யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 61

822

அத்தியாயம் – 61

இவர்கள் அனைவரையும் விசாரித்ததில், பொதுவில் இவர்கள் நோய் அறிகுறி படுமுன்பு செய்த ஒரு செயல், விராட்டு மலைக்குச் சென்றதுதான்.

“விராட்டு மலையா? எங்கிருக்கிறது அந்த மலை? அங்கு அப்படி என்ன செய்ததால் இப்படி ஒரு பிணி(decease) ஒருவருக்கு வந்திருக்கும்.” என்று ஆர்வம் மேலிட வன்னி கேட்டாள்.

“தூதுவரே! உண்மையில் விராட்டு மலையை, மலை என்பதைவிட மலை தொடர் என்று சொல்வதே உசிதமாகும். ஏழு மலைகள் ஒன்றை அடுத்து மற்றொன்றாக நேர் கோட்டில் நிலப்பரப்பின் எல்லை வரை நீண்டு பரவி இருக்கிறது.

ஏழாவது மலைக்குப் பின், அதன் அடிவாரத்தில் கடலோடு முடியும் என்று நான் அந்த மலையைப் பற்றி படித்ததிலும், என் குருவின் அனுபவ அறிவிலும் தெரிந்துக் கொண்டேன்.” என்றான் துருவன்.

“ஓ…” என்று விழி விரித்தவள், மனதுள், ‘ஏழு மலைகள் அடங்கிய மலை தொடரா!’ என்று எதையோ நினைவு கூர்ந்த வன்னி, “இளவரசே! உங்களுக்கு அந்த மலைப்பற்றியும், அந்த பிணிப் பற்றியும் தெரிந்தவற்றை சொல்ல முடியுமா?” என்றாள்.

துருவன் புன்னகைத்து, “நிச்சயமாக.” என்றவன் தொடர்ந்து பேச ஆரம்பித்தான். “முதல் சக்கரம் கூட அடையாவதவர்கள், விராட்டு மலைத் தொடரின் முதல் மலைக்கு மட்டுமே போக முடியும்.

முதல் மலையை கடந்து இரண்டாவது மலைக்குச் செல்ல முடியாது. அதே போல, ஆறு சக்கரங்கள் அடைந்தவர்களால் மட்டுமே விராட்டு மலைத் தொடரின் ஏழாவது மலையின் எல்லையை கடக்க முடியும்.

இது வரை, மகர அரசில் என் குரு இமயர் மட்டுமே ஆறு மலைகளையும் கடந்து ஏழாவது மலையின் ஒரு முனை அடிவாரத்தை அடைந்திருக்கிறார். ஆனால் அவருமே, விராட்டு மலையின் உச்சியை அடைந்து அடுத்த எல்லைக்குச் சென்றதில்லை.

உண்மையில், அந்த ஏழாவது மலையின் அடுத்த எல்லையில் புத்தகத்தில் இருப்பதுப் போல் கடல்தான் இருக்கிறதா? அல்லது கடலுக்கும் ஏழாவது மலைக்கும் இடையில் வேறு ஏதேனும் இருக்கிறதா? என்று அறிவர் எவருமில்லை.

ஒருவேளை நம் பேரரசர் விக்ரமர் விரும்பினால், அவரால் அதனை கடக்க முடியும் என்று நினைக்கிறேன். இப்போது யாளி உலகில் ஏழு சக்கரமும் முடிந்து சஞ்சீவ நிலை அடைந்த ஒரே யாளி அவர் மட்டும்தான்.

ஆனால் சஞ்சீவ நிலை அடைந்த அவர் நம்மைபோல தவம் புரியவோ அல்லது மூலிகை எடுத்து வரவென்றூ அங்கு போக வேண்டிய அவசியமும் இல்லைதான். ஒரு வேளை இந்த பிணியின் தீவிரம் அதிகரித்தால் இராஜகுரு இமயன் பேரரசரிடம் உதவி கேட்க எண்ணியிருந்தார்.” என்றான்.

வன்னி, துருவன் மேலும் பேசுமுன், “இளவரசே! அந்த விராட்டு மலையில் அபரீவிதமான சக்தி நிறைந்திருக்குமா? தவம் செய்ய என்றுதான் அங்கு யாளிகளுக்கு மட்டும்தான் இந்த பிணி வந்ததா? அல்லது மற்ற வகையாளிகளுக்கும் இந்த பிணி வந்திருப்பதற்கான அறிக்கை எதுவும் இருக்கிறதா?” என்று கேள்வி மேல் கேள்வியாக கேட்டாள்.

