Advertisement

     “உனக்கு ஒரு விஷயம் தெரியுமா வீரா. அந்த கடைசி வீட்டு காவேரி இருக்கால்ல. அவ பொண்ணு ஒரு பையன கூட்டிட்டு ஓடிட்டாளாம்”
     கங்கா எப்போதும் போல் ஊர் கதை ஒன்றை வீராவிடம் பேசிக் கொண்டே கீரையை சுத்தம் செய்துக் கொண்டிருந்தாள்.
     அவள் கூறியதை கேட்டு “அட ஆமா க்கா‌ உனக்கு இது தொரியுமா. அந்த பையன் நல்ல பெரிய வீட்டு பையனாமே. வீதியில எல்லாம் பேசிக்கிறாங்க” என்று அவளும் தன் பங்கிற்கு ஒரு பாய்ண்டை அடித்துவிட
     தன் மேல் வாயில் கை வைத்து அதிசயித்த கங்கா “அப்படியா இந்த சேதி எனக்கு எப்படி தெரியாம போச்சு. ஆனாலும் அந்த புள்ள நல்லா வெவரமா தான் ஆள புடிச்சிருக்கா” என்றாள்.
     “நீயும் தான் இருக்கியே. வேலை வேலைன்னு ஓடிட்டு, தம்பிக்காக மாடா உழைக்கிற. உனக்குன்னு ஒரு வாழ்க்கைய பத்தி யோசிச்சு பாக்குறியா.
     உன்னை சொல்லி என்ன பண்றது. உன் பெத்தவங்க உன்னை சூது வாது தெரியாம இப்படி பச்ச மண்ணா இல்ல வளத்து வச்சிருக்காங்க. ஒரு பொய் கூட சொல்ல தெரியலை”
     கங்கா வீராவை பற்றி தன் மன எண்ணத்தை அள்ளிவிட வீராவின் மனமோ ‘க்கும் நம்மள பத்தி தெரியாம இந்த அக்கா வேற இஷ்டத்துக்கு அடிச்சுவிடுதே’ என்று எண்ணியபடி அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு தலையை ஆட்டி வைத்தாள்.
     அதே நேரம் “அக்கா அக்கா!” என்று கதிர் வீராவை அழைத்துக் கொண்டே வந்தான்.
     “அக்கா தம்பி வந்துட்டான் க்கா. நான் போய் அவனை பாக்குறேன்” என்றிட “சரி‌ வீரா நீ போய் கதிர பாரு” என்று கங்காவும் பேச்சை முடித்துக் கொள்ள
     “வாடா கதிரு. ஸ்கூல் அதுக்குள்ள முடிஞ்சிருச்சா.‌ இன்னைக்கு என்ன மதியானமே வந்துட்ட” என தம்பியின்‌ பின்னால் சென்றாள்.
     “அது இன்னைக்கு அர நாள் தான் க்கா ஸ்கூல் அதான் வந்துட்டேன்” என்று வீராவிற்கு பதில் அளித்தவாறு தன் பள்ளிப் பையை கலட்டி அதன் இடத்தில் வைத்தான்.
     “க்கா ஸ்கூல்ல போட்டி நடத்துறாங்க. சயின்ஸ் பிராஜக்டாம். அது செய்ய சில பொருள் எல்லாம் வாங்கனும் க்கா. அது என்னன்னு மிஸ் எழுதி தந்திருக்காங்க.
     அந்த பொருள் எல்லாம் வாங்கிட்டு வரனும்னு மிஸ் சொன்னாங்க க்கா. இந்தா க்கா லிஸ்ட்”
     கதிர் தந்த லிஸ்டை வாங்கி பார்த்த வீரா “இது எல்லாம் வாங்க எவ்ளோ காசு தேவைப்படும்டா கதிரு” என்றாள்.
     “அது சரியா எவ்ளோன்னு தெரியலை க்கா. ஆனா எப்படியும் ஐயாயிரத்தில இருந்து எட்டாயிரம் வரை கூட வரும்னு சொன்னாங்க க்கா”
     கதிர் கூறியதை கேட்டு “எவ்ளோ நாளைக்குள்ள இதை எல்லாம் வாங்கிட்டு வரனும்னு சொன்னாங்க கதிரு?” என்று வீரா கேள்வி எழுப்பினாள்.
