Advertisement

     மாலை நேர காற்று இதமாக வீசிக் கொண்டிருக்க, அதை எதையும் உணராமல் அந்த ரயில் நிலையத்தில் இருந்த மக்கள் பரபரவென நகர்ந்து சென்றுக் கொண்டிருந்தனர்‌.
     கல்லூரி முடிந்து செல்லும் மாணவர்கள், அலுவலகம் முடிந்து செல்லும் அலுவலர்கள் என பலர் அவர்களின் இல்லங்களுக்கு செல்ல ஒருவரை ஒருவர் முட்டி மோதி ரயிலில் ஏறிக் கொண்டிருந்தனர்.
     அந்த கும்பலை ஒரு புன்சிரிப்புடன் பார்த்தபடி ஒரு கையில் தன்னுடைய ஸிலிம் பேக்கை மாட்டிக் கொண்டு, மற்றொரு கையில் சிறிய வாக்கிங் ஸ்டிக்கை பிடித்துக் கொண்டு ஒரு ரயிலை விட்டு இறங்கி வந்துக் கொண்டிருந்தாள் அவள்.
     அவளின் பால் நிற மேனியை பார்த்த அனைவரும் ஓரு நிமிடம் அவளை திரும்பி பார்க்க,
     அவள் கண்ணில் போட்டிருந்த பெரிய கண்ணாடியும் அவளின் வாக்கிங் ஸ்டிக்கையும் சேர்த்து பார்த்து முகத்தை திருப்பி சென்றனர்.
     ‘இந்த மாதிரியான பார்வைகள் என்னை ஒன்றும் பாதிக்கவில்லை’ என்பது போல் அவளும் முகத்தில் மாறா மென்னகையுடன் நடந்துக் கொண்டிருந்தாள்.
     யாரோ அப்படி அவள் போகும் போது அவளை இடித்து விட்டு செல்ல “ஐயோ” என அலறியவாறு தடுமாறி விழ சென்றுவிட்டாள்.
     அதை கண்டு பதறி பக்கத்தில் நின்ற காவல் அதிகாரி அவளை தாங்கி பிடித்தார். சுற்றி சிறு கூட்டம் கூடிவிட்டது.
     “என்னாச்சுமா என்னாச்சு. அடி எதுவும் பட்டிருச்சா” என சுற்றி நின்றிருந்தவர்கள் அனைவரும் அவளிடம் பரிதாபப்பட்டு விசாரிக்க
     “அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க. எனக்கு எதுவும் ஆகலை. நான் நல்லா இருக்கேன்” என அவர்களிடம் பொதுவாக கூறியவள் “எல்லாருக்கும் ரொம்ப நன்றிங்க” என்றுவிட்டு நகர்ந்தாள்.
     “பொண்ணு ரதியாட்டம் இருக்கு. இந்த பொண்ணுக்கு ஆண்டவன் இப்படி ஒரு குறைய குடுக்காம இருந்திருக்கலாம்”
     அங்கே கூட்டத்தில் சில குரல்கள் இவ்வாறு கேட்க அதையுமே சிறு சிரிப்புடன் கடந்து சென்றாள்.
     அந்த ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறிய சில நிமிடங்களில் அவள் முகத்தில் இருந்த சாந்த புன்னகை குறும்பு சிரிப்பாக மாறிவிட்டது.
     ஒரு பக்கம் தாங்கியபடி வைத்து நடந்த கால்களை நேராக வைத்து சாதரணமாக நடந்து வந்து அவள் கையில் பிடித்திருந்த வாக் ஸ்டிக்கை அதே கையால் மேலே தூக்கிப் போட்டு பிடித்தாள்.
     அதை ஸ்டைலாக மடித்து தன் பைக்குள் வைத்துக் விட்டு‌ அதில் இருந்து ஒரு கூலர்சை எடுத்து தன் கண்ணில் இருந்த பெரிய கண்ணாடியை கழட்டி அதற்கு பதில் இதை கண்களில் மாட்டிக் கொண்டாள்.
     இறுக்கி கொண்டை இட்டிருந்த முடியை பிரீ ஹேராக எடுத்து விட்டுக் கொண்டு,
     இதற்கு முன் ஒரு காலை விந்தி வந்தது இவள் தான் என யாரும் சத்தியம் செய்து சொன்னாலும் அதை யாராலும் நம்ப முடியாத தோற்றத்திற்கு வந்திருந்தாள்.
