யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 60

692

அத்தியாயம் – 60

வன்னிக்கு மேலும் வியப்பு மேலோங்கியது. ‘எனக்காக மகர அரசர் அரசி காத்திருக்கின்றனரா?’ என்று மனதுள் நினைத்தாள். இருந்தும் எதுவும் பேசாமல், “வருகிறேன் காவலரே!” என்று குரல் கொடுத்தாள் வன்னி.

பின் அவள் அருகில் இருந்த சேவகியை திரும்பி பார்த்து, “நன்றி சேவகி. நீ இப்போது போகலாம். வேறு தேவையிருந்தால் நானே பார்த்துக் கொள்வேன்.” என்றாள் வன்னி.

சேவகி வன்னிக்கு புன்னகைத்து, “தூதுவரே! தாங்கள் இங்கு இருக்கும் வரை நான் தங்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்பதுதான் எனக்கிடப்பட்ட கட்டளை.

அதனால் நான் தாங்கள் இங்கிருந்து கிளம்பும் வரை தங்களுடனே இருப்பேன். தயங்காமல் என்னிடம் எதுவும் கேளுங்கள். தங்கள் குரல் கேட்கும் தூரத்தில்தான் நான் எப்போதும் இருப்பேன்.” என்றாள் பணிவாக.

வன்னி மீண்டும் வியந்து, “ஓ… சரி… தேவை பொறுத்து உன்னை அழைக்கிறேன்.” என்றாள். கூடவே மனதுள், ‘மகர அரசு சாதாரண தூதுவருக்கு, இவ்வளவு கவனிப்பும் முக்கியத்துவமும் தருகிறதே!’ என்று மகர அரசை குறித்து பெருமிதமாக நினைத்தாள்.

ஆனால் பாவம் வன்னி இன்னமும் உணரவில்லை. அவளுக்கான இன்றைய உபச்சாரமெல்லாம் அவள் தூதுவர் என்பதால் மட்டுமல்ல. அவள், பரி இளவரசி என்ற உண்மை அறிந்ததாலும் வந்த மரியாதை என்று.

மாதங்க அரசில் 5 வருடங்களுக்கு முன்பு தன் காவலர்களை இழந்ததால் வன்னி தன்னுடன் எந்த மெய்காவலர்களையும் இப்போது அழைத்து வர விரும்பவில்லை.

‘உடன் மெய் காவலர்கள் வராமல் இருந்தால் தன்னை இளவரசியாக எண்ண வாய்ப்புமில்லை. அப்படியே அறிந்தாலும், தன்னை காக்கவென்று என் காவலர்களுக்கு ஆபத்து நிகழ்வதற்க்கும் இல்லை.’ என்று குழந்தையின் அறியாமையில் நினைத்தாள் வன்னி.

ஆனால் அனுபவம் உடைய இமய குரு போன்றவர்கள், அவளது செயலில் தெரியும் சிறு பேதத்திலும் அவளை யாரென்று அறிந்துவிடக்கூடுமென்று வன்னி உணரவில்லை.

அதுமட்டுமல்லாமல், அவள் எண்ணத்திற்கு மாறாக பரி அரசு அவளை தனியே அனுப்பாமல் அவளை தொடர்ந்து இரண்டு நிழற்காவலர்களை(Shadow Guards), அவள் மகர அரசை அடைந்த அடுத்த 10 நாழிகைக்குள் மகர அரசுக்கு அனுப்பியிருந்தனர்.

அவர்கள் மகர அரசரின் அனுமதியுடன் வன்னியின் அறைக்கு வெளியில் அவள் அறியமால் அவளை கண்கானித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதும் அவள் உணரவில்லை. அதே அறியாமையுடன் வன்னி மகர அரசர் அரசியை காணச் சென்றாள்.

வன்னி உணவு உண்ணும் அறைக்குச் சென்றதும் எதிர்பார்த்ததையும் விட அதிக நபர்கள் அங்கு இருப்பதை பார்த்து ஒரு நொடி திகைத்து நின்றாள். சலசலப்புடன் இருந்த அந்த பந்தி அறை(dining table) அவளை கண்டதும் நிசப்தமானது.

