அந்த குட்டி பையன் யாரையோட சத்தத்தையும் காணோம்”
     ஷங்கர் குழப்பமாய் கேட்டு அந்த ஹாலை சுற்றி சுற்றி பார்க்க “தெரிலடா. ஒருவேளை அவங்க ரூம்ல இருப்பாங்கன்னு நெனைக்கிறேன்” தானும் சுற்றும் முற்றும் பார்த்து கூறி வைத்தான் மாதவன்.
     சரி அவர்கள் வரும்வரை சற்று உட்காரலாம் என சோபாவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த நேரம் ஷங்கர் அவன் முன்னால் இருந்த டேபிலில் ஒரு வித்தியாசமான மரபொம்மையை பார்த்தான். சாதாரண மரப்பாச்சி பொம்மை தான் அது. ஆனால் அதன் நீல நிற கண்கள் பார்ப்போரை வசியம் செய்துவிடும் போல் அதில் அப்படி ஒரு தேஜஸ் தெரிந்தது.
     ‘இது என்னடா இது இந்த பொம்மை ரொம்ப வித்தியாசமா இருக்கு. இதுக்கு முன்னாடி இது இங்க இல்லையே’
     யோசனையாக அந்த பொம்மையையே உற்று உற்று ஷங்கர் பார்த்திருக்க படக்கென அவனை பார்த்து ஒற்றை கண் அடித்தது அந்த பொம்மை. ஒரு நிமிடம் தன் மனபிரம்மை என நினைத்து நன்றாக கண்களை தேய்த்து விட்டு ஷங்கர் பார்க்க அந்த பொம்மை மீண்டும் கண் அடித்தது‌.
     அதுலே அவனுக்கு பகீரென ஆகியிருக்க அதோடு விடாது ஷங்கரை பார்த்து ஈ..என டூத் பேஸ்ட் விளம்பரத்திற்கு வருவதைப் போல் பல்லை வேறு அந்த பொம்மை காட்டியதும், அவனுக்கு உடலில் இருக்கும் சப்த நாடியும் கிடுகிடுக்க தொடங்கியது.
     இவ்வளவு நேரம் வெயிலில் அலைந்ததில் வராத வேர்வை எல்லாம் நெற்றியில் ஊற்றெடுக்க சோபாவில் மல்லாக்க படுத்து விட்டத்தை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த அவன் நண்பன் மாதவனின் கையை மெல்ல சுரண்டினான் ஷங்கர்.
     “ப்ச் கொஞ்ச நேரம் நிம்மதியா படுக்க விடுமாட்டானே” முணகியபடியே எழுந்த மாதவன் “என்னதாண்டா வேணும் உனக்கு” சலித்துக் கொண்டு கேட்டான்.
     அதையெல்லாம் கவனிக்காது அந்த பொம்மையிடம் இருந்து தன் பார்வையை நகர்த்தாத ஷங்கர் “டேய் மாதவா இது என்னைய பார்த்து கண் அடிச்சு சிரிக்குதுடா” என வெலவெலத்த குரலில் கூறி நிறுத்த,
      “எதுடா?” குழம்பிப் போய் கேட்டான் மாதவன்.
     அந்த பொம்மையின் மீதிருந்து தன் பார்வையை திருப்பாது “அ.. அது அங்க பாருடா” இப்போதுதான் பேசி பழகும் பச்சைப் பிள்ளை போல் எழுத்து கூட்டி ஷங்கர் முழி பிதிங்கி போய் பேசி வைக்க
     “இவன் ஒருத்தன் பேரு வச்சுட்டு சோறு வைக்காத மாதிரி எப்ப பாத்தாலும் என் உயிர வாங்குறது. இப்ப என்னத்தடா பாக்க சொல்ற” முன்னதை மெல்லமாக சொல்லிவிட்டு பின்னதை சற்று குரல் உயர்த்தி கேட்டு திரும்பிய மாதவன் ஷங்கரின் பார்வை போகும் அந்த இடத்தை காண மரப்பாச்சி பொம்மை ஒன்று மட்டும் இருந்தது.
