Advertisement

     அந்த அறை ஒரு ஊசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவு மிகவும் அமைதியாக இருந்தது‌. அந்த அறையினுள் டாக்டர் சித்தார்த் வீரசுந்தரி மூவருடன் அரவிந்துமே இருந்தார். அவர்கள் அனைவரும் டாக்டர் கூறியதை கேட்ட அதிர்வில் இருந்து மீண்டு வரவில்லை என அவர்களின் முகமே நன்கு காட்டிக் கொடுத்தது‌.
     டாக்டர் கூறியதை கேட்டு சற்று நேரம் யோசித்த சித்தார்த் மற்றவர்களின் முகங்களையும் பார்த்தான். அவர்களின் குழப்ப முகத்தை பார்த்து பின்பு பேசி தெளியப்படுத்திவிடலாம் என அவன் கதிருக்காய் ஒரு முடிவை எடுத்துவிட்டான் வீராவிடம் கூட கேட்காமல்.
     டாக்டர் ஆப்பரேஷன் மட்டும்தான் ஒரே சாய்சா? மெடிசின் மூலமா கரைக்க எதாவது வாய்ப்பு இருக்கா?”
     கடைசி முயற்சியாக சித்து ஒன்றை கேட்டு நிறுத்த “அப்படி ஒரு சாய்ஸ் இருந்திருந்தா ஒரு டாக்டரா நானே அதைதானே முதல்ல சொல்லி இருப்பேன். ஆனா அது முடியாதுன்ற பட்சத்துல இந்த முடிவை உங்ககிட்ட சொல்லிட்டேன். இப்ப முடிவை சொல்லவேண்டியது நீங்கதான்” என சொல்லி முடித்தார் டாக்டர்.
     “டாக்டர் எங்களுக்கு ஒரு புயூ மினிட்ஸ் டைம் தாங்க டிஸ்கஸ் பண்ணிட்டு வந்து சொல்றோம்”
     கதிரின் பைலை வாங்கிக் கொண்டு வீராவையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்தான் சித்து. வந்தவன் அந்த பைல்களை போட்டோ எடுத்து யாருக்கோ அனுப்ப
     “என்ன பண்ற சித்து?” குழப்பமாக கேட்டார் அரவிந்த்.
     “என் பிரண்டோட அண்ணா ஒருத்தர் டாக்டர் ப்பா. அதான் அவர்ட்ட அனுப்பி ஒரு செகன்ட் ஒப்பீனியன் கேக்கலாம்னு அனுப்பறேன்”
     பைலை போட்டோ எடுத்து அவன் நண்பனுக்கு அனுப்பி முடித்த சித்து அவனிடம் போன் செய்தும் பேசி வைத்தான். அதன்பின் ஒரு ஐந்து நிமிடம் கழித்து அவனே மீண்டும் அழைத்தான்.
     “சித்து மச்சான் அண்ணா லைன்ல இருக்கான் நீ பேசுடா” என்றிட சித்துவும் அவன் நண்பனின் சகோதரனிடம் பேசி பார்க்க இங்கே இருந்த மருத்துவர் சொன்னதையே அவரும் கூற எல்லாவற்றையும் கேட்டுவிட்டு நன்றி கூறி வைத்துவிட்டான்.
     “என்ன கண்ணா சொல்றாங்க?” அரவிந்தோ பதற்றத்தோடு கேட்க
     “இந்த டாக்டர் சொன்னதைதான் ப்பா அந்த அண்ணாவும் சொல்றாங்க” என்றிட்டான் சித்து.
     “அப்போ இப்ப என்னடா செய்யப்போறோம்?” அரவிந்த் கேட்டதற்கு ஏதும் பேசாத சித்து வீராவை பார்க்க சித்து வந்ததில் இருந்து செய்வதை மௌனமாக பார்த்தபடி அமர்ந்திருந்தாளே ஒளிய எதுவும் பேசவில்லை.
     “வீரா நீ இப்படி அமைதியா இருந்தா எப்படிமா. கதிர்க்கு இப்ப ஆப்பரேஷன் செஞ்சே ஆகனும்னு டாக்டர்ஸ் சொல்றாங்க. நீ என்ன சொல்ற?”
