Advertisement

     வீரசுந்தரி பெண் சிங்கமென சித்தார்த்தின் அலுவகத்தில் இருந்து எடுத்த ஓட்டத்தை அவன் வீட்டிற்கு வந்து தான் நிறுத்தினாள். ஓடிய வேகத்தில் நாக்கு தள்ள தஸ்சுபுஸ்சு என மூச்சு வாங்கியபடி வந்து சேர்ந்தாள்.
     அவள் வந்து கதவை தட்டியபின் கொட்டாவி விட்டுக் கொண்டே கதவை திறந்தார்‌ அரவிந்த்.
     “ஹேய் வீராம்மா நீயா வா.. உள்ள வாடாம்மா” ஆர்ப்பாட்டமாய் வரவேற்று உள்ளே வந்து அமர்ந்தார் அரவிந்த். அவரை தொடர்ந்து வந்த வீரா பொத்தென சோஃபாவில் விழுந்தாள்.
     “என்ன வீராம்மா நேத்து வேலை முடிஞ்சு அப்படியே வீட்டுக்கு போயிட்டியா. அதான் அங்கிளை பாக்க இவ்ளோ காலைலேயே வந்துட்டியாடா” அரவிந்த் ஆதூரமாய் கேட்டு வைக்க முழித்தாள் வீரா.
     “என் புள்ள இருந்தா காபி போட்டு தர சொல்லிருப்பேன். எங்க இவன் காலங்காத்தாலையே ஆபீஸுக்கு போய்ட்டான் போல. அதனால நீ வந்து அங்கிளுக்கும் சேத்து ரெண்டு காபியா போடுறியா” என அரவிந்த் அப்பட்டமாய் காபிக்கு அடிப்போட்டார்.
     ‘அப்போ நடந்த எதுவும் இன்னும் அங்கிளுக்கு தெரியலைன்னு நினைக்கிறேன்’ என்று யோசித்த வீரா
     “ஐயோ அங்கிள் நான் வீட்டுக்கு போயிட்டு வரலை. உங்க புள்ள ஆபிஸ்ல இருந்துதான் வரேன்” என ஆரம்பித்த வீரா நடந்த அனைத்தையும் ஒருவரி மாறாமல் அப்படியே ஒப்பித்தாள்.
     “என்னம்மா சொல்ற இவ்ளோ நடந்து போச்சா. இந்த பையன் என்கிட்ட எதுவும் சொல்லலை பாரேன்” அவன் எங்கே வீட்டிற்கு வந்தான் என்ற புத்தியே இல்லாது அரவிந்த் பேச
     அதை கேட்டு “ஓ அப்படியா அங்கிள்” என்று அவளும் உம் கொட்டி கேட்டு கொண்டிருந்தாள். இவர்கள் இங்கே யார் மண்டையை போட்டு உருட்டினார்களோ அந்த சித்தார்த் வீரா வந்து ஒரு மணி நேரம் கழித்து நொந்து போய் வீடு வந்து சேர்ந்தான்.
     அவன் வந்தவுடன் அங்கிருந்த இரண்டு பேரையும் கண்டுக் கொள்ளாமல் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்.
     “என்னவா இருக்கும் அங்கிள். ஒரு வேளை ரொம்ப கேவலமா திட்டி அனுப்பிட்டாங்களோ?”
     சித்தார்த்துக்கு என்ன நடந்திருக்கும் என தெரிந்த கொள்ள ஆர்வமாய் கேட்டு வைத்தாள் வீரா. அதே ஆர்வத்தை கண்களில் தேக்கி வைத்த அரவிந்துக்கும் என்ன நடந்திருக்கும் என்று தெரிந்துக் கொள்ள வேண்டியிருந்தது‌.
     “சித்து பையா” மெதுவாக அரவிந்த் ஆரம்பிக்க சித்து திரும்பவில்லை.
     “ஐயோ அங்கிள் இவ்ளோ மெதுவா கூப்டா எப்புடி காதுல விழும். இன்னும் கொஞ்சம் வால்யூமை ஏத்துங்க” இடையில் வீராவும் தன் பங்கிற்கு தானும் ஒரு அட்வைஸை தந்தாள். அதை அரவிந்தும் ஏற்று
     “டேய் மகனே என்னடா ஆச்சு. இந்த டைம் ஆபிஸ்ல அடி கொஞ்சம் பலமோ. என்னமோ கப்பலே கவுந்த மாதிரி உக்காந்திருக்க. என்ன ஆச்சு? வாட் ஹேப்பண்ட்?”
