“அப்போ அவன் பேசினது, செஞ்சது..?”

“பிரசாத்தை ஹாண்டில் பண்ண என்னால முடியும்..”

“அவன் என்னை பேசியிருக்கான்..”

“அதை நீங்க கேர் கூட பண்ணியிருக்க மாட்டிங்கன்னு எனக்கு நல்லா  தெரியும்..”  சர்வ நிச்சயமாய் சொன்னாள்.  

அது என்னமோ உண்மை தான். உதய்யை பொறுத்தவரை அவன் அவனை அப்படியே ஏற்று கொள்வான். இது தான் நான், என் ஸ்டேட்டஸ் இது தான், என் பிஸ்னஸ் இது தான். என் பணவசதி இது தான். உன்னை விட நான் கீழே  என்று நீ நினைத்தால், அதனால் எனக்கு ஒன்றும் கிடையாது. 

“இருந்துட்டு போறேன், இப்போ என்ன..? இன்னிக்கு நான் கீழே இருந்தா நாளுக்கு மேல வராமலா போயிடுவேன், என் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு, உன் வீண் பகட்டுக்கு நான் ஆள் கிடையாது.. யாருக்கும் கீழே நான் இல்லை.. யாருக்கும் மேலேயும் நான் இல்லை..”

“அவரவர் திறமை, அவரவர் தைரியம், அவரவர் உழைப்பு அவரவர்க்கு. இதுல என்ன இருக்கு..?” மற்றவரின் பேச்சை தூசியாய் தட்டி கடக்கும் மனிதன் தான் உதய்.  

அதில் பிரசாத் போன்ற மனிதர்களும் அடக்கம். அவன் மட்டுமில்லை பிஸ்னஸ் உலகில் கால் வைத்த பிறகு  பலரை இப்படி கடந்திருக்கிறான் அவன். இனியும் அப்படித்தான். 

ஆனால்  இதில்  அவனுக்கு கோவம் வரும் இடங்களும் உண்டு. அது அவனின் திறமையை குறைத்து மதிப்பிட்டால், அவனை சீண்டினால், அவனுக்கு தொல்லை கொடுத்தால், அவனை எதிர்த்தால் விடவே மாட்டான். 

“நீ எவ்வளு பெரிய ஆளா இருந்தா என்ன நீயும் மனுஷன் தானே, உனக்கு வலிக்கும் தானே..?” நேருக்கு நேராக நிற்பான். 

இதை தான் ஷா சொன்னாள். பிரசாத் அவனை பற்றி பெரிதாக பேசினானே தவிர, உதய்யை மட்டம் தட்டவில்லை. அவன் விஷயத்தில் உதய் கோவமே ஷாவை அவன் தொந்தரவு செய்வதும். மிரட்டுவதும் தான்.

அவளிடம் அவன் தப்பாக பேசினான் என்று தெரிந்து தான் அவனை அடிக்கவும் செய்தான். அதுவும் குணா இப்படி என்று  சொன்ன அடுத்த நொடி செய்தான். அப்போது தான் அவனுக்குமே  ஷாவை விட முடியாது என்ற உறுதி வந்தது. 

அதனாலே கலாதரனை மிரட்டி அனுப்பிவிட்டு ஷா வரும் வரை குணா கொலு பங்க்ஷனில் இருந்தான். அந்த ஒரு மணி நேரம் அவனின் மனம் முழுதும் ஷா தான். கலாதரன் சொன்னது போல அவளுக்கு ஒன்று என்றால் நான் எப்படி விடுவேன்..? அதுவும் அவள் இந்த நிலையில் இருக்கும் போது எப்படி விட முடியும்..? 

கூடவே இருந்து அவளை நெருக்கும் மனிதர்களை இவன் நொறுக்க வேண்டும். அதற்கு இவன் அவளுடனே இருக்க வேண்டும், ஓரே வழி திருமணம் தான். இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும். அதை தான் ராமிடம் கேட்டான். அவர் ஒத்து கொண்டார் தான், ஆனால் ஷா ஏற்கவில்லை. 