     அங்கிருந்த மறைவான ஒரு இடத்திற்கு சென்று தன் பைக்குள் கையை விட்டு இருந்த பணத்தை எல்லாம் எடுத்து எண்ணி பார்த்தாள்.
     “ஆ ஒன்னு ஆ இரண்டு” என ஆரம்பித்து “ஆயிரம் ரூபா தேறிறுச்சா பரவாயில்லையே. யார்கிட்ட பணத்தை அடிக்கன்னு யோசிட்டு இருந்தேன். எவனோ நம்மள இடிக்க போயி அதுக்கு ஒரு கூட்டம் கூடி அவனுங்களே நமக்கு உதவி பண்ணிட்டானுங்க.
     அவன் அவன் எடுக்குற முடிவு நமக்கு சாதகமா தான்யா முடியுது‌. இன்னைக்கு செலவுக்கு இது போதும்” என்று நக்கலாய் நினைத்தபடி மகிழ்வுடன் அதை பைக்குகள் பத்திரப்படுத்தி கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
     அவள் வீரசுந்தரி. பெயரில் இருப்பது போல் அவளுக்கு வீரம் எப்போதும் ஒரு படி அதிகமாகவே இருக்கும்.
     யாரும் அறியாமல் அவர்கள் பர்சை எடுத்து அதில் இருக்கும் பணத்தை திருடிவிட்டு, மீண்டும் எடுத்த இடத்திலே பர்சை வைத்துவிடுவதில் வீரசுந்தரியை அடித்துக் கொள்ள யாரும் இல்லை.
     திருடி பிழைத்தாலும் அவளுக்கு சில கோட்பாடுகளை வைத்திருக்கிறாள். அது என்னவென்றால் அவளின் அன்றாட தேவைகளுக்கு உண்டான பணத்தை மட்டும் திருடிக் கொண்டால் அதற்கு மேல் அன்று திருட செல்லவே மாட்டாள்.
     அவள் திருடி என்பதை இதுவரை யாருக்கும் தெரியாமல் கவனமாக மறைத்து களவாடி செல்லும், திருட்டு படிப்பில் பி.ஹச்.டி பட்டம் பெற்ற அக்மார்க் திருடி தான் இந்த வீரசுந்தரி.
     வேகமாக வந்த சுந்தரி அந்த சந்திற்குள் நுழைந்தாள். அந்த இடத்தை பார்க்கும் போதே தெரிந்தது அந்த இடம் ஏழைகளின் வசிப்பிடம் என.
     சிறிய குறுகலான சத்துக்கள், பெயருக்கு என போடப்பட்டு பள்ளம் பள்ளமாக இருந்த சாலைகள். அதில் ஆங்காங்கு தேங்கி நிற்கும் மழைநீர் என மொத்தமும் அங்கே நிறைந்திருந்தது.
     “வா வீரா என்ன வேலை முடிஞ்சு போச்சா. இன்னைக்கு சீக்கிரமே வீட்டான்ட வந்துட்ட”
     அடிபைப்பில் தண்ணீர் அடித்துக் கொண்டிருந்த ஒரு பெண்மணி சுந்தரியிடம் கேட்டார்.
     “ஆமா கங்கா க்கா” என்று சொல்லி நகர பார்த்த சுந்தரியை “வீரா ஒனக்கு ஒரு சேதி தெரியுமா” என தெருவில் நடந்த ஏதோ ஒரு கதையை சொல்ல‌த் துவங்கினார்.
     “அப்படியா க்கா. பாரேன் எனக்கு இது தெரியாம போச்சே” என அந்த பெண்மணி பேசியதை வாயில் கை வைத்து கதை கேட்கும் பாவனையில் கேட்டிருந்த வீரா பேசி முடித்தபின்
     “எக்கா ஊர்ல இருக்க எல்லா நியூஸும் உன் கைல தான் போல. ஆனா பாரேன் உன்ற புருஷன் போற வர பொண்ணுங்கட்ட வம்பு பண்ணி அடி வாங்குறது உனக்கு தெரியாம போச்சு”
     வியப்பு போல் இந்த விஷயத்தை கூறும் போதே “எங்க வீரா அந்த மனுஷன்” என்று பொங்கிய கங்கா அருகில் கிடந்த ஒரு துடைப்பத்தை கையில் எடுத்து கொண்டாள்.
     “எக்கா அண்ணே இந்த தெரு முக்குல நின்னு தான் பொண்ணுங்கள டாவ் வுட்டு அடிவாங்கிட்டு நின்னுட்டு இருந்துச்சு” என்று வீரா சமர்த்தாய் போட்டுக் கொடுத்து விட்டாள்.
