Advertisement

      அரவிந்தின் கேவலமான சிரிப்பில் அவரை முறைத்து வைத்து ‘தூதூ…’ என மெதுவாக துப்பியே விட்டான் சித்தார்த். ‘ச்சே என்னா இது அசிங்கமா போச்சு!’ என நொந்து போய் நின்றார் அரவிந்த்.
     “என்ன தம்பி என்னாச்சு?” சித்து துப்பியதை பார்த்து அலமேலு கேட்க
     “அது ஒன்னும் இல்லைங்க. பல்லு இடுக்குல ஒரு துரும்பு சிக்கி இருந்தது. அதான் துப்புனேன்” என மகன் அழகாய் சமாளித்து வைக்க சரி என்றுவிட்டு இப்போது அலமேலு மேலே பேச துவங்கினாள்.
     “வாங்க தம்பி என் புள்ளை நீங்க என்னை பாக்க சென்னைல இருந்து வந்திருக்கிறதா சொன்னான். நீங்க எல்லாரும் யாருப்பா? என்னை உங்களுக்கு எப்படி தெரியும்?”
     அலமேலுவள்ளி ஒருவித ஆர்வத்துடன் வேகவேகமாக கேட்டு சித்துவை பார்த்தாள். ஏனெனில் திருமணம் முடிந்து இத்தனை ஆண்டுகள் அலுமேலுவை காண்பதற்கு என்று அவ்வளவு தொலைவில் இருந்து எல்லாம் யாரும் வந்தது இல்லை. ஏன் அவர் கணவர் மகன் என அவர்களை பார்ப்பதற்கு கூட ஓரிருவர் வந்ததுண்டு.
     சொந்த பந்தம் என்று பார்த்தால் எல்லோரும் உள்ளூரிலே குப்பை கொட்டி கொண்டிருக்க வெளியூரில் அவ்வளவாக சொந்தங்களும் இல்லை. அந்த ஆர்வத்துடன் தன்னை காண சென்னையிலிருந்து ஆட்கள் வந்திருக்கிறார்கள் என மாதவன் கூறியதில் ஆவலாய் ஓடி வந்திருந்தார் அலமேலுவள்ளி.
     பார்ப்பதற்கு அரவிந்தின் உயரத்தில் ஓரளவு அவரின் சாயலிலே இருந்தார் அலமேலு. அலமேலு பல்லை காட்டிக் கொண்டு நின்றிருக்க அவரோடு வந்த அவள் கணவன் கார்மேகம்தான் வந்திருந்தவர்களை ஆராயும் பார்வை பார்த்தபடி அமர்ந்தார்.
     மாதவனுக்கும் வந்தது யாராக இருக்கும் என தெரிந்துக் கொள்ள ஆர்வமாகதான் இருந்தது. அதுவும் ஒரு அழகிய பெண் வேறு வந்திருக்க இவர்கள் யார் எதற்காக வந்திருக்கிறார்கள் என கேட்பதற்கு அவ்வளவு ஆவல் இருக்கவே செய்தது.
     மூவரும் சித்து என்ன சொல்ல போகிறான் என ஆர்வமாய் பார்ப்பதை கண்டு ‘பார்ரா நம்ம இண்ட்ரோக்கு என் அத்தை பேமுலிக்கு எவ்ளோ ஆர்வம்’ என சிறிது பெருமையாக எண்ணிய சித்து தன்னை அறிமுகப்படுத்தினான்.
     “என் பேரு சித்தார்த் ஆன்டி, இவ வீரசுந்தரி நான் கல்யாணம் செஞ்சுக்க போற பொண்ணு. அப்புறம் அவன் கதிர் அவளோட தம்பி” என தங்கள் பெயர்களை கூறியவன்
     “என் அப்பாவோட பேரு அரவிந்த், உங்க அண்ணா. ஒரு முப்பது வருஷத்துக்கு முன்ன ஊரைவிட்டுகூட ஓடிப்போய்ட்டாரே அவரோட பையன் நான்” என்று துவங்கியதுதான் தாமதம் அமர்ந்திருந்த அலமேலு டக்கென எழுந்து நின்றுவிட்டார்.