      “ம்ம் பாத்துட்டேன் இங்க என்னடா இருக்கு, எனக்கு எதுவும் தெரியலை. என் உயிர வாங்காதா” கடுப்பாய் மாதவன் கத்த,
     வழியில போன சனியனை எடுத்து பனியனில் விட்ட நிலையில் இருக்கும் ஷங்கரோ
     “உன் பிரண்டா இருந்ததுக்கு நான் இன்னும் என்ன கதியாக போறனோ இதுல நான் உன் உயிரை வாங்குறனா. ச்சை தடிமாடு தடிமாடு ஒழுங்கா பாத்து தொலைடா. அந்த பொம்மைதான் என்ன பாத்து கண் அடிச்சு சிரிச்சிது”
     மாதவன் அவன் நண்பன் சொல்லியதில் ‘இதென்னடா இது இவனோட ஒரே ரோதனையா போச்சு’ என அவனை மனதிற்குள் திட்டிக் கொண்டே திரும்பி அந்த பொம்மையை பார்க்க, அந்த கண்கள் சட்டென அவனை கவர்ந்தது.
     அது மட்டும் இன்றி அந்த கண்கள் நன்கு பரீட்சையமாக வேறு இருந்தது மாதவனுக்கு. அந்த கண்களை இதற்கு முன் எங்கே பார்த்தான் என சட்டென அவனின் நினைவிற்கு வரவில்லை.
     அதையே யோசித்துக் கொண்டு அந்த பொம்மை மீது அவன் பார்வையை பதித்திருக்க, இப்போது மாதவனையும் பார்த்து சிரித்தபடி கண் அடித்து அவனையும் கலவரப்படுத்தியது பொம்மை.
     “என்னா செல்லாக்குட்டிகளா எப்புட்ரா இருக்கீய. ரெண்டு நாளா அந்த பய அறைல போய் படுத்து என்னுட்டுடருந்து தப்பிக்க பாத்தா நான் விட்டுப்புடுவனா, இப்ப நானே வெளிய வந்துட்டேன்ல எப்பூடி… ஹாஹாஹா….”
     என்றொரு குரல் பயங்கர சிரிப்பேடு அந்த பொம்மையிலிருந்து வர திடுக்கிட்டுப் போன நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து பயத்தில் எச்சிலை கூட்டி விழுங்கி வைக்க, அதை ஒய்யாரமாய் அமர்ந்து காலை ஆட்டிக்கொண்டிருந்த பொம்மை வெற்றி களிப்புடன் பார்த்தது.
     அந்த குரல் மற்றும் பேசும் விதத்தை வைத்தே அது எதுவென யூகிக்க நண்பர்கள் இருவருக்கும் வெகு நேரம் எடுக்கவில்லை. ஆனால் கிடைத்த பதில் ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லையே. முழுதாய் இரண்டு நாட்கள் நிம்மதியாய் பொழுதை கழிக்கவிடாது நந்தியாய் வந்து நிற்கிறதே பொம்மை.
     அவர்களின் இருண்ட முகத்தை கண்டு மேலும் சிரித்த பொம்மை தன்னை நோக்கி நடந்து வந்துக் கொண்டிருந்த வீரா சித்துவை கண்டு அப்படியே ஆஃப் ஆகியது‌.
     ஏனெனில் காலையில் அரவிந்தின் அறையிலிருந்து வெளியே கிளம்ப சென்ற வீராவின் காதுகளில் எதோ சத்தம் கேட்க அப்படியே யூ டர்ன் அடித்து சென்று அந்த அலமாரியை திறந்து பார்த்தாள் வீரா. அங்கு இந்த பொம்மையை தவிர வேறு எதுவும் இல்லாதிருக்க அதை கண்டு குழம்பினாலும் அந்த பொம்மை வீராவை நொடியில் ஈர்த்திட்டது.
     “அட இது மரத்துல செஞ்ச பொம்மை. இதுமாதிரி எல்லாம் நாம பார்த்தது இல்லையே”
     அந்த பொம்மையை வீரா அவள் கையில் எடுத்து இப்படி அப்படி திருப்பி பார்த்து நோட்டம் விட, அந்த நேரம் பொம்மையினுள் எதோ ஒரு வைப்ரேஷன் உருவானது. அந்த வைப் வீராவை குறித்து பொம்மை முன்பு சந்தேகித்தது இப்போது நூறு சதவீதம் உண்மை என சொல்லாமல் சொல்லியது.
