Advertisement

யாவும் – 6

திகழ்விழி அதிர்ச்சியாகப் பார்க்க, சரோஜா மீண்டும் அழுத்தம் திருத்தமாக, “உன்னை அந்த ரெண்டு பசங்களும் இங்க வித்திட்டு போய்ட்டாங்க..” என்க, திகழ்விழிக்கு பூமி காலுக்கு கீழே நழுவுவது  போன்ற உணர்வு. ஒரு நொடியில் வாழ்வு இருண்டு விட்டது. எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம்​! உள்ளுக்குள் ஏதோ உடைவது போன்ற உணர்வு! இந்த ஏமாற்றத்தை தாள முடியவில்லை அவளால். கண்கள் குளமாகியது.

‘என் வாழ்க்கையே நீ தான்!’ என நம்பி வந்த ஒருவன் இப்படி ஏமாற்றிவிட்டான். இத்தனை நாட்களும் என்னிடம் நடித்தானா? என நினைக்கும் போதே இதயம் விம்மியது. ‘அவனின் ஆசை வார்த்தைகளை கேட்டு மயங்கி ஏமாந்துவிட்டேன்!’ என நினைக்க, நினைக்க தன் மேலேயே ஆத்திரம் வந்தது; கோபம் வந்தது.

‘இவனுக்காகவா இத்தனை நாள் பெற்று வளர்த்த பெற்றோரை உடன்பிறந்தவர்களை உதறி தள்ளிவிட்டு வந்தேன்?  என் பெற்றோர்கள்​என்னைக் காணமால் எவ்வளவு துடித்திருப்பார்கள்! ‘திகழ்மா’ எனத் தனது  தந்தையின் பாசாமான அழைப்பு நினைவு வர, அவளது கண்ணீர் கன்னங்களை தாண்டி மரணித்திருந்தது.

‘அக்கா! அக்கா!’ என தன்னையே சுற்றி வரும் தம்பி தங்கைகள் நியாபகம் வர, அழுகை அதிகமாகியது.  தன்னை ஏமாற்றுவதற்காக விக்னேஷ் கூறிய பொய்கள் ஆசை வார்த்தைகள் எல்லாம் மனக்கண்ணில் வந்து போனது. அவனது பசப்பு வார்த்தைகளை எவ்வாறு நம்பினேன் நான்? எங்கு தவறிவிட்டேன் நான்? அவன் நல்ல நடிகனா? இல்லை நான் தான் ஏமாளியாக இருந்துவிட்டேனா? என பலவாறு எண்ண அலைகள் அழைக்கழிக்க, அவளது அழுகை அதிகமாகியது​. 

திகழின் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருந்த சரோஜா, “இந்தாம்மா, இப்படிலாம் அழுதா எதுவும் மாறிடாது! இங்க வந்துட்டா இதான் வாழ்க்கை. முதல்ல கஷ்டமாகத்தான் இருக்கும். அப்புறம் போகப் போக பழகிடும்..” என்க,

சரோஜாவின் பேச்சைக் கேட்ட திகழிற்கு சொல்லவெண்ணா பயம். உள்ளுக்குள் பயப்பந்து உருண்டது. இப்படியான வாழ்க்கையை நினைத்து பார்க்கவே அருவருப்பு.  ஏமாற்றம் பயம் எல்லாம் சேர்ந்து அவளின் அழுகை கேவலாக மாறியது.

சரோஜா, “ஏம்மா, இப்பதான சொன்னேன் அழுதா எதுவும் மாறிடப் போறது இல்லைன்னு. அதுமில்லாம நீ இப்படி அழுது ஆர்ப்பாட்டம் பணறத பார்த்தா, காஞ்சனா அக்கா உண்டு இல்லைன்னு பண்ணிடும். பேசாம அமைதியா சொல்பேச்சு கேட்டு நடந்துக்கோ!” என்று கூறிவிட்டு அறையிலிருந்து வெளியேறினார்.

திகழ் தொய்ந்து போய் அமர்ந்து விட்டாள். கண்களை கட்டி காட்டில் விட்டது போல இருந்தது அவளுக்கு. என்ன செய்வதென்று தெரியவில்லை! தன் வாழ்கையில்​ இப்படி ஒரு சூழிநிலையை சந்திப்போம் என கனவில் கூட நினைத்துப் பார்த்தது இல்லை. எல்லாவற்றிற்கும் காரணமான தன் மீது அப்படியொரு கோபம் கண்மண் தெரியாமல் வந்தது.  சிலமணி நேரம் அப்படியே கழிந்தது. திகழ் விழியால் அவ்வளவு விரைவாக அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை.  கண்களில் கண்ணீர் வழிந்துக் கொண்டே இருக்க. சிலை போல அமர்ந்திருந்தாள்.

