அவளின் கதறலில் கொஞ்சம் நிதானத்துக்கு வந்த ஷாக்க்ஷி நேரம் ஆவதை உணர்ந்து கொண்டார். “பவ்யா.. பவி குட்டி, இங்க அம்மாவை பாருடா, அழுகையை நிறுத்து, அம்மா சொல்றேன் இல்லை அழுகையை நிறுத்து தங்கம், அம்மா உன்கிட்ட பேசணும்.. ப்ளீஸ்டா..” கெஞ்சி, கொஞ்சி மகளை சமாதானம் செய்தவர், அவளின் கை பிடித்து மகளின் முகம் பார்த்தார்.
“பட்டுகுட்டி.. உனக்கு தெரியும் இல்லை அம்மா, அப்பா லவ் மேரேஜ்ன்னு..”
“ம்மா.. தெரியும், அது எதுக்கு இப்போ, வேண்டாம், நாம முதல்ல வேற ஹாஸ்பிடல் பார்க்கலாம்.. வாங்க..” மகள் எழுந்து நிற்க,
“பவ்யா.. அம்மா சொல்றதை கவனமா கேளுடா.. என்னை ஸ்ட்ரைன் பண்ண வைக்காத, ப்ளீஸ்..” கெஞ்ச, மகள் ஒடுங்கி போய் அமர்ந்துவிட்டாள் கண்ணில் நீர் வழிய.
“நாங்க அப்போ காலேஜ் தான். எங்க விஷயம் தெரியவும் வீட்ல எனக்கு கல்யாணத்துக்கு பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க, வேற வழி இல்லாமல் நாங்களே கல்யாணம் செஞ்சுக்கிட்டோம், அப்பறம் என்ன எங்க ரெண்டு பேர் வீட்லயும் எங்களை ஏத்துக்கலை, அப்பா வெளியே வேலை பார்த்தார்..”
“ரெண்டு வருஷம் கழிச்சு உங்க அப்பாவோட அப்பாக்கு உடம்பு முடியாம போக எங்களை மதுரை வர சொல்லி சேர்த்துக்கிட்டாங்க, உங்க தாத்தா சொத்தை சரிசமமா பிரிச்சு உயில் எழுதி வச்சிருக்க, அவர் இறந்ததுக்கு அப்பறம் ராம் அம்மா எங்களை அவங்ககூடவே வச்சுக்கிட்டாங்க, முதல்ல நல்லாத்தான் போச்சு..”
“அப்புறம் எனக்கு குழந்தை இல்லைங்கிறது பிரச்சனை ஆக ஆரம்பிச்சுது, அப்பாவை ரெண்டாவது கல்யாணம் செஞ்சுக்க சொல்லி ஏகப்பட்ட சண்டை. என்னால தாங்க முடியல, விடாம ட்ரீட்மெண்ட் எடுத்து அஞ்சு வருஷம் கழிச்சு நீ பிறந்த, ஆனா அதுக்கே என் கர்ப்பப்பை தாங்கல, ரொம்ப டேமேஜ் ஆகி எடுக்கவே செஞ்சுட்டாங்க..”
“நீ பிறந்த சந்தோஷத்தை கூட எங்களால கொண்டாட முடியல, உங்க பாட்டி பையன் பிறக்காமலே கர்ப்பப்பை போச்சு, இனி எங்க வீட்டுக்கு வாரிசுன்னு ஒரே ரகளை. நாள் போக போக என்னையே பிரைன் வாஷ் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க, ராம்க்கு ரெண்டாவது கல்யாணம் செஞ்சு வைக்க..”
“என்னால அந்த அழுத்தத்தை தாங்க முடியல, மயக்கம் வரைக்கும் போயிட்டேன். ராம்க்கு விஷயம் தெரிஞ்சு என்னை சென்னைக்கு கூட்டிட்டு வந்துட்டார், இங்க இருந்த நம்ம கம்பெனிஸ் நமக்குன்னு இருக்க, இங்கேயே இருந்துட்டோம்..”
“அப்பாக்கு எப்போவும் பிஸ்னஸ்ல இன்ட்ரெஸ்ட் அதிகம், ரொம்ப உழைச்சார், ரொம்ப வேகமா வளரவும் செஞ்சார், அது உங்க பெரியப்பா, பாட்டி கண்ணை உறுத்துச்சு, இங்க எங்களை பார்க்க வரும் போதெல்லாம் வார்த்தையாலே குத்திட்டு போவாங்க..”
“என்ன சம்பாரிச்சு என்ன பிரயோஜனம் பொண்ணை பெத்து வச்சுக்கிட்டு, அது என்ன நாளைக்கு பிஸினஸா பார்த்துக்க போகுது, எவனையோ கல்யாணம் செஞ்சு அவங்களுக்கு தான் மொத்தமும் போக போகுது, இன்னொருத்தர் சாப்பிட இவன் ஏன் இப்படி உழைக்கிறான்னு..”
