யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ!! – 63.2

566

முகமெல்லாம் சிவந்து பற்கலால் தன் உதடை கடித்துக் கொண்டு, தன் இயலாமையை நினைத்து கோபத்தில் நடுங்கினாள்.

*

சில நிமிடங்கள் கழித்தும் அவள் அமர்ந்திருந்த இடத்தைவிட்டு வன்னி எழவில்லை. ‘இவன் வார்த்தையை நம்புவது சரியா இல்லையா?’ என்ற யோசனையில் ஆள்ந்தாள்.

 

‘ஆனால் 100ல் ஒரு வாய்ப்பாக கூட இவன் சொல்வது உண்மையாக இருந்தால்…’ என்று முனுமுனுத்தவள் அப்போதுதான் அவள் மடியில் கிடந்த சிறிய வரைப்படதாளை(Map) பார்த்தாள்.

 

அது , விராட்டு மலையின் பாதை குறித்த வரப்படம். அதில் மூன்றாவது மலையின் ஓரிடத்தில் சிவப்பு நிறப் புள்ளி இடப்பட்டு கரணியன் என்று எழுதப்பட்டிருந்தது.

 

அதை பார்த்தும், அசட்டையாக இருக்க முடியாமல், “போய் பார்த்துவிடுவது மேல்.’ என்று முடிவெடுத்தாள். கூடவே, ‘ஒருவேளை தவிர்க்க முடியாத ஆபத்து என்றாலோ,

 

அல்லது என்னால் என் ஆன்மீக சக்தியை பயன்படுத்த முடியாதென்றாலோ, கடந்த வருடம், மாதங்க அரசு கொடுத்த இடமாற்றும் சக்கரம் பொதித்த மோதிர கருவிக் கொண்டு அங்கிருந்து தப்பிவிடலாம்.’ என்றும் திண்ணம் கொண்டாள்.

 

ஒருவாறு அடுத்துச் செய்ய வேண்டியதை முடிவெடுத்தப் பின் வன்னி ஒரு பெருமூச்சுவிட்டு அவ்விடத்திலிருந்து எழுந்தாள். ஒரு காகிதத்தில், ‘இளவரசர் துருவன். நான் தனியாக என் சீடர் தோழர்களைக் காண் விரும்புகிறான்.

 

அதனால் நான் இங்கிருந்து கிளம்புகிறேன். நான் 5 நாட்களுக்குள் மீண்டும் மகர அரண்மனைக்கு வரவில்லையென்றால், என்னை குறித்து பரி அரசிற்குத் தகவல் தந்துவிடுங்கள். என்னை தேட வேண்டாம்.’ என்று எழுதி அந்த அறையிலிருந்த டீபாய் மீது வைத்தாள்.

 

பின், ‘விராட்டு மலைக்குப் போவதற்கு மகர அரசு தடைவிதித்திருப்பதாக இளவரசர் துருவன் சொன்னார். ஆனால் மனிதயாளிகள் மூலிகைக்காக அவ்வப்போது விராட்டு மலைக்குப் போய் வருவதாகவும் சொன்னார்.

 

அப்படியென்றால், நான் பரியாளி உருவத்தில் விராட்டு மலைக்குச் செல்ல முடியாது. முதலில் இந்த அரண்மனையிலிருந்து எப்படி மகர அரசுக்கு தெரியாமல் வெளியேறுவது.’ என்று யோசனையோடு அறையின் குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள்.

 

அப்போது அந்த அறையின் மூலையில் இருந்த மேஜை இடம் மாற்றப்பட்டிருப்பதும், அந்த மேஜை இருந்த இடத்தில் ஒரு பள்ளமும், அதனைத் தொடர்ந்து சுரங்க பாதையும் தென்பட ஆச்சரியமுடன் அதனருகில் சென்றாள்.

