Advertisement

     “புத்தும் புது காலை…
       பொன்னிற வேளை…
       என் வாழ்விலே
       தினந்தோறும் தோன்றும்
       சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்…”
     பஸ்ஸில் பாடல் ஓடிக் கொண்டிருக்க அதோடு சேர்ந்து தானும் பாடியடி இல்லை இல்லை கத்திக் கொண்டு வந்தார் அரவிந்த்.
     ‘ஆண்டவா இந்தாளோட முடியலையே’ என நொந்துப்போய் வந்தது சித்துவே. ஏனெனில் மனிதர் கரடியாய் கத்துவது இவன் காதுகளில் தானே கேட்கும். இவர்களுக்கு முன்னால் இருந்த இருவர் சீட்டில் அமர்ந்து சிரித்து பேசியபடி வந்த வீராவையும் கதிரையும் எட்டி பார்க்க
     இருவரும் இந்த உலகிலே இல்லை. ஏதோ பேசி சிரித்து கொண்டு வர சித்துவின் பாடுதான் திண்டாட்டம். அதுவும் அரவிந்திடம் எதுவும் பேசவும் முடியாதே. அப்படி இவன் பேசுவதை யாராவது பார்த்தால் ‘பையித்தியமா இவன்?’ என நினைத்து செல்ல வாய்ப்பு உண்டு என பல்லை கடித்துக் கொண்டு அமைதியாக வந்தான்.
     நேற்று இரவு சென்னையில் இருந்து திருச்சி கிளம்பிவிட்டனர் நால்வரும். பஸ் நிலையத்திற்கு வந்து ஏசி கோச்சில் ஏன் தனக்கு ஒரு டிக்கெட் போடவில்லை என அங்கேயே வைத்து அரவிந்த் சண்டையை இழுக்க
     “இங்க பாரு நைனா பேய்க்கு எல்லாம் டிக்கெட் தரமாட்டாங்கலாம். நீ அப்படியே பிளையிங்ல வாயே. இல்லனா ஒன்னு பண்ணு பஸ் மேல உக்காந்துட்டு வா. இப்ப எங்கள டிஸ்டர்ப் பண்ணாத”
     சித்து அரவிந்திடம் வம்பு பேசி பஸ்ஸில் ஏற “ஐயோ நல்ல ஸ்லீப்பிங் கோச்சு ஏசி வேற. இந்த பையன் மட்டும் நல்லா தூங்கிட்டு வருவான் நான் பஸ் மேல உக்காந்துட்டு வரணுமா? நோ நெவர்” என தானும் ஏறியவர் டிரைவர் சீட்டிற்கு பக்கத்திலே அமர்ந்துவிட்டார் மனிதர்.
     இப்படி நால்வரும் அலப்பறையாக கிளம்பி வர திருச்சியில் இருந்து திண்டுக்கல் மாவட்ட பேருந்தியில் ஏறிய நேரம் பாடல்கள் எல்லாம் அரவிந்தின் விருப்ப பாடல்களாய் போக கத்தி கத்தி அவர் மகனை கதற வைத்துக் கொண்டிருக்கிறார்.
     ஒருவழியாக அரவிந்த் சாகசங்கள் அனைத்தையும் பொறுத்தபடி வத்தலகுண்டு செல்லும் பேருந்தை விட்டு இப்போது இறங்கி நின்றனர் அனைவரும்.
     “ஆஹா…‌” மூச்சு காற்றை நன்றாக உள் இழுத்து வெளியே விட்ட அரவிந்த் “சொர்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா” தன் திருவாயை திறந்து மீண்டும் பாட
     “ஊரை விட்டு ஓடி போனப்ப தெரியலையா நைனா இது சொர்கம்னு. மனசுல பெரிய இளையராஜானு நினைப்பு. அப்படியே வாய மூடிட்டு வா நைனா கடுப்பேத்தாம” என கடுப்படித்தான்.
     “சரி சரி உங்க சண்டைய ஒரு டூ மினிட்ஸ் நிறுத்திட்டு அங்கிள் ரிலேட்டிவ் வீடு, அதான் உங்க அத்தை வீடு எங்க இருக்குன்னு யார்டையாவது கேப்போம்” இவர்கள் இருவரும் சண்டையை ஆரம்பித்தால் அவ்வளவுதான் என இடையே புகுந்து கலைத்துவிட்டாள் வீரா‌.
