Advertisement

     நிலவு மகள் தன் பொன் ஒளியை பரப்பி அந்த இருள்காரிகையை சற்று தள்ளி நிற்க செய்திருக்க, சில்லென்ற இளங்காற்று மெல்லமாய் சுழன்று கொண்டிருந்தது அந்த இரவு வேளையிலே.
     அதற்கு மேலும் இனிமை சேர்க்கும் வண்ணம் லேசாக தூரலும் வந்து சேர்ந்தது. ஆனால் அதை துளியும் ரசிக்கும் எண்ணம் இல்லாது மூன்று உருவங்கள் அந்த பெரிய சுவற்றின் ஓரம் பதுங்கி பதுங்கி நகர்ந்தது.
     ‘ஆண்டவா! என்ன போய் இந்த வேளை எல்லாம் பாக்க வச்சிட்டாங்களே!’ என அதில் ஒரு உருவம் மட்டும் மனதிற்குள் கதறி அழுதது.
     அவன் வெளியே கதறி அழுதாலே கேட்க ஒரு நாதியும் இல்லா பட்சத்தில் மைண்ட் வாயிசில் கதறியதை யார் கண்டு கொண்டது.
     இப்படி மரண பீதியில் கதறியபடி வந்தது வேறும் யாரும் அல்ல. சாட்சாத் நம் அரவிந்தனின் தவப்புதல்வன் சித்து தான். அதுவும் உடன் வந்த மற்ற இருவரின் நடவடிக்கைகளை பார்த்து தான் பாவம் பையன் பயந்து நிற்கிறான்.
     “வீராம்மா இந்த செவுத்த தாண்டிட்டா போதும் உள்ள இருக்கிறது தான் என் புள்ளையோட ஆபீஸ். ஆனா எப்படிம்மா உள்ள குதிக்கிறது. நான் எதாவது ஏணி இருக்கான்னு பாத்துட்டு வரட்டா?”
     “ஐயோ அங்கிள்! இதென்னா சீன பெருஞ்சுவரா ஏணி போட்டு ஏற. ஆன் த வேல நான் தாண்டி குதிக்கிற குட்டி சுவரு கூட இதவிட பெருசு. வாங்க ஒரே ஜம்ப் உள்ள குதிச்சுடுலாம்”
     தன் அருகில் நின்று எப்படி சுவற்றை தாண்டுவது என பேசிக் கொண்டிருந்த தன் தந்தையையும்  அவர் அருகில் நின்ற வீராவையும் பார்த்து இன்னும் வயிற்றை கலக்கியது சித்துவிற்கு. ‘அவசரப்பட்டு இவரிடம் கூறிவிட்டோமோ’ என காலதாமதமாக நினைத்தான்.
     நடந்தது இதுதான். சித்து தன் அலுவலகத்தில் நடந்த விஷயத்தை கூறியபின் சிறிது நேரம் ஹாலின் குறுக்கே நடந்த அரவிந்த் “யுரேகா!” என கத்தினார்.
     அதில் என்னவோ ஏதோ என பயந்த சித்துவிடம் “சித்து கண்ணா! அவன் உன் பிரண்ட் தானே. அவனுக்கு நாம உதவி பண்ணியே ஆகனும்ல. அதான் நான் ஒரு முடிவு எடுத்திட்டேன்” என்றவர் அது என்ன ஏது என கூறாது அவசரமாக அவர் அலைப்பேசியில் இருந்து வீரசுந்தரியை அழைத்து விட்டார்.
     “வீராம்மா அங்கிள்க்கு உன்னால ஒரு உதவி ஆகனுமே” என்று நடந்த விஷயம் அனைத்தையும் கூறி
     “அங்க இருக்க அந்த பையனோட சர்ட்டிபிகேட் மட்டும் எடுத்துட்டு வரனும். என் புள்ளையையே நான் அனுப்பி வச்சிருப்பேன்‌. ஆனா இந்த மாதிரி விஷயத்துக்கு எல்லாம் அவன் சரிபட்டு வரமாட்டான். அதான் உன்னை கூப்பிடுறேன்” என்றார்.
     வீராவும் ‘நான் பிறந்ததே இந்த உலகத்திற்கு உதவி செய்யதான்’ என அவளும் வீரநடை போட்டு கிளம்பி வந்துவிட்டாள். இவர்கள் இருவரையும் தடுக்க நினைத்த சித்துவையும் விடாது பலியாடுபோல் கூடவே இழுத்து வந்துவிட இப்போது அவர்களை தடுக்கும் வழி அறியாது முழித்துக் கொண்டிருக்கிறான் சித்து‌.
