Advertisement

 

 

யாவும் : 2

பாரதியின் இப்பாடல் இவளுக்கு என்றே எழுதப்பட்டிருக்குமோ எனத் தோன்றியது. அவள் இமைப் பிரித்து தன் நயனம் பார்க்க வேண்டும் என உள்ளம் கூக்குரலிட்டது. கண்கள் மூடிய நிலையில் அவளது புருவத்தை விரலால் நீவி விட வேண்டும் என்று எண்ணம் தோன்ற, தன் எண்ண ஓட்டத்தைப் பார்த்து திடுக்கிட்டவன், அந்த நொடியே அவளை விலக்கி விட்டு, அவள் முகத்தை கூட பார்க்காமல், “சாரி…” என கூறி விலகி சென்று உள்ளே சென்றுவிட்டான்.

உள்ளே சென்றால் மீண்டும் அவள் முகமே கண் முன் வந்து போனது. அவளது சாந்தமான முகம் அவனை ஈர்த்தது. அவளது எண்ணங்களை ஒதுக்கி வைத்தவன், கலந்தாய்வை வெற்றிகரமாக முடித்துவிட்டு தனது அறைக்கு விரைந்தான். அவனது எண்ணங்கள், நினைவுகள் மீண்டும் அவளையே சுற்றியே வந்தது.

‘யார் இந்த பெண்? இதற்கு முன் நான் பார்த்ததில்லையே! அவள் பெயர் என்ன?’ என்று ஆயிரம் கேள்விகள். அவனது யோசனையை கலைக்கும் விதமாக தொலைபேசி அழைப்பு விடுக்க, எடுத்து பேசினான்.

மறுமுனையில் ஆகாஷ், “செழியா, என்ன மீட்டிங் ஓவரா?” என கேட்க,

செழியன், “எல்லாம் நல்லபடியா முடிஞ்சது. நீ வந்து கான்ட்ராக்ட்ல சைன் பண்ணணும்… அதான் மிச்ச வேலை..” என்றான்.

ஆகாஷ், “ரொம்ப தேங்க்ஸ் டா…!” என்க,

செழியன், “நமக்குள்ள எதுக்கு தேங்க்ஸ் எல்லாம்? நேர்ல வா. உனக்கு உதை இருக்கு..” என்றான்.

ஆகாஷ், “சரி தேங்க்ஸ் வாபஸ்…” என்று சிரித்துக்கொண்டே கூறியவன், “இன்னும் கொஞ்ச நேரத்துல அந்த வந்துடுவேன்டா…” என அழைப்பை துண்டித்தான்.

ஆகாஷிடம் பேசி விட்டுத் திரும்பிய செழியன் விழிகளில் மீண்டும் தென்பட்டால் அவள். இப்போது பொறுமையாக கவனித்தான். அவள் எதையோ மும்முரமாக தட்டச்சு செய்து கொண்டிருந்தாள். அவளது விரல்கள் விசைப்பலகையில் நர்த்தனம் ஆடிக்கொண்டிருக்க, நீரில் நீந்தும் மீன் குஞ்சுகளை போல அவளது கயல்விழிகளும் அவள் விரல்களின் நடனத்திற்கேற்ப அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தது. வெண்மதி முகம், எடுப்பான நாசி, சிவந்த அவளது அதரங்கள். இதழ் பிரித்து அவள் பேசும் இசையை கேட்க அவனது மனம் ஏங்கியது. அவளது பெயரை தெரிந்து கொள்ள ஆவல் பிறந்தது. அவளது அந்த அமைதியான முகத்தில் ஏதோ ஒன்று இருப்பதாக தோன்றியது.

“சாரிடா.. கொஞ்சம் லேட் ஆகிடுச்சு…” என கூறிக் கொண்டே வந்து அமர்ந்தான் ஆகாஷ்.

“வெயிட் பண்றதுல எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லடா.. வா கான்ட்ராக்ட்ல சைன் பண்ணணும்…” என அவனை அழைத்துச் சென்றான்.

