Advertisement

     நள்ளிரவு நேரம் அந்த பெரிய வீட்டின் ஈ எறும்பு கூட நல்ல உறக்கத்தில் இருக்கும் நேரம் இரு களவானிகள் பின்வாசல் வழியாக உள்ளே நுழைந்திருக்க நம் அரவிந்தும் அவர்களை பாலோ செய்து வந்திருந்தார்.
     இருளில் மெல்ல அந்த இரண்டு உருவங்களும் சுற்றுப்புறத்தை கவனித்தபடி நகர்ந்து ஹாலை வந்தடைய, அதில் ஒருவன் அங்கிருந்த டேபிளை தெரியாமல் இடித்துவிட்டான். அவன் இடித்த அதிர்வில் அதிலிருந்த ஒரு ஜாடி கீழே விழப்போக, அது விழுவதற்குள் மற்றவன் பிடித்துவிட்டான்.
     “டேய் மெல்ல வாடா எதாவது பொருள தள்ளிகிள்ளி விட்டு சத்தம் போட்டு எல்லாரையும் எழுப்பிப்புடாதடா. வீட்டு ஆளுங்க பாத்தா வந்த சோலிய பாக்கமுடியாம போறதும் இல்லாம தர்ம அடி வாங்க வேண்டி போயிரும்டா. அமைதியா வா”
     மற்றவன் மெல்ல தன்னுடன் வந்தவனை கடிந்துக் கொள்ள “ஆமாமா, அப்புறம் என் புள்ளையும் ஏந்திச்சு வந்துருவான் உங்களால ஒன்னும் ஆட்டையப்போட முடியாது. அதனால நீ மெதுவா போடா ஊதா சட்டை. உன்னோட தோஸ்த் மஞ்ச சட்டை சொல்றத கேளுடா”
     தன் பங்கிற்கு அரவிந்த் அந்த வீட்டின் ஓனரே அவர்தான் என்பதை மறந்துபோய் கத்த அது எல்லாம் வீணாக காற்றோடு கலந்ததுதான் மிச்சம். வேறு எந்த பலனும் இல்லை‌.
     “அண்ணே இந்த வீட்டுல அப்புடி நாம என்னாத்த தேடி வந்திருக்கோம். நம்மல எதுக்காவ இங்க அனுப்பி வச்சாவ”
     அந்த ஊத சட்டைக்காரன் தன் சந்தேகத்தை கேட்க “அது இன்னான்னு எனக்கும் தெரில‌. இந்த வூட்டு பெரிய ஐயா ரொம்ப வருஷத்துக்கு முன்னையே தவரிட்டாருல.
     அவரு ரூம்ல தான் தொலவி பாக்க சொன்னாவ. அங்க எதாவது வித்தியாசமான கடுதாசி பாண்டு பத்திரம் இப்படி என்ன இருந்தாலும் எடுத்தார சொல்லிருக்காவ. அந்த ரூம்பு எங்க இருக்குன்னு கண்டுபுடிச்சு போய் பார்த்தா மட்டும் போதும் வாடா”
     மஞ்சள் சட்டைக்காரன் கூறியதை கேட்டு ஊதா சட்டைக்காரன் மண்டையை ஆட்ட, அரவிந்தின் ஆறாவது அறிவு அடுத்த நொடி ஆக்டிவேட் ஆகியது‌.
     “என்னங்கடா இது என் அப்பன் ரூம்ல என்ன புதையலா இருக்கப் போவுது அந்த ரூம்ல தேட போறீங்க. அதுக்கு என் புள்ளை பர்ச சுட்டுருந்தா கூட அஞ்சு பத்து தேறும். அங்க இருக்க பத்திரத்தை வச்சு என்னடா பண்ணப்போறீங்க”
     அவர்களுக்கு கவுண்டர் கொடுத்தபடி அவர்களை தன்னுடைய புல் கண்காணிப்பில் வைத்தபடி தொடர்ந்து சென்றார் நமது அரவிந்தும்.
     அங்கே வந்திருந்த திருடர்கள் இருவரும் சரியாக சொல்லி வைத்தார்ப்போல் அரவிந்தின் தந்தை மற்றும் தற்போது அரவிந்தின் அறையாக இருக்கும் மரபொம்பை இருக்கும் அறையை திறக்க
     “டேய் திருட்டு பாய்ஸ் எப்புட்ரா என் ரூம்மு உங்களுக்கு தெரியும். சரியா போய் திறக்குறீங்க. புடிக்கிறேன் கண்டுப்புடிச்சு உங்களை முடிக்கிறேன்டா”
     கையை நம்பியார் போல் தேய்த்துக் கொண்டு இருவரும் அந்த அறையில் எதைதான் திருடப்போகிறார்கள் என பார்க்க கட்டிலில் அமர்ந்து காலை ஆட்டிக் கொண்டே நோட்டம் விட்டார்.