“சரோஜா! சரோஜா!” என அழைத்துக் கொண்டு வந்தார் காஞ்சனா.

சரோஜா, “என்னக்கா?” என வினவ,

காஞ்சனா, “அந்த பொண்ணு எழுந்திருச்சிருச்சா? எதாவது ஆர்ப்பாட்டம் பண்ணாளா?” என கேட்டார். 

சரோஜா, “இல்லைக்கா! எழுந்திருச்சதும் அந்த பசங்க உன்னை வித்துட்டு போய்ட்டானுங்கன்னு சொன்னவுடனே ஒரே அழுகை. சாப்பாடு கொண்டு போய் கொடுத்தேன், அதையும் சாப்பிடலை. இன்னும் அழுதிட்டு தான் இருக்கு..” என்றார்.

சரோஜா, “இப்ப அழுது என்னப் பண்ண? பெத்தவங்களை விட்டுட்டு ஓடி வரப்போ தெரிஞ்சிருக்கணும். யாருனே தெரியாதவனை நம்பி பெத்தவங்களை விட்டு ஓடி வந்தால்ல, இதை அனுபவிச்சு தான் ஆகணும். ஒண்ணும் பண்ண முடியாது!” என்று கோபமாக பேசினார். 

காஞ்சனாவின் வார்த்தைகள் திகழிற்கு இதயத்தில் ஊசியாக குத்தியது. ‘அவர் கூறியது உண்மை தானே! எல்லாத் தவறும் தன் மீது தானே? நான் மட்டும் அவனை நம்பி வராமல் இருந்திருந்தால், இந்த நிலைமைக்கு ஆளாகியிருக்க மாட்டேனே!’ என அவளது மனசாட்சி கேள்விகாளால் விளாசியது அவளை.

காஞ்சனா கோபமாக திகழின் அறைக்குள் நுழையப் போக, சரோஜா, “அக்கா, அந்த பொண்ணே அதிர்ச்சில அழுதிட்டு இருக்கு. கொஞ்சம் பாத்து பேசுக்கா. கோவமா எதுவும் பேசிடாதக்கா..” என்க,

அவரை முறைத்துப் பார்த்த காஞ்சனா, “என்னடி, எனக்கே அறிவுரை சொல்ற அளவுக்கு வளர்ந்திட்டியா? எல்லாம் எனக்கு தெரியும். நீ பேசாம போடி!” என்று சத்தம் போட, சரோஜா வாயை இறுக்கமாக  விட்டார்.

காஞ்சனா உள்ளே நுழைந்ததை அறிந்தாலும் திகழ் எதிர்வினை எதுவும் ஏற்படுத்தவில்லை! காஞ்சனா, “ஏய் பொண்ணு!” என்க, திகழ் இப்போதும் அமைதியாக தான் இருந்தாள். 

காஞ்சனாவிற்கு கோபம் வர, “ஏய்! இங்க பாரு.. உன்கிட்ட தான பேசிட்டு இருக்கேன்..” என கோபமாக சத்தம் போட, திகழ் பயந்து இருக்கையிலிருந்து எழுந்து விட்டாள்.

காஞ்சனா, “அது! அந்த பயம் இருக்கட்டும். உன் பேர் என்ன?” என வினவினார். 

திகழ் பயத்தில் உமிழ்நீரை விழுங்கிக் கொண்டே, “திகழ்விழி..” என்றாள்.

காஞ்சனா, “ம்ம்..” என்று மேலிருந்து கீழாக அவளை ஒரு பார்வை பார்த்தவர், “ஆள் மாதிரியே பேரும் நல்லாதான் இருக்கு..” என்று இழுத்து சொன்னவர், “இதோ பாரு திகழ்விழி, அழுது வருத்தப்பட்டு ஒண்ணும் ஆகப்போறது இல்லை. ஒழுங்கா சொல்றதை கேட்டா, சாப்பாடு​ போட்டு நல்லா பார்த்துப்பேன். அதை விட்டுவிட்டு சத்தம் போட்டு அலுச்சாட்டியம் பண்றது, தப்பிக்க ட்ரை பண்றது, இந்த வேலையெல்லாம் இங்க வச்சுக்க கூடாது! சும்மா இல்லை பத்து லட்சம் ரூபாய் கொடுத்து உன்னை வாங்கியிருக்கேன்.  அப்படி எதாவது தப்பிக்க முயற்சி பண்ணுனா, பின் விளைவுகள் ரெம்ப மோசமா இருக்கும்..” என்றவர், “என்ன, புரியுதா?” என கர்ஜிக்க, திகழின் தலை தானாக ஆடியது.

