Advertisement

     ‘அந்திமாலை நேரம் என் அண்டர்வேரை காணோம்’ அகோரமான ஒரு குரல் காதுகளில் விழ ஏற்கனவே பற்றி எரியும் நெருப்பில் யாரோ மீண்டும் ஒரு கொள்ளிகட்டையை வைத்தது போல் திகுதிகுவென இன்னும் எரிந்தது சித்துவுக்கு. அவனை கடுப்பாக்கி பார்க்க கூடிய ஒரே ஜீவனான அவன் தந்தை அரவிந்தோ பாட்டை பாடியபடி அவர் கையில் இருந்த காபியை உறிஞ்சி உறிஞ்சி குடித்துக் கொண்டிருந்தார்.
     சித்து அவன் கையில் மாட்டியிருந்த பாவப்பட்ட ஒரு கேரட்டை சதக் சதக் என வெட்டி அவன் மனதில் இருந்த கோபத்தை குறைக்க முயல, ‘நான் இருக்கும் போது, அதெல்லாம் நடக்கற காரியமா’ என சொல்லாமல் சொல்லி நின்றார் அவன் ஆருயிர் தந்தை.
     சித்துவால் காலையில் நடந்த நிகழ்வை இன்னும் ஜீரனிக்க முடியாது ஒரு கிளாஸ் ஈநோவை கூட குடித்து பார்த்து விட்டான். ஆனால் நடந்தவை எல்லாம் மனதிற்குள் அப்படியே நின்றது.
     அப்படி என்ன நடந்தது என ஒரு அரைமணி நேரம் முன்னே சென்று பார்ப்போமா!
     நல்ல உறக்கத்தில் இருந்த வீராவை எழுப்பி அது இதுவென பேசி முத்தம் கேட்டு நின்ற சித்துவை என்றும் இல்லா திருநாளாய் வீரா வெட்கம் வேறு கொண்டு பார்த்தாள்.
     “ப்ச்… சித்து சும்மா இருங்க. பக்கத்துல கதிர் இருக்கான்” மெல்ல சிணுங்கிவைத்தாள் அவன் காதலி.
     அவள் சிணுங்களை கேட்டு சித்துவின் மனம் சில்லுசில்லாய் போக, அவள் வேண்டும் என இன்னும் சண்டித்தனம் செய்தது மனது. “ஐயோ செல்லம் அவன் டையர்டுல தூங்குறான். இப்போலாம் எந்திரிக்க மாட்டான். ஒரே ஒரு உம்மா மட்டும், ஒன்னே ஒன்னு பிளீச்..”
     அப்படி இப்படி என பேசிக் கொண்டு அவளை சித்து நெருங்கிட, வீராவின் இதயம் அது பலமாக துடிக்க ஆரம்பித்தது. அந்த சத்தம் அமைதியாக இருந்த அறையில் அப்படியே சித்துவின்‌ காதுகளில் விழ இன்னும் வீரசுந்தரி பித்து அதிகமானது அவனுக்கு.
     அந்த மோன நிலை, அவன் அழகு காதலி என சித்துவின் மனமே அவன் சொல்வதை கேட்கும் நிலையில் இல்லை. இதில் வீராவின் அழகிய கண்ணம் இரண்டும் என்றுமில்லாது வெட்கத்தில் சிவப்பாய் வேறு மாற, அப்படியே அதை தன் கைகளில் ஏந்திக் கொண்டான் காதலன்.
     “ஐயோ! வீரா செல்லம் என்னடி இப்படி சிவந்து மனுஷன பைத்தியம் ஆக்குற. சத்தியமா சாவடிக்கிறடி. ஆப்பிள் மாதிரி சிவக்குற இந்த கண்ணத்தை அப்படியே கடிச்சு சாப்டனும் போல இருக்கேடி”
     ஏதேதோ பிதற்றியபடி அவள் முகத்தை மெல்ல நிமிர்த்தி, இரு கண்ணங்களிலும் முத்தமிட்டான். அப்படியே அவள் கண்களோடு கண்களை கலக்கவிட்டவன் மென்மையாய் மிக மென்மையாய் அவள் உதடுகளை கவ்வி கொண்ட நேரம்
     “அடேய்! பரதேசி பரதேசி! நாசமா போன எடுபட்டபயலே!” என்றொரு குரல் எங்கோ கேட்க, அடித்து பிடித்து எழுந்தான் சித்து. ஒன்றும் புரியாமல் தன்னை சுற்றி பார்த்த சித்துவிற்கு ஒன்றும் புரியவில்லை. மேலே கட்டில் இருக்க இவன் கீழே விழுந்து கிடந்தான்‌.
