Advertisement

     அந்த விசாலமான அறையை சுற்றி பார்த்தபடி வீரா கதிர் இருவரும் நிற்க, சித்துவோ கடுப்பாக அவன் கையில் இருந்த பையை கீழே போட்டுவிட்டு புசுபுசுவென மூச்சு வாங்கிய படி அமர்ந்து விட்டான். அவனை கண்டு குழப்பமாக புருவத்தை சுழித்த வீரா
     “என்ன ஆச்சு சித்து? ஏன் பேக இப்புடி தூக்கி போடுறீங்க. உங்க முகத்தை பாத்தா ஏதோ டென்ஷனா இருக்க மாதிரி இருக்கே என்ன விஷயம்?”
     சாவுகாசுமாக அவன் எதிரே அமர்ந்தபடி கேட்டாள் வீரா. இங்கு நடந்தவை அனைத்தையும் கண்டிருந்தும் ஏதும் அறியாதது போல் அவள் கேட்டு வைக்க, வீராவை முறைத்துபார்த்தான் சித்து.
     “ஏன் உனக்கு தெரியாதா? நீயும் வந்ததுல இருந்து பாக்குற தானே என் அப்பா பண்ணுற அலப்பறைய? அப்புறம் என்ன என்னன்னு எதுவும் தெரியாத மாதிரி கேக்குற. அதான நீ உன் அங்கிள்‌ டீம், அவருக்குதானே சப்போர்ட் பண்ணுவ” வள்ளென சித்து கத்தினான்.
     பின்னே இருக்காதா அவர் தந்தையின் புகழ் பாடலை கேட்டுக் கொண்டு எவ்வளவு நேரம்தான் அவனும் பொறுமை காப்பது. போக அவன் அத்தை குடும்பத்தாரின் முன் அரவிந்தை எதிரித்து எதுவும் பேச முடியவில்லை என்பது வேறு அவன் மனதை பிராண்டியது.
     “ப்ச் சவுண்ட கொறைங்க” காதுக்குள் விரலை விட்டு ஆட்டியபடி கூறிய வீரா “ஏதோ அங்கிள்‌ அவர் பொறந்து வளந்த ஊரை பாக்கவும் ரொம்ப சந்தோஷம் ஆகிட்டாரு. அதுல கொஞ்சம் அப்படி இப்படி பேசியிருப்பாரு. அதுக்கு எல்லாம் நீங்க மூஞ்ச தூக்கி வச்சுக்கலாமா?” என எப்போதும் போல் அரவிந்தின் பக்கம் தன் கொடியை பலமாக ஆட்டினாள் வீரசுந்தரி.
     “சபாஷ் சபாஷ்! அப்படி சொல்லு வீராம்மா” என கைகளை தட்டியபடி இப்போது உள்ளே நுழைந்தார் சித்துவின் கோபத்து காரணமான அவன் தந்தை.
     “வீராம்மா நீதான்டா இந்த மாமனார் மனம் புரிஞ்ச மருமக. எங்க இந்த சித்து பையன் பேசுறத கேட்டு அவன் பக்கம் நின்னுபுடுவியோன்னு நினைச்சேன். ஆனா நீ எப்பவும் என் பக்கம்னு மறுபடியும் நிரூபிச்சுட்ட” பாராட்டு பத்திரம் வேறு அரவிந்த் வாசித்து வைக்க வீராவிடம் நியாயம் கேட்ட தன் மதியை நொந்து கொண்டு பார்த்தான் சித்து.
     “சரி எதுக்குடா மகனே என்ன வர சொல்லி சிக்னல் தந்துட்டு வந்த? என்னா மேட்டர்?” அரவிந்த் கேட்டபின் தன் கோபத்தை கட்டுப்படுத்தி சித்து அவன் இவ்வளவு நேரம் நினைத்ததை பேச ஆரம்பித்தான்.
     “இங்க பாரு நைனா நான் பேசும்போது குறுக்க பேசாத. நான் இப்பவே சொல்லிட்டேன். அப்புறம் நான் பேசாம்போது குறுக்க பேசுன நான் என்ன பண்ணுவேன்னே எனக்கு தெரியாது” என டிஸ்க்கிளைமரோடு ஆரம்பித்தான் மகன்.