ஆகாஷ் ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டான். எல்லா வேலையும் முடிந்து அனைவரும் கிளம்பினர்.

செழியனும் ஆகாஷூம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். செழியன், “சரிடா… நேரமாச்சு. நான் கிளம்புறேன்…” என்க, வெளியே இருந்து, “மே ஐ கம்மின் சார்?” குரல் கேட்க, ஆகாஷ், “கம் இன்..” என்றான்.

செழியனுக்கு உள்ளுக்குள் ஒரு குறுகுறுப்பு. இது அவளுடைய குரல் தானோ? வருவது அவள் தானோ? என தோன்றியது. அவளை பார்க்கும் ஆவலில் கதவில் வைக்கச் சென்ற கையை சட்டென கீழே இறக்கி விட்டான். கதவைத் திறந்து கொண்டு நுழைந்தது அவள்தான். அவளைப் பார்த்ததும் மீண்டும் ஒரு உள்ளுக்குள் சொல்ல முடியாத உணர்வு ஒன்று தோன்றியது.

அவள் உள்ளே நுழைந்ததும் ஆகாஷ், “சொல்லுங்க திகழ்” என்றான்.

அவள், “சார், நீங்க கொடுத்த டெண்டரை டைப் பண்ணிட்டேன். ஒரு தடவை செக் பண்ணிட்டு சைன் போடுங்க சார்..” என்றாள்.

ஆகாஷின் திகழ் என்ற அழைப்பை கேட்டவன், ‘அவள் பெயர் திகழா? கேட்கவே அழகான தமிழ் பெயரா இருக்கே! முழு பெயர் என்னவா இருக்கும்?’ என யோசித்தவன் தன் அறிந்த அவளது பாதிப் பெயரை தனக்குள் உச்சரித்துக் கொண்டான்.

அவன் செல்லாமலே இருப்பதை கவனித்த ஆகாஷ், “என்னடா?” என வினவ,

செழியன், “கார் கீயை காணோம்டா…” எனக்கூற, ஆகாஷ் அந்த மேஜையில் தேடினான்.

தேடும் அந்த நொடியில் அவளை தன் கண்ணுக்குள் நிரப்பிக் கொண்டவன், தன் சட்டை பையில் கை விட்டு சாவியை எடுத்தவன், “ஆகாஷ், சாவி கிடைச்சுடுச்சு… கிளம்புறேன்டா…” என வெளியேறி விட்டான்.

அதன் பின் வந்த நாட்களில் அவளை பார்ப்பதற்காகவே ஆகாஷின் அலுவலகத்திற்கு வந்து சென்றான். அப்படி வந்து செல்வதினால், அவன் தெரிந்து கொண்டது, அவள் பெயர் திகழ்விழி, இங்கே தட்டச்சராக பணிபுரிகிறாள். பக்கத்தில் உள்ள வளக்குடி என்னும் கிராமத்தில் இருந்து வருகிறாள். அவள் பெயரைக் கேள்விப் பட்டதிலிருந்து, அதனை ஒரு ஆயிரம் முறையாவது தனக்குள் உச்சரித்து இருப்பான் ஆடவன்.

அவள் பெயரை கூற, கூற, திகட்டவில்லை அவனுக்கு. தன்னவளின் நினைவிலிருந்த செழியனை, கைப்பேசி அழைப்பு நிகழ் காலத்திற்கு அழைத்து வந்தது. கைப்பேசியின் அழைப்பை ஏற்று பேசினான் செழியன். மறுமுனையில் என்ன சொல்லப்பட்டதோ? அவனது முகத்தில் அத்துனை பதட்டம்.

ஆகாஷ், “என்ன ஆச்சு செழியா?” என வினவ,

செழியன், “லோடு கொண்டு போன நம்ம லாரி ஆக்சிடென்ட் ஆயிடுச்சாம்…” என்க,

ஆகாஷ், “எங்க? எப்படி ஆச்சு?” என கேள்விகளை அடுக்க,

செழியன், “நம்ம கம்பெனி பக்கத்துல இருக்க மெயின்ரோட்டில தான். இப்ப தான் ஆச்சாம். சரி நான் போய் என்ன ஆச்சுன்னு பாக்குறேன்…” என கிளம்பிவிட்டான்.

