Advertisement

     ஏதையோ பார்த்து பயந்தவன் போல் அமர்ந்திருந்த மாதவனை குழப்பமாக பார்த்த அவன் நண்பன் ஷங்கர் கேட்டான்.
     “என்ன மாதவா என்ன ஆச்சு? ஏன் எதையோ பாத்து பயந்தவன் மாதிரி உக்காந்துட்டு இருக்க?”
     எதுவும் பேசாத மாதவனோ எதோ பெரிய விஷயத்தை யோசிக்கிறான் என அவன் சிந்தனை முகமே காட்டி கொடுத்தது‌.
     “அப்படி என்னத்த போட்டு யோசிக்கிறான்னு ஒன்னும் புரியலையே. சொன்னா நானும் எனக்கு தெரிஞ்சத சொல்லுவேன்” என சத்தமாகவே யோசித்த ஷங்கர் மாதவனின் முகத்தையே பார்த்திருக்க சடாரென திரும்பி பார்த்து கேட்டான் மாதவன்.
     “இந்த பேய் பிசாசு இந்த மாதிரி விசியத்தில எல்லா உனக்கு நம்பிக்கை இருக்கா ஷங்கரு”
     மாதவன் விதிசித்திரமாய் இப்படி ஒரு கேள்வியை கேட்டு வைக்க பதில் சொல்ல தெரியாமல் முழித்த ஷங்கர் “என்ன மாதவா திடீர்னு பேய் இருக்கா இல்லையான்னு கேட்டுட்டு இருக்க. என்னதான் ஆச்சு முழுசா சொல்லுடா” என்றான்‌.
     தங்களை சுற்றி யாரேனும் இருக்கிறார்களா என்று நன்கு பார்த்த மாதவன் யாரும் இல்லை என்பதை உறுதி செய்தபின் மெதுவாக சொல்ல ஆரம்பித்தான்.
     “ஷங்கரு நான் உன்கிட்ட இப்ப சொல்லப்போறத நீ யார்கிட்டேயும் சொல்லக்கூடாது. விஷயம் கொஞ்சம் பெருசுடா நீ முதல்ல சத்தியம் செஞ்சுதா சொல்றேன்” என்று இழுக்க
     “நான் யார்கிட்டேயும் சொல்லமாட்டேன் இது என் அம்மா மேல சத்தியம்டா. போதுமா இப்ப சொல்லு” என்றான் அவன் பதிலுக்கு‌. இப்போதும் எச்சிலை கூட்டி விழுங்கிய மாதவன் மீண்டும் தங்களை சுற்றி ஒரு முறை பார்த்துவிட்டு தொடர்ந்தான்.
     “நோத்து அந்த வீட்டபத்தி நீ சொன்னல்லடா. எதோ தங்கம் இருக்கு புதையல் இருக்குன்னு ஊருகாரங்க பேசுறதா‌. நீவேற எதாவது செய்யு அது இதுன்னு ஏத்திவிட்டியா. அதான் அதுல அப்படி என்ன பெருசா இருக்குன்னு தெரிஞ்சுக்க நைட்டு அந்த வீட்டுக்கு போலாம்னு முடிவு பண்ணுனேன்டா‌.
     அதேமாதிரி நேத்தி நைட்டு அந்த வீட்டுக்கும் போனேன். அங்க வச்சு நான் ரெண்டு பேரை பாத்தேன்டா‌. அதுவேற யாரும் இல்லை. இன்னைக்கு பாழுங்கெணத்துல இருந்து போலீஸ் ரெண்டு பொணத்தை எடுத்தாங்கல அவனுங்க தான்டா”
     மாதவன் சொல்லி முடிக்கக் கூடவில்லை “ஐயோ அப்ப நீதான் அவனுங்க ரெண்டு பேரையும் கொலை பண்ணிட்டியா” என அலறிட “எடுபட்ட பயலே கத்தி போலீஸ்ல மாட்டி விட்டு தொலைச்சிராதடா” என அவன் வாயை கைக்கொண்டு மூடிவிட்டான்.
     “நான் அவனுங்கல கொலை பண்ணலை. சத்தியமா நான் பண்ணலை” என விட்டால் அழுதுவிடுவேன் என்பதை போல் முகத்தை வைத்து கூறினான் மாதவன்.
     “அப்போ என்னதான்டா நடந்துச்சு பிட்டுபிட்டா சொல்லாம முழுசா சொல்லித்தொலடா” ஷங்கர் தன் பங்கிற்கு கத்த “இருடா சொல்றேன்” என்று தொடர்ந்தான்.
