Advertisement

     “உன் குத்தமா என் குத்தமா
       யார நானும் குத்தம் சொல்ல
       பச்சஞ்பசு சோலையிலே
       பாடி வந்த பைங்கிளியே”
     வானத்தில் இடிக்கும் இடி தங்கள் தலையின் மீது விழுந்ததைப் போல் கண்ணத்தில் கையை முட்டுக் கொடுத்து வாசலைப் பார்த்து அமர்ந்திருந்தனர் மாதவனும் ஷங்கரும். எதுக்கு இப்படி உக்காந்திருக்காங்கனு பாக்குறீங்களா? வேற ஒன்னும் இல்லைங்க வெளிய ஊரு சுத்த போயிருந்த நம்ம சித்து அண்ட் கோக்காக தான் இவங்க வெயிட்டிங்.
     இவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி வீட்டுக்குள்ள பாட்ட போட்டுவிட்டுட்டு நம்ம அலமேலு அம்மா இரவு உணவுக்கு சமைத்துக் கொண்டிருக்கிறார். இவர்கள் காலையில் சித்து அறையிலே டேரா போட்டுவிடலாம் என பேசி வந்து பார்க்கும் நேரம் சித்து டாட்டா பாய்பாய் சொல்லி வீட்டை விட்டு கிளம்பிவிட அவன் எப்போதுடா வருவான் என நொடிக்கு ஒருதரம் தெருவை பார்த்து வைத்தான் மாதவன்‌.
     “வேலை இல்லாத வெட்டி பயலுவலா ஏன்டா நடு வாசல்ல நாய்கணக்கா காவகாத்துட்டு உக்காந்து கெடக்குறீங்க. உங்க மூஞ்ச பாத்துட்டு வெளிய போனா போற வேலை உருப்புடுமாடா”
     காலையில் கார்மேகம் வெளியே போகும்போது நாலு வாங்கு வாங்கி சென்றும்கூட அந்த இடத்தைவிட்டு அசைவேனா என அமர்ந்திருக்க திட்டிய படிதான் வீட்டைவிட்டு வெளியேறினார் அவர்.
     “மாமா நாளைக்கு நாம எங்க போலாம். இந்த ஊருக்குள்ள நடந்து நடந்து கால் வலிக்குது மாமா அதுக்கு எதாவது பண்ணுங்க பிளீஸ்”
     இன்று நடந்து நடந்து தன் கால் நொந்துபோனதில் கதிர் சித்துவிடம் கம்ப்ளைன் செய்தபடி வர அவனுக்கு சித்து எதோ பதில் அளிக்க என உள்ளே எண்ட்ரி கொடுத்தனர் நம் சித்து அண்ட் கோ. ஆனால் காலையில் இருந்து இவர்களுக்காய் வாசலில் காவல் இருந்த இரண்டு நண்பர்களையும் திரும்பியும் பார்க்காது உள்ளே சென்றுவிட, அடுத்த நொடி அவர்களும் உள்ளே வந்தனர்‌.
     “என்ன தம்பி ஊரை நல்லா சுத்தி பாத்தீங்களா” இவர்கள் வரும் நேரம் அறிந்து காபி கோப்பையுடன் வந்தார் அத்தை அலமேலு.
     “ம்ம் நல்லா சுத்தி பாத்தோம் மா. நல்லா பச்சைபசேல்னு மொத்த ஊரும் உங்களை மாதிரியே ரொம்ப ரொம்ப அழகா இருக்கு. எங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கு” வீரா ஒன்றுக்கு இரண்டாய் பெருமை பீத்தி அலமேலுவின் வீக் பாய்ண்டில் அடிக்க அவர் முகம் பூரித்து போனது.
     “என் ராஜாத்தி நீயும் ரொம்ப அழகுடா” வீராவின் முகத்தை வழித்து திருஷ்டி எடுத்த அலமேலு “உனக்கு சாயங்காலம் சாப்பிட என்ன வேணும் சொல்லு நான் செஞ்சு தரேன்” என அடுத்து ஈவ்னிங் ஸ்நாக்ஸ் டிஸ்கஸனுக்கு செல்ல
     “நானும் வரேன் ரெண்டு பேரும் சேந்தே செய்யலாம்” வீராவும் அவரோடு பேசியபடி சமையலறைக்கு சென்றுவிட்டாள்.
     ‘ஐயோ ஸ்கோர் பண்றாலே. எங்கருந்துதான் இப்படியெல்லாம் பேச கத்துக்கிட்டாளோ. ம்ம் நைனா சொல்ற மாதிரி என் வீரா செல்லத்துக்கு ஆண்டவன் அறிவை அள்ளிதான் குடுத்துருக்கான்’
     வீராவை பச்சையாக சைட் அடித்து வாயில் ஜொல்லு ஊற்ற அமர்ந்திருந்த சித்துவை கண்டு ‘இது தேறாத கேஸு’ என அரவிந்த் எப்போதும்போல் அவர் தங்கை என்ன ஸ்நேக்ஸ் செய்கிறார் என பார்க்க கிட்சன் உள்ளே புகுந்துவிட்டார்‌.
     “சித்து சித்து சித்து” வீராவின் நினைப்பில் அரைபோதையில் அமர்ந்திருந்த சித்துவை மாதவன் பிடித்து உழுக்க
     “ஆன் என்ன என்ன ஆச்சு. ஓஓ.. மாதவன் நீங்களா? எதுக்கு என்ன கூப்பிட்டீங்க” தூக்கத்திலிருந்து எழுந்ததுப்போல் தன் கனவிலிந்து வெளிவந்து கேட்டான் சித்தார்த்.
     “சித்து நான் உங்ககிட்ட பேசனும் கொஞ்ச வெளிய வரீகளா” மாதவன் அழைத்தவுடன் ஒத்துக் கொண்டு வெளியே வந்தான் சித்து.
     “சித்து நீங்க உங்க ரூம்ல தனியா தானே படுத்திருக்கீங்க நாங்களும் உங்க ரூம்ல படுத்துக்கட்டுமா? நாங்க உங்கள தொந்தரவு பண்ணவே மாட்டோம். கீழ தரைலகூட படுத்துகிடுறோம் பிளீஸ்” கண்களில் ஒரு கூடை பயத்தை நிறைத்து வைத்து சித்து சம்மதம் சொல்லி விடுவான் என்ற நம்பிக்கையை மனதில் வைத்து பார்த்து நின்றன அந்த மூளை வளர்ச்சி இல்லா இரண்டு ஜந்துக்களும்.
     “எதுக்கு?” ஒரே கேள்வியில் நண்பர்கள் இருவரையும் முழி பிதுங்க வைத்தான் சித்து‌.
     “அது அதுவந்து சித்து மச்சான் நாங்க எங்களுக்கு இந்த வீட்டுல தனியா படுக்க பயமா இருக்கு மச்சான். பிளீஸ் முடியாதுனு மட்டும் சொல்லாதீங்க எங்கள பாத்தா பாவமா இல்லையா?” ஜீவனே இல்லாததை போல் நின்றிருந்த இருவரையும் கண்ணை கூர்மையாக்கி கொண்டு பார்த்தான் சித்து.
     ‘ம்ஹீம் இவனுங்க எதுக்கு நம்ம ரூம்க்கு வரனுன்னு சொல்லுறாங்க. இவனுங்கல பாத்தா அவ்வளவு ஒன்னும் ஒர்த்தாவும் தெரியல. சரி என்னதான் பண்ணுறானுங்கனு பாக்கலாமே’ இல்லாத மூளையை போட்டு கசக்கி பிழிந்து யோசித்த சித்து
     “உங்கள பாத்தாலும் கொஞ்ச பாவமாதான் இருக்கு. சரி இன்னைக்கு வந்து என் ரூம்ல தங்கிக்கோங்க நான் அலோவ் பண்றேன்” பெரிய மனிதன் தோரணையில் போனால் போகிறதென அவன் சொல்லி வைக்க இவர்கள் இருவருக்கும் அப்போதுதான் நிம்மதி பெருமூச்சு வந்தது.
     காக்கை குருவிகள் ஆடுமாடென அனைத்தும் அதனதன் கூட்டுக்குள் சென்றுவிட நிலவு மகள் மெல்ல பூமியை ஆட்சி செய்ய எழுந்து வந்தாள். அமாவாசை முடிந்து ஒரு இரண்டு நாட்களே ஆன நிலையில் நிலவு சிறு பிறையென வானில் தோன்றி மறைந்துவிட்டாள். என்றும் போல் இல்லாது அன்று அந்த நள்ளிரவு நேரத்தில் ஆந்தைகள் அலறியபடி ஊருக்குள் வட்டமடித்துக் கொண்டிருந்தது.
      அந்த சத்தத்தை கேட்டு பெரிய வீட்டின்முன் நின்றிருந்த மாதவன் ஷங்கர் இருவரும் “ஐயோ தூங்க போவாம வெளிய நின்னது நம்ம தப்புடா” என அலறிக் கொண்டு வீட்டினுள் ஓட அங்கு எப்போதும் போல் டம்டம் என பொம்மையின் சத்தம் வேறு.
     அதற்குமேல் தாமதிக்காது சித்துவின் அறை வாயிலுக்கு ஓடி கதவை திறக்க, சித்து கட்டிலில் காலாட்டியடி படுத்து போனை நோண்டிக் கொண்டிருந்தான். இவர்கள் கதவை திறந்த ஓசையில் திரும்பி பார்த்தவன் “வாங்க மாதவன் வாங்க” என மரபொம்மை மாடுலேஷனிலே அழைக்க மாதவன் அப்படியே பிரீஸ் ஆகி நின்றுவிட்டான்.
     இதை புரியாத ஷங்கர் வேகமாய் உள்ளே சென்று “ரொம்ப தேங்க்ஸ் பாஸு. உங்க உதவிய நான் மறக்கவே மாட்டேன்” என்று சித்து எதோ வள்ளல் பரம்பரையில் வந்த தர்மபிரபுவை போல் எண்ணி பேச
     அவனும் கூச்சமே இல்லாது “எதுக்கு தேங்க்ஸ் எல்லாம் புரோ. இது எல்லாம் எனக்கு சாதாரணம்” என தன் பங்கிற்கு தன்னுடைய பெருமையை அவன் அள்ளி விட்டு படுத்தே விட்டான் அவன் வரலாறு தெரியாமல்.
     இங்கோ இன்னும் அதிர்ச்சியில் உறைந்த காக்கா போல் நின்றிருந்த மாதவனை கவனித்த ஷங்கர்தான் “இவன் ஒருத்தன் எப்ப பாத்தாலும் மாடு மாதிரி அசைப்போட்டுட்டே நிக்கிறது. வாடா உள்ள அதான் பாஸ் நம்ம இங்க தங்க சரினுட்டாரே” அவனை இழுத்து கதவை சாற்றி உள்ளே வந்தான்.
     மாதவன் ஒரு திகிலோடே உள்ள வந்து பார்க்க என்னே ஆச்சரியம் வெளியே கேட்ட சத்தம் துளியும் சித்துவின் அறைக்குள் கேட்கவில்லையே. அதை உணர்ந்த ஷங்கர் அவன் நண்பனிடம் கூற, அதை அப்போதுதான் உணர்ந்த மாதவனும் சற்று ஆச்சரித்தோடு ‘இவனுக்கு எதாவது சக்தி எதுவும் இருக்குமோ’ என எண்ணியபடி அமைதியாக வந்து ஷங்கரின் அருகில் படுத்துவிட்டான்.
     அவர்கள் உள்ளே சென்று சிறிது நேரம்தான் இருக்கும் எல்லோரும் நன்றாக உறங்கி விட்டிருந்தனர். ஏன் அந்த மரபொம்மையின் சத்தம் கூட சவுண்ட் புரூப் போட்டதைப்போல் சித்துவின் அறைக்குள் எட்டிக்கூட பார்க்கவில்லை.
     அப்படி இருக்கும் போது தான் திடீரென ஒரு சத்தம் கேட்டது “ம்ம் ம்ஹீம்” என எங்கோ ஒரு முனகல் சத்தம், அதோடு “ஹாஹாஹா..” என்ற சிரிப்பு சத்தமும் கேட்க தூங்கிக் கொண்டிருந்த மாதவன் எழுந்து அவன் அருகிலிருந்த ஷங்கரையும் சேர்த்து எழுப்பினான்.
     “டேய் ஏன்டா எதுக்கு தூங்குன என்ன எழுப்பிவிட்ட. ரெண்டு நாள் கழிச்சு இப்பதான் நான் நிம்மதியா தூங்குனேன் அது உனக்கு பொறுக்கலையா” தூக்கம் பறிபோனதில் அவுத்துவிட்ட டாபர்மேன் மேலே வந்து பாய்வதை போல் வள்ளென விழுந்தான்.
     “ஐயோ நெலமை தெரியாம இவன் வேற. டேய் டபரா தலையா இப்ப தூக்கம் ரொம்ப முக்கியமா உன் வாய மூடிட்டு நல்லா காத வச்சு கேளு. யாரோ பேசுற சத்தம் கேக்குதுடா”
     கோவமாக ஆரம்பித்த மாதவனின் குரல் இறங்கி போய் ஒலித்தது. அதன்பின்னர் ஷங்கரும் தன் காதுகளை ஷார்ப்பாக்கி உற்று கவனிக்க அவன் காதுகளிலும் அது விழுந்தது.
     “ஆமாண்டா எனக்கும் அந்த சத்தம் கேக்குது இரு எங்கருந்து வருதுன்னு கவனிப்போம்”
     மாதவனும் ஷங்கரும் அவர்களின் காதுகளை சத்தம் வரும் திசையை நோக்கி செலுத்த, அந்த முனகல் சத்தம் வேறெங்குமிருந்து வரவில்லை நம் அரவிந்து பெத்த அழகு பிள்ளியிடமிருந்துதான் வந்திருந்தது.
