Advertisement

     நிலவு ஒளி சிறிதும் இன்றி காரிருள் சூழ்ந்த அமாவாசை இருள் சூழ்ந்த நேரம். அந்த இருள் நேரத்தில் யாரும் அறியாதவாறு இரண்டு உருவங்கள் பதுங்கி பதுங்கி சென்று கொண்டிருந்தது.
     மெல்ல மெல்ல நகர்ந்த அந்த உருவங்கள் சென்று நின்றது ஒரு வீட்டின் முன்னே. தவறு அதை வீடு என்று சொல்வதை விட மாளிகை என்று சொன்னால் சரியாக இருக்கும்.
     ஆம் அவ்வளவு பெரியதாக சுற்றிலும் நல்ல இட வசதியுடன் இருந்தது. ஆனால் பராமரிப்பு ஏதும் இல்லாததால் பழைய சோக சித்திரம் போல் ஒளி இழந்து காணப்பட்டது. பகலில் இந்த மாளிகையை பார்த்தால் ஒரு வித மன அமைதி கிடைக்கும் என்றால், இப்போது இந்த இரவு வேளை ஒருவித சொல்லொணா பயத்தையே தந்து நிற்கிறது.
     ஆனால் அந்த அபாயகரமான அந்தகாரம் கூட எங்களை ஒன்றும் செய்யாது என கூறும் விதமாக அந்த இரண்டு உருவங்களும் அந்த மாளிகைக்குள் நுழைந்தன.
     அவர்கள் இருவரும் அந்த வீட்டினுள் பிரவேசித்த நேரம் எங்கிருந்தோ ஒரு ஆந்தையின் அலறல் கேட்க அதோடு இருட்டில் கிடந்த அந்த மாளிகை பளிச்சென்று வெளிச்சமாக மாறிட “ஆஆஆ…” என்று கத்திவிட்டான் ஒருவன்.
     கத்தியவனின் வாயை தன் கைக் கொண்டு மூடிய மற்றொருவன் “டேய் பரதேசி! ஏன்டா இப்படி கத்தி தொலையிர. நாம உள்ள இருக்கிறது ஊர்ல இருக்க எல்லாருக்கும் தெரியனுமா” என திட்டினான்.
     “எ… எண்ணே உனக்கு நெசமாலுமே பயமா இல்லையா. இந்த எடமே எதோ சந்திரமுகி படத்துல வார பூத் பங்களா கணக்கா இருக்கே. இதுக்கு மேலையும் நாம உள்ளார போவனுமா ண்ணே”
     உடன் இருந்தவனோ உதறலுடன் கேட்டு நிறுத்த மற்றவனோ திரும்பி அவனை ஒரு முறை முறைத்து
     “இந்த வியாக்கியான வெங்காயம் எல்லாம் கை நீட்டி நாம துட்டு வாங்கிறதுக்கு முன்ன யோசிச்சிருக்கனும். இப்ப இவ்ளோ தூரம் வந்துட்டு வந்த வேலையை மட்டும் முடிக்காம போன அந்த ஆளு நம்மள என்ன பண்ணுவான்னே தெரியாதுடா. அதனால ஒழுங்கா வா உள்ள போவலாம்” என மிரட்டினான்.
     “ஐயோ பணம்னு சொன்ன ஒடனே ஆஆ..னு வாய திறந்திட்டு வந்துட்டனே. உசுரோட ஊடு போயி சேருவனா?”
     மனதிற்குள் இருந்த பயத்தில் சற்று சத்தமாகவே அவன் புலம்பிக் கொண்டு வர “டேய் இப்ப நீ வாய மூடிட்டு வரலை, நானே உன்ன கொன்னு போட்டுட்டு போயிருவேன் பாத்துக்க” என மீண்டும் மிரட்டினான்‌.
     பின்னே தன் பயத்தை வெளியே காட்டக்கூடாது என தைரியமாக வெளியே காட்டிக் கொண்டாலும் உடன் வந்தவன் அவச்சொல்லாய் பேசி இன்னும் பயத்தை கூட்டினால் அவனும் என்ன தான் செய்வான்‌.
     இருவரும் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டே முன்னேறி சென்று ஒரு அறை கதவை திறந்து உள்ளே நுழைந்தனர்.
