Advertisement

     அரவிந்தின் வீடு என்றும் இல்லாமல் அன்று மிக அமைதியாக இருக்க ‘நம்ம வீடு இப்படி இவ்ளோ அமைதியா இருக்காதே. ஒருவேளை வீடு எதுவும் மாறி வந்துட்டோமா?’ என எண்ணிக் கொண்டே வீட்டின் கதவை மெல்ல திறந்து உள்ளே பார்த்தாள் வீரசுந்தரி. அங்கே சோபாவின் ஒரு மூலையில் சித்து முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருக்க
     மற்றொரு மூலையில் தெனாவெட்டாக காலை ஆட்டியபடி அமர்ந்திருந்தார் அரவிந்த். பார்த்தவுடனே தெரிந்தது இருவரும் ஏதோ வாக்குவாதத்தை முடித்த டையர்டில் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்கின்றனர் என.
     இதற்கு ஹைலைட்டாக இருவரையும் கண்ணத்தில் ஒரு கை வைத்து கொண்டு இன்னொரு கையில் சிப்சை வைத்தபடி வேடிக்கை பார்த்தபடி இருவரின் எதிரே அமர்ந்திருந்தான் கதிர்.
     ‘என்னவா இருக்கும்?’ என்ற கேள்வி மண்டையை குடைய கதிரை ‘என்ன ஆச்சு?’ என்று சைகையில் கேட்க ‘நீயே கேளு’ என அவன் கைக்காட்டி விட்டு திரும்பிக் கொண்டான்.
     “அங்கிள் சித்து என்ன ஆச்சு உங்க ரெண்டு பேருக்கும். ஏன் இப்படி முகத்தை தூக்கி வச்சிட்டு உக்காந்து இருக்கீங்க?”
     இருவரும் பதில் பேசாது அமர்ந்திருக்க “ப்ச் இரண்டு பேரும் எதுவும் பேசாம இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம். அங்கிள் நீங்க சொல்லுங்க” என்க
     “அந்தா குத்துகல்லு மாதிரி உக்காந்து இருக்கானே அவனை கேளு” சித்துவை கோர்த்து வைத்தார் அவன் தந்தை.
     “சித்து நீங்களாவது சொல்லுங்க. என்னதான் ஆச்சு” என அவனிடம் கேட்க “என்னால சொல்ல முடியாது. உன் அங்கிள்ட்டையே கேட்டுக்கோ” என்றிட்டான்.
     இப்படி இருவரும் மாறி மாறி இருவரையும் காட்ட கடுப்பான வீரா “ரெண்டு பேரும் எதுவுமே சொல்ல வேணாம். நான் போய் நைட்க்கு டிபன் சமைக்கிறேன். உங்களுக்கா எப்ப சொல்லனும்னு தோனுதோ அப்ப வந்து சொல்லுங்க” என்றவள் அங்கிருந்து நகர போக
     “ஏய் ஏய் வீரா நீ என்ன இப்படி பொசுக்குன்னு சொல்லிட்ட. நீ அப்படி எல்லாம் சொல்லக்கூடாது. இங்க வா, வந்து எங்க பஞ்சாயத்த முடிச்சிட்டு விட்டுட்டு போ முதல்ல” சித்து கிளம்ப போன வீராவை தடுத்து நிறுத்தினான்.
     “ஷப்பா இவங்களோட தினமும் இதே வேலையா போச்சு” என அலுத்தபடி வந்தவள் இருவருக்கும் நடுவில் அமர்ந்த பின் கேட்டாள் “சரி பஞ்சாயத்த முடிக்கனும்னா முதல்ல உங்க ரெண்டு பேருக்கும் என்ன பஞ்சாயத்துன்னு சொல்லுங்க”
     இப்போதும் அரவிந்த் வாயை திறப்பது போல் தெரியாது போகவும் சித்துவே ஆரம்பித்தான்.
     “வீரா உனக்கே தெரியும்ல எனக்கு வேலை போயிருச்சுன்னு” வீரா ஆம் என தலையசைக்க
     “ஆன் அதான் நானே சொந்தமா பிசினஸ் பண்ணலான்னு பிளான் பண்ணுனா உன் அங்கிள் அதெல்லாம் வேணாம் நீ வேலைக்கே போன்னு சண்டை பண்றாருடா” பாவமாக முகத்தை வைத்து கொஞ்சலாக சித்து சொல்லி முடிக்க பார்த்த வீராவிற்கு பாவமாய் போனது.
