Advertisement

     அரவிந்தின் பழைய பீரோவில் இருந்து இரண்டு கவர்களை அள்ளி வந்து போட்ட சித்து “நைனா இந்தா லேண்ட் டாக்குமெண்ட்ஸ் எதை அடகு வைக்கிறதுன்னு சொல்லு. கமான் பாஸ்ட்”
     அரவிந்த் சரி என்றவுடனே கேட்டு பெறவில்லை எனில் அவர் மீண்டும் வேண்டாம் என முறுங்கைமரம் ஏறிவிட்டால் என்ன செய்வது என அவசர அவசரமாக எடுத்து வந்து கேட்டுவிட்டான்.
     அரவிந்த் ஏதோ ஒரு வீக் பாயிண்டில் பேசிவிட்டாரே தவிர இன்னும் முழுமனதாக சொத்துப் பத்திரத்தை கொடுக்க மனது இல்லை மனிதருக்கு. மனதே இல்லாமல் தன் மகன் கொண்டு வந்த பத்திரத்தை பார்த்து முழித்த அரவிந்தை கலவரமாக பார்த்த சித்து
     இதற்கு மேல் அவரை தனியே சமாளிக்க முடியாது என்று உணர்ந்து மெல்ல தலையை திருப்பி வீராவை பார்த்து “வீரா செல்லம்” என்று அவன் அழைத்ததுதான் தாமதம்
     “கதிரு வா உனக்கு மாத்திரை போட நேரம் ஆகிருச்சு. மாத்திரை போட்டுட்டு தூங்கனும் வா வா நாம ரூம்க்கு போகலாம்” என்று எஸ்கேப் ஆகிவிட்டாள்.
     பின்னே இந்த தந்தை மகன் கூத்தின் நடுவே மாட்டிக் கொண்டு யார் முழிப்பது. அதை நன்றாக தெரிந்திருந்த வீரா நேக்காக தப்பி அறைக்குள் ஓடி சென்றுவிட்டாள். இனி அவளை வைத்து எதுவும் சாதிக்க முடியாது என்று புரிந்து போக அவன் தந்தை சற்று குழம்பி இருக்கும் நேரமே தன் காரியத்தை சாதிக்கலாம் என முடிவெடுத்தான்.
     “நைனா என்ன பத்திரத்தை உத்து உத்து பாக்குற. எந்த பத்திரத்தை வைக்கணும்னு சீக்கிரம் சொல்லு. சொன்னா நான் சட்டுபுட்டுனு வேலைய ஆரம்பிப்பேன்ல”
     சித்து தன் நிலையிலையே நிற்க தன் நிலப்பத்திரங்களை மாற்றி மாற்றி பார்த்த அரவிந்த் தன் முகத்தை பாவமாக வைத்து சித்துவை ஒரு பார்வை பார்க்க அவர் மகனோ எனக்கென்ன வந்தது என்பது போல் அமர்ந்திருந்தான்.
     அரவிந்த் சோகமாக அமர்ந்திருந்த நேரம் சித்து அவன் எடுத்து வந்த மற்றொரு கவரை எடுத்து “இது என்ன கவரு நைனா? உன் துருபிடிச்ச பீரோல இதுவும் இருந்தது” என்க
     அந்த கவரை பார்த்தவர் “தெரியலையே மகனே‌. நான் எதாவது முக்கியமான டாக்குமெண்ட் வச்சிருக்க போறேன். பிரிச்சு பாரு உள்ள என்ன இருக்குன்னு தெரிஞ்சிரும்” அரவிந்த் உற்சாகமாக கூறினார்.
      “இருந்துட்டாலும் ஏன் நைனா என்ன தங்க புதையல் ரகசியத்தையா உள்ள வச்சிருக்கப்போற. எதாவது வீணாப்போன பேப்பர்ஸ வச்சிருப்ப. இரு உள்ள என்ன இருக்குன்னு பார்க்குறேன்” என அந்த கவரை பிரித்து உள்ளே இருந்து ஒரு கொத்து பத்திரத்தை எடுத்தான் சித்து.
