Advertisement

யாவும் – 7

கார்த்திகா கூறிய வார்த்தைகளில் திகழ் அதிர்ச்சியாகப் பார்க்க, “இங்க வந்தா, எல்லாம் பழகி தான் ஆகணும். எதுக்கெடுத்தாலும் அதிர்ச்சி ஆகக் கூடாது! எப்படியும் இன்னைக்கு உன்னைத் தேடி தான் கஸ்டமர்ஸ் குமிவாங்க. அவங்க கிட்ட பார்த்து பதமா நடந்துக்கணும். இல்லை காஞ்சனா அக்கா உன்னை கைமா பண்ணிடுவாங்க.” என்று கூறி முடித்தவளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த திகழுக்கு விழிகள் கலங்கிவிட்டது. பயத்தில் தொண்டை குழி ஏறி இறங்கியது.

“இங்க இருந்து தப்பிக்க எதுவும் வழி இருக்கா?” இல்லை என்று தெரிந்தும் நப்பாசையில் அவள் வினவ,

“எங்களுக்குத் தெரிஞ்சு எந்த வழியும் இல்லை. இருந்தா, எப்போவோ நாங்க தப்பிச்சு இருக்க மாட்டோமோ?” நால்வரில் ஒரு குரல் ஆதங்கமாய் வெளிவந்தது.

வெடித்து அழ வேண்டும் என்று தோன்றிய மனதை பலபடுத்தி, உதட்டைக் கடித்து அழுகையை அடக்கிடவள், “ரெஸ்ட் ரூம் போகணும்.” என்றாள்.

“ஹம்ம்.. வா  இங்க தான் பக்கதுல இருக்கு.” என்றவள், அவளை அழைத்துச் சென்று

கழிவறையைக் காண்பித்த கார்த்திகா, “இதான். எல்லா ரூம்லயும் இருக்கும். உனக்கு இன்னும் ரூம் நம்பர் அலாட் பண்ணலை இல்ல. அதான் உனக்குத் தெரியலை.” அவள் பேசிக் கொண்டே போக, திகழ் தான் அவள் கூறிய ஒவ்வொன்றையும் கேட்டு உள்ளுக்குள்ளே விம்மினாள். ‘தானாய் ஏற்றுக் கொண்டது தானே இது? நம்பிக்கையை மட்டும் தளரவிடக் கூடாது! தப்பித்து விட வேண்டும்.’ மனதில் உருப்போட்டுக் கொண்டே கழிவறைக்குள் நுழைந்தவள், தப்பிக்க ஏதேனும் வழிகள் புலப்படுகிறதா? என்று ஆராய்ந்தாள்.

ஒரு துளி கூட இல்லை என்ற போது அவளது விழிகளில் பெரிய ஏமாற்றம் தென்பட்டது. ஜன்னல்கள் எல்லாம் கைக்கு எட்டாத உயரத்தில் வைக்கப் பட்டு இருந்தது. மேலும், கம்பிகள் இறுக்கமாக வைக்கப்பட்டு, ஒரு விரல் கூட வெளியே செல்லாத அளவு பாதுக்காப்பாக இருந்தது. வெளியே இருந்து சூரிய ஒளி மட்டுமே முகத்தில் அடித்தது.

முகத்தை நன்றாக கழுவியவள், வெளியே வர, “என்ன, நப்பிக்க வழி இருக்கான்னு தான தேடுற? நீயே இவ்ளோ யோசிக்கும் போது, இத்தனை வருஷமா தொழில் பண்ற அவங்க எவ்ளோ யோசிப்பாங்கன்னு நினைக்க மாட்டீயா? நிறைய பேர் தப்பிக்க முயற்சி செஞ்சதால, ஜன்னல் எல்லாம் புல்லா கம்பி வச்சு மூடீட்டாங்க‌.” சற்று எகத்தாளமாகவே பதில் வந்தது அவளிடம் இருந்து.