     அங்கிருந்த ஒவ்வொரு அலமாரியாக திருடர்கள் தங்கள் தேடுதல் வேட்டையை தொடர, சில அலமாரிகளை சாவி இன்றி திறக்கமுடியாது ஊதா சட்டைக்காரன் முழித்து வைத்தான்.
     “அண்ணே அந்த செல்பை எல்லா சாவி இல்லாம தெறக்க முடில அண்ணே. இப்ப சாவிக்கு என்ன பண்றது?” அப்பாவியாய் அவன் கேடக
     “ம்ம் நான் போய் என் புள்ளை தங்கச்சி மச்சான்னு எல்லாரையும் எழுப்பி விடுறேன் அவங்கட்ட சாவிய வாங்கி தொலவு.
     பேசறான் பாரு கேனக்கிறுக்கன் மாதிரி ஒரு வீட்டுக்கு திருட வந்திருக்கோம்னு ஒரு டீடிக்காஷன் இல்ல. திருட எக்யுப்மெண்ட் எல்லாத்தையும் கொண்டு வராம இங்க வந்து புலம்புறான். இவன்லாம் என்னத்த திருடி ச்ச ச்ச இதெல்லாம் எங்கிருந்து தேறும். என்னதான் இருந்தாலும் என் மருமக வீரா மாதிரி எல்லாராலையும் எக்ஸ்ப்பர்ட் ஆகிட முடியுமா”
     ஊதா சட்டைக்காரனை பார்த்து அரவிந்த் அவனை மேலும் கலாய்த்து வைக்க, அங்கு தேடுதல் வேட்டை இன்னும் முடிந்தபாடில்லை.
     “எலேய் இந்த கம்பிய வச்சு திருகி தெறடா. நீ வேற இருக்க வேதனை பத்தாதுன்னு இவன் வேற”
     மஞ்சள் சட்டைக்காரன் சலித்துக் கொண்டு ஒரு கம்பியை எடுத்து நீட்ட அதை வாங்கி திறக்கமுடியாத கதவுகளை நெம்பிக் கொண்டிருந்தான் ஊதா சட்டை. எவ்வளவு நேரம்தான் இவர்களை வேடிக்கை பார்ப்பது அரவிந்தின் வயிறு வேறு என்னை கவனியேன் என கத்த
     “சரி கொஞ்ச ஸ்நாக்ஸ சாப்பிட்டுக்கிட்டே வேடிக்கைய கண்டினுயூ பண்ணுவோம்” அவர் அறையில் பதுக்கியிருந்த சிப்ஸை எடுத்து கொறித்த ஆரம்பித்துவிட்டார்.
     “அண்ணே இந்த அலமாரிய மட்டும் என்ன செஞ்சும் தெறக்க முடியல அண்ணே”
     மரபொம்மை இருக்கும் அலமாரியை தம்கட்டி ஏதேதோ செய்து பார்த்தும் திறக்க முடியாது அவன் கூற “ஏலேய் எனக்கு உதவ வந்தியா இல்ல உவத்திரம் பண்ண வந்தியா. ஏன்டா என் ஜீவன வாங்குற”
     மஞ்ச சட்டை திட்டியபடி தானும் திறந்து பார்க்க, ம்ஹீம் அந்த கதவை அசைக்கக்கூட முடியவில்லை. எல்லாம் உள்ளே இருக்கும் நம் மரபொம்மையின் வேலைதான்‌.
     இவர்கள் திணறுவதை கண்டு கடுப்பாகிய மூளையை அடுகு கடையில் வைத்திருக்கும் நம் அரவிந்த் சிப்ஸை நொறுக்கு நொறுக்கென வாயில் அதக்கிக்கொண்டு இவர்கள் இருவர் முன்னும் சென்று நின்றார்.
     என்னதான் இவர் உருவம் யாரின் கண்ணிற்கும் தெரியாது போனாலும் அவர் கையில் இருக்கும் சிப்ஸு பாக்கெட்டு அந்த இருவர் கண்ணும் நன்றாகவே தெரிந்தது. இதில் சிப்ஸை அவர் வாயில் அறைக்கும் சத்தம் வேறு.