     அதை பார்த்த சித்துவிற்கு ஒரு மினி ஹார்ட் அட்டாக்கே வந்துவிட்டுது‌. பின்னே இருக்காதா அது அனைத்தும் ஏதோ நில பத்திரங்கள். அதுவும் அனைத்தும் ஒரிஜினல். ‘எப்புட்ரா’ என அதிர்ந்த சித்து
     “நைனா இதை எல்லாம் எங்க இருந்து திருடிட்டு வந்த. அம்புட்டும் லேண்ட் டாக்குமெண்ட்ஸ்யா. அதுவும் பூராவும் ஒரிஜினல். உண்மைய சொல்லு எல்லாத்தையும் எங்க இருந்து சுட்டுட்டு வந்த?”
     சித்து சீரியசாக பேச அரவிந்த் அப்போதுதான் அவர் மகன் உண்மையை பேசுகிறான் என புரிந்து “இங்கக்குடு சித்து நான் பாக்குறேன்” என அனைத்தையும் வாங்கி பார்க்க
     ஒவ்வொரு பத்திரத்தையும் மாற்றி மாற்றி பார்த்ததில் அவரின் கண்கள் சந்திரமுகி ஜோதிகா போல் விரிந்துக் கொண்டே சென்றது. முடிவில் அதே பேய் முகத்துடன் சித்துவை பார்த்தவர்
     “மகனே அம்புட்டும் நம்ம சொத்து தான்டா” என்றார் பல்லை இழித்துக் கொண்டு. சித்துவிற்கு ஒன்றுமே புரியவில்லை. ஏனெனில் அந்த பத்திரத்தில் இருந்த சொத்தின் மதிப்பில் ஒரு சதவீதம் கூட அவர் இங்கு சென்னையில் வாங்கிய சொத்து இருக்காது. அப்படியிருக்க இது எப்படி சாத்தியம் என்று குழ்மபிவிட்டான் சித்து‌.
     “இல்ல எனக்கு சுத்தமா புரியல ப்பா. கொஞ்சம் தெளிவா சொல்லு” இப்போது சித்துவும் சற்று பதற்றத்துடனே கேட்டான். அவன் தந்தை எதில் வேண்டுமானாலும் பொய் சொல்லுவார். ஆனால் இதுபோன்ற சீரியசான விஷயத்தில் என்றும் பொய் உரைத்தது இல்லை.
     “அட ஆமாண்டா சித்து கண்ணா. இது எல்லாம் நம்ம சொத்துதான்‌. எல்லா உன் தாத்தா சொத்துடா. உன் தாத்தா அதான் எங்க அப்பா ஊர்ல பெரிய பண்ணக்காரருடா. அந்த ஊருல முக்கால்வாசி இடமே நம்மலது தான். அந்த பத்திரம்தாண்டா இதெல்லாம்” கண்கள் மின்ன அரவிந்த் கூறியதை கேட்டு உண்மையில் பாதி உரைந்த நிலையிலே இருந்தான்.
     இங்கு ஒரு நிலத்தை வைத்து சிறு கம்பெனி துவங்கலாம் என்று நினைத்திருக்க அடிச்சதுடா லாட்டரி என்பது போல் இவ்வளவு பெரிய சொத்து இருக்கிறது என தெரிந்தால் என்ன ஆகும். அந்த அதிர்ச்சி இருக்கத்தானே செய்யும். முதல்கட்ட அதிர்ச்சி விலகவே சில நிமிடங்கள் எடுத்தது தந்தை மகன் இருவருக்கும்.
     “ஆமா ப்பா எனக்கு ஒரு டவுட்டு. நீதான் சின்ன வயசுலையே ஊரைவிட்டு ஓடி வந்துட்டியே இந்த எல்லா பத்திரமும் நம்ம வீட்டு பீரோல எப்படி வந்தது?” என தனக்கு தோன்றியதை சித்து கேட்டு வைக்க அதற்கு கேவலமான ஒரு சிரிப்பை உதிர்த்த அரவிந்த்
     “அதுவந்துடா மகனே நானும் உங்க அம்மாவும் லவ் பண்ணுறப்பையே என் அப்பா அதான் உன் தாத்தா எனக்கும் என் தங்கச்சிக்கும் தனி தனியா சொத்தை பிரிச்சு எழுதி வச்சிட்டாரு” அரவிந்த் பேசும் போது “ஓஓ… உனக்கு தங்கச்சி எல்லாம் இருக்காங்களா?” என இடையிட்டான் சித்து.