திகழ் எதுவுமே கூறவில்லை. சூரியன் மறைவதற்குள் இங்கிருந்து தப்பித்து விட வேண்டும். இல்லையென்றால், எதோ ஒரு மிருகத்தின் காமபசிக்கு தான் இறையாக நேரிடும் என்று நினைத்துக் கொண்டே அறைக்குச் சென்று அமர்ந்தாள்.

அவ்வப்போது வெளியே வாசலுக்குச் சென்று பார்த்துக் கொண்டே இருந்தாள். ஆனால் வெளியே தடிமாடு போல நால்வர் அந்த வீட்டை சுற்றி நடந்துக் கொண்டே இருந்தனர். வீட்டு வாசலில் இரண்டு வேட்டை நாய்கள் கட்டிவைக்கப்பட்டு இருந்தது. இவள் எட்டிப் பார்தத்தை பார்த்த நாய்கள் நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டே இறையை நோட்மிடுவதைப் போல பார்க்க, அவளுக்கு தான் அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலை.

மதிய உணவை சரோஜா வந்து கொடுத்து விட்டுச் செல்ல, அது ஒரு ஓரமாய் இருந்தது. கைகளை கட்டிக் கொண்டு முட்டி மீது தலையை சாய்த்தவளின் கண்ணீர் வற்றி, முகத்தில் கோடாய் இருந்தது. ஆறுதல் கூற கூட ஒருவரும் இல்லை. அப்படியே அவள் அமர்ந்து இருக்க,  சூரியன் மறைந்து, சந்திரன் எட்டிப் பார்க்கத் துவங்கிய வேளை அது.

எந்த வழியும் புலப்படாத நிலையில், எவனோ ஒருவனிடம் சிக்கி சீரழிவதைக் காட்டிலும், உயிரை மாய்த்துக் கொள்வதே மேல் என்று மூளை வலியுறுத்த, அதை செயல்பட துணிந்தாள்.

தினமும் காலையில் அவளை அதட்டி உணவு உண்ண வைக்கும் அன்னை, அவளுக்கு ஆதரவாக பேசும் தந்தை, ‘அக்கா,  அக்கா’ என சுற்றி வரும் தம்பி தங்கைகள். இவர்களை விட்டுவிட்டு நான் செல்லப் போகிறேன். என்னைக் காணமலே அவர்கள் உயிர் அவர்களிடம் இருக்காது. இதில் நான் இந்த உலகத்திலே இல்லை என்பதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும் அவர்களால். தாங்க மாட்டார்களே! ஏற்கனவே என்னுடைய துரோகத்தின் வலி. அதனுடன் சேர்த்து இப்போது என்னுடைய மரணத்தின் வலி. இப்படி என் வாழ்க்கையை நானே முற்றுப் புள்ளி வைத்துக் கொள்வதற்காகவா, என்னை பெற்று ஆசை ஆசையாய் வளர்த்தார்கள். ஒவ்வொரு முறையும் கூறுவாரே என் தந்தை.

‘உன் அக்காவைப் பார்த்து எல்லாவற்றையும் கற்றுக் கொள்ளுங்கள். அவ எவ்வளோ சமத்தா இருக்கா. என் வளர்ப்பு அவ.’ பெருமையாய் கூறும் தந்தையின் குரல் நான்கு புறமும் எதிரொலித்தது.

‘மன்னிச்சுடுங்க அப்பா, நான் உங்களுக்கு உண்மையா இல்லை. இந்த உலகத்துலே எனக்கு வாழத் தகுதி இல்லை. நான் இல்லைன்னு நீங்க அழக்கூடாதுப்பா. யாரோ ஒருத்தர் கைல பட்டு, சீரழிஞ்சு சாவுறதுக்கு, இதுவே மேல்ப்பா. உங்களுக்கு மனசு வந்தா, என்னை மன்னிக்க முயற்சி செய்ங்க அப்பா‌.’ மனதில் அர்றறியவள், சுற்றி முற்றி என்ன கையில் படுகிறது என்று தேடினாள்.

