“ம்ப்ச்.. இப்போ என்னண்ணா செய்ய..?” ஒருவன்  கேட்க,

“என்ன செய்ய..? எப்போவும் போல அமைதியா இருக்க வேண்டியது தான்..” இன்னொருவன் சொன்னான்.

“எப்படிடா  அமைதியா இருக்க முடியும்..? போன வாரம்  ஷா மேடம் ஸ்டீல் கம்பெனில லேபர் பிரச்சனையை உருவாக்கி ஒரு வாரத்துக்கு கம்பெனியை மூட வச்சுட்டானுங்க, இப்போ இரண்டு நாளைக்கு முன்ன கூட அவங்க திருச்சி சிமெண்ட் பிளான்ட்ல இருக்கிற அத்தனை மிஷினையும் ஹெவி ஷார்ட் சர்கியூட் பண்ணி மொத்தத்தையும் கெடுத்து விட்டுட்டானுங்க..”

“ஏன் நமக்கு வந்த இன்பர்மேஷன் படி இந்த வாரம் கூட திரும்ப ஏதோ பண்ண பிளான் போட்டுட்டு இருக்காங்க,  அவனுங்களை இப்படியே விட்டா எப்படிடா, ஷா மேடம் மட்டும் எத்தனை சமாளிப்பாங்க, ஏதோ அவங்க தைரியமான பொண்ணுகிறதால அசராம சமாளிச்சிட்டு இருக்காங்க, இதே மத்தவங்களா இருந்தா பிஸ்னஸாவது ஒன்னாவதுன்னு ஓடிடுவாங்க..”

“ண்ணா.. நீங்க இவ்வளவு கோவபட்டு என்ன பிரயோஜனம்..? நாம நம்மால முடிஞ்சதை செஞ்சிட்டு தான் இருக்கோம், ஏன் உதய் சார்கிட்ட கூட நாம பழகுறதே ஷா மேடம் கேட்டுக்கிட்டதால தானே..?”

“பழகி என்ன யூஸ்..? அவரும் மேடம் மாதிரி நான் பார்த்துகிறேன்  தான் சொல்றார்.. இவங்க விட்டா தானே அவங்க பின்னாடி நம்மளை மாதிரி எத்தனை விசுவாசிங்க இருக்காங்கன்னு அவனுங்களுக்கு காட்ட முடியும்..”

“என்னமோ போடா..? நான் இன்னிக்கு இங்க சென்ட்ரல் மினிஸ்டரா இருக்க காரணம் RK சார் தான், அவருக்கு ஒன்னு செய்ய முடியலங்கிறது தான் ஆதங்கமா இருக்கு..”  ராஜமாணிக்கம் பேசி கொண்டிருக்க, இங்கு உதய்   போனை கட் செய்துவிட்டான்.  ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை நிலைப்படுத்த முயன்றான்.

“உதய்.. என்ன ஆச்சு..?”  குணா கேட்டரிங் ஆட்களிடம் பேச வந்தவர் உதய்யை கவனித்து கேட்க, அவனால் பேச கூட முடியவில்லை.

“இந்த தண்ணி குடி முதல்ல..”  கொடுக்க, வாங்கி மொத்த பாட்டிலையும் காலி செய்தான்.

“என்ன ஆச்சு..?”  அவர் கரிசனத்துடன் கேட்க, உதய் மேலோட்டமாக சொன்னான்.

“ஓஹ்.. ஆனா ராஜமாணிக்கம் சொல்றது உண்மை உதய், அவங்க நம்மளை அடிக்க முன்ன நாம அவங்களை அடிக்கணும்.. யோசி..”

“அங்கிள் அவங்களை மாதிரி நம்மால செய்ய முடியுமா..? நாம பிஸ்னஸ் மேன்.. ரவுடி இல்லை..”

“ஹாஹா உதய்.. நீ முதல்ல மனுஷன், அப்பறம் தான் பிஸ்னஸ் மேன், நம்மளை ஒருத்தன் அடிக்க வந்தா வாங்கிட்டு இருக்க முடியாது, அப்படி வாங்க ஆரம்பிச்சா கடைசி வரை வாங்கிட்டு தான் இருக்கனும்..”

“அதோட அவனுங்க வச்சிருக்கிற பாதி தொழில் அடிச்சு, மிரட்டி பிடுங்குனது, அதிலும் முக்கால்வாசி இல்லீகல் தான், பினாமி பேர்ல தான் இருக்கு, ஆனா நாம அப்படி இல்லை, நம்மளோட பிஸ்னஸ்ல இருக்கிற ஒவ்வொரு செங்கல்லும் நாம தோள்ல தூக்கி சுமந்து கட்டினது, அதை விட முடியுமா..?”  உதய் அப்போதும் அமைதியாக இருக்க,

“ஷாவும் உன்னை மாதிரி தான் சொல்லிட்டு இருக்கா..? எவ்வளவு குடைச்சல் கொடுக்கிறாங்க தெரியுமா..? அந்த பிரசாத் சொல்லவே வேண்டாம், அவனை கட்டிக்க சொல்லி தான் இவ்வளவு தொந்தரவும், கொஞ்ச நாள் முன்னாடி கூட அவகிட்ட  எதோ தப்பா பேசி  அடியே வாங்கிட்டான்..”

“அப்படிஇருந்தும் அடங்காமா ஆடிட்டு தான்  இருக்கான்.. இந்த நேரம் பார்த்து  ராம் வேற உடம்பு முடியாம ரெஸ்ட்ல இருக்க பிள்ளை எவ்வளவு தான் பார்க்கும்..”  குணா தன் போக்கில் சொல்ல, உதய் உடனே போன் எடுத்து ஒருவனுக்கு  அழைத்து என்னென்ன செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டான்.

அதன் படியே கலாதரனுக்கும், அவனின் அண்ணன் மகன் அந்த பிராசத்திற்கும் பயங்கர அடி கிடைத்தது. நினைத்தபடி எல்லாம் முடித்த உதய்க்கு ஷா விடம் பேசியே ஆகவேண்டும் என்ற உறுதி.

மனதில் என்னென்னமோ.. யார் யார் மேலேயோ கோவம். தன்னை அடக்கி கொண்டு இருந்தவன், ராஜமாணிக்கம் இன்னமும் வழுவலாக பேச கட்டுப்படுத்த முடியவில்லை. அதனாலே கோவமாக பேசிவிட்டான்.

“உதய்..”  குணா அவனை ஆசுவாசப்படுத்த,

“அங்கிள் இவரை ஒரு நல்ல வெல்விஷரா நான் நினைச்சிருக்க, இவர் இப்படி செய்யலாமா..? இன்னிக்கு இவர் பேசுவதை நான் கேட்கலன்னா கடைசி வரைக்கும் என்கிட்ட இவர் உண்மையை சொல்லியிருக்கவே மாட்டார்,  அவ்வளவு விசுவாசம் அவங்க பாஸ் மேல..”  ஷா வை பார்த்து பேசினான்.

“தம்பி.. உங்களுக்கு ஏதாவதுன்னா உதவி பண்ண தான்..”   ராஜமாணிக்கம் சொல்லிவிட, ஷா கைகள் மொபைலில் ஒரு நொடி நின்றது.

“இனி தேள் தான்..”   இத்தனை வருடங்களில் உதய் பற்றி நன்றாக தெரிந்தவள், விரல்கள் இன்னும் வேகமாக மொபைலில் அங்கும் இங்கும் ஓடியது. அவள் நினைத்தது போல, நன்றாக நிமிர்ந்து அமர்ந்த உதய்..

“ஓஹ்.. உதவி.. ம்ம்..  நீங்க சொல்றதும் சரி தான், உங்க உதவியை கண்டிப்பா நான் ஏத்துக்க தான் செய்யணும், எனக்கு போய் என்ன தெரியும்..?  பிரச்சனையை எதிர்கொள்ற அளவு என்கிட்ட தைரியமும் இல்லை, திறமையும் இல்லை. அட மூளையே இல்லை.. அவ்வளவு கையாலாகாதவனா தான் இத்தனை வருஷம் பிஸ்னஸ் பார்த்திருக்கேன் போல, எனக்கே இன்னிக்கு தான்  இது தெரியுது..”

