Advertisement

     வானம் கருமேக கூட்டத்துடன் இதோ விட்டால் மழையாய் கீழே வந்துவிடுவேன் என்ற நிலையில் சூழ்ந்திருக்க, அந்த அந்திமாலை வேளையில் குளிர்காற்று உடலை துளைத்தும் மருத்துவமனை தோட்டத்தில் மெல்ல நடைப்பயின்று கொண்டிருந்தான் சித்தார்த்த.
     அவன் உடல் மட்டுமே இங்கிருக்க நினைவு மொத்தமும் வீராவிடம் சென்றிருந்தது. நேற்றைய தினம் நிகழ்ந்தவற்றை எண்ணிக் கொண்டிருந்தான் சித்து.
     வீராவின் அழுகை நேற்று அதிகமாகவே அவளை யோசிக்காது அணைத்துவிட்டான். ஆனால் அவன் அணைப்பில் இருந்து விலகி சென்ற வீரா அவனிடம் விலக்கமே காட்டினாள். மருத்துவர் வரும் வரை இருவர் மட்டும் அந்த அறுவை சிகிச்சை நடக்கும் அறைக்கு முன்னே அமர்ந்திருந்தாலும் ஒருவர் முகத்தை கூட மற்றவர் பார்க்கவில்லை.
     சொல்லமுடியா தயக்கம் வந்து ஒட்டிக் கொண்டது இருவருக்கும். அப்போது அறுவை சிகிச்சை முடிந்து வந்த மருத்துவர் கதிருக்கு நல்ல முறையில் சிகிச்சை நடந்துவிட்டது என்றும் இனி எந்த வித ஆபத்தும் இல்லை என்றும் கூறி அவர்கள் மனதில் நிம்மதியை ஏற்படுத்தினார்.
     இப்போதும் கதிர் ஐ.சி.யுவில் மருத்துவரின் கண்காணிப்பில் இருக்க அவனுக்கு தேவையான உதவிகளை வீரா பார்த்து செய்கிறாள். அவளை பார்த்துக் கொள்கிறேன் என்ற பெயரில் அவளை சைட் அடித்துக் கொண்டு அங்கேயே அமர்ந்திருக்கிறான் சித்து.
     இப்போதும் அவளுக்கு காபி வாங்கி வருகிறேன் என கீழே வந்தவன் இதற்கு மேல் அவளிடம் எதையும் மறைக்காது தன் காதலை சொல்லி விட வேண்டும் என்ற முடிவிற்கு வந்துவிட்டான். ஆனால் அரவிந்த் என்று ஒருவர் இடையில் இருக்கும் போது இது சாத்தியமா என்பதை யோசிக்க மறந்தான் மகனவன்.
     சித்தார்த் யோசித்து முடிக்கும் நேரம் வானமும் லேசாக தூரல் போட தன் மனதில் எடுத்த முடிவை செயல்படுத்த வேகவேகமாக காபியை வாங்கிக் கொண்டு கதிர் இருந்த அறைக்குள் வந்தான்.
     சித்து கதவை திறக்கும் போது சரியாக “அங்கிள் அப்புறம் என்ன ஆச்சு?” என்று வீராவின் குரல் கேட்க
     “அப்புறம் என்ன ஆச்சா. என் புள்ளயாச்சே நான்தான் பிரிண்சிபல் ஆபிஸ்ல அவனுக்காக பேசி எல்லாரையும் சமாதானப்படுத்தினேன். அப்புறம்தான் அவனை மறுபடியும் ஸ்கூல் உள்ளையே விட்டாங்கனா பாரேன்” என்று மனிதர் தொடர
     “நைனா…” சித்து ஹைப்பிச்சில் ஆரம்பிக்க மூவரும் ஒன்றாக திரும்பி அவனை பார்த்தவுடன் மீண்டும் வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டனர். சித்துவிற்கு நன்றாக புரிந்தது அவன் தந்தை ஏதோ அவன் தலையை நன்றாக போட்டு உருட்டி இருக்கிறார் என‌.
     இப்போது போய் அவனுடைய காதலை சீரியசாக சொன்னாலும் வீரா சிரித்துவிட வாய்ப்பு நூறு சதவீதம் இருப்பதை உணர்ந்து சித்து அவன் தந்தையை தீயென முறைத்துபடி அமைதியாக அமர்ந்துவிட்டான்.
