Advertisement

     தங்கள் கண் முன்னால் இருந்த அந்த பெரிய மாளிகையை ஆவென பார்த்து வைத்தனர் சித்தார்த் குரூப். அவர்கள் வீடு என்றால் சென்னையில் இருப்பது போன்று இல்லை அதை விட சற்று பெரியதாக இருக்கும் என எண்ணியிருக்க இதுவோ அதைவிட மூன்று மடங்காவது பெரிதாக இருக்க ஆச்சரியத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை.
     ‘பெரிய வீடு பெரிய வீடுன்னு நைனா சொல்லும் போதுகூட இவ்ளோ பெரிய வீடா இருக்கும்னு நான் நினைக்கிலையே. இது மினி சைஸ் அரண்மனை மாதிரில்ல இருக்கு‌. ஐயோ ஐயோ இது எல்லாம் எனக்கே எனக்கா… வீடே இவ்ளோ பெருசுன்னா இன்னும் எவ்ளோ புராப்பர்டி தேறுமோ. ஆண்டவன் குடுத்தா கூறைய பிச்சிக்கிட்டு குடுப்பாருன்னு சொல்லுவாங்க. நமக்கு வானத்துல இருந்து ஸ்ரைட்டா மொட்ட மாடில கொட்டிடாரே..ஏஏஏ’
     சித்து மனதிற்குள் ஒரு குத்தாட்டமே போட்டு கொண்டிருக்க வீரா கதிர் இருவரும் அவ்வளவு பெரிய வீட்டை கண்டு வாய் அடைத்து நின்றிருந்தனர். அந்த வீட்டை பார்த்த அதிர்வில் வீராவிற்கு மூளை அப்படியே பிரீஸ் ஆகிவிட்ட நிலைதான்.
     இவர்கள் ஆனந்த அதிர்வில் இருக்க அதற்கு மாறாக அவர்கள் அருகில் நின்றிருந்த மாதவனோ வேறொரு அதிர்வில் நின்றிருந்தான். அவன் கண் முன்னே இரண்டு உயிர்களை காவு வாங்கிய வீடல்லவா இது. அவனுக்கு தெரிந்து இரண்டு உயிர்கள் போய் இருக்கிறது, தெரியாது எத்தனை எத்தனையோ?
     அப்படிப்பட்ட பூத் பங்களாவில்தான் இனி அவன் சிறிது காலம் தங்க வேண்டும் என இழுக்கப்பட்டு வந்ததில் அரண்டு போய் நின்றிருந்தான். அவன் அருகே முகம் முழுவதும் நிறைந்த மகிழ்ச்சியில் அலமேலு அவர் சிரிப்பை கண்டு புன்முறுவல் செய்தபடி கார்மேகம் என மொத்த குடும்பமும் அங்கேதான்.
     சித்து அவன் வீட்டில் வைத்து அனைவரையும் அவனுடன் வந்து தங்க அழைத்த போதே மாதவனின் மனதில் இருந்த பீதி அப்பட்டமாக முகத்தில் தெரிய, அவனை பார்த்து அதை வேறு விதமாய் எடுத்து கொண்டார் கார்மேகம்.
     மாதவன் இன்னும் அந்த வீட்டை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதாக தவறாக நினைத்தவர், அவனை தனியே இழுத்து சென்று
     “இங்கபாரு மாதவா! வீட்டிக்கு உரிமைபட்ட உன் மாமா மகன் வந்துட்டான். இனி அந்த வீட்டை அடையனும்னு ஏதும் கோக்குமாக்கா பண்றத அடியோட விட்டுப் புட்டு ஒழுங்கா நடந்துக்க” கார்மேகம் மிரட்டி வைக்க
     ‘நான் எங்கையா கோக்குமாக்கு பண்ணுனேன். அந்த வீடு வேணும்னு கூட உன்கிட்ட தானே கேட்டேன்’ என திட்டிய அவன் தந்தையை பாவமாக பார்த்தான் மாதவன்‌. ஆனால் அதை எல்லாம் கவனிக்காது மேலும் தொடர்ந்தார் அவன் தந்தை.