     “அது இன்னும் இருவது நாள் இருக்கு க்கா. அதுக்கு அப்புறம் தான் பிராஜக்ட்ட சமிட் பண்ணனும்னு சொன்னாங்க”
     “ஓஓ.. இன்னும் இருவது நாள் இருக்கா” என்று கதிரிடம் பதிலுரைத்த வீரா மனதிற்குள் சில கணக்கு போட்டு ‘இன்னும் இருவது நாள் இருக்கா. அதுக்குள்ள எங்க போய் ஆட்டையப்போடுறது.
     பஸ் ஸ்டான்ட் ரயில்வே ஸ்டேஷன்னு எங்கையும் இவ்ளோ காச கொண்டார மாட்டாங்களே. எல்லாவனும் ஏ.டி.எம்‌ கார்டைல வச்சிட்டு சுத்துரானுங்க.
     இதுல ஆன்லைன் பேங்கிங் வேற. கேட்டா டிஜிட்டல் இந்தியாவாம்ல. ச்சே இந்த இந்திய திருநாட்டுல சுதந்திரமா திருட முடியுது. சரி எங்க திருறதுன்னு சீக்கிரமா ஒரு  முடிவ பண்ணுவோம்’ என்று எண்ணிக் கொண்டாள்.
     அவள் திருடி பிழைத்தாலும் அவள் தம்பி நன்றாக படித்து முன்னுக்கு வர வேண்டும் என்பதில் வீரா அவ்வளவு உறுதி கொண்டிருந்தாள்.
————————————–
     இளங்காலை வேளையில் சூரியன் கிழக்கிலிருந்து எழுந்து உலகை தன் ஒளி சிறகால் ஆக்கிரமிக்க தொடங்கி கொண்டிருந்தான்.
     அந்த விடிந்தும் விடியாத காலை வேளையில் அரவிந்திற்கு நெஞ்சு சுருக் என்றது. அதில் விழித்து விட்டார் அரவிந்த்.
      கண்விழித்த அரவிந்த் தன் கண்களை தேய்த்துவிட்டு உள்ளங்கையில் முகத்தை பார்த்தவர்
     “என்ன ஏதோ நெஞ்சு சுருக்குன்னுச்சு” என்று‌ யோசித்தவர் “எதாவது எறும்பு கடிச்சிருக்கும்” என்று தானாகவே ஒரு முடிவுக்கு வநத்வர்
     “இந்த நாள் எனக்கு மட்டும் இனிய நாளா அமையனும்‌ ஆண்டவா” என்று சற்று சத்தமாகவே வேண்டிக் கொண்டவர் தன் படுக்கையில் இருந்து எழுந்து கொண்டார்.
     தன் முகத்தை கழுவியவர் சத்தம் எழுப்பாமல் கதவை திறந்து வெளியே வந்து காலில் சூவை மாட்டியவர் கிளம்பிவிட்டார்‌ தன் நடைப்‌ பயிற்சிக்கு.
     எப்போதும் போகும் சாலையை விடுத்து வேறு சாலையை தேர்ந்தெடுத்து அதில் இயற்கையை ரசித்தவாறு நடந்து சென்றுக் கொண்டிருந்தார்.
     அதான் எப்போதும் போகும் வழியில் பெரிதாக ஒரு ஏழரையை நேற்று இழுத்து வந்து வீடு வரை விட்டுவிட்டாரே. அதன் பிறகு எப்படி அந்த வழியை பயன்படுத்துவார்‌. எனவே இன்று வழியை மாற்றிவிட்டார் மனிதர்.
    “ம்ம் இதுவும் நல்லாதான் இருக்கு. கண்ணுக்கு குளிர்ச்சியா‌ மனசுக்கு இதமா சூப்பரா இருக்கு” என்று வழியில் நடந்து வரும் பெண்களை டாவ் அடித்து கொண்டு நடந்து சென்றார்.
     இதில் போகும்‌ போது சும்மா இராமல் அங்கே குழுவாக செல்லும் பெண்களை பார்த்து “ஹாய் பியூட்டிபுல் கேர்ள். எல்லாம் எப்படி இருக்கீங்க” என்று அவர்களை பார்த்து கண்ணடித்து விட்டு சென்றார்.
     அந்த பெண்களோ இவர் பேசியதை கண்டுக் கொள்ளாமல் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டும் சிரித்து கொண்டும் அவரை கடந்து சென்று விட்டார்கள்.