யாரும் பார்க்கா வண்ணம், மெதுவாக சமையலறைக்குள் புகுந்தவள், காய்கறிகள் வெட்ட வைத்து இருக்கும் கத்தியை எடுத்துக் கொண்டு அறைக்குச் சென்றாள்.

சுவற்றில் சாய்ந்து கண்களை மூடினாள். தன்னை பயன்படுத்த முயன்றாள். ஒரே ஒரு நிமிடம், தன்னுடைய அத்தனை பயத்தையும் தூக்கி தூர எறிய துணிந்தாள். ஒரு பெருமூச்சை விட்டவள், கத்தியை எடுத்துச் சென்று மற்றொரு கையின் நரம்பில் வைத்து, கண்களை இறுக மூடிக் கொண்டு கையை அறுக்க முற்பட்டவள், ‘இல்லை, கையை வெட்டிக்கிட்டா, பிழைக்க வாய்ப்பு அதிகம். கழுத்துல வெட்டுனா, எளிதில் செத்துவிடலாம்.’ மனதில் நினைத்தவள், உலகில் உள்ள அத்தனை தெய்வங்களையும் அழைத்துக் கொண்டு கழுத்தில் கத்தியை வைத்து இழுக்க போன சமயம், “ஏய்! ஏய்! என்ன பண்ற நீ? லூசா?” என பதறிக் கொண்டே அவள் கைகளில் இருந்த கத்தியை பறித்தாள் புனிதா.

அவளைப் பாவமாக பார்த்த திகழ், “தயவு செஞ்சு என்னை சாக விடுங்க. என்னால இப்படி ஒரு வாழ்க்கையை நினைச்சுக் கூட பார்க்க முடியலை. ப்ளீஸ்.” என கையடுத்து கும்பிட, புனிதாவுக்குமே கண்கள் கலங்கி விட்டது.

“இங்க பாருமா, சாகுறது தான் எலலாத்துக்கும் தீர்வு இல்லை. புரிஞ்சுக்கோ. உன்னைப் பார்க்க பாவமா தான் இருக்கு. எனக்கு ஒரு வழி தெரியும். ஆனால், அது பத்து சதவீதம் தான் நீ தப்பிக்க வாய்ப்பு இருக்கு.” என்று அவள் கூறுவதைக் கேட்ட திகழ்க்கு முகம் விகசித்தது.

கண்களை அழுந்தத் துடைத்தவள், “ப்ளீஸ் அக்கா, எப்டியாவது என்னை தப்பிக்க வச்சுடுங்க. எங்க அப்பா, அம்மா, தம்பி தங்கை எல்லாம் என்னைக் காணாம தவிச்சுப் போய் இருப்பாங்க.” என்று திகழ் மன்றாட,

“இன்னும் ஆறு மணியாக பத்து நிமிஷம் இருக்கு. இப்ப ஒரு பையன் அந்த தடியன்களுக்கு டீ போட்டு எடுத்துட்டு வந்துக் கொடுப்பான். அவனுங்க ஒரு அரைமணி நேரம் ரெஸ்ட்ல இருப்பாங்க. இருந்தும் அவங்களோட கண்ணு நம்மளை தான் நோட்டம் விடும். அந்த பால்காரன் உதவி பண்ணா, நீ அவனுங்க கிட்ட இருந்து தப்பிக்கலாம். அடுத்த அந்த நாய்களுக்கு எதாவது போட்டு, திசை திருப்பணும்.‌ உன் லக் இன்னைக்கு ஞாயித்து கிழமை. சிக்கன் பீஸை நாலு துண்டை போடுவோம். இப்ப காஞ்சனா அக்கா வெளியே போய் இருக்காங்க வேற. உன்னை கேட் வரைக்கும் தான் என்னால காப்பாத்த முடியும். அதுக்கும் மேல உன்னோட சாமர்த்தியம். மாட்டிக்கிட மட்டும் செஞ்சுடாத! அப்புறம் உயிரோடு இருக்கும் போதே நரகத்தை பார்ப்ப நீ..” அவள் கூறுவதை எல்லாம் சிரத்தையுடன் கேட்டவளுக்கு இறுதியில் கூறியதை கேட்டு, கிலி பிறந்தது‌. இருந்தும் இந்த பொன்னான வாய்ப்பை நழுவ விட தயாராக இல்லை. வாழ்வோ சாவோ, துணிந்து விட முடிவு எடுத்தவள், “சரிங்க கா.” என்றாள்.