காஞ்சனா, “இப்போ இருக்கிற மாதிரி தான் நான் என்ன சொன்னாலும் கேட்கணும்! இப்ப ஒழுங்கா இந்த சாப்பாட்டை எடுத்து சாப்பிட்ற! சரியா?” என்க, திகழ் மீண்டும் தலையை ஆட்டினாள்.  காஞ்சனா அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியேறினார்.

திகழ் விழிக்கு அவர் கூறிய ‘பத்து லட்சம் ரூபாய் கொடுத்து உன்னை வாங்கியிருக்கேன்’ என்ற வார்த்தையே மூளைக்குள் ஓட, விக்னேஷின் மீது ஆத்திரம் மூண்டது. எதாவது செய்ய வேண்டும் என எண்ணம் தோன்றியது. ஆனால் இங்கு தன்னால் ஒன்றும் செய்யமுடியாது என தோன்ற ஒரு சோர்வு வந்தது.  கண்களை இறுக மூடி சுவற்றில் சாய்ந்து கொண்டாள். சில நிமிடங்கள் மௌனமாக கழிய, தன் முன்னே ஏதோ நிழலாட, கண்களை திறந்து பார்த்தாள்.

நான்கு பெண்கள் இவளை பார்த்தபடி நின்றிருந்தனர். திகழின் நிலையை பார்த்த ஒரு பெண் அவளருகில் அமர்ந்து அழாத என்றாள். திகழ் அவர்களை மிரட்சியுடன் பார்க்க, அதில் கொஞ்சம் இளம்வயது யுவதி, “ஏம்மா, எங்களை பார்த்து இப்படி பயப்படுற? நாங்களும் மனுஷங்க தான் மா!” என்றவள், “உன் பேரு என்ன?” என்றாள்.

திகழ் வெளிவராத குரலில், “திகழ் விழி..” என்றாள்.

“அவள் என் பேரு வேணி, அவப் பேரு வள்ளி, அவப் பேரு கார்த்திகா, அவங்க புனிதா..” என்று அறிமுகப்படலம் நடத்தினாள். திகழ் எந்த சலனமுமின்றி அவர்களை பார்க்க, அவளே தோடர்ந்தாள்.

“என்னடா இது, புதுசா ஹாஸ்டல்ல சேர்ந்த மாதிரி பேரை சொல்லி அறிமுகம் பன்றாளேன்னு பார்க்குறியா?” என்று​ கூறி புன்னகைத்தவள், “இதுவும் ஹாஸ்டல் மாதிரி தான். என்ன திரும்பி போகவே முடியாத ஹாஸ்டல். இனிமேல் எல்லாரும் ஒன்னாதான் இருக்கப் போறோம்..” என்றாள்.

கார்த்திகா, “திகழ்விழி, அழாத! கொஞ்சம் நாள்ல எல்லாம் பழகிடும்..” என்க, திகழிற்கு பகீரென்றது.

‘எல்லாம் பழகிவிடுமா? அப்படி என்றால் என் வாழ்க்கை முழுவதும் இங்கே தானா? உடலை விற்று ஒரு பிழைப்பா? எத்தனை அருவருக்கத் தக்க செயல். இவர்களை போலவே என்னுடைய வாழ்க்கையும் இப்படியே சென்றுவிடுமோ? தப்பிக்க வழியே இல்லையா?’ என நினைக்க அவள் உடலோடு சேர்த்து உள்ளமும் நடுங்கியது.

அவளது நடுக்கத்தை உணர்ந்த வள்ளி அவள் கையை ஆதரவாக பிடித்தாள். திகழ்விழிக்கு ஏதோ தோன்ற அவளது முகத்தை பார்த்தாள். வள்ளி எதுவும் பேசவில்லை. பயத்திலிருந்த மனதிற்கு ஆறுதல் கிடைக்க, வள்ளியின் கைகளை இறுக பற்றிக் கொண்டாள். 

புனிதா, “நீ எந்த ஊரு?” என வினவ,

திகழ், “சேலம்..” என்றாள்.