     “என்ன… என்னையா சொல்ற என் அண்ணன் மவனா நீயி. நெசமாவேவா சொல்ற” என்று திணறியபடி பேசிய அலமேலுவின் கண்களிலிருந்து எங்கிருந்து வந்ததோ கண்ணீர் பொலபொலவென்று கொட்ட துவங்கிவிட்டது. அப்படியே சிறிது நேரத்திற்கு முன்னர் அரவிந்தின் முகத்தில் வந்த அதே எக்ஸ்பிரஸனை அச்சு அசலாக பெண் சாயலில் காட்டினார் அலமேலு.
     சித்து “ஆமாம் ஆன்டி!” என முகத்தில் ஒரு லிட்டர் பாலை வடியவிட்டபடி அமுல்பேபி லுக்கில் சொல்ல வீரா கதிர் இருவரும் ‘அடப்பாவி’ என பார்த்து வைத்தனர்.
     சித்து கூறிய அடுத்த செகன்ட் அவன் அருகே தாவி சென்ற அலமேலு அவன் இரு கன்னங்களையும் பிடித்துக் கொண்டு “என் ராசா என் அண்ணே மவனாயா நீ. எவ்ளோ பெரிய புள்ளையா இருக்க. இந்த அத்தையா பாக்க எத்தினி வருஷம் கழிச்சு வந்திருக்க எப்படி ராசா இருக்க”
     அலமேலுவள்ளி அறுத பழைய ஹீரோயினை போல் டயலாக்காய் பேசிக் கொண்டே சென்றார்.
     “ஆன்டி ஆன்டி காம் ஆகுங்க. நான் இங்கதான் இருக்கேன் எங்கேயும் போகல” சித்து அவர் கைவளைவில் இருந்தபடி சமாதானம் செய்தான். இந்த காட்சியை பார்த்து ‘இவங்க டிராமா தாங்க முடியலைடா சாமி’ என தன் தலையை திருப்பிய வீரா அப்போதுதான் அங்கு அமர்ந்திருந்த மற்றொரு நபரை கவனித்தாள்.
     அலமேலுவள்ளி  என்னதான் சட்டென்று சித்து கூறியதை நம்பி விட்டாலும் அவர்கள் வெறும் வாய் வார்த்தையாக கூறியதை அவள் கணவன் கார்மேகம் நம்பவிடவில்லை. தினம் தினம் எத்தனை மனிதர்களை அவர் சந்திக்கிறார் இப்படி திடீரென சிலர் வந்து சொந்தம் என்றால் அவர் நம்பிவிடுவாரா.
     சந்தேக கண் கொண்டுதான் பார்த்தார். அதை கவனித்த வீரா ‘ம்க்கும் இந்த பெரிய மனுஷன் பார்வையே சரியில்லையே. சந்தேகமால்ல பாக்குறாரு. சித்து வேற இந்த நேரம் பார்த்து சென்டிமென்டா பேசி பாசத்தை புழிஞ்சிட்டு இருக்காரு’ மனதிற்குள் புலம்பிய வீரா அப்படியே திரும்பி அரவிந்தை பார்க்க
     அவரோ கண்களில் கண்ணீரோடு அவர் மகன் தங்கையின் பாச காட்சிக்கு சாட்சியாக நின்றுக் கொண்டிருந்தார்.
     ‘அங்கிளுமா சரிதான். எப்படா இது முடியும்?’ என்று நினைத்து இவர்களை ஒரு பெருமூச்சுடன் வீரா விதியே என நோக்க, அந்நேரம் “ம்க்கும்” என குதிரை கணைத்ததை போல் குரலை செறுமினார் கார்மேகம்.
     அவர் குரலில் திரும்பிய அலமேலு “என்னங்க என் அண்ணன் பையன பாருங்க. இத்தனை வருஷம் கழிச்சு என்னை தேடி வந்துட்டான்” என்று நெகிழ்ந்து போய் கூற
     “அலமேலு ஒரு நிமிஷம் அமைதியா இரு. நான் வந்தவங்ககிட்ட ஒரு ரெண்டு வார்த்தை பேசிக்கிறேன்” இடைப்புகுந்தார் கார்மேகம்.
