Advertisement

     காலை இளந்தென்றல் காற்று மேனியை உரசி செல்ல, அந்த காலை வேளையில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான் அவன்.
     “அரவிந்தா” என்ற அழைப்பு மென்மையாக எங்கோ தூரத்தில் கேட்பது போல் அவன் காதுகளில் விழ, லேசாக தூக்கம் கலைந்தது.
     தொடர்ந்து அதே பெயர் ஏலமிடுவதை போல் காதில் வந்து விழ அடித்து பிடித்து எழுந்து விட்டான் அவன். 
     “யோவ் அரவிந்தா வெளிய வாயா?”
     இப்போது தெளிவாகவே கேட்க, சத்தம் எங்கிருந்து வருகிறது என காதை தீட்டி கேட்டு பார்த்தான். அப்போது தான் தெரிந்தது, அந்த சத்தம் இல்லை இல்லை கத்தல் எல்லாம் வருவது அவன் வீட்டு வாயிலில் இருந்து என.
     ‘காலங்காத்தால யாருடா அது?’ என கடுப்புடன் எண்ணி சென்று வாயில் கதைவை திறந்த அவன் ஐந்தரை அடியில் அமுல் பேபி லுக்கில் அம்சமாய் இருந்தான்.
     அங்கே சென்று பார்க்க அவன் வீட்டின் முன்னே ஒரு கூட்டமே நின்று கொண்டிருந்தது. அதை கண்டு ‘ஐயையோ இன்னைக்கு என்ன ஏழரையோ தெரியலையே’
     என உள்ளுக்குள் உதறினாலும் அதை வெளியே காட்டாது “என்னங்க என்ன வேணும். எதுக்கு எங்க வீட்டுக்கு முன்னாடி வந்து கத்திட்டு இருக்கீங்க” என்றான் பதற்றத்தை மறைத்துக் கொண்டு.
     “ஏன் நாங்க எதுக்கு வந்திருக்கோம்னு உனக்கு தெரியாதாயா. எல்லா அந்த அரவிந்தால தான். தினமும் அந்த ஆளோட இதே ரோதனையா போச்சு. அந்த ஆள் இப்ப இங்க வரனும்”
     அங்கே நின்றிருந்தவர்கள் ஆளாளுக்கு ஒவ்வொரு மாதிரி கத்த தொடங்கிட நொந்து விட்டான்.
     “இங்க பாருங்க. வம்பு பண்ணன்னே காலைல கிளம்பி வந்தீங்களா. சும்மா சும்மா கத்திட்டு இருக்காம கிளம்புங்கயா‌. எனக்கு எக்கச்சக்கமா வேலை இருக்கு” என்று பேச்சை நிறுத்த பார்த்தான்.
     “ஏலேய் என்ன கலண்டுட்டு ஓட பாக்குறியா. அதெல்லாம் முடியாது எங்களுக்காக இப்ப நியாயம் கிடச்சே ஆகனும்” என ரஜினிமுருகன் பட ஸ்டைலில் ஒருவன் கத்த, தன் காதை குடைந்து கொண்டவன்
     “நியாயமா!! நான் என்ன பலசரக்கு கடையாயா வச்சிருக்கேன். கேட்ட உடனே குடுக்க” என்று கடுப்படித்தான்.
     “சரி சரி சும்மா கத்தாம என்ன பிரச்சினைனு சொல்லிட்டு போங்க. நான் போய் பால் காச்சனும் சமையல் செய்யனும். தலைக்கு மேல வேலை இருக்கு. சீக்கிரம் சீக்கிரம்” என போனால் போகிறது என்பது போல் கேட்டு வைத்தான்.
     “உங்க வீட்டு அரவிந்து எங்க வீட்டு பொண்ணு கைய புடிச்சி இழுத்துட்டான்யா இழுத்துட்டான்” என்று இன்னொருவன் ஒப்பாரி வைக்க ஹையோ என்றானது இவனுக்கு.
     “இங்க பாருங்க சார்‌ எதோ நீங்க நடந்ததை தப்பா புரிஞ்சிட்டு வந்து பேசுறீங்கன்னு நினைக்கிறேன். அப்படி எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை. அதனால பிரச்சினை பண்ணாம எல்லாரும் கிளம்புங்க”
     அவன் எவ்வளவு கூறியும் அங்கிருந்த நபர்கள் அசையாமல் “அந்த அரவிந்து தான் பிரச்சினை பண்ணி இருப்பான்” என அடித்து கூறிட,
     “என்னையா சொல்லிகிட்டே இருக்கேன்ல. சொன்னதையே சொல்லி சொல்லி லந்த கூட்டுறீங்க” என இல்லாத காலரை ஏற்றிக் கொண்டு தானும் அவர்களுக்கு சரிக்கு சமமாக கோதாவில் இறங்கிவிட்டான்.