     “இங்க பாரு அவன் கூப்ட மரியாதைக்காவ கொஞ்ச நாள் போய் அவனோட நாம தங்கியே ஆவனும். அதனால உன் வாலை சுருட்டிக்கிட்டு போய் உன் பொட்டிய கட்டிகிட்டு வா” ஒரே போடாக போட மாதவன் ‘வரமாட்டேன் முடியாது’ என எவ்வளவு கத்தியும் கதறியும் குண்டுகட்டாக தூக்கி கொண்டு வராத குறையாக இழுத்து வரபட்டிருக்க
     ‘கொஞ்ச பிரீயா விட்டா அப்படியே அந்த பக்கம் தெரிச்சு ஓடிருவேன். ஆண்டவா இங்க இருந்து எப்படியாவது என்னமட்டும் காப்பாத்தி விட்டுருயா’ என மனத்திற்குள் கதறிக் கொண்டுதான் இருந்தான்.
     என் கதறி என்ன பயன் அவனைத்தான் கார்மேகம் அவர் கண் பார்வையிலையே வைத்திருக்கிறாரே. அவரை மீறி ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாமல் மனது முழுக்க பீதியில் உறைந்து நின்றிருந்தான்.
     “மவனே! டேய் மவனே!” அரவிந்தின் குரல் காதில் விழுந்தாலும் கருத்தில் பதியாது போக பேவென நின்றிருந்த சித்துவின் மண்டையில் நங்கென ஒரு கொட்டு வைத்த தந்தை
     “எப்பா டேய் உன் வாய கொஞ்சம் மூடி தொலடா. இப்படியே திறந்து வச்சிருந்தா காக்கா குருவி எல்லாம் சிலைன்னு நினைச்சு உன் வாய்க்குள்ள கூடு கட்டிர போகுது” சித்துவை கிண்டல் அடித்து வைத்தார்.
     ஆனால் அதை எல்லாம் கண்டுக் கொள்ளாத சித்துவோ “எவ்ளோ பெரிய வீடு” என தேவியானி போல் சொல்லி வைக்க “பாரு நல்லா பாரு இதுதான் உங்க அப்பன் நான் பொறந்து வளர்ந்த வீடு. எப்பூடி” சந்தில் சிந்து பாடினார்.
     அவர் கூறியதை கேட்டு அவரை ஒரு மார்க்கமாக பார்த்த சித்து ‘இந்த வெட்டி பந்தாவுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல” என மெல்ல முணுமுணுத்தவன் அதற்கு மேல் அவரின் பேச்சை கேட்க பிடிக்காது
     “ரொம்ப நேரமா எல்லாரும் வாசல்லையே நிக்கிறோம். வாங்க வாங்க எல்லாரும் உள்ள போலாம்” வீட்டை பார்த்த படி நின்ற அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் திருப்பி வீட்டின் கதவை நோக்கி சித்து நகர, அவனை தொடர்ந்து மற்றவர்களும் சென்றனர்.
     அலமேலுவிடம் “சாவியை தாங்க அத்தை வீட்டை திறக்கனும்”
     சித்து கேட்டு நிற்க அலமேலுவோ கார்மேகத்திடம் கேட்டு வைத்தார். அவரோ “என்னம்மா என்கிட்ட கேக்குற? எல்லா சாவியும் உன்கிட்ட தானே நான் குடுத்து வச்சிருக்கேன்‌. இப்ப என்கிட்ட கேட்டா என்ன அர்த்தம்” என்றிட்டார் கார்மேகம்.
     “இல்லங்க கெளம்ப முன்ன நான் சாவி கொத்து இருக்க இடத்துல பார்த்தேன், ஆனா அங்க பெரிய வீட்டு சாவி இல்ல. நான்கூட நீங்க எடுத்துட்டு வந்திருப்பீங்கன்னு நினைச்சேன்” குழப்பமாக அலமேலு சொல்லி நிறுத்த மற்றவர்களுக்கும் குழப்பமாகதான் இருந்தது. இப்போது சாவி இல்லாது எப்படி வீட்டை திறப்பதென யாருக்கும் புரியாது போக, என்ன செய்வது என ஒருவருக்கொருவர் ஒரு யோசனை கூற
     இவர்கள் எல்லாம் பேசிக் கொண்டிருந்த நேரம் படாரென ஒரு சத்தம் கேட்டது. அதில் அதிர்ந்த அனைவரும் சத்தம் வந்த திசையை திரும்பி பார்த்தனர். அங்கே இவர்கள் இவ்வளவு நேரம் எப்படி சாவி இல்லாது கதவை திறப்பது என பேசிக் கொண்டிருந்தார்களோ அதற்கு அவசியமே இல்லாது அந்த கதவுகள் தானாகவே திறந்து கொண்டன.