     சித்துவை பெற்று இத்தனை ஆண்டுகள் வளர்த்த அவன் தந்தைக்கா அவன் முகத்தை படிக்க தெரியாது. மகனின் மனதும் நன்றாகவே புரிந்தது.
     ‘உன்னை அவ்ளோ சீக்கிரம் வீராட்ட லவ்வ சொல்ல விட்டுருவேனாடா மகனே. கொஞ்ச நாள் பித்து புடிச்சு சுத்து. அப்பத்தான் என் வீராம்மாவோட அருமை உனக்கு தெரியும்’ என மனதிற்குள் நினைத்தபடி அவரும் சிரித்துக் கொண்டிருந்தார்.
     ஒரு வாரத்தில் கதிர் உடல்நிலை சற்று தேறிவிடவே, அவனை டிஸ்சார்ஜ் செய்துவிட்டனர். அப்படி டிஸ்சார்ஜ் செய்தவுடன் சித்துவும் அரவிந்தும் அவர்கள் இருவரையும் அவர்கள் வீட்டிற்கு அழைக்க வீரா முடியாது என்று மறுத்திட்டாள்.
     “என்னம்மா வீரா அப்போ எங்களை இன்னும் நீ வேத்து ஆளாதான் பாக்குறியா. உடம்பு சரியில்லாத புள்ளைய வச்சுகிட்டு தனியா என்னம்மா செய்வ. எங்ககூட வாடாம்மா அங்கிள் மேல நம்பிக்கை இல்லையா?” என இருவரிடமும் மாறி மாறி பேசியே அவர்களை தங்களுடன் அழைத்து சென்றுவிட்டனர் அரவிந்த்.
     தந்தை தன் வாழ்வில் செய்த ஒரே உருப்படியான வேலை இதுதான் என மனதிற்குள் உல்லாசமாக நினைத்த சித்தார்த் மகிழ்ச்சியாக அவர்களை அழைத்து சென்றான்.
     அவர்கள் இல்லத்திற்கு அழைத்து சென்று விட்டானே தவிர வீராவிடம் ஒருநிமிடம் கூட தனிமையில் பேச நேரம் கிடைக்கவில்லை. கிடைக்கவில்லை என்று சொல்வதை விட அவனின் தந்தை விடவில்லை என்று சொன்னால் சரியாக இருக்கும்.
     பொறுத்தது போதும் பொங்கி எழு என்று ஒருநாள் முடிவு செய்த சித்து நேராக அவன் தந்தையிடம் சென்று நின்றான்.
     “ப்பா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்”
     “கொஞ்சம் என்னடா மகனே நெறையவே பேசு” வாயில் உருளைக்கிழங்கு சிப்சை அமுக்கியபடி அரவிந்த் பேச ‘ஆண்டவா’ என்று மனதில் கடுப்பான சித்து தன்னை சமன் செய்துவிட்டு தொடர்ந்தான்‌.
     “ப்பா உன்கிட்ட சண்டை போடுற மூட்ல நான் இப்ப இல்ல. நான் இப்ப எதுக்காக உன்ட்ட பேச வந்திருக்கேன்னும் உனக்கு தெரியும்”
     “அப்பிடியா சரி என்னான்னு சொல்லு”
     “நான் வீராட்ட தனியா பேசணும்.‌ ஆனா அதுக்கு கொஞ்சம் கூட இடந்தராம நீ குறுக்க வந்து நிக்கிற நைனா. நீதானே வீரா உன் மருமகளா வரணும்னு ஆசைப்பட்ட. இப்ப நானே அதுக்கு ஓக்கேன்னு சொல்றேன். நீ என்னன்னா அவகிட்ட என்ன பேசவே விடமாட்டேங்குற. நீ உன் மனசுல என்னதான் நினைச்சிட்டு இருக்க நைனா” என எகிறிய சித்து சட்டென தன் சத்தத்தை குறைத்து
     “நைனா உன்ன கெஞ்சி கேக்குறேன் அவகிட்ட என் லவ்வ மட்டும் சொல்லவிடேன். உனக்கு புன்னியமா போகும்” என பேசி முடித்தான்.