     அரை மணி நேரம் சென்ற வாய் சண்டையின் முடிவில் “இன்னொரு தடவை இதே மாதிரி நடந்தது. அப்பன் புள்ளை ரெண்டு பேரும் இந்த தெருவுலையே இருக்க முடியாது பாத்துக்க” என எதிர் கோஷ்டி கத்தி செல்ல
     “அதையும் தான் பாத்துக்கலாம் டா என் பொட்டேடோ சிப்ஸுகளா” என தன் பங்குக்கு கத்தியவனும் வீட்டிற்குள் நுழைந்தான்.
     உள்ளே நுழைந்தவன் கண்டது நல்ல சிகப்பு கலர் சட்டை அதற்கு ஏதுவாக ஆரஞ்சு கலர் பேண்ட்டை அணிந்து காதில் நீல நிற பெரிய ஹெட் போனை மாட்டிக் கொண்டு ஒரு உருவம், சோஃபாவில் நன்றாக சாய்ந்து அமர்ந்து உருளைக்கிழங்கு வருவலை உள்ளே தள்ளிக் கொண்டிருந்ததை தான்.
     அந்த உருவம் தான் அரவிந்தன். இவரும் ஐந்தரை அடிதான். இவர் மனதிற்குள் தான் ஒரு அரவிந்த் சாமி என நினைத்துக் கொண்டு ஊரில் பிலிம் காட்டி சுற்றி கொண்டிருக்கும் சாதா அரவிந்தன். இவ்வளவு நேரம் நடந்த சண்டைக்கு மூலக் காரணியும் இவர் தான்.
     தெருவில் இவ்வளவு நேரம் தொண்டை தண்ணீர் வற்றும் அளவு யாருக்காக காட்டு கத்து கத்திவிட்டு வந்திருந்தானோ, அந்த மனிதரோ நடந்ததுக்கும் எனக்கும் சம்மதமே இல்லை என்பது போல் இருந்தது அவனின் கோபத்தை ஏகத்துக்கும் ஏற்றியது.
     கோபத்தில் அவரின் ஹெட் போனை பிடிங்கினான். “ஏன்டா அதை புடுங்குன. பிளீவர் எவ்ளோ சூப்பர் சாங் தெரியுமாடா. அதை குடுடா” என்றார் அரவிந்தன்.
     “யோவ் தகப்பா என்ன பாத்தா உனக்கு எப்படியா இருக்கு. இப்படியே பேசுன அப்புறம் அப்பான்னு கூட பாக்க மாட்டேன். ஒரே போடு மண்டைய உடைச்சிருவேன் பாத்துக்க”
     அவன் கத்திய கத்தில் தான் ஏதோ பெரிய பிரச்சினை என உணர்ந்த அரவிந்தன் “என்ன சித்து கண்ணா எதாவது பிரச்சினையாடா‌” என மெல்ல கேட்டார் முகத்தை நல்ல பிள்ளை போல் வைத்து கொண்டு.
     “என்ன பிரச்சினையா? நீ என்னத்தை பண்ணி வச்ச. காலைலயே வீட்டு முன்னாடி பஞ்சாயத்து. யாரை கையப் புடிச்சு இழுத்துட்டு வந்த.
     தெருவே கூடி நம்ம வீட்ல கும்மி அடிச்சிட்டு போகுது. எதையும் தெரியாம உனக்கு பிளீவரு கேக்குதா பிளீவரு” பொங்கி எழுந்து விட்டான் சித்து என்றழைக்கப்பட்ட சித்தார்த் அரவிந்தனின் ஆசை மகன்.
     “என்ன நான் ஒரு பொண்ணு கைய புடிச்சி இழுத்தனா” என்று பொய்யாக அதிர்வது போல முகத்தை வைத்த அரவிந்த் ஒவ்வொரு வார்த்தையையும் இழுத்து இழுத்து சொன்னார்.
     “அப்படினு எந்த பேமானி சொன்னான். வாடா மகனே அவனா நானான்னு ஒரு கை பாக்குறேன்” என்று வீரவசனம் பேசி வெளியே போக கிளம்பியவரை
     “ஆமா எங்க போக போறீங்க மிஸ்டர். அரவிந்த்?” என்று நக்கலாக கேட்டு நிறுத்தினான் சித்து.
