Advertisement

     காரிருள் சூழ்ந்த அமாவாசை இரவு நேரம்‌. நிலா இருந்தாலே பலர் இரவில் அஞ்சி நடுங்குவர். அப்படி இருக்க அந்த அமாவாசை இருட்டு மனிதர்களை பயம் கொள்ள செய்வதில் ஆச்சரியம் இல்லை. ஒரு போன் கால் வர வீட்டினுள் சிக்னல் கிடைக்காத காரணத்தால் அதை தூக்கிக் கொண்டு பேசுவதற்கு அந்த இருட்டில் வந்து நின்றார் கார்மேகம்.
     போன் பேசி முடிக்கும் வரை ஒன்றும் தெரியவில்லை. பேசி முடித்த பின்னரே அவர் சுற்றுப்புறத்தை கவனித்தார்‌. சலக் சலக் என்றொரு சத்தம் கேட்க அவர் மனதில் பக்பக்கென்றது. அதோடு ஒரு நிழல் உருவம் தூரத்தில் இருந்த மரத்தை ஒட்டி தெரிய திக்கென்றது. நேரம் செல்ல செல்ல அந்த சத்தம் அவர் அருகில் வருவதைப் போல் இருக்க தைரியமான மனுஷன் அவருக்கே மனதிற்குள் அல்லு விட்டது.
     காலையில் சாப்பிட்டதுக்கு நேர் மாறாக இரவு உணவுக்கு அலமேலு சப்பாத்தி இடியாப்பம் பன்னீர் பட்டர் மசாலா என வெரைட்டியாக சமைத்து வைத்ததை ஒரு பிடி பிடித்திருந்த அரவிந்த் அந்த வழியில்தான் வாக்கிங் வந்திருந்தார்.
     “ஹப்பா சாப்பாடுனா இது சாப்பாடு. என்னா ருசி என்னா ருசி! என் தங்கச்சி கைப்பக்குவமே தனிதான். இந்த பய ஆக்குற சோத்த தின்னு செத்து போயிருந்த என் நாக்கு இப்பதான் மறுபடியும் உயிர் பொழைக்குது”
     அர்விந்த் இப்படி கூறியதை மட்டும் அவர் மகன் சித்தார்த் கேட்டிருக்க வேண்டும், அவரை பழி தீர்க்கிறேன் என அடுத்த நாளும் உப்புமாவையே கிண்டி வைத்திருப்பான். அவர் புலம்பலை அவன் கேட்காததால் தப்பினர் அந்த வீட்டில் இருப்பவர்கள்.
     இப்படி தன் போக்கில் சத்தமாய் தனக்கு தானே பேசியபடி அரவிந்த் வர அப்போதுதான் அங்கிருந்த கார்மேகத்தை கண்டு “அடடா மாப்ளயும் இங்கதான் இருக்காப்பலையா. இந்தா வரேன்” என்றவாறு அருகே சென்றார்.
     அவர் எப்போதும் போல் வேகமாக நடந்து வர சலக்கு சலக்கு என சருகுகள் மிதிப்படும் சத்தத்தை கேட்டு திக்கென்று ஆக மெல்ல திரும்பி பார்த்தார் கார்மேகம். ஆனால் அப்படி பார்த்தாலும் அங்கு வந்த அரவிந்துதான் அவர் கண்ணுக்கு தெரிந்துவிடுவாரா. என்னதான் மனம் பதறினாலும் வெளியே கெத்து மாறாமல் ‘இனி வெளிய நிக்காம, அப்படியே உள்ள போயிடு கார்மேகம்’ என நினைத்தவர் வீட்டிற்குள் ஓடிவிட்டார்‌.
     “என்ன மச்சான் அதுக்குள்ள உள்ள போயிட்டாரு? அட கிருக்கு பயபுள்ள இன்னு கொஞ்ச நேரம் இருந்திருந்தா பேசிட்டு இருந்திருக்கலாம்”
     உள்ளே அறக்கப் பறக்க கார்மேகம் ஓடியதே தன்னால்தான் மற்றும் அரவிந்து பேசினால் அது கேட்டு அவர் பதில் தரமுடியாது என்ற பேஸிக் சென்ஸ் கூட இல்லாது நின்றார் நம் பேய் அங்கிள் அரவிந்த்.
