யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ!! – 63.1

578

 

அத்தியாயம் – 63

 

வசுந்தரா பேசியதற்கு அரை கவனமாக, “சரிங்க தோழி வசுந்தரா.” என்றாளே ஒழிய, வன்னி அவளை சரியாக பார்க்கவும் இல்லை.

 

பின் 11 மகரர்களும் தியானத்தில் ஆழ்ந்ததும் அங்கிருந்த காவலர்களுள் சிலரை, தியானத்தில் உள்ள மகரர்களின் மந்திரகல்லில் ஆன்மீக ஆற்றல தீர்ந்தால் வேறு கல்லை மாற்ற அறிவுறுத்தினாள்.

 

ஆனால் அதுவரையும் கூட வசுந்தரா திரும்பி வரவில்லை. வசுந்தராவின் இதயவேர் இரத்தத்தை சேகரித்தப் பிறகு தன் அறைக்குச் செல்ல எண்ணி வன்னி அவளுக்காக சில நிமிடங்கள் முன்பு அனைவரும் இருந்த அறையில் காத்திருந்தாள்.

 

மாலை மங்கி லேசாக இரு நிலவுகளும் உதித்த பிறகும் கூட வசுந்தரா வரவில்லை.

 

‘தோழி வசுந்தராவின் இரத்தத்தை இன்றே தேவையான மூலிகைகளுடன் சேர்த்து பரிசோதனையை ஆரம்பித்துவிட்டால், ஓரிரு நாளிலே மதியையும் முகிலனையும் பார்க்க போய்விடலாம் என்று பார்த்தால், தோழி வசுந்தரா வர இன்னும் நேரமாகும் போல இருக்கே!’ என்று சலிப்புற்று உதடை பிதுக்கினாள் வன்னி.

 

சலிப்புடனே, ‘நாளை பார்த்துக் கொள்ளலாம்.’ என்று முடிவடுத்து தன்னறை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் வன்னி. இன்று முழுதும் நிறைய ஆன்மீக ஆற்றலை பயன்படுத்தியதாலோ என்னமோ சோர்ந்திருந்த வன்னி, பல முறை தூக்க கலக்கத்தில் கொட்டாவிவிட்டாள்.

 

அரைகண் மூடிய விதத்தில் நடந்து சென்ற போது, மகர அரசின் அரண்மனை மதில் சுவரில், மாதங்க அரசில் முன் பார்த்த அந்த முக்காடு மனிதன் அவள் கண்ணில் பட்டான்.

 

‘மாதங்க அரசை சேர்ந்த மனித யாளி எப்படி இங்கே! அதுவும் மதில் சுவரின் மீது அமர்ந்துக் கொண்டு இந்நேரம் என்ன செய்கிறார்.’ என்று ஆச்சரியமுடன் விழி விரித்து கண்களை ஒருமுறை கசக்கி மீண்டும் அங்கு பார்த்தாள்.

ஆனால் முன்பு பார்த்த அந்த உருவம் அங்கு இல்லை. விடாமல், கண் மூடி கவனிக்கும் சக்கரத்தை கொண்டு அந்த உருவம் தெரிந்த இடத்தைப் பார்த்தாள்.

 

ஆனால் அவளது கவனிக்கும் சக்கரத்தில், அந்த மதில் சுவரின் அருகில் உள்ள மரத்தடியில் வசுந்தராவின் உருவம் தெரிந்ததே தவிர முன்பு அவள் உணர்ந்த அந்த கருப்பு முக்காடு அணிந்த உருவம் இல்லை.

 

நெற்றி சுருங்கி, ‘என் கற்பனையா? அல்லது இன்று அதிக வேலை செய்துவிட்டதால், இல்லாதைப் இருப்பதாக உணர்கிறேனா?’ என்று உதடுகள் மீது தன் கையை முஷ்டியாக வைத்து யோசித்தாள்.

 

அவளது குழம்பிய மனநிலையில், இந்த நேரத்தில் வசுந்தரா ஏன் அங்கு தனியாக நிற்க வேண்டும் என்று வன்னி உணரவில்லை. அதே குழப்பத்துடன் வன்னி, தன் அறை நோக்கி நடந்தாள்.