துருவன் வன்னியின் ஆர்வுமுடனான கேள்வியில் சின்ன சிரிப்பை உதிர்த்து, “தூதுவர் வன்னி. உண்மைதான், அந்த மலையில் அதிக ஆன்மிக சக்தி இருக்கிறது. அங்கு சென்றவர்கள் பலரின் நோக்கம் தவம் செய்வதுதான்.

ஆனால் சில மனித யாளிகள் பல வித மூலிகைகள் பறித்து அதனை வாணிகம் செய்வர். சிலர் அவர்களின் சொந்த தேவைக்காகவும் மூலிகை பறித்து வருவர். இருந்த போதும், இந்த மனித யாளிகளுக்கு எதுவும் நேர்ந்தது இல்லை.

பொதுவில் மகர அரசின் தென் எல்லையில் இருப்பதால், மனித யாளிகள் மற்றும் மகர யாளிகள் தவிர வேறு யாரும் இங்கு வந்ததில்லை. அதனால் இது வரை மகர யாளிகளுக்கு மட்டுமே இந்த பிணி அறியப்பட்டுள்ளது.

இந்த மலையில் சிறப்பு என்னவென்றால், இந்த மலையில் தவம் செய்தால்,அவரவர் சக்தி உறிஞ்சும் தன்மைக்கு ஏற்ப, தவம் செய்போரின் உடலில் சீரான விதத்தில், ஆன்மீக சக்தியாக சேரும்.

இதனால் அதிக ஆன்மீக ஆற்றல் உறிஞ்சப்பட்டு நரம்பு புடைந்து காயம் ஏற்படும் என்ற பயமில்லாமல் யாரும் தவம் புரியலாம். இந்த மலைக்குள் சென்றவர்களுள், சிலர் நூற்று கணக்கான வருடங்கள் முடிந்தும், வெளியில் வராமல் தவத்திலே இருந்திருக்கின்றனர் என்று என் குரு சொன்னார்.

பிணி ஏற்பட காரணம் அறிந்துவர விராட்டு மலைக்கு மகர அரசின் சார்பில் ஆறு வருடத்திற்க்கு முன்பு ஒரு குழு அனுப்பப்பட்டது. ஆனால் அவர்களால் எதுவும் கண்டறிய முடியவில்லை.

அதிசயபடும் விதமாக அப்படி ஆராய்ந்துவிட்டு வரச் சென்ற யாருக்கும் இந்த இதயவேர் புற்று நோய் உண்டாகவில்லை. இந்த நோயின் சரியான காரணம் அறியப்பட முடியாததால், கடந்த ஐந்து வருடமாக யாரும் புதிதாக விராட்டு மலைச் செல்ல மகர அரசின் சார்பில் தடை விதித்திருக்கிறோம்.

இருந்தும் ஏற்கனவே உள்ளே போனவர்களை வெளியில் வரவழைப்பது முடியாத செயலாகி போனது. அதனால் அவர்கள் தானாக வெளியில் வரும் வரை நம்மால் எதுவும் செய்ய முடியாது. அப்படி வெளியில் வருபவர்களுக்கு ஒருமுறை ஆன்மீக இதயவேர் புற்று இருக்கிறதா? என்று மட்டும்தான் பரிசோதிக்க முடிந்தது.

நானும் ஒருமுறை விராட்டு மலைச் சென்று ஏதேனும் கண்டறிய முடிகிறதா என்று அறிந்து வர எண்ணினேன். ஆனால் ஒருசேர என் தந்தையும் அன்னையும் என்னை அனுமதிக்கவில்லை.

அதனால் எனக்கு விராட்டு மலைக் குறித்து தெரிந்தது புத்தக அறிவும், என் குருவின் மூலம் அறிந்த அவரது அனுபவ அறிவும் தான்.” என்று நீண்ட நெடிய விளக்கமாகச் சொல்லி பெருமூச்சுவிட்டான்.

வன்னி, துருவன் சொன்னதை சுவாரசியமாக கேட்டு வந்தாள். அவன் சொன்ன விளக்கத்தில், விராட்டு மலையும் தன் மருத்துவ குரு கௌரி சொன்ன ஏழு சக்கர மலையும் ஒன்றென்பதை உணர்ந்தாள்.