     ‘ஒரு தென்றல் புயலாகி வருதே’ என்ற பி.ஜி.எம் போட்டது போல் கங்காவும் துடைப்பத்தை வாள் போல் தூக்கிக் கொண்டு, காற்றில் முடிகள் எல்லாம் பறக்க புயலாக சென்றாள் தன் கணவனை புரட்டி எடுக்க.
     “எக்கா பாத்து பதமா பண்ணிவிடு க்கா” வீராவின் போலியான கத்தலை கூட காதில் வாங்காது சென்றிருந்தாள் அந்த வீரப்பெண்.
     ஒரு பெண்ணை கிண்டல் செய்ய போய் செமத்தையாக அடி வாங்கி ஒரு ஓரமாக அமர்ந்திருந்த கந்தசாமயின் முன் இப்போது துடைப்பத்துடன் கங்கா முழு சந்திரமுகியாகி நின்றிருந்தாள்.
     “ஏன்யா எவ்ளோ தைரியம் இருந்தா பொம்பள பிள்ளைக கிட்ட வம்பிலுத்திருப்ப. என்கிட்ட எவ்ளோ அடி வாங்கியும் திருந்தமாட்டியா நீ”
     பேசிக் கொண்டே கையில் வைத்திருந்த துடைப்பத்தால் போட்டு புரட்டி எடுத்து விட்டாள் கங்கா. ஏற்கனவே ஆட்களிடம் அடிவாங்கியதில் பாதி போதை இறங்கியிருக்க, கங்கா அடித்ததில் மீதி போதையும் இறக்கிவிட
     “ஐயோ எல்லா போதையும் இறங்கி போச்சே. இப்ப மறுபடி சரக்கு அடிக்க காசுக்கு நான் எங்க போவேன்” என்று தலையில் கைவைத்து அமர்ந்து விட்டான் கந்தசாமி. அவனுக்கு அவன் கவலை!
     அங்கே கந்சாமியை மாட்டிவிட்ட நிம்மதியில் தன் வீட்டை அடைந்த சுந்தரி “என்னடா கதிரு. படிக்கிறியா” என்று தன் தம்பியிடம் கேட்டுக் கொண்டே உள்ளே வந்தாள்.
     இந்த வீரசுநத்ரியின் ஒரே ஒரு உறவு உலகம் என்று சொன்னால் அது அவள் தம்பி கதிரவனே‌. தாய் தந்தை உறவினர் என்று சொல்லிக்கொள்ள இருவருக்கும் யாரும் இல்லை.
     அப்படி இருக்கும் இந்த இருவருக்கும் அவர்கள் இருக்கும் குப்பத்து மக்கள் தான் எல்லாமுமாக இருக்கிறார்கள்.
     “ஆமா க்கா” என்ற கதிரிடம் “இந்தாடா கதிரு நோட்டு வாங்க காசு கேட்டுரிந்தியே இத வச்சு வாங்கிக்கடா” என்று தான் கொண்டு வந்த காசில் கொஞ்சம் கொடுத்துவிட்டு சமையலை கவனிக்க சென்றாள்.
     அதே நேரம் கங்கா வெளியே கத்திக் கொண்டிருக்க “க்கா என்ன கங்கா க்கா சலம்பிட்டு இருக்கு?” என்று கேட்க
     “அதுவா கந்தன் அண்ணே அங்க பொண்ணுங்க கிட்ட உரண்டைய இழுத்துக் கிட்டு இருந்துச்சுடா. அதான் கங்கா க்காட்ட பதமா கோர்த்தூட்டு வந்தேன்” என்று சாதாரணமான கூறி அவள் வேலையை பார்க்க
     “எக்கா என்னக்கா இவ்ளோ அசாலட்டா சொல்ற. கங்கா க்கா அதான் இந்நேரம் கதகளி ஆடிட்டு போகுதா” என்று தானும் சிரித்தவன் தன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.
—————————————–
     அலுவலகம் சென்றுவிட்ட வந்த சித்து தன் லேப்டாப் பையை கடுப்புடன் ஹாலின் டேபிலில் பொத்தென்று போட அவன் கோபம் அதிலே தெரிந்தது.
     ‘ஆத்தாடி பயங்கர கோபமா இருக்கான் போலையே. இவனை முதல்ல கூல் பண்ணனுமே’ என்று நினைத்தபடி அவனை சரிகட்ட நினைத்தார் அரவிந்த்.