புனிதா, “ஓ.. சேலமா? நம்ம ஊரு பக்கத்து ஊரு தான். நான் நாமக்கல் தான்..” என்றாள்.

திகழ்விழிக்கு ஆச்சிரியம் தான் இவர்கள் எவ்வளவு சாதரணமாக இருக்கிறார்கள். இவர்களுக்கு இங்கே இருக்க பிடித்திருக்கிறதா? என்னை மாதிரி அல்லாமல் விருப்பட்டு வந்திருப்பார்களா? என பல விதமான எண்ணங்களுடன் அவர்களை பார்க்க,

கார்த்திகா, “அழாம சாப்பிட்டு தெம்பா இரு..” என்றவள், அடுத்து கூறிய வார்த்தைகளின் விளைவால் திகழ் விக்கித்து அவளைப் பார்த்தாள்.

விக்னேஷ், “மச்சான், நான் கிளம்புறேன் டா! அடுத்து எதாவது கிளி சிக்குச்சுன்னா, மீட் பண்ணலாம்..” என்று கூற,

“ஹம்ம் டா.. போய்ட்டு வா! அதப்டி டா உனக்கு மட்டும் கலர் கலரா மாட்டுறாளுக..?” என பாலு கேட்க,

“அதுக்கு எல்லாம் ஒரு முகராசி வேணும் டா! நான் பார்க்க ஓரளவுக்கு நல்லா இருக்கேன் ல.. படிச்ச முட்டாளுக எல்லாம் வெள்ளையா, அழகா இருந்தாளே நல்ல பையன் நம்பிடுறாளுக. ஆனால், அதுவும் நம்மளுக்கு சாதகமா போய்டுது டா!”

“அது எண்ணமோ உண்மை டா! நம்மளை மாதிரி ஆளுங்க தான் இப்ப நல்ல சோக்கா இருக்கோம் டா!”

“ம்ம்.. ஆனால் இந்த திகழ் இருக்காளே! சரியான தெளிவு டா! இதுக்கு முன்னாடி உன்கிட்ட விட்ட டிக்கெட்டுங்களை எல்லாம் ஒரு தடவை நான் அனுபவிச்சுட்டு தான் வித்தேன். ஆனால் இவ, ரொம்ப உஷாரு டா! கையை கூட டச் பண்ண விடலை டா. கஷ்டப்பட்டு அவளை கரெக்ட் பண்ணேன். நல்லவனா நடிக்கிறது ரொம்ப கஷ்டம் டா.”

“ஓ.. அப்ப இவ ப்ரெஷ் பீசா! பார்க்க செம்மையா இருந்தா டா! எனக்கே ஆசை வந்துச்சு. ஆனால் நம்ம ஏதும் பண்ண போய், மாட்டிக்கிட்டா, என்னப் பண்றதுன்னு கை வைக்கலை டா.”

“பச்.. அவ காலம் முழுசும் இங்க தான டா இருக்கப் போறா! வேணும்னா, நீ கஸ்டமரா போக வேண்டியது தான?”

“ஆள் தெரிஞ்சா, ஆட்டம் போடுவா டா. சண்டை போடுவா!”

“டேய்! என்ன சத்தம் போட்டாலும், காஞ்சனா அக்கா அடக்கிடுவாங்கன்னு நீ சொன்ன..?”

“அஹான் டா! அதான் எனக்கும் தெரியலை. முதல்ல எப்படி ஆர்ப்பாட்டம் பண்ணுவாளுக. அப்புறம் போனா, வித்த நம்மகிட்டயே அப்டி ஒரு குவாப்ரேஷனு.. எல்லாம் ட்ரெயினிங் டா..” என மேலும் அவன் கெட்ட வார்த்தைகளால் பேச,

“சரி டா மச்சான். ட்ரெயின் வந்துடுச்சு. நான் வீட்டுக்குப் போறேன் முதல்ல. அவளை காணோம்னு அடுத்து எங்க வீட்டுக்கு தான் வருவானுங்க. அங்க போய் ஒரு பெர்பாமென்ஸ் வேற போடணும்.. சை! புள்ளையை காணோம்னா, எவனோடவாது ஓடிப் போய்ட்டான்னு விட வேண்டிதுன்னு, தலைமூழ்கிட வேண்டியது தான? சும்மா நம்ம உசுரை வாங்குவானுங்க. இதுக்கு முன்னாடி விட்ட டிக்கெட் எல்லாம் அம்மா, அப்பா இல்லாதவளுக. அதனால ஈஸியா சமாளிச்சுட்டேன். இவளுக்கு அம்மா, அப்பான்னு ஒரு கூட்டமே இருக்கு..” என நொந்துக் கொண்டே இரயில் ஏறினான்.

