Advertisement

     வெஞ்சாமரம் வைத்து வீசுவதை போல் குறைவில்லாமல் காற்று சுழன்று வந்து முகத்தை மோத அந்த காலை வேலையில்தான் தூக்கம் நன்றாக கண்களை சுழற்றிக் கொண்டு வர ‘ஆஹா இதுவல்லவோ சுகம்’ என இழுத்துப் போர்த்தி தூக்கத்தை தொடர்ந்தான்‌ ஷங்கர்.
     இரவெல்லாம் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்திருந்த ஷங்கர், இப்போதும் தான் நல்ல தூக்கத்திற்கு சென்றிருந்தான்‌.
     ‘நான் தூங்காதப்ப ஊருல ஒரு பயலும் தூக்கக்கூடாதுடா’ என்ற நல்லெண்ணம் கொண்ட மரபொம்பையோ அவன் காலை வேளையை கெடுக்க தடதடதடவென கப்போர்ட்டை பிடித்து ஆட்டு ஆட்டென ஆட்ட அடித்துப் பிடித்து எழுந்து அமர்ந்தான் ஷங்கர். அருகில் அவன் உயிர் நண்பனாகிய மாதவன் படுத்திருக்க, அவனை பார்த்து திடுக்கிட்டு போன ஷங்கர், அவன் இவ்வளவு நேரம் தூங்கிய இடத்தை ஒருமுறை சுற்றி பார்த்தான்.
     “ஆஆஆஆ……” என பார்த்தவுடன் அலறிவிட்டான்.
     அவன் அலறலில் நல்ல தூக்கத்தில் இருந்த மாதவனும் “அம்மா……..” என அலறிக் கொண்டு எழுந்தான்.
     ஒன்றாக ஆரம்பித்த இருவரின் அலறலும் ஒரே புலோவில் சென்று முடிய ஷங்கரை முறைத்து “ஏலே எருமை கணக்கா ஏன்டா கத்துன?” மாதவன் பதறும் இதயத்துடன் கேட்டு வைத்தான்.
     “எருமை கணக்காவா, எலேய் நானா இருக்கவும் கத்துனதோட நிறுத்துனேன். வேற யாரா இருந்தாலும் இந்நேரம் பயத்துல இந்த வீட்டையே ரெண்டா ஆக்கிருப்பாங்க” பயந்தில் முகம் எல்லாம் வெளுத்திருக்க திக்கி திணறி கூறி வைத்தான் அவன்.
      “ப்ச் என்னடா ஷங்கரு சொல்லுற. கொஞ்ச புரியிராப்லதான் சொல்லே” ஷங்கரின் அலப்பறையில் தன் தூக்கம் கெட்ட காண்டில் கடுப்படித்தான் மாதவன்.
     “டேய் மாதவா! நான் உன்கூட தூங்கிட்டு இருக்கேன்டா” ஷங்கர் கூற
     “ஆமாண்டா என்கூட தானே இருக்க அப்ப என்னோட தான் தூக்கிருக்க. அதுக்கா கத்துன” சலித்து கொண்டான் மாதவன்.
     “டேய் வெளக்கெண்ண நான் சொல்றது உனக்கு புரியலையா. நான் நேத்து நைட்டு நான் எங்கூட்டுல படுத்திருந்தேன். இப்ப இந்த பெரிய வீட்டுல உன்கூட தூக்குறேன்‌. இப்பயாவது நான் சொல்றது புரியுதா”
     கைக்கால்கள் எல்லாம் பிட்ஸ் வந்த காக்கா போல் உதற பதறிப்போய் கேட்டு வைத்தான் ஷங்கர். அப்போதுதான் மாதவனுக்கும் நினைவு வந்தது. முதல்நாள் இரவு இவர்கள் இருவரையும் அந்த பொம்மை கடத்தி வந்ததில் பயந்துபோன ஷங்கர் இன்றும் தூங்க வரேன் என்ற மாதவனிடம்
     “இனி உன் சாகவாசமே வேண்டாம்டா” என நேற்றைய இரவே நடுரோட்டில் வைத்து பெரிய கும்பிடாய் போட்டு கழட்டிவிட்டு போய் அவன் வீட்டில் படுத்து விட்டான்‌. ஆனால் விடிந்து பார்த்தால் மாதவனோடு பெரிய வீட்டில் இருந்தால் அவனும் பயப்படாமல் என்ன செய்வான்‌.