     கேட்டுவிட்டு எப்படி என கண்ணை காட்டி வீராவிடம் ஜாடையாக கேட்க வேறு செய்தார். அவளும் சூப்பர் என்று மூன்று விரல்களை காட்டி ஒத்து ஊத இங்கோ இவர்களை பார்த்த சித்து காதில் புகை வர அமர்ந்திருந்தான்.
     அதை அப்போதுதான் கவனித்த அரவிந்த் கொஞ்சமும் அசராது “என்னாடா என்னா ஆச்சு?” என்க
     “என்ன ஆச்சா நாசமா போச்சு. நான் பாட்டு சிவனேன்னு தானேயா வந்து உக்காந்துட்டு இருந்தேன். நீயா வந்த என் வாய புடுங்குன. வா உன் பிரண்டுக்கு உதவலாம்னு இழுத்துட்டு போன. கடைசியில காரியம் ஆன உடனே கம்பிய நீட்டிட்ட.
     இதுல என்னையும் சேத்து இழுத்துட்டு போன பத்தாததுக்கு இந்தா நிக்குதே உன்னோட சோடிகேட்டு இதையும் இழுத்துட்டு போன. ஆனா இரண்டு பேரும் சேந்து என் வாழ்க்கையில நல்லா புட்பால் விளையாடிடீங்கயா விளையாடிடீங்க”
     சித்து சீரியசாக பேசி நிறுத்த அரவிந்தோ காதை குடைந்தவாறு “ப்ச் இந்த வெங்காயம் எல்லாம் நீ சொல்லாமையே எனக்கு தெரியும். புதுசா ஏதாவது நடந்துதா. அந்த மேட்டரை மட்டும் சொல்லு” என்றார் அசால்ட்டாக.
     சித்து அவரை தீயாக முறைத்து தள்ள அதை கால்காசுக்கு மதிக்காத அரவிந்தோ கெத்து மாறாது அப்படியே நிற்க அதற்குமேல் என்ன தன் விதியை நொந்தவாறு சித்து தான் நடந்ததை கூறினான்.
இரண்டு மணி நேரங்களுக்கு முன்…
     சித்துவின் அதிகாரி அலுவலக கதவை திறந்த நிமிடம் அவனையே நேக்காய் மாட்டிவிட்டு வீரா தப்பி சென்றுவிட அதையே அதிர்ச்சி விலகாது பார்த்து நின்றான் சித்து. அப்படி நின்றவனை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்த அந்த மேனேஜர்
     “இங்க என்ன நடக்குது சித்தார்த். என் ரூம்க்கு வாங்க இந்த விசயத்தை நாம பேசியே ஆகனும்” என கறாராக கூறி உள்ளே சென்றார்‌. சித்துவும் பலியாடு போல் பின்னாடி செல்ல
     “இவ்ளோ காலை நேரத்தில ஆபிஸுல என்ன செய்றீங்க சித்தார்த். அப்புறம் உங்க கூட இருந்த அந்த பொண்ணு யாரு?” என கேட்டு நிறுத்த
     என்னவென்று சொல்லுவான் பைலை திருட வந்தேன் என்றா. திருடனுக்கு தேள் கொட்டியது போல் திருதிருவென முழித்து நின்ற சித்துவை அந்த மேனேஜர் வித்தியாசமாய் பார்க்க அப்போது அடித்து பிடித்து அறையினுள் வந்தான் அந்த அலுவலகத்தின் உதவியாளன்.
     “ஐயோ சார் திருட்டு நடந்து போச்சு சார்! திருட்டு நடந்து போச்சு. நம்ம கம்பெனிக்குள்ளையே வந்து எவனோ எடுபட்டபய திருடிட்டான்” என்று ஒரு குண்டை போட சித்துவிற்கு கபாலத்தில் கண்டபடி ரயில் ஓடியது.
     “என்னையா உளறிட்டு இருக்க என்ன திருடு போச்சு?”
     “அந்த பைல் ரூம்ல தான் சார். யாரோ உள்ள நுழைஞ்சு இருக்காங்க. பீரோ எல்லாம் திறந்து கிடக்கு‌. ஃபைல் எல்லாம் சிதறி கிடக்கு”
     அவன் கூறி முடித்த அடுத்த நொடி பழைய இரும்பு பீரோவை போல் கரட்டு கரட்டு என தலையை திருப்பிய மேனேஜரின் கண்கள் சித்துவை பார்த்தது. அவ்வளவு தான் அவனுக்கு கொஞ்சம் நஞ்சம் இருந்த நம்பிக்கையும் விட்டுப் போக இன்று வேலை போவது உறுதி என்ற முடிவிற்கே வந்துவிட்டான்.