     “தம்பி நீங்க சொல்றது எல்லாம் சரிதான். ஆனா இத்தனை வருஷம் கழிச்சு வந்து நீங்கதான் என் மச்சானோட பைன்னா நாங்க எப்படி நம்பறது. அதுக்கு ஏதாவது ஆதாரம் இருக்கா? என் மச்சான் அரவிந்து உங்க கூட வரலையா? நீங்கதான் அவர் மகன்னு சொல்லுற மாதிரி ஏதாவது ஆதாரத்தை முதல்ல காட்டுங்க தம்பி”
     கார்மேகம் பாயிண்ட் பாயிண்டாக அவர் எண்ணியதை எடுத்து வைக்க ‘அப்பாடி ஒருவழியா இந்த டிராமாவ முடிச்சூட்டு அடுத்த கட்ட நடவடிக்கைய எடுத்துட்டாரே இந்த மனுஷன்’ என நிம்மதி கொண்டது வீராவின் மனம். பின் எவ்வளவு நேரம்தான் சித்து அலமேலு அழுது வடிவதை பார்ப்பது.
     “அங்கிள் அப்பா ஒரு மாசத்துக்கு முன்ன தவறிட்டாரு. அவர் இறக்கிறதுக்கு முன்னாடி மரண படுக்கையில இருக்கும் போது அவர் சொந்த ஊர் இது, இங்க ஒரு தங்கச்சி இருக்காங்கன்னு எல்லாம் சொன்னார்.
     அதுவரைக்கும் கூட எங்களுக்கு இப்படி சொந்தம் இருக்கிறது எனக்கு தெரியாது அங்கிள்” என்ற சித்து அப்பட்டமான பொய்யை அடித்துவிட, அவன் கூறியதில் தன் கவலையில் இருந்து வெளிவந்த அரவிந்த்
     “எதே நான் சாவரதுக்கு முன்ன மரண படுக்கையில இருந்தனா? என்னமோ நான் சீக்கு வந்து செத்த மாதிரி சொல்றான். டேய் மவனே உன் நைனா தூங்கத்துல செத்து வீர மரணம் அடைஞ்சேன்டா” என தன் பங்கிற்கு தானும் கத்தினார்.
     ஆனால் அதை எல்லாம் சிறிதும் காதில் வாங்காத சித்து அவன் அத்தையுடன் ஆழ்ந்துவிட்டான். “ஐயோ அங்கிள் கொஞ்ச நேரம் சும்மா இருங்கலே” இவர் பேச்சை தாங்காது பேசியது என்னவோ வீரசுந்தரியே.
     “என்ன என் அண்ணா இப்ப உயிரோடயே இல்லையா” அதிர்ந்து கேட்ட அலமேலு மேலும் அழுகையை கூட்ட அவளை கவனித்தனர் வீரா அரவிந்த் இருவரும். இதை கேட்டு கார்மேகமே சற்று அதிர்ந்து தான் போனார். இப்போது அரவிந்தும் அமைதியாக அந்த இடமும் அமைதியாக இருந்தது.
     “அங்கிள் இப்படி யாருன்னே தெரியாத ஒருத்தன் வந்து உங்க சொந்தகாரன்னு சொன்னா ஷாக்கா தான் இருக்கும். உங்களுக்கு சந்தேகம் வரது கரெக்ட் கூட. இங்க பாருங்க” என அதன்பிறகுதான் தன் போனில் இருந்த சில போட்டோக்களை எடுத்து காட்டினான் சித்து.
     அதில் சித்து அரவிந்தின் புகைப்படங்கள் நிறைய இருக்க, அதன் ஹைலைட்டே கடைசியாக இருந்த பத்திரங்களின் புகைப்படங்கள் தான்.
     “இது என்ன தம்பி” என கார்மேகம் தன் சந்தேகத்தை உறுதி செய்ய கேட்க “இது அப்பா இங்க அவர் பேர்ல இருக்க லேண்ட் டாக்குமெண்ட்ஸ்னு சொன்னார் அங்கிள். அவர் ஊரை விட்டு வரப்போ இதை எல்லாம் சேத்துதான் எடுத்துட்டு வந்ததா சொன்னாரு” என அவர் எண்ணியதை உறுதி செய்தான்.