     அவர்கள் அங்கே நுழைந்தது தான் தாமதம் அந்த வீட்டின் கதவு ஜன்னல் என அனைத்தும் படாரென அறைந்து சாற்றியது. அதில் பயந்த சேகர்
     “ஐயோ! அண்ணாத்த இது வேலைக்கு ஆவாது. வா வா நாம இப்படியே வெளிய ஓடிறலாம்” என அலறியபடி மற்றவனின் இடுப்பிலே தாவி தொற்றிவிட்டான்.
     “அட நாசமா போன நாறப்பயலே! முதல்ல என் மேல இருந்து இறங்குடா” என சத்தமாக கத்தியவன்
     ‘துட்டுக்கு ஆசைப்பட்டு தெரியாத்தனமா வந்து தொக்கா மாட்டிட்ட போல கோவாலு’ என மனதிற்குள் கலவரமாக எண்ணிக் கொண்டான். இதில் வேறு அந்த அறையே ஒரு வீட்டை பெரிது இருந்து பயம் கொள்ள செய்ய இருந்த கொஞ்ச நஞ்ச தைரியமும் இருவரையும் விட்டு தூரம் சென்று விழுந்தது.
     இதற்கு மேல் இங்கிருந்தால் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்பதை உணர்ந்த கோபால் தன்னுடன் வந்த அவன் உதவியாளன் சேகரிடம்
     “சரி சரி ரொம்ப கெஞ்சாத. நீ வேற பயந்து சாவற. அதுமட்டும் இல்லாம இந்த வீடும் ஒரு மார்க்கமா தான் இருக்கு. அதனால நாம திரும்பி போயிடலாம்” என சொல்லி அந்த அறை கதவை திறக்க வந்த வழியே திரும்பினான்.
     என்னே ஆச்சரியம் அவர்கள் வந்த அந்த கதவு தற்போது வெறும் செங்கல் சுவராய் இருக்க, தற்போது கோபாலும் சேகரோடு சேர்ந்து அலறி அடித்து அந்த அறைக்குள் அங்கும் இங்கும் ஓட தொடங்கினான் வேறு எங்கும் வழி இருக்குமா என பார்க்க
     பாவம் அவர்கள் எங்கு சுற்றியும் சிறு துளை கூட கிடைக்காது போக பயத்தில் அந்த அறையின் நடுவில் அருகருகே அமர்ந்து அழுக தொடங்கிவிட்டனர்.
     அப்போது அவர்கள் எதிரே இருந்த ஒரு பழைய மர பீரோ தானாக திறந்து ஏதோ ஒளி போல் இருவர் மேல் அடிக்க ஏதோ மந்திரத்திற்கு கட்டுண்டதை போல் இருவரும் அந்த பீரோவை நோக்கி நகர
     அவ்வளவு பெரிய பீரோவில் ஒரேயொரு மரபொம்மை மட்டும் இருந்தது. அது அவர்கள் நெருங்கியதும் இருவரையும் பார்த்து கண்ணடித்து
     “வாடா செல்லங்களா! ரொம்ப நாள் காத்துட்டு இருந்ததுக்கு செம்ம விருந்தா ரெண்டு‌ பேரும் வந்திருக்கீங்க. வாங்க வாங்க!” என் ஏதோ விருந்திற்கு வந்தவர்களை வரவேற்பதை போல் அமர்க்களமாக வரவேற்றது அந்த மரபொம்மை.
     ஆனால் அங்கே நின்றிருந்தவர்களுக்கு தான் அது புரியவில்லை. ஏனென்றால் அவர்களின் நினைவு தான் இங்கில்லையே.
     இருவரும் அந்த மர பீரோக்குல் நுழைந்த நேரம் அந்த வீட்டின் விளக்குகள் எல்லாம் ஒன்றாக அணைந்துவிட இருவரின் உயிர் போகும் அலறல் கூட அந்த அந்தகார வேளையில் யார் காதிற்கும் கேட்காமல் போனது.
————————————–
     அன்று ஆபிஸ் முடித்து வந்த சித்து ஏதோ யோசனையில் அமைதியாக தலையை பிடித்தபடி அமர்ந்திருந்தான். அவன் முகத்தில் ஒருவித மெல்லிய சோகம் ஓட அவன் முகத்தையே குறுகுறுவென பார்த்தபடி நின்றிருந்தார் அரவிந்தும்.