     நேற்று இரவு அரவிந்த் அண்ட் கோ போட்ட பிளானில் வெறியாகி நாக்அவுட் ஆன மரபொம்மை தன்னைதானே செல்ஃப் மர்டர் செய்து கொள்ள நினைக்க, கடைசியில் என்ன நினைத்ததோ காற்றிலே பல கணக்குகளை அழித்து அழித்து போட்டு பார்த்துவிட்டு ‘இது ஒர்க்அவுட் ஆகும்’ என அது ஒரு பிளானை முடிவில் போட்டது.
     அதனால் அதன் வேலை எல்லாவற்றையும் முடிக்க மாதவனோடு ஷங்கரையும் லிஸ்டில் இணைத்து “இவனுங்கள ஓவர் டைம் பாக்கவச்சாவது என் வேலைய முடிச்சு காட்டுறேன்டா. அரவிந்தா நீயா நானானு ஒரு கை பாத்துரலாம்டா” இப்படி சவால்விட்டு ஷங்கரை பொம்மை அள்ளி வந்ததை பாவம் இருவரும் அறியவில்லை.
     காலையிலே பொம்மை இப்படி ஒரு வேலை பார்த்ததில் வெலவெலத்துப் போய் ஹாலில் அமர்ந்திருந்தனர் இருவரும். அந்த நேரம் பார்த்து மொத்த குடும்பமும் அங்கேயே இருக்க திடீரென எப்போதும்போல் டமார் என்றொரு சத்தம் கேட்டது. எல்லாம் நம் மரபொம்மையின் வேலைதான். பொழுதுபோகாமல் கபோர்டுக்குள் உருண்டு கொண்டிருந்தது.
     அந்த சத்தம் கேட்டு” அது என்ன சத்தம் அலமேலு?” என்றார் கார்மேகம்.
     “தெரியலையேங்க. வெளிய எதாவது மட்ட எதுவும் உலுந்திருக்கும்” அலமேலு இவ்வாறு பதில் சொனன்வுடன் “என்ன சத்தம் அத்தை மாமா எனக்கு ஒன்னுமே கேக்கலையே” என நம் சித்து சொல்ல வீரா கதிரும் ஆமோதித்தனர். அங்கிருந்த ஷங்கர் இதை கவனித்துபின் மாதவனை தனியே இழுத்து வந்தான்.
     “டேய் மாதவா உள்ள நடந்ததை கவனிச்சியா. நமக்கு உன் அப்பா அம்மாவுக்கு கேட்ட அந்த சத்தம் ஊருல இருந்து வந்த உன் மாமா குடும்பத்துல யாருக்கும் கேக்கலடா”
     ஒருவித ஆர்வத்துடன் பரபரப்பான குரலில் ஷங்கர் கூறி வைக்க “அதுக்கு இப்ப என்னடா பண்றது. நமக்கு கேட்ட மாதிரி அவங்களுக்கும் கேக்கனுமா” அந்த பொம்மை இவர்களை மட்டும் வைத்து செய்வதில் கடுப்பில் கத்தினான் மாதவன்.
     “ப்ச் அதில்லடா நான் சொல்றத முழுசா கேளு. நம்மல போட்டு வாட்டுற மாதிரி அவங்ககிட்ட அந்த பேயால அதோட வேலைய காட்டமுடிலையோன்னு எனக்கு தோணுதுடா” கண்களில் ஒருவித ஒளியுடன் ஷங்கர் கூறி நிறுத்த
     “அதுக்கு என்ன பண்ணலான்னு சொல்ற?” சுரத்தை இன்றி கேட்டான் அவன்.