     “அட ஆமாம் மகனே உனக்கு அவ அத்தை. இப்ப என்ன பண்றாளோ? எப்படி இருக்காளோ? அப்பவே என்மேல எவ்ளோ பாசமா இருப்பா தெரியுமா” அரவிந்த் அவர் தங்கை நினைவுக்கு போக
     “ஐயோ ப்பா அதெல்லாம் அப்புறம் பீல் பண்ணு இப்ப டாக்குமெண்ட் அது எப்படி வந்தது அதை சொல்லு” என்று சரியாக தடைப்போட்டான் அவர் பேச்சுக்கு.
     “கொஞ்ச நேரம் என்ன பீல் பண்ண விடுறானா?” என்று கடுப்பில் கூறியவர் தொடர்ந்தார்.
     “எங்க விட்டேன்.. ஆன் சொத்து சொத்து பிரிச்சு வச்சாரா. என் தங்கச்சி கல்யாணம் முடிஞ்சுச்சு. அப்பதான் உன் அம்மாவை லவ் பண்றேன்னு கூட்டிட்டு போய் உன் தாத்தா முன்னாடி நின்னேன்டா‌. அவர் என்னன்னா உன் அம்மாவை ஏத்துக்க முடியாதுனு ஒரேதா நோ சொன்னாரு. இதுக்கு மேல அவர் என்ன எனக்கு ஓகே சொல்றதுன்னு உங்க அம்மாவ கூட்டிட்டு ஓடி வந்தேட்டேன்ல”
     அரவிந்த் பேசியதை கேட்டபடி வந்த வீரா “வாவ் அங்கிள் நீங்க சூப்பர். அந்த காலத்துலையே எவ்ளோ சாகசம் எல்லாம் செஞ்சிருக்கீங்க. நீங்க பெரிய ஆளுதான்” என தன் பங்கிற்கு ஏற்றிவிட்டாள்.
     “பின்ன உன் அங்கிள்னா சும்மாவா. என் அருமை பெருமை எல்லாம் உனக்கு தெரியுது. இந்தா உக்காந்து இருக்கானே என் புள்ள இவனுக்கு எங்க இதெல்லாம் தெரிய போவுது” வீரா வரவும் அரவிந்த் தனக்கு தானே பெருமை பேச சித்து இருவரையும் பார்த்து பொய்யாக முறைத்தான்.
     “சரி சரி முறைக்காதடா சொல்றேன். நான் ஊர்லையே சொகுசா வாழ்ந்தவன்டா அப்படி இருக்கும் போது இங்க வந்து கஷ்டபடக்கூடாதுன்னு கொஞ்ச பத்திரத்தை எடுத்துட்டு வந்தேன். அடகு வச்சாவது செலவு பண்ணலாம்னு. ஆனா எனக்கு நல்ல சம்பளத்தில வேலை கிடைச்சிதா அதனால இதை அப்படியே வச்சிட்டேன்” அரவிந்த் இவ்வாறு கூறி நிறுத்த
     “அடப்பாவி தகப்பா நீ சரியான கேடியா இருந்திருக்க போலையே” என ஆச்சரியப்பட்டுப் போனான் மகன்.
     “அங்கிள் அதுக்கு அப்புறம் நீங்க உங்க சொந்த ஊருக்கு மறுபடியும் போகவே இல்லையா” வீரா தன் சந்தேகத்தை கேட்க ஒரு பெருமூச்சை விட்ட அரவிந்த்
     “இல்லமா என் அப்பா இவன் அம்மாவ ஏத்துகலைனு எனக்கு அவர் மேல கோவம் இருந்துச்சு. அதுல அவரை திரும்ப பாக்கவே கூடாதுன்னு மனசுல ஒரு எண்ணம். அதான் ஊர் பக்கமே போகமா இருந்துட்டேன்” என தன் சொந்த கதையை சொல்லி முடித்தார்.
     “இப்ப போனா உங்க அப்பா எதாவது சொல்வாறா அங்கிள்?” புத்தியே இல்லாது வீரா கேட்டு வைக்க அவளை சித்து ஒருமாதிரி பார்த்தான்.
     “நானே போய் சேந்துட்டேன்‌ என் நைனாவா இன்னும் உயிரோட இருக்க போறாரு. ஆனா ஒன்னு தோனுது வீராம்மா இத்தனை வருஷம் வைராக்கியமா இருந்து என்னத்த சாதிச்சேன்‌ என்னத்த கொண்டு போனேன். என் அப்பாவ ஒருதடவை போய் பாத்திருக்கலாம்”
     சோக பிஜிஎம் போட்டு அரவிந்த் பாவமாக சோககீதம் வாசிக்க “இந்த நியாய வெங்காயம் எல்லாம் உயிரோட இருக்கப்ப பேசிருந்தா நல்லாருந்திருக்கும்” அவர் பிஜிஎமை ஆஃப் செய்வது போல் பேசினான் சித்து.