     சிறிது நேரம் ஒரு வேக பெருமூச்சை வெளியிட்ட சித்து மெல்ல நிமிர அவன் முகத்திற்கு எதிரே இருந்த அவன் தந்தையின் கர்ண கொடூரமான முகத்தை கண்ட அதிர்வில் நெஞ்சில் ஒரு கையை வைத்து நீவியபடி சோபாவின் பின்னே சாய்ந்தான்.
     சித்துவின் மூச்சு மெல்ல சீரான பின்னே ஆரம்பமானது தந்தை மகனின் சண்டை காட்சி
     “யோவ் மனுஷனாய நீ? இப்படியா பேன்னு பேய் மாதிரி என் முகத்துக்கு நேரா மூஞ்ச கொண்டாந்து வைப்ப?”
     “மவனே! முதல்ல உன் தகப்பன் மனுஷனே இல்ல பேய் தான். அதை நீ அடிக்கடி மறந்து போயிட்டு பேசிட்டு இருக்க. நெக்ஸ்ட் நீ என்னமோ ராக்கெட் கவுந்த போன விஞ்ஞானி மாதிரி அப்படி சோகமா யோசிட்டு இருந்தல்ல. அதான் உன் மூஞ்ச பார்த்து எதாவது தெரிஞ்சா என்னால ஆன உதவிய பெரிய மனசு பண்ணி செஞ்சு விடலாம்னு பார்த்தா நீ என்னமோ ரொம்ப தான் பிகு பண்ற. போடா வெலங்காத வேஸ்ட் பெல்லோ”
     “என்னாது நான் நான் வேஸ்ட் பெல்லோவா? நீ அப்படி வாழறப்ப என்னத்த பண்ணி கிழிச்ச. என்ன வந்து வெலங்காதவன் வேஸ்ட்னு சொல்ற. நீ தான் பெரிய வேஸ்ட் நைனா”
     “என்னடா உன்ன பெத்து மாருல தோலுல போட்டு வளர்த்த உன் தகப்பன பாத்து வேஸ்ட்னு சொல்ற. கொஞ்சம் கூட நன்றியே இல்லாம பேசுறியே உனக்கு எல்லாம் கடைசி காலத்துல நல்ல சோறு கிடைக்காதுடா மவனே. இது இந்த சிங்கிள் தந்தையோட சாபம்டா” என பாசமலர் படத்திற்கே டப் கொடுப்பது போல் நடிப்பை பிழிந்து கொட்ட
     “யோவ் யாருக்குயா நல்ல சோறு கிடைக்காது எனக்கா எனக்கா…” என சந்திரமுகி ஜோதிகா போல் சித்து தானும் கத்திக் கொண்டு வர
     “டேய் எவன்டா அது இந்த ராத்திரி நேரத்துல ஊருக்கே கேக்குற மாதிரி கத்திட்டு இருக்கவன். கம்முன்னு இருங்க இல்ல போலீஸ்ல புடிச்சு குடுத்துடுவேன் பாத்துக்கங்க” என பக்கத்து வீட்டில் இருந்து ஒரு குரல் கேட்கவும் தான் இருவரும் தங்கள் கேவலமான சண்டையை நிறுத்தினர்‌.
     அதன்பின் சிறிது நேரம் அமைதி நிலவ “என்னாச்சு என்னடா கண்ணா பிரச்சினை சொல்லு அப்பா அதுக்கு ஒரு ஈசி சொல்யூஷன் சொல்றேன். ஏன் வந்தப்ப சோகமா இருந்த” என இப்போது எதுவுமே நடவாதது போல் அமைதியாக கேட்டு வைத்தார் அரவிந்த்.
     “அது ஒன்னும் இல்ல ப்பா. ஆபிஸ்ல ஒரு சின்ன பிரச்சினை. அதை நெனச்சு தான் கொஞ்ச சோகம் ஆயிட்டேன்” என்றான் சித்து அமைதியாக அப்பனுக்கு தப்பாத நல்ல பிள்ளையாக.
     இவர்களை இப்போது பார்ப்பவர்கள் சற்று முன் தான் சட்டையை பிடித்து சண்டை போட்டவர்கள் என சத்தியம் செய்து கூறினாலும் நம்ப மாட்டார்கள். அப்படி பேசிக் கொண்டிருந்தனர்.
