“சார்.. நீங்க கொஞ்சம் சும்மா இருங்க, நீங்க தேவை இல்லாம பேசினதால தான் இவ்வளவு பிரச்சனையும்..” மினிஸ்டர் அவரிடம் எரிந்து விழுந்தார்.
“நான் என்ன தேவை இல்லாம பேசினேன், நடந்த உண்மையை தான் சொன்னேன், அதுக்கு போய் என்னை அடிப்பானா..?” கலாதரன் சொல்ல,
“சித்தப்பா.. நீங்க சும்ம இருங்க, நான் பேசிக்கிறேன்..” அவரை அடக்கினான் பிரசாத்.
“என்ன பேசுற நீ..? எதுக்கு பேசணும் முதல்ல, என்னை அடிச்ச இவனை ஒருவழி பண்ணாம என்ன பேச்சு வேண்டி கிடக்கு.. விடுடா என்னை முதல்ல, இவனை என்ன பண்றேன் பாரு..” என குதிக்க, ஜின்னா அவரை சட்டென விட்டுவிட்டான்.
குதித்து கொண்டிருந்த மனிதர் போதையில் நிற்க முடியாமல் கீழே விழுந்துவிட்டார். ஏற்கனவே உதய்யின் உபயத்தால் வாய் உடைந்திருக்க, இப்போது மூக்கும் உடைந்து போனது. ரத்தம் வழிய தள்ளாடி எழுந்து நின்றவரை பார்த்து அங்கிருந்த குழந்தைகள் சிரித்துவிட, கலாதரன் சுற்றி இருந்த எல்லோரையும் பார்த்தார்.
உதய்யை அவமானப்படுத்த நினைத்து அவர் அசிங்க பட்டு போனதை புரிந்து கொண்ட கலாதரனுக்கு மனதில் அவ்வளவு வன்மம். திரும்பி உதய், ஜின்னாவை பார்த்த பார்வையில் ஷா வும் விழுக, இவளால் தானே இவ்வளவும் என்று நினைத்தவர்,
“என்ன அவனுக்கு சப்போர்ட்டா என்னையே ஆள் வச்சு அடிக்கிறயா..? ஏன் நாலு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நீயும் உன் அப்பாவும் அவனை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டு அவன் முடியாதுன்னு உங்க மூஞ்சில கரி பூசினது மறைந்து போச்சா..? அவனுக்கு போய் சப்போர்ட் பண்ற, அந்தளவு அவன் பைத்தியமா உனக்கு..? என்ன பொண்ணு..” கத்தி கொண்டே சென்றவர், ஜின்னாவின் அடியில் திரும்ப கீழே விழுந்திருந்தார்.
படபடவென பேசிவிட உணர்ந்து அவரை தடுப்பதிற்குள் எல்லாம் பேசிவிட்டிருந்தார் மனிதர். அவரின் பேச்சில் எல்லோரும் அதிர்ந்து போய்விட, ஷாரா முகத்தில் இருந்து எதுவும் கண்டு பிடிக்க முடியவில்லை. அமைதியாக அவரை பார்த்திருந்தவள் கை விரல் நகங்கள் உள்ளங்கையை குத்தி புண்ணாக்கி கொண்டிருந்தது.
“ஜின்னா அவரை விடு..” ஜித்தன் அவனை தடுக்க, ஜின்னா அவரை புரட்டி எடுத்து கொண்டிருந்தான்.
“ஷா மேடம் என்ன இது..?” மினிஸ்டர் அவளிடமே சென்று கேட்க, கண் மூடி திறந்த உதய்க்கு, இப்போது இந்த நொடி எதாவது செய்தே ஆக வேண்டும் என்று புரிந்தது.
ஷாராவை பேசிவிட்ட கலாதரன் பேச்சு மிகவும் அதிகப்படி. உணர்ந்திருந்தவன் ஷாராவின் முன் சென்று நின்றான். அவள் அவனை வெறித்து தான் பார்த்தாள்.
“சார்.. ஒரு நிமிஷம்..” மினிஸ்டரிடம் சொல்ல, அவர் கேள்வியாக பார்த்து விலகினார்.
ஷாவின் கண்களை நேருக்கு நேர் பார்த்த உதய், “நான் ஏதாவது செய்ய வாய்ப்பு எனக்கு கொடுக்கிறியா..?” கேட்டான். ஷா வெறித்த பார்வை மாறவில்லை.
“ப்ளீஸ்ப்பா..” குரலில் கண்டிப்பாக பொறுமை, கனவு, காதல் இருந்தது. பரிபூரணமாக அதை உணர்ந்து கொண்ட ஷாவிற்கு கோவம் ஒரு பக்கம் இருந்தாலும் மனது கலங்கி போனது. அதன் விளைவு அவளின் உடலில் ஒரு தளர்வு.
“நோ.. நோ ஷாரா.. நீ எதுவும் தப்பு செய்யல.. பி ஸ்டார்ங்..” தன்னை தானே மீட்டு திரும்ப நிமிர்ந்து நின்றவள், “நீங்க எனக்கு செய்ய எதுவும் இல்லை..” என்றுவிட்டாள் உதய்யிடம்.