     இப்படி இவர்கள் நால்வரும் ஒருவருக்கொருவர் பேசியபடி நடந்து வர அங்கு அந்த கிணத்தில் சடலத்தை காண ஓடிய கிழவி அவள் வீட்டு திண்ணையில் அமர்ந்து இவர்களை உற்று உற்று பார்த்தது. அதை கவனித்த வீரா
    “அங்கிள் ஆள் சிக்கிருச்சு. அங்க பாருங்க கரெண்டே இல்லாத சிசிடிவி கேமரா அங்க ஒன்னு இருக்கு அதுகிட்ட கேட்டா ஆல் டீட்டெய்ல்ஸ் கிடச்சிடும்”
     வீரா கைக்காட்டிய இடத்தில் அந்த கிழவி வாயில் வெத்தலையை அதக்கி கொண்டு கையில் இடிக்கல்லில் டொக்கு டொக்கு என இடித்திக் கொண்டிருந்தது.
     “கரெக்ட் வீரா அந்த கிழவி வாய் வெத்தலைய மெல்லுற ஸ்டைல்லையே தெரிது அது கண்டிப்பா இந்த வில்லேஜ்ல பெரிய சிசிடிவியா இருக்கும்னு. வா போய் கேக்கலாம்” தானும் ஒத்துக் கொண்ட சித்து அனைவரோடும் அந்த கிழவியிடம் சென்றான்.
     “பாட்டி பாட்டி எங்களுக்கு ஒருத்தரை பத்தி தெரியனும். இங்க அரவிந்த்னு ஒருத்தர் இருந்தார். அவர்கூட ஒரு முப்பது வருஷத்துக்கு முன்னாடி ஓடி போயிட்டாரு. அவருக்கு ஒரு தங்கச்சி ஆன் அங்க பேர் கூட அலமேலுவள்ளினு அவங்க வீடு எங்க இருக்கு?”
     சித்து கேட்டு நிறுத்த கிழவி அவனை மேலிருந்து கீழாக ஒரு மாதிரி பார்த்து “அதை கேக்குறியே நீ யாரு தம்பி? ஊருக்கு புதுசா இருக்க. உன்கிட்ட நான் ஏன் சொல்லனும்” என்றது நக்கல் தொனியில்.
     ‘கிழவி கூட நம்மல மதிக்க மாட்டேங்குதே’ நொந்துபோன சித்து “நான் அந்த அரவிந்தோட பையன் பாட்டி. என் அத்தை பேமிலிய மீட் பண்ண வந்திருக்கேன்‌. அவங்க வீடு எங்க இருக்குன்னு மட்டும் சொல்லுங்க” என மீண்டும் கேட்டான்.
     இப்போது கிழவியின் கண்கள் இரண்டும் ஜூம் ஆகி சித்துவை ஆஆவென பார்த்து “ராசா நீ முத்தரசன் ஐயா பேரனா?” என்றது.
     அதில் முழித்த சித்து “நைனா உன் அப்பா பேர் முத்தரசனா?” என மெதுவாக ஹஸ்கி வாயிசில் கேட்க “ஆமாண்டா மகனே அவர்தான் என் நைனா உன் தாத்தா” என்றார் மகிழ்ச்சியாக.
     அவர் முகத்தை பார்த்து “எப்பா என் நைனா மூச்சில என்னா சந்தோஷம்” என தானும் மகிழ்ந்த சித்து “ஆமா பாட்டி” என்றான் சிரிப்புடன்.
     சித்து ஆம் என்றவுடன் “ஆத்தி எங்க முத்தரசு ஐயா பேரானாயா நீயி பாரேன் எவ்ளோ அழகா ராசா மாதிரி இருக்க” என கிழவி பல பிட்டுகளை அள்ளிவிட மனதிற்குள் பறந்துக் கொண்டு இருந்தான் சித்து.