     “டேய் மகனே உன் ஆருயிர் தகப்பன் மேல ஒரு கும்பல் கைய பிடிச்சு இழுத்தான்னு பொய்யான குற்றச்சாட்ட சொல்லிருக்கு. அதை தப்புன்னு நிருபிக்க வேணாமா. வாடா போவோம். போட்ரா பி.ஜி.எம்அ”
     அரவிந்த் மீண்டும் பேசி வேகமாக வெளியேற போகும் நேரம் அவர் கையை பிடித்து இழுத்து நிறுத்திய சித்து “இரு இரு நைனா இன்னும் என்னோட இன்வஸ்ட்டிகேஷன் முடில.
     அதுக்குள்ள தப்பிச்சு ஓட பாக்குறியா” என சரியாக கேட்டுவிட திருதிருவென முழித்தார் அரவிந்த்.
     ‘ஐயோ கரெக்டா கண்டுபுடிச்சிட்டானே. இப்ப எப்படி வெளிய போறது’ என அரவிந்த் பலமாக யோசிக்க
     “எப்பா இல்லாத மூளைய போட்டு என்னத்த யோசிக்கிற. நீ என்னதான் போட்டு குடைஞ்சாலும் அங்க ஒன்னும் தேறாது. அதனால ஒழுங்கா காலைல என்ன சம்பவம் பண்ணிட்டு வந்தன்னு சொல்லிரு. இல்ல நடக்கிறதே வேற”
     அவன் தோரனையே சொல்லியது ‘நீ சொல்லவில்லை என்றால் இன்னொரு சம்பவம் நிச்சயம்’ என.
     அதில் ஜெர்க்கான அரவிந்த் நடந்ததை பகிர்ந்தார். “அது ஒன்னும் இல்லடா மகனே காலைல நான் வாக்கிங் போனேன்டா. அப்போ…” என தன் கையை மேலே நோக்கி காட்ட
     “அங்க என்ன பாக்குற” என்றான் சித்து. “ஃபிளாஷ் பேக்குடா. சும்மா குறுக்க குறுக்க பேசாம சொல்றத கேளு” என வியாக்கியானம் பேச தலையில் அடித்து கொண்ட சித்துவும் ‘சொல்லி தொலை’ என்ற தோரணையில் நின்றான்.
     காலை நேர காற்றை முகத்தில் வாங்கியபடி வாக்கிங் சென்று கொண்டிருந்தார் அரவிந்த். அப்போது ஒரு பாட்டி சாலையை கடக்க பயந்து நின்றிருந்தார்.
     ஆனால் அந்த பரந்து விரிந்த சாலையில் ஒரு ஈ காக்கா கூட இல்லாதது வேறு விஷயம்‌.
     இந்த காட்சியை கண்டு ‘நான் பிறந்ததே இந்த உலகத்துக்கு சேவை செயய்டா!’ என வேகமாக அந்த கிழவியை நோக்கி போனார்.
     “இந்த ரோட் கிராஸ் பண்ண நான் உதவி பணண்வா?” பவ்யமாக கேட்டு வைத்தார் அரவிந்த். இவரின் உடையை கண்டாவது அந்த கிழவி சற்று சுதாரித்திருக்கலாம்.
     அந்த கிழவி ஒருவேளை ராம்ராஜின் பேனாய் இருந்திருக்கும் போல. எனவே “சரிய்யா என்னை அந்த பக்கம் விட்டுட்டு போயா” என்றார் அந்த கிழவியும் இவரை நம்பி.
     அந்த கிழவியின் சம்மதம் கிடைத்தவுடன் குதூகலமாய் கையை பிடித்து யாருமே இல்லாத ரோட்டில் “பார்த்து வா பாட்டி. கொஞ்சம் லேப்ட் அப்படியே ரைட்டு” என ஏதேதோ பேசி ஸ்ரைட்டாக இழுத்து வந்து ரோட்டை தான்டி விட்டார்.
     “ரொம்ப நன்றி பா. நீ நல்லா இருக்கனும்” என அரவிந்த் எதோ மலையை பெயர்த்து கையில் தந்தது போல் பாட்டி பேசி வைக்க,
     “என்னா பாட்டி நான் எவ்ளோ பெரிய உதவி பண்ணிருக்கேன். வெறும் தேங்க்ஸோட போகலாம்னு பாத்தியா. ஒழுங்கா நான் கேக்கறத தந்திட்டு போ”
     அரவிந்த் பேசியதற்கு ‘என்ன வேணும்’ என கிழவியும் எதற்த்தமாக கேட்க நம் காதல் மன்னனோ “ஒரு உம்மா குடுத்துட்டு போ” என டீல் பேசினார்.
     “எதே!” என்று தன் நெஞ்சில் கை வைத்து ஷாக்கான கிழவி “எலேய் என்ன பாத்தா எப்படி தெரிது. நான் என்ற புருஷன தவிர யாருக்கும் முத்தலாம் தர மாட்டேன். என்ன பாத்து என்ன செய்ய சொல்ற படுபாவி” என வசைமாரி பொழிந்து மேவாயை தோலில் இடித்தது.