     “அடேய் எப்பா என்னாடா உனக்கு ஏத்தமாதிரி முழுசா சொல்லாம பாதிய கட் பண்ணி சொல்ற” என எகிறிய அரவிந்த்
     “வீராம்மா முழுசா நடந்ததை அங்கிள் நான் சொல்றேன்மா. நான் உங்க அத்தைய கூட்டிட்டு இந்த ஊருக்கு வந்தப்ப எங்களுக்குன்னு ஒரு வாடகை விடு தர எவ்ளோ யோசிச்சாங்க தெரியுமா. அப்படி இருந்த நாங்க இந்த வீட்ட கட்டினோம். அதோட இன்னும் ஒரு ரெண்டு இடத்தில இடம் வாங்கி போட்டிருந்தேன். இவ்ளோ வருஷம் நான் கஷ்டப்பட்டதை எல்லாத்தையும் இவன் ஒரே நாள்ல அழிக்க பாக்குறான்மா” என மூக்கை சிந்திய அரவிந்த்
     “அந்த இடத்து பத்திரத்தை வச்சு லோன் வாங்கி பிசினஸ் தொடங்கப்போறேன் பத்திரத்தை தான்னு வந்து நிக்கிறான்மா இவன்” என ஏற்ற இறக்கத்துடன் கூற வீரா இப்போது அரவிந்தை பாவமாக பார்த்தாள்.
     இந்த பழைய பஞ்சாயத்தே இவர்களுக்குள் இன்னும் ஓட வாண்டட்டாக வந்து வண்டியில் ஏறியிருந்தாள் வீரா.
     ‘என்ன இவ ரியாக்ஷன் எங்க அப்பனுக்கு சாதகமா போகுது. இது சரியில்லையே’ என வீராவின் முகத்தை கண்டு உஷாரான சித்து ‘இப்போ பாருங்கடா என் பர்பாமன்ச’ என களத்தில் இறங்கிவிட்டான்.
     “வீரா எனக்கும் தான் யாரு இருக்கா சொல்லு. நான் பிசினஸ் பண்ணனும்னு ஆசைப்படுறேன் அதுக்கு ஒரு நல்ல அப்பாவா இவரு என்ன பண்ணனும் ‘மகனே நீ எதுக்கு இவ்ளோ கஷ்டப்படுற. இந்தா இந்த பத்திரத்தை வச்சு காசு ஏற்பாடு செஞ்சு பிசினஸ் ஆரம்பின்னு’ சொல்லனும்ல. இவரை விட்டா நான் போய் யாரை கேப்பேன்.
     நீயே சொல்லு வீரா என் அப்பா தானே எனக்கு பிசினஸ் செய்ய உதவி செய்யனும்”
     சித்துவின் நடிப்பில் வாயில் கைவைத்த அரவிந்த் ‘அடப்பாவி மகனே! என்னம்மா நடிச்சு ஸ்கோர் பண்ற. நான் உனக்கு அப்பன்டா இப்ப பாரு என் ஆக்டிங்க’ என தானும் தன் பங்கிற்கு நடித்துக் கொட்ட ஆரம்பித்தார் அரவிந்த்.
     “வீராம்மா நான் என்ன அவனுக்கு உதவி செய்யலைனா சொல்றேன். இவன இன்னும் கொஞ்ச நாளைக்கு எங்கயாவது வேலைக்கு போய் எக்ஸ்பீரியன்ஸ் ஆன அப்புறம் தானே தனியா பிசினஸ் செய்ய சொல்றேன். இப்பவே தனியா ஆரம்பிச்சு எதாவது லாஸ் ஆகிப்போனா கடைசியில கஷ்டபடப்போறது அவன்தானே. அவன் நல்லதுக்கு தானே இந்த அப்பங்காரன் இவ்ளோ தூரம் பேசுறேன். அவன் நல்லா இருந்தா தானே நாம எல்லாரும் நல்லா இருப்போம்” என டயலாக் அடிக்க
     சித்தார்த்துக்கு பேசுவது தன் தந்தை தானா இல்லை அவரைப் போல் குளோனிங் உருவத்தை யாராவது கொண்டு வந்து விட்டு சென்றுவிட்னரா என்று ஆச்சரியப்பட்டு போனான்.