     “நைனா நம்ம வீட்ல அங்க சென்னைல நீ எல்லாரோட கண்ணுக்கும் தெரிஞ்ச அதனால நாம எப்பவும் போல பேசிட்டு இருந்தோம். ஆனா இங்க அப்படி இல்ல. உன் தங்கச்சி குடும்பமும் இருக்காங்க முக்கியமா நீ அவங்க கண்ணுக்கு தெரிய மாட்ட. அதனால எதாவது முக்கியமான விஷயம் பேசனும்னா எங்களை இந்த ரூம்க்கு வர சொல்லி பேசு. நாங்க உன்கிட்ட பேசனும்னா கண்ணை காட்டுறோம் இங்க வந்துடு புரியுதா”
     நீளமான பேசிய சித்துவிடம் வாட்டர் பாட்டிலை வீரா நீட்ட “ப்ச் அருமைடா மகனே! வரவர நீளமான டையலாக் எல்லாத்தையும் அசால்டா மனப்பாடம் பண்ணாம ஒப்பிச்சிட்டு இருக்க. நீ நடத்து நடத்து” முழுதாக கேட்டுவிட்டு கடைசியில் தன் பங்கிற்கு பங்கம் செய்தார் அரவிந்த்.
     அவர் பேசியதை கேட்டு சித்துவின் மூளையில் சற்றென்று ஒரு ஞானோதயம் பிறக்க “அப்புறம் இதெல்லாத்தையும் விட இன்னொரு முக்கியமான விஷயம். ‘நாம பேசறது தான் யாருக்கும் கேக்காதே’ அப்படின்னு நினைச்சுக்கிட்டு சகட்டுமேனிக்கு என்னை எப்பவும் பங்கம் பண்ற மாதிரி எல்லாரும் இருக்கும் போது நீ பேசவே கூடாது” என சத்தியம் செய்து தர சொல்லி சித்து நின்றான்.
     அவனை ஒரு மார்க்கமாய் பார்த்து புன்னகைத்த அரவிந்த் “இங்கபாருடா மவனே நடக்காததை எல்லாம் என்கிட்ட சத்தியமா கேக்க கூடாது. அரவிந்த் வழி தனிவழி அதுல நீ குறுக்க வராத என்ன” சம்மந்தமே இல்லாமல் அரவிந்தும் பஞ்சாய் எடுத்து விட்டார்.
     மீண்டும் தந்தை மகனுக்கு முட்டிக் கொள்ள இருவரும் மாறி மாறி அவர்களை கழுவி கழுவி ஊத்த, இருவரையும் பார்த்து ‘இனி நம்ம பாடி தாங்காது’ என்று நினைத்த வீரா “நிறுத்துங்க” என கத்தினாள் அந்த இடத்தை அமைதியாக்கும் பொருட்டு.
     சண்டை இட்ட இருவரும் மூச்சு வாங்கி நிற்க “வந்த இடத்துல கூட அமைதியா இருக்க மாட்டீங்களா சித்து. அங்கிள் நீங்களாவது விட்டுக் குடுத்து போலாம்ல” பஞ்சாயத்து செய்து வைக்க தவறுதலாய் வீரா நுழைந்து விட்டாள். மீண்டும் அவள் காது ஜவ்வு வலிக்கும் அளவு ஒரு சொற்போர் நிகழ கடுப்பாகிய வீரா
     “சித்து இந்த ரூமை விட்டு வெளியே போய் சண்டைய போடுங்க. ரொம்ப தூரம் டிராவல் பண்ணி வந்தது ரொம்பவே டயர்டா இருக்கு, சோ நானும் கதிரும் ரெஸ்ட் எடுக்கனும். நீங்க வேற ரூமக்கு போய் கண்டினியூ பண்ணுங்க” என கத்தி விட்டாள்.
     வீரா சொன்னதை கேட்டு தன் தந்தையோடு  போட்டுக் கொண்டிருந்த சண்டையை அப்படியே டீலில் விட்ட சித்து “என்னாது வெளியவா? ஏன் ஏன் ஏன்? நானும் உங்ககூடவே இந்த ரூம்ல இருக்கேனே. நான் மட்டும் எதுக்கு வேற ரூம் போகனும்” சிறு பிள்ளை போல் பதறிப்போய் பாவமாய் கேட்டான் சித்து.
     அவனை பார்த்து நக்கலாக சிரித்த அரவிந்த் “ஏய் சித்து பையா! உனக்கும் வீராம்மாக்கும் இன்னும் கல்யாணம் ஆகல. அதனால நீங்க ஒரே ரூம்ல படுக்க கூடாது”
     இப்படி கூறி அவனை வெளியே தள்ள முயல, கடைசியாக வீராவின் முகத்தை பாவமாய் சித்து பார்த்து வைத்தான் அவள் தன்னை இங்கே தங்கிவிடுமாறு கூறுவாளா என. அவளின் முகமோ கொஞ்சம் வேகமாக வெளியே சென்றால் தேவலை என்னும் பாவத்தில் இருந்தது.