சில நிமிடங்களிலே நெடுநெடுவென ஒரு பையன் கையில் பெரிய தூக்குச் சட்டி ஒன்றை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தவன், “புனிதா, இந்தம்மா டீ.  நாலு டம்ளர்ல ஊத்திக் கொடு.” என அவன் நீட்ட, புனிதா அவனை பார்த்துக் கொண்டே அதை வாங்கியவள், “சங்கரு. இது பேரு திகழ். புதுசா இங்க கூட்டீட்டு வந்து இருக்கானுங்க.” புனிதா திகழை அறிமுகம் செய்ய, அவளைப் பார்த்த சங்கர்,

“ஏன் மா இந்த சாக்கடைல வந்து மாட்டிக்கிட்டு, வாழ்க்கையை வீண்டிக்குறீங்க..?” என அவன் வினவ, திகழுக்கு அழுகை வந்துவிட்டது.

“ஏய் சங்கரு.. இந்த புள்ளை பாவம். இங்க இருந்து தப்பிக்க முடிலைன்னு சாக போய்ட்டா. நான் தான் காப்பாத்துனேன். நீ ஒரு சின்ன உதவி மட்டும் பண்ணு சங்கரு. அவனுங்களை பேசி எப்டியாவது அந்தாண்ட கூட்டீட்டுப் போய்ட்டேனா, நான் இவளை வெளிய விட்டுடுவேன்.” என அவள் கேட்க,

“வேற வினையே வேண்டாம் புனிதா. இது மட்டும் காஞ்சனா அக்காக்கு தெரிஞ்து, அவ்ளோ தான். என்னை கிழிச்சு நார்நாராக்கிடும்.” என சங்கர் பின்வாங்க, யோசிக்கவே செய்யாமல் அவன் காலில் விழுந்துவிட்ட திகழ், “ப்ளீஸ் அண்ணா, உங்களுக்கு ஒரு தங்க்ச்சி இருந்தா, அவளுக்கு ஹெல்ப் பண்றதா நினைச்சு இதைப் பண்ணுங்க..” என அவள் அழ, அவன் பதறி விலகியவன், “இன்னாம்மா நீ. கால்ல விழுந்துட்ட. சரி என்னால முடிஞ்சதை நான் செய்றேன். என்னை  மாட்டி விட்டுடாதம்மா. புள்ளைக் குட்டிகாரன் நான்.” என்றவன், “சரி, நான் சொல்றதை பர்ஸ்ட் செய்ங்க..” என்றவன், புனிதா, நான் அவங்களுக்கு டீ கொண்டு போய் கொடுக்குறேன். நீ என்ன பண்ற உன் ரூம் பின்னாடி ஜன்னல்ல இருந்து திடீர்னு கத்தணும். பாம்பு, பாம்புன்னு கத்து மா. அவனுங்க அலறி அடிச்சுட்டு ஓடி வருவாங்க. அப்ப அந்த நாய்களை சமாளிச்சு நான் இந்த பொண்ணை கேட்டுக்கு அந்தாண்ட விட்டுடுறேன்‌.” என அவன் வேறு யோசனை கூற,

“இல்லை சங்கரு..” என்றவள், தன்னுடைய யோசனையை கூற, “புனிதா, நான் பேச்சுக் கொடுத்து அவங்களை பின்னாடி பக்கம் கூட்டீட்டுப் போனா, இந்த பொண்ணு தப்பிச்சதும் என் மேல சந்தேகம் எழும். இப்ப நீ கத்தனேன்னா, பாம்பு எங்கையோ போய் மறைஞ்சுடுச்சுன்னு சொல்லி சமாளிச்சுக்கலாம்..” என்று அவன் விளக்க, அது போல செய்ய திட்டமிட்டு, சங்கர் அவர்களுக்கு குளம்பியை எடுத்துச் சென்று கொடுத்தான்.