 

அவள் அறை அடையும் முன்னே அவள் எதிர்புரமாக வந்துக் கொண்டிருந்த துருவன் வன்னியின் சுருங்கிய நெற்றியை பார்த்து சந்தேகமடைந்தான். அவளருகில் வந்து, “தூதுவர் வன்னி, எல்லாம் நல்லவிதமாக முடிந்ததுதானே?” என்று கேட்டான்.

 

துருவனை பார்த்தும் மற்றது மறந்து முகம் மலர்ந்த வன்னி, “இளவரசே! எல்லாம் முடிந்து. தோழி வசுந்தராவின் இரத்தம் மட்டும், பரிசோதனைக்கு இன்று எடுக்க முடியவில்லை.அவர் இடையில் மீண்டும் வருவதாக சொல்லிவிட்டுச் சென்றார்.

 

ஆனால் வெகு நேரமாகியும் அவர் வரவில்லை. எனக்குச் சற்று களைப்பாக இருந்ததால், நாளைப் பார்த்துக் கொள்ளலாம் என்று வந்து விட்டேன். மற்றபடி அனைவரிலும் நல்ல முன்னேற்றம்.

 

ஓரிரு வாரத்தில் அனைவரின் பிணியும் குணமடைந்து அவர்கள் மற்ற மகரர்களைப் போல இயல்பாக இருக்கலாம். “ என்று நீண்ட நெடிய விளக்கமாக சொன்னாள்.

 

வன்னியின் விளக்கத்தில், அவளது நெற்றி சுருக்கத்திற்கு அவளது களைப்புதான் காரணம் என்று துருவன் தெளிந்தான். அவளது தலையை லேசாக வருடி, “இன்று முழுதும் தூதுவருக்கு அதிக வேலையாகி போனது. தாங்கள் உணவருந்திவிட்டு, ஓய்வெடுங்கள்.

 

நாளையே தங்களின் சீடர் தோழர்களை காண நான் ஏற்பாடு செய்துவிட்டு வரதான் நான் சென்றேன். அதனால்தான் தங்களுடன் என்னால் தொடர்ந்து இருக்க முடியவில்லை.

 

தோழி வசுந்தராவின் இதய வேர் இரத்தத்தை நாளை காலையே தங்களிடம் சேர ஏற்பாடு செய்கிறேன். தாங்கள் தங்களின் தோழர்களுடன் சில நாட்கள் இருக்க தக்கவிதமாக, தங்களின் பரிசோதனையை ஆரம்பித்த பிறகு,

 

மகர அரசின் மருத்துவ குழுவிடம் அடுத்தடுத்து செய்வதை எடுத்துச் சொன்னால், அவர்கள் இறுதி முடிவை அறிந்து தாங்கள் மீண்டும் அரண்மனைக்கு வரும்போது அறிவிப்பர்.” என்றான்.

 

இதனை கேட்ட வன்னி குதுகலத்தில், “^_^ உண்மையாகவா இளவரசே!. எனக்கு முகிலன் மதியுடன், குறைந்து 5 நாட்களாவது இருக்க வேண்டும். சரிங்களா?” என்று சற்று நிறுத்தி,

 

“நாளையே நான் போகலாமா?” என்று சிம்ம இளவரசர் சாரங்கனின் கைகளைப் பிடித்து கேட்பதுப் போல் துருவனின் இரு கரங்களையும் பிடித்து, கண்ணில் ஒளியுடன் கேட்டாள்.

 

முயல் குட்டிப் போல அழகுடன்(cute) கொஞ்சி தன்னிடம் பேசும் வன்னியை பார்த்து சின்ன சிரிப்பை உதிர்த்தான் துருவன்.  அவள் தலையை மீண்டும் வருடி, “நிச்சயம் இள…ம்க்கும்… தூதுவரே!” என்றான்.

 

வன்னி கிளுக்கி சிரித்தாள். பின், “அப்போது தான் ஓய்வெடுக்கச் செல்கிறேன். அதிகாலையிலே அனைத்தையும் பரிசோதனைக்கு எல்லாம் ஏற்பாடு செய்யுங்கள் இளவரசே! அப்போதுதான் நான் மாலையே அவர்களை பார்க்க முடியும்.” என்றாள் வன்னி.

 

பதிலுக்கு துருவன் எதுவும் சொல்லும் முன்னே, துள்ளலுடன், “ஐ… நாளையே என் தோழர்களைப் பார்க்க போகிறேன். “ என்று முனுமுனுத்துக் கொண்டு அவளறைக்கு சென்றுவிட்டாள்.

 

வன்னி சென்ற திக்கையே  புன்னகையுடன் பார்த்த துருவன் உடனே முகம் சுருங்கி, ‘தன் உடல் நிலையைப் பற்றியும் கவலையில்லாமல், அப்படி என்ன வேலை வசுவுக்கு. எங்கு போனாள் அவள்?’ என்று கோபமுற்றான்.

 

உடனே அருகிலிருந்த காவலரிடம், “காவலரே! உடனே எங்கிருந்தாலும் தோழி வசுந்தராவை என்னை பார்க்க அழைத்து வாருங்கள்.” என்று ஆணையிட்டான்.

 

காவலர், “உத்தரவு இளவரசே!” என்று அங்கிருந்து சட்டென கிளம்பினார்.

 

துருவன் அவனது கல்வியறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து வசுந்தராவிற்கு காத்திருந்தான். ஆனால் அங்கு வந்தது வசுந்தரா அல்ல. அவனது குரு இமயன்.

 

இந்நேரத்தில் தன் குருவை எதிர் பாராத துருவன் சற்று தடுமாறி, “குருவே! வ…வணக்கம்.” என்றான்.

 

இமயன், “வணக்கம் இளவரசே! இது வசுந்தராவின் இதயவேர் இரத்தம்.” என்று ஒரு கண்ணாடி குப்பியை துருவனிடம் கொடுத்தார்.

 

துருவன் புரியாமல் கேள்வியாக, “குருவே!?” என்று இமயனை பார்த்தார்.

 

எதுவும் பேசாமல், “வசுந்தராவிற்கு, நான் வேறுவேலை கொடுத்திருக்கிறேன். அதனால் அவளால் இப்போது வரவியலவில்லை இளவரசே!” என்றான்.

 

துருவன் ஒரு நொடி வாயடைத்து போனான். ‘இவ்வளவு காலம் வசுந்தராவும் நானும் ஒருவரை ஒருவர் பார்ப்பதைத் தடுப்பது எங்கள் குருதானா?’ என்று சந்தேகம் வந்து மறைந்தது.

 

இருந்தும் எதுவும் சொல்லாமல், “நன்றி குருவே!.” என்றவன் அந்த இரத்தத்தை தன் கைக்காப்பின் பணியகத்தில் வைத்தான். பின் அன்று வன்னி குணப்படுத்திய வித்ததை சில நிமிடங்கள் சொல்லிவிட்டு, தன் அறைக்குச் சென்றுவிட்டான் துருவன்.

 

அடுத்த நாள் காலை துருவன் சொன்னபடி எல்லாம் ஒரு அறையில் தயார் செய்து, அவளையும் அழைத்துச் செல்ல காவலர்கள் அவளறைக்கு வெளியில் காத்திருந்தனர்.

 

துருவன் முன்தினம் என்ன செய்தான் என்றோ, வசுந்தரா எப்படி துருவனிடம் இரத்தம் கொடுத்தாள் என்றோ வன்னி அறியவாள் இல்லை. வன்னி அடுத்து நிகழவிருக்கும் துன்பம் உணராமல் அந்த இரத்தத்தை சோதனை செய்ய ஆரம்பித்தாள்.

 

பரிசோதனை ஆரம்பித்தப்பிறகு தொடர்ந்து செய்ய வேண்டிய விவரங்களை மகர அரசின் மருத்துவ குழுவிடம் கைமாற்றி கொடுத்துவிட்டு அவளறைக்கு வந்தாள் வன்னி.

 

மாலை நேரத்தில் அவள் தோழர்களை காண ஏற்பாடு செய்திருப்பதாக துருவன் வன்னிக்கு தகவல் அளித்திருந்தான். அதனால்  அதுவரை தியானம் செய்ய நினைத்து, பத்மாசன நிலையில் தரையில் அமர்ந்து தியானிக்கலானாள்.

 

தியானம் முடிந்து கண் விழித்தப் போது வன்னி திகிலடைந்தாள். கண் எட்டும் வரை மை இருட்டு. அவளிருந்த இடத்திலிருந்து எழுந்து, “சேவகர்களே!” என்று அழைத்தாள்.

 

பதில் வராமல் போக தன் கைக்காப்பிலிருந்து தன் புல்லாங்குழலை கையில் எடுத்தாள். கண் மூடி கவனிக்கும் சக்கரத்தை ஏற்படுத்தி சுற்றம் அறிய முற்பட்டாள். இருந்தும் அவளுக்கு தெரிந்ததெல்லாம் கருப்பு மட்டுமே.

 

லேசாக உள்ளத்தில், குளிர் பரவ உதட்டில் புல்லாங்குழலை வைத்து தன் ஆன்மீக ஆற்றலை செலுத்தி தன்னை சுற்றி பாதுகாப்பு சக்கரமிட முற்பட்டாள்.

 

ஆனால் புல்லாங்குழலில் இசை வந்ததே தவிர அவளது உடலிலிருந்து ஆன்மீக ஆற்றலை இயக்க முடியவில்லை. நெற்றி வியர்க்க உதடிலிருந்து புல்லாங்குழலை எடுத்த வன்னி, “கனவுச் சக்கரம்…” என்று முனுமுனுத்தாள்.

 

அப்படி சொல்லி முடிக்கும் முன்னே, ”ஹா…ஹா…ஹா… பரவாயில்லையே! இந்த 5 வருடத்தில் பரி இளவரசி, சமயோஜித சிந்தனையுடன் யோசிக்க ஆரம்பித்திருப்பது போல் இருக்கிறதே! சட்டென கனவுச் சக்கரத்தினுள் இருப்பதை உடனே கண்டுபிடித்துவிட்டாய்.” என்ற ஆண் குரல் கேட்டது.

 

அந்த குரலை கேட்டதும், வன்னியின் அடிவயிற்றில் குரல் பரவியது. ‘தன் வெள்ளி எலும்பு இரகசியம் அறிந்தவனது குரல் அது. இதே போல் மாதங்க அரசில் கனவுச் சக்கரத்தில் என்னிடம் பேசியவன்.’ என்று உடனே அறிந்தாள்.

 

“யார் நீ? எதற்கு என்னை கனவுச் சக்கரத்தில் இழுத்தாய். என்ன வேண்டும் உனக்கு.?” என்றாள் லேசான குரல் நடுக்கத்துடன்.

 

வன்னியின் கேள்வியில், “ம்ம்?” , “எனக்கா?”… “எனக்கென்ன வேண்டும்.?”… “என்ன கேட்டாலும் செய்வாயா?” என்று நிறுத்தி நிறுத்தி வார்த்தைக்கு வார்த்தை யோசிப்பவன் போல அவனது குரல் ஒலித்தது.

 

மனதுள் ஏதோ நெருட, “யாருக்கும் தீங்கிழைக்காத எதுவென்றாலும், என்னால் முடிந்தால் செய்வேன்.” என்றாள் வன்னி.

 

“ஒ…ஹோ…” என்று மேலும் அந்த குரல் பேசுமுன்னே வன்னி, “ஆனால் அதற்கு முன் நீ யார்? என்பதை எனக்கு சொல்ல வேண்டும்.” என்று கேட்டாள்.

 

“ஹா…ஹா…ஹா… என் குரலிலே நான் உன்னைவிடவும் பெரியன் என்று தெரியும். ஆனால் சிறிதும் எனக்கு சிறிதும் மரியாதை கொடுக்கும் எண்ணம் இல்லைப்  போல் இருக்கவில்லையே. ம்ம்… பரவாயில்லை.” என்று சோகமாக போல் குரல் தாழ்த்தி சொன்னான்.

 

அதை கேட்ட வன்னி முகம் சுழித்தாள். தன்னால் இந்த கனவுச் சக்கரத்திலிருந்து வெளியில் செல்ல இயலாதபோதே, வந்திருப்பவன் அதிக சக்தி வாய்ந்தவன் என்பதை நன்கு உணர்ந்திருந்தாள்.

 

அதனால் எதுவும் அநாவசியமாக பதில் அளிக்காமல், எச்சரிக்கையாக இங்கும் அங்கும் பார்த்தவிதம் நின்றிருந்தாள் வன்னி. அவள் எதுவும் பதில் பேசமாட்டாள் என்பதை உணர்ந்தானோ என்னமோ, அந்த குரல் தொடர்ந்து பேசியது.

 

“சரி… எனக்கு எதுவும் வேண்டாம். நான் உனக்கு உதவி செய்யவே இங்கு நீ இருப்பதை அறிந்ததும் வந்தேன்.” என்றான்.

 

“என்னிடம் உண்மை அடையாளத்தை காண்பிக்க தைரியபடாத தங்களுடையதை உதவிதான் என்று நான் நம்புவது. அதுவும் நேரே வந்து சொல்லாமல், இப்படி என்னை கனவுச் சக்கரத்தில் கட்டிப்போட்டு பேசிபவரை என்னவென்று நான் நினைப்பது.” என்றாள் மிடுக்குடன்.

 

“நேற்றும் இன்றும், விடலைப்பெண்ணாக துள்ளி குதித்துக் கொண்டிருந்தாய். இளவரஸி! என்னிடம் பேசும் இப்போது பேசும் போதும் வேறு ஆள் போல தோன்றுகிறதே!” என்று சற்று நிறுத்திய அந்த குரல்,

 

“எனக்கு மாதங்க அரசின் படைத்தளபதி கரணியன் இருக்கும் இடம் தெரியும். அதனை சொல்லி அவரை இளவரசி கண்டுபிடிக்க உதவலாம் என்று பார்த்தேன். ஆனால் இளவரசிக்குதான் என் உதவி அவசியமில்லை போல இருக்கிறதே!” என்று பாசங்குடன் பேசினான்.

 

இதை கேட்தும்ட வன்னியின் இதயம் படப்படத்தது. “படைத்தளபதியை என்ன செய்தாய்.?” என்று கொஞ்ச நஞ்ச் குழந்தைதனமும் மறைந்து கண்ணில் சிவப்பு தெரிய கேட்டாள்.

 

வன்னிக்கு, ‘இந்த குரலுக்கு சொந்தமானவன்தான் மாதங்க அரசின் படைத்தளபதி கரணியன் கொன்றவனாக இருப்பானோ!’ என்று எப்போதுமே இருந்தது.

 

அதனோடு, ‘தன்னை காக்கவென்று வந்தாலே கரணியன் காணமல் போனார்.’ என்று வன்னிக்கு குற்ற உணர்ச்சி கடந்த 5 வருடமாகவே இருந்துக் கொண்டிருந்தது. அதனாலே அவளையும் அறியாமல் ஆவேசமாக அந்த குரலிடம் கத்தினாள்.

 

“அச்சச்சோ… இளவரசிக்கு என்ன கோபம். அவரை நான் என்ன செய்யவியலும். ஆனால் இளவரசி இன்று இரவுக்குள் விராட்டு மலைக்கு போகவில்லையென்றால், கரணியனுக்கு ஏதேனும் நிகழலாம்.” என்றான் பொய்யான அக்கறையுடன்.

 

வன்னி கோபமாக பதிலுக்குப் பேசுமுன்னே கனவுச் சக்கரம் கலைந்து , வன்னி நிகழ்காலத்திற்கு வந்துவிட்டாள். ஆனால் முகமெல்லாம் சிவந்து பற்கலால் தன் உதடை கடித்துக் கொண்டு, தன் இயலாமையை நினைத்து கோபத்தில் நடுங்கினாள்.