“எங்களுக்கு அது பழகி போச்சு, ஆனாலும் என் மனசுல ஒரு வைராக்கியம், நீ அப்பா பிஸ்னஸ் எடுத்து நடத்தணும்ன்னு, எங்க அப்பாக்கு வாரிசா நான் இருக்கேன், ஆம்பிளை பிள்ளை கூட என்கிட்ட செய்ய முடியும்ன்னு நீ அவங்களுக்கு காட்டணும்ன்னு..”
“அதனால தான் உன் மனசுல பிஸ்னஸ் பார்க்கணும்ன்னு பதிஞ்சுகிட்டே இருப்பேன், ஆனா அதுவே உனக்கு ஒரு வெறுப்பை கொடுக்கும்ன்னு நான் நினைக்கல..” கண்ணீர் வழிய சொல்லி கொண்டு இருக்க, மகளோ வாழ்க்கையின் உச்சகட்ட நொடிகளின் அழுத்தத்தில் அமர்ந்திருந்தாள்.
அம்மா சொல்வது காதில் விழுந்தாலும், அவரின் உயிருக்கான வேண்டுதலையே மனம் ஜபித்து கொண்டிருக்க, கண்கள் வாசலையே பார்த்திருந்தது அப்பா எப்போது வருவார் என்று.
“பவ்யா.. அம்மா சொன்னது புரிஞ்சது இல்லை.. நீ அப்பா பிஸ்னஸ் எடுத்து நடத்தணும்.. அவரை கூடவே இருந்து பார்த்துக்கணும், அவர்.. அவர்க்கு மகன் இல்லைன்னு அவர் எப்போவும் பீல் பண்ண கூடாது, அவருக்கு எப்போவும், எங்கேயேயும் நீ இருக்கனும், அம்மா.. அம்மா நான் போனதுக்கு அப்பறம்..”
“ ம்மா..” மகள் அழுகையுடன் கத்தவே செய்தாள்.
“பவி குட்டி, என் தங்கம், அப்பாவை பார்த்துக்கோடா, எனக்காக எல்லாரையும் விட்டு தனியா நிக்கிறார், அவரை நீ தான் பார்த்துக்கணும், உன்னை பத்தி அம்மாக்கு கவலை இல்லைடா, அப்பா உன் ராணியா தான் பார்த்துக்குவார், ஆனா அவர்.. அவரை யார் பார்த்துப்பா நம்மளை தவிர, எனக்கு தான் கடவுள் அந்த பாக்கியத்தை கொடுக்கல, நீ பார்த்துக்கோடா..” அவரின் எண்ணம் முழுதும் கணவர் தான்.
“ம்மா.. ப்ளீஸ்ம்மா, இப்படி எல்லாம் பேசாத, எனக்கு பயமா இருக்கும்மா.. எனக்கு நீ, அப்பா மட்டும் தானே, நீயும் ஏன்ம்மா இப்படி பேசுற..”
“பவி.. அம்மாக்கு.. அம்மாக்கு உங்ககூட இருக்கனும்ன்னு தான் ஆசை, ஆனா எனக்கு அந்த வரம் இல்லையே.. அம்மா என்னடா செய்ய..?”
“ம்மா.. அப்படி எல்லாம் சொல்லாத, எங்களுக்கு உன்னை விட்டா யார் இருக்கா, எனக்கும், அப்பாக்கும் நீ வேணும்மா, ப்ளீஸ்ம்மா..” மகள் கதற, அம்மாவும் மகளை கட்டிப்பிடித்து கதறிவிட்டார். இருவரின் கதறலும் ஹாஸ்பிடலில் நிறைத்தது.
அடித்து பிடித்து ஓடி வந்த ராம் பார்த்தது மகளும், அம்மாவும் கதறியதை தான். “ஷாம்மா..” ராமின் நடுக்கமான குரலில், மனைவி, மகள் இருவரும் இன்னும் வெடித்து அழுதனர்.
மனைவி கணவரின் நெஞ்சை விடவே இல்லை. அவரின் கைகள் இறுக்கமாக கோர்த்திருக்க, மகள் இன்னொரு கையை அழுத்தமாக பிடித்திருந்தாள். வாழ்நாள் முழுமைக்கும் சிந்த வேண்டிய கண்ணீரை சில மணி நேரங்களில் கொட்டி முடித்தனர். ராம் எவ்வளவு முயன்றும், என்ன செய்தும் மனைவியை காப்பாற்ற முடியவில்லை. கணவர், மகள் கண் முன்னே அவர் உயிர் பிரிந்தது.
“எங்களால அம்மாவை காப்பாத்த முடியல, எங்க கண் முன்னாடியே..” ஷா இப்போதும் அதை நினைத்து முகம் மூடி கதற, உதய் அப்படியே அவளை அள்ளி அணைத்து கொண்டான்.
அவனின் மடியில் அவள் இருக்க, மிகவும் குறுக்கி கணவனின் நெஞ்சில் முகம் புதைத்து அழுது தீர்த்தாள் பெண். அவளின் அழுகை நிற்காமல் போக, “போதும் ஷா..” கடினப்பட்டே அவளின் கண்ணீரை நிப்பாட்டி தண்ணீர் கொடுத்தான்.