     முதல் நாள் இரவு அந்த வீட்டிற்கு வந்த மாதவன் அவன் முன்னால் சென்ற இருவரையும் கண்டு அவர்கள் யார் இங்கு என்ன செய்கிறார்கள் என்று குழம்பிப் போனான். பின் அவர்கள் என்னதான் செய்கிறார்கள் என பார்த்தபடி அவர்களை தொடர்ந்தான்.
     அந்த இரண்டு பேரும் உள்ளே சென்று கதவு மூடியபின் மாதவன் சென்று கதவை திறக்க முயற்சித்தான். ஆனால் கம்போட்டு ஒட்டியது போல் இருந்த அந்த பூட்டிய கதவை அவனால் திறக்க முடியவில்லை.
     “என்னடா இது இப்பதானே கதவு திறந்து உள்ள போனானுங்க‌. அதுக்குள்ள கதவு எப்படி பூட்டுச்சு” என மேலும் குழம்பிப் போனான் மாதவன். அதன்பின் இவன் வீட்டை சுற்றியபடி ஏதேனும் தெரிகிறதா என்று நோட்டம் விட்டான்.
     அப்போது உள்ளே இருந்து அலறல் சத்தம் பயங்கரமாக கேட்க பயந்து போன மாதவன் சத்தம் வரும் திசை நோக்கி ஓடினான்‌. அங்கு ஒரு ஜன்னல் இருக்க அதன் வழியாக எட்டிப்பார்த்தான்.
     பார்த்தவன் அதிர்ந்து போனான். ஏனெனில் உள்ளே இருந்த இரண்டு நபர்களும் அந்த அறைக்குள் அலறி அடித்து ஓடிக் கொண்டிருந்தனர். அதுவும் அங்கே அவர்கள் முன்னையே கதவு இருக்க கதவை காணோம் என்று தேடிக் கொண்டருந்தனர்.
     வெளியே இருந்து இவனும் அவர்களை அழைத்தான். ஆனால் உள்ளே இருப்பவர்களின் காதுகளுக்கு இவன் குரல் எட்டவில்லை. அங்கே நின்ற மாதவனுக்கு அதன்பின் நடந்ததை கண்டுதான் கை கால் எல்லாம் ஆட்டம் கண்டது.
     ஆம் அந்த இருவரும் சிறிது நேரத்தில் அலமாரியினுள் உள்ளே சென்றதே அவனுக்கு பயம் தந்து என்றால், அதன்பின் அவர்களின் அலறல்கள் கேட்டதும் மாதவன் எடுத்தான் ஓட்டம் பின்னங்கால் பிடறியில் அடிக்க அப்படி ஒரு ஓட்டம்.
     “இதுதான் ஷங்கரு நடத்தது‌. நேத்து நைட்டு நடந்ததுலையே எனக்கு பாதி உசுரு போன மாதிரி ஆயிப்போச்சுடா. அதுல இன்னைக்கு காலைல அவனுக்க பொணத்தை அந்த கெணத்துக்குள்ள பார்த்ததுல இருந்து என் உசுரே என் கைல இல்லடா”
     மாதவன் கூறியதை கேட்டு ஷங்கரும் பயந்து போய் அமரந்துவிட்டான். “சரி இனி என்ன பண்ண போற. அந்த வீட்ட அப்படியே விடப்போறியா?”
     ஷங்கர் கேட்டதுக்கு “பின்ன வேற என்ன செய்ய சொல்ற. என் அப்பன் அன்னைக்கே சொன்னாரு. நமக்கு இருக்க சொத்தே போதும்னு கேட்டேனா நானு. அதான் நானும் இன்னைக்கு என் அப்பா சொன்ன முடிவுக்கு வந்துட்டேன் டா. என் மாமன் வீடு சொத்து எதுவும் வேண்டாம்டா” என நொந்து போய் கூறி முடித்தான் அவன்.
     “ஆனா ஒன்னுடா அந்த வீட்டுக்கு யாராவது வந்தா அவங்க தலையெழுத்து என்ன ஆகுமோ” ஒருவித பயத்துடனே இனி இதைப்பற்றி பேசவேக்ககூடாது என மாதவன் சொல்ல ஷங்கரும் சரி என்றான்.
     அடுத்தவர்களின் பொருளுக்கு ஆசைப்படும் எண்ணத்தையும் குழித்தோண்டி அங்கேயே புதைத்துவிட்டு சென்றான் மாதவன்.