     சித்து கேட்டதற்கு முழித்தபடி அமர்ந்திருந்த வீரா “எனக்கு என்ன செய்றதுன்னு எதுவும் புரியலையே. என்ன பண்றது?” பாவமாக கேட்க சித்துவிற்கு ஏதோ போல் ஆனது. அவளை இறுக அணைத்து ‘ஒன்றும் ஆகாது’ என ஆறுதல் கூறவேண்டும் போல் இருந்தது.
     ஆனால் சூழலை கருத்தில் கொண்டு அதை அப்படியே மனதிற்குள் வைத்தவன் “இங்கபாரு வீரா இனிமே எல்லா முடிவையும் நானே எடுக்கறேன். நான் சொல்றத மட்டும் நீ செய் அதுபோதும்” என்றவன் நேராக மருத்துவரிடம் பேச சென்றான்.
     “டாக்டர் நாங்க ஆப்பரேஷன் செய்யலாம்னு முடிவு பண்ணிட்டோம். அப்புறம் கதிர்க்கு ஆப்பரேஷன் இங்கையே வச்சு செய்யப் போறீங்களா இல்லை வேற ஹாஸ்பிடல் மாத்த வேண்டி இருக்கா?”
     சித்து இவ்வாறு கேட்கவும் காரணம் உண்டு. ஏனெனில் அது ஒரு பொதுநல மருத்துவமனையே. அவன் கேட்டதற்கு “இங்க ஆப்பரேஷன் செய்ய எந்த பெசிலிட்டியும் இல்ல சார்‌‌. நான் வேற ஒரு டாக்டருக்கு ரெக்கமண்ட் பண்ணி ஒரு லெட்டர் தரேன். நீங்க அங்க போனா எல்லாம் அவங்களே பாத்துப்பாங்க” என்றிட்டார்.
     சரி என்று ஒத்துக் கொண்ட சித்தார்த் அடுத்த கட்ட வேலைகளில் வேகமாக இறங்கவிட அடுத்த ஒரே மணி நேரத்தில் அந்த டாக்டர் பரிந்துரை செய்த வேறொரு மருத்துவமனைக்கு கதிர் மாற்றப்பட்டு மீண்டும் ஒரு முறை அவனுக்கு பரிசோதனைகளும் நடத்தப்பட்டன.
     மறுநாளே நரம்பியல் மருத்துவரின் நேரம் கிடைக்க அன்றே அறுவை சிகிச்சை செய்ய முடிவும் செய்யப்பட்டது. எல்லாவற்றையும் தயார் செய்த பின்னரே கதிரை வைத்திருந்த அறைக்கு வந்து சேர்ந்தான் சித்து.
     அங்கு கதிர் மெத்தையில் ஏதும் புரியாமல் பயத்துடன் படுத்திருக்க வீரா அவன் கையை பிடித்தபடி அருகே அமர்ந்திருந்தாள். அரவிந்த்தான்  இருவரிடமும் ஏதோ ஆதரவாய் பேசிக் கொண்டிருப்பதை போல் தெரிய உள்ளே நுழைந்தான் சித்து.
     அங்கே இருக்கும் சூழ்நிலையை கண்டு அதை மாற்றும் பொருட்டு “என்ன நைனா சின்ன புள்ளைங்கள பயம் காட்டிட்டு இருக்கியா?” என்றபடி வந்தான்.
     அவனை முறைத்த அரவிந்த் “நான் என்ன புள்ளை புடிக்கிறவனாடா புள்ளைங்கள பயம் காட்ட. இவங்களும் என் புள்ளைங்கடா அவங்ககூட நான் பேசிட்டு இருக்கிறது உனக்கு பொறுக்கலையோ” என வம்புக்கு நின்றார்.
     இதற்குதானே சித்துவும் அவரிடம் வேண்டும் என்றே வம்புக்கு சென்றது. இவர்கள் சண்டை இத்துடன் முடியாது இன்னும் கொஞ்சம் நீள கவலையில் இருந்த வீரா கதிர் இருவரும் அவர்கள் கவலையை மறந்து சிரிக்க துவங்கிவிட்டனர்.
     இந்த நல்ல மனநிலையிலே அவர்களின் இரவு கடக்க அடுத்த நாள் அறுவை சிகிச்சையும் நல்ல விதமாகவே ஆரம்பிக்க கதிரை உள்ளே அழைத்து சென்றுவிட்டனர். அப்போதுதான் வீராவுக்கு ஒரு விஷயம் மண்டையில் உரைத்தது.