     ‘இது என்ன கதவு தானா திறக்குது. ஏதோ தப்பா இருக்கேடா சித்து’ சித்து மனதிற்குள் ஒரு நிமிடம் ஜெர்க் ஆகிவிட்டான்.
     ‘ஆரம்பமே அதிரடியே இருக்கேடா மாதவா. உள்ள போற நாம உயிரோட வெளிய வருவோமா?’ மாதவன் மனதில் எழுந்த பயத்தில் கைகால்கள் எல்லாம் உதற ஆரம்பித்துவிட்டது அவனுக்கு.
     அதேநேரம் ஒருவன் வீட்டின் உள்ளிருந்து “நாட்டாமை ஐயா வணக்கம்!” என்றவாறு வந்தான். “ஏன்டா அழகா நீ இங்க என்னடா பண்ணுற. உனக்கு எப்படி பெரிய வீட்டு சாவி கெடச்சுது?”
     கார்மேகம் வந்தவனிடம் கோபமாக கேள்வியை கேட்க அவனோ “ஐயா மாதவன் ஐயாதாங்க மதியமே என்ன கூப்புட்டு வீட்டுசாவிய தந்தாரு. நம்ம அரவிந்த் ஐயா குடும்பம் வந்திருக்காங்க அவங்க இங்கதான் தங்கப்போறாங்கன்னு வீட்டை எல்லாம் சுத்தம் செஞ்சு வைக்க சொன்னாருங்க. இப்பதான் சுத்தம் பண்ணிட்டு ஆளுங்க எல்லாம் போனாங்க. இப்பதான் உள்ளார இருந்த அறை எல்லாம் சாத்திபுட்டு வரேங்க பாத்தா நீங்களே அதுக்குள்ள வந்துட்டீக” என அழகன் நீட்டி முழக்கினான்.
     அவன் பதில் கூறியவுடன் மாதவனுக்கு பகீரென்றது. ஏனெனில் அந்த அழகன் சொல்லிய ஒரு வரி கூட உண்மை இல்லையே. மாதவன் அவனை அழைத்து சாவியை கொடுக்கவே இல்லை எனும் போது பகீரென இருக்காதா என்ன.
     “ஏன்டா மாதவா! நீதா சாவிய கொடூத்தூட்டியா?” அவன் தந்தை கேட்டதற்கு மாதவன் இல்லை என தலை அசைக்க போக அவன் தலையோ அவன் சொல்லாமலே ஆம் என ஆடியது.
     “அப்ப இவ்ளோ நேரம் சாவிய காணோம்னு பேசும் போது வாயை தொறந்து சொல்லி இருக்க வேண்டியதானே” கார்மேகம் கடுப்பில் கத்த
     “என்னை எங்க சொல்ல விட்டீங்க. நீங்கதான் பேசிகிட்டே இருந்தீங்களே. அப்புறம் எப்படி நான் சொல்றது” என மாதவன் பதிலளித்தான்.
     இன்னும் சொல்ல போனானல் மாதவனின் வாயை யாரோ ஒருவர் கடன் வாங்கி பதிலளித்தனர் என சொன்னால் அது சரியாக இருக்கும்.
     ‘என்னடா இது நாம நினைக்காததை எல்லாம் நம்ம வாய் தானா பேசுது. நம்ம வாய யாருடா வாடகைக்கு எடுத்திருக்கா? ஐயையோ இந்த வீட்டுக்குள்ள நுழைய முன்னாடியே ஏதேதோ நடக்குதே. வசமா வந்து சிக்குறோம் போலையே. மாதவா என்ன ஆனாலும் நீ மட்டும் உள்ள போகவே கூடாதுடா. பனி மழை வெயில்னு எது வந்தாலும் இந்த திண்ணையிலையே படுத்துகூட உயிரை விட்டுடலாம். ஆனா பேய்கிட்ட மாட்டி அடி வாங்கிறதுக்கு எல்லாம் நம்ம பாடில தெம்பு இல்லடா. இப்புடியே வெளிய பதுங்கிரு’
     மாதவன் உள்ளுக்குள் அவன் பாதுகாப்பிற்கு ஒரு முடிவை அவசரமாய் எடுத்தும் “இன்னும் என்ன வெளியேவே நிக்குறீங்க. எல்லாரும் வலது காலை எடுத்து வைச்சு வாங்க உள்ள போகலாம்” என அடுத்ததாய் எல்லோரையும் உள்ளே அழைத்து சாரி இழுத்து சென்றது சாட்சாத் நம் மாதவனே.