—————————————-
     சித்து அவன் முன்னால் சிரித்துக் கொண்டிருந்த தந்தையை கண்டு மூச்சு வாங்க அமரந்திருந்தான்.
     “ஏன் நைனா உன் புள்ளைக்கு வேலை போயிருச்சேன்னு கொஞ்சமாவது கவலை இருக்கா. இப்படி வயறு வலிக்க சிரிக்கிற” சித்து கோபமாக கேட்க
     “பின்ன என்னடா செய்ய சொல்ற. என் பையனுக்கு வேலை போயிருச்சுன்னு மூலைல உக்காந்து மூக்க சிந்த சொல்றியா. அப்படி செஞ்சா இந்த அரவிந்து கெத்து என்ன ஆகறது. போடா போக்கத்தவனே” என கிண்டல் செய்த அரவிந்த் சிரிக்க
     இருவரையும் பார்த்த வீரா அவள் மறைத்து வைத்திருந்த எதையோ எடுத்து சித்தார்த்தின் முன்னிருந்த டேபிளில் போட்டாள். முன்னே கேட்ட சத்தத்தில் நிமிர்ந்து பார்த்த சித்து தன் முன்னால் ஒரு பைல் இருப்பதை கண்டு குழப்பினான்.
     “என்ன இது” வீராவிடம் அவன் கேட்க “எடுத்து பார்த்தா தெரிய போவுது இதுல ஆயிரத்தெட்டு கேள்வி” என இடைப்புகுந்த அரவிந்த் அதை கையில் எடுக்கும் முன் வெடுக்கென தான் எடுத்தான் சித்து.
     அதை பார்த்தவன் “இதை எப்ப எடுத்த” என வீராவிடம் கேட்க
     “அது வந்துங்க நாம உள்ள மாட்டிக்கிட்டோமா. எப்படியும் பைல் எடுத்ததுக்கு நீங்க மாட்டுவீங்கனு தோனுச்சு. என் உள் மனசும் அதையே சொல்லிட்டே இருந்துதா. அதான் ஒரு சேப்டிக்கு..” என்றாள்.
     இருவரும் பேசுவதை புரியாது பார்த்த அரவிந்த் எழுந்து சென்று சித்துவின் கையில் இருப்பது என்னவென்று சென்று பார்க்க அவன் கையில் இருந்ததோ சித்துவின் சர்ட்டிபிகேட்.
     “வீராம்மா சூப்பர்டா உனக்கு இருக்க மூளை என் புள்ளைக்கு இருந்திருந்தா அவன் எதாவது பொய் சொல்லியாவது வேலைய விடாம கப்புனு புடிச்சிருக்கமாட்டான்”
     சித்துவிற்கு சர்ட்டிபிகேட் கிடைத்தது மகிழ்ச்சி தான். ஆனால் அவன் தந்தை பேசுவதை தான் கேட்கமுடியவில்லை கடுப்பாக வந்தது மகனுக்கு.
     “வீராம்மா என் பையனுக்கு வேலை போயிருச்சுல்ல வா நாம போய் இத செலிபரேட் பண்ணுவோம். டேய் மகனே நீயும் வரியாடா” என்று வேறு கேட்டு வைக்க பல்லை கடித்தான் சித்து.
     “ஏன் நைனா பையனுக்கு வேலை போயிருச்சேன்னு கொஞ்சம் கூட உனக்கு கவலை இல்லைல. பார்ட்டி பண்ண கூப்பிடுற”
     “நான் வேலைய விட்டு வந்தப்ப நீ பங்சன் பார்ட்டினு வச்சு ஊருக்கே விருந்து போட்டல்ல. இப்ப உன் வேலை போனதுக்கு ஒரு சின்ன பார்ட்டி கூட செய்லைனா எப்படிடா என் மனசு ஆறும்”
     “நைனா அது உன் ரிட்டையர்மென்ட் பங்சன்யா. வயசாகிபோச்சுன்னு ஆபிஸ்லையே உன்னை அனுப்பி வச்சதும் பாதியில வேலை போய் நான் வந்ததும் ஒன்னாயா”
     நியாயமாகதான் கேட்டு நின்றான் சித்து. அதற்கு கொஞ்சமும் அசராத அரவிந்த் “வீராம்மா சிக்கனா மட்டனா உனக்கு எது புடிக்கும்னு சொல்லு. நான் எல்லாத்தையும் போன்ல ஆர்டர் போடறேன் இத கொண்டாடுறோம் மஜா பண்றோம்” என்றார்.