அவசரமாக தனது காலணியை வெளியே விட்டு, காவல்நிலையத்திற்கு உள்ளே நுழைந்தார் சந்தானம்.

“என்ன வேணும் உங்களுக்கு?” என உள்ளே அமர்ந்து இருந்த காவலாளி வினவ,

“சார், என் பேர் சந்தானம். நான் இங்க கவர்மெண்ட் பேங்க்ல வொர்க் பண்றேன் சார்..” என்க,

“ஹம்ம், உக்காருங்க சார்..” என இருக்கையை கைக்காட்டியவர், “என்ன பிரச்சினை சார் உங்களுக்கு?” என வினவ,

“சார், நேத்து காலைல காலேஜ் போன என் பொண்ணு, இன்னைக்கு காலைல ஆகியும் வீட்டுக்கு வரலை சார். அவளோட காலேஜ், ப்ரெண்ட்ஸ்னு எல்லார்கிட்டயும் விசாரிச்சுட்டோம் சார். இதுக்கு மேல தாமதிச்சா, சரிவராதுன்னு கம்ப்ளைண்ட் கொடுக்க வந்து இருக்கேன்..” என்று அவர் கூறும் போதே கண்கள் கலங்கி குரல் நடுங்கியது.

“பதறாதீங்க சார், உங்க பொண்ணு பேர், எந்த காலேஜ், எத்தனை மணிக்கு கிளம்புனாங்க..?” என அவர் கேட்டு எல்லா தகவல்களையும் ஒரு காகிதத்தில் எழுதினார்.

“அப்புறம் சார், உங்க பொண்ணுக்கு லவ் அப்ட எதாவது இருக்குமா சார்..?”

“ஐயோ சார், என்னோட பொண்ணு அப்டியான பொண்ணு இல்லை சார். காலேஜ் விட்டா வீட்டுக்கு வந்துடுவா சார்.” என பதிலளிக்க,

“உங்க பொண்ணு நல்ல பொண்ணா இருக்கலாம் சார். உங்க பொண்ணு பின்னாடி யாராவது சுத்தி, மிரட்டி இருக்காங்களா சார்?”

“இல்லை சார், அப்டி எதுவும் என் பொண்ணு சொன்னது இல்லை சார்..”

“ஹம்ம்.. உங்களுக்கு யார்மேலயும் சந்தேகம் இருக்கா சார்? உங்களுக்கு எதிரின்னு‌..?”

“எனக்கு எதிரின்னு யாரும் இல்லை சார். யார் கூடவும் நான் சண்டை போடுறது இல்லை. பொண்ணைப் பெத்தவன்னு, எல்லா இடத்திலும் அடங்கி போய்டுவேன் சார்..” என அவர் கூறிக் கொண்டு இருக்கும் போதே, துணை ஆய்வாளர் உள்ளே நுழைந்து இருக்கையில் அமர்ந்தவர், இவ்ரகளை கேள்வியாக பார்த்தார்.

அவர் அருகில் சென்ற கான்ஸ்டபிள், அவரிடம் அனைத்தையும் கூறி, “இங்க வாங்க சார்..” என கூறி, சந்தானத்தை அருகில் அழைத்தார்.

“ஒண்ணும் பயப்படாதீங்க சார்.. ஒரு கான்ஸ்டபிளை உங்க கூட அனுப்புறேன். முதல்ல காலேஜூ, ப்ரண்ட்ஸூ நாங்க ஒரு தடவை விசாரிக்குறோம். நீங்க ஏற்கனவே விசாரிச்சு இருந்தாலும், நாங்க ஒரு தடவை விசாரிச்சா தான் எங்களுக்கு உங்க பொண்ணை கண்டுபிடிக்க சுலபமா இருக்கும். நீங்க இவர் கூட போங்க. நான் வேற எதுவும் டீடெயில்ஸ் கிடைக்குமான்னு பார்க்குறேன்..” என அவர் கூற, சந்தானம் தலையை அசைத்தார். இருவரும் கல்லூரியை நோக்கிச் சென்றனர்.

                                       தொடரும்..

சாரி!! லேட் அப்டேட் தான். எத்தனை தடவை சாரி கேட்க வருமோ? சென்ற பதிவிற்கு கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் பல ❤️ இந்த பதிவிற்கும் உங்களது கருத்துக்களை கூறவும்.

Advertisement