‘அந்த ஏழு சக்கர மலையின் சிறப்பு, அங்கு வீசும் மூலிகைக் காற்று அங்குள்ள அபரீவிதமான ஆன்மீக சக்தியை, ஒரு யாளியின் சக்கர நிலைக்கு ஏற்ப சீராக்கி அவர்கள் உடலில் உறிஞ்ச ஏதுவான இதமான பதத்தில் தவம் புரிபவரின் உடலில் சேர்க்கும்.

அதனாலே மாதங்க அரசில் உள்ள பனிமலைப் போலல்லாமல், இந்த விராட்டு மலை தொடரில் தவம் செய்யவும் முடிகிறது. அதனால் அடையும் பலனும் மற்ற இடங்களை விடவும் அதிகமாக இருக்கும். ஆனால் என்ன காரணமோ! அந்த மலைக்குச் செல்லவதை, மகர அரசு கடந்த 5 வருடமாக தடைச் செய்துள்ளது.’ என்றே கௌரி சொன்னார்.

இது வன்னிக்கு நினைவு வந்த போதும், இதனை விளக்கமாக துருவனிடம் சொல்லவில்லை. தன் குரு சந்திரருக்கு மகர அரசின் இந்த நோய் பற்றி தெரிந்திருந்த போதும், தன் மருத்துவ குரு கௌரி இது குறித்து எதுவும் தெரியாமலிருப்பதிலே இந்த நோய் குறித்து மற்றவர்களிடம் பேச மகர அரசு விரும்பவில்லை என்பதை வன்னி உணர்ந்தாள்.

இருந்தும் எதுவும் அது குறித்து பேசாமல், “புரிகிறது இளவரசே! நாம் முதலில் ஏற்கனவே இந்த பிணியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நான் கொண்டு வந்த மருந்து முழுதும் குணப்படுத்துமா? என்று பரிசோதித்து பார்ப்போம்.

பிறகு மீண்டும் மகர அரசரரசியிடம் விராட்டு மலைச் செல்ல அனுமதி கேட்டு பார்ப்போம். முடிந்தால் நானும் தங்களுடன் வர முடிகிறதா என்று பார்கிறேன் இளவரசே!” என்று துருவனை பார்த்து கண்கள் சிமிட்டி புன்னகைத்தாள்.

வன்னியின் இந்த செயலில், துருவனுக்கு மனம் இளகியது. தன் தந்தை முன்பு இது போல் ஒரு மகள் என்று சொன்னது நினைவு வர, ‘உண்மைதான் இப்படி ஒரு தங்கை எனக்கு இருந்தால் அருமையாகதான் இருந்திருக்கும்.’ என்று எண்ணினான்.

அவனையும் அறியாமல் அவன் இதழில் புன்னகை மலர்ந்தது. அவள் தலை வருடி, “சரிமா. அப்படியே செய்வோம். சரி இப்போது நோயுற்றவர்களை பார்க்க போகலாம். அனைவரையும் ஒரே அறைக்கு வந்துச் சேர ஏற்கனவே என் தந்தை ஆணையிட்டு இருந்தார்.

அதனால் அனேகமாக அவர்கள் அனைவரும், தங்களுக்காக காத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். மற்றது பிறகு பேசலாம்.” என்று வன்னியின் கைப்பற்றி அவளை வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

வன்னி, துருவன் தீடீரென்று தன் தலை வருடுவான் என்றும் எண்ணவெல்லை. கைப்பற்றி அழைத்து செல்வான் என்றும் எண்ணவில்லை. அதனால் ஒரு நொடி புரியாமல் அவனுடன் நடந்தவிதமாக துருவன் தலை வருடிய இடத்தை ஒருமுறை தொட்டு பார்த்தாள்.

பின், ‘என் பெற்றோர்களை போல, மகர அரசர் அரசி மட்டுமல்ல, துருவனும் என்னை மகள் போல எண்ணுகிறார் போலும். அன்பாக என் தலை வருடுவது நன்றாகதான் இருக்கிறது.’ என்று நினைத்து புன்னகைத்தாள்.

கூடவே, “ம்ம்கும்.” என்று தனக்குத்தானே மறுப்பாகத் தலையசைத்துக் கொண்டு, ‘இல்லை இல்லை. மகர அரசரரசி என்னை மகளாக எண்ணினால், இளவரசர் துருவன் என் சகோதரனாக அல்லாவா இருக்க முடியும்.