     “என்ன ரியாக்ஷனே காணோம். நான் இங்க ஒரு மனுஷன் நிக்கிறேன். கண்டுக்குராங்களா பாரு இந்த பொம்பள புள்ளைக எல்லாம்.
     இதே நிவின் பாலி, விஜய் தேவரகொண்டானு இப்படி எல்லாம் யாராவது இவளுங்களுக்கு எதுத்தாப்பல வந்திருந்தா பல்லை காட்டிட்டு போவாளுங்க.
     நாமளும் தான் அரவிந்த் சாமி மாதிரி அம்சமா இருக்கோம். நம்ம அருமை இவங்களுக்கு யாருக்கும் தெரியலை” என்று சற்று சத்தமாகவே புலம்பியவர் அடுத்து அங்கே வந்த ஆன்டிகளை லுக்கு விட்டார்.
     “ஓய் நீங்க போனா போங்க. இங்க பாருங்க இன்னொரு ஏஞ்சல்ஸ் குரூப்பு வருது. அதுலை ஒன்னையாவது என்னை பாத்து சிரிக்க வக்கிறேன். இது சாலஜ்சு” என்று இவரை கண்டு கொள்ளாமல் தூரமாய் போன சில பெண்களை பார்த்து கத்திவிட்டு,
     அந்த ஆன்டிஸ் பார்வை படும்படி அவர்கள் எதிரே ரோமாயோ போல் ஸ்டைலாக இந்த பக்கம் அந்த பக்கம் என நடு ரோட்டில் ரேம்ப் வாக் நடந்து கொண்டிருந்தார் அரவிந்த்.
     ஆனால் இந்த ஆன்டிகள் கூட்டமும் தங்களுக்குள் ஏதோ மும்மரமாக பேசிக் கொண்டு செல்ல அரவிந்தை திரும்பி கூட பார்க்கவில்லை.
     அதில் நொந்து விட்ட அரவிந்த் “இது என்னடா இந்த அரவிந்த் சாமிக்கு வந்த சோதனை. ஒருத்தி கூட ஒரு சைட் லுக்கு கூட விட மாட்டேங்குறாளுங்க” என்று பேசிக் கொண்டே சுற்றி முற்றி வேறு பெண்கள் யாரேனும் தென்படுகிறார்களா என்று பார்த்தபடி சென்றார்.
     அப்போது “சார்” என்றொரு இனிய குரல் அவரின் பின்னால் இருந்து கேட்க பத்து பாட்டில் பூஸ்ட் குடித்தது போல் குஷியான அரவிந்த், தன் முகத்தை கெத்தாக வைத்துக் கொண்டு “எஸ்” என்று ஸ்லோ மோஷனில் பாதி உடம்பை மட்டும் திருப்பி அந்த பெண்ணை பார்த்தார்.
     திருத்தம் அங்கே நின்றது பெண் அல்ல அதை ஆன்டி என்றுகூட சொல்ல முடியாது. வேண்டும் என்றாள் பாட்டி என்று சொன்னால் சரியாக இருக்கும்.
     அரவிந்தை பார்த்து ஒரு கண்ணை சிமிட்டி “நீங்க உங்களுக்கு நல்ல கம்பானியன் தொலவுனா. டோன்ட் வொர்ரி. அவளுங்க போனா போகட்டும். நான் வேணும்னா உங்க கூட வந்திடுறேன்” என்றாள்.
     அந்த பாட்டியை மேலிருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்த அரவிந்தே அதிர்ந்து ரெண்டடி விலகிவிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் அங்கு நின்றிருக்கும் பெண்ணின் பர்ஸ்சுனாலிட்டி எப்படி என்று.
     “என்ன டார்லிங் அப்படியே பின்னாடி போறீங்க. வாங்க டார்லிங் வாங்க நாம பேசி பழகுவோம்”
     அந்த பெண்மணி ‘வாங்க பழகலாம்’ என்றழைக்கவும் இதற்கு மேல் இங்கே நின்றால் ஆபத்து நமக்கு தான் என்று உணர்ந்த அரவிந்த் எடுத்தார்‌ இன்றும் ஒரு ஓட்டம்.
     பின்னங்கால் பிடரியில் அடிக்க தெருவில் புழுதிகள் பறக்க “தம்பி அப்படியே தப்பிச்சு ஓடிரு” என்று தனக்கு தானே கூறிக் கொண்டு பலரை இடித்து தள்ளி காற்றாய் பறந்து விட்டார் வேறு இடத்திற்கு.