     காற்றில் மிதக்கும் சிப்ஸு பாக்கெட் அதோடு அதை உண்ணும் சத்தத்திலே அந்த இருவருக்கும் உடலில் இருந்த பாகம் எல்லாம் வழுக்கி விழுந்தததை போல் ஆக,
     ‘இவனுங்க இதுக்கு சரிபட்டு வரமாட்டானுங்க’ என தானே அந்த அலமாரி கதவையும் திறந்துவிட்டு “இப்படிதான் கதவை திறக்கனும்டா கிறுக்கனுங்களா. அதவிட்டுட்டு என்னங்கடா வித்தை காட்டுறீங்க” என பேச வேறு செய்தார் நம் ஆள்.
     அதற்கு மேலும் அங்கு நிற்க வந்த திருடனுங்களுக்கு பைத்தியமா என்ன “ஆஆஆ….. ஐயோ பேய்… பேய்… காப்பாத்துங்க” என அலறியபடி அந்த அறைக்கு வெளியே ஓடினர். ஆனால் என்ன ஒன்று அந்த வீட்டை விட்டுதான் வெளியே செல்லமுடியவில்லை.
     கதவு எல்லாம் ஜாம் ஆகிவிட “ஐயோ சாமி யாராவது காப்பாத்துங்களே” வீட்டிற்குள் அவர்கள் கதறியதில் வீட்டில் இருந்த அனைவரும் எழுந்துவிட்டனர்.
     இவர்கள் அலறி ஓடியதை கண்டு “உங்களுக்கு கதவை திறக்க ஹெல்ப் தானேடா பண்ணுனேன்‌‌. அதுக்கு எனக்கு தேங்க்ஸு சொல்லாமா எதுக்கு கத்திட்டு ஓடுறீங்க” என அறைலூசு அரவிந்தும் கேட்டுக்கொண்டே அவர்கள் பின்னே வந்தார்.
     அந்த பெரிய ஹாலின் நடுவே பயத்தில் வேர்த்து விறுவிறுத்துப்போய் அந்த இரண்டு களவாணிகளும் உக்காந்திருக்க, அவர்களை சுற்றி மொத்த குடும்பமும் நின்றிருந்தது.
     “ஏன்டா திருட்டு களவாணி ராஸ்கோல்களா எவ்ளோ தெகிரியம் இருந்தா எங்க வீட்டுக்குள்ளையே திருட வந்திருப்பீக. இன்னைக்கு இந்த கார்மேகம் யாருன்னு காட்டுறேன்டா. சித்து தம்பி இவனுங்கள ஒரு அறையில போட்டு பூட்டுக நாளைக்கு வெள்ளன போலீஸ வரச் சொல்லிப்புடுவோம்”
     கார்மேகம் ஒரு கட்டையை கையில் வைத்துக் கொண்டு கோபத்தில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க பேசி வைக்க
     “ஐயோ மச்சான் தூக்கம் வந்தா பாய போட்டு படுக்கிறதும், வீடு பெருசா இருந்தா ஆட்டைய போட வரதும் ஜகஜம் தானே விடுங்க” இடையில் அரவிந்த் வேறு கிராஸ் டாக்கால் வர, தன் தந்தையை திரும்பி பார்த்தான் சித்து.
     “ஐயா சாமி எங்கள போலீசுல புடிச்சு குடுத்தாலும் சேரி, இல்ல இங்கையே கட்டிப்போட்டு அடிச்சாலும் சேரி. எதுனாலும் இந்த வீட்டுக்கு வெளிய வச்சு செய்யுங்க சாமி. இந்த வீட்டுக்குள்ள இனி ஒரு நொடி இருந்தாலும் நாங்க பயத்துலையே செத்துருவோம்”
     தேம்பி தேம்பி அழுதபடி அந்த ஊத சட்டைக்காரன் கதற “டேய் மாதவா அந்த பேய்தான் எதோ பெரிய வேலையா பாத்துவிட்டுருச்சு போலடா” சங்கர் மாதவன் காதலில் மெதுவாக புலம்பினான்‌.
     “செத்த நேரம் வாய மூடுடா. நானே இங்க என்ன நடக்குதுன்னு புரியாம நிக்கிறேன். எங்க அப்பன் வேற நான்தான் களவாணி பயலுவல திருட அனுப்புன மாதிரியே மொறச்சிட்டு நிக்கிறாரு. இதுல நீ வேற ஏன்டா”
     மாதவனும் தன் பங்கிற்கு புலம்பி வைத்தான். அதற்கு காரணமும் இருந்தது. திருடர்களை கண்டது முதல் கார்மேகம் தான் மாதவனை வைத்த கண் வாங்காது முறைத்து தள்ளிக் கொண்டிருந்தாரே.
     “மாமா இவனுக்கட்ட என்னா பேச்சு புடிங்க புடிச்சு அந்த ரூம்ல போட்டு லாக் பண்ணி வைப்போம். காலைல போலீஸ்க்கு கால் பண்ணிடலாம்‌” கார்மேகத்தின் கவனத்தை தன் பக்கம் திருப்பி பேசிய சித்துவிற்கு அவன் தந்தை பேசியதை வைத்தே நடந்தது அவன் தந்தையின் சித்து விளையாட்டென புரிந்தது.
     ‘இரவு வீட்டிற்கு வந்த திருடர்கள் இருவரும் சரியாக அவன் தந்தையின் கையில் சிக்கியிருக்க வேண்டும். அவர் தன்னால் ஆனதை அலுங்காமல் குலுங்காமல் செய்து விட்டிருப்பார். அதான் அலறுகிறார்கள்’
      சரியாக கணித்து அவர்களை மீண்டும் அரவிந்தின் அறைக்குள்ளே போட்டு அடைத்துவிட்டான் சித்து ‘சாவுங்கடா’ என நினைத்து.
     “எலேய் ஷங்கரு ஆனாலும் அந்த திருடனுங்க பாவம்லடா. காலைலக்குள்ள என்ன ஆவப்போறானுங்களோ நினைச்சா எனக்கே அல்லுவிடுதுடா” மாதவன்தான் பாவம் பார்த்தான் அவர்களுக்காய்.
     “ஆஹா ரொம்ப நாளைக்கு அப்புறம் எனக்கு எண்டர்டெயின்மெண்ட்க்கு ஆள் சிக்கிடானுங்கடா” மரபொம்மை வேறு தன் வேலை வேலையை அப்போது துவங்க
     “தம்பிகளா அழாதீங்கபா. இந்தாங்க சிப்ஸு சாப்புடுங்க” அரவிந்த் தன் பங்கிற்கு சிப்பை நீட்ட
     “ஐயோ காப்பாத்துங்க… காப்பாத்துங்க…” என் மீண்டும் கதறினர் இருவரும்.
     “ச்சே உங்களுக்கு பாவம் பாத்து எவ்ளோ பெரிய மனசு பண்ணி என் ஸ்நேக்சையே தரேன் எதுக்குடா கத்துறீங்க. இப்ப என்ன ஸ்நேக்ஸ் வேணாமா நோ புராப்ளம் நானே காலி பண்ணுறேன். இதுக்கு போய் கத்திக்கிட்டு சில்லி பெலோஸ்”
     என அவர்கள் முன்னையே நின்று மேலும் சிப்ஸை அரவிந்த் தன் வாயினுள் தள்ள காலையில் போலீஸ் வரும்வரை அந்த இருவரின் கதறலும் அந்த பெரிய வீடு முழுக்க நிறைத்தது.
     முடிவில் சோப்பு பவுடரில் முக்கி எடுத்து கல்லில் போட்டு அடித்து வெளுத்து எடுத்ததை போல் காலையில் வெறும் கூடாய் இருந்த இருவரையும்தான் போலீஸ் இழுத்து சென்றது.
     அந்த வீட்டிற்கு திருடர்கள் வந்து சென்று ஒரு இரண்டு நாள் இருக்கும் சித்து வீட்டு வாசலில் ஊர்க்காரர்கள் இருவர் வந்து
     “என்ன கார்மேகம் ஐயா உங்க மச்சானுக்கு உரிமபட்ட மலைக்குள்ள எதோ பொதையலு இருக்காம்ல உண்மையா? நம்ப ஊரு பக்கத்து ஊருன்னு எல்லா இதே பேச்சாத்தான் இருக்கு” என கேட்டு நின்றனர்.
     ‘அடங்கொக்கமக்கா அந்த ஆளுட்ட புரளிய அவுத்து விட்டு வந்து முழுசா மூனு நாள் கூட ஆகலை அதுக்குள்ள 5ஜி மாதிரி என்னா வேகமா ஸ்பிரேட் ஆகுது’ சித்துவே தலை கிறுகிறுக்கி போய் நின்றுவிட்டான் புரளி பரவும் வேகத்தை கண்டு
     இதற்கெல்லாம் காரணமான வீராவை இப்போதே காண வேண்டும் அவளுக்கு ஒரு முத்தமாவது தந்து இந்த தகவலை பகிர வேண்டும் என மகிழ்ச்சியின் உச்சியில் வீராவின் அறைக்குள் ஓடினான்.
     சித்து வீராவுக்கு ஒரு முத்தமாவது தந்து ரொமான்ஸ் செய்கிறானா இல்லை எப்போதும் போல் சுதப்பி முகத்தில் பல்பை தொங்கவிட்டபடி வருகிறானா என பார்ப்போம்.
-ரகசியம் தொடரும்

Advertisement