     “ஓஓ.. சரிங்க தம்பி. அந்த பத்திரத்தை எல்லாம் எடுத்துட்டு வந்திருக்கீங்களா இப்போ”
     “இல்ல அங்கிள் நிறைய டாக்குமெண்ட்ஸ் இருந்தது. எடுத்துட்டு வரும் போது மிஸ் ஆகிட்டா என்ன செய்ய. எல்லாமே முக்கியமான டாக்குமெண்ட்ஸ் மாதிரி இருந்தது அதான் அங்க சென்னைலையே பேங்க் லாக்கர்ல வச்சிட்டு அதை போட்டோ மட்டும் எடுத்துட்டு வந்தேன் அங்கிள்”
     கார்மேகத்தின் கேள்விக்கு பதில் அசராது அடித்தான் சித்து‌. பின்னே பத்திரங்களை எடுத்து வந்து இங்கு ஆட்கள் யாரும் தெரியாத ஊரில் அவனை யாரேனும் ஏமாற்றிவிட்டால் என்ன செய்வது என்ற பயமே. அதனால் இப்படி போட்டோ மட்டும் எடுத்து வந்திருந்தான். அதில் எல்லாம் அவன் அரவிந்தின் மினி ஜெராக்ஸு மிஷின்தான்‌ அவ்வளவு விவரம்.
     இதை எல்லாம் பார்த்த பின்னரே சித்துவை முழுதாக கார்மேகம் நம்பினார் எனலாம். அதன்பின் என்ன நீண்ட நாள் சென்று வந்த தன் அண்ணன் மகனுக்கு தடபுடலாக விருந்து தயார் செய்ய கிளம்பிட்டார் அலமேலு. தன் அண்ணனை கவனிக்க முடியாது போனதால் அவர் மகனை நன்றாக ஊட்டி ஊட்டி கவனித்தார்.
     என்ன கவனிப்பு கொஞ்சம் ஓவர்புளோ ஆகி கொண்டுதான் சென்றது‌. ஆரம்பத்தில் ஆனந்த கண்ணீரில் இருந்த அரவிந்தோ தற்போது இரத்த கண்ணீரில் நின்றார். பின்னே இருக்காதா ஆடு கோழி மீன் என வகைத்தொகையாய் டேபிலில் இருக்க அவர் மகனோ அதை எல்லாம் வெட்டு வெட்டு என வெட்டிக் கொண்டிருக்க, அரவிந்தால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது‌.
     “ச்சே என் தங்கச்சி என்மேல வச்சிருக்க பாசத்துல இடி விழ. குத்துக்கல்லு மாதிரி அவ அண்ணங்காரன் நிக்குறேன் ஒரு வாய் சோறு போடாம என மவனுக்கு அள்ளி அள்ளி போடுறாளே” தான் அவள் கண்ணுக்கு தெரியமாட்டோம் என்ற புத்தியே இல்லாது தன் நெஞ்சில் அடித்துக் கொண்டு சோறு கிடைக்காத கடுப்பில் நின்றிருந்தார் மனிதர்.
     “ஐயோ சோறு.. சிக்கனு.. மட்டனு..” சந்திரமுகி ஜோதிகா போல் சாப்பாட்டை பார்த்து கதறிய அரவிந்திற்கு பாவம் பார்த்து யாரும் அறியாமல் வீரா தான் இரண்டு சிக்கன் துண்டுகள் கொஞ்சம் மட்டன் பிரியாணி என அனைத்திலும் கொஞ்சம் கொஞ்சம் தந்து வைத்தாள்.