     “அவ்வா அவ்வா அவ்வா… யோவ் நைனா என்னா ஆக்டிங்கு. என்கிட்ட ஒரு பேச்சு உன் மருமகட்ட ஒரு பேச்சு. நடிக்க எங்க போய் டிரைனிங் எடுத்த” என இப்போது விட்ட இடத்திலிருந்து சித்து சண்டையை துவங்க
     “ஆன் உன்னைவிட கம்மியா தான்டா மகனே நடிச்சேன். உன் பர்மான்ஸ் இருக்கே சான்ஸே இல்ல. எப்பா எங்க இருந்து டா இதையெல்லாம் கத்துக்கிட்டு வந்த” என அரவிந்தும் ஆரம்பித்துவிட்டார்.
     இதில் பாவம் இடையில் மாட்டி முழித்துக் கொண்டிருந்தது வீராதான். ‘பேசாம சமைக்கவே போயிருக்கலாம். தேவையில்லாம இவங்களுக்கு நடுவுல வந்து மாட்டிக்கிட்டேனே’ என காலதாமதமாக உணர்ந்த வீரா.
     ‘இப்படியே எந்திரிச்சு ஓடிடு வீரா’ என துரிதமாக யோசித்து அப்படியே சமையல்கட்டிற்குள் ஓடிவிட்டாள். இவள் சென்றதைக் கூட கவனியாத தந்தை மகன் இருவரும் பழையபடி சண்டையை தொடர இதில் ஹைலைட்டே கதிர் தான்.
     ஆரம்பத்தில் இருந்து இருவரின் சண்டையையும் சிப்சை தின்றுக் கொண்டு ஜாலியாக வேடிக்கை பார்க்கும் கதிரை கண்டு மீண்டும்‌ தலையில் அடித்தபடி வந்தாள் வீரா.
     “அங்கிள் சித்து ரெண்டு பேரும் விளையாடினது போதும். வாங்க டிபன் ரெடி பண்ணிட்டேன்” என்ற போது தான் தெரிந்தது இவள் சென்று உணவை தயார் செய்யும் வரை தந்தை மகன் கூட்டனி சண்டையில் இருந்திருக்கிறது என்று.
     “ஐயோ அக்கா என்ன அதுக்குள்ள வந்து சண்டைய கலச்சி விட்டுட்ட எனக்கு இன்னைக்கு இந்த சண்டைல தான் நேரமே போச்சு. மாமா நீங்க ரெண்டு பேரும் ஆரம்பிங்க செமையா இருக்கு” என்ற கதிரை ஞே வெ பார்த்து வைத்தனர் இருவரும்‌.
     பின்னே இருக்காதா முதலில் இவர்கள் சண்டையில் இடையே வந்து சமாதானம் செய்ய முயன்ற கதிரையும் வீராவை போல் நடுவே வைத்து செய்திருக்க அவன் இதற்கு மேல் நம்மால் ஆகாது என வேடிக்கை பார்க்க துவங்கி கடைசியில் இப்படி வந்து நிற்கிறான்.
     “ஏய் கதிரு நாங்க ரெண்டு பேரும் எவ்ளோ பெரிய விஷயத்துக்காக சீரியசா சண்டை போட்டுக்கிறோம் நீ என்னடா பொசுக்குன்னு சிரிப்பு வருதுன்னு சொல்லிபுட்ட” அரவிந்த் நியாயமாக கேட்டு வைக்க
     “கதிரு உனக்கு எங்களை பார்த்தா காமெடியா இருக்கா. இருடா மச்சான் இந்தா வரேன்” என்ற சித்து கதிரை கிச்சுகிச்சு மூட்டிவிட “ஐயோ மாமா விடுங்க. அம்மா கூசுது மாமா” என கதிர் சிரிக்க சிரிக்க அவனை விடவில்லை சித்து.
     “டேய் கதிரு நீ டேபில்க்கு போ” என அவனை சித்துவிடம் இருந்து பிரித்த வீரா “நீங்க சண்டை போட்டோம்னு வேனா சொல்லுங்க. ஆனா சீரியசா போட்டேன்னுலாம் சொல்லாதீங்க. எனக்கே சிரிப்பு சிரிப்பா வருது. இப்ப பேசாம வந்து சாப்பிடுங்க” என்றாள் அவளும் சிரிப்புடன்.