உதய் விடாமல் மறுநாளே கண்ணம்மாவை கூட்டி வந்தான். அவரிடம் அவளை காட்டிவிட்டால் போதும் அவர் பார்த்து கொள்வார் என்று உதய்க்கு நன்றாக தெரியும். அவன் எதிர்பார்த்தது போல ஷாவும் அவரிடம் கொஞ்சம் பொறுமையாக பேச, உதய்க்கு நடக்கும் என்ற சைன் தெரிந்தது. ஆனால் அதற்கு பிறகான பிரசாத் பேச்சு..??

அவர்கள் பிஸினஸில் உட்கார்ந்து கொண்டு அவர்களையே மிரட்டும் இவனை விடுவதா..? முடியாது, என்ன தைரியம் இருந்தா என் முன்னாடியே ஷாவை மிரட்டுவான்..? விட கூடாதே, RK குரூப்ல இவன் இருக்கிறதால தானே இவ்வளவு ஆட்டமும். வெளியே அனுப்பிட்டா..?  அதுக்கு நான் உள்ள போகணுமே..? 

RK குரூப்பிற்குள் இவன் செல்ல ஷேர் வேண்டும். அதுவும் ஓரளவுக்கு மேஜர் ஷேர். அப்போது தான் பிரசாத்தின் கொட்டத்தை ஒடுக்க முடியும், அதை கொடுக்க ராம், ஷாவால் மட்டுமே முடியும். ஆனால் அவள் எடுத்தவுடன் முடியாது என்றுவிட, அவள் மேல் கோவம். 

அந்த ப்ராஜெக்ட் பணத்தில் அவன் செய்ய அவனுக்கு ஆயிரம் கனவு இருக்கு, அதை எல்லாம் விட்டு இவளுக்காக வந்தால் இவளே  வேண்டாம் சொல்வாளா..? 

நீ என்ன சொல்றது என்று தான் ராமை பார்க்க வந்தான். ஆனால் இங்கும் அவள். திரும்பவும் பேச்சு வேறு பக்கம் சென்றது. அதுவும் அவள் தன்னை கண்டு கொண்டால் என்பது உதய்க்குமே ஆச்சரியம் தான். பிராசத்தின் பேச்சு அவனை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை என்பது உண்மை தானே..?

“அந்தளவுக்கு மேடம்க்கு  என்னை தெரிஞ்சிருக்கா..?”  அவளிடமே கேட்டான்.  தன்னை முழுதும் புரிந்து வைத்திருப்பவள். முகத்தில் மலர்ச்சி தான். 

“ஆனா உங்களுக்கு என்னை தெரியலையே..? உங்களோட இந்த செயல் என்னை வருந்த வைக்கும் உங்களுக்கு தோணலையே..?”   வெறுமையுடன் கேட்டாள். 

“ஏன் அப்படியென்ன பண்ணிட்டேன் நான்..? அந்த பிரசாத் என் கண் முன்னாடியே உன்னை மிரட்டுவான், நான் பார்த்துட்டு இருக்கணுமா..?”  

“அவன் என்னை இன்னிக்கு நேத்து மிரட்டல..”

“எனக்கு இது இப்போ தான் தெரியும்..”

“தெரிஞ்சா தான் என்கிட்ட வருவீங்களா..? அப்போ என்னை யாராவது மிரட்டினா தான் எனக்கு உதவி பண்ண தோணும் இல்லை..”

“இது உதவி இல்லை, என்னோட உரிமை, கடமை..” உதய் குரலில் கோவம் எட்டி பார்த்தது. 

“இல்லை இது உதவி தான்.. நீங்க தான் இப்படி சொல்லவும் செஞ்சிங்க..” உதய்க்கு புரிந்தது ராஜமாணிக்கம விஷயத்தில் இவன் பேசியது. 

“அதுவும் இதுவும் ஒண்ணா..?”

“இல்லை தான். நீங்க எதையும் சாதிக்கும் ஆண் எனும் கடவுள், நான் எதுவுமே செய்ய முடியாத பெண் எனும் சதை..”

“என்ன பேசுற நீ..?” உதய் குரலில் முழு அதிருப்தி. அவன் ஒரு நாளும் அப்படி நினைத்தது இல்லையே, அதுவும் கண்ணம்மாவின் வளர்ப்பு அப்படி நினைக்கவும் வைக்குமா..? 