     “சரி விடு. நீ தரலைனா என்ன நான் தந்திட்டு போறேன்” என்ற அரவிந்த் கிழவியின் கண்ணத்தில் நச்சென்று ஒரு இச்சை வைக்க
     “ஐயையோ! எனக்கு ஒருத்தன் முத்தம் குடுத்துட்டான். ஐயோ யாருமே இல்லையா இந்த அநியாயத்தை கேக்க. கட்டைல போறவன் என் கற்பை கலங்கம் பண்ணிட்டானே”
     கிழவி ஊரையே கூட்ட கத்த “எதே கற்ப கலங்கம் பண்ணிட்டனா?’ அதிர்ந்த அரவிந்த் எடுத்தார் ஒரு ஓட்டம், சந்து பொந்து என்று பார்க்கவில்லையே அப்படி ஒரு ஓட்டம்.
     குண்டு குழி என எதையும் பாராது அடித்து பிடித்து அவர் வசிக்கும் தெருவின் சாலைக்கு ஓடி வந்துவிட்டார்.
     “ஏன் நைனா கெழவிய கூட விட்டு வைக்க மாட்டியா. அதுக்காயா தெருவே கூடி என் தலையில ஃபுட்பால் விளாடிட்டு போகுது”
     நொந்து போய் சொன்ன சித்து ஏதோ யோசித்துவிட்டு “ப்பா ஒரு சந்தேகம். நீ எதோ ஒரு கெழவிட்ட தானே வம்பிழுத்துட்டு வந்த.
     ஆனா காலைல வந்தது அந்த முச்சந்தில இருக்க பிரியா வீட்டு ஆளுங்களே” என சந்தேகத்தை எழுப்பினான்.
     ‘ஐயையோ! இத நாம எதிர்பாக்கலையே’ என அரவிந்த் முழியை டிசைன் டிசைனாக திருப்ப கடுப்பான சித்து “எல்லாத்தையும் மறைக்காம சொல்லிடு. இல்ல நடக்கறதே வேற” என்றான் கறாராக.
     “அதுடா மகனே” என ஆரம்பிக்கும் போதே உஷாராக இரண்டு அடி தள்ளி நின்ற அரவிந்த் தொடந்தார்.
     “நான் மூச்சு வாங்க ஓடி வந்தனா. அப்போ என்னோட சைட்டு. அதான் டா அந்த பிரியா அம்மா. குளிச்சிட்டு தலை துவடிட்டு இருந்தாடா. அந்த தண்ணீ காத்துல என மேல மழை சாரல் மாதிரி விழுந்துச்சா.
     ‘தம்தன தம்தன’ மியூசிக் வேற கேட்டுச்சா. அப்படியே அவள சைட் அட்டிச்சிட்டு, அப்புறம் எப்பவும் போல நான் பாட்டுக்கு அவகிட்ட எப்படி இருக்கன்னு தான்டா கேட்டேன்.
     அதுக்கு அவதான் அவ புருஷன் அத பண்றான் இத பண்றான்னு அவ கஷ்டத்த சொல்லி ஒப்பாரி வச்சா.
     அவ அழுவறத தாங்க முடியாம அவ கைய பிடிச்சு ஆறுதல் சொன்னேன். இதான்டா மகனே நடந்தது‌. அந்த பாலாபோன பாலு அந்த பிரியா அப்பன் இதை பாத்திருப்பான்னு நினைக்கிறேன்.
     அதான் ஊரை கூட்டி கரைச்சல குடுத்துட்டு போய்ட்டான். பாவம் என் டார்லு அவன்கிட்ட மாட்டிட்டு எவ்ளோ கஷ்டப்படுறா”
     அரவிந்த் நிறுத்தாது சீரியல் டயலாக்குகளை அள்ளிவிட சித்துவிற்கே ஒரு நிமிடம் தலை சுற்றியது‌. இப்படி அரவிந்த் சொல்லி முடிக்கும் நேரம் அவர்கள் வீட்டின் வெளியே
     “எவன்டா அது என் பாட்டிக்கு முத்தத்தை வச்சது? வெளிய வாடா என் டபரா தலையா” என்று ஒரு குரல் கேட்க
     சித்து அங்கிருந்த தன் தந்தையை பாசமாக ஒரு பார்வை பார்த்து வைக்க ‘ஆத்தாடி அடுத்த பஞ்சாயத்தா’ என உஷாரான அரவிந்த் அப்படியே நழுவி தன் அறைக்குள் அடைந்தார்‌.
-ரகசியம் தொடரும்

Advertisement