இப்படி ஒரு தமையன்(elder brother) இருப்பது அருமையாகத் தான் இருக்கிறது.’ என்று அவளுக்கு அவளே எண்ணிக் கொண்டு கிளுக்கிச் சிரித்தவிதமாக உடன் நடந்தாள். அதன் பிறகு இருவரும் எதுவும் பேசிக் கொள்ளாமல் நோயாளிகள் இருந்த அறையை நோக்கி நடந்தனர்.

வன்னியும், துருவனும், உடன் இரு சேவகர்களும், இரு மகர காவலர்களும், நிழல்போல பரி அரசிலிருந்து வந்த வன்னியின் இரு நிழற்காவலர்களும், பிணியால் பாதிக்கப்பட்ட மகர யாளிகள் கூடியிருந்த அறையை அடைந்தனர்.

வன்னி வருவதற்காகவே காத்திருந்த, பாதிக்கப்பட்ட மகரயாளிகள், வன்னியின் சின்ன உருவத்தை பார்த்து சற்று ஏமாந்துதான் போனார்கள் போலும். சிலரின் முகம் அவர்களின் திருப்தியின்மையையும், நம்பிக்கையின்மையையும், முகத்திலே காண்பித்துவிட்டது.

என்னதான் தோற்ற வயதை குறைத்தோ கூட்டியோ ஒரு யாளியால் தங்களை காண்பித்துக் கொள்ள முடியுமென்ற போதும், அவர்கள் குறைந்தது 25 எலும்பு வயதாவது அடைந்திருக்க வேண்டும்.

அப்போதுதான் அவர்களால் அவர்களின் தோற்றத்தை விரும்பியப்படி மாற்றிக் கொள்ள முடியும். அப்படி மாற்ற முடிந்த போதும், 20 வயதிற்கும் குறைந்த வயதில் உள்ளபடி அவர்களால், தோற்ற வயதை மாற்றிக் கொள்ள முடியாது.

வெகு சிலராலே அப்படி சிறுவயதுப் போல தோற்ற வயதை மாற்றிக் கொள்ள முடியும். அதனோடு பொதுவில் யாரும் தங்களை சிறுவனாகவோ அல்லது சிறுமியாகவோ தோற்ற வயதை மாற்றிக் கொள்ள நினைக்க மாட்டார்கள்.

அப்படி இருக்க இங்கு அவர்கள் எதிரில் வந்து நிற்கும் வன்னி, நிச்சயம் முழுதும் பருவ நிலையை கூட கடக்காத சிறுமி. இந்த சிறுமி ஓரிரு பத்து வருடங்களில் இறக்க இருக்கும் தங்களின் பிணி தீர்க்க வந்திருக்கிறாள் என்றால் எப்படி நம்புவது.

“வணக்கம் இளவரசே!” என்ற அனைவரும், வன்னியின் தோற்றத்தில் அவளை பார்த்ததும், வணக்கம் கூட சொல்ல தோன்றாமல் அவர்ளுக்குள்ளே சலசலவென பேச ஆரம்பித்தனர். இதனை பார்த்த துருவனின் நெற்றி சினத்தில் சுருங்கியது.

“ம்க்கும்.” என்று தன் தொண்டையை கனைத்து அனைவரின் கவனத்தை ஈர்த்த துருவன் அவனாக வன்னியை அறிமுகம் செய்தான். “மகர யாளி தோழர்களே! இவர், பரி தூதுவர், வன்னி. தங்களின் பிணி தீர்க்க மருந்துடன் பரி அரசிலிருந்து வந்திருக்கிறார்.” என்றான்.

அதுவரை அவர்களுக்குள்ளே பேசிக்கொண்டிருந்தவர்கள், துருவனின் வார்த்தைகளில், இதற்கு மேலும் பொறுக்க முடியாமல் அவர்களின் அதிருப்தியை வார்த்தைகளிலும் காட்ட தொடங்கினர்.

அங்கிருந்த மகரர்களுள் ஒருவன், “இளவரசே! தவறாக எண்ண வேண்டாம். மருந்து கண்டறிய முடியவில்லையென்றாலும் பரவாயில்லை. எங்களை மருந்து, வேலை செய்கிறதா? என்று பரிசோதிக்க பயன்படும் சோதனை எலியாக்க வேண்டாம்.” என்றான்.