     நேற்று இருந்த மருத்துவமனையிலும் சரி இன்றும் சரி வீரா ஒரு ரூபாய் கூட கட்டவில்லை. மேலும் இன்று முன் பணம் கட்டியிருந்ததால் தான் சிகிச்சையும் நடந்துக் கொண்டிருக்கிறது என்றும் புரிந்தது‌.
     அருகில் இருந்த சித்து மற்றும் அரவிந்த் இருவரையும் பார்த்தவள் “அங்கிள் சித்தார்த் ரெண்டு பேர்கிட்டையும் நான் கொஞ்சம் தனியா பேசணும்” என்றாள்.
     கதிருக்கு உள்ளே அறுவை சிகிச்சை நடந்துக் கொண்டிருக்க இப்போது வீரா தனியே பேசவேண்டும் என்று கூற இருவரும் ஒன்றும் புரியாது ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
     “எதுக்கு?” சித்து கேட்கவும்
     “சொல்றேன் வாங்க” கதிருக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு அழைத்து சென்றாள்.
     “என்ன வீரா என்னம்மா பேசணும் கதிருக்கு அங்க ஆப்பரேஷன் நடந்துட்டு இருக்கு‌. இந்த நேரத்தில எதுக்கு எங்க கூட தனியா பேசணும்னு சொல்லி கூட்டிட்டு வந்த?” குழம்பிப்போய் அரவிந்த் கேட்க
     “அங்கிள் நேத்து அங்க ஹாஸ்பிடல் அப்புறம் இன்னைக்கு இங்க ஆப்பரேஷன் எல்லாத்துக்கும் நான் பத்து ரூபா கூட தரலையே அங்கிள். நேத்து இருந்த மனநிலைல எனக்கு எதுவுமே தோனலை. நீங்கதான் எல்லா காசும் கட்டுனீங்களா. எவ்ளோ ஆச்சு?”
     படபடவென்று கேள்விகளை அவள் அடுக்க “வீரா பொறுமைமா பொறுமை. ஏன் இப்படி பதட்டபடுற. கதிரும் நீயும் எப்ப எங்க வீட்டுக்கு வந்தீங்களோ அப்போவே நீங்க எங்க வீட்டு பிள்ளை ஆகிட்டீங்கமா. நான் சேத்து வச்சிருக்க காசை எல்லா இவன் ஒருத்தன் மட்டும் ஆட்டையப்போட பாக்குறான்மா. இப்ப நீங்க ரெண்டா பேரும் வந்துட்டீங்க. அதான் உங்களுக்கும் தரனும்னு நான் கண்டிஷனா சொல்லிட்டேன்ல”
     அரவிந்த் விளையாட்டு போல் சொல்லி முடிக்க “ப்பா என்னா என்னமோ நான் உன் சொத்தை எல்லாம் திருட வந்தவன் மாதிரி பேசுற. இங்க பாரு வீரா இவரு இப்படிதான் பேசுவாரு. ஆனா அவர் சொன்னாலும் சரி சொல்லாமா இருந்தாலும் சரி உனக்காகவும் கதிருக்காகவும் நான் என்ன வேணா செய்வேன்” என்றான்.
     “ஏன்… ஏன் எங்க மேல இவ்ளோ பாசம்?” உள்ளே போன குரலில் மெதுவாய் கேட்டாள் வீரா.
     அவள் கேள்வியில் புன்னகை புரிந்த சித்து இதை இப்ப சொன்னா நல்லா இருக்காதே வீரா. கதிர் நல்லபடியா குணமாகி வரட்டும் அப்ப நான் சொல்றேன் என்னோட லவ்வ என்று நினைத்தான்.
     ஆம் சித்து இப்போது வீராவின் மேல் காதல் கொண்டுவிட்டான். எப்படி எப்போது என்று எல்லாம் சொல்ல தெரியவில்லை அவனுக்கு. ஆனால் வீரா கதிரிடம் காட்டும் தாய்மை உணர்வு தான் அவனை அவளை நோக்கி ஈர்த்து விட்டது. தினமும் கதிரிடம் பேசும் போது அவளை பற்றிதான் பாதி நேரம் பேசுவான். அவளுக்கு எதிர்த்த சோபாவில் அமர்ந்தபடி கதிருடன் பேசுகிறேன் என விடாது சைட்டும் அடிப்பான்.