ஆகாஷ், “இரு… நானும் வர்றேன்..” என்க,

செழியன், “இல்லடா… உனக்கு முக்கியமான வேலை இருக்குன்னு சொன்ன? நீ வேலைய பாரு.. தேவைன்னா, நான் உனக்கு கால் பண்றேன்…” என்று கூறி மகிழுந்தை இயக்கியவன் விரைவாக புறப்பட்டான்.

செழியன் விபத்து நடந்த இடத்தை அடைய, அங்கே நிறைய பேர் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் ‘நமக்கு எதுக்கு வம்பு?’ என விலகி நிற்க, பூமியில் மனித நேயம் எஞ்சி நிற்கும் கால்வாசி மனிதர்களில் ஒருவர் அவசர ஊர்திக்கு அழைப்பு விடுத்தார்.

ஏற்கனவே அங்கு வந்திருந்த செழியனின் அலுவலக மேலாளர், செழியனை பார்த்ததும் அவன் அருகில் வந்தார்.

செழியன், “மோகன், என்னாச்சு? ஏதும் பெரிய அடியா?” என்றான் பதட்டத்துடன்.

மோகன், “இல்லை சார்.. சின்னதா தான். இங்கே இருந்தவங்க ஆம்புலன்சுக்கு கால் பண்ணிட்டாங்க போல.. நம்ம கம்பெனி ஸ்டாப் கூட போய் இருக்காங்க..” என்றார்.

செழியன், “மோகன், ஏன் நீங்க கூட போகலை?” என்றான்.

மோகன், “இல்ல சார், எப்படியும் போலீசுக்கு தகவல் போயிருக்கும். அவங்க வந்தா எஃப்.ஐ.ஆர் போட்டுடுவாங்க. அந்த பார்மலிடீஸை பார்க்க ஆள் வேணும்ல.. அதுதான் இங்கயே வெயிட் பண்றேன்..” என்றான்.

செழியன், “நீங்க ஹாஸ்பிடலுக்கு போங்க.. நான் போலீஸ்கிட்ட பேசிக்கிறேன்.. ஹாஸ்பிடல்ல பில் எல்லாம் வேற கட்டணும். நீங்க போனா தான் சரியா இருக்கும்…” என்றான்.

மோகன், “ஓகே சார், நான் போய் பார்த்துக்கிறேன்..” என தலையசைத்து கிளம்ப முற்பட,

செழியன், “மோகன், போன உடனே டாக்டர் கிட்ட டிரைவரோட நிலைமை எப்படி இருக்குன்னு விசாரிச்சுட்டு, எனக்கு உடனே இன்பார்ம் பண்ணுங்க…” என்றான். மோகன் தலையசைத்து விட்டு விடை பெற்றான்.

அவன் கிளம்பியதும் செழியன் பொருட்கள் ஏற்றி வந்த லாரியை பார்த்தான். லாரி ஒரு பக்கமாக சாய்ந்து கிடந்தது. முன்புறமுள்ள கண்ணாடி, பொருட்கள் எல்லாம் நொறுங்கி இருந்தது. லாரி கவிழ்ந்ததில் நிறைய பொருட்கள் சேதம் அடைந்திருந்தது. செழியன் லாரியை கவனித்துக் கொண்டிருக்க, காவல்துறை வாகனம் அவனை நோக்கி வந்தது.

அப்போது அவ்விடத்தில் அவ்வளவு கூட்டமில்லை. காவல் அதிகாரியை கண்டதும் செழியன் அவரை நோக்கிச் சென்றான்.
காவல்துறை அதிகாரி அவனை கேள்வியாக பார்த்தார்.

