Advertisement

     சிலுசிலுவென இயற்கை காற்று, கத்திரி வெயில் வெளியே மண்டையை பிளந்தாலும் அது தெரியாத அளவுக்கு குளிர்ச்சி அந்த இடத்தை சூழ்ந்திருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நல்ல உயரமான தென்னை மரங்கள், நடுநடுவே மா, கொய்யா மரங்கள் என எங்கு பார்த்தாலும் கண்ணுக்கு விருந்தாகவே இருந்தது அக்காட்சி. அதை எல்லாம் வாயை பேவென பிளந்து பார்த்து வைத்தான் நம் சித்து.
     ‘ஆத்தாடி ஆத்தா இவ்வளவும் நம்மளதா! இந்த நைனா வசதியா வாழ்ந்தேன் வசதியா வாழ்ந்தேன்னு பெரும பீத்தும் போதுகூட இவ்ளோ வசதின்னு கனவுலகூட நான் நெனச்சு பாக்கலையே பரமா. இந்த தென்னந்தோப்பே பல ஏக்கர் இருக்கும் போலையே. சித்து செம லாட்டரி அடிச்சிருக்குடா உனக்கு’ சிந்துவின் மைன்ட் வாய்ஸ் இது.
     இன்று மதியம் பொழுது போகாமல் அனைவரும் அமர்ந்திருக்க “மாமா வீட்டுலையே இருக்க போர் அடிக்குது. நாம இந்த ஊரை சுத்தி பாக்கலாமா” என கதிர் வந்து கேட்ட பின்னே வெளியே செல்ல முடிவெடுத்தான் சித்து.
     எனவே மாலை வேலை இந்த தோப்பை சுற்றி பார்க்கலாம் என கார்மேகம் கொடுத்த ஐடியாவின்படி சித்து அன்ட் கோ இங்கே கிளம்பி வந்திருக்க, அவ்வளவு பெரிய தோப்பை அவர்களும் எதிர்ப்பார்க்கவில்லை. இந்த ஊருக்கு வந்ததிலிருந்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக அதுவும் ஆனந்த அதிர்ச்சியாக இருக்க திக்குமுக்காடி போய் நின்றான் அரவிந்தின் பிள்ளை.
     “தம்பி இது பத்து ஏக்கர் தென்னந்தோப்புபா. அப்புறம் அந்தா தெரியுது பாருங்க சின்ன மலை ஒன்னு” தொலைதூரத்தில் தெரிந்த குன்று ஒன்றை காட்டி கார்மேகம் கேட்க பால் விளம்பரத்திற்கு வரும் மாடு போல் பல்லைகாட்டி ஆம் என தலையாட்டி வைத்தான் சித்து.
     “அந்த மலையையும் சேத்து ஒரு ஐம்பது ஏக்கர் வரும்ங்க. எல்லா அரவிந்து மச்சானுக்கு உங்க தாத்தாரு எழுது வச்சது. அது போவ பக்கத்து ஊருல தோப்பு வீடுன்னு ஒரு இருவது ஏக்கரு இருக்குப்பா”
     கார்மேகம் அடுக்கிக் கொண்டே செல்ல தலை சுற்றி போனான் பையன். அவன் கண்கள் இரண்டும் சந்திரமுகி ஜோதிகாவை போல் ‘அவ்வளவும் எனக்கா எனக்கா’ என கேட்காமல் கேட்க, அதை அருகில் நின்று பார்த்திருந்த அரவிந்துக்கு கடுப்பாக இருந்தது.
     “இங்க என் மருமவள பாரு எவ்ளோ கெத்தா நிக்கிறா. ஆனா நான் பெத்தத பாரு மண்டைய மண்டைய ஆட்டிக் கிட்டு மாடு மாறி நிக்கிறத. இவன என்னன்னு நான் பெத்தேனோ ச்சே. இவன் பண்றத பாத்து என் மாப்புள என்னைய கேவலமா நெனச்சாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல”
     சித்துவை கழுவி ஊத்திய அரவிந்த் அவர்தான் தன் பிள்ளையை அப்படி அருமை பெருமையாக வளர்த்தவர் என்பதை எப்போதும் போல் மறந்துவைத்தார்.