மற்றொருவன், “ஒரு சிறுமியை கொணர்ந்து, அவள்தான் மருந்தை கண்டு பிடித்தாள் என்று சொன்னால் எப்படி நம்பி அந்த மருந்தை எடுத்துக் கொள்வது?” என்றான்.

வன்னி, அறை நுழைந்ததும், எத்தனை நபர்கள் இருக்கின்றனர் என்றும், அவர்களின் சக்கர நிலைகளையும், தன் சக்தியால் ஆராய்ந்துக் கொண்டிருந்தாள். அதனால் அறையில் உள்ளவர்கள் தனக்கு வணக்கமும் சொல்லவில்லை என்பதை உணரவில்லை.

ஆனால் திடீரென்று ஒருவர், சோதனை எலி என்று சொல்வதை கேட்டதும், அவள் முகம் சுருங்கி கருத்தது. துருவன், வன்னியின் வாடிய முகத்தை பார்த்து, அவன் முகம் கோபத்தில் சிவந்தது.

அவன் நெற்றி சுருக்கி கேள்வி கேட்ட இருவரை கோபம் கனன்ற விழியில் பார்த்தான். துருவன் அப்படி சினம் கொள்ளக் கூடும் என்று எதிர் பாராத அந்த மகரர்கள், வாய் மூடி அமைதியாக இருக்கையில் அமர்ந்து, தலைத் தாழ்த்திக் கொண்டனர்.

சோதனை எலியா என்று கேள்வி கேட்ட மகர யாளி, சுமார் 800 எலும்பு வயதை அடைந்து, முன்பு ஏற்கனவே 3 சக்கர நிலையை அடைந்தவர். ஆனால் நோயின் பாதிப்பால் அவரது சக்கர நிலை பாதிக்கபட்டு, சில வருடங்களிலே, முதல் சக்கர நிலைக்கு குறைந்துவிட்டிருந்தார்.

பொதுவாக ஒரு சக்கர நிலை அடைந்த யாளியால் 1000 வருடம், யாளி உலகில் உயிர் வாழ முடியும். அதே போல், 2 சக்கர நிலை அடைந்தவர்களால் 2000 வருடம், என ஒவ்வொரு சக்கர நிலை அடையும் போதும் ஓராயிரம் வருடம் அதிகமாக அவர்களின் வாழ் நாள் அதிகரிக்கும்.

இவ்வாறு ஏழு முழு சக்கர நிலையை 6000 வருடங்களுள் ஒரு யாளி அடைந்துவிட்டால், அவரால் சாவற்ற சஞ்சீவ நிலையை அடைய முடியும். பேரரசர் விக்ரமனும், பனி மலைக்கு வந்த வானதியும் சஞ்சீவ நிலை அடைந்த யாளிகள்.

இப்படியாக 3 சக்கர நிலையுடன் விராட்டு மலையிலிருந்து வந்த அந்த மகரரர், ஈராயிரம் வருடம் உயிர் வாழ இருப்பதாலும் 3 வது சக்கர நிலைக்கு மேல் இருப்பதாலும், எளிதில் மகர அரசில் பணிப்பெற்று, மகிழ்வுடன் வாழலாம் என்ற கனவுடன் நாட்டுக்குள் வந்தார்.

ஆனால் வெளியில் வந்ததும், அவர் இதய வேர் புற்றால் பாதிக்கப்பட்டிருப்பதை மகர அரசின் மருத்துவ குழு, உறுதி படுத்தினர். முதலில் நம்பாமல் அசட்டையாக இருந்த அவர், ஒவ்வொரு வருடமும் தன் உடலின் ஆன்மீக சக்தியை உறிஞ்சும் சக்தி மெதுவாக குறைந்து, கடந்த 6 வருடத்திலே 3வது சக்கர நிலையிலிருந்து முதல் சக்கர நிலைக்கு குறைந்துவிட்டார்.

விரைவிலே மகர அரசு இந்த பிணிக்கு மருந்து கண்டுப்பிடித்துவிடும் என்று நம்பியிருந்தவர், ஒரு மகர யாளி, இந்த பிணியால் ஒர் மாதத்திற்கு முன்பு இதய வேர் முழுதும் புற்றால் அழிந்து, ஆயிட்காலமும் முடிந்து, மடிந்ததை நேரில் பார்த்த பின் முற்றிலும் தன்னம்பிக்கையற்று இறப்பை எதிர் நோக்கி இருந்தார்.