செழியன், “சார், நான் இளஞ்செழியன். செழியன் இன்டஸ்ட்ரிஸ் எம்.டி” என்க, அந்த காவல்துறை அதிகாரி மரியாதை நிமித்தமாக கைகுலுக்கினார்.
செழியனுடைய தொழில் நிறுவனம் அங்கே புகழ்பெற்ற ஒன்று. அதை அறியாதவர் வெகு சிலரே!

செழியன், “சார், ஆக்சிடெண்ட் ஆனது எங்க கம்பெனி லாரி தான்…” என்றான்.

காவல்துறை அதிகாரி, “இது ஆக்சிடென்ட் தானா? இல்லை வேற யாராவது பிளான் பண்ணி பண்ணிட்டாங்களா?” என சந்தேகத்துடன் வினவ,

செழியன், “அப்படியெல்லாம் எதுவும் இல்லை சார். ஒரு பைக்காரன் நடுவுல வந்துட்டான். அவன் மேல இடிக்காம இருக்கிறதுக்காக டிரைவர் வண்டியை திருப்ப ட்ரை பண்ண, அது பள்ளத்தில் சிக்கி கவுந்துடுச்சு…” என்று கூற,

காவல்துறை அதிகாரி, “ஓகே சார், நாங்க விசாரிச்சுட்டு எஃப்.ஐ.ஆர் போடணும்..” என்றார்.

செழியன், “ஓகே சார், நான் என்னோட லாயாருக்கு கால் பண்ணி வர சொல்றேன்..” என்றான். காவல்துறை அதிகாரி செழியனிடம் பேசி விட்டு விபத்து நடந்த இடத்தை காணச் சென்றார்.

சிறிது நேரத்தில் அந்த லாரியில் இருந்து பொருட்கள் சுத்தம் செய்ய ஆட்கள் வந்தனர். சேதமடைந்து இருந்த லாரியை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தினர். செழியன் காவல் நிலையத்திற்கு சென்று எல்லாவற்றையும் முடித்துவிட்டு, மருத்துவமனைக்கு சென்றான்.

செழியன் அந்த ஓட்டுநரின் பெயரை விசாரிக்க, அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக வரவேற்பாளினி கூறினார். செழியன் அவசர சிகிச்சை பிரிவுக்கு விரைய, அந்த வராண்டாவில் மோகன் நின்று கொண்டிருந்தார்.

மோகன் அருகில் உள்ள இருக்கையில் ஒரு பெண் குழந்தையுடன் அமர்ந்து இருந்தாள். கன்னத்தில் வடிந்த கண்ணீர் தடத்துடன், முகத்தில் அப்பிய சோகத்துடன் அமர்ந்திருந்தாள்.

செழியன் மோகனை நெருங்கி, “மோகன், இப்ப அவருக்கு எப்படி இருக்கு? நல்லா இருக்காரா?” என வினவ,

மோகன், “இப்ப எந்த பிரச்சனையும் இல்ல சார்.. கால்ல தான் நல்ல அடி போல.. டாக்டர் ஒரு மாசத்துக்கு எழுந்து நடக்க கூடாதுன்னு சொல்லிட்டாங்க..” என்றான்.

அவன் மனதில் ஒருவித நிம்மதி பரவியது. “வேற எதுவும் பிரச்சனை இல்லையே?” என மீண்டும் சந்தேகமாக வினவ, மோகன் இல்லை என்பதாக தலையாட்டினார். பின் செழியனின் பார்வை அருகில் இருந்த பெண்ணின் மேல் படிய,

மோகன், “சார், இவங்க ட்ரைவரோட மனைவி மற்றும் குழந்தை..” என அறிமுகப்படுத்தியவன் அப்பெண்ணிடம், “இவங்க தான் உங்க கணவர் வேலை பாக்குற கம்பெனியோட முதலாளி..” என்று கூறினார்.

அப்பெண் மரியாதை நிமித்தமாக எழுந்து நிற்க, செழியன், “கவலைப்படாதீங்க! உங்க கணவருக்கு எந்த ஆபத்தும் இல்லை. சீக்கிரமா குணமாகிடுவாரு..” என்று ஆறுதல் கூறினான்.