 

‘இந்த வழியாகதான் கனவுச்சக்கர குரல் கொண்டவன் இங்கு வந்தானா? அல்லது இது வழியாக என்னை வர சொல்வதற்காக வழிவகைச் செய்துவிட்டு போனானா?’ என்று யோசித்தாள்!

 

ஆனால் அவள் அதிகம் நேரம் யோசிக்க விடாமல் அந்த பள்ளத்தை சுற்றி புதிதாக மந்திரப்பூட்டு சக்கரமும் பாதுகாக்கும் சக்கரமும் ஒன்றன்பின் ஒன்றாக மெல்லிய நீல நிற ஒளிப்படலமாக உருவாகுவதை பார்த்தாள்.

 

காலம் கடத்தினால் யாரும் அறியாமல் வெளியில் செல்வது சிரமாகி போகும் என்றுணர்ந்து, ஒரு நொடி அந்த சுரங்கபாதையில், ஏதேனும் ஆபத்திருக்கிறதா என்று கவனிக்கும் சக்கரத்தைச் செலுத்தி பார்த்தாள்.

 

பின் தீங்கிழைப்பதாக எதுவும் இந்தப் பாதையில் இல்லை என்பதை உணர்ந்து சட்டென பள்ளத்தில் குதித்தாள். அவள் குதித்ததும் அவள் மேலே தெரிந்த சிறிதளவு துவாரமும் முற்றிலும் மறைந்து அந்த சுரங்கபாதையை முற்றிலும் இருட்டாக்கியது.

 

தன் ஆள்காட்டிவிரலையும் நடுவிரலையும் நீட்டி , தன் ஆன்மீக ஒளியால் அந்த இருண்ட சுரங்க பாதையில் வெளிச்சத்தை ஒளிரவிட்டு மெதுவாக முன்னோக்கி நடந்தாள் வன்னி.

 

வன்னியின் அறையில் வெளியே  எப்போதும் அவள் மீது கண்ணாக இருந்த நிழற்காவலர்கள் இருவரும் அவர்களையும் அறியாமல் உறங்கி அப்போதுதான் எழுந்தனர். இருவருமே அதிர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு சட்டென வன்னியின் அறையில் நுழைந்தனர்.

 

ஆனால் வன்னிதான் அந்த அறையில் இல்லையே!. அவள் துருவனுக்கு எழுதியிருந்த காகித்ததைப் பார்த்ததும் அந்த நிழற்காவலர்கள் எதுவோ சரியில்லை என்பது உணர்ந்தனர்.

 

உடனே மகர அரசரரசியை சந்தித்து விவரம் அளித்தப்பின், அரண்மனையை விட்டு வன்னியை தேடி புரப்பட்டனர். அவர்களோடு சேர்ந்து மகர அரசின் இளவரசன் துருவனும் தேடுதலில் ஈடுப்பட்டான்.

 

இப்படியாக மகர அரண்மனையே தலை கீழாகியிருக்க இதை எதையும் அறியாத வன்னி சுரங்க பாதையில் எச்சரிக்கையுடன் நடந்துச் சென்றுக் கொண்டிருந்தாள். அது எளிதாக கடப்பதாக இல்லை.

 

அந்த பாதை பல கிளைகள் கொண்டதாகவும், தவறான பாதையில் சென்றால் பாதுகாக்கும் சக்கரத்தில் மாட்டிக் கொள்ளும்படியாக இருந்தது. நல்லவேளையாக அவள் 4 சக்கர நிலை சக்தியில் இருந்ததால், அவளது கவனிக்கும் சக்கரத்தில் அந்த தவறான பாதைகளை அறிய முடிந்தது.

 

விரைவிலே அந்த பாதையிலிருந்து வெளி உலகிற்கு வந்துவிட்டாள். அந்த பாதை ஆளரவம் அற்ற ஒரு அடர்ந்த பச்சை நிற புதரில் முடிந்திருந்து. வெளியில் வந்ததும், எச்சரிக்கையாக யாரேனும் இருக்கிறார்கள் என்று கவனித்தாள் வன்னி.

 

சந்தேகிக்கும்படியாக யாருமில்லை என்பதை உணர்ந்ததும், தன் கைக்காப்பில் எப்போதும் வைத்திருக்கும் மனித யாளி பெண் அணியும் படியான சாதாரண ஆடையை எடுத்து அணிந்துக் கொண்டாள்.

 

தலை மற்றும் அலங்காரங்களையும் கலைத்து சாதாரணப்பெண் போல மாற்றிக் கொண்டாள். வெள்ளை நிறத்தில் அணிந்திருந்த ஆபரணங்களையும் தன் கைக்காப்பில் வைத்தாள்.

 

இடமாற்றும் சக்கரம் கொண்ட மோதிரத்தை தன் விரலில் அணிந்துக் கொண்டு, முன்பு மாதங்க அரசில் பேரரசர் கொடுத்த சக்தியால், தன் கைக்காப்பையும் இருக்கும் இடம் தெரியாமல் மறைத்துக் கொண்டாள்.

 

இவையனைத்தையும் இமைக்கும் நேரத்தில் செய்து முடித்த வன்னி, அந்த புதரைவிட்டு விலகி வெளியில் வந்து, ஆட்கள் நடமாட்டம் ஏதேனும் இருக்கிறதா என்று பறக்கும் சக்கரம் மூலமாக தேடிச் சென்றாள்.

 

அவள் சென்ற பிறகு, அந்த புதருக்குப் பின்புரம் இருந்த கல்லின் எங்கிருந்தோ, கருப்பு முக்காடு போட்ட உருவம் தன் இருக்கைகளையும் தன் பின் கட்டிக் கொண்டு வந்து நின்று வன்னி சென்ற திசையை பார்த்தது.

 

‘நான் காட்டிய இந்தச் சுரங்கபாதையைப் பயன்படுத்த மாட்டாள் என்று நினைத்தேன்.பயம் என்பதே இல்லையே! இன்னும் சிறுப்பிள்ளைதான். நான் சொல்வது உண்மை என்று உடனே நம்பி விராட்டு மலைக்குச் செல்கிறாள்.

 

அந்த கரணியனின் உயிர் அவ்வளவு முக்கியமா? வெள்ளி எலும்புள்ளவர்கள் எல்லோரும் இப்படிதான் பிறர் நலன் கருதி இருப்பரோ! இன்னும் எவ்வளவு நாட்களுக்கு!

 

நானும் ஆரம்பத்தில் அப்படிதானே இருந்தேன். ஆனால் இன்று…” என்று விஷமமாக சிரித்த அந்த கருப்பு உருவம், தன் வலது கையில் சிவப்பு நிற பழத்தை தன் முகத்தின் முன் வைத்து பார்த்தான்.

 

‘இந்தமுறை இந்த வெள்ளி எலும்பு பெண் என்ன செய்கிறாள் என்று பார்த்துவிட்டு, இப்போது இந்த பழத்திற்கு வேளை இருக்கிறதா அல்லது சில வருடங்களுக்குப் பிறகு இதை பயன்படுத்தலாமா என்று பார்ப்போம்.’ என்று அந்த இடத்திலிருந்து மறைந்தான்.

 

அந்த குரலுக்குரியவனும், இந்த முக்காடு உருவமும் ஒருவன்தான் என்பதை அறியாத வன்னி, மாலைக்குள் விராட்டு மலைக்குச் செல்வதே குறிக்கோளாக விரைந்து பறந்துக் கொண்டிருந்தாள்.

 

தூரத்தில் சில வீடுகளைப் பார்த்ததும், பறக்கும் சக்கரத்திலிருந்து இறங்கி, சாதரண மனிதயாளிப் பெண் போல அங்கு நடந்துச் சென்றாள். அங்கிருப்பவர்களிடம், மூலிகை மருந்து பறிக்க வந்த நாடோடிப் பெண் போல பேசி, விராட்டு மலைக்குப் போகும் பாதைக்கான வழியை கேட்டறிந்தாள்.

 

சில நாழிகைகளுக்குள்ளே விராட்டு மலைக்குள் நுழைவதற்கு மகர அரசு போட்டிருந்த காவல் எல்லைக்கு வந்துவிட்டாள். வரும் வழியில் மூலிகை பறிக்க போகும் போது மனித யாளிகள் பொதுவாக பயன்படுத்தும் கூடையையும்(1) ஒரு கடைவீதியில் வாங்கிக் கொண்டாள்.

 

முன் பின் நடித்து பழக்கம் இல்லாத போதும், மூலிகைகள் பற்றிய ஞானம் இருந்ததால், எளிதாக விராட்டு மலையின் எல்லையில், காவலுக்கு இருந்த மகரர்களை நம்ப வைத்து, அந்தி சாய்வதற்குள் மலையின் எல்லைக்குள் நுழைந்துவிட்டாள்.

 

உள்ள நுழைந்ததும் சிறிது தூரம் சென்று தன் ஆடையை பரியாளியின் எளிதில் கிழிந்துவிடாத வெள்ளை நிற பட்டுஆடைக்கு மாறினாள். பின் ஒரு கல்லின் மீது அமர்ந்து, அவள் கைக்காப்பிலிருந்து வரைப்படத்தை(Map) எடுத்து பிரித்து பார்த்தாள் வன்னி.

 

‘இங்கிருந்து மூன்றாவது மலையில் இந்த வரைபடத்தில் குறிப்பிட்டிருக்கும் சிவப்பு நிற புள்ளி இருக்கிறது. எப்படி வேகமாகச் சென்றாலும் விடிவதற்குள் அங்கு செல்வது கடினம். ‘ என்றவளின் முகம் கருத்தது.

 

பற்களால் தன் உதடுகளை கடித்து, “அவனை! இரு இரு… நான் விரைவில் ஏழு சக்கர நிலைகளையும் அடைந்து உன் கனவுச் சக்கரத்தை உடைத்து, உன்னை கையும் களவுமாக பிடிக்கிறேன். கூடவே என்னை கொல்ல நினைத்திருந்தால் எப்போதோ இவனால் என்னை கொன்றிருக்க முடியும்.

 

ஆனால் இப்படி பித்து பிடித்தவன் போல கனவுச் சக்கரத்தில் வந்து என்னிடம் தொடர்பற்று பேசுபவனின் நோக்கம்தான் என்னவென்று கேட்க வேண்டும். “ என்று கை முஷ்டியாக்கி அவளுள்ளே பேசினாள்.

 

பாவம் சிறுமியான வன்னிக்கு தெரியவில்லை. அந்த கனவுச்சக்கர குரலுக்கு உரியவனது நோக்கம் அவளை கொல்வதல்ல. அதனை விடவும் மோசமானதென்று. அதனால் உலகம் அறியா வன்னி, அவனை விளையாட்டு போல நினைத்தாள்.

 

இவ்வாறு வன்னி முனுமுனுத்துக் கொண்டே அந்த இடத்திலிருந்து முன்னேறி முதல் மலையை நோக்கி நடந்தாள். சிறிது தூரம் நடந்த போது, யாரோ தன்னை தொடர்வது போல் உணர்ந்தாள் வன்னி.

 

உடனே கவனிக்கும் சக்கரத்தில் பார்த்தவிதமாக அருகிலிருந்த மரத்தின் மீது ஏறி நின்று கீழே பார்த்தாள். ‘அது ஒரு மனிதயாளி! என்னை பின் தொடர்கிறானா? அல்லது சாதரணமாக மூலிகை பறிக்க செல்கிறவனாக இருக்குமோ?’ என்று தன்னுள் முனுமுனுத்து அவனை நோட்டமிட்டாள்.

 

அந்த மனிதயாளி, வன்னி மரத்தின் மேல் ஏறிய இடம் வரை வந்தான். அதன் பிறகு எதையோ தேடுபவன் போல சுற்றும் முற்றும் பார்த்தான். பின் என்ன தோன்றயதோ, அவன் கையிலிருந்த கூடையை அருகில் வைத்துவிட்டு, அந்த இடத்திலே புல் தரையின் மீது அமர்ந்தான்.

 

வன்னி, “ஏன் இங்கேயே அமர்ந்துவிட்டான். ஓய்வெடுக்கிறானா? ஆனால் இப்போது மழை வரும் போல் அல்லவா இருக்கிறது.” என்று வானை ஒருமுறை பார்த்து அவனது சைகிய புரியாமல் விழித்தாள்.

 

“ஓய்வெடுப்பதென்றால் ஏதேனும் குகையிலோ அல்லது அடர்ந்த மரதடியுலோ அதை செய்யலாமே. இப்படி வெட்ட வெளியில் அமர்ந்தால், மழையில் நனைந்துவிடமாட்டானா?” என்று வன்னி யோசித்துக் கொண்டிருக்கும் போதே, லேசாக தூரல் விழ ஆரம்பித்தது.

 

ஆனால் தூரல் விழுந்த போதும், அந்த மனிதயாளி, நனைந்தவிதம் புல் தரையில் இருந்தானே ஒழிய, அவ்வித்திலிருந்து நகரவில்லை. அவன் யாருக்காகவோ காத்திருப்பவன் போல சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

மழைக்கு ஒதுங்க நினைத்த வன்னி, அவனை அப்படியே மழையில் விட்டுச் செல்ல மனமில்லாமல், அவன் எதிரே மரத்திலிருந்து குதித்தாள். அவள் குதித்ததும் அமர்ந்திருந்தவன் எழுந்து நின்றான்.

 

அவன் கண்ணில் குதுகளிப்புடன், “0_0…^_^…நீ…நீங்க…” என்று அவன் கேட்க நினைத்ததை சொல்லும் முன்னே வன்னியின் ஆடை மழையில் நனைவது அவன் கருத்தில் பட்டது.

 

உடனே வன்னி எதுவும் பேசுமுன்னே, அவளது கரத்தை தன் வலதுகையால் பற்றியும், தன் இடதுகையால் தரையிலிருந்த கூடையை எடுத்துக் கொண்டும் ஒரு திசை நோக்கி ஓட ஆரம்பித்தான்.

 

மனித யாளிக்கு தாக்குவதற்கான சக்தி இருக்காது என்ற எண்ணத்தில் அசட்டையாக இருந்த வன்னி, தன் கைப்பற்றியவனின் பலத்தை எண்ணி வியந்தாள்.

 

அவன் இழுத்த இழுப்புக்கு அவனோடு ஓடினாளே ஒழிய, அவனை தாக்கும் எண்ணம் ஏனோ வன்னிக்கு வரவில்லை. ஆனால், “எங்கு என்னை இழுத்துச் செல்கிறீங்க?” என்று தன்னை விட தோற்ற வயதில் பெரியவனாக தெரிந்ததால் மரியாதையோடு கேட்டாள்.

 

அவன் ஓடியபடியே மூச்சு வாங்க, “இளவரசி… அருகில் ஒரு குகை இருக்கிறது. தாங்கள் மழையில் நனைய வேண்டாம். அங்குச் சென்று மற்றது பேசலாம்.” என்றான்.

 

ஆம், அந்த மனிதயாளி நந்தனே! வன்னி மகர அரசை விட்டு செல்லும் வரை வன்னியும் நந்தனும் சந்திப்பதை தவிர்க்கவென்று வானதி, நந்தனை மூலிகை எடுத்து வரவென்று விராட்டு மலைக்கு அனுப்பிவிட்டிருந்தாள்.