அனைவரின் பார்வையும் தன் மீது விழுவதை உணர்ந்து, விரைவில் தன்னை இயல்பாக்கிக் கொண்டு லேசான புன்னகையுடன், “பரி தூதுவர் வன்னி, மகர அரசரரசியையும் மற்றும் அவையில் உள்ள மற்றவர்களையும் பணிவுடன் வணங்குகிறேன்.” என்று கரம் குவித்து வணங்கி நின்றாள்.

வன்னியின் பணிவான செயலில் மகிழ்ந்த அரசர், அரசி ஒன்றாக, “வணக்கம் பரி தூதுவரே! தங்களின் வருகையை எண்ணி மகர அரசிலுள்ள ஒவ்வொருவரும் மகிழ்கிறோம்.” என்று புன்னகைத்தனர்.

அவர்களின் வார்த்தையில் வன்னியின் இதழ் விரிந்தது. அவள் கண்ணில் சிறுப்பிள்ளையின் வெகுளி தனமான சிரிப்பு எட்டி பார்த்தது. அதே சிரிப்புடன், “நன்றி அரசர் அரசியரே! தங்களை இன்று காண நேர்ந்ததில் எனக்கும் மகிழ்ச்சி!” என்றாள்.

அதற்கு, “ஹா…ஹா…ஹா… பதினைந்து எலும்பு வயதில் எவ்வளவு கருத்தாக பேசுகிறாய்! உன்னை போல எனக்கும் ஒரு குட்டி இளவரசி மகள் பிறந்திருந்தால் எவ்வளவு நல்லாயிருந்திருக்கும்.” என்று போலியான வருத்தமும், கேலியுமாக தொடர்ந்து கலகலவென சிரித்தார் மகர அரசர்.

வன்னி, மகர அரசர், குட்டி இளவரசி என்று தன்னை பற்றி சொன்னதும், ‘தான் இளவரசி என்பது இவர்களுக்குத் தெரிந்துவிட்டதா’ என்று ஒரு நொடி விழித்தாள். மனதுள் ஒரு திகில் பரவ மிரண்டு தன் முகத்தில் இருந்த முகத்திரையை ஒருமுறை தொட்டு பார்த்தாள்.

அவளது மிரட்சியை உணர்ந்துவிட்ட மகர அரசி, “மகர அரசே! சிறுப்பெண்ணிடம் என்ன விளையாட்டு.” என்று தன் கணவரை கண்களால் மிரட்டிவிட்டு வன்னியின் புரம் திரும்பி கனிவாக,

“வன்னி, மகர அரசர் பெண் குழந்தை வேண்டுமென்று மிகவும் ஆசைப்பாட்டாரம்மா? ஆனால் பார். எங்களுக்கு பிறந்ததெல்லாம் ஒரே ஆண் மகன்.” என்று துருவனை ஒரு பார்வை பார்த்து, தொடர்ந்து,

“அதனால் வந்த புலம்பல்தான் இது. உன்னை பார்த்ததும் அவள் கனவு மகள் போல் நீ பேசுவதை கேட்டுவிட்டு, மீண்டும் அவரது மகள் ஆசை தலை தூக்கிவிட்டது. இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாதேமா?” என்று மகர அரசரின் வார்த்தைக்கு விளக்கம் தந்து வன்னியை இயல்பாக்க முயன்றாள்.

இந்த விளக்கத்திற்கு பிறகு வன்னியின் மனம் லேசானது. மகர அரசியை பார்த்து புன்னகைத்து, “புரிகிறது மகர அரசி! மகர அரசர் என்னை அவரது மகளாக நினைத்துப் பேசியதில் பரி தூதுவர் வன்னி மகிழ்கிறாள்!” என்று தான் தூதுவர்தான் என்பதில் அழுத்தம் கொடுத்து சொன்னாள்.

வன்னியின் வார்த்தைகளில் துருவன் சின்ன சிரிப்பை உதிர்த்து அவளை சுவாரசியமாக பார்த்தான். கூடவே, ‘ஐந்து வருடத்திற்கு முன்பு பார்த்தப் போது வன்னியின் இந்த சிறுப்பிள்ளைதனமான குறும்புதனம் ஏன் காணமல் போனேன்?’ தலையை வருந்துவது போலே தலையை மறுப்பாக அசைத்தான்.

