“நான்ஒன்னும் திரும்ப ஆரம்பிக்கல, அந்த மேடம் தான் அந்த ராஜமாணிக்கம்கிட்ட சொல்லி எனக்கு உதவி பண்ண சொல்லியிருக்காங்க..”
“சரி அதுக்கு உடனே என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு அவகிட்ட போய் கேட்பியா..?”
“அப்போ அந்த பிரசாத் அவளை இப்படியே டார்ச்சர் பண்ணிக்கிட்டு இருக்கட்டுமா..?”
“அது அவ பிரச்சனைடா, உனக்கென்ன..?”
“எனக்கென்னவா..? என்னமா பேசுற நீ..? அவளுக்கு ஒரு பிரச்சனைன்னா நான் போகாம வேற யார் போவா..?”
“அது தான் நானும் கேட்கிறேன், நீ ஏன் செய்யணும்..?”
“ஏன் செய்யணுமா..? அவளுக்கு.. அவ..”
“ம்ம்.. சொல்லு..” கண்ணம்மா மேலே ஊக்க, உதய் மனதில் இருப்பதை வெளியே சொல்லாமல் தடுமாறி நின்றான்.
“என்ன உதய் சொல்ல முடியலையா..? மனசுல இருக்கிறதை வாய் திறந்து வெளியே சொல்ல முடியாத அளவு பெரிய தப்பா பண்ணிட்டிருக்க..?”
“இதிலென்ன தப்பு இருக்கு, நான் வேற, அவ வேற கிடையாது, அவளுக்கு ஒன்னுன்னா நான் அவகூட நிக்க தான் செய்வேன்..”
“இதை அவகிட்ட சொன்னியா..?”
“ஏன் சொல்லணும், அவ தான் என்னை வேண்டாம் சொல்லிட்டாளே..?” முகம் இறுக சொன்னான்.
“உதய் நீ பேசுறது உனக்கே லாஜிக்கா தெரியுதா..? நீ உன் மனசை சொன்னா தானே அவளுக்கு புரியும்..”
“ம்மா.. அவளுக்கு என் மனசு இன்னுமா புரியாம இருக்கும்..?”
“இதுக்கு என்ன தான் வழி..”
“ஒரு வழியும் இல்லை, எல்லாம் முடிஞ்சது..” கை கட்டி நின்றிருந்த மகனை அண்ணார்ந்து பார்த்த கண்ணம்மா.
“இருக்கு உதய், நீ கொஞ்சம் பொறுமையா அவகிட்ட உட்கார்ந்து பேசினா..” என,
“அது முடியாதும்மா, எப்போ அவ என்கிட்ட நேராவே என்னை வேண்டாம் சொல்லிட்டாளோ அப்போவே எல்லாம் முடிஞ்சது, இனி அவகிட்ட போய் நான் நிக்கிறதா இல்லை..” மிகவும் உறுதியுடன் சொன்னான்.
கண்ணம்மா மகனின் முகத்தை பார்த்தார். இறுகி போய் இருந்தாலும், ஷாராவின் மறுப்பு அவனை மிகவும் பாதித்திருப்பது புரிந்தது. எங்கோ பார்த்து நின்றவன், கண்ணம்மாவின் பார்வையில் அவரின் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்.
“என்னை இப்படி பார்க்காத..?” வார்த்தைகள் காரமாக விழுந்தாலும், அவனின் கைகள் அவரின் கைகளை தேடி பிடித்து கொண்டது.