     “என் ராசாத்தி! நீதான்மா என் மருமவ. இந்த பைய தனியா சிக்கட்டும் அப்ப பாத்துக்கிறேன்” என அனைத்தையும் தின்று முடித்த அரவிந்த் பொறுமியபடி இருக்க
     “ஹப்பா என்னா சாப்பாடு என்னா சாப்பாடு. இப்படி ஒரு சாப்பாட்ட நான் சாப்பிட்டதே இல்ல அத்த. ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது” ஒரு கூடை ஐசை அள்ளி அசால்டாக அலமேலுவின் தலையில் வைத்தான் சித்து.
     இதையெல்லாம் பார்த்த வீராவின் மனமோ ‘சரியான சோத்துக்கு செத்த குடும்பமால்ல இருக்கு. இது தெரியாம வந்து காலை வச்சிட்டோமா’ என அபாய மணி அடிக்க, ‘இனி என்ன அடிச்சு என்ன செய்ய இவருக்கு காலம்பூரா ஆக்கிப்போட்டே அழுவனும் போலையே’ என மனதிற்குள் ஒரு நிமிடம் கலங்கி விட்டாள் வீரா‌.
     ‘நோ வீரா நெவர். அவ்ளோலாம் நாம கஷ்டபட முடியாதே. சோ வெரைட்டியா சோறு வேணும்னா சித்துவையே கிச்சன் உள்ள தள்ளி ஆக்க விட்டுருவோம்’ என தக்க சமயத்தில் அவள் மூளை ஐடியாவை தர அதுதான் சரி என அவளும் முடிவு செய்த பின்னரே சற்று நிம்மதியானாள்.
     இவ்வளவு நேரம் இவர்கள் நடத்திய பாச போராட்டத்தில் கதிரே கடுப்பாகி “அக்கா சித்து மாமா எப்போ முடிப்பாரு?” என கேட்கும்படி கொஞ்சம் ஓவராகதான் சென்றுக் கொண்டிருக்க
     “அத்த ஒரு முக்கியமான விஷயம் பத்தி பேசனும். நானும் நினைங்சிட்டே இருந்தேன் மறந்துட்டேன் பாருங்க. அப்பா அவருக்கு இங்க ஒரு வீடு இருக்கிறதா சொன்னாரே. அந்த வீடு எங்க இருக்கு? நாங்க அங்க போகனுமே” என மெதுவாக ஆரம்பித்தான்.
     இதுவரை நடந்த கூத்துகளை கண்டுக் கொள்ளாது விதியே என அமர்ந்திருந்த மற்றொரு ஜீவன் மாதவன் இதை கேட்டவுடன் டக்கென்று திரும்பி பார்த்தான்.
     “அந்த வீட்டை பத்தி எதுக்கு ராசா கேக்குற? நம்ம வீடே நல்லா பெருசாதானே இருக்கு‌. இங்கையே நீங்க தங்குங்கப்பா. இத்தனை வருஷம் கழிச்சும் என் அண்ணனோட இருக்க முடியலை. உன்னோடையாவது இருக்கேனே” அலமேலு செண்டிமென்டை டச் செய்ய
     “அதனால என்ன அத்தை இனிமே இன்னும் கொஞ்சம் நாள் ஏன் ஒன்னு ரெண்டு மாசம் இங்கதான் இருக்க போறோம். அதுவரைக்கும் நீங்களும் எங்கக்கூடவே அந்த வீட்ல வந்து தங்கிக்கோங்க. என் அப்பா வாழ்ந்த வீட்ல கொஞ்ச நாள் நானும் இருக்க ஆசைப்படுறேன். முடியாதுன்னு மட்டும் நீங்க சொல்லவே கூடாது”
     சித்து கூறிய அடுத்த நொடி “எதே…!” என அதிர்ந்துபோய் எழுந்தே விட்டான் மாதவன். ஆனால் அவனை கவனிக்கதான் அங்கே ஆள் இல்லை. அவனோ அந்த வீட்டின் பக்கமே தலை வைக்க கூடாது என எண்ணியிருக்க விதி அவனை அந்த வீட்டுக்குள்ளே அழைத்து செல்ல மன்னிக்கவும் வான்டட்டாக இழுத்து செல்ல ஊரிலிருந்து ஒருவனை தள்ளி வந்திருப்பதை என்ன சொல்ல…!
-ரகசியம் தொடரும்

Advertisement