சிவந்த அழுகை முகத்துடன் ஓய்ந்து போய் அமர்ந்திருந்த ஷா, திரும்பவும் தொடர்ந்தாள்.
“கொஞ்ச நாள்லே அப்பாக்கு ஹார்ட் அட்டேக். அவரால அம்மா இழப்பை தாங்க முடியல சொன்னாங்க, தனியா நின்ன என்னை பார்த்த அப்பா, எனக்காகன்னு அவரை தேத்திகிட்டு வெளியே வந்தார்..”
“அம்மா ஆசைப்படி பிஸ்னஸ் படிச்சேன், மாஸ்டரும் சென்னை படிக்கலாம்ன்னு நான் நினைக்க, அப்பா என்னை எண்ட்ரன்ஸ் எழுத வச்சு பிட்ஸ் பில்லாணி ஐதராபாத் அனுப்பினார். அங்க இருந்து என்னால எந்தளவு முடியுமோ அந்தளவு அப்பாவை பார்த்துக்கவும் செஞ்சேன். அப்படியும் செகண்ட் அட்டேக்..”
“பிஸ்னஸ் ஸ்ட்ரெஸ். யாரையும் நம்ப முடியல. எல்லாம் அவரே பார்க்கணும். அப்போ தான் எனக்கு கல்யாணம் செய்ய அப்பா யோசிச்சார், அவர் மனசுல வந்தது நீங்க தான். உங்களை பத்தி என்கிட்ட சொல்லியிருக்கார் அவர் மாதிரியே இருக்கீங்கன்னு, கல்யாணம் செய்யணும்ன்னு போதும் உங்களை சொல்ல, எனக்கு எப்படி மறுக்க முடியும்..?”
“போட்டோ கொடுத்து டைம் கொடுத்தார். சீக்கிரமே ஓகே சொல்லிட்டேன். ஆனா நீங்க முடியல சொன்னது.. அதுவும் நான் அப்பாகிட்ட சொன்னது கல்யாணம் முடிஞ்சு நீங்க இங்க நம்மளோட இருக்கனும்ன்னு..”
“அப்பா அதை உங்ககிட்ட கேட்க சொல்லலை, அவருக்கு தெரிஞ்சிருக்கு உங்க கேரக்டர்.. எப்படியும் நீங்க இதுக்கு ஒத்துக்க மாட்டிங்கன்னு. அது அவருக்கு பெரிய விஷயமாவும் தெரியல.. அதனாலே சொல்லலை..”
“அப்படியும் எல்லாம் முடிஞ்சது. உங்க ரிஜெக்ஷன் என்னை பாதிச்சது உண்மை. ஆனா அதுக்கு அப்பறம் தான் நான் அப்பாகிட்ட கேட்டு பிஸ்னஸ்ல முழுசா உள்ள போனேன். கொஞ்சம் கொஞ்சமா அப்பாக்கு இந்த ஸ்ட்ரெஸ் எல்லாம் இல்லாமல் பார்த்துக்கிட்டேன்..”
“இப்போ அப்பாக்கு முழு ரெஸ்ட் கொடுத்து, அவருக்கான பைபாஸ்க்கு உடம்பை ரெடி பண்ணிட்டு இருக்கோம், இந்த வாரம் செக் அப் போயி பார்த்துட்டு, ஆப்பரேஷன்க்கு டெட் பிக்ஸ் பண்ணனும்..” எல்லாம் சொல்லி முடித்தாள்.
உதய்க்கு மனது மிகவும் பாரமாக இருந்தது ஷாவின் கடந்த காலம் கேட்டு. அவளின் அழுகை அவளின் தீரா துயரத்தை சொன்னது. அவளை அவனோடு பொத்தி வைத்து கொள்ள இரு கைகளும், நெஞ்சமும் துடித்தது. வெளியே காட்டி கொள்ள விரும்பவில்லை.
“ம்ஹூம்.. அவ வெளியே வரணும்..” தனக்கு தானே சொல்லி கொண்டவன், பேச்சை மாற்றி அவனின் சந்தேகத்தை கேட்டான்.
“சோ இதுக்காக தான் என்னை முழுசா ஒதுக்கிட்ட இல்லை..” அவன் மறுப்பிற்கு பிறகு அவள் அவனை முழுதும் விலக்கியது ஏன் என்று இப்போது புரிந்தது.
“நான் உங்க வீட்டோட மாப்பிள்ளையா இருக்க மாட்டேன்னு தெரிஞ்சு தான் என்னை இத்தனை வருஷமா தள்ளி வச்சிருக்க, நான் கல்யாணத்துக்கு கேட்டப்போவும் மறுத்திருக்க..” ஆழ்ந்த குரலில் கேட்டான்.
“ஆமா தான், ஆனா நீங்க ஆபிஸ்ல வச்சு மேரேஜ் முடிச்சும் நீ உங்க வீட்ல இருந்துக்கலாம் சொல்ல எனக்கு இந்த வழி எல்லாத்துக்கும் தீர்வா இருக்கும்ன்னு தோணிச்சு, அதான் உங்களோட உறுதிக்கு வீட்டுக்கு வந்தேன்..” ஷாரா மறுக்காமல் சொன்னாள்.