     அவன் முன்னாலோ அரவிந்த் “நீயெல்லாம் வெளங்குவியாடா? உன்னையெல்லாம் புள்ளையா பெத்து வளத்து விட்டதுக்கு நாலு எருமைமாட்ட வாங்கி விட்டிருந்தா, இந்நேரம் லிட்டர் லிட்டரா பாலை தந்நிருக்கும். தண்டக் கருமம் உன்னை பெத்ததுக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்” என மாங்கு மாங்கென திட்டிக்கொண்டிருந்தார்‌.
     சித்துவிற்கு என்ன நடக்கிறது என ஒன்றும் புரியவில்லை. அவனுக்கு வீராவுடன் அவளுடைய அறையில் இருந்தது மட்டுமே நினைவில் இருந்தது‌. ஆனால் அவன் தற்போது இருந்ததோ அவனுக்கு என தரப்பட்ட அறையில். எப்படி அங்கிருந்தவன் இங்கு வந்தான் என அவனுக்கே தெரியவில்லை.
     வீராவின் உதட்டின் ஈரம் கூட அவனுடைய உதட்டில் இன்னும் அப்படியே இருக்க, அவன் முன்னால் கத்திக் கொண்டிருக்கும் தந்தையை பார்த்துப்பின் புரிந்துக் கொண்டான் வீரா அறையில் இருந்தவனை இங்கு இழுத்து வந்தது அவன் தந்தை என.
     அவன் வீராவுடன் ரொமான்ஸ் செய்த காரணத்தாலே அவன் தந்தை திட்டுகிறார் என உணர்ந்தான் சித்து. எவ்வளவு நாள்தான் தந்தை அவனை வீராவிடமிருந்து ஒதுக்கி வைப்பார் என வெகுண்டு எழுந்த சித்து
     “நைனா! போதும் நிறுத்து. என்ன விட்டா ஓவரா பேசிட்டு போற. என்ன அப்படி ஊர்ல இல்லாத தப்பை நான் செஞ்சேன். ஏதோ கல்யாணம் பண்ணிக்கப் போற என்னோட லவ்வர், அப்படினு கொஞ்சம் நேரம் அவளோட ரொமான்ஸ் பண்ணா என்னை இங்க தள்ளிட்டு வந்தது மட்டுமில்லாம மூச்சு விடாம திட்டிட்டேப் போற. போதும் இத்தோட உன் ரேடியோவ ஆஃப் பண்ணு.
     ச்சே இந்த வீட்டுல சுதந்திரமா என் செல்லாக்குட்டி கூட கொஞ்ச நேரம் இருக்க முடியுதா. நைனா என்னை இப்ப ஆளவிடு. ரொம்ப நேரம் ஆச்சு நான் தூக்கம் போறேன். நீ முதல்ல இடத்த காலிப்பண்ணு”
     தானும் அரவிந்திற்கு சளைத்தவன் இல்லை என எகிறிவிட்டான் சித்து. அவன் கூறியதை கேட்டு அவனை மேலிருந்து கீழ் வரை கேவலமாக பார்த்து வைத்தார் அரவிந்த்.
     அவர் பார்வையே ‘இவன் நமக்குதான் பொறந்தானா, இல்ல ஆஸ்பத்திரில புள்ளைய மாத்தி ஏதும் குடுத்துட்டாங்களா? முழு நேர பைத்தியக்காரனா இருக்கானே!’ என்றது.
     “டேய் முட்டாப்பய மவனே! நிறுத்துடா எந்த உலகத்துல இருக்க. காலையிலே தண்ணீ எதுவும் போட்டுட்டியா. உன்னைப் போய் புள்ளைன்னு வளர்த்தேன் பாரு என்னை சொல்லனும்டா” என அப்போதும் திட்ட  துவங்கிட
     “ந்தா இப்ப நிறுத்துறியா இல்லையா நைனா. எதுக்கு இப்ப திட்டுற? சொல்லித் தொலை”
     “பின்ன என்னடா விடிஞ்சு போச்சே, வாய் நமநமங்குதேன்னு காபி போட இங்க வந்து உன்னை எழுப்பலாம்னு வந்தேன்”
     அரவிந்த் கூறியதை கேட்டு ஒன்றும் புரியாது சித்து “என்ன விடிஞ்சு போச்சா” என முழித்து வைத்தான்.