     “மச்சானு இல்ல. ஊருல நைட் எல்லா பையலும் தூங்கிருவானுங்க நமக்கு ஒரு எண்டர்டெயின்மெண்ட் வேணுமே, என்னா பண்ணுறது” பலமாக யோசித்த அரவிந்திற்கு கன நேரத்தில் ஒரு ஐடியா தோன்றிட
     “அட ஆமால்ல நம்ம ஏன் இங்க இருக்கனு, நம்ம ஊரு தான்டுனா பக்கத்து ஊருல நைட்டு கடை இருக்கும்ல. அங்க போயி வேணுங்கறத தின்னுட்டு, நைட் ஷோ பாத்துட்டு அப்படியே ஊரை சுத்திட்டு வருவோம். இப்ப என்ன கெட்டு போச்சு” என ஜெட் வேகத்தில் பறந்திட்டார் அந்த அரைகிருக்கு ஆலம்பனா.
     ‘அடங் கொப்புரானே! இந்த வீடு சாதாரண வீடு இல்லை போலையே. இங்க நம்ம புத்திக்கு அம்புடாத என்னவோ நடக்குது. அலமேலு சொன்ன காரணத்துக்காக இங்க வந்து தங்குனது தப்பா தெரியுதே’
     இங்கு வேகமாக அறைக்கு ஓடிய கார்மேகமோ நன்றாக பயந்து விட்டார் மனிதர். அதே பயத்தோடு தான் தூங்கவும் சென்றார். அவர் முகத்தை பார்த்தே எதோ சரியில்லை என புரிந்து கொண்ட அலமேலு, என்னவானது என்று கேட்டதற்கு எதுவுமில்லை என கூறி ஒருவாறு சமாளித்து படுத்துவிட்டார். ஆனால் மனம் ஒரு புறம் பயத்தில் துடித்துக் கொண்டிருக்க, தூக்கமும் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்து பார்க்க வெகு நேரம் கழித்தே தூக்கமும் வந்தது.
     அவர் நன்றாக தூங்கிக் கொண்டிருந்த நேரம் ‘டமார்’ என்றொரு சத்தம் ஹை டெசிபலில் கேட்க, தூக்கம் பறந்து போனது. அப்படியே அலறியடித்து எழுந்தார் மனிதர். மணியை பார்க்க பணிரெண்டு என்றது. ‘என்ன மணி பணெண்டா ஆவுது. சகுனமே சரியில்லையேடா கார்மேகோ’
     அவர் பயத்தில் எச்சிலை கூட்டி விழுங்கும் நேரம் வீட்டின் உள்ளே யாரோ அலறும் சத்தம் கேட்க கார்மேகத்தின் இதயம் ஒரு நொடி நின்றேவிட்டது. அதோடு இப்போது எதோ பேச்சு சத்தம் வேறு கேட்க, மெல்ல திரும்பி பக்கத்தில் அவர் மனைவி அலமேலுவை பார்த்தார். ‘கும்பகர்ணன் தங்கச்சிடா நானு’ என்பது போல் ஆழ்நித்திரையில் ஆழ்ந்திருந்தார் அரவிந்தின் அக்மார்க் தங்கச்சி.
     ‘இவ தூங்குனா இடியே உழுந்தாலும் எந்திரிக்க மாட்டாளே. இவள இப்ப எழுப்புனா ஏந்திரிக்கவும் மாட்டா, இப்ப என்னடா பண்ணுறது கார்மேகோ. வெளிய வேற சத்தம் போவபோவ அதிகமா கேக்குது. இப்ப வெளிய போயி பாக்குலாமா வேணாமா’
     மனதிற்குள் பட்டிமன்றம் நடத்தி பார்த்தவர் ஒரு ரூபாய் காயின் ஒன்றை எடுத்தார். ‘பூவா தலையா போட்டு பாக்கலாம். பூ உழுந்தா கழுதை என்ன சங்கதின்னு போய் ஒரு கை பாத்துட வேண்டியதுதான். இதே தலை உழுவட்டும் எவன் செத்தா எனக்கென்னன்னு அப்புடியே போர்வைய இழுத்து போர்த்தி படுத்துபுடலாம்’
     கண்ணை மூடி ராத்திரி தூங்கும் கடவுளை எல்லாம் எழுப்பி ‘எப்பா ஆண்டவா நல்ல முடிவா குடுப்பா’ என காயினை அவர் சுண்டிவிட, அந்த காயினோ குதித்தால் தலைகீழாகத்தான் குதிப்பேன் என பூவாக விழுந்தது.
     ‘என்னங்கடா இது ஒரு விஷயமு நாம நெனச்சாப்புல நடக்காது போலவே. சரி போயி என்ன நடக்குதுன்னு பாத்துபுட வேண்டிதான்’
     மனதில் உள்ள மிச்ச சொச்சம் இருந்த தைரியத்தை எல்லாம் திரட்டி கொண்டு, கட்டிலில் இருந்து எழுந்து வந்து மெல்ல கதவை திறந்து தலையை மட்டும் பாம்பு போல் வெளியே நீட்டி பார்த்தார். ஆனால் சத்தம் ஹாலில் கேட்பது போல் இருக்க பிடிமானத்துக்கு செவுத்தை பிடித்து முன்னே சென்றார் கார்மேகம்.