மகர அரசி வன்னியின் பதிலில் புன்னகைத்து, “உன்னுடைய அன்புமிகுந்த வார்த்தையில் மகர அரசரும் நானும் மகிழ்கிறோம்.! வன்னி, எங்கள் அருகில் வாமா” என்று வன்னியை அருகில் அழைத்தார்.

வன்னி ஒரு முறை கிளுக்கி சிரித்து, மகர அரசில் ஒரு தூதுவராக வந்திருப்பதை மறந்து, பரி அரசின் அரசவையில் துள்ளி குதித்து திரிவதுப் போல, துள்ளி குதித்துக் கொண்டு மகர அரசர் அரசி அமர்ந்திருந்த இராஜ நாற்காலியின் அருகில் சென்றாள்.

வன்னியின் செயலை பார்த்து அவளது உரிமை மிகுந்த செயலில் மகர அரசரின் முகமெல்லம் புன்னகை பூசியது. வன்னி அருகில் வந்ததும் அவள் தலை வருடினார் மகர அரசர்.

மகர அரசி அவள் கைப்பற்றி, “எங்கள் அருகில் அமரம்மா?” என்று வன்னி மகர அரசருக்கும் தனக்கும் இடையில் அமர வைத்தார். வன்னியும் இயல்பாக அவர்கள் அருகில் அமர்ந்து கிளுக்கி சிரித்தாள்.

இப்படியாக, வன்னி, மகர அரசரரசியின் அன்பில் திழைத்தவள் சுற்றம் மறந்து எச்சரிக்கை உணர்வை சற்று தளர்த்தினாள். பாவம் அவளது செயலை, துருவன் மற்றும் இராஜகுரு மட்டுமல்லாமல் இன்னும் சில மந்திரிகளும் கவனித்துக் கொண்டிருப்பதை மறந்தே போனாள்.

மகர அரசர் அரசியரின் பிரதேக கவனிப்பு, பலருக்கு சந்தேகத்தை தர கூடுமென்பதுமே, சிறுப்பிள்ளையின் வெகுளிதனத்தில் உணரவில்லை.

வன்னி மகர அரசர் அரசியர் இடையில் அமர்ந்ததும் மகர அரசர் பந்தியில் அமர்ந்திருந்த மற்றவர்களை நோக்கி, “மகர அரசின் பல வருட நோயை தீர்க்க வந்த பரி தூதுவரை தங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.” என்றார்.

அரசரின் வார்த்தையில் அந்த அறையிலிருந்த மற்றவர்களும், “பரி தூதுவரை நாங்கள் அன்புடன் வரவேற்கிறோம்.” என்று எழுந்து நின்று கரம்குவித்து வரவேற்று அவரவர் இருக்கையில் அமர்ந்தனர்.

வன்னி அவர்களுக்கு பதிலாக,”நன்றி மகர அரசின் மந்திரிகளே! தங்களுக்கு உதவ முடிந்தது என் பரி அரசின் பாக்கியம்.” என்று எழுந்து கரம் குவித்து வணங்கி, குழந்தையின் மென்மையும், கன்னியின் இளமையும் கொண்ட குரலில் சொல்லி புன்னகைத்தாள்.

மந்திரிகளின் வார்த்தைகளில் திருப்தியுற்ற மகர அரசர், “சேவகர்களே! கௌரவிக்கும் விதமாக பரி தூதுவருக்கு முதலில் உணவு பரிமாற ஆணையிடுகிறேன்.” என்றார்.

அதன் பிறகு அரசரின் ஆணைப்படி, “உத்தரவு அரசே! பரி தூதுவருக்கு உணவைப் பரிமாறுகிறோம்!” என்று அருகில் உணவு பொருட்களுடன் நின்றிருந்த சேவகிகள், ஒருவரை அடுத்து மற்றொருவராக, வரிசையாக, வன்னியின் இலையில் உணவு பரிமாற ஆரம்பித்தனர்

வன்னி மீண்டும் சிரித்து, எந்தவித கவலையும் இல்லாமல் உணவு உண்ண ஆரம்பித்தாள். ஆனால் அவளது உள்ளணர்வு திடீரென்று எச்சரிக்கை தர சாப்பிடுவதை நிறுத்திவிட்டு நிமிர்ந்து பந்தியிலிருந்தவர்களை ஒருமுறை நோட்டமிட்டாள்.