அவர் மட்டுமல்லாமல் அவரது நிலை போல மற்ற மகர யாளிகளுமே நம்பிக்கையற்று, அவர்களின் தோற்ற வயதை இளமையாக காட்டிக் கொள்ளவும் ஆன்மீக சக்தியை வீணாக்கி விடாமல், வயதான தோற்றத்திலே இருந்தனர்.

இப்படியாக விரக்தியோடு நாட்களை கடத்தியிருந்தவர்களின் உள்ளத்தில் பாலைவனத்தில் நீர் வீழ்ச்சியை பார்த்தது போல, பரி அரசிலிருந்து மருந்தை கண்டுபிடித்த பரியாளியே, மருந்துடன் பரி தூதுவராக மகர அரசுக்கு வரவிருக்கும் செய்தி அமிர்தமாக வந்து சேர்ந்தது.

‘அதனை கேட்டதும் கொஞ்சம் நம்பிக்கை துளிர்க்க ஆர்வமாக பரி தூதுவரை எண்ணி இங்கு காத்திருந்தால், எதிரில் வந்து நின்றிருப்பது 15 வயது கூட நிரம்பாத சிறுமி.

சொல்லப்போனால் இந்த நோய் முதலில் கண்டுப்பிடிக்கப்பட்டதா? அல்லது இந்த சிறுமி முதலில் பிறந்தாளா?’ என்று கேலியாக அவர்களுக்குள் பேசிக் கொள்ளும் அளவு, வன்னியின் கள்ளமற்ற விழிகளை பார்த்து, அங்கிருந்த யாராலுமே பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

துருவன் கோபமுடன் கேள்விகள் கேட்ட மகரர்களைத் திட்டுமுன்னே, அப்போது, “மகர யாளி தோழரே! அப்படி சோதனை எலியாக இருந்தாலும்தான் என்ன? சிறுமி என்பதற்கும், அவரது திறமைக்கும் என்ன தொடர்பு?” என்று கேட்டுக் கொண்டு அந்த அறைக்கு வந்தாள் வசுந்தரா.

வசுந்தராவை பார்த்ததும் துருவனின் சினமுடனான முகம், பனியை போல உருகி இயல்பானது. 24 தோற்ற வயதுடனும், 2 சக்கர சக்தி நிலையுடனும் பெண்மையின் மென்மையுடனும், எதையும் சாதிக்க முடியும் என்ற கம்பீரத்துடனும், இடுப்பில் நீல நிற வளரியுடனும்(1) நடந்து வந்து துருவன் மற்றும் வன்னியின் முன் நின்றாள் வசுந்தரா.

வன்னியின் வருகை அறிந்ததும், பிணியுற்றவர்களின் வயதைப் பொறுத்து, ஒவ்வொருவராகதான் குணப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் என்று துருவன் எண்ணியிருந்தான்.

அதனால் இருப்பவர்களிலே மிகவும் வயதில் சிறியவளான வசுந்தரா இன்று அவளது பணியிலிருந்து திரும்பி மகர அரசுக்கு நோயை குணபடுத்திக் கொள்ள வந்திருக்க வாய்ப்பில்லை என்று அசட்டையாக இருந்தான்.

ஆனால், தன் அன்னை பிணியால்பாதிக்கப்பட்ட, அனைத்து மகர யாளிகளையும் வன்னியிடம் இன்றே காண்பிக்க ஆணையிட்டிருப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. இன்று தலைமை மந்திரியிடம் வேறு வேலையாக பேசிக் கொண்டிருக்கும் போதுதான் தன் அன்னையின் ஆணை துருவனுக்கு தெரிந்தது.

அது தெரிந்ததும், உடனே வன்னியுடன் செல்ல நினைத்து அவள் சென்ற திசை நோக்கி திரும்பிய போது, காவலர் ஒருவர் அவனை நோக்கி மூச்சு வாங்க வந்து, மருத்துவ மந்திரி வன்னியிடம் மரியாதையற்று பேசிய பேச்சை துருவனிடம் சொன்னார்.

துருவனின் அருகில் இருந்த, தலைமை மந்திரியும் அந்த காவலரின் வார்த்தைகளை கேட்டார். உடனே நெற்றி யோசனையில் சுருங்கமருத்துவ மந்திரியை பற்றி துருவனிடம் சொன்னர்.