“ஏன் நான் சொல்றதுல என்ன தப்பு இருக்கு..?  ராஜமாணிக்கம் உங்களுக்கு உதவி பண்ண தான் சொன்னதுக்கு என்ன கோவம், எவ்வளவு பேசுனீங்க..? நான் என்ன கையாலாகாதவனா..? என்னை என்ன நினைச்சீங்க..? எனக்கு திறமை, தைரியம் இருக்கு, யாரோட உதவியும் எனக்கு தேவை இல்லை, அவங்கவங்க அவங்கவங்க வேலையை பாருங்க..”  அவன் அன்று பேசியதை சொன்னவள், 

“அப்போ என்னால எதையும் ஹாண்டில் பண்ண முடியாது சொல்றீங்களா..?” மிகவும் தீவிரமாக கேட்டாள். 

“நான் அப்படி சொல்லலைப்பா..”

“ஏன் சொல்லணும், அதான் ஷேர் கேட்கிறீங்களே..?”  என்ன சொல்வான் உதய்..? 

“சரி நீயே அவனை ஹாண்டில் பண்ணு, நான் கூட நிக்கிறேன்..”

“தேவையில்லை..  நீங்க சொன்னது தான், எனக்கு யாரோட சப்போர்ட்டும் தேவையில்லை..”  பட்டென பேசினாள். 

“அதை நீ சொல்லாத, அப்படி உன்னை விட முடியாது, நான் உள்ள வருவேன்..”

“அதுக்கான நேரம் உங்களுக்கு முடிஞ்சது.. நீங்க உங்க அடையாளத்தோட நில்லுங்க, நான் என் அடையாளத்தோட நிக்கிறேன்..”

“என்ன பழி வாங்குறியா..?”

“நீங்க அன்னிக்கு சொன்னதை தான் சொல்றேன்..”

“ஏன் நான் சொன்னதுல என்ன தப்பு, உங்க ஷேடோல நான் நிக்க விரும்பல, நான் உதய் கிருஷ்ணாவா தான் ஜெயிக்கணும் நினைச்சேன்..”

“அப்படியே ஜெய்ங்க.. வாழ்த்துக்கள்..”

“ஷா நீ என்னை ரொம்ப கோவப்படுத்துற..?”

“நீங்க என்னை காயப்படுத்தினதை விட கோவம் ஒன்னும் பெருசில்லை..”

“ஒரு மனுஷன் தன்மானத்தோட, சுயமாய் நிமிர்ந்து நிக்க நினைக்கிறது தப்பா..?”

“அதெப்படி தப்பாகும்..?  உங்க தன்மானம், சுய கௌரவம் முன்னாடி நான் நின்னது தான் தப்பு..”

“இப்போ என்ன உன்னை விட்டு வேற கல்யாணமா பண்ணிக்கிட்டேன்..? உனக்காக தானே நானும் தனியா நிக்கிறேன்..”

“இது.. இது தான் எனக்கு வேண்டாம், உங்க பரிதாபம் எனக்கு ஒன்னும் வேண்டாம், எனக்காக நீங்க ஒன்னும் தனியா நிக்க தேவையில்லை.. அமோகமாக கல்யாணம் செஞ்சு குடும்பமா வாழுங்க..”

“போடி.. எதாவது பேசிடுவேன்..”  அவளின் முகத்திற்கு நேரே கை நீட்டி பாய்ந்தான். 

“நீங்க என்ன கோவபட்டாலும் நான் சொல்றது தான், உங்க உதவி எனக்கு வேண்டாம், நீங்க உங்க வேலையை பாருங்க.. என்னை, என் பிஸினஸை  பார்த்துக்க எனக்கு தெரியும்..”

“அப்போ என்னை வேண்டாம் சொல்றியா..?”

“நான் அப்படி சொல்ல மாட்டேன், நிராகரிப்பின் வலி எனக்கு தெரியும்..”

“இன்னிக்கு எனக்கும் அந்த வலியை காமிச்சுட்ட..”  உதய் கிளம்பிவிட்டான். 

முடிந்தது.. முன்பு போல இந்த முறையும் ஆரம்பித்த வேகத்திலே முடிந்தது.