     “வாவ் நீ கெஞ்சும் போது எனக்கு ரொம்ப ஆனந்தமா இருக்குடா மகனே. உன் வாழ்க்கையில ஒரு நல்லது நடக்கனும்னா அது நான் செஞ்சதாதான் இருக்கனும். இப்ப பாத்தியா வீராம்மா உன் லைப்ல வந்த வரம். அந்த வரத்தை தந்தது நான்ங்குறப்ப எனக்கு இன்னும் சந்தோஷமா இருக்குடா” என அரவிந்த் வசனம் பேச கடுப்பான சித்து
     “இப்ப முடிவா நீ என்னதான் சொல்ல வர?” என்றான்.
     “வீராம்மா என்னோட செலக்ஷன்தான். ஆனா நீ டக்குன்னு லவ்வ சொல்லி ஓகே பண்ணா அவளோட வேல்யூ உனக்கு தெரியாமையே போயிரும். அதான் கொஞ்ச நாள் உன்னை அலையவிட்டேன். இவ்ளோ தூரம் நீ வந்து இப்ப கெஞ்சறதால உன்ன வீராம்மாட்ட பேச அலவ் பண்றேன்” என்றார் அரவிந்த் கடைசியாக.
     அவர் இதுவரை செய்ததே போதும் என்று உணர்ந்த சித்து விட்டால் போதும் என வீராவை தேடி ஓடிவிட்டான்.
     பாவம் சித்து வீரா இவ்வளவு நேரம் அவன் தந்தையிடம் பேசிய அனைத்தையும் கேட்டுவிட்டாள் என அறியாது அவளை தேடி சென்றான். தந்தை மகன் பேசுவதை கேட்டபின் வீரா மாடிக்கு வந்துவிட்டாள்.
     வீராவுக்கும் மனது சற்று சமன்பட சிறிது நேரம் தேவையாக இருந்தது. அன்று மருத்துவமனையில் வைத்து சித்து கட்டி அணைத்ததில் இருந்தே சித்துவின் மீது ஏதோ ஓர் உணர்வு தோன்றியே இருந்தது‌.
     அன்றிலிருந்து அவளின் மனதிலும் ஒரு கள்ளம் புகுந்துத் கொள்ள சித்துவை அவன் அறியாது சைட் அடிக்க ஆரம்பித்திருந்தாள். அப்போதுதான் அவனும் அவளை அவ்வப்போது விழுங்குவது போல் பார்ப்பதை கவனித்திருந்தாள்.
     அதில் அவனுக்கும் தன்னை பிடித்திருக்கிறது என்று புரிந்தது. அதனால் பலநாள் அவன் அவளிடம் பேச வரும்போது பதட்டத்தில் அவளாகவே அரவிந்திடமோ அல்லது கதிரிடமோ சென்று அமர்ந்துவிடுவாள்.
     இப்போது தந்தை மகன் இருவரும் பேசியதை கேட்டு தன்மேல் இவர்களுக்கு எவ்வளவு பாசம் என்று மிகவும் நெகிழ்ந்துதான் போய் இருந்தாள். எனவே தன் மனதை சற்று சமன்படுத்தவே அங்கு மாடிக்கு சென்றுவிட்டாள்.
     இங்கு எல்லா இடத்திலும் தேடியப்பின் கடைசியாக மாடிக்கு வந்து சேர்ந்தான் சித்து. அங்கே வீரா இருக்க மகிழ்ந்த சித்து வேகமாக அவளிடம் வந்து “வீரா” என்றழைக்க ம்ஹீம் காத்துதான் வந்தது.
     ‘ஐயோ வீரமா கிளம்பி வந்தும் வெறும் காத்து தான் வருதே. டேய் சித்து இந்த சான்ஸ விட்டா உன் நைனா உனக்கு பெரிய ஆப்பா அடிச்சிட்டு போயிருவாருடா. போ போ பேசு” என மனதிற்குள் பேசியபடி வீரா வை இப்போது சற்று சத்தமாக அழைத்தான்.
     வீராவும் திரும்பிட “வீரா உன்கிட்ட நான் ஒரு முக்கியமான விஷயம் பேசனும். நீ நான் சொல்றதை கேட்டுட்டு மெதுவா யோச்சு உன் முடிவை சொன்னா போதும்” என்று தடதடக்கும் இதயத்துடன் ஆரம்பித்தான்.