     அப்படியே அனைவரும் சிரித்தபடி உணவு உண்ண செல்ல வெகு நாட்களுக்கு பிறகு அந்த வீட்டில் மன நிறைவான சூழல் மீண்டிருந்தது. கதிரிடம் சித்து வீரா காதல் விஷயத்தை அரவிந்த் கூறி சம்மதம் கேட்க அவனுக்கு சித்து அவன் அக்காவின் கணவனாக வரப்போகிறான் என தெரிந்தவுடன் மிகவும் மகிழ்ந்துதான் போனான். அன்றிலிருந்து இவர்கள் செய்யும் சேட்டையில் அவனும் சேர்ந்து கொள்வான். இன்றும் அப்படியே அவர்களை வம்பிழுக்க நேரம் நன்றாகவே சென்றது.
     உணவு நேரமும் கூத்தும் கும்மாளமாய் செல்ல இரவு சித்து மீண்டும் வந்து அரவிந்திடம் பேசினான். ஆனால் இப்போது முன்பைப்போல் இல்லாமல் அவர்கள் பேச்சு சற்று சீராயசாகவே இருந்தது‌.
     “அப்பா உன் விளையாட்டை எல்லாம் விட்டுட்டு நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளு” இப்படி சித்து கூற சரி என்ற அவன் தந்தையும் தலை அசைக்க தொடர்ந்தான் மகன்.
     “நான் ஏன் பிசினஸ் பண்றேன்னு உனக்கு சொல்லிடறேன். இப்ப நான் மறுபடியும் வேலைக்கு போனாலும் இந்த வேலையிலையும் எவ்ளோ நாள் என்ன வச்சிப்பாங்க சொல்லு. எப்பனாலும் நான் ஒரு பிசினஸ் ஆரம்பிக்க போறது உறுதி.
     நான் அதுல தோத்து போயிட்டா என்ன பண்றதுன்னு தானே நீ பயப்படுற. ஏன்ப்பா வாழ்க்கையில அடிப்படாம எதையும் கத்துக்முடியாதுன்னு நீதானே சொல்லுவ. அம்மாவும் நீயும் இந்த ஊருக்கு வந்த அப்போ எவ்ளோ கஷ்டப்பட்டீங்கன்னு நீ சொன்னது எனக்கு நல்லாவே நியாபகம் இருக்குப்பா. அதனால உன்னோட உழைப்புல உருவான எதையும் நான் அழிக்கமாட்டேன்‌‌.
     இப்பவும் உனக்கு என் மேல நம்பிக்கை வரலைனா சொல்லு நான் வேற எதாவது வேலையே தேடறேன்” என அவன் மனதில் இருந்த அனைத்தையும் அப்படியே சொல்லி முடித்தான்.
     இப்போது யோசித்து பார்த்த அரவிந்த் “எனக்கு புரியுதுடா கண்ணா. ஆனா நீ வாழ்க்கைல எந்த இடத்துலையும் தடுமாறி நின்னா அதை என்னால பாக்க முடியாதுடா” என்ற அரவிந்த்
     “அதேநேரம் என் பையன் ஆசைப்படுற எதையும் வேணாம்னு சொல்லவும் மனசு வரல. அதனால நம்ம ரெண்டு நிலத்தையும்‌ அடகு வச்சுக்கோ டா. புது பிசினஸ் நல்லபடியா ஆரம்பி. அப்பா உனக்கு துணையா இருக்கேன்” என முடித்தார்.
     அவர் கூறியதை கேட்டு மனதார மகிழ்ந்த சித்து “ரொம்ப தேங்க்ஸ் பா” என்று அவரை அணைத்து கொள்ள அதை கண்டு அக்கா தம்பி இருவரும் மகிழ்ந்து தான் போயினர்.
     “சரி அந்த பத்திரத்தை எல்லா என் பீரோல இருந்து எடுத்துட்டு வா. எதை வைக்கிறதுன்னு சொல்றேன்” எனவும் ஆனந்தமாக சென்ற சித்து அரவிந்தின் பழைய பீரோவை குடைய அதனுள் இரண்டு மூன்று புதிய பத்திரங்கள் இருக்க அதை எடுத்துக் கொண்டான். அப்போதுதான் அதனுள் இருந்த வேறொரு பழைய கவரை கண்டவன் அது என்னவென தெரிந்து கொள்ள அதையும் எடுத்துக் கொண்டு வந்தான்.
-ரகசியம் தொடரும்

Advertisement