“திகழ், இங்க ஓளிஞ்சுக்கோ. நான் என் ரூம்க்குப் போறேன்‌. சங்கர் உன்னை வெளிய விட்டுடுவான். பார்த்து வீட்டுக்குப் போய்டு.” என்றவள், தனது அறைக்குச் சென்று, சில நிமிடங்கள் கழித்து “பாம்பு, பாம்பு..” என்று கூச்சலிட ஆரம்பித்தாள்.

குளம்பியை பருகிக் கொண்டு இருந்த நால்வரும் புனிதா அறைக்கு ஓடினர்.

திகழது கையைப் பிடித்து அழைத்துச் சென்ற சங்கர், அந்த நாய்களை சமாளித்து, வெளியே அனுப்பியவன், “ரைட் போய் லெப்ட் கட் பண்ணா, பஸ் ஸ்டாண்டு வந்துடும்மா..” என கூற, நன்றியோடு அவனை பார்த்தவள், அந்த தெரவை கடக்க முயல, ஒரு மகிழுந்தின் வெளிச்சம் கண்களில் கூச, கண்ணை மூடித் திறந்தவள், விக்கித்து நின்றாள்.

“ம்மா, அக்கா எப்பம்மா வருவா? சொல்லுமா?”  என தன்னை சுற்றிவரும் குழந்தைகளுக்கு பதில் கூற முடியாது கண்ணைக் கசக்கிக் கொண்டு இருந்தார் மீனாட்சி.

“அக்காவை கூட்டீட்டு வர அப்பா போய் இருக்காரு டா. நீங்க சமத்தா சாப்டுங்க..” என அவர் குழந்தைகளுக்கு உணவை கொடுக்க, இரண்டு பேரும் சாப்ட மாட்டேன் என அடம்பிடித்துக் கொண்டிருந்தனர்.

“மீனாட்சி, என்ன ஆச்சு? உன் மவ வீட்டுக்கு வந்தாளா? இல்லையா?” வினவிக் கொண்டே பக்கத்து வீட்டு லதா வர, “அவர் கம்ப்ளைண்ட் கொடுக்கப் போய் இருக்காரு கா. சீக்கிரம் வந்துடுவா.” என மீனாட்சி பதல் அளித்தார்.

“பச்.. என்ன சொல்ல? காலம் ரொம்ப கெட்டுக் கடக்கு மீனாட்சி. நேத்து போன உன் மவ இன்னும் வரலை. நம்ம சோனாக்கி மவ காயத்திரியையும் இப்டி ரெண்டு நாளா காணோம்னு தேடுனோமே! உனக்கு நினைவு இருக்கா? அவ கூட ரெண்டு நாள் கழிச்சு எவனையோ கட்டி சீரழிஞ்சு, ஏமாந்து போய் வந்தாளே! அவளை மாதிரி ஆகிடப் போகுது. பார்த்து இருந்துக்கோங்க.” என லதா கூறியதும், தனது காதில் இரு கைகளை வைத்துப் பொத்திய மீனாட்சி, “அக்கா, என் பொண்ணு அப்டிபட்டவ இல்லை.” என்றார் பட்டென்று.

“ஏய் மீனாட்சி! உன் மவளை நான் குத்தம் சொல்லலை. ஊர் உலகத்துல நடக்குறதை சொல்றேன். அவ்ளோ தான்..” நீட்டி முழக்கிய லதா சென்று விட, இங்கே பெற்ற உள்ள நெருப்பை சுமந்துக் கொண்டு இருந்தது. அவர் கூறிய மாதிரி எதுவும் தன் மகளுக்கு நிகழந்துவிடக் கூடாது என்று அவரது உள்ளம் கடவுளிடம் மன்றாடியது.

                                 தொடரும்..

Advertisement