அப்பெண் செழியன் கூறியதை கேட்டு சம்மதமாக தலையாட்டினாள். செவிலியர் ஒருவர் வந்து கந்தன் கண்விழித்து விட்டதாக கூற, மூவரும் உள்ளே சென்றனர்.

அப்பெண் ஓடிச் சென்று கந்தனுடைய கையை பிடித்துக்கொண்டு கண்ணீர் விட, “மாதவி, எனக்கு ஒன்னும் இல்ல. அழுகிறதை நிப்பாட்டு! நீ அழகுறதைப் பார்த்து குழந்தையும் அழ ஆரம்பிச்சுடும்…” என்று அவளை சமாதானப்படுத்தினான்.

பின்னால் வந்த செழியனையும் மோகனையும் பார்த்த கந்தன் எழ முயற்சிக்க, மாதவி தலையணையை வைத்து சாய்ந்த வாக்கில் அவனை அமரவைத்தாள்.

செழியன், “ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்காதீங்க கந்தன்…” என்றான். கந்தன் முகத்தில் சிறிதளவு பயம் தென்பட்டது. அதை அவன் முகத்திலிருந்து செழியனும் கண்டுகொண்டன்.

கந்தன், “சார், நான் சரியாதான் வந்தேன். அந்த பைக்காரன் தான் கவனிக்காம வந்துட்டான்..” என குரலில் பயத்துடன் கூற,

கைநீட்டி போதும் என்பது போல அவனை இடைமறித்த செழியன், “கந்தன், நீங்க எந்த விளக்கமும் கொடுக்க தேவையில்லை. உங்க மேல எந்த தப்பும் இல்லைன்னு எனக்கு தெரியும். நீங்க ஒரு சின்சியரான ஓர்க்கர்னு எனக்கு தெரியும்..” என்றான். செழியனின் வார்த்தையைக் கேட்டு கந்தன் முகத்தில் நிம்மதி பிறந்தது.

கந்தன் குரலில் நன்றியுடன், “ரொம்ப நன்றிங்க சார், நீங்க என்மேல வச்சிருக்கிற நம்பிக்கை பார்க்கும்போது சந்தோசமா இருக்கு. ஆனால் இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம். நிறைய சரக்கு வீணாப் போயிடுச்சு…” என்று வருத்தப்பட,

செழியன், “கந்தன், போனது போயிடுச்சு.. விடுங்க.. காசு பணம் போனா சம்பாதிச்சுக்கலாம். உங்களுக்கு எதுவும் பெருசா அடிபடலையே! அதுவே எனக்கு நிம்மதியா இருக்கு…” என்றான்.

செழியன் வார்த்தைகள் கந்தனை உண்மையிலேயே வியப்பில் ஆழ்த்தியது. செழியன் இடத்தில் வேறு ஒருவர் இருந்தால், கண்டிப்பாக இந்த வார்த்தை வந்திருக்குமா என்பது முற்றிலும் சந்தேகம் தான். கந்தன் எதுவும் கூறாது இருக்க, செழியனே தொடர்ந்தான்.

“கந்தன், டாக்டர் உங்களை இன்னும் ரெண்டு மாதத்துக்கு ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்காங்க… ஹாஸ்பிடல் பில்லை நாங்க பார்த்துக்குறோம். உங்களுக்கு முழுசா குணமான பிறகு வேலைக்கு வந்தா போதும்…” என்றவன் மோகனை பார்க்க, மோகன் செழியனின் கையில் ஒரு பையை தர,

செழியனின், “கந்தன், இதுல பணம் இருக்கு.. செலவுக்கு வச்சுக்கோங்க.. வேறு ஏதாவது உதவி வேணும்னாலும் கேளுங்க…” என்றான்.

