“இத்தனை அருகில் இருவரும் இதுவே முதல் முறை..” உதய் திடீரென வழி மறைத்துவிட ஷா எதேச்சையாக ஓர் அடி பின்னால் சென்றவள், இவன் என்று தெரிந்து அப்படியே நின்றுவிட்டாள்.
உதய் பார்வை அவள் மேலே இருக்க, அவளின் பார்வையோ அவனை கடந்து அவனின் பின் சென்றது. ஜித்து.. ஜின்னா இருவரும் என்னவோ ஏதென்று வேகமாக வந்து ஷா பக்கத்தில் நின்று உதய்யை கேள்வியாக பார்த்தனர்.
அவர்கள் இருவரையும் பார்த்த உதய், “உங்க மேடம்கிட்ட கொஞ்சம் பேசணும், ஆனா அதுக்கு முன்னாடி உங்க விசுவாசி அந்த சென்ட்ரல் மினிஸ்டர் ராஜமாணிக்கத்தை கொஞ்சம் இங்க வரச்சொல்லுங்க..” என்றான் அவர்களின் அதிர்வை கூர்மையாக பார்த்து.
இருவரும் ஒருசேர திரும்பி ஷா வை பார்க்க, அவள் அமைதியாகவே நின்றிருந்தாள். உதய்யின் வார்த்தை அவளிடம் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை.
“RK சாரை கேட்கணும்..” என்றான் ஜித்து.
“அவரை கேட்க முடியாது, அவருக்கு எதுவும் தெரியாதுன்னு உங்களுக்கும் தெரியும்..” என்றான் உதய் அழுத்தமாக.
“அதுக்கில்லை.. மேடம்க்கு லேட் ஆச்சு, நாளைக்கு வேணா பேசலாமா..?” ஜின்னா இழுக்க,
“எனக்கு இப்போவே பேசணும், அதோட குணா அங்கிள் வீடு தான் பாதுகாப்பும் கூட, யாருக்கும் எதுவும் தெரிய வராது..”
“அது.. RK சார் மேடமை எதிர்பார்த்திட்டு இருப்பார்..” ஜின்னா ஷா வின் முகம் பார்த்து மறுக்க காரணம் தேடினான்.
உதய் புரிந்து கொண்டு, “RK சார்கிட்ட நான் பேசிக்கிறேன்..” என்று போனை எடுக்க, ஷா திரும்பி ஜின்னாவை பார்த்தாள்.
“இல்லை இல்லை வேண்டாம் சார்.. நானே சொல்லிக்கிறேன்..” அவன் போன் எடுத்து சற்று தூரம் போனான்.
“ராஜமாணிக்கமும் வரணும்..” ஜித்துவிடம் சொல்ல, அவனும் ஷாவை பார்த்துவிட்டு போன் பேச சென்றான்.
“உதய்.. நாம வீட்டுக்குள்ள போயிடலாம்..” குணா வர,
“இருக்கட்டும் அங்கிள்..” என்றுவிட்டான் உதய். இதற்கெல்லாம் அவரிடம் முன்னே பேசி அனுமதி கேட்டிருக்க, அவர் உரிமையாக கடிந்து கொண்டார். அவர் வெகு நாட்களாக எதிர்பார்த்த விஷயம் நடக்கும் அறிகுறி தெரிய மகிழ்ச்சி தான் அவரிடம்.
“முகில் கெஸ்ட் எல்லாம் கிளம்பிட்டாங்க, வீட்ல எல்லாரையும் தூங்க போக சொல்லிடு..” முகிலிடம் குணா சொல்ல,
“சொல்லிட்டு நானும் வருவேன்..” என்று மனைவி மகளுடன் உள்ளே சென்றான் முகில்.
“சார் ஓகே சொல்லிட்டார்..” ஜின்னா வர, “ராஜமாணிக்கம் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவார்..” என்று ஜித்தன் வந்தான்.
“கண்டிப்பா வேணும்டா..” என்றான் உதய். அடுத்த சில நொடிகளில் காபி வர, யாரும் மறுக்கவில்லை. எடுத்து கொண்டனர். எல்லோருக்கும் மனதில் எதோ ஒரு பதட்டம் இருக்க, காபி மிகவும் தேவையானதாக இருந்தது.
காபி குடித்து கொண்டே இருக்கும் போது உதய்யின் போன் ஒலிக்க, எல்லோரின் பார்வையும் அவன் மேலே. “கண்ணம்மா.. கண்ணம்மா அழகு பூஞ்சிலை..” என்று பாடல் ஹை பிச்சில் பாடியது. எடுத்து பார்க்காமலே யாரென்று புரிந்து கொண்ட உதய் பல்லை கடித்தான்.
“ஒரு நிமிஷம்..” பொதுவாக சொல்லி தனியே வந்தவன், “யாரை கேட்டு திரும்பவும் பாட்டு செட் பண்ணீங்க..?” என்று பல்லை கடித்து கேட்டான் கண்ணம்மாவிடம்.