      “நாம எங்க வீட்டுக்கு போனாலும் அந்த பேய் நம்மல இங்க தூக்கிட்டு வந்திருது. வேற எங்க போனாலும் அது நம்மல விடாதுன்னுதான் எனக்கு தோணுது‌. அதோட இந்த பெரிய வீட்ல அந்த பேயால உன் மாமா மகன எதுவும் பண்ண முடியல. அதனால அவன் கால்ல கைல உழுந்தாவது அவன் ரூம்ல தங்கிகலாம்டா. அதுதான் நமக்கு பாதுகாப்புனு எனக்கு தோணுது”
     வீரமாக பேச்சை ஆரம்பித்திருந்த ஷங்கர் விட்டா அழுதுருவேன் என்பதை போல் மூஞ்சை வைத்து சொல்லி முடித்தான். அவன் சொன்ன எல்லாவற்றையும் கேட்ட மாதவனுக்கு அவன் நண்பன் கூறியதில் இருந்த உண்மை புரிய அவனும் ஒப்புக் கொண்டான். அதைவிட்டா அவனுக்கு வேற வழியும் இல்லையே. எனவே ஸ்ரைட்டாக சித்துவின் காலில் விழும் முடிவை எடுத்தனர் நண்பர்கள் இருவரும்.
     அதே நேரம் சித்து வீரா கதிர் எக்டாரா பீசாக அரவிந்த் கூட்டணியான நம் கொல்லை கும்பல் ஊர் சுற்ற கிளம்புகிறோம் எனற் பேரில் புரளியை கிளப்பிவிட கிளம்பிவிட்டது.
     “மாமா புரளிய கிளப்பிவிடறேன்னு செல்லி கிளம்பி வந்துட்டோம். ஆனா இதை எப்படி செய்ய போறோம்”
     சித்துவின் கையை பிடித்து ஆட்டியபடி நடந்து வந்துக் கொண்டிருந்த கதிர் ஆர்வத்துடன் கேட்க, சித்து தன் பின்னால் திரும்பி பார்த்தான். வீராவும் அரவிந்தும் அவர்கள் தனியாக கதைப் பேசிக் கொண்டு வந்தனர்‌.
     “கதிர் நீ ஒருத்தன்தான்டா இந்த மாமாவ மதிக்குற. அங்க பாரு உங்க அக்காவையும் என் அப்பாவையும் ஜாலியா பேசிட்டு வராங்க. நாம எவ்ளோ பெரிய புராஜக்ட்ட முடிக்க வந்திருக்கோம்னு கொஞ்சகூட பொறுப்பே இல்லடா ரெண்டு பேருக்கும்”
     அவர்களுக்கும் கேட்க வேண்டும் என சத்தமாகவே சொல்லி வைத்தான் அரவிந்தின் மகன். ஆனால் வீராவும் அரவிந்தும் பேச்சை நிறுத்துவதைப் போல் தெரியவில்லை.
     “மாமா நீங்க சொன்னது அவங்களுக்கு கேக்கலன்னு நினைக்கிறேன். பாருங்க இன்னும் பேசிட்டே வராங்க. அங்கிள்‌ அக்கா நம்மல எவ்ளோ பெரிய வேலையா மாமா கூட்டிட்டு வந்திருக்காரு நீங்க என்னன்னா பேசிட்டே வரீங்க. நாங்க பேசுறது உங்க காதுல விழுதா இல்லையா” பின்னால் திரும்பி பார்த்து மாமனுக்காய் மச்சான் அவன் நியாயம் கேட்க
     “எல்லாம் கேக்குது கேக்குது‌. இது ஊருல இல்லாத அதிசய பிளானு. இதை செய்ய இதுக்கு நாலு பேரு. நானெல்லாம் எவ்ளோ பெரிய ஆளு என்ன வச்சு சில்லறை வேலை பார்க்க போறான் என் புள்ள. இவனும் இவன் பிளானும் சொதப்பாம இருந்தா சரி” ஆரம்பத்திலையே அபசகுனமாய் வாயை வைத்தார் அரவிந்த்.