     பின்னே அவன் வாழ்வில் கேட்கும் முதல் புகழ்ச்சி அல்லவா‌. அவன் முகத்தை பார்த்து ‘அங்கிள் இவரை திட்டுரதுளையும் தப்பே இல்ல. பாரு அந்த கிழவி பேச பேச வந்த வேலையை விட்டுவிட்டு கதை பேசறத’ என கடுப்பான வீரா
     “பாட்டி பாட்டி நாங்க இன்னும் கொஞ்ச நாள் இந்த ஊர்ல தான் இருக்கப் போறோம். அதனால நீங்க மெதுவாவே இவர்ட்ட பேசிக்கலாம். இப்போ இவர் அத்தை அலமேலுவள்ளி அவங்க வீடு மட்டும் எங்க இருக்குன்னு சொன்னீங்கனா நல்லா இருக்கும்”
     வீராவின் இடையீட்டில் அவளை பார்த்து “என் ராசாத்தி உன்னை என் மருமகன்னு சொல்ல எனக்கு ரொம்ப பெருமையா இருக்குமா” என்ற அரவிந்திற்கு இப்போதுதான் மனம் சற்று நிம்மதியானது.
     பின்னே அவர் மகனை ஒருவர் அவர் கண்முன்னே புகழ்வதா என்ற அல்ப நினைப்புதான். சித்துவிற்கோ ‘கொஞ்ச நேரம் நம்மல புகழ்றத கேக்க விடுறாளா இவ’ என கடுப்பாய் வர அவளை பார்த்து புசுபுசுவென நின்றான்.
     அதையெல்லாம் யார் கண்டு கொண்டது. அந்த கிழவியிடம் இருந்து தகவல்களை கறந்த பின்னர் “சரி வரோம் பாட்டி தகவல் சொன்னதுக்கு ரொம்ப தேங்க்ஸ். நாம மறுபடியும் மீட் பண்ணலாம் பாய்” என டாட்டா காட்டிவிட்டு சித்துவையும் அழைத்து சென்றாள்.
     “நைனா இவ்ளோ பெரிய வீடு நம்மலோடதா?” தங்கள் கண் முன்னால் இருந்த பெரிய இல்லத்தை வாயை பிளந்து பார்த்து சித்து நின்று கேட்க
     “இல்லடா மகனே இது நம்ம வீடு இல்ல. நம்ம வீடு இதைவிட பெருசுடா. இது என் தங்கச்சி வீடுன்னு நினைக்கிறேன்” என்று அரவிந்த் கூறிக் கொண்டிருக்கும் நேரம் யாரோ ஒரு ஆள் வெளியே வந்தார்.
     வெளியே வந்தது வேறு யாரும் இல்லை மாதவன் தான்‌. ‘யாருடா இவங்கலாம் நம்ம வீட்டு முன்னாடி நின்னு ஏதோ பேசிட்டு இருக்காங்க. நாம இவங்கல இதுக்கு முன்ன நம்ம ஊருல பார்த்தது இல்லையே. யாரா இருக்கும்?’ என அவர்களை பார்த்து யோசித்தபடியே அவர்களிடம் வந்து சேர்ந்தான்.
     “யாருங்க நீங்க? இங்க என்ன செய்றீங்க? எங்க அப்பாவ பார்க்க வந்தீங்களா?” மாதவன் வரிசையாக கேட்டு நிறுத்த
     “இது அலுமேலுவள்ளி வீடு தானே?” பதில் கேள்வி கேட்டான் சித்து.
     “ஆமாங்க அவங்க என் அம்மாதான். நீங்க யாரு. எங்க அம்மாவ பத்தி எதுக்கு கேக்குறீங்க?”
     “நாங்க சென்னைல இருந்து வரோம். அவங்கலதான் நாங்க பாக்கனும். கொஞ்சம் கூப்பிடுறீங்களா?” மாதவன் கேட்ட கேள்விக்கு பதில் கூறாது சித்து அவன் அன்னையை காண வேண்டும் என கூறி வைக்க இதற்குமேல் அவனிடம் எதுவும் பேசாது “சரி உள்ள வாங்க” என்று உள்ளே சென்றான்.
     சித்துவிற்கோ ஆச்சரியம். பின்னே அவன் வாழ்ந்த ஊரில் இதுபோல் தெரியாதவர்கள் வந்தால் வீட்டிற்குள் அழைக்கும் வழக்கம் எல்லாம் இல்லையே. இந்த வரவேற்பே புது விதமாய் இருக்க ஆச்சரியமாக உள்ளே நுழைந்தான் தன் படையுடன்.