 

விராட்டு மலைக்கு மூலிகைகள் எடுத்து வரச் செல்லும் மனித யாளிகளைத் தவிர வேறு யாரையும் , மகர அரசு அனுமதில்லை. அதனால் நிச்சயம் வன்னி விராட்டு மலைக்குச் செல்ல வாய்ப்பில்லை என்று யூகித்து வானதி அப்படிச் செய்தாள்.

 

ஆனால் விதியை யாரால் வெல்ல முடியும். வன்னியும் நந்தனும் மகர அரசின் அரண்மனையில் சந்தித்த நினைவுகளை வானதி அழித்த போது, அதன் பக்க விளைவாகவோ என்னமோ முன்பு மாதங்க அரசில் வன்னியை பற்றி அவனிலிருந்து அழிக்கப்பட்ட நினைவுகள் நந்தனுக்கு மீண்டும் நினைவு வந்தது.

 

இது வானதியுமே அறிவாள் அல்ல. ஆனால் வானதிதான் ஏதோ செய்து தன் நினைவுகளை 5 வருத்திற்கு முன்பு அழித்திருப்பாள் என்று மட்டும் நந்தனுக்கு தோன்றியது. அதனால் அவனுக்கு நினைவு வந்ததை வானதியிடம் நந்தன் சொல்லவில்லை.

 

வன்னி விராட்டுமலையின் எல்லைக்குள் நுழைந்ததுமே நந்தன் அவளது வாசத்தை உணர்ந்துவிட்டான். பல மணி நேர ஓட்டத்திற்கு பிறகு அவளை நெருங்கியும் வந்துவிட்டான். ஆனால் ஒரு இடத்திற்கு வந்த பிறகு வன்னியின் வாசம் காணமல் போனது.

 

அவனுக்கு நன்றாக தெரியும், ‘தன் இளவரசி எங்கோ அருகில்தான் இருக்கிறார் என்று. ஒருவேளை தன்னைச் சுற்றி மந்திர பூட்டுச் சக்கரம் போட்டுக் கொண்டு ஓய்வெடுக்கிறாரோ என்னமோ!’ என்று நினைத்து அவன் அங்கேயே அமர்ந்து அவளது வாசம் மீண்டும் நகர்ந்தால் தொடர காத்திருந்தான்.

 

ஆனால் அதற்குள் மழைவந்துவிட்டது. இருந்தும், வன்னி அங்கிருந்து செல்லாததால் நந்தனும் மழையில் நனைந்தப்படி நகராமல் அப்படியே அமர்ந்திருந்தான்.

 

வன்னிக்கு அவனது செயல் காரணம் புரியவில்லை. ஆனால் அவன் மழையில் நனைவது பிடிக்காமல், வன்னியும் சட்டென அவன் முன்னே தோன்றினாள்.

 

அதன்பிறகு நந்னும் அவளை மழையில் நனைய விரும்பாமல், அருகிலிருக்கும் அவனுக்கு தெரிந்த குகைக்கு அழைத்துச் செல்கிறான். ஓரிரு நிமித்திலே வன்னியும் நந்தனும் ஒரு குட்டி குகைக்கு வந்து சேர்ந்துவிட்டனர்.

 

குகைக்குள் வந்தந்தும் எல்லா சக்தியும் கரைந்தவன் போல பொத்தென்று கீழே விழுந்தான் நந்தன். வன்னி என்ன ஆனதென்று அறிவதற்குள் ஐந்தரை அடியிலிருந்த அவனது உருவம் சுருங்கி நீல நிற கண்ணுடனான ஆட்டுக் குட்டியாக மாறியது.

 

இதனைப் பார்த்ததும் வன்னி, ‘மகர யாளி எப்படி விராட்டு மலையில்? அதுவும் கைக்காப்பும் இல்லாமல்!’ என்று அதிர்ந்தாள். வன்னி அவனிடம் கேள்வி கேட்கும் முன்னே அவன் மயங்கி உறங்கியும் விட்டான்.

 

Author note:

(1) கூடை