     அதற்கு எதையோ யோசித்து தயங்கி நின்றாள் வீரசுந்தரி.
     “என்னம்மா என்ன யோசிக்கிற?”
     “அது வந்து அங்கிள் நான் என் தம்பியை விட்டு இந்தமாதிரி எல்லாம் சாப்பிட்டது இல்ல. அதுனால நீங்க மட்டும் சாப்பிடுங்க அங்கிள் நான் கிளம்புறேன்”
     வீரா கூறியதை கேட்டு சித்துவிற்கே வியப்புதான். எப்போதும் வம்பு செய்துக் கொண்டு அரவிந்துடன் சுற்றும் வீராவா இது என ஆச்சரியத்துடன் பார்த்து வைத்தான். அரவிந்துக்கும் அதே எண்ணமே‌. அவளை ஒருநிமிடம் வியந்து பார்த்தவர்
     “அப்போ உன் தம்பியையும் கூட்டிட்டு வாம்மா‌. இதெல்லாமா கேக்கனும். அவனும் இனி உன்னை மாதிரி எங்க வீட்டு பையன்தான்”
     அரவிந்த் கூறியதை கேட்டு வீராவிற்கு கண்கள் கூட கலங்கும் போல் இருந்தது‌. தாய் தந்தை இறந்த போது எங்கே இவர்களிடம் நன்றாக பேசிவிட்டால் தங்களுடன் வந்தவிடுவார்களோ என்று அஞ்சி ஓடிய சொந்தங்களை கண்டவள் இவரை பார்த்து உணர்ச்சிவயப்பட்டு போனாள். அதை வார்த்தையாய் சொல்லவும் செய்தாள்‌.
     “இந்த மாதிரி யாரும் இதுவரை ஆதரவாக்கூட எங்ககிட்ட பேசுனது இல்ல அங்கிள். ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்”
     வீராவின் வார்த்தைகளில் சித்துவின் நெஞ்சமே உருகிவிட்டது. இந்த வீரா சற்று சித்துவை ஈர்த்து விட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும். அன்று மாலை அரவிந்த் சொன்னது போல் வீரா அவள் தம்பி கதிரையும் அங்கே அழைத்துவந்து விட்டாள்.
     சித்துவின் வீட்டிற்கு வந்த கதிரோ முதலில் அரவிந்தை பற்றி அறிந்து பயந்து போனான். ஆனால் அரவிந்தின் குணத்தால் சிறிது நேரத்திலே அவருடன் ஒன்றி விட்டான்.
     ஆனால் அதைவிட சித்துவை கதிருக்கு மிகவும் பிடித்துப்போனது‌. “சார் சார்” என்று அவனோடே பேசியபடி இருக்க
     “கதிர் என்னை நீ சார்னு எல்லாம் கூப்பிட வேண்டாம்”
     “அப்புறம் எப்படி கூப்பிடுறது” கதிர் கேட்டான். இவர்கள் சம்பாஷனையை கேட்டிருந்த அரவிந்த் இப்போது இடைப்புகுந்தார்.
     “கதிர் குட்டி. அவனை நீ சார்னு கூப்பிடாம இனி அழகா தமிழ்ல மாமான்னு கூப்பிடு என்ன” என்க வீராவும் அரவிந்த் கூறியதால் “அப்படியே கூப்பிடு” என்றாள் அவர் உள்குத்து அறியாமல். ஆனால் அதை அறிந்த சித்துவோ சிரித்தபடி ஒன்றும் பேசாமல் இருந்து விட்டான்.
     அன்று இரவு வீராவுக்கும் கதிருக்கும் பிடித்த உணவுகளையே சித்து ஆர்ட்ர் செய்ய இருவரும் மகிழ்ச்சியாக உண்டு சென்றனர். அன்றுதான் சித்துவும் வீராவின் மற்றுமொரு முகத்தை கண்டான். வெளியே அவள் காட்டும் முகமும் கதிரிடம் அவள் காட்டும் முகமும் அப்படியே வெவ்வேறானாது என்பதை புரிந்துக் கொண்டான்.
     இதை எல்லாம் அரவிந்தும் கவனித்தே இருந்தார்‌. ஆனால் வழக்கமாக சித்துவை வம்பிழுப்பதை போல் இப்போது ஒன்றும் பேசவில்லை தந்தை. அன்றைய இரவு அனைவருக்கும் ஒவ்வொரு விதத்தில் புதியதாய் அமைந்துதான் போனது.
-ரகசியம் தொடரும்

Advertisement