     அவன் ஃபிளாஷ் பேக்கை ஓட்டிய நேரம் ஒரு சிறிய வட்டமேசை மாநாட்டை அரவிந்தோடு முடித்து ஒருவழியாக வீரா அந்த பக்கம் தாண்டிவிட்டாள்‌. அரவிந்தை பற்றி சொல்லவே வேண்டாம். பறந்தே சென்றுவிட்டார் மனிதர். அவர் பறக்கும் போது மற்ற இருவரையும் சேர்த்தே தூக்கி சென்றிருக்கலாம்‌.
     ஆனால் அந்த அளவு அறிவு இருந்திருந்தால் மனிதர் வாழும் போதே எங்கேயோ சென்றிருக்க மாட்டாரா.
     “இப்ப நாம எப்படி உள்ள போறது” என புலம்பிய சித்து கஷ்டப்பட்டு சுவற்றை பிடித்து ஏறிவிட்டான்‌. பாவம் இறங்கும் போதுதான் கால் தடுக்கி கீழே மல்லாக்க விழுந்தான்‌. விழுந்ததில் இடுப்பில் வேறு நல்ல அடி.
     “ஐய்யோ போச்சோ!” என அவன் அலறலில் திரும்பி பார்த்த அரவிந்த் தலையிலே அடித்து கொண்டார்.
     “பொம்பள புள்ளை எவ்ளோ அழகா நேக்கா ஏறி குதிச்சிருச்சு. இவன் என் மானத்தை வாங்கன்னே வந்திருக்கான். ஒரு செவுறு ஒழுங்கா ஏற தெரியலை. இவன என் புள்ளைன்னு சொல்லவே எனக்கு வெக்கமா இருக்கு”
     கீழே விழுந்த மகனை தூக்கி விடாது பக்கம் பக்கமாக வசனம் பேசிய தன் ஆருயிர் தந்தையை பார்த்து வெறியானது சித்துவிற்கு‌.
     “இப்படி நுழையும் போதே தடுக்குதே போற காரியம் என்ன ஆகப்போகுதோ” அரவிந்தும் வாயை வைத்துக் கொண்டு சும்மா இராமல் கொளுத்தி போட கேட்ட சித்துவிற்கு பக்கென்றது.
     இப்படி கலவரமாக கிளம்பிய மூவரும் யாரும் அறியா வண்ணம் அந்த பெரிய கட்டிடத்தின் உள்ளே நுழைய வழியை தேடி கொண்டிருந்தனர்‌. இதில் கூத்து என்னவென்றால் அவர்களுடன் அரவிந்தும் பதுங்கி பதுங்கி சென்றதுதான்‌.
     அவர் செய்ததை கண்டு சித்துவோ தன் தலையை சுவற்றில் நிஜமாகவே டங்குடங்கென முட்ட, அந்த சத்தத்தில் மற்ற இருவரும் திரும்பி பார்த்து
     ‘இவனுக்கு பையித்தியம் முத்திப்போச்சு’ என்று நினைத்துக் கொண்டனர். இப்படி தட்டுத்தடுமாறி எப்படியோ ஒருவழியாய் அலுவலகத்தின் உள்ளே நுழைந்து விட்டனர் மூவரும்.
     “டேய் மகனே! அந்த ரூமு எங்கடா இருக்கு. போய் எடுத்துட்டு அப்படியே எஸ் ஆகிர்லாம். சீக்கிரம் சொல்லு”
     இதற்கு மேல் தான் ஒன்றும் செய்ய இல்லை என்று புரிந்த சித்துவும் முக்கிய அலுவல்கள் இருக்கும் அறையை காட்டினான். ஆனால் அது பூட்டி இருக்க
     “இதென்னா பூட்டு நான் எல்லா எவ்ளோ பெரிய லாக்கரையே திறந்தவ”
     அந்த லாக்கில் எதையோ விட்டு இப்படி அப்படி திருகி கதவை திறக்க சித்துவோ ஆஆவென திறந்த வாயை மூடாது பார்த்து வைத்தான்.