     அவள் அதை எடுத்து அறையில் இருந்து வெளியே வர இத்தனை நாட்களாக அந்த அறைக்குள் பொம்மையை அடைத்து வைத்திருந்த மாய மந்திரகட்டு சுக்கலாய் உடைந்து போனது.  ஆனால் இது எதுவும் வீராவிற்கு தெரியவில்லை. எனவே அதை அப்படியே ஹாலில் இருந்த டேபிலின் மீது அழகுக்காய் வைத்துவிட்டாள் வீரா.
     இதுவே மரபொம்மை அரவிந்த் ரூம் அலமாரி டூ ஹால் டேபில்க்கு டிராவல் பண்ணி வந்த சிறு கதை. மந்திரகட்டுக்குள் இருந்தே அனைவரையும் ஆட்டி வைத்த மரபொம்மை வெளியே வந்தபின் என்னென்ன செய்ய காத்திருக்கிறதோ அதுக்கு தான் வெளிச்சம்!
     அந்த பொம்மை அறையை விட்டு வெளியே வந்த அதே நிமிடம் ஊரின் கடைகோடியில் இருக்கும் கிணற்றிலிருந்து சூறைக் காற்று சூழன்றடித்து அங்கிருந்த மலைக்குள் சென்று சேர்ந்து அதை பார்த்தவர்களை கதிகலங்க வைத்தபின் அமைதி அடைந்தது.
     “எலேய் மாப்ள சேதி கேட்டியா நம்ம எல்ல மலைல பொதையலு இருக்குன்னுட்டு பல பயலுவ அதை ஆட்டையப்போட மலைய சுத்தி அங்க இங்கன்னு தோண்டிட்டு அலையறானுவலாம்”
     “அட ஆமா மாமா நானும் கேள்விபட்டேன். அதுபோவ அப்படி பொதையல தோண்டுற பயலுவல எல்லா அங்க காவகாக்கர பூதம் வந்து அடிச்சு புடுதாம். அதுல பல பேரு இன்னும் ஆசுபத்திரலதான் இருக்கானுவலாம்‌. ஆனா இதெல்லாம் நம்புர மாதிரியா மாமா இருக்கு”
     “என்ன பொசுக்கானு இப்படி சொல்லிபுட்ட, நேத்து என்ன ஆச்சு தெரியுமா. நான் வயலுக்கு போய்ட்டு மதிய நேரம் வீட்டுக்கு வந்துட்டு இருந்தேன். அப்ப அந்த பாலுங்கெணறு இருக்குல்ல அதுல இருந்து ஒரு சுழல் காத்து கிளம்பி மலைய பாத்து போச்சுலே. கூட வேற யாரும் இல்லமா நான் ஒத்தையில வந்தேன். அப்ப எனக்கு என் உசுரே கைல இல்லடே. தப்பிச்சா போதும்னு உழுந்தடிச்சு ஓடியாந்தேன். இப்ப சொல்லு இதெல்லாம் பொய்யா என்ன”
     “என்ன மாமா சொல்ற நெசமாலுமே நீ பாத்தியா என்ன?”
     ஆச்சரியம் கலந்த பயத்துடன் இரு நபர்கள் இப்போது கரெண்ட்டில் இருக்கும் டாப்பிக்கை தன் எக்ஸ்பீரியன்ஸோடு பேசிக்கொண்டு ரோட்டில் செல்ல, அதை எல்லாம் ஊருக்குள் பறந்துபடி கேட்டுக் கொண்டிருந்தார் நம் அர்விந்த்.
     இன்று மட்டும் அல்ல சில நாட்களாகவே மக்களோடு மக்களாக கலந்த நம் அரவிந்த் ஊரை நோட்டம் விட்டபடிதான் இருக்கிறார்.