      “ஆமாண்டா பையித்தியக்காரா. என்ன கனவு கண்டு தொலைச்ச? தூக்கத்துல எதோ தானா பேசி சிரிச்சிட்டு இருந்தியே. சரி என்ன உளருறன்னு கேக்க என் காத உன் வாய்கிட்ட கொண்டாந்து வச்சேன். நீ என்டான்னா சட்டுனு என் கழுத்த புடிச்சு அமுக்கி என் உதட்டை கடிச்சு வச்சதும் இல்லாம என்னடா வியாக்கியானம் பேசுற. பெத்த அப்பனுக்கே முத்தம் குடுக்குறியே உருப்புடுவியாடா நீயெல்லாம்” என்று முடித்தார் அரவிந்த்.
     ‘என்ன இந்தாளுக்கு நான் முத்தம் குடுத்தேனா?’ என யோசித்த சித்துவிற்கு அப்போதுதான் மூளையில் சிறிதாக பல்ப் எரிந்தது. அதாவது கனவில் வந்த அவன் காதலிக்கு முத்தம் தருவதாக எண்ணி நிஜத்தில் வந்த அவன் தந்தைக்கு முத்தத்தை தந்திருக்கிறான் அந்த பரம்பரை பையித்திக்காரன்.
     அதை கேட்டு படாரென வெடித்துவிட்டது பாவம் அவன் பிஞ்சு இதயம். அதைவிட போயும் போயும் அவன் தந்தைக்கு முத்தம் தந்தது தெரிந்தவுடன்
     “த்து கருமம் கருமம். யோவ் நைனா எதுக்குயா என்கிட்ட வந்த. ஐயோ ச்சை! ஐயோ இந்தாளுக்கா முத்தம் குடுத்தேன்‌. என் வீரா செல்லம் வெக்கப்பட்டுக்கிட்டே சரின்னு சொன்னப்பவே நான் சுதாரிச்சிருக்க வேணாமா இது கனவுன்னு. அது எனக்கு அப்ப புரியாம போச்சே! ஐயோ…”
     மனம் வெறுத்துபோய் முனகியபடி பரபரவென்று தன் உதடுகளை தேய்த்து எடுத்தான் பையன். பாவம் முத்தத்தின் குறுகுறுப்புதான் போகவே மாட்டேன் என்றது. அதன்பின் பாத்ரூம் போய் பேஸ்ட் பிரஷ்ஷை எடுத்தவன்தான் கால்மணி நேரம் தேய் தேய் என உதடு பற்களை புண்ணாகவே ஆக்கிவிட்டான்.
     “டேய் இப்ப வெளியே வந்து எனக்கு காபி போட்டு தருவியா மாட்டியா? சரியான தண்டத்துக்கு பொறந்த தண்டமாடா நீ, இப்ப எனக்கு காபி வேணும் வாடா வெளிய”
     அவன் பாத்ரூமிலே பதுங்கியதில் கடுப்பான அரவிந்த், அவன் வரும்வரை பொறுமை இல்லாது பாத்ரூம் வாயிலிலே நின்று அரவிந்த் தன்னையும் சேர்த்தே திட்டுகிறோம் என மூளையே இல்லாது கத்திக் கொண்டிருந்தார் மனிதர்.
     ‘ஐயோ! கனவுல கூட என் ஆளு கூட டூயட் பாட விடாம என்னை கடுப்பேத்திட்டு, மூட்டைப்பூச்சி மாதிரி நையநையன்னு இம்சை பண்ணுதே. கொலை கேசா ஆனாலும் பரவாயில்லைனு இந்த ஆள அப்படியே கொண்ணுட்டாதான் என்ன’ என அவர் இறந்ததைகூட மறந்தவனாய் யோசித்தபடி முகத்தில் கிலோ கணக்கில் கோபத்தை பூசிக் கொண்டே வந்தான் சித்து.
     அவன் கோப முகத்தை பார்த்து ‘என்ன மூஞ்சில பல்ப் பிரகாசமான எரியுது. சரி இருக்கட்டும் நமக்கு இப்ப தேவை காபி அதை மொதல்ல குடிப்போம் மீதியை அப்புறம் பாத்துப்போம்’ என காரியத்தில் கண்ணாகிவிட்டார் அவன் தந்தை.