     “சித்து கண்ணா இந்தாடா காபி” என கண் சிமிட்டி பாவனையாய் சொல்ல முறைத்தபடி தான் நின்றிருந்தான் சித்து.
     இருவருக்கும் காலையில் நடந்த விஷயங்கள் தான் கண் முன்னே வந்தது. முதலில் வந்த பிரியா வீட்டினர் சென்ற கொஞ்ச நேரத்திலே அந்த பாட்டியின் வீட்டில் இருந்து வந்து பெரிய ரகளை செய்தனர்.
     “ஏன்டா வயசான கெழவிய கூட விடமாட்டிங்களாடா” என தெருவுக்கே கேட்க கத்த அரவிந்த் சமர்த்தாக ரூமினுள் அமர்ந்திருக்க,
     அங்கிருந்த அனைவரையும் அசாராது இரண்டாவது ரவுண்டு சென்று சமாளித்து வந்தான் சித்து. அதில் அவனுக்கு மிகவும் நேரமாகிவிட்டது.
     அதன்பின் சமையல் செய்து குளித்து கிளம்பி அலுவலகம் சென்று சேர வெகு தாமதமாகிவிட்டது. அதில் அவன் சொட்டை தல மேனேஜர் வேறு வைத்து செய்துவிட்டார்.
     அந்த நல்ல வார்த்தைகளடோ அந்த நாளை துவங்கிய சித்துவிற்கு அந்த நாள் தன்னால் முடிந்த அளவு அடிகளை தந்து செல்ல நொந்து போய் வந்து சேர்ந்துள்ளான்.
     அந்த கோபத்தை எல்லாம் அவன் தந்தையிடம் காட்ட முடியுமா என்றால் அதுவும் இல்லை. அதுஅதுக்கு ஒரு கவுண்டர் கொடுத்து வாயை அடைத்து விடுவார் மனிதர்.
     “ஏன்யா நான் இப்ப காபி கேட்டேனா. காலையில் தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் ஒரு வெங்காயத்தை வெட்டி தரியா. நானே சமைச்சு கொட்டனும். இப்ப மட்டும் என்ன வெங்காயத்துக்கு காபி” என எகிற
     அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொண்டால் அது அரவிந்த் இல்லையே. எனவே தெனாவெட்டாக போய் சோஃபாவில் அமர்ந்தவர் அந்த காபியை எடுத்து உறுஞ்சியவாரு
     “அதான் நீ ஸ்கூல் காலேஜுன்னு போறப்ப உனக்கு ஆக்கி கொட்டிட்டு தானே நான் வேலைக்கு போனேன். இப்ப நீ வேலைக்கு போற நான் ரிட்டையர்ட் ஆகிபுட்டேன்.
     நான் புல் ரெஸ்ட்ல தான் இனிமே இருக்கனும். அதுதான் உலக நியதி. அதுனால மகனே நீதான் எனக்கு வடிச்சு கொட்னும். போவியா” என்று டீவியை போட்டு அமர்ந்து கொண்டு மீதி காபியை குடித்தார்.
     “எம்மா ஆத்தா! இந்த மனுசன எப்படிமா நீ காதல் பண்ணி இழுத்துட்டு ஓடியாந்த. எப்படி பதனஞ்சு வருஷம் குப்ப கொட்டுன” என என்றோ இறந்துப் போயிருந்த தன் அன்னை புகைப்படத்தை பார்த்து சத்தமாக புலம்பி விட்டு சென்றான்.
     எங்கே என்றால், ‘இப்படியே புலம்பிட்டு இருந்தா யாரு ஃநைட் சோறு ஆக்குறது’ என்று நொந்துப் போய் சென்றுவிட்டான்.
     “மவனே ஃநைட் எனக்கு சப்பாத்தி பன்னீர் குருமாடா” என்ற குரலில்
     ‘இப்படியே இந்த ஆள கொன்னுட்டா என்ன’ என்றே யோசித்து வைக்க “மவனே அவ்ளோ சீக்கிரம் உன் சோலிய முடிக்காம நான் சாவமாட்டேன்டா” என்றார் அரவிந்த் அவன் மனவோட்டத்தை அறிந்தவர் போல்.
     அதற்கு மேல் என்ன இனி சமையல் அறையில் கரண்டியுடன் சண்டை தான்.
-ரகசியம் தொடரும்

Advertisement