     “நீ சொல்லுப்பா அப்பா அதுக்கு கண்டிப்பா ஒரு தீர்வு சொல்றேன்” என்றார் அரவிந்த்.
     “அது ப்பா. எங்க ஆபிஸ்ல இந்த வருஷம் புதுசா நிறைய ஆளுங்க எடுத்தாங்க. அவங்களுக்கு எல்லாம் நாங்க பழைய ஆளுங்க தான் டிரைனிங் குடுத்தோம். இப்ப என்னன்னா அந்த புது பசங்கல வச்சிட்டு பழைய ஆளுங்கல எல்லாம் வேலைய விட்டு தூக்க போறதா சொன்னாங்க. அதுக்கான முதல் லிஸ்ட் இன்னைக்கு வந்தும் சேந்திருச்சு.” என சித்து நிறுத்த
     “இதென்னடா ஒரே அநியாயமா இருக்கு. புது ஆளுங்க வந்தா பழைய ஆளுங்க இருக்க கூடாதா என்ன. இது எந்த ஊரு நியாயம்டா‌. ஏன்டா மவனே அதுல உன் பேரும் வந்திருச்சா என்ன” அரவிந்த் தன் பங்கிற்கு பேசி வைக்க
     “இல்ல ப்பா என் பேர் இல்ல. ஆனா நிறைய எக்ஸ்பீரியன்ஸ் ஆன ஆளுங்க பேர்லா இருந்தது. கேட்ட ஹையர் ஆபிஸ்ல இருந்து வந்த ஆடர்னு பிராஞ்ச் மேனேஜர் சொல்றான் ப்பா”
     “இந்த அநியாயத்தை எதிர்த்து எவனும் கேள்வியே கேக்கலியா?” என சித்துவின் பதிலுக்கு அரவிந்த் கேட்டார்.
     “ம்ம் என் பிரண்ட் ஒருத்தன் நரேஷ்னு அவன் கேட்டான் ப்பா. அவன் பேரும் அந்த லிஸ்ட்ல வந்திருச்சு. அவன் பெரிய சண்டையாவே ஆக்கிட்டான்” என்று சித்து சோகமாக சொல்லி முடிக்க
     “அதான் சோகமா வந்து அயைதியா உக்காந்து இருந்தியா” என கேட்டார் அவன் தந்தை.
     “இல்லப்பா அவன் சண்டை போட்டதுல பெரிய பிரச்சினை ஆகி ரொம்ப கலாட்டாவா ஆகிருச்சு. அதுல அவன்ட்ட வாங்கி வச்சிருந்த ஒரிஜினல் சர்ட்டிபிகேட் எதையும் திரும்ப தர கூடாதுனு கம்பெனில ஆர்டர் போட்டுட்டாங்க. பாவம்பா அவன் ரொம்ப கஷ்டப்பட்ட ஃபேமிலி. இவன் வேலைக்கு வந்த அப்புறம் தான் கொஞ்சம் முன்னேறி இருக்காங்க. இப்ப திடீர்னு வேலை போய் சர்ட்டிபிகேடும் இல்லாம ரொம்ப தினறுறான். அதான் இன்னைக்கு எனக்கு கால் பண்ணி சர்ட்டிபிகேட் மட்டும் எப்படியாவது வாங்கி தர சொல்லி கேட்டான். வேற வேலை தேட தேவைப்படுதுன்னு. நானும் ஆபிஸ்ல அவ்ளோதூரம் பேசி பாத்துட்டேன். ஆனா ஒருத்தனும் இறங்கி வர மாட்டேங்குறானுங்க. அதான்..”
     ஆபிஸில் நடந்ததை சித்து நீளமாக சொல்லி முடிக்க இப்போது அந்த நரேஷை நினைத்து அரவிந்திற்கும் பாவமாக போனது. சிறிது நேரம் அந்த நரேஷுக்கு எப்படி உதவ முடியும் என யோசித்த அரவிந்திற்கு சட்டென ஒன்று தோன்ற “ஐடியா!” என குதித்தார்.
     “என்ன ஐடியா ப்பா” என சித்துவும் அலறியே விட்டான் தன் தகப்பனின் திருகு தனத்தை அறிந்தவன்.
     அவனுக்கு பதில் சொல்லாது தன் மகன் போனில் இருந்து யாரையோ அழைத்தார் அரவிந்த்.
-ரகசியம் தொடரும்‌

Advertisement