“தம்பி.. நான் அப்படி சொல்லலை..”

“வேறெப்படி சார்.. சொல்லுங்க, எனக்கு வர பிரச்சனையை சமாளிக்க நீங்க எனக்கு உதவு பண்ணனுமா..? என்னை பத்தி என்ன நினைச்சிங்க..?  இது போல ஆயிரத்தெட்டு பார்த்துட்டு தான் இன்னிக்கு நான் இங்க,  எங்கேயும்.. எப்போவும்.. யார் முன்னாடியும் நேரா நிக்கிற தைரியமும், திறமையும் என்கிட்ட இருக்கு..  யாரும் எனக்காக வரத்தேவையில்லை, அவங்கவங்க வேலையை பாருங்க..”  ஷா வை பார்த்து கடினமாகவே சொல்ல, ஷா எழுந்து காருக்கே சென்றுவிட்டாள்.

“உதய்.. ஏன்   இப்படி..?” குணா ஆதங்கத்துடன் கேட்க, உதய் காரில் ஏறி கொண்டிருந்த  ஷாவை பார்த்தான்.

“நான் உங்க எல்லார்கிட்டயும் அப்பறம் பேசுறேன்..” எல்லோர்க்கும் பொதுவாக சொன்ன உதய், ஷா காரிடம் சென்றான்.

ஜித்தும், ஜின்னாவும் ஷா பின்னால் வேகமாக சென்று காரில் ஏற, “நீங்க என் கார்ல வாங்க..” என்று அவனின் கார் சாவியை கொடுத்தான் உதய் அவர்களிடம்.

“சார்..”  ஜின்னா வாங்காமல் தயங்க, பிடிங்க.. தூக்கி போட்டவன், ட்ரைவர் சீட்டில் அமர்ந்து கார் எடுத்து கிளம்பிவிட்டான். உதய், ஷா பற்றி முழுதும் தெரிந்தவர்கள் என்பதால் யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை.

இங்கு உதய்  RK சார் வீடு நோக்கி சென்றான். பின் சீட்டில் அமர்ந்திருந்த ஷா கோவத்தில் கைகளை பிசைந்த படி வெளியவே பார்த்து அமர்ந்திருந்தாள். உதய் கண்களும் ரோட்டில் தான் இருந்தது. அவளை பார்க்கவில்லை. கார் வீட்டினுள் செல்ல, RK வரவேற்பு ஹால்  சோபாவில் அமர்ந்திருந்தார்.

காரை நிறுத்தி இறங்கிய உதய்யை ஆச்சரியத்துடன் பார்த்து, “வாங்க உதய்..”  என, ஷா இறங்கி RK விடம் சென்றவள்.

“ப்பா.. தூங்காம.. என்னப்பா இது..?”  கவலையுடன் கடிந்து கொள்ள,

“ஷாம்மா..” ராம் உதய்யை கண்டிப்புடன் கண் காட்டினார்.

“சாரிப்பா..”  உதய்யிடம் திரும்பியவள், “உள்ள வாங்க..”  வீட்டு ஆளாய் வரவேற்பாக அழைத்தாள்.

அவளின் முதல் பேச்சு அவனிடம். உள்ள வாங்க என்றது அவளின் வாழ்க்கைக்குள்ளே வா என்பதாய் நினைத்து உதய் முகத்தில் ஒரு இதமான புன்னகை. அமைதியாக தலை அசைத்து உள்ளே சென்றான்.

“உட்காருங்க..”  RK சொல்ல, ஜித்து, ஜின்னா பின்னே வந்தனர்.

“சார்.. உங்க கீ..”  உதய்யிடம் கொடுத்தவர்கள், RK வை பார்க்க, “நீங்க கிளம்புங்க, காலையில பேசலாம்..”  என்றார் அவர்.