யாரோ தன்னை குறுப்குறுப்பாக ஓரெல்லையிலிருந்து, பார்ப்பது போன்ற உணர்வு இன்னும் தீவிரமடைய சிறிது அசௌகரியமாக உணர்ந்தாள் வன்னி.

நிமிர்ந்து அவள் உள்ளுணர்வு சொன்ன இடத்தில் பார்த்தாள். ஆனால் அங்கு யாரும் அவள் கண்ணுக்கு புலப்படவில்லை. மகர அரசர் அரசியர் முன்பு ‘கவனிக்கும் சக்கரத்தை’ உருவாக்கி,

உணவு கூடத்தை நோட்டமிடுவதும், மரியாதைக்கு உரியதல்ல என்றும், இத்தனை நபர்களுக்கு மத்தியில் எந்தவித தவறும் தனக்கு நிகழ வாய்ப்பில்லை என்றும் வன்னி மனதை சமாதனம் செய்து, உணவில் செலுத்தினாள்.

உணவிற்கு பின்பு, மந்திரிகளுள் சிலர் வன்னியிடம் ஓரிரு வார்த்தைகள், பரி அரசின், நடப்புகள் பற்றியும், நலன் விசாரிப்பையும் வன்னியிடம் சிறிது பேசிவிட்டுச் சென்றனர்.

அரசர் அரசியும், வன்னியின் பணியில் தடையாக இருக்காமல் மாலை சந்திப்போம் என்று சொல்லிவிட்டு கிளம்பினர். போகும்போது மருத்துவ மந்திரியை அழைத்து வன்னி பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த தேவையான ஏற்பாடுகளை செய்ய ஆணைவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

இவ்வாறாக ஒவ்வொருவராக கலைந்துச் செல்ல, மருத்துவ மந்திரி, அவருக்கு இடப்பட்ட கட்டளையாக, நோயால் பாதிக்கப் பட்ட மகர யாளிகளை காண வன்னியை அழைத்துச் செல்ல அவளிடம் வந்தார்.

“வணக்கம் பரி தூதுவர் வன்னி. நான் மகர அரசின் மருத்துவ மந்திரி. நோயால் பாதிக்கப்பட்டவர்களை காண தங்களை அழைத்துச் செல்ல வந்தேன்.” என்று தன்னை அறிமுகம் படுத்திக் கொண்டார்.

வன்னி அவரை பார்த்து சிரித்து, “வணக்கம் மந்திரியாரே! இப்போதே நோயாளிகளை காணச் செல்லலாமா?” என்று எழுந்து துள்ளி குதித்துக் கொண்டு முன்னே நடக்க ஆரம்பித்தாள்.

மருத்துவ குரு, வன்னியின் வயதையும், சிறுப்பிள்ளை தனமான துள்ளலையும் பார்த்து ஏளனமாக சிரித்தார். இருந்தும் எதுவும் பேசாமல், “செல்லலாம் தூதுவரே!” என்று வன்னிக்கு முன்பு நடந்துச் சென்று வழிக் காட்டினார்.

வன்னி அவளுக்கு அவளே பேசுபவள் போல, “பரி அரசுக்கு அளிக்கப்பட்ட நோய் கிருமி மாதிரிக்கும், புதிதாக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடலில் இருக்கும் நோய் கிருமி மாதிரிக்கும், ஏதேனும் பேதமிருக்கிறதா? என்று பார்க்க வேண்டும்.” என்றாள்.

அதனை கேட்ட மருத்துவ மந்திரி, “ஏன்! தூதுவரே! இன்னமும் மருந்து கண்டுப்பிடிக்காமல்தான் மகர அரசுக்கு தங்களை பரி அரசிலிருந்து அனுப்பி வைத்தனரா? என்ன?