     அதன்பின் அந்த அறையின் சிசிடிவி காட்சிகளை ஓடவிட்டு பார்த்த மேனேஜர் “என்ன சித்தார்த் நீங்க தான் நைட் பைல் ரூம்ல ஏதோ பைல் எடுத்து இருக்கீங்க. சொல்லுங்க என்ன செஞ்சீங்க” என்று கேட்டு வைக்க
     முழுதாய் நனைந்த பின் முக்காட்ட போட்டு என்ன செய்ய என்று உணர்ந்த சித்து அங்கு எதற்கு அவன் வந்தான் என்று எல்லாவற்றையும் சொல்லி விட்டான். அதை கேட்டு கொதித்து போன மேனேஜர்
     “என்ன பெரிய சமூக சேவை செய்றதா நினைப்பா‌. சர்ட்டிபிகேட் எடுக்க வந்ததும் இல்லாம உங்க கேர்ல் பிரண்டையும் கூட்டிட்டு வந்து கூத்தடிச்சிட்டு இருந்திருக்கீங்க சித்தார்த். நான் காலைல பாக்குறேன் எவ்ளோ குளோசா உக்காந்து இருக்கீங்க” என்று கேட்க
     ‘இது எப்போடா நடந்தது?’ என எண்ணிய சித்தார்த் எதோ பேச வர “எதுவும் பேசக்கூடாது. இல்ல கேக்குறேன் இது ஆபீஸா இல்ல வேற எதுவுமா? உங்க பிரண்டு சர்ட்டிபிகேட்காக தானே வந்தீங்க. அதை எடுத்துட்டும் போயிட்டீங்க சந்தோஷம்.
     இப்ப நான் ஒன்னு பண்ணப்போறேன். உங்களையும் வேலைல இருந்து தூக்கிடறேன். ஆனா உங்க சர்ட்டிபிகேட்ட தர முடியாது ஆனத பாத்துக்கோங்க” என்று முடித்தார்.
     “அவ்ளோதானே எல்லாம் முடிஞ்சிதுள்ள. நான் போலாமா?” போலீஸ் கேஸ் என்று போகாது இத்தோடு விட்டாரே மனிதர் என சித்து கேட்க “கெட் லாஸ்ட்” என அவர் கத்தியதில் காது இரண்டும் கொய் என்றது‌.
     அவர் இவ்வளவு பேசியது கூட அவனுக்கு வலிக்கவில்லை. வீரசுந்தரியை கேர்ல் பிரண்டு என்றாரே மனிதர் அதில் தான் நொந்துவிட்டான். இப்போது அந்த எபக்ட் மாறாது வீடு வந்து சேர்ந்துள்ளான் சித்து‌.
     அவன் கூறிய கதையை கேட்டு சோபாவில் விழுந்து விழுந்து சிரித்த அரவிந்தை விஷஜந்துவை போல் பார்த்த சித்து அருகில் கிடந்த தலையனை கொண்டு தாக்க அது அவருக்குள் புகுந்து அந்த பக்கம் விழுந்தது.
     “நோ யூஸ்டா மகனே” என இன்னும் இன்னும் சிரித்து அவனை வெறியேற்றினார் அவன் தந்தை.
————————————–
     “எய்யா பாண்டி எங்க இவ்ளோ வேகமா ஓடுற” ரோட்டில் வேகமாக ஓடிய ஒரு நபரை நிறுத்தி வைத்தது திண்ணையில் அமர்ந்து வெத்தலை இடித்துக் கொண்டிருந்த ஒரு வயதான கிழவி.
     “ஏய் கிழவி உனக்கு விஷயமே தெரியாதா. நம்ம ஊருக்கு வெளியில இருக்க அந்த பாழுங் கெணத்துக்குள்ள ரெண்டு பொணம் கெடக்காம் கிழவி. ஊர் தலைவரு போலீஸுன்னு நெறைய ஆளுவ அங்க வந்திருக்காங்களாம்.