     “யோவ் நைனா இன்னும் தொடங்கவே இல்ல அதுக்குள்ள வாய வச்சு தொலக்காத. என் பிளானுக்குலாம் ஒன்னும் கொறச்சல் இல்ல அத எப்படி எக்சிகுயூட் பண்றேன்னு பாருங்க” தன் பிளானை தானே பெருமையாய் பேசி சித்து முன்னே சென்றான்.
     நம் குரூப் ரொம்ப நேரமாக நடந்து சென்று கொண்டிருக்க வீராவுக்கு கடுப்பாகியது “சித்து கொஞ்ச நில்லுங்க. நாம என்ன பல மைல் பாதயாத்திரையா போறோம். நிக்காம போய்கிட்டே இருக்கீங்க. என்னால இதுக்கு மேல நடக்க முடியாது” கால் வலியெடுக்கவே ஒரு மரத்தடியில் அமர்ந்துவிட்டாள் வீரசுந்தரி.
     “ஆமா மாமா எனக்கும் கால் வலிக்குது” கதிரும் அமர்ந்துவிட
     “டேய் சித்து பையா இவ்ளோ தூரம் நடந்து போயி என்னா தான்டா பண்ண போற. சொல்லித் தொலையே எங்க போறோம்னாவது தெரிஞ்சுக்கிறோம்” அரவிந்தும் பொறுத்தது போதும் என கேட்டு விட்டார்.
     அரவிந்த் வாழ்வில் இவ்வளவு பொறுமையாக எல்லாம் இருந்ததே இல்லை. அப்படியும் மனிதர் அமைதியாக வந்தார் என்றால் எங்கு வாயை திறந்தால் சொத்தைதான்னு அவன் பிள்ளை வந்து நிற்பானே. அந்த அமைதியும் டாட்டா பாய்பாய் சொல்லி அதற்கு மேல் நிற்காது ஓடிவிட “எனக்கு இப்ப தெரிஞ்சே ஆகனும்” என்றுவிட்டார்.
     “நாம ஊருக்கு வந்த அன்னைக்கு ஒரு கெழவிட்ட அட்ரெஸ் கேட்டு வந்தோமே ஞாபகம் இருக்கா. அவங்கலதான் இப்ப பாக்க போறோம்” எல்லாரும் ரவுண்டு கட்டிய பிறகு சித்து கூற “எதுக்கு” என்றார் அவன் தந்தை.
     “நைனா சிட்டில ஒரு விஷயம் பரவனும்னா அதுக்கு ஒரு வீடியோ எடுத்து சோசியல் மீடியால அப்டேட் பண்ணனும்‌. இதுவே இந்த மாதிரி வில்லேஜ்ல ஒரு வதந்தி பரவனுனா அதுக்கு இந்த மாதிரி ஒரு பாட்டிய புடிச்சா போதும். நீ வேணா வந்து பாரு அந்த பாட்டியால இந்த நியூஸ் எப்புடி தீயா பரவுதுனு”
     தன் பிளானை கூறிய சித்து சாதனை படைத்த சாருகான் போல் போஸ் கொடுத்த நிற்க “ஐடியா தேற வாய்ப்பு இருக்கு. சரி போஸ் கொடுத்தது போதும் வாங்க போலாம்” அவனை அப்படியே ஆஃப் செய்து இழுத்து சென்றாள் அவன் காதலி.
     “பாட்டி பாட்டி! எங்க இருக்கீங்க. பாட்டி கொஞ்ச வெளிய வாங்களே!” அந்த கிழவியின் வீட்டில் பூட்டு தொங்குவதை கூட கவனிக்காது கத்திக் கொண்டிருந்தான் அந்த பகல் நேர பைத்தியகாரன்.