மீண்டும் நோய் மாதிரி எடுக்க வேண்டும் எங்கிறீர்கள். ஒருவேளை, தங்களை பரி அரசிலிருந்து நோய் கிருமீ எடுக்கதான் இப்போது அனுப்பி வைத்தனரோ!” என்று லேசான நக்கல் குரலில் தழும்ப கேட்டார்.

சிறுப்பிள்ளையான வன்னிக்கு அவரின் குரலில் பேதம் எதுவும் தெரியவில்லை போலும். ஆனால் அவள் பின், அவளுடன் வந்த சேவகிக்கு, மருத்துவ மந்திரியின் வன்னியின் மீதான அதிருப்தி தெளிவாக தெரிந்தது.

உடனே மருத்துவ மந்திரி கவனிக்காத வகையில் அருகிலிருந்த காவலரிடம் கிசுகிசுப்பாக அந்த சேவகி எதுவோ சொல்ல அவன் அங்கிருந்து வேகமாக நடந்துச் சென்றான்.

வன்னி உண்மையிலே, ‘ஏன் நான் இப்படி கேட்கிறேன்? என்று புரியாமல்தான் மருத்துவ மந்திரி பேசுகிறார்.’ என்று எண்ணி வெகு தீவிரமாக பதில் அளிப்பவள் போல, “அப்படி இல்லை மந்திரியாரே!

என் குருவிடம் கிட்டத்தட்ட 15 வருடத்திற்கு முன்பு மகர அரசு தந்த நோய் கிருமி மாதிரிதான்(sample) இருந்தது. இத்தனை வருடங்களில் நோய் கிருமியின் தன்மையில் ஏதேனும் பேதமிருந்தால் தற்போது கண்டுப்பிடித்த மருந்தில் மாற்றம் செய்ய வேண்டி இருக்கும்.

அதனால் எச்சரிக்கைக்கு, மருந்துக் கொடுக்குமுன் அவர்களை பரிசோதிக்க வேண்டுமென்று, என் இராஜகுரு சந்திரர், அறிவுறுத்தி என்னை இங்கு அனுப்பினார். அதனால்தான்… புரிகிறதுதானே!!” என்று சொல்லி கிளுக்கிச் சிரித்தாள்.

மருத்துவ மந்திரி வன்னியின் விளக்கத்தில் முகம் கருத்தார். இத்தனை வருடத்தில், இந்த நோய்க்கு மருந்து கண்டுப்பிடிக்க என்று, ஒரு மகரயாளி குழுவும், அதற்கென்று வருடத்திற்கு ஒருமுறை, கணிசமான தொகையும் மகர அரசிடம், அவர் பெற்று வந்துக் கொண்டிருந்தார்.

திடீரென்று வன்னி மருந்துடன் வந்ததில், இனி அந்த கணிசமான வருமானம் தடைபடுமே என்ற, அதிருப்தி அவருக்கு இருக்க, அவளிடம் அவர் அப்படி நக்கலாக பேசினார்.

ஆனால் சிறுப்பெண்ணான வன்னியின் நேர்த்தியான பதிலில் ஆற்றாமையுடன் பற்களை நரநரவென ஒரு நொடி கடித்தார்.

பின் வன்னியின் சிறு வயதை ஏளனமாக பார்த்து, கண்ணை எட்டாத சிரிப்பை உதிர்த்து, “பரி அரசில் வேறு சக்தி வாய்ந்தவர்கள் யாருமில்லையா என்ன? சிறுப்பெண்ணான தங்களை தனியே இங்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.?!” என்றார்.

வன்னிக்கு அப்போதுதான் அவரின் கேள்வியில் ஏதோ பேதமாக தெரிந்ததோ என்னமோ! அதுவரை துள்ளி குதித்துக் கொண்டு, போகும் பாதையில் இருந்த மரம் செடி கொடிகளையும்,

பாதையின் இருப்புரமும் நீல நிறத்தில் இருந்த அலங்கார தோரணங்களையும், வேடிக்கை பார்த்து வந்திருந்தவள், மருத்துவ மந்திரியை திரும்பி பார்த்தாள்.