“யாரை கேட்கணும் நான், உன்னை பெத்து வளர்த்ததுக்கு இதுக்கு கூட எனக்கு உரிமை இல்லையா..?” கண்ணம்மா அவனுக்கு மேல் பேசினார்.
“அதுக்கு இப்படித்தான் ஒவ்வொரு முறையும் எனக்கு தெரியாம நீங்களே கஸ்டமர் கேர்க்கு போன் செஞ்சு பாட்டு செட் பண்ணுவீங்களா..? அக்கம் பக்கத்துல இருக்கிறவங்க என்ன நினைப்பாங்க..?”
“அவங்க நினைக்க என்ன இருக்கு..? என் தெய்வ தாய் பேர்ல வர பாட்டு, அதான் பாசத்தில வச்சிருக்கேன்னு சொல்லு அவங்ககிட்ட..”
“உங்க கிட்ட இப்போ பேச முடியாது, வந்து பேசிக்கிறேன் இருங்க..” போனை கட் செய்ய, திரும்பவும் ஒலித்தது.
“ஸ்ஸ்ஸ்.. என்னம்மா..?”
“ஏன் இன்னும் வீட்டுக்கு வரல..? நேரம் என்ன ஆகுதுன்னு பார்த்தியா..? நான் தூங்க போக வேண்டாமா..?”
“ம்மா.. எனக்கு லேட் ஆகும்ன்னு மெசேஜ் போட்டு இருந்தேனே..?”
“ஆமா தான்.. ஆனா ஏன் லேட் ஆகும்ன்னு சொல்லலையே..?”
“ம்மாமா..”
“என்னடா கோவப்படுற, முகில் வீட்டு பூஜைக்கு தானே போன..? பூஜை முடிஞ்சும் ஏன் இன்னும் வரல, என்ன பஜனையா செஞ்சிட்டிருக்க..? “
“ஆமா பஜனை தான் செய்றேன், வைங்க.. “
“உதய்.. பிரச்சனை ஒன்னும் இல்லையே..?” கண்ணம்மா சீரியஸாக கேட்டார்.
“பிரச்சனை எல்லாம் எதுவுமில்லை, நீங்க போய் தூங்குங்க, நாம காலையில பேசலாம்..” வைத்தவன் வர, ராஜமாணிக்கம் உள்ளே வந்து கொண்டிருந்தார்.
அந்த இரவு நேரத்திலும் பளிச்சென வெள்ளை உடையில் அக்மார்க் அரசியல்வாதியாக உடன் ஒரு படையுடன் வந்திருந்தார். “வணக்கம்மா..” முதலில் ஷாவிடம் தான் சென்றார் மனிதர்.
“வணக்கம் அங்கிள்..” ஷா எழுந்து நின்று கை குவிக்க, மற்றவர்களுக்கும் வணக்கம் வைத்தவர், உதய் வர, கொஞ்சம் சங்கடத்துடன் அவனிடம் கை குலுக்கினார்.
“உட்காருங்க..” குணா வீட்டு ஆளாய் காபி கொடுத்து உபசரிக்க, சில நொடி அமைதி.
“தம்பி.. அது..” ராஜமாணிக்கம் தயக்கத்துடன் உதய்யை பார்க்க, அவனோ, பேசி முடிங்க.. என்பது போல அவரையே அழுத்தமாக பார்த்திருந்தான். முகத்தில் கண்டிப்பாய் கோவம் இருந்தது.
“நான் செஞ்சது ஒரு விதத்துல தப்பு தான் தம்பி, நீங்க என் மேல வச்ச அந்த நம்பிக்கையை உடைச்சிட்டேன், ஆனா உங்க நல்லதுக்காக மட்டும் தான்..” ராஜமாணிக்கம் பேச,
“எது என் நல்லதுன்னு நீங்க சொல்றீங்க சார்..? என்கூடவே இருந்து என்னை வேவு பார்த்ததா..?”
“அது வேவுன்னு சொல்ல முடியாது தம்பி, உங்க பாதுகாப்பு..”
“என்னை பாதுகாக்க சொல்லி நான் உங்ககிட்ட கேட்கலையே..?” கேள்வி அவருக்கானது என்றாலும் உதய் பார்வை முழுதும் ஷா மேலே. ஷாவோ யாரையும் பார்க்காமல் மொபைலையே பார்த்து கொண்டிருந்தாள். அவளின் விரல்கள் ஸ்க்ரீனை தட்டி, தள்ளி ஏதேதோ செய்து அவளின் மனநிலையை காட்டி கொடுத்து கொண்டிருந்தது.
“உங்களை பாதுகாக்க நீங்க சொல்லணும் இல்லை தம்பி, உங்க மேல அக்கறை இருந்தாலே போதும்..” அவர் கழுவும் மீனில் நழுவும் மீனாக பேசி கொண்டிருந்தார்.