     “ஏய் செல்லம் எங்க போற மாமாட்ட வாடி”
     “இன்னும் ஒரே ஒரு இச் மட்டும். ம்ஹீம் பத்தாது இன்னொன்னு தா”
     நேரில் ரொமாண்ஸ் பண்ண துப்பில்லாத அந்த பக்கி தூக்கத்தில் அவன் காதலியுடன் டூயட் பாடிக்கொண்டிருந்தது‌. அவன் முனகுவதை குளோஸப்பில் போய் ஆளுக்கு ஒருபுறமாய் நின்று கேட்ட மாதவனும் ஷங்கரும் அப்படியே ஸ்லோ மோஷனில் திரும்பி ஒருவரை ஒருவர் பார்த்து வைத்து அப்படியே அவர்கள் படுத்திருந்த பாயில் வந்தமர்ந்தனர்.
     “டேய் மாதவா பேச்சு சத்தம் வேற எங்கையும் இருந்து வரலடா உன் மாமன் மகனுட்டிருந்துதான் வருது. பரதேசி தூக்கத்துல அவன் ஆளுகூட பல்லை காட்டிட்டு இருக்கான் போல. ச்சை இந்த வீட்டுல நமக்கு நிம்மதியான தூக்கம் இனிமே கெடக்காதுனு தோனுதுடா. ஐயோ….”
     ஷங்கர் அவன் மனக்குமுறலை கொட்டி தீர்க்க மாதவனும் தலையில் துண்டை போட்டு அமர்ந்துவிட்டான். அங்கு அந்த சித்து பைத்தியமோ இன்னும் கனவில் பினாந்திக் கொண்டுதான் இருந்தான்.
     “அச்சோ வெளியோ போனா பேய் தொல்ல. இங்க வந்தா உன் மாமன் மவன் தொல்ல. நமக்கு இனி நிம்மதியான தூக்கமும் இல்லடா” ஷங்கர் புலம்புவதை நிறுத்துவதைப்போல் தெரியவில்லை. ஆனால் சிறிது நேரத்தில் சித்து வாயை மூடிவிட அதன்பின்னரே தங்கள் விதியை நொந்த படி தூங்கினர் இருவரும்.
     நள்ளிரவு நேரம் முன்றொருநாள் இருவர் வந்ததைப் போல் இரண்டு உருவங்கள் அந்த பெரிய வீட்டில் எல்லா அறையிலும் விளக்குகள் அணைந்துவிட்டதா என நோட்டம் விட்டபடி நின்றிருந்தது‌. எல்லாம் சரியாக இருக்கிறதா என சரிபார்த்தபின்
     “எலேய் வெளக்கு எல்லா அணைஞ்சு போச்சுடா. வா நாம போய் நமக்கு சொன்ன வேலைய செய்ய ஆரம்பிப்போம்”
     அவர்களுக்குள் பேசியபடி அந்த இரு உருவங்களும் மெல்ல மெல்ல முன்னேறி சென்று அந்த வீட்டின் பின்கதவோரம் நகர்ந்தது. அந்த கதவில் கைவைத்து தள்ள என்ன அதிசயம் கதவு இவர்களுக்காகவே திறந்து வைத்ததைப் போல் படாரென திறந்துக் கொண்டது‌.
     உள்ளே யாரும் தென்படுகிறார்களா என தலையை மட்டும் விட்டு எட்டிப் பார்த்தது அந்த இரு உருவமும். அந்த இரு உருவத்திற்கு பின் மூன்றாவதாக ஒரு உருவமும் இவர்களை ஆரம்பத்திலிருந்து கவனித்து பின்தொடர்ந்து வந்து இவர்களுடனே எட்டியும் பார்த்து.
     அது வேறு யாராக இருக்க முடியும், நமது நைட் வாட்ச்மென் அரவிந்த்தான் அந்த மூன்றாவது உருவம். எப்போதும் போல் காத்தாட காற்றில் பறந்து டைம் பாஸ் பண்ணிக் கொண்டிருந்த மனிதரின் கண்களில் இவர்கள் விழ
     ‘யாருடா இவனுங்க. நம்ம வீட்டுல என்ன பண்ணுறானுங்க. சரி என்னதான் செய்றானுங்கனு பாப்போமே’ என பாலோ செய்து வந்திருந்தார் மனிதர்.
     அது தெரியாத அந்த இரண்டு உருவங்களும் “யாரும் பாக்கலை வா உள்ள போலாம்” என்று வீட்டினுள் நுழைந்தது பின்னால் நமது அரவிந்துடன்.
-ரகசியம் தொடரும்

Advertisement