அவள் நெற்றி பொட்டில் முடிச்சு விழ அந்த மந்திரியை ஒரு நொடி கேள்வியாக பார்த்தாள். அவர் முகத்தில் தெரிந்த ஏளனத்தை உணர்ந்த வன்னி, அவருக்கு பதில் சொல்லு வாயெடுத்தாள்.

அவள் எதுவும் பேசுமுன்னே, அங்கு மகர அரசின் இளவரசன் துருவன், வந்து, “வணக்கம் பரி தூதுவரே!” என்றான்.

துருவனின் குரல் கேட்டு முகம் திரும்பிய வன்னி, துருவனை பார்த்ததும், முன்பு மருத்துவ மந்திரியால் மனதில் உணர்ந்த பேதம் மறந்து, “வணக்கம் இளவரசே!” என்று பதிலுக்கு வணங்கி புன்னகைத்தாள்.

மருத்துவ மந்திரி, அந்த நேரத்தில் துருவனை அங்கு எதிர் பார்க்கவில்லை போலும். அவர் வன்னியை நக்கலாக பேசியதை, மகர இளவரசர் கேட்டுவிட்டாரோ என்று ஒரு நொடி முகம் வியர்த்தார்.

அவராக துருவனிடம் எதுவும் பேசுமுன், “மருத்துவ மந்திரியாரே! தங்களை தலைமை மந்திரி அழைத்து வரச் சொன்னார்.” என்று துருவன் பின் வந்த காவலர்களில் ஒருவன் சொன்னான்.

காவலன் அங்கு வந்ததுமே, துருவன் கண்ணால் வன்னியின் அருகிலிருந்த சேவகியிடம் கண்ணசைக்க, சேவகி வன்னியிடம் அருகில் தொங்கிருந்த நீல நிற தோரணத்தை பற்றி பேசி வன்னியின் கவனத்தை திசைத்திருப்பினாள்.

காவலனின் வார்த்தையில் மருத்துவ மந்திரி,தீடீரென்று எதற்கு தன்னை, தலைமை மந்திரி அழைக்கிறார் என்று குழம்பி, “அரசர் ஆணைப்படி, நான் இப்போது பரி தூதுவரை, நோயாளிகளிடம் அழைத்துச் செல்ல வேண்டும். அதனால் பிறகு வருகிறேன் என்று அவரிடம் சொல்.” என்று காவலரிடம் சொன்னார்.

துருவன் மருத்துவ மந்திரியின் வார்த்தையில் கடுப்புற்று, “ஏன்? பரி தூதுவரிடம் அவசியமல்லமால் கேள்வி கேட்பதும், தங்களுக்கு என் தந்தையிட்ட கட்டளையோ? மருத்துவ மந்திரி!” என்றான் இளக்கமற்று.

துருவனின் வார்த்தைகளில் மருத்துவ மந்திரியின் முகமெல்லாம் வியர்த்துவிட்டது. தடுமாறிய வார்த்தைகளாக, “இ…இளவரசே! அ…அது சந்தேகத்தைத்தான் கேட்டேன்!” என்றான்.

துருவன் அவனது வார்த்தைகளை சட்டைச் செய்யாமல், “நான் பரி தூதுவரை கவனித்துக் கொள்கிறேன்.

தாங்கள் , உங்கள் தலைமையிலிருக்கும், மருத்துவ குழுவின் கடந்த 5 வருட வரவு செலவு கணக்கு வழக்குகளுடன், தலைமை மந்திரியை உடனே பாருங்கள்.” என்று முகத்தில் புன்னகையே இல்லாமல் முறைத்து சொன்னான் துருவன்.

துருவனின் முகம் பார்க்க முடியாமல் மருத்துவ மந்திரி முகம் வெளுத்து நின்றார். உடல் நடுங்க, நா பிரள, “உத்தரவு இளவரசே! இப்போதே செல்கிறேன்.” என்று அங்கிருந்து கிளம்ப எத்தனித்தார்.

அவர் இரண்டடி நகருமுன்னே அவள் தோள் பற்றி காதருகில் குனிந்து, “மருத்துவ மந்திரியே! என்னதான் வயதில் அதிகமானவர்களாக இருந்த போதும், எல்லாராலும் நம் மகரர்களுக்கு வந்துள்ள நோய்க்கான மருந்தை கண்டுப்பிடிக்க முடியவில்லை.