     “எம்மா வீரா இங்க கொஞ்ச வாடாம்மா” என்க “என்னா அங்கிள்” மெல்ல கேட்டவாறு அவர் அருகே வீரா செல்ல
     “எம்மா அந்த பைய பொடனிலையே நாலு சாத்து சாத்தி இழுத்துக் கிட்டு வாமா. என் மாப்புள்ள இவன் வெறிக்க வெறிக்க நிலத்தை பாக்கறத வச்சு சொத்த ஆட்டையப்போட வந்த களவானி பயன்னு நெனச்சிக்க போறாரு”
     கோவமாக அரவிந்த் கூறினாலும் அதை கேட்டு சிரித்த வீரா “இருங்க அங்கிள் ந்தோ உடனே போய் இழுத்துட்டு வந்திடுறேன்” என கார்மேகம் அசந்த நேரம் இவனை தனியே இழுத்து வந்திருந்தாள்.
     “ஐயோ வீராம்மா ஏன்டி என்ன இழுத்துட்டு வந்த. நான்தான் மாமாட்ட பேசிட்டு இருந்தேன்ல. அவரு என்னை பத்தி என்ன நெனப்பாரு” முகத்தை தூக்கி வைத்து கொண்டு சித்து கேட்டான்.
     “அவரு நெனக்கிறது இருக்கட்டும், உங்க மூஞ்சில ஏன் சித்து பத்தாயிரம் வாட்ஸ் பல்ப்ப சுட்சு போட்டு விட்டாப்பல பிராகசமா எரிஞ்சது. என்னமோ விட்டா இப்பவே சொத்த புடுங்கிட்டு ஓடுற மாதிரியே நின்னுட்டு இருந்தீங்க. அதை பார்த்தா மட்டும் அவரு உங்கள ரொம்ப பெருமையா நெனப்பாரு பாருங்க”
     “அவ்ளோ பங்கமாவா தெரிஞ்சிது” வீராவிடம் எதிர் கேள்வி சித்து கேட்டு வைக்க “ஆமா ரொம்பவே பகிரங்கமா தெரிஞ்சுது”
     வீரா சொன்னதும்தான் சொத்தை கண்டு அரைபோதையில் இருந்த அந்த பரங்கி மண்டையனின் புத்தியில் நச்சென உரைத்தது. அதன்பிறகு “கெத்த விடக்கூடாதுடா சித்து! கெத்து கெத்து” என தனக்குள் கூறிக்கொண்டு சுற்றி முடித்து வீடு வந்து சேர்ந்தனர் அரவிந்த் கோஷ்டி.
     மாலை மங்கி கதிரவன் அவன் டாட்டா பாய்பாய் சொல்லி சென்றுவிட இரவு நேரத்தில் அந்த வீட்டிலிருந்த அனைவரும் உறங்க சென்றனர். இங்கோ மூளையை முட்டுச்சந்தில் கலட்டி வைத்து வந்திருந்த நமது கும்பல் அவர்கள் சொத்தை அவர்களே எப்படி கொல்லை அடிப்பது என பிளான் போட கூட்டத்தை கூட்டி விட்டனர்.
     அறையில் உள்ள லைட்டை எல்லாம் அணைத்துவிட்டு, வட்டமாய் அமர்ந்து நடுவே ஒரு மெழுகுவர்த்தியை பற்றவைத்து பேயை வரவைப்பது எப்படி என அரைகுறையாய் நூறு நாள் கிளாசை அட்டென்ட் செய்து வந்ததைப் போல் ஒரு செட்டப்பை செய்திருந்தனர்.
     “சித்து எதுக்கு எல்லாரும் இப்ப ஒன்னா உக்கிந்திருக்கோம்”
     “மாமா எனக்கு தூக்கம் வருது எதுவா இருந்தாலும் சீக்கிரம் சொல்லுங்க”
     “டேய் மவனே இப்பவே சொல்லிபுடுறேன், இந்த வீடு நெலம் தோப்பு எல்லாத்தையும் வித்துக்க அப்புடியும் இல்லையா இந்த வீட்டுல இருக்க பித்தளை அண்டு குண்டா எதவேனா திருடி வித்துக்க. ஆனா ஊர்ல நான் உழைச்சு ரத்தத்தை வேர்வையா சிந்தி சம்பாரிச்சு என் காசுல வாங்குன பிராப்பர்டிய மட்டும் தொடாதடா மகனே”
     சித்தார்த் பேச ஆரம்பிக்கும் முன்னரே அனைவரும் அவர்களின் பங்குக்கு ஒவ்வொன்று கூற, அரவிந்த் விவரமாய் தனக்கு தேவையானதை அவன் காதில் போட்டு வைத்தார். இதில் ஹஸ்கி வாய்ஸ் வேறு.