அவரின் வார்த்தைகளில் மருத்துவ மந்திரியின் அதிருப்தியின்மையின் காரணம் அறிந்து, உடனே அவருக்கு பாடம் கற்பிக்கும் எண்ணமுடன், வன்னியிடம் வந்து சேர்ந்தான்.

மருத்துவ மந்திரிக்கு பாடம் கற்பிக்க என்ற போர்வையில், வசுந்தராவை ஒருவேளை காண நேரலாம் என்ற நப்பாசையுடனும்தான் வன்னியுடன் வந்தான். ஆனால் அறையில் வந்ததுமே வசுந்தராவை துருவனின் கண்கள் தேடி, காணாமல் சோர்ந்திருந்தது.

ஏற்கனவே வசுந்தராவை காண முடியவில்லை என்ற கடுப்பில் இருந்தவன், வன்னியை ஏளனமாக பேசிய பிணியுற்ற மகரர்களின் வார்த்தைகளில் இன்னும் சினமுற்று அவர்களைத் திட்டிவிடவே வாயை திறந்தான்.

ஆனால் தக்க சமயத்தில், வசுந்தரா அந்த அறைக்கு வர எரிச்சலுற்றிருந்த துருவனின் முகம் உடனே மாறியது. வசுந்தரா, துருவனை போல இராஜகுருவின் கீழே பயிலும் பல சீடர் தோழர்களுள் ஒருவள்.

வசுந்தரா அவளது 7வது வயதில் மகர அரசின் இராஜகுருவின் கீழ் பயில என்று, மகர அரசின் குருகுலத்திற்கு இமயனே அழைத்து வந்தார். அவளது பெற்றோர்கள் பற்றிய நினைவில்லாமல் வந்த வசுந்தரா, அவளது 20 வயதிலே இதய வேரை உருவாக்கிவிட்டாள்.

அதனோடல்லாமல், அவளது 100வது எலும்பு வயதிலே 3 சக்கர நிலையை அடைந்த ஒரு சில மகர யாளிகளுள் அவளும் ஒருவள். அவள் முதல் முறை இராஜகுரு இமயனிடம் அறிமுகமான அந்த நாளிலிருந்தே, துருவனுக்கு வசுந்தராவின் மீது இனம் புரியாத ஈர்ப்பு உண்டானது.

தன்னை விடவும் கிட்டத்தட்ட 300 எலும்பு வயது சிறிய மகர யாளி பெண், தன்னை, “சீடர்தோழரே! சீடர்தோழரே!” என்று சுற்றி வந்தது துருவனின் கண் முன், அவ்வப்போது வந்து அவனை புன்னகைக்க செய்யும்.

அப்படி சுற்றி வந்தவள் திடீரென்று ஒரு நாள், தவம் செய்வதற்காக விராட்டு மலைக்கு செல்ல வேண்டுமென்றாள். ஏனோ அவளை விட்டு பிரிய அப்போது துருவனின் மனம் விரும்பவில்லை. அவளுடன் செல்ல நினைத்தான்.

ஆனால் அப்போது, மகர அரசில்  பல முக்கிய பணிகள் முடிக்கபடாமல் இருக்க, அவனால் அவளுடன் செல்ல முடியவில்லை. பல அறிவுறைகள் வசுந்தராவிற்கு சொல்லி, அவளை விராட்டு மலைக்கு அனுப்பி வைத்தான் துருவன்.

அதன் பிறகு ஆள் கொல்லி பிணி, விராட்டு மலைக்கு சென்ற பலருக்கு வருவது அறிந்ததுமே பதபதைத்து, விராட்டு மலைக்கு சென்று அவளை அழைத்து வந்துவிட பல முறை முயன்றான்.

ஆனால் என்ன செய்ய! மகர அரசின் ஒரே இளவரசனாக பிறந்ததில் எத்தனை எத்தனை கடமைகளும் கட்டுபாடுகளும்தான் அவனுக்கு. என்ன மன்றாடியும் தன் தந்தையும் சரி, அன்னையும் சரி அவனை விராட்டு மலைக்கு அனுப்ப அனுமதிக்கவில்லை.

வசுந்தரா விராட்டு மலையிலிருந்து வெளியில் வரும் நாளுக்காக ஒவ்வொரு நாளும் காத்திருந்தான் துருவன். அவன் எதிர்பார்த்திருந்த நாளும் வந்தது. வசுந்தராவை 20 வருடங்களுக்கு பிறகு பார்த்த துருவன், அவனையும் அறியாமல் அவளை தன் மார்போடு அணைத்துக் கொண்டு, “வசு!” என்று அழைத்தான்.