அவளையே பார்த்திருந்த உதய்க்கு அவளின் உணர்வுகள் புரிந்தது. அவளின் கோவம் புரிந்தது. ஆனால் இதில் தன் தவறும் ஏதும் இல்லையே.
முதல் இவன் மறுப்பு. பிறகு இவள் மறுப்பு. இரண்டில் இருவருக்கும் அவரவர் நியாயங்கள். ஆனால் இப்போது யோசுக்க வேண்டியது வேறு ஆச்சே. காலதரன் பேச்சு.. அதை தவறு என்று இந்த உலகிற்கு சொல்லியே ஆக வேண்டும்.
“ம்ப்ச்..” தங்களையே பார்த்து கொண்டிருந்தவர்களை பார்த்தான். அதிலும் பிரசாத்தின் பார்வை அவனின் முடிவை உறுதி படுத்தியது.
“எனக்கு வேற வழி இல்லை..” ஷாவிடம் சொன்னவன், மேடைக்கு தாவி மைக்கை கையில் எடுத்து கொண்டான். என்ன செய்ய போகிறான்.. என்று எல்லோரும் பார்க்க, ஷாவிற்கு புரிந்து போனது. அங்கிருந்த திரும்பி நடக்க ஆரம்பித்தவளின் கை பற்ற, திரும்பி பார்க்க, உதய் தான் கையில் மைக்குடன் அவளிடம் குதித்திருந்தான்.
அவளின் கையை விடாமல், மைக் எடுத்தவன், “சார்.. உங்க பங்க்ஷன்ல எங்களுக்காக சில நிமிஷங்கள்..” மினிஸ்டரிடம் கேட்டான். அவர் தலை அசைக்கவும்,
“ஹலோ எவெரிஒன்.. நான் உதய்.. உதய் கிருஷ்ணா.. என்னை சில பேருக்கு தெரிஞ்சிருக்கும், பல பேருக்கு தெரிஞ்சிருக்காது.. இவங்க மிஸ்.. பவ்யாஷாரா.. மிஸ்.. பவ்யாஷாரா ராம்குமார்.. இன்னும் கொஞ்ச நாள்ல மிஸர்ஸ் பவ்யாஷாரா உதய் கிருஷ்ணாவா மாற போறவங்க..” என அறிவித்துவிட, சில நொடிகள் கடந்து கை தட்டல்.
“எஸ்.. கூடிய சீக்கிரம் எங்க கல்யாணம் நடக்க போகுது.. அதுவும் ரெண்டு குடும்பத்தோட சம்மதத்துல தான்..” என,
கூட்டத்தில் இருந்த ஒருவர் “லவ் மேரேஜ்ஜா..” என்றார் சத்தமாக.
“ஆமா..” என்றுவிட்டான் நொடியும் தாமதிக்காமல்.
“அப்போ காலதரன் சார் சொன்னது..” இன்னொருவர் கேட்க, இதற்கு தான் காத்திருந்தேன்.. நினைத்தவன்,
“அவர் சொன்னதுல சிலது சரி.. பலது தப்பு.. மிஸ்டர் RK சார் தான் அவர் பெண்ணுக்காக என்னை செலக்ட் பண்ணார், என்னை கேட்கவும் செஞ்சாங்க, எனக்கு அப்போ அதுக்கான வயசும் இல்லை, சொல்லி கொள்ளும் படி அடையாளமும் இல்லை, சோ நான் வேண்டாம் சொன்னேன், அவரும் அதை சரியா புரிஞ்சிக்கிட்டார்..”
“ஆனா விஷயம் அதோட முடியல, அதுக்கு அப்பறம் எங்களுக்கான கோல்டன் டேஸ் ஸ்டார்ட் ஆனது. எங்களுடைய காதலை நாங்க உணர்ந்த.. அனுபவிச்ச நாட்கள். என்ன எங்க காதல் மற்ற காதல் போல இல்லை. கொஞ்சம் வித்தியாசமானது.. நிறைய கமிட்மென்ட் நிறைஞ்சது..” உதய் உண்மையை தான் சொன்னான்.
ஆனால் சொன்ன வார்த்தைகள்.. கலாதரன், பிரசாத் யாராலும் மறுக்க முடியாதபடி.
“நாங்களே இதை பிரெஸ் மீட் வச்சு சொல்ற முடிவுல தான் இருந்தோம், ஆனா கலாதரன் சார் அதுக்கான நேரத்தை எங்களுக்கு கொடுக்கல.. இங்கேயே சொல்லிட்டேன், அபிஷியல் அனோன்ஸ்மென்ட் வரும்..” முடித்து மைக்கை வைத்துவிட்டான்.
தங்களுக்குள்ளே தங்களின் உறவை மறுத்த இருவருமே.. இன்று ஒட்டு மொத்த உலகிற்கு தங்களின் உறவை சொல்லி விட்டனர்.
உறவுகளின் நெளிவு சுளிவுகளில் வளையாத இரண்டு கல் தூண்களும் எப்படி ஒன்றோடு ஒன்று பிணைய முடியும்..?