     அவளை திரும்பி திரும்பி பார்த்தபடி விதியை நொந்தபடி வேறு அறைக்கு சென்றான் சித்துவும். அவனோடு அவன் தந்தையும் சேர்ந்தே வந்திருக்க “ஆமா நைனா பேசாம நான் உன்னோடவே அந்த ரூம்ல இருக்கேனே. புது இடம் வேற நான் மட்டும் இந்த ரூம்ல தனியா எப்படி இருக்க?”
     சண்டையாவது மண்ணாவது என அனைத்தையும் காற்றில் விட்ட மகனவன் தனியே தங்க பயந்துக் கொண்டு பாவமாய் கேட்டு வைக்க, அவன் முகத்தை உற்று பார்த்து தந்தையோ
     “பெர்பிர்மன்ஸ் பத்தலைடா மகனே! இன்னும் கொஞ்ச கூட மூஞ்ச பாவமா வச்சுக்க அப்பவேனா எனக்கு அந்த ரூமை உன்கூட ஷேர் பண்ண தோனுதான்னு பாக்குறேன்”
     அதற்கும் ஒரு பஞ்ச் வைத்துவிட்டு சென்றார் அரவிந்த். அப்படி அலும்புடன் தட்டி பறிந்த அந்த ரூமுக்குள் பலவித உணர்வுகளுடன் தன் ரைட் காலை வைத்து அரவிந்த் உள்ளே நுழைய, அங்கிருந்த ஏதோ ஒன்றால் அவர் உடல் ஒரு குலுங்கு குலுங்கியது.
     “ஆஹா! இந்த ரூம்ல காலை வைக்கும் போதே என்னா ஒரு குட் வைபரேஷன்” அது பேய் வைபரேஷன் என பேயான அரவிந்திற்கே புரியாது போக ஆனந்தமாய் உள்ளே நுழைந்தார்.
     அந்த அறையை ஆவென வாயை பிளந்து சுற்றி பார்த்த மனிதர் அங்கிருந்த கட்டில் பீரோ ஏன் தரையை கூட விடாது அனைத்தையும் தடவி பார்த்து “செத்துப்போன மை டாடி! என்னமோ வைரம் வைடூரிய பொக்கிஷம் இருக்க மாதிரி இந்த ரூம்க்கு உள்ள என்ன வரவே விடமாட்டியே, இப்ப பாரு செத்து ஆவியான அப்புறமா வந்தாவது இந்த ரூமை டேக் ஓவர் பண்ணிட்டேன்” அல்பமாய் ஒரு அறைக்கு அரவிந்த் பில்டப் கொடுத்து ஏற்கனவே செத்திருந்த அவரின் தந்தையையும் இழுத்தார்.
     இப்படி அல்பமாய் அலையும் அரவிந்தையும் குறை சொல்ல முடியாது. ஏனெனில் அவரின் சிறு வயதிலிருந்து அரவிந்த் அலமேலு என்ன வேறு யாரையும் அந்த அறைக்குள் விட்டதே இல்லை அவரின் தந்தையானவர். அப்படி அந்த அறையினுள் என்னதான் இருக்கிறது என மண்டை காயும் மற்றவர்களுக்கு. அப்படிப்பட்ட அறைக்குள் அவர் வராது அவர் மகன் சித்துவை மட்டும் எப்படி விடுவார்‌ மனிதர்.
     இப்போது ரூம் டூரை முடித்திருந்த அரவிந்த் ஹாயாக கட்டிலில் தெனாவெட்டாக அமர்ந்து காலை ஆட்டிக் கொண்டிருந்தார். அவர் வந்ததில் இருந்து செய்த அனைத்தையும் பார்த்தபடிதான் இருந்தது அந்த கப்போர்டில் இருந்த மரபொம்மையும்.
     “அடேய் அரவிந்தா! இன்னமும் கோமாளி தனம் பண்ணிட்டு திரியிர. உன்னையெல்லாம் ஒரு ஆளா நினைச்சு நானும் ஒரு திட்டம் போட்டு உன் குடும்பத்தையே இழுத்துட்டு வந்திருக்கனே என்ன எதை கொண்டு அடிக்க. உன்னை வச்சு நான் நினைச்சதை செஞ்சு முடிக்கிறதுக்குள்ள என் ஆயிசு இந்த பூமில முடிஞ்சிரும் போலையே”
     காலத் தாமதமாக உணர்ந்த அந்த பொம்மை கவலையாக புலம்பி நங்கு நங்கு என கப்போர்டின் கதவிலே முட்டிக் கொண்டது. ‘இப்போ கவலைப்பட்டு நோ யூஸ்’ விதியும் பொம்மையை பார்த்து பாவமாய் உச்சுக்கொட்டி சென்றது.