     “வாய மூடுடா வாய்க்குள்ள கொசு ஏதும் போக போகுது. சீக்கிரம் வந்து அந்த சர்ட்டிபிகேட்ட எடு சோலிய முடிச்சிட்டு கெளம்பலாம்”
     “வரேன் வந்து தொலைக்கிறேன்”
     அரவிந்திடம் அலுத்தபடி வந்து அந்த பெரிய பைல்கள் இருந்த அலமாரியை திறந்து அதில் இருந்த அவன் நண்பனின் சர்ட்டிபிகேட்டை தேடி எடுத்தான். அதன்பின் மூவரும் ஒரு நொடி கூட அந்த இடத்தில் தாமதிக்காது வெளியேற கதவை திறக்க
     அந்தோ பரிதாபம் கதவு திறக்க மாட்டேன் என்றது. சித்து வீரா இருவரும் மாறி மாறி திறந்து பார்க்க ‘எந்த பயனும் இல்லை’ என்றது கதவு.
     சித்துவிற்கோ விட்டால் நெஞ்சே வெடித்துவிடும் என்பது போல் ‘படக் படக்’ என அடித்து கொள்ள, இதையெல்லாம் பார்த்த அரவிந்தோ மற்ற இருவருக்கும் தெரியாமல் “பிச்சிக்கோ” என பறந்துவிட்டார்.
     வீரா சித்து இருவரும் சிறிது நேரம் முயன்று பார்த்து பின் என்ன செய்வது என்று புரியாமல் ஒருவரை ஒருவர் பார்க்க “சார் கதவு திறக்கமாட்டேங்குது. இது உன் ஆபிஸ் தானே வெளிய போவ எதாவது வழிய பாரேன்”
     வீரா சித்துவிடம் பொறுப்பை விட அவனோ “எம்மா பொண்ணே நீதானேமா திருடி. உள்ள வரும்போது கூட நீதானே கதவை எல்லாம் திறந்த. இப்பவும் நீயே எதாவது செஞ்சு கதவை திறக்க வச்சிருமா பிளீஸ்” என கெஞ்சியேவிட்டான்.
     ‘நானாடா திறக்கமாட்டேன்னு அடம்பிடிக்கிறேன். கதவை திறக்கமுடிலையே’ என மனதிற்குள் நொந்து போன வீராவோ மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பார்க்க பலன் என்னவோ பூஜ்யம் தான்.
     கடைசியாக “சத்தியமா என்னால முடியல சார்” என நொந்துபோய் கூறினாள். அதை கேட்ட சித்து “ஐயோ போச்சா!” என அலறிவிட்டான். அதன்பின் தான் அவனோடு வந்த தந்தையவரை பற்றி நினைவு வர
     “அப்பா அப்பா” என பாசமாக அழைத்தபடி திரும்பியவன் திகைத்தான். ஏனெனில் அவன் தந்தைதான் அங்கு இல்லையே. மனிதர் வெகுநேரம் முன்பே கம்பி நீட்டி சென்றதை தாமதமாக உணர்ந்த சித்து கடுப்பாகி
     “ஐயோ இவரை வேற ஆள காணோமே. போச்சே இப்ப நாம என்ன பண்றது. எப்படி வெளிய போறது. என் ஹையர் ஆபிசர்க்கு தெரிஞ்சா என் மானம் மரியாதை வேலை எல்லாம் போயிருமே. இப்ப நான் என்ன பண்ண போறேன். இந்த மனுஷன் வேற நேரம் பாத்து கம்பிய நீட்டிட்டாரே. ஜயோ… ஜயோ ஜயோ ஜயோ…” புலம்பி தள்ளினான்.
     அதை அருகில் இருந்து கேட்ட வீராவிற்கு ஷப்பா என்றானது. அதே வேகத்தில் “யோவ் நிறுத்துயா” என கத்திவிட்டாள்‌.
     “நானும் பாத்தேட்டே இருக்கேன் ஓவரா புலம்பிட்டே போயிட்டு இருக்க. இந்த ஆபிஸ்ல வேலை பாக்குற உனக்கு இவ்ளோ பிரச்சினை வரும்னா என் நிலைமைய யோசிச்சு பாத்தியா.