     “அங்கிள் உங்க புள்ள எதுக்கும் தேறமாட்டார்னு சொல்லுவீங்கல்ல அது நூறு பர்சண்ட் உண்மை அங்கிள். அங்க பாருங்க பூட்டி இருக்க வீட்டுக்கு முன்னாடி நின்னு கத்தறத” அவன் கத்துவதை பார்த்து தலையிலே அடித்துக் கொண்ட வீரா அரவிந்திடம் புலம்பினாள். அப்போது சரியாக அந்த வழியாக வந்தான் ஒருவன்.
     சித்து அங்கு கத்திக் கொண்டிருக்க தனியே நின்றிருந்த வீராவிடம் வந்து “நீங்க மெட்ராஸ்ல இருந்து வந்த அந்த பெரிய வீட்டு ஆளுவதானே. பெரிய கெழவி வீட்ல நீங்க என்ன செய்றீக” என்றான்.
      “ஆமாங்க நாங்க ஊர்ல இருந்து வந்தவங்கதான். அது நாங்க இந்த ஊருக்கு வந்த அன்னைக்கு பாட்டி தான் எங்களுக்கு அட்ரெஸ் சொன்னாங்க. அப்ப டைம் இல்ல அதான் அப்படியே போய்ட்டோம். இப்ப சும்மா இருந்தோம் அதான் பாட்டிய பாத்துட்டு போலாம்னு வந்தோம்” வீரா அவன் ஆர்வத்தை கவனித்தவாறே பதில் கூற சித்துவுன் வந்து இணைந்து கொண்டான்‌.
     “ஆனா பெருசு வீட்ல எல்லாரும் ஒரு விஷேசத்துகாவ வெளியூர் போயிருக்காவ. நீங்க ஒரு ரெண்டு நாள் சென்டு வந்தியன்னா அவக வந்துடுவாக”
     பாட்டி ஊரிலே இல்லை என்ற தகவலை அவன் கூறி நிற்க ‘எடுத்த எடுப்பிலேயே என் நைனா வாய வச்சுது. எதுவுமே வெளங்கமாட்டுதே. இந்த கெழவி எப்ப வந்து நான் எப்ப என் பிளான் ஆரம்பிக்க’ முகம் எல்லாம் சோர்ந்து போக நொந்துவிட்டான் சித்து.
     சித்துவின் தொங்கி போன முகத்தை பார்த்து ‘இவரு தேறமாட்டாரு. இதுக்கு மேல இவரை நம்புனா கதைக்கு ஆகாது நம்மலே இத டீல் பண்ண வேண்டியதுதான்’ என களத்தில் குதித்தாள் வீரா.
     “அண்ணா உங்க பேரு என்ன?” வீரா தன் என்கொயரியை ஆரம்பித்தாள்.
     “பாண்டித்துறை‌. ஊர்ல எல்லா பயலும் பாண்டின்னுவாக. ஏம்மா கேக்குற” என்றான் அவன் எதார்த்தமாக.
     “உங்களுக்கு எப்படி பாட்டி ஊருக்கு போனது தெரியும். நீங்க இங்க பக்கத்து வீடா?” அடுத்த பிட்டை போட
     “இல்ல தாயு என் வீடு இன்னும் ஐஞ்சு தெரு தள்ளி இருக்கு. அதுபோக இந்த கெழவி வீடுன்னு இல்ல இந்த ஊருக்குள்ள என்ன நடந்தாலும் எனக்கு தெரியாம போகது. எல்லாம் எனக்கு அத்துப்படி” தன் பெருமையை அள்ளி விட்டான் அந்த பாண்டி‌.