     அந்த பெண்ணால் இனி தன்னை தொடர்ந்து தொல்லை தரமுடியாது என்று உணர்ந்த பின்னரே தன் ஓட்டத்தை நிறுத்தி அதை சாதாரண நடையாக மாற்றினார் அரவிந்த்.
     ஓடி வந்த வேகத்தில் சற்று நேரம் மூச்சு வாங்க நின்றவர் தன் கையை முகத்துக்கு நேராக காட்டி
     “ச்சே பொண்ணுங்கள வம்பிழுத்து தான் இதுவரை ஓடி வந்திருக்க அரவிந்தா. இப்புடி ஒரு பொம்பள கிட்ட இருந்து தப்பிக்க நாயை விட கேவலமா மூச்சு வாங்க ஓடி வந்திருக்கியே.
     உனக்கு இது அசிங்கமா இல்ல. உன் புள்ளைக்கு தெரிஞ்சாலே போதுமே கிழி கிழினு கிழிச்சு தொங்கவிட்டுருவான்.
     ஆனா உன்னோட எஸ்டிடில இப்படி ஒரு கலங்கம் வந்திருச்சே. ஐயோ என்னடா உன் நிலைமை இவளோ கேவலமா ஆகிப்போச்சு. த்தூ த்தூ” என தன் முகத்தில் தானே துப்பிக் கொண்டார்.
     “இதுக்கு மேல இந்த அசிங்கத்தை தாங்கிட்டு வாக்கிங் போறதா. அப்படி ஒன்னும் நீ வாக்கிங் போய் கிழிக்க வேணாம்‌. வா வீட்டை பாத்து போவோம்”
     அரவிந்த் நொந்த படி தன் வீட்டை நோக்கி நகர்ந்தார். வெகு சாவகாசமாக வீட்டை அவர் அடையும் நேரம் அவர் வீட்டின் முன்னே ஒரு கும்பலே நிற்பதை கண்டு குழம்பினார்.
     ஏனெனில் இன்று தான் மனிதர் யாரிடமும் வம்பிழுத்துவிட்டு வரவில்லையே. மாறாக அவர் தானே நோஸ் கட் ஆகி வந்துள்ளார்.
     “என்னடா இது தெரு முனை பிரியா அப்பன் அந்த வீனாப் போன பாலு தலை கூட தெரியுது. தெருவே நம்ம வீட்டு வாசல்ல தான்‌ நிக்கிது.
     இப்புடி தெருவே கூடுற அளவுக்கு நாம அப்படி ஒன்னும் பெரிய சம்பவம் எல்லாம் இன்னைக்கு பண்ணவே இல்லையே. என்ன காரணமா இருக்கும்.
     ஒருவேளை நம்ம புள்ளை எதாவது சம்பவம் பண்ணிட்டானா” என்று தனக்கு தானே பேசிக் கொண்டவர்
     “ச்சே ச்சே என்ற மவனே புள்ளப்பூச்சி ஆச்சே.‌ அவனுக்கு பொண்ண தூக்கனும்னா கூட பெத்த பாவத்துக்கு நாம தானே போய் அந்த பொண்ணை தூக்கனும்.
     இவன் சரியான அமுல் பேபி. குனிஞ்ச தலை நிமிராம இவனை வளத்து வச்சிருக்கேன். அதனால அவன் எதுவும் பிரச்சினை பண்ணியிருக்க மாட்டான். வேற என்னவா இருக்கும்?”
     இப்படி எல்லாம் யோசித்து தனக்கு தானே பேசிக் கொண்டே வீட்டை வந்தடைந்தார் அரவிந்த். ஆனால் இவர் அருகில் சென்றும் கூட ஒருவரும் இவரிடம் பேசவும் இல்லை.
     இவரை கண்டுக் கொள்ளவும் இல்லை. அவர்களுக்குள்ளே  எதுவோ பேசிக் கொண்டும் உள்ளே பார்த்துக் கொண்டும் இருந்தனர்.
     அதையெல்லாம் கவனித்துக் கொண்டே வீட்டினுள் சென்ற அரவிந்த தன்‌ மகன் இருந்த கோலம் கண்டு அதிர்ந்து நின்றுவிட்டார். அதைவிட அவன்‌ அருகில் இருந்த உருவத்தை கண்டு‌ மயங்கியே விட்டார்.
-ரகசியம் தொடரும்

Advertisement