     ஆனால் அரவிந்துடன் பேசும் சுவாரஸ்யத்தில் அதை எல்லாம் அவள் கண்டுக் கொண்டதே இல்லை. அது அவனுக்கு இன்னும் சாதகமாய் போய்விட அவள் அவன் வீட்டிற்கு வரும் நேரம் சித்துவிற்கு கொண்டாட்டம் தான். அப்படி இருக்க அவளுக்கு என்றால் விரைந்து வந்து நிற்காது இருப்பானா சித்து.
     அவன் அவனுடைய யோசனையில் இருந்த நேரத்தில் வீரா அவனைத்தான் பார்த்திருந்தாள். அவள் தன்னையே பார்த்ததை உணர்ந்து இப்போது பேசினான் சித்து.
     “நீ ஒருநாள் சொன்னல்ல வீரா நாங்க எப்படி இருக்கோம்னு கேக்க கூட ஆள் இல்லாதவங்கன்னு. நீங்க மட்டும் இல்ல அதே மாதிரிதான் நாங்களும் வீரா. அப்பா இருந்த வரை எனக்கு அவரும், அவருக்கு நான்னும் இருந்தோம் இப்பவும் இருக்கோம். ஆனா அதை தாண்டி எங்களுக்குன்னு யாரும் இருந்தது இல்ல. அது எதுமே எங்களை பாதிக்காம இருக்கத்தான் எங்களுக்குள்ள நாங்க இப்படி பேசிக்குவோம்.
     இதுக்கு நடுவுலதான் நீங்க ரெண்டு பேரும் எங்க லைஃப்ல வந்தீங்க. உண்மைய சொல்லனும்னா நீங்க வந்த அப்புறம் அப்பாவும் சரி நானும் சரி ரொம்பவே சந்தொஷமா இருந்தோம் வீரா. அப்படிப்பட்ட உங்களுக்கு உதவின்னு தேவைபடும்போது அதை செய்ய நாங்கதான் குடுத்து வச்சிருக்கனும்”
     ஆத்மார்த்தமாய் கூறிய சித்துவை வியப்பு பொங்க பார்த்தாள் வீரா. அவன் பேசிய பேச்சில் இன்னும் கொஞ்சம் அழுகை அதிகமாக அவள் அழுவதை இப்போதும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது அவளை இழுத்து ஆதரவாக அணைத்துக் கொண்டான்‌.
     இதை பார்த்திருந்த அரவிந்தோ ஏதோ தன் பிறவி பயனே நிறைவடைந்ததைப் போல் நெஞ்சில் கை வைத்து ஆனந்தமாய் இருவரையும் பார்த்து வைத்தவர் மெல்ல அந்த அறையிலிருந்து வெளியேறினார் அவர்களுக்கு தனிமை அளித்து.
     அதுமட்டும் அல்லாது இதுபோன்ற சீரியசான சீனை அதிக நேரம் பார்ப்பது எல்லாம் அரவிந்தின் வரலாற்றிலே இல்லையே. அதற்கே மனிதர் அந்த அறையிலிருந்து தெரித்து ஓடியிருந்தார்.
     “ஆப்பரேஷன் முடிய இன்னும் நேரம் ஆகும். என் புள்ள வீராவ சமாதானம் செய்றேன்னு உள்ள பதுங்கிட்டான். நாம இப்ப என்ன பண்றது?” புலம்பியபடி ஹாஸ்பிடலை சுற்றியபடி அரவிந்த் அங்கிருந்த பெண்களை சைட் அடிக்க ஆரம்பித்துவிட்டார் மனிதர்.
     அங்கே தனியே யார் தொந்தரவும் இல்லாமல் இருக்க வீரா இன்னும் சிந்துவின் அணைப்பில் தான். இவர்கள் தங்கள் நிலை உணர்ந்து பிரிந்து அறுவை சிகிச்சை நடக்கும் அறையின் முன் வரும்போது அங்கு கதிருக்கு அறுவை சிகிச்சையை முடித்து மருத்துவர் வெளியே வந்துவிட்டார்.
-ரகசியம் தொடரும்

Advertisement