“என்கிட்ட அரசியல்ல பேசுற மாதிரி பேசாதீங்க சார்..” கோவத்தில் பட்டென பேசிவிட்டான்.
அன்று மாலை நடந்தது தான் இவ்வளவு கோவத்திற்கு காரணம். உதய் வீட்டுக்கு சென்று குளித்து முகில் வீட்டு பூஜையில் கலந்து கொண்டிருக்கும் போது அவனின் போன் ஒலித்தது. எடுத்து பார்த்தால் ராஜமாணிக்கம். பூஜையில் இருந்து தள்ளி வந்தவன், “சொல்லுங்க சார்..” என்று பேச,
“தம்பி.. எங்க இருக்கீங்க..? உங்களை பார்க்க முடியுமா..?” கேட்டார் அவர்.
“ப்ரண்ட் வீட்டு பூஜையில இருக்கேன் சார்..”
“ஓஹ்.. குணா சாரா..?” கேட்டு கொண்டவர்,
“தம்பி.. உங்களை பார்க்க அந்த கிஷோர் வராராமே..?” என்று கேட்க,
“ஆமாம் சார்.. உங்களுக்கு எப்படி..?” கண் சுருங்க கேட்டான்.
“என்ன எல்லோரும் என்னை வேவு பார்க்கறாங்களா..? அந்த கிஷோர் என்னடான்னா பூஜைக்கு வரீங்க தானே, அங்க மீட் பண்ணலாம் கேட்கிறார், இவர் இப்படி கேட்கிறார்..?” மனதில் விழிப்பு உண்டானது.
“தம்பி அவர் உங்க ப்ராஜெக்ட்டை விலை பேசத்தான் வரார்.. அதுக்கான டாகுமெண்ட் கூட ரெடி ஆகிட்டிருக்கு போல, என்ன செய்யலாம் சொல்லுங்க..?”
“என்ன..?” உதய்யிடம் அவ்வளவு கோவம்.
“ஆமாம் தம்பி.. அதுவும் அவர் யாருக்காக பேசுறார் தெரியுமா அந்த கலாதரன், அவங்க அண்ணன் மகன் அந்த பிரசாத்க்காக தான்.. நீங்க ஒன்னும் டென்சன் ஆகாதீங்க, ஹூம் மட்டும் சொல்லுங்க, நான் பார்த்துகிறேன்..”
“வேண்டாம் சார்.. நான் பார்த்துகிறேன்..” உதய் உறுதியாக மறுத்தான்.
“தம்பி.. அவங்க எந்த அளவுக்கும் இறங்க கூடிய ஆளுங்க..”
“சார் என் ப்ராஜெக்ட் மேல கை வச்சா நானும் எந்தளவுக்கு இறங்குவேன்னு அவங்களுக்கு காட்டுறேன்..”
“தம்பி புரிஞ்சுக்கோங்க, நீங்க உங்க பிஸ்னஸ் என்னமோ அதை மட்டுமே பார்க்குற ஆளு, ஆனா அவங்க அடுத்தவன் பிஸினஸை பிடுங்குறதையே வேலையா பார்க்கிற ஆளுங்க, கொஞ்சம் என் பேச்சை கேளுங்க.. என்கிட்ட ஒப்படைங்க, அவனுங்களை நான் பார்த்துகிறேன்..”
“சார்.. அவர் வரட்டும், நான் பார்த்துகிறேன்.. விடுங்க, வைக்கிறேன்..” உதய் கண்டிப்புடன் சொல்லி வைக்க போனவன், ஞாபகம் வந்தவனாக, “சார்.. அந்த இடத்துல பிரச்சனை..” என்று அவருக்காக கட்டி கொடுத்து கொண்டிருந்த ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் இடத்து பிரச்சனையை பேச, அவர் அங்கு என்னமோ கத்தி கொண்டிருந்தார்.
“சரி..” என்று வைக்க போனவன், ஷா பேரும், இவன் பேரும் அடிபடவும் போனை வைக்கவில்லை. அங்கு ராஜமாணிக்கமோ, இவன் போனை வைத்துவிட்டான் என்று நினைத்து மொபைலை ஷர்ட் பேக்கிட்டில் போட்டு கத்தி கொண்டிருந்தவர்,
“என்னடா இது, ஷா மேடமும் அவங்களை எதுவும் செய்ய விடமாட்டுறாங்க, இந்த உதய் தம்பியும் அவங்களை எதுவும் செய்ய விடமாட்டுறாங்க, இப்படியே விட்டா அவங்க ஓவரா ஆடுவாங்கன்னு இவங்களுக்கு யார் சொல்றது, இந்த நேரம் பார்த்து RK சார் வேற ரெஸ்ட்ல இருக்கார்..”