     நீயாவது உன் பிரண்டுக்கு உதவி செய்ய வந்த. நான் சம்பந்தம்மே இல்லாம வந்து மாட்டிருக்கேன். என்னை பாத்துட்டு போலீஸ்க்கு போன் பண்ணிட்டா என்னயா பன்றது. இதுவரைக்கும் போலீஸ் ஸ்டேஷன் வாசல் பக்கம் கூட போகமா கவுரவமா வாழ்ந்துட்டு இருக்க என் வாழ்க்கை என்ன ஆவறது”
     வீரா நீளமாக தன் பங்கிற்கு தானும் புலம்பி முடிக்க “எம்மா எனக்கு ஒரு டவுட்டு. நீ திருட்டு வேலை தானே பாக்குற. அப்புறம் என்னமா போலீஸ் ஸ்டேஷன் பக்கமே போனது இல்லைனு பொய் சொல்ற” சித்து நியாயமாக கேட்டு வைத்தான்.
     “யோவ் என்ன பத்தி என்ன நினைச்ச இதுவரைக்கும் என் தொழில்ல நான் ஒரு தடவை கூட தப்பு செஞ்சு சிக்குனது இல்ல தெரியுமா” வீரா கெத்தாய் சொல்லி காலரை தூக்கி விட்டாள்.
     ‘இதுவேரையா’ என எண்ணிய சித்து “சரி அதைவிடு நாம இப்ப எப்டி வெளிய போறது?” என்க
     “பேசாம ஜன்னல் வழியா வெளியே எகிறி குதிச்சிடலாமா” என அற்புதமான ஒரு யோசனையை அள்ளிவிட அவளை ஒருமாதிரியாக பார்த்த சித்துவிற்கு இப்போது புரிந்தது அவள் எப்படி தன் தந்தைக்கு தோழி ஆனால் என.
     “ஏய் அறிவாளி நாம இருக்கிறது பத்தாவது மாடி. கீழா இருந்து ஏறி வந்தோமே மறந்துட்டியா. இங்கிருந்து குதிச்சோம்னு வச்சுக்க நேரா கைலாசம் தான். அங்க ஆவியா சுத்துராரே என் நைனா அவர் கூட நாமளும் ஜாயின்‌ பண்ண வேண்டிருக்கும். குதிக்கிறியா?” சற்று‌ நக்கலாகவே அவன் கேட்டு நிறுத்த
     “ஆத்தி பத்தாவது மாடியா” என நெஞ்சில் கை வைத்து வாயை பிளந்த வீரா சற்றே வழிசலாக சிரிதத்தபடி “ஹிஹி அது மறந்துட்டேன். சரி வேற எதாவது டிரை பண்ணுவோம்” என்று சமாதானத்திற்கு வந்தாள்.
     இப்படியே மாறிமாறி இருவரும் பேசியதில் விடிந்தே போனது. பாவம் இருவருக்கும் வெளியேறும் வழிதான் தெரியவில்லை. அந்த அறிவு ஜீவிகள் மீண்டும் கதவை நன்கு போட்டு நான்கு தட்டி இருந்தாலே துருப்பிடித்த அந்த கதவு படாரென திறந்திருக்கும். அதைவிடுத்து என்ன செய்யலாம் என பேசியதில் நேரம் சென்றுவிட இப்போது அதே கதவை வாட்ச்மேன் வந்து திறக்க திறந்துவிட்டது.
     “எப்புட்ரா” என வியந்து இருவரும் பார்த்து நிற்க அந்த பக்கமிருந்த ஆளும் பயந்து விட்டார். பின்னே பேய் போல் இருட்டில் இந்த ஆபிசின்‌ நடுவே குத்தவைத்து அமர்ந்திருந்தால் அவருக்கு பயம் வராது என்ன செய்யும்.
     அந்த வாட்மேனின் பின்னால் “தேங்க்ஸ் பா” என கூறியபடி உள்ளே நுழைந்த அந்த அலுவலக அதிகாரியும் இவர்களை இருவரையும் கண்டு அதிர்ந்தார்.
     “போச்சு தொக்கா மாட்டிட்டோம்” என்று எண்ணிய சித்தார்த் கை கால் உதறலுடன் நின்றிருக்க
     “சார் என்னை கூட்டிட்டு வந்தது இந்தா இவர்தான். அதனால எதுனாலும் இவர்ட்டையே கேட்டுக்கோங்க. நைட்‌ புல்லா இங்கையே இருந்தது‌ வேற ஒருமாதிரி இருக்கு. அதனால நான் கிளம்பறேன்” வீரசுந்தரி நேக்காக சித்துவை சிக்க வைத்துவிட்டு நைசாக நழுவி விட்டாள்.
-ரகசியம் தொடரும்

Advertisement