     “சப்பா.. கொஞ்ச நேரம் வாய மூடுங்க. கதிரு ஒரு ஃபைவ் மினிட்ஸ் நீ தூங்க போயிறலாம்”
     அனைவரின் வாயையும் அடைத்த சித்து “நான் பிஸ்னஸ் ஆரம்பிக்க உன் நைனாவோட எந்த எடத்தை விக்கலாம்னு டிசைட் பண்ணிட்டேன்”
     அந்த மெழுகுவர்த்தி வெளிச்சத்திலும் அவன் இரண்டு கண்களும் பிரகாசமாய் மின்னியதை கேவலமாய் பார்த்தாலும், சித்து விற்க முடிவு செய்திருப்பது எந்த இடம் என தெரிந்துக் கொள்ள மற்றவர்களும் ஆர்வமாகி தாங்களும் அதே குட்டையில் விழுந்த மட்டை என அப்பட்டமாய் நிரூபித்தனர்.
     “இன்னைக்கு கார்மேகம் மாமாட்ட எல்லா பிராப்பர்ட்டி டீடெயில்ஸும் வாங்கிட்டேன். வாங்குனதுல எந்த இடம் இருக்கிறதுலையே ஒன்னுத்துக்கும் உதவாத வேஸ்ட் லாண்டுனு நோட் பண்ணிட்டே வந்தனா
     அப்படி நோட் பண்ணுனதுல என் கிரைன் அந்த வேஸ்ட் லாண்ட் எதுன்னு டிஸ்கவர் பண்ணிருச்சு” தன் தோளில் தானே பெருமையாய் தட்டிக் கொண்ட சித்து
     “கேட்டா நீங்களே என்ன எப்புடி பாராட்ட போறீங்க பாருங்க” என்றான் பீடிகையாய்.
     “டேய் வெண்ண வெட்டி மொதல்ல எடத்த சொல்லுடா. அது தேறுமா தேறாதான்னு நான் சொல்றேன்” இடையில் அவனின் பெருமையை கத்திரிக்கோல் இல்லாமலே அவன் தந்தை வெட்டிவிட வீராவும் கதிரும் வேறு அவருக்கு ஆமாம்சாமி போட்டனர்.
     “ப்ச் யோவ் தகப்பா என்ன முழுசா சொல்லவிடுயா. விடாம குறுக்க குறுக்க பேசுன கொறவலைய கடிச்சு துப்பிருவேன் பாத்துக்க” கத்திவிட்டான் சித்து. பின்னே என்ன பேசினாலும் என்டு கார்டு போட்டால் அவனும்தான் என்ன செய்வான்‌.
     “சரி கேப் விடாதா கண்டினியூ கண்டினியூடா”
     “நீங்க இப்புடி என்னை பேசவிடாம பண்ணிட்டு இருந்தா நான் எப்படி சொல்ல வந்தத சொல்ல முடியும் மிஸ்டர். அழகர்சாமி” சித்து சரியான இடத்தில் அரவிந்தை அடிக்க
     “டேய் டேய் யார பாத்துடா அழகர்சாமின்ன”
     “ஆன் செவுத்த பாத்து. கேக்குற கேள்விய பாரு கேனை மாதிரி. வேற யார சொல்லுவேன். உன்னதான் தகப்பா அழகர்சாமி அழகர்சாமி. உன் பேரு அதானே”
     வழக்கம் போல் பேச ஆரம்பித்த டாப்பிக்கை விட்டு சண்டையையை ஒரு டாப்பிக்காக மாற்றி தந்தை மகன் இருவரும் இறக்கிவிட பார்த்திருந்த வீராவுக்கும் கதிருக்கும் ‘என்னடா இது’ என்றாக
     “கதிரு இதுசரிப்பட்டு வராது. இவங்க ஆரம்பிச்சிட்டாங்க நாம இப்படியே பிச்சிட்டு ஓடிறலாம். இல்ல நம்ம காது ரெண்டும் காவால முக்குன காக்கா மாதிரி இழுத்துக்கும். வாடா கதிரு” டைம் பார்த்து பிச்சிக்கோ என தப்பிக்க பார்த்த அக்கா தம்பி இருவரையும் கண நேரத்தில் கண்டுக்கொண்ட தந்தை மகன் கூட்டணி கப்பென பிடித்துவிட்டது‌.