     “ஓஓஓ… சூப்பர் அண்ணா. அப்ப நீங்க இந்த ஊர்ல பெரிய ஆளுதான் போல” ஒரு பக்கெட் ஐஸ் தண்ணியை அவன் தலையில் ஊற்றிய வீரா கொஞ்ச நேரம் இதுஅதுவென பேசி அவனிடம் குளோஸ் ஆகிவிட்டாள்.
     “அப்புறம் அண்ணா இந்த ஊர் அவுட்டர்ல ஒரு மலை இருக்குதாம் அதுல ரொம்ப பெரிய புதையல் இருக்குதாமே பக்கத்து ஊருக்கு நேத்து கொஞ்ச திங்க்ஸ் வாங்க போனப்ப சிலர் பேசிக்கிட்டாங்க” மெதுவாக மெயின் பிட்டை போட்டாள் திருடர் சங்க அண்டர்வேல்ட் குயின்.
     “என்னாது புதையலா?” அதிர்ச்சியில் வாயை பிளந்தான் அவன்.
     “ஆமா அண்ணா அதுவும் அந்த புதையல எதோ ஒரு பெரிய சக்தி பாதுகாத்துட்டு வருதாம். அங்க யாராவது போனா அவங்கல கொண்ணு அந்த கெணத்துல போட்டுட்டு இருக்காமே. அந்த இடத்தோட உன்மையான சொந்தக்காரங்க வந்தா அந்த சக்தி புதையலை அவங்கல எடுக்க விடும் அப்படின்னு சொன்னாங்க. உண்மையா அண்ணா இவ்ளோ தெரிஞ்ச உங்களுக்கு இது தெரிஞ்சு இருக்குமே”
     இவள் பேச பேச ‘என்ன அப்படியும் இருக்குமோ. அதான் அந்த கெணத்துல நிறைய பொணம் கெடந்துதா?’ என எண்ணிய பாண்டி
     “ஆமா தாயு. இது உங்களுக்கு தெரிஞ்சு போச்சா. இது பல நாளா இங்க நடக்குது. எத்தனை பொணம் அந்த கெணத்துல இருந்து எடுத்துருக்காங்க தெரியுமா” தனக்கு தெரியவில்லை என்றால் தன்னோட கெத்து என்னாவது என இப்படி அடித்துவிட்ட பாண்டி ‘மொதல்ல போயி நாலு பேருக்கிட்ட சொல்லனும்’ என சிந்தித்து “சரி தாயு சோலி நிறைய கெடக்கு நான் அப்புடியே கெளம்பறேன்” என வதந்தியை கிளப்ப புரப்பட்டுவிட்டான்.
     இவ்வளவு நேரம் வீரா பேசியதை ஆவென பார்த்திருந்த சித்து “எப்படி வீரா செல்லம் கலக்குற” என ஆச்சரியப்பட்டு கேட்க
     “சித்து உங்க ஐடியா எல்லாம் ஓகேதான். அதேநேரம் வில்லேஜ்ல பாட்டினு இல்ல யார்ட்ட சொன்னாலும் அந்த நியூஸ் பரவிரும். இப்ப இவரு போய் எப்படி பரப்புரார்னு மட்டும் பாருங்க” வீரா தன் பாயிண்ட் ஆஃப் வீயூவை கொட்டிவிட்டு கதிரை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள்.
     “ஹையோ என் மருமகளுக்கு என்னா பிரைனு. என் மருமவட்ட இருந்து நீ கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு‌. இப்ப புரியுதா அவ இல்லாம உன்னால ஒன்னும் பண்ண முடியாதுன்னு” அரவிந்த் தன் பங்கிற்கு அவனை கலாய்த்து விட்டு செல்ல,
     ‘அப்ப உண்மையாவே நமக்கு மூளை வளர்ச்சி பத்தலையோ’ போகும் அவர்களை பார்த்து எண்ணும் அளவுக்கு சித்தார்த்தின் மூளை ஸ்டன் ஆகி விட்டது.
-ரகசியம் தொடரும்

Advertisement