அதனால் வயதையும் திறமையையும் குழப்பிக் கொள்ளாதீர்கள். தூதுவர் வன்னியின் வயதை கண்டு அவரை குறைத்து எடைப் போடா தங்களுக்கு என்ன தகுதியிருக்கிறது?

இவ்வாறு நீங்க பேசியதால், விபரீத நிகழ்வுகள் தங்களுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த மகர அரசுக்குமே கூட நிகழ வாய்ப்புள்ளது. நினைவிருக்கட்டும்.

அப்படி ஒருவேளை தங்களால் மகர அரசுக்கு ஏதேனும் நிகழுமென்றால், தாங்கள் மட்டுமல்ல தங்களுடன் தங்களின் குடும்பத்தினரின் உயிரும் போய்விடக்கூடும்” என்று அந்த மந்திரிக்கு மட்டும் கேட்கும் குரலில் தோளில் தட்டி கர்ஜித்தான் துருவன்.

மருத்துவ மந்திரி இன்னும் உடல் வியர்த்து, “மன்னித்துவிடுங்க இளவரசே!” என்று ஒரு தலையசைப்புடன் அங்கிருந்து கிளம்பினார்.

மருத்துவ மந்திரி அங்கிருந்து கிளம்பியதும், இரக்கமற்று வெறித்திருந்த துருவனின் முகம், வன்னியை நோக்கி திரும்பியதும், சூரியனை கண்ட பூவைப் போல மலர்ந்து, “தூதுவரே, மருத்துவ மந்திரிக்கு வேறு வேலை இருப்பதால் நான் இன்றுதங்களுக்கான உதவியை செய்வேன்.” என்றான்.

அதுவரை சுவாரசியமாக தோரணம் செய்ய பயன்படுத்தப்பட்ட இலைகளின் தன்மையைப்பற்றி சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்த வன்னி துருவனை பார்த்து, கிளுக்கிச் சிரித்தாள்.

உடனே மனதுள் ஏதோ தோன்ற அதனை மறைத்து, “அப்படியா? சரி போகலாம் இளவரசே!” என்றாள். வன்னி துருவன் திடீரென்று அங்கு வருவான் என்று எதிர்பார்க்கவில்லை போலும்.

அதற்கும் மேல் மருத்துவ மந்திரிக்கு பதிலாக உடன் இருப்பான் என்றும் நினைக்கவில்லை. ஏற்கனவே இவனை மாதங்க அரசில் ஒருமுறை பார்த்ததால் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்று மட்டும் உணர்ந்தாள்.

அன்னிச்சை செயலாக, துருவன் அருகில் வந்ததை பார்த்ததும், அவரசரமாக முகத்திரையை மீண்டும் ஒருமுறை தொட்டு பார்த்தாள்.

வன்னியின் இந்த சின்னச் செயலை சிட்டென, ஓரக்கண்ணால் பார்த்த துருவன், சின்ன சிரிப்பை உதிர்த்து, கவனியாதவன் போல முன்னோக்கி நடந்தான்.

வன்னி சூழலை இயல்பாக்க, “இளவரசே! இந்த நோய் ஏற்பட என்ன காரணமாக இருக்குமென்று ஏதேனும் ஆராய்ச்சி நிகழ்ந்ததா?” என்று பேச முயன்றாள்.

வன்னிக்கு பதிலளிக்கும் விதமாக, “இள…” என்று தொடங்கி, ”ம்க்கும்…” என்று தொண்டையை செறுமி சரி செய்வது போல பேச்சு மாற்றி, “தூதுவரே! இதுவரை, இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 12 நபர்கள். அதில் ஒருவர் இரண்டு வருடம் முன்பு இறந்துவிட்டார்.

இவர்கள் அனைவரையும் விசாரித்ததில் பொதுவில் இவர்கள் நோய் அறிகுறி படுமுன்பு செய்த ஒரு செயல் விராட்டு மலைக்குச் சென்றதுதான்.