     “நான் இன்னும் முடிக்கல அதுக்குள்ள எங்க போறீங்க ரெண்டு பேரும்” பிட்ஸ் வந்த லேப்ரேடரை போல் மூச்சு வாங்கியபடி மகன் கேட்டு வைக்க “அதானே!” என தந்தையும் சிங்சாங் அடித்து ஒத்து ஊதினான்.
     “அங்கிள் சித்து நீங்க ரெண்டு பேரும் சண்டைய முடிச்சு ஒரு முடிவுக்கு வரதெல்லாம் நடக்கற காரியமா. எங்கள‌ பாத்தா உங்களுக்கு பாவமா இல்லையா ம்ம். எங்களை விட்டா இப்புடியே தெரிச்சு ஓடிருவோம்”
     நொந்து போய் வீரா கூறியதிற்கு “அச்சோ என் செல்லம் உன்னை ரொம்ப டார்ச்சர் பண்ணீட்டனா. சாரி செல்லம் ஒரே ஒரு ஃபைவ் மினிட்ஸ் தா எல்லாத்தையும் சொல்லி முடிச்சிடுறேன் பிராமிஸ் காட் பிராமிஸ்” சித்து அவன் தலையில் அடித்து சத்தியம் செய்து உத்திரவாதம் தந்தப்பின்னரே மீண்டும் அமர்ந்தாள் வீரா.
     “ஓகே ஆரம்பிக்கலாமா” ஒரு நோட்டு பேனாவை எடுத்து எதோ ராக்கெட் விடும் விஞ்ஞானியின் ரேஞ்சுக்கு பில்டப்பை கொடுத்து ஆரம்பித்தான்.
     “பர்ஸ்ட் இந்த வீடு உசுரே போனாலும் இந்த வீட்ட விக்கமாட்டேன். ஏனா சென்னைக்கு மொத்தமா டாட்டா சொல்லிட்டு இனி நாம வாழப்போறதே இந்த வீட்டுலதான்” முதல் குண்டை போட்டு மங்களகரமாய்‌ ஆரம்பித்தான் பையன்.
     “செகன்டு அந்த தென்னந்தோப்பு. அதுல இருக்க தேங்காய வித்தாலே நாம மாசாமாசம் தங்க திங்கனு எதுக்கும் பிரச்சனை வராது. சோ அதுவும் நோ.
     அடுத்து மிச்சமீதி இருக்கிறது எல்லாம் நான் ஆராஞ்சு பார்த்ததுல எல்லாம் அக்ரிகல்ச்சரல் லேண்டு. லீஸ்க்கு விட்டோ இல்ல ஆள் வச்சு வேலை செஞ்சோ கூட நான் பொழச்சுக்குவேன்” என சித்து நிறுத்த
     “டேய் முண்டம் இந்த வெங்காயத்துக்காடா இவ்ளோ பில்டப்பு. மொத்தத்துல தண்டமா வாழப்போறததான் இவ்ளோ டீடெயிலா சொல்ரியா” நக்கல் செய்து வைத்தார் அவன் தந்தை.
     “யோவ் தகப்பா உன் திருவாயை கொஞ்ச நேரம் மூடிட்டி நான் சொல்ல வரத முழுசா கேளுயா. நான் இப்ப விக்கிறதுக்கு ஐடியா பண்ணி வச்சுருக்கிற இடம் நம்ம ஊர் அவுட்டர்ல இருக்கே அந்த பாலுங்கெணறு அப்புறம் அதுல இருந்து கொஞ்ச தூரத்துல இருக்கே அந்த சின்ன மலை அந்த வேஸ்ட் லேண்டதான்”
     சித்து சொல்லி முடித்த நேரம் இவ்வளவு நேரமும் இவர்கள் குழுவில் சைலண்ட் பார்ட்னராக இருந்த மரபொம்பையின் ஹார்ட் நிஜமாகவே விரிசல் விட்டுவிட்டது.