     “இந்த மொறப்பு வெறப்பு எல்லாத்தையும் மூட்டக்கட்டி வச்சுட்டு வந்து காப்பி போட்டு தாடா தடிமாட்டு தண்டம்”
     அரவிந்த் சித்துவை திட்டிய படியே அவனை இழுத்து வந்து சமையல் அறைக்குள்ளே விட்டுதான் நின்றார். அதற்குமேல் என்ன செய்வது, சித்துவால் காபியை தவிர வேறு எதையும் போட முடியாது என உலகம் அறியுமே.
     அங்கே தங்க போவதாக முடிவு செய்த உடனே சமைக்க தேவையான பொருட்கள் அனைத்தையும் ஏற்பாடு செய்திட்டார் அவன் அத்தை அலமேலு.
     காலையிலே பால் பாக்கெட்டும் அவர் ஏற்பாட்டின்படி வந்திருக்க சித்து அங்கிருந்தவற்றை எடுத்து காபியை போட்டு கொடுத்தான். பழக்க தோஷத்தில் அப்படியே காலை சமையலிலும் இறங்கிவிட்டான் நல்ல பிள்ளையாக.
     ஆனால் மனதிற்குள் ஒரு பெரிய எரிமலையே வெடித்துக் கொண்டிருக்க, வெளியே காட்ட முடியுமா இல்லை காட்டினால் அவன் தந்தையிடம் இவன் பருப்புதான் வேகுமா. ஆனால் அவன் குக்கரில் வைத்த பருப்பு சரியாக விசில் வந்துவிட, சாம்பாருக்கு காயை நறுக்கி கொண்டிருக்கிறான் அந்த அப்பாவி மகன்.
     இதில் ஒவ்வொரு காயாக நறுக்க நறுக்க ‘ஐயோ.. ஐயோ ஐயோ ஐயோ…’ அவன் மனது வேற எசப்பாட்டு பாடிக் கொண்டிருக்க ‘நமக்கு ஊர்ல எதிரி இருந்தா பரவால்ல, நமக்குள்ளையே இருக்கே!’ என நொந்து நின்றான் அரவிந்தின் புத்திரன் சித்தார்த்.
     அந்த நேரத்தில் சரியாக எண்ட்ரீ கொடுத்தாள் வீரா. சமையல் அறையில் சித்து கேரட்டை கொலை செய்வததை தூரத்தில் இருந்தே பார்த்துவிட்ட வீரா
     ‘ஆண்டவா! இன்னைக்கு காலைலே எதோ சம்பவம் பெருசா நடந்திருக்கும் போலையே! வீரா காபிய தூக்கிட்டு அப்படியே எஸ்ஆகிரு. இவங்க பஞ்சாயத்துக்குள்ள தெரியாம கூட கால விட்டுராத, அப்புறம் உசுருக்கு சேதாரம்டி’ என உசாராக வந்து காபியை மட்டும் லவட்டி கொண்டு ஓடிவிட்டாள்.
     காபியை ருசித்து ரசித்து குடித்த பிசியில் அரவிந்தும், அவளை கண்டு காலை நிகழ்வுகள் மீண்டும் கண் முன்னே வந்த வயிற்றெரிச்சலில் சித்துவும் அமைதி காத்த அந்த இரண்டு செகண்டில் ஓடி தப்பிவிட்டாள் புண்ணியவதி.
     இங்கு இப்படி போய்க் கொண்டிருக்க “அப்பனுக்கு புள்ள தப்பாம பொறந்திருக்கே. இதுகள நம்பி நான் வேற பல பிளானு செஞ்சிருக்கேன்‌. ஆனா போறப்போக்க பார்த்தா நம்ம நெலைமையே சல்லி பைசா பெறாது போலையே. இவனுங்கள வச்சி நான் என்னாத்தை செய்ய. காலாங்காத்தாலையே என் ஜீவன வாங்குதுங்களே” என தூரத்தில் மரபொம்மை அதன் மர இதயம் வெடிக்கும் அளவு மன வலியில் துடித்துக் கொண்டிருந்தது தந்தை மகன் இருவருக்கும் தெரியவில்லை. பாவம் பொம்மை!
-ரகசியம் தொடரும்

Advertisement