“சரிங்கப்பா..”  ஒன்றாக சொன்னவர்கள், “வரோம்மா.. வரோம் சார்..” என்று சொல்லி கொண்டு பின்னால் இருந்த அவர்களின் வீட்டிற்கு சென்றனர். இருவரும் அண்ணன், தம்பி. அதோடு RK வின் மேனேஜர் பிள்ளைகள். பிறந்தது.. படித்தது.. வளர்ந்தது எல்லாம் RK வின் நேரடி கண்காணிப்பில்.

“ஷாம்மா..”  RK குரல் கொடுக்க, அவள் கையில் தண்ணீருடன்  வந்தவள், உதய்க்கு கொடுக்க மறுக்காமல் எடுத்து குடித்தான்.

“உதய் காபி..”

“காபி வேண்டாம் சார்.. உங்க பொண்ணை மட்டும் கொடுங்க போதும்..” நேரடியாக கேட்டுவிட்டான்.

கண்டிப்பாய் ஷாரா இதை எதிர்பார்க்கவில்லை. இங்கும் வந்து எகிற போகிறான் என்று நினைத்திருக்க, அவன் இப்படி அவளையே  கேட்பான் என்று நினைக்கவில்லை.

“என்ன திடீர்ன்னு.. நாங்க இன்னும் அதே RK, ஷாரா தான்..” ராம் கூர்மையாக கேட்டார்.

“ஆனா நான் அதே உதய் இல்லை சார்..”

“என்ன திடீர்ன்னு..?”

“திடீர்ன்னு எல்லாம் இல்லை சார்.. நாலு வருஷத்துக்கு முன்னாடியே ஆரம்பிச்சிடுச்சு..”

“அப்போ இப்போ மட்டும் ஏன்..?”

“இன்னும் ஒரு அஞ்சு வருஷம் போகட்டுமா சார்..?”  மிகவும் சீரியஸாகவே கேட்டான்.

“உதய்..”  RK சிரித்துவிட்டார். அவனின் சின்ன பேச்சு சிரிப்பை கொடுக்குமா..? கொடுத்ததே தந்தைக்கு..  இத்தனை நாள் அழுத்தம் இன்று லேசாக கரைந்தது.

உதய் மேல் அவருக்கு இன்னும் வருத்தம், ஏன் ஒருவித கோவமே உண்டு. என் பொண்ணை மறுப்பதா என்று. அதனாலே ஷா கல்யாணமே வேண்டாம் என்று நின்ற போதும் திரும்ப அவனை கேட்கவில்லை.

ஆனால் பெண்ணின் வாழ்க்கை முன்னால் நிற்கிறதே. உதய்யை தவிர அவள் வேறு யாரையும் கட்ட போவதில்லை என்று முடிவான பிறகு தன் கோவத்தை காட்டி என்ன செய்வது. மறைத்துவிட்டார். மறந்துவிடவும் நினைத்தார்.

“உதய்.. என்னை விட ஷாவோட சம்மதம் தான் எனக்கு முக்கியம்.. நான் தூங்க போறேன்.. குட் நைட்..” சொல்லி ரூமுக்கு சென்றுவிட்டார்.

ஹாலில் அவள்.. அவன் மட்டுமே..  ஷா நிற்க.. இவன் சோபாவில். நிமிர்ந்து அவளை பார்க்க, அவள் பூச்சாடியை பார்த்து நின்றிருந்தாள். எழுந்து அவளிடம் சென்றான்.

“கொஞ்சம் என்னை பாருங்க மேடம்..”  அவளின் திருப்பிய முகம் பார்த்து சொன்னான்.

“ச்சு.. “  முகம் இருந்த பக்கம் சென்று நின்றவன்,  “திரும்பவும் முகம் திருப்பினா கன்னத்தை பிடிச்சு என்னை பார்க்க வைப்பேன்..”  உறுதியாக சொன்னான்.

ஷா இப்போது அவனை நேருக்கு நேர் பார்த்தாள். நாலு வருடம் முன்பு அசராமல் எதிர்கொண்ட அந்த நேர் பார்வையை இப்போது எதிர்கொள்ள முடியவில்லை போல.

“இப்படி பார்க்காதப்பா..”  என்றான் மென் குரலில்.