     வீரா எதுவும் பேசாது இருக்க தொடர்ந்தான் சித்து‌. “நான்.. நான் உன்னை அது வந்து” என தயங்கி தன் கண்ணை மூடி திறந்தவன்
     “ஐ லவ் யூ வீரா!” என்றான் அவள் கண்களை பார்த்து. அவன் கண்களில் தெரிந்த காதலில் வீராவே ஒரு நிமிடம் தலை சுற்றி போனாள். எப்போதும் தந்தையுடன் விளையாடிக் கொண்டு சிரித்து கொண்டிருக்கும் சித்தார்த் இல்லை இவன்.
     இவன் கண்களை பார்த்தாலே போதும் மாயம் செய்து அவன் கட்டுக்குள் கொண்டு வரும் வித்தைக்காரன். அப்படி இருந்தது சித்தார்த்தின் பார்வை.
     “வீரா சத்தியமா சொல்றேன் உன் அழகாலையோ இல்ல வேற எந்த காரணத்தாலையும் உன்மேல எனக்கு லவ் வரல. நான் உன்னை லவ் பண்ண காரணமே உன்னோட அந்த தாய்மை குணம் தான் தெரியுமா. அதுவும் நீ கதிரோட தலை கோதிவிடறதுல இருந்து அவனுக்கு ஒவ்வொன்னும் பாத்து பாத்து செய்றது எல்லாம்தான் உன்னை எனக்கு பிடிக்க வச்சிது.
     ஏன் தெரியுமா? நான் பிறந்த கொஞ்ச வருஷத்துலையே என் அம்மா இறந்துட்டாங்க. எனக்கு ரொம்ப சின்ன வயசுலையே அம்மா பாசம் இல்லாம போச்சு. ரொம்ப கஷ்டமா இருக்கும்டா சிலநேரம் ஆனா அப்பா பீல் பண்ணுவார்னு எதையும் வெளியே காட்டுனது இல்ல.
     ஆனா நீ கதிர்கிட்ட காட்டுற பாசத்த பாக்கும் போது எனக்கும் அது வேணும்னு தோனுது. மனசு உன்னை தான் இப்பலாம் ரொம்ப தேடுது”
     எப்போதும் சித்துவை சிரிப்புடன் பார்த்து விட்டு இப்படி முகம் எல்லாம் சிவந்து விட்டால் அழுதுவிடுவேன் என்பது போல் பார்க்க வீராவுக்கு ஏதோ போல் இருக்க
     “சித்து நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம் எனக்கு புரியுது. யாருக்கு நான் எப்படியோ இனி உங்களுக்கு எல்லாமா நான் இருப்பேன்” என வீரா தன் சம்மதத்தை இப்படி கூற ஒருநிமிடம் சித்துவிற்கு ஒன்றும் புரியவில்லை.
     புரிந்தவுடன் சாசர் போல் கண்கள் விரிய “ஹேய் வீரா நெஜமாவா?” என மொத்த ஆசையையும் கண்களில் தேக்கி வைத்து கேட்க அவன் முகத்தில் கைகளை வைத்து அவன் முகத்தை பார்த்து
     “ம்ம் எனக்கு நீங்க சொல்ற மாதிரி எல்லாம் சொல்ல தெரியலை. ஆனா உங்க கண்ணுல எப்பவும் சந்தோஷத்தை பாக்கனும்னு தோனுது. அன்னைக்கு கதிர வச்சிட்டு ஹாஸ்பிடல்ல இருந்தப்ப இவ்ளோ பெரிய உலகத்தில எனக்குன்னும் நீங்க இருக்கீங்கனு காமிச்சீங்கல. அது மாதிரி நானும் எப்பவும் எவ்ளோ கஷ்டம் வந்தாலும் உங்ககூட இருப்பேன்” என்று மனதார கூற
     அதற்குமேல் தாமதியாது அவளை இறுக அணைத்து கொண்டான் சித்து. “ரொம்ப தேங்க்ஸ்டா. என் லைப்ல இந்த மொமென்ட நான் எப்பவும் மறக்கமாட்டேன்” என்றான் உளமாற.
     இங்கு நடந்ததை கண்டு மகிழ்ச்சியில் கண்கள் கலங்கி விட்டது அரவிந்திற்கு. இனி தான் இல்லாது போனாலும் தன் மகனிற்கு ஒரு துணை வந்துவிட்டாள் என நிம்மதியாக கீழே சென்றார் அந்த பாசமான தந்தை.
-ரகசியம் தொடரும்

Advertisement