கந்தன் பணத்தை வாங்க தயங்க, செழியன் அவர்‌ கையில் திணித்து விட்டான். கந்தனுக்கும் மாதவிக்கும் பேச்சு வரவில்லை. இந்நிலையில் செழியன் மாதவியிடம், “செலவுக்கும் பணம் தேவைப்பட்டா தயங்காமல் கேளுங்க..” என்றான். மாதவி அவனைப் பார்த்து சரியென தலையாட்டினாள். பின் சில உரையாடலுக்குப் பிறகு மோகனும் செழியனும் மருத்துவமனையை விட்டு கிளம்பினர்.

செழியனுக்கு அலுவலகத்தில் வேலை இழுத்து கொண்டது. வேலையை முடித்துவிட்டு நேரம் பார்க்க, அந்தி சாயும் வேளை வந்திருந்தது. அவனுக்கு வயிற்றில் ஏதோ உருட்டுவது போல இருக்க, அப்போதுதான் தான் சாப்பிடாது அவனுக்கு நினைவு வந்தது. ஓரளவு வேலை முடிந்ததால், வீட்டிற்கு கிளம்ப ஆயத்தமானான்.

காரில் சென்று கொண்டிருந்த செழியனின் மனக்கண்ணில் அவளவனின் மதிமுகம் தோன்றியது. அவளைப் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவனது மனதில் நிரம்பி வழிந்தது. அவன் சென்று கொண்டிருந்தது அவள் ஊரை கடந்து செல்லும் பாதைதான். அவளை எதேச்சையாக கூட பார்த்து விட மாட்டோமா? என்ற எண்ணம் வந்தது.

அந்தி சாயும் வேளை ஆதவன் மெல்ல கீழக்கே இருந்து மேற்கே சென்று மறைய ஆயத்தமாகி செவ்வண்ண நிறத்தில் ரம்மியமாக காட்சி அளித்துக் கொண்டிருந்தான். ஆதவனின் செவ்வண்ண கதிர்களால் பாவையவளின் மஞ்சள் நிற தேகம், பொன்னிறமாக மின்னிக் கொண்டிருக்க, பேருந்திலிருந்து இறங்கி வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தாள் திகழ்விழி.

செழியனின் வேண்டுகோள் கடவுளுக்கு கேட்டு விட்டதோ? என்னவோ? தனக்கு எதிர்ப்புறத்தில் நடந்து வந்துகொண்டிருந்த திகழ்விழியை கண்டுகொண்ட செழியன் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன. அந்த நொடியே காரை நிறுத்தியவன், விழிகள் இமைக்க மறந்து அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்த மாலை வேளையில் அன்றலர்ந்த மலர்போல அவன் கண்ணுக்கு தெரிந்தாள் திகழ். அவளைப் பார்க்காமல் நிறைவு பெறாமல் இருந்த நாள் மகிழ்வுடன் நிறைவு பெற்றது.

அவள் உருவம் தூரத்தில் சென்று மறையும் வரை அவளை விழிகளால் தொடர்ந்தவன், இதழில் உறைந்த புன்னகையுடன் வீட்டை நோக்கிச் சென்றான்.

இரவு பனிரெண்டு, செழியனின் அறை அசாத்தியமான நிசப்தத்தில் இருந்தது. அந்த அமைதியில் காற்று கூட சற்று சப்தத்துடன் மரங்களை தழுவி சென்றது. மெதுவாக ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து செழியனின் அறைக்குள் நுழைந்தன அந்த உருவங்கள்.

தூக்கக்கலக்கத்தில் திரும்பிப் படுத்த செழியன், தன் மேல் ஏதோ நிழல் விழுந்ததை உணர, அவனது ஐம்புலன்களும் விழிப்படைந்து கொண்டது. செழியன் எழுந்து தன்னை காத்துக் கொள்ள முயற்சிக்க, அந்த மூன்று உருவமும் செழியனை தாக்க வந்தது. இதிலிருந்து எப்படி தப்பிப்பது என அவன் மூளை வேகமாக சிந்திக்க, படாரென ஒரு சத்தம் கேட்டது.

தொடரும்…

 

Advertisement