     வீட்டின் வெளியிலே வாயில் ஈ நுழையும் அளவு அந்த வீட்டை ரசித்திருந்த அனைவரும் இப்போது உள்ளே சென்று பார்த்து அதன் பிரம்மாண்டத்தில் இன்னும் வியந்துதான் போயினர்.
     “எத்தனை வருஷம் ஆச்சு இந்த வீட்டுக்குள்ள வந்து. ம்ம் நான் இருக்கும் போது இந்த வீடு எப்படி இருந்ததோ அதேமாதிரியே இப்பவும் இருக்கு” அரவிந்தின் ஆனந்தமான குரலில் அவரை சித்து பார்க்க
     “மகனே பாருடா பாரு! உன் அப்பனோட ஸ்டேடஸு எவ்ளோ பெருசுன்னு. நீயும் தான் இருக்கியே ஒரு வீடு குருவிகூடு மாதிரி” அரவிந்த் அது அவரின் வீடும் என்பதை மறந்து பேசியபடி செல்ல
     சித்துவை சுற்றி அனைவரும் இருந்ததால் பல்லை கடித்து கொண்டு அமைதியாக நின்றான். இதற்குமேல் விட்டால் அவன் தந்தை பேசும் பேச்சில் அவனுக்கு நெஞ்சுவலி வந்தாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை என உணர்ந்த சித்து
     “அத்தை நாங்க அவ்ளோ தூரம் வந்தது ரொம்ப டையர்டா இருக்கு. சோ எதாவது ஒரு ரூமுக்கு போய் ரெஸ்ட் எடுக்குறோம்‌. நைட் பேசலாம்” என கதிரையும் வீராவையும் அழைத்து கொண்டு அவன் எதிரே இருந்த அறையை நோக்கி சென்றான்.
     அவன் சென்றதோ அந்த இரண்டு நபர்கள் கப்போர்ட்டுக்குள் போன அறை. அந்த அறைக்குள் மூவரும் நுழையப்போக மாதவனோ “வேண்டாம் வேண்டாம்!” என்று காட்டு கத்தலாக கத்த அவன் குரல் ஒருவருக்கும் கேட்கவில்லை.
     “ஐயையோ வந்த அன்னைக்கே சாவ போறாங்களா” மாதவன் கதற அவன் அருகில் நின்ற அரவிந்திற்கே அவன் குரல் கேட்காதது விந்தை தான். சரியாக அவர்கள் உள்ளே நுழையும் நேரம் அவர்களின் முன்னால் போய் நின்றார் அரவிந்த்.
     மூவரும் ஒருவரை ஒருவர் குழப்பத்துடன் பார்த்து கொள்ள “மகனே இது மை ரூம் நான் டிசைட் பண்ணிட்டேன். நீங்க எல்லாம் பக்கத்து ரூம்க்கு போங்க. என்ன வீராம்மா மாமா சொல்றத கேப்பதானே”
     அரவிந்த் பேசுவதை கேட்டு ஆத்திரமாக வந்தது சித்துவிற்கு‌. ஆனால் அனைவரின் முன்னால் எதுவும் பேச முடியாது நிற்க, “சரி வாங்க அங்கிள் இந்த ரூம்ல இருக்கட்டும். நாம பக்கத்து ரூம்க்கு போகலாம். அங்க வச்சு பேசிக்கலாம்” என மெதுவாக முணுமுணுக்க
     “வேற என்ன பண்ணி தொலைக்க போகலாம்” கடுப்பாய் ஒத்து கொண்டான் சித்து. எனவே இவர்கள் அப்படியே பக்கத்து அறைக்கு நகர்ந்து செல்ல பார்த்திருந்த அவன் அத்தை குடும்பத்திற்கு சற்று குழப்பமாக இருந்தது. ஆனால் அதை பெரிதாக கண்டுக் கொளள்வில்லை.
     மாதவன் ‘தப்பிச்சுட்டாங்க’ என்று மனதிற்குள் ஒரு நிம்மதி பிறக்க “ஏய் செல்லம் நான் பேசறது கேக்குதா? இனிமே நீ தான்டா என் நம்பர் ஒன் செல்லாக்குட்டி. உன்னை வச்சுதான் நான் பெரிய பெரிய விஷயத்தை செய்யப்போறேன். ரெடியா இருந்துக்கோ. இப்ப பாய் செல்லம் வரட்டா…” என்றொரு குரல் காதின் அருகே கேட்க வேர்த்து விறுவிறுக்க நின்றிருந்தான்.
-ரகசியம் தொடரும்

Advertisement