     ஹாலிற்கு சென்று பார்த்தால்தான் தெரிந்தது, அங்கு சத்தம் எழுப்பி அவரை சிறிது நேரத்தில் கலவரப்படுத்தியது அவர் சீமந்தபுத்திரன் மாதவன் என. அந்த நொடி வந்தே கோபம் கார்மேகத்திற்கு
     “அட கொப்பமவனே! மனுஷன மரண பீதி ஆக்குனது நீதானா, இருடா வரேன். இன்னைக்கு இருக்குடா ஒனக்கு” என வீராவேசத்துடன் சென்று படார் என விட்டார் ஒரு அறை. மாதவனின் காதில் கொய் என்று ஒரு சத்தம் விடாமல் கேட்டது.
     இவ்வளவு நேரம் பேய் பயத்தில் இருந்த மாதவன் ஷங்கரை கார்மேகத்தின் அறைதான் நிஜ உலகிற்கு கொண்டுவந்தது. அறை விழுந்த கன்னத்தை பிடித்தபடி “என்ன ப்பா? எதுக்கு என்ன அடிச்ச?” பாவமாய் கேட்டு நின்றான் மகன்.
     “என்ன நொன்னாப்பா. ஏன்டா முண்டங்களா விளையாட உங்களுக்கு வேற நேரங்காலமில்ல. இப்புடியாடா நடுவீட்டுல ராக்கோழி கணக்கா குய்யோ முய்யோனு கத்திட்டு இருப்பீங்க. மனுஷன நிம்மதியா தூங்க உட கூடாதுன்னே இப்புடிலாம் பண்றீகளா”
     கார்மேகத்தின் கண்கள் ரெண்டும் சிவந்து பெரிதாக தெரிய அதோடு அவர் கீழ் மூச்சு மேல் மூச்சு வாங்கியபடி மாதவன் ஷங்கர் இருவரையும் திட்டிக் கொண்டே செல்ல, கார்மேகத்தை எதிர்த்து பேச முடியாது தங்கள் விதியை நொந்த
படி நின்றனர் இருவரும்.
     “இங்க பாருங்கடா இதுதான் மொதலும் கடைசியும் இதுமாதிரி இன்னொருக்கா எதாவது கிருக்குதனம் பண்ணிக்கிட்டு இருந்தீங்க வீட்ட விட்டு தொறத்திப்புடுவேன். போய் படுங்கடா”
     மனதில் இருந்த பயம் எல்லாம் திட்டுகளாக வெளிவந்த பின்னரே சாந்தமாகி தூங்க சென்றார் கார்மேகம். இதில் மாதவன் ஷங்கர் இருவரின் இமேஜ் தான் டோட்டல் டேமேஜ்.
     ‘வீட்டை விட்டு தொறத்துவியா, அதப் பண்ணுயா மொதல்ல. நிம்மதியா தூங்க கூட முடில’ என மனதிற்குள் புலம்பினாலும், அதற்குமேல் ஒன்றும் செய்யமுடியாது மனதில் மரண பீதியை வைத்துக் கொண்டு தூங்க சென்றனர் நண்பர்கள் இருவரும்.
     இரவு பொழுது இப்படி அக்கப்போராய் கழிய, “எவன் உசுரோட இருந்த என்ன செத்த எனக்கு என்ன. என் டுயூட்டிய பாக்க இந்த வந்துட்டேன்” டமால் என கரெக்ட் டைம்க்கு வந்து குதித்தார் மிஸ்டர்.சன் காட்.
     முதல்நாள் போல் இல்லாது அன்றைய காலை நேரம் எந்த அமர்க்களமும் இன்றி அமைதியாக செல்ல, கார்மேகம் தான் அவர் மகனை முறைத்து தள்ளிவிட்டார். பின்னே இருக்காதா அவரையே கொஞ்ச நேரம் மரண பீதியில் கதறவிட்டு விட்டானே பாவி சண்டாளன். உணவு நேரம் முடிந்து கார்மேகம் வெளியே சென்றுவிட மற்ற அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
     அப்போதுதான் சித்துவிற்கு நீண்ட நாள், அதாவது லாஸ்ட் டூ டேஸாக இருந்த சந்தேகம் கப்பென கபாலத்தில் உதயமாக, அப்படியே அதை அவன் அத்தையிடம் கேட்டான்.