     “என்னடா இது நாம கிளம்பி விட்டது வெறும் புரளிதானே இவனுங்க என்னென்னமோ பேசிட்டு போறானுங்க. ஒரு வேளை மலைல புதையல் இருக்கிற கதைல எதாவது உண்மை இருந்து,
     அது தெரியாம நம்ம பெத்து வச்சது ஊரு பூரா வதந்திய பரப்பி விட்டுருச்சோ. அப்படி இருந்தா என்ன பண்றது ஊரு பயலுங்க வேற புதையல் வேட்டைக்கு கிளம்பிட்டானுங்களாம் ம்ம்..” என இல்லாத மூளையை கசக்கி யோசித்த அரவிந்த்
     “நோ நெவர் நான் இருக்க வரை என் சொத்த ஒருத்தனுக்கும் விடமாட்டேன்டா‌. இந்தா வரேன் என் பைனாக்குலர் கண்ணுல இருந்து எதுவும் மறையாது. உண்மை என்னன்னு இந்தா இப்ப கண்டுப்புடிக்கிறேன். ஊஊயாயா….”
     சத்தம் எழுப்பியபடி பறந்து சென்ற அரவிந்த் போய் சேர்ந்த இடம் அந்த மலைதான். அப்படி அங்கு என்ன இருக்கிறது என கண்டுபிடிக்க தானே அங்கு சென்று சேர்ந்தார் மனிதர்.
     மலையை வலதிலிருந்து இடமாக, இடதிலிருந்து வலமாக என அனைத்து திசைகளிலும் மாறி மாறி சுற்றி பார்க்க ஒன்றும் தெரியவில்லை.
     “ஒருவேளை மலைக்கு உள்ள போய் பாத்தா எதாவது தெரியுமோ, ஆனா இதுக்குள்ள எப்படி போறது”
     அவர் முன்னால் இருந்தது சிறு குண்றும் அல்லாது பெரிய மலையும் அல்லாது ஒரு சின்ன மலைதான்‌. அதற்கு உள்ளே நுழைய குகைப்போல் எதேனும் இருக்கிறதா என அரவிந்த் அந்தர் பட்டி அடித்து பார்த்தும் கூட ஒரு பொந்தைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லை. வெகு நேர சுற்று பயணத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வந்து
     “ச்ச இதுல ஊருக்கார பயலுங்க சொல்ற மாதிரி எதுவும் இல்ல போலடா அரவிந்தா. சரி நாம கிளம்புவோம் பக்கத்து தெரு மல்லிகா வேற தண்ணீ எடுக்க வர நேரம். இப்ப கிளம்புனாதான் போய் அவளை கொஞ்ச நேரம் சைட் அடிக்க முடியும்”
     தனக்குள் புலம்பியபடி மனிதர் கிளம்ப புறப்பட்ட நேரம் அவர் வரும் போது இருவர் பேசியதைப் போலவே சுழல் காற்று ஒன்று மலைக்குள் போவதை கண்டு ஜெர்க்கானார்.
     அவர் அதிர்விலிருந்து வெளியே வந்து நடந்ததை தன் குடும்பத்துடன் பகிர எண்ணிய நிமிடம்
     “இத்தனை நாளு நான் காத்துகிடந்தது வீண் போவல. இந்தா உடனே என் வேலைய காட்டுறேன் டா” என வீராவேசமாய் தானும் தன் கடமையை செய்ய கிளம்பிவிட்டது பொம்மை.
     இது எதுவும் தெரியாது வீராவின் பின்னால் நாய்க்குட்டியை போல் சுற்றியபடி இன்று எதாவது சம்பவம் செய்தே தீரவேண்டும் என்று ஒரு பயங்கரமான முயற்சியில் சித்தார்த் இருக்க,
     “அந்த வீட்டுல அப்புடி என்னதான் இருக்கு, நாம என்ன பிளான் போட்டாலும் எதுவும் வெலங்கமாட்டேங்குது. இதுல அந்த பொதையல் மேப்ப எப்படி எடுக்கிறது” அந்த வீட்டிற்கு திருடர்களை அனுப்பி வைத்த அந்த கேரக்டர் இப்படி யோசனையில் மூளையை பஞ்சர் செய்துக் கொண்டிருந்தது.
-ரகசியம் தொடரும்

Advertisement