     “அடப்பாலபோனவனே அதை எதுக்குடா விக்கிறதுக்கு முடிவு பண்ணுன அதுக்கு மத்த எல்லா சொத்தையும் வித்தா கூட என் மனசு ஆறிருக்குமே” என புலம்போ புலம்பென புலம்ப அதன் புலம்பலை கேட்கத்தான் நாதியில்லாது போனது.
     “த்தூ இந்த வெளங்காத பிளான போட்டுட்டு என்னா பில்லடப்பு. ஏன்டா வெளக்கெண்ண அந்த இத்துப்போன எடத்தை எவன்டா வாங்குவான். அதுப்போக அந்த பாலுங்கெனத்துல அடிக்கடி பொணம் வேற கிடக்குதா ஊருல நான் ரவுண்ட்ஸ் வரப்ப ஆளுங்க பேசிக்கிட்டாங்கடா. இந்த வேலைதான் பாக்கபோறன்னு சொல்லிருந்தீனா நான் என் ஜோலிய பாத்துட்டு இந்நேரம் போயிருப்பேன். வந்துட்டான் உருப்புடாத செக்கு வந்தது ஜக்குன்னு”
     சித்துவின் உருப்படாத ஐடியாவை கேட்டு காறி துப்பி கழுவி ஊத்தி கிளம்ப பார்த்த அரவிந்தை இழைத்துப் பிடித்த சித்து
     “ஐயோ நைனா எத்தனை தடவை சொல்றது நான் சொல்றத முழுசா கேளுன்னு. நீ சொல்றது எல்லாம் எனக்கும் தெரியும் நானும் கேள்விப்பட்டேன். அதான் எல்லாத்துக்கும் சேத்து செமையா ஒரு பிளான் போட்டுட்டேன்” என மீண்டும் ஆரம்பித்தான்.
     “நான் விசாரச்சதுல கொஞ்ச ஆளுங்க என்ன சொன்னாங்கனா அந்த மலை இருக்குல்ல மலை அதுல பெரிய புதையல் பொதஞ்சு இருக்காம். அந்த புதையல தேடி எடுக்க நிறைய பேர் டிரை பண்ண, போறவங்கல எல்லாரையும் அங்க காவலுக்கு இருக்க ஒரு பூதம் அடிச்சு அந்த கேணில போடுதாம். அது உனக்கு தெரியுமா?”
     சித்து கதை கூறுவதைப் போல் சீரியசாக சொல்ல “அப்புடியா?” வாயை பிளந்து அரவிந்த் கேட்டு வைக்க, அவன் சொன்னதை அரவிந்த் நம்பியதில் வெற்றி சிரிப்பு சிரித்தான் சித்து.
     அடுத்த நொடியே அவன் சிரிப்பை ஆஃப் செய்வது போல் “அப்படின்னு ஊர்ல புரளிய கெளப்பிவிட்டு அந்த இடத்தை விக்கப்போறீங்க அதானே சித்து? இதுக்கு இவ்ளோ நேரம் இந்த இழுவை. வா கதிரு நாம தூங்க போலாம்” என வீரா சித்துவின் வாயை அடைத்து கதிரோடு அவள் அறைக்கு ஓடிவிட்டாள்.
     ‘எப்புட்ரா ஒரு செகண்ட்ல கண்டுபிடிச்சா’ என வீராவின் அறிவை கண்டு சித்து அரண்டு போய் பார்க்க
     ‘என் மருமவளுக்கு இருக்க அறிவுக்கு அவ எங்கையோ இருக்க வேண்டிய ஆளு, இவன் கூட குப்பை கொட்டனும்னு அவ தலைல எழுதிருக்கு என்ன பண்றது’ என வீராவின் அறிவை புகழ்ந்து நின்றார் அரவிந்த்.
     “என்னாது புரளிய கிளப்பிவிட போறாங்களா? என் புராப்பர்டியா இருக்க ஒரே கிணறு அது இல்லாம நான் என்னடா பண்ணுவேன்” என மூலையில் மூக்கு சிந்திக் கொண்டிருந்தது பொம்மை.
-ரகசியம் தொடரும்

Advertisement