     அதேநேரம் மரபொம்மை முட்டிக் கொண்ட சத்தத்தை கேட்டு வெளியே அமர்ந்திருந்த மாதவனோ ஒவ்வொரு நிமிடமும் திக்திக் நிமிடங்களென வெடவெடத்து போய் இருக்க, பேயாக சுத்தும் நம் அரவிந்தோ டூர் வந்துள்ள வெளிநாட்டு பயணியை போல் உல்லாசமாய் அங்கிருந்த சோஃபாவில் குதித்து கொண்டிருந்தார்.
     இருவரையும் தன் சிசிடிவி விழிகளால் கூர்ந்து கவனித்த மரபொம்மை “என் வேலைக்கு இந்த எழவெடுத்தவன வரவச்சதுக்கு பதிலா என் செல்லாக்குட்டிய வச்சே முடிச்சிருக்கலாம் போலையே” என்று கூறியபடி மேலும் நான்கு முறை முட்டிவிட்டு டயார்ட் ஆகி அமைதியாகி விட்டது.
     அப்பன் இங்கு ஒருபக்கம் அந்த அறையின் மீதிருந்த காதலில் சுற்றிக் கொண்டிக்க, மகனோ அவன் வீராவின் மீதுள்ள காதலில் தூக்கம் வராது அவன் அறையில் புரண்டு கொண்டிருந்தான்.
     “இதுக்குமேல நம்மால ஆகாது சாமி. நைனா தான் அவர் ரூமுக்கு போயிட்டாரே. நாம அப்படியே நைசா வீரா ரூமுக்கு போக வேண்டியதுதான். இல்லைன்னா இன்னைக்கு என் கட்டை சாயாதுடி மாலா!”
     வானத்தை பார்த்து மெல்ல புலம்பிய சித்து நைசாக அவன் அறையிலிருந்து வீராவின் அறையை அடைந்தான். உள்ளே சென்றால் கதிர் நல்ல உறக்கத்தில் இருக்க, இதுதான் சமயம் என வீராவின் கையை மெல்ல சுரண்டினான் சித்து.
     கையில் ஏதோ ஊறுவதை போல் உணர்ந்த வீரா அதை தட்டிவிட “அடியே என் மக்கு வீரா ஏந்திரிடி! செல்லம் உன் மாமா வந்திருக்கேன் ஏந்திரிங்க செல்லம்!” ஏதேதோ செய்து அவளை மட்டும் வெற்றிகரமாய் எழுப்பிவிட்டான் பையன்.
     தூக்கத்தில் எழுந்த வீரா அவள் முகத்தின் அருகே மங்கலாக ஒரு முகம் குளோசப்பில் அதுவும் பேஸ்ட் விளம்பரத்தில் வருவதை போல் பல்லை காட்டிக் கொண்டு தெரிய பயத்தில் அலறப்போய்விட்டாள். அவர் கத்தப்போவதை உணர்ந்து அதற்குமுன் அவள் வாயை அடைத்த சித்து
     “ஏய் செல்லம்! நான்தான்டி கத்தி கித்தி வைக்காத. என் அப்பன் எங்கையாவது இருந்து வந்து குதிச்சிர போறான்” உசாராக அவளிடம் கூறி வைத்தான்.
     அவன் கையை விலக்கிய வீரா “துங்கதானே போனீங்க. என்னாச்சு ஏன் திரும்ப வந்திருக்கீங்க அதுவும் மெதுவா எழுப்பி விடுறீங்க. உங்களுக்கு என்னதான் ஆச்சு சித்து” தூங்கவிடாது அலம்பு செய்யும் அவனிடம் பாவமாக கேட்டு வைத்தாள் அவன் வீரா.
     “என்ன ஆச்சா? என்னன்மோ ஆச்சு செல்லம்” ஒரு மார்க்கமாய் சிரித்துக் கொண்டே சித்து கூறியவன் தன் குரலை மேலும் சுருக்கி ஹஸ்கி வாய்சில் “நீ ஒரு உம்மா குடு சரியா போயிடும்” என்று அசால்ட்டாக கேட்டு வைத்தான். ஆனால் அதை கேட்டு வீராதான் அதிர்ச்சியில் ஆவென வாயை பிளந்து விட்டாள்.
-ரகசியம் தொடரும்

Advertisement