     “அத்தை எனக்கு ஒரு சந்தேகம். கேட்டா பதில் சொல்லனும்” என ஆரம்பிக்க அரவிந்த் அலர்ட் மோடுக்கு தாவினார் தன் அருமை மகன் என்ன கேட்க போகிறான் என கேட்க
     “கேளுடா தங்கம்” அலமேலு கிரீன் சிக்னல் தர தன் கேள்வியை முன் வைத்தான் சித்து‌.
     “அதாவது அத்த உங்க பேரு அவ்ளோ அழகா அலமேலுவள்ளினு வச்ச தாத்தா, என் அப்பாக்கு மட்டும் எப்படி அரவிந்துன்னு ஒரு பேர வச்சாரு” சித்து பாயிண்டாய் கேட்க அரவிந்துக்கு பக்கென்றானது.
     ‘இவன் எதுக்கு இப்ப இத கேக்குறான்’ என அவர் ஸ்டன்னாகி நிற்க “ஐயோ உனக்கு இது தெரியாதா தங்கம். என் அண்ணன் பொறந்தப்ப வச்ச உண்மையான பேரு அரவிந்த் இல்ல” அரவிந்த் அலர்ட் ஆகி அவர் தங்கையை ஆஃப் பண்ண பார்க்க, முடியவில்லையே.
     அரவிந்தின் முகம் போன போக்கை வைத்தே இதில் ஏதோ இருக்கிறது என புரிந்து போனது சித்துவுக்கு. “சொல்லுங்க த்தை சொல்லுங்க” அலமேலுவை இன்னும் தூண்டினான் சித்து.
     “வேணாம் தங்கச்சிமா! வேணாம்” ஸ்லோ மோஷனில் சித்து உக்காந்திருந்த சோபாவின் அருகில் நின்றிருந்த அரவிந்த் அவர் தங்கையின் புறம் ஓடிவர,
     ‘ஆஹா நல்ல எண்டர்டெயின்மெண்ட்’ என வீராவும் கதிரும் சித்துவோடு ஜாலியாக பார்த்திருக்க, அரவிந்து ஸ்லோ மோஷன் முடியும் முன் “உன் அப்பாவோட உண்மையான போரு அழகர்சாமி தங்கம்” பட்டென பானையை அரவிந்தின் தலையில் உடைத்தார் அவர் அருமை அன்பு தங்கச்சி.
     “என்ன அழகர்சாமியா” சித்தார்த் சிரிப்பை அடக்கி கொண்டு கேட்க “அட ஆமா தங்கம்” என்றார் அலமேலு. சித்தார்த்தால் அவன் சிரிப்பை கொஞ்சம் கூட அடக்கவே முடியவில்லை. ஆனாலும் முயன்று கட்டுப்படுத்தி அவன் அத்தையிடம் பேசினான்.
     “அழகர்சாமி எப்படி அரவிந்த்சாமி ஆனாரு அத்த. அதை சொல்லுங்க” தந்தையை கலாய்க்க நல்ல ஒரு சான்ஸ் கிடைக்க கப்பென பிடித்தான் பையன்.
     “அதுவாயா, என் அண்ணன் என்ன மாதிரி இல்ல ரொம்ப மாடர்ன். சின்ன வயசுலையே புத்தகம் எல்லாம் படிக்கும். அதுல வந்த பேருதான் இது. அண்ணனுக்கு அழகர்சாமின்ற பேரு புடிக்கல அதான் அரவிந்த்சாமின்னு வைக்க சொல்லி அப்பாட்ட சண்டை போட்டு மாத்திக்கிச்சு. இப்ப தெரிஞ்சிக்கிட்டியா!
     அட நான் ஒருத்தி பேசிட்டே இருந்ததுல வேலைய மறந்துட்டேன் பாருங்க. நீங்க பேசிட்டு இருங்க நான் மதிய சமையலுக்கு வேலைய ஆரம்பிக்கிறேன்”
     முழு கதையையும் அலமேலு சொல்லி முடித்து கிளம்பிவிட “மிஸ்டர்.அழகர்சாமி!” என சித்து அவன் தந்தையை பாத்து அன்பாக இழுத்து கூற வாழ்க்கையை வெறுத்தார் மனிதர். இதோடு வீராவும் கதிரும் சேர்ந்து “அங்கிள் நெஜமாவே உங்க பேரு அழகர்சாமியா” என்று வேறு கேட்டு சிரிக்க
     ‘குவா குவா’ என அரவிந்தின் மனதிற்குள் ஒரு குழந்தை கதறியது. அது வேறு ஒன்றும் இல்லை நம் அரவிந்துக்குதான் குழந்தை மனசே. அதான் அவருள் இருந்த குழந்தை நொந்து நூடுல்ஸ் ஆனதில் கத்தி கதிறயது. ஆனால் அது எதுவும் வெளியே கேட்கவில்லையே!
-ரகசியம் தொடரும்

Advertisement