வசுந்தராவும், ஆர்வமுடன், “சீடர் தோழரே!” என்று அழைப்பாள் என்று எண்ணியிருந்த துருவன் அப்போது ஏமாந்துதான் போனான் போலும். துருவனின் அணைப்பிலிருந்து மெதுவாக விலகி நின்று, “நான் குருவை பார்க்க செல்ல வேண்டும் இளவரசே! நாம் பிறகு பேசலாம்.” என்று அவனை திரும்பியும் பார்க்கமால் அங்கிருந்து சென்றுவிட்டாள்.

விராட்டு மலையிலிருந்து 2 வருடத்திற்கு முன்பு வந்த வசுந்தரா, துருவனை முழுதும் விலக்கி அந்நியனை போல நடத்தக் கூடுமென்று அவன் துளியும் எண்ணவில்லை.  துருவன் அடிப்பட்ட குழந்தைப் போல அங்கிருந்து விலகிச் சென்ற வசுந்தரா சென்ற பாதையைப் பார்த்து என்ன நிகழ்ந்தது என்று புரியாமல் வியந்து நின்றான்.

அதன் பிறகும் பல முறை அவளிடம் பேச முயன்ற போதும், அவள் கடந்த 2 வருடத்தில் இளவரசர் என்ற மரியாதையில் பேசினாளே ஒழிய, ஒரு தோழனாக அவனிடம் நெருக்கத்தை காண்பிக்க வில்லை.

துருவனிடமிருந்து பிரிந்திருக்க எண்ணியோ என்னமோ, பிணியால் பாதிக்கப்பட்ட வசுந்தரா, மகர அரசின் அரண்மனையில் இருக்க விரும்பவில்லை. தனக்கு மகர அரசின் சார்ப்பான பிரச்சனை தீர்க்கும் பணிகளை கொடுக்கும் படி இராஜகுருவிடம் அனுமதி கேட்டாள்.

பின் முடிந்த அளவு மகர அரசின் அரண்மனையிலோ, குருகுலத்திலோ இல்லாமல் இருக்குமாறும், பணி இருக்கிறது என்ற காரணத்தை போர்வையாக கொண்டு, துருவனின் கண்ணில் படாமல் நழுவிக் கொண்டும் இருந்தாள் வசுந்தரா.

இன்று பிணியால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஓர் அறையில் கூடியிருக்க வேண்டும் என்று அரசரரசி ஆணையில்லையென்றாலோ, அல்லது தக்க சமயத்தில் மருத்துவ மந்திரியை மாற்றி துருவன் இங்கு வராமல் இருந்தாலோ, துருவன் வசுந்தராவை பார்த்திருக்க வாய்ப்பில்லை.

அறையின் உள்ளே வந்த வசுந்தரா வேறு யாரையும் பார்க்காமல் துருவனிடம் திரும்பி, “வணக்கம் இளவரசே!” என்றவள், வன்னியிடம் திரும்பி, “வணக்கம் பரி தூதுவரே. தாமதத்திற்கு இளவரசரும், தூதுவரும் வசுந்தராவை மன்னிக்க வேண்டும்!

எனக்கு கொடுத்த பணி முடித்து, அதற்கான அறிக்கையை இராஜகுருவிடம் கொடுத்துவிட்டு வர தாமதித்துவிட்டது.” என்று கரம் குவித்து வணங்கினாள்.

பணி, பணி என்று கிட்டத்தட்ட 11 மாதங்களாக மகர அரசுக்கே வராமல் இருந்த வசுந்தரா, இன்றுதான் மகர அரசின் அரண்மனைக்கு வந்தாள். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பின் வசுந்தராவை பார்த்த துருவன் ஆர்வமாக அவளை கால் முதல் தலை வரை பார்த்தான்.

துருவனின் அருகில் நின்றிருந்த வன்னி, “வணக்கம் வசுந்தரா.” என்று புன்னகைத்தாள். துருவனிடமிருந்து பதில் வராமலிருக்க திரும்பி அவனை பார்த்த வன்னி, வாயடைத்து,  ஸ்தம்பித்து நின்ற துருவனையும், புதிதாக அறைக்கு வந்த வசுந்தராவையும் மாறி மாறி கேள்வியாக பார்த்தாள்.