     இந்நேரம் நீ அங்க இல்ல இருப்பன்னு நான் நெனச்சேன். வாவா ஒரு எட்டு போய் என்ன ஏதுன்னு பாத்துட்டு வரலாம். இதெல்லாம் நெதமுமா நடக்குது எப்பயாவது தானே நடக்குது. அதை பாக்குலன்னா எப்படி”
     என அங்கே ஏதோ சர்க்கஸ் நடப்பதை வேடிக்கை பார்க்க செல்வது போல் அந்த பாண்டி என்பவன் பேசிச் செல்ல
     இன்னும் ஒரு மாதத்திற்கு அக்கம் பக்கம் புரளி பேச கண்டென்ட் கிடைத்த மகிழ்ச்சியில் முகத்தில் ஆயிரம்‌ வாட்ஸ் பல்ப்பை மாட்டிக்கொண்டு கிளம்பியது கிழவி. அடித்து பிடித்து ஐந்து நிமிடத்துக்குள் எல்லாம் அங்கே சென்று சேர்ந்தனர் இருவரும்.
     “காண்ஸ்டபுல்ஸ் அங்க இருக்க கும்பலை கிளியர் பண்ணுங்க. ப்ச் என்னய்யா இது வித்தையா காட்டுறாங்க இப்படி கும்பல் கூடி இருக்காங்க”
     “எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருங்க. அப்புறம் போலீஸ் நாங்க எப்படி எங்க வேலைய பாக்குறது”
     போலீஸ் ஒருபக்கம் கத்தியபடி இருக்க மக்களோ அந்த கிழவியை போல் வேடிக்கை பார்க்க வந்தவர்கள் கிணற்றை எட்டி பார்க்க முயன்று கொண்டிருந்தனர்‌.
     அந்த நேரம் “ஏய் விலகுப்பா‌! தள்ளுங்கையா” என்றபடி வந்தார் அந்த ஊரின் தலைவர் கார்மேகம் அவர் மகன் மாதவனுடன்.
     “ஐயா வந்துட்டீங்களா நீங்களே சொல்லுங்க. உங்க ஊர்காரங்க எங்கள எங்க வேலைய பாக்க விட மாட்டேங்குறாங்க” போலீஸ் கார்மேகத்திடம் முறையிட
     “ஏய் என்னலே போலீஸ அவங்க வேலைய பாக்க விடாம பண்றீங்களா. ஒதுங்கி நின்று அவங்கல அவங்க வேலைய பாக்கவிடுங்கலே. இல்ல நீங்கதான் கொன்னு போட்டீங்கனு போலீஸ் புடிச்சிட்டு போயிரும்” கார்மேகம் கத்தி கூற அனைவரும் போலீஸ் வேலை செய்ய வழிவிட்டு நின்றனர்‌.
     அதன்பின்னரே அந்த இரு உடல்களையும் மேலே எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
     “ஐயா இந்த ஊர் தலைவர் நீங்கதான். இறந்துபோன ரெண்டு பேரும் யாரு என்னன்னு உங்களுக்கு தெரியுமா?”
     “எனக்கு இந்த ஊர்ல இருக்க எல்லாரையும் நல்லாவே தெரியுங்க. ஆனா இவங்க ரெண்டு பேரும் புதுசா இருக்காங்க. ஒருவேலை அசலூர் ஆளுங்களா இருக்கலாங்க. இப்பதான் கொலை பண்ணா சம்மந்தமே இல்லாத ஊர்ல பொணத்தை போட்டுட்டு போறாங்களே. எத்தனை செய்தி பாக்குறோம். அப்படி எதாவது இருக்கப்போவுது. ஆனா செத்தவங்க பாவங்கையா அவங்கள கொலை பண்ணுனது யாருன்னு சீக்கிரம் கண்டுப்பிடங்க ஐயா”
     போலீஸ் கேள்விக்கு கார்மேகம் பதில் பேசி முடிக்க “ம்ம் சரிங்க ஐயா. உங்க உதவிக்கு நன்றிங்க. இல்லன்னா உங்க ஊர் மக்களை எங்களால் சாமாளிச்சு இருக்க முடியாதுங்க. அப்ப நாங்க கிளம்பறோம்” என சொல்லி சென்றுவிட்டனர் போலீஸ்.
     இதையெல்லாம் பார்த்த மாதவனோ முதல்நாள் இரவு அவன் பார்த்த காட்சியை வைத்து என்ன நடந்திருக்கும் என ஊகித்து பார்த்தவன் பேய் அடித்தது போல் அப்படியே நின்றுவிட்டான்.
-ரகசியம் தொடரும்

Advertisement