      “சரி அதை விடு ப்பா இது உன் அப்பா சொத்துன்னா இது என்னோட சொத்தும் தானே முதல்ல அதை சொல்லு” தனக்கு வேண்டிய பாயிண்டை பிடித்து சித்து சரியாய் கேட்க இப்போது அரவிந்தின் மூளையிலும் பல்ப் பிரகாசமாய் எரிந்தது.
     “ஆமாண்டா மகனே அம்புட்டும் நம்ம சொத்துதான். நீ இந்த சொத்து பத்திரத்தை வச்சு லோன்கூட வாங்கலாம். இதுக்கு பணம் நிறையவே கிடைக்கும் டா” சைடு கேப்பில் தன் நிலத்தை பத்திரபடுத்த அரவிந்த் சில் டெக்னிக்கை அள்ளி விட்டார்.
     “வாழ்க்கையில எனக்கு நீ செஞ்ச ஒரே நல்லகாரியம் இதுதான் ப்பா. ஆனா இந்த டாக்குமெண்ட்ட வச்சு நான் பணம் வாங்கப் போறது இல்ல” சித்து இப்போது ஒரு டிவிஸ்ட் தர
     “என்னடா சித்து கண்ணா செய்யப்போற” என அரவிந்தும் ஆர்வமாக கேட்டார்‌.
     “அது எதுக்கு ப்பா உனக்கு. நான் செய்யும் போது நீ பாரு இப்ப வெயிட் அண்ட் வாட்ச்” அரவிந்திடம் வீரவசனம் பேசிய சித்து வீராவை பார்த்து
     “பேபிமா போய் உன் லக்கேஜ் கதிர் லக்கேஜ் எல்லாத்தையும் பேக் பண்ணு நான் பேய் என்னோடதையும் பேக் பண்றேன். நாம நைனா ஊருக்கு இன்னும் டூ டேஸ்ல கிளம்பறோம்” என திடீரென அறிவித்தான்.
     “எதுக்குடா மகனே?” என்ற அரவிந்தை கண்டு கொள்ளாது தன் அறைக்கு சென்று விட்டான் சித்து.
     “வீராம்மா உனக்கு இவன் பிளான் எதாவது புரியுதா? இவன் எதுக்கு இப்ப நம்மள எல்லாரையும் சென்னைய விட்டு காலி பண்ணி கூட்டிட்டு போக பாக்குறான்” அரவிந்த் குழப்பாமாய் கேட்க
     “அது எனக்கும் புரியல அங்கிள். உங்க புள்ள மொத தடவையா எதோ பிளான் பண்றாரு என்னதான் செய்றாருன்னு பாப்போமே. நான் போய் பேக் பண்றேன் அங்கிள்” என்று வீராவும் அவள் அறைக்கு கிளம்பினாள்.
     “என்ன எல்லாரும் டிரஸ்ச பேக் பண்ண போயிட்டாங்க. அப்ப நம்ம டிரஸ்சையும் போய் பேக் பண்ணுவோம். டேய் மவனே உங்க அப்பனுக்கும் சேத்து ஏசி கோச்ல டிக்கெட் புக் பண்ணுடா” அரவிந்த் தான் ஒரு ஆவி என்பதை மறந்து புத்தியே இல்லாமல் கத்திக் கொண்டு செல்ல
     “ஆமா அங்கிள் கேக்க மறந்துட்டேன் உங்க ஊரு பேரு என்ன?” என வீரா கேட்க
     அதற்கு “வத்தலக்குண்டு வீராம்மா” என தானும் கத்திய அரவிந்த் தன் பெட்டியை அடுக்க சென்றார்.
     இவர்கள் இங்கு அலப்பரையாக கிளம்ப “வாங்க செல்லங்களா. உங்களுக்காகதான் ரொம்ப நாளா நானும் இங்கையே இருக்கேன். சீக்கிரம் வாங்க வாங்க ஐ’ம் வெய்டிங்” என அந்த வீடே அதிரும்படி ஒரு குரல் கேட்க இன்றும் தெரியாத்தனமாக அந்த பாதையில் சென்ற மாதவன் அலறிக் கொண்டு ஓடினான்.
-ரகசியம் தொடரும்

Advertisement