     “இங்க உக்காருங்க நான் போய் கூட்டிட்டு வந்திடுறேன்” மாதவன் அவர்களை அமர செய்துவிட்டு உள்ளே ஒரு அறைக்குள் செல்ல
     “நைனா அது உன் தங்கச்சி பையன்னு நினைக்கிறேன். பாரேன் நாம யாருன்னு கூட சொல்லாம வீட்டுக்குள்ள கூப்பிட்டு உக்கார வெச்சிட்டு போறான். உன் ஊரு நல்ல ஊருதான் போல”
     சித்து கூறியதை கேட்க அரவிந்திற்கு ஆனந்தமாய் இருந்தது. பின்னே இது அவரின் சொந்த மன்னனின் பெருமையல்லவா. அதுவும் இத்தைனை வருடம் கழித்து. ஏற்கனவே பேயாக மிதக்கும் மனிதர் இப்போது ஒரு அடி மேலே தான் பறந்தார்.
     “பார்த்தியா உன் தகப்பனோட சொந்த ஊர. ஊருன்னா இதுதான்டா ஊரு. நீயும் ஒரு ஊருல இருக்கியே” அரவிந்த் தன் பங்கிற்கு அவரின் ஊர் பெருமையை எடுத்துவிட இருவர் பேசுவதையும் கேட்டு தலையில் அடித்துக் கொண்ட வீரா
     “ஐயோ அங்கிள் இது உங்க ஊர்னா உங்க பையன் சித்துக்கும் இது சொந்த ஊரதானே” நியாயமாக கேட்டு வைக்க ‘ஆமால்ல’ என தந்தை மகன் இருவரும் நினைத்து மண்டையை ஆட்டி வைத்தனர்.
     இவர்கள் பேசி முடிக்கும் நேரம் காபி கப்புகளுடன் வந்து சேர்ந்தாள் ஒரு பெண்மணி. அவளை பார்த்து எழுந்து நின்ற அரவிந்தின் முகத்தில் சொல்லமுடியா ஒரு உணர்வு வந்து போக கண்களில் கண்ணீர் குளம் கட்டிவிட்டது. சுகர் வந்த பேஷன்ட் போல் கைகால் எல்லாம் தடதடவென ஆடியது‌.
     “நான் தூக்கி வளத்த
       என் அன்பு தங்கச்சி…”
     அரவிந்தின் முகத்தில் தெரிந்த பாவனையில் சித்து வீரா கதிர் என எல்லோருக்கும் அவர் தங்கை மீது கொண்ட பாசம் அப்படமாய் தெரிய ‘இவரு எப்படி ஊரைவிட்டு இத்தனை நாளு தனியா இருந்தாரு’ எனதான் எண்ணினர்.
     “எல்லோரும் எடுத்துக்கோங்க” என்று காபியை கொடுத்த அந்த பெண்மணி அப்படியே உள்ளே செல்ல ‘ஒருவேளை நாம யாருன்னு தெரியாததால அத்தை அப்படியே உள்ள போறாங்க போல’ என நினைத்த சித்து அவரை அழைக்க போகும் நேரம் மாதவன் வேறொரு பெண்மணியுடன் வந்தான். கூடவே இன்னொரு நபரும் வந்தார்‌.
     “ஐய்யா எல்லாருக்கும் காப்பி குடுத்துட்டேங்க” என அந்த பெண்மணி கூறி சென்றுவிட “சரி சரசு நீ உள்ள போ” என்ற மாதவன்
     “இவங்கதான் என் அம்மா அலமேலுவள்ளி‌. நீங்க பாக்க வந்தது இவங்கலதான்” என கூறி நிறுத்தினான்.
     ‘என்ன இவங்கதான் என் அத்தையா’ என்ற ஆச்சரியத்தை விட ‘அது வேலைக்கார அம்மாவா’ என்ற அதிர்ச்சியே அதிகம் இருந்தது சித்துவிற்கு. அதை கேட்ட மூவரும் இப்போது டக்கென அரவிந்தை திரும்பி பார்க்க “என்னா வேலைக்காரியா?” என கத்தியே விட்டார் மனிதர். அதே அதிர்ச்சியோடு அவர் தன்னோடு வந்தவர்களை பார்க்க அவர்களின் கேவலமான பார்வையில் ‘ஈஈஈஈ….’ என இழித்து வைத்தார்.
-ரகசியம் தொடரும்

Advertisement