யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 59.2

730

அவளை நொடி திரும்பி பார்த்த அந்த புதியவன், “நான் இந்த அறையுடன் இணைந்த சுரங்க பாதையின் மூலமாக இங்கு வந்தேன். எனக்கு பிடித்த மணம் இந்த அறையில் வீசியதால், அதை தேடி இங்கு வந்தேன்.” என்று வெகு இயல்பு போல சொல்லிக் கொண்டு அந்த அறையின் மூலை முடுக்கில் எல்லாம் சென்று நுகர்ந்து பார்த்தான்.

வன்னியின் உள்ளுணர்வு வந்திருந்தவனிடம் எந்தவித கெட்ட எண்ணமும் இல்லையென்பதை அவளுக்கு உணர்தியது. அதனால் அவன் ஏதேனும் தாக்க முயன்றால் பதிலுக்கு சாண்டையிட எச்சரிக்கையுடன் நின்றிருந்த வன்னி மெல்ல இயல்புக்கு வந்தாள்.

அவன் சொன்னதற்கு பதில் போல, “மணமா? என்ன மணம்? எனக்கெதுவும் வரவில்லையேஎன்று முனுமுனுத்தபடி அவனருகில் மெல்லச் சென்று அவளுமே ஆர்வமாக அவனுடன் தேட ஆரம்பித்தாள்.

வன்னியை கவனியாமல் மெத்தையின் அடியிலெல்லாம் குனிந்து தேடிக் கொண்டிருந்த அந்த புதியவன் வன்னி அருகில் வரவும் அவளிடமிருந்துதான் அந்த மணம் வருகிறதோ என்று சந்தேகித்து சட்டென எழ முயன்றான்.

அப்படி அவசரமாக எழுந்ததில் மரமெத்தையின் விளிம்பில் தன் தலையை இடித்துக் கொண்டு, “ஸ்…” என்று இடித்த இடத்தை தன் வலது கையால் தேய்தவிதமாக வன்னியை நிமிர்ந்து பார்த்தான்.

வன்னி, “ப்வ்…” என்று சத்தமிட்டு சிரித்தவிதமாக, “என்ன நீ? என்னைவிடவும் பெரியவன் போல இருக்கிறாய். ஆனால் இப்படி சிறுப்பிள்ளை போல நடந்துக் கொள்கிறாயே. இங்கு வா.” என்று அவனது இடதுக்கையை பற்றி இழுத்துச் சென்று மெத்தை மீது அமர வைத்தாள்.

வன்னி அவன் கையை தொட்டதும் மெய் சிலிர்த்த அந்த புதியவன் ஒரு நொடி விழி விரித்து வன்னியை பார்த்தான். அதே சமயம் கட்டுண்ட பூனை போல வன்னி இழுத்த இழுப்புக்கு நகர்ந்தவன் அவள் சொன்னபடி மெத்தையில் அமர்ந்து அவளை ஏறிட்டான்.

வன்னிக்கு அவளையும் அறியாமல் அந்த புதியவினிடம் கனிவு வர அவன் என்ன நினைப்பான் என்ற கவலையும் இல்லாமல், இன்னமும் தன் தலை மீது கை வைத்து இமைக்க மறந்து வன்னியின் முகத்தை பார்த்திருந்த அந்த புதியவனின் கையை அவன் தலையிலிருந்து விலக்கினாள்.

பின் அவனிடம் என்ன ஏது என்று கேட்காமலே அவன் தலையில் இரத்தம் வருகிறதா என்று குதிகாலில் நின்று எட்டி பார்த்து தன் கையால் அவன் தலையை வருடினாள். அவள் அவன் தலையில் கையை வைத்ததும் அந்த புதியவன் ஏதோ பேச துடிப்பவன் போல உதடு மூடி திறந்தான்.

இருந்தும் எதுவும் பேசினான் இல்லை. ஆனால் வன்னி அதிருப்தியாக உதடு பிதுக்கி, “நீ மெத்தை மீது அமர்ந்திருந்த போதும், என்னை விடவும் உயரமாய் இருக்கிறாயே.” என்றாள்.

தொடர்ந்து அவன் தலையில் காயமில்லை என்பதை தடவியதில் அறிந்து, “நல்ல வேளை பெரிதாக காயமில்லை.” என்று சொல்லியபடி அவளது கையை அவனிடமிருந்து எடுத்தாள்.

வன்னி அருகில் வந்ததுமே அவளிடம்தான் அந்த மணம் வருகிறது என்பதை உணர்ந்த அந்த புதியவன் அவள் கையை அவன் தலையிலிருந்து விலக்குவதுப்பிடிக்காமல் அவளது கையை பற்றி மீண்டும் அவன் தலை மீது வைத்து அவள் முகத்தை ஏக்கமாக பார்த்தான்.

எதிர்பாராதவிதமாக தன் கை பற்றிய புதியவனை திரும்பி கேள்வியாக பார்த்து வன்னி, “ம்ம்?” என்றாள். ஆனால் அப்படி பார்த்தவள் அங்கு அன்புக்கு ஏங்கும் குழந்தை போல அவளை பார்த்து விழி மூடி திறந்த அவன் முகத்தை பார்த்து விக்கித்து போனாள்.

அன்னிச்சை செயலாக அவன் தலை வருடி, “என்ன ஆனது வலிக்கிறதா?” என்றாள். அதற்கு அவன் பாவம் போல (puppy face)முகத்தை வைத்துக் கொண்டு வலிக்கவில்லை என்ற போதும் ஆமாம் என்பது போல தலையசைத்தான்.

வன்னி கவலையுற்று, “காயம் பெரிதாக இல்லையே.” என்று மீண்டும் ஒருமுறை பரிசோதித்தாள். அவள் பேசி முடிப்பதற்குள் அவன் இயல்பு போல வன்னியை தன்னோடு அணைத்துக் கொண்டு சிறுப்பிள்ளை அன்னையின் அரவணைப்பை தேடுவது போல அவளது கழுத்து வளைவில் முகம் பதித்தான்.

வன்னி ஒரு நொடி உடல் சிலிர்த்து அவனை விலக்கிவிட நினைத்து அவனை தள்ளிவிட முயன்றாள். பரியாளியாக இருந்ததால் பெண்மையின் நாணம் இல்லாதபோதும், புதிதாக ஒருவனின் அணைப்பு அவளுக்கு படப்படப்பை தந்தது.

ஏய்! என்ன செய்கிறாய்?” என்று வன்னி அவனது தோள்மீது கைவைத்து தள்ளிவிட முயன்றாள். ஆனால் அவனது அணைப்பின் இறுக்கம் அதிகமானது. கூடவே அவனது மூச்சுக் காற்று அவளது கழுத்து வளைவில் விழ அக்குளிப்பாக உடல் நெழிந்தாள்.

அப்போது அவன், “உங்களிடமிருந்துதான் அந்த மணம் வருகிறது. உங்களை தேடித்தான் நான் இங்கு வந்தேன்.” என்று நிதானமாக சொன்னான். அவனது ஆண்மை மிகுந்த குரல் வன்னியின் செவிக்கு அருகே பட்டு அவளை ஸ்தம்பிக்க செய்தது.

என்ன இவன் பிதற்றுகிறான்? என்ன மணம்? நான் எந்தவித வாசனை திரவமும் பயன்படுத்துவது இல்லையே!” என்று மனதுள் நினைப்பதாக எண்ணி வாயுள் முனுமுனுத்தாள்.

அந்த புதியவன் அவளுக்கு பதிலளிப்பவன் போல, “அது எந்தவித வாசனை திரவத்தாலும் வந்த மணமல்ல. அது உங்களுக்கு மட்டுமான மணம்.” என்று அவன் சொல்லி முடிக்கவும் அவன் மனித உடலிலிருந்து சின்ன ஆட்டு குட்டியின் உருவிற்கு மாறவும் சரியாக இருந்தது.

வன்னியை மெத்தையில் அமர்ந்தபடி அணைத்திருந்த அந்த ஆண் உருவம் எந்தவித முன்னறிவிப்புமில்லாமல் சட்டென கைக்குள் அடங்கும் அளவு வெள்ளை நிற ஆட்டுக்குட்டியாக தன் கைக்குள் அடங்கியதை வன்னி ஆச்சரியமாக பார்த்தாள்.

அதே ஆச்சரியமுடன், “என்ன நீ உன்னால் உன் மகர உருவை கட்டுக்கொள் வைத்திருக்க முடியாதா? பேசிக் கொண்டிருக்கும் போதே மகர குட்டியாக மாறிவிட்டாய்?” என்று தன் கைக்குள் இருந்த அந்த புதியவனை பார்த்து கேட்டபடி மெத்தை மீது அமர்ந்தாள்.

நீல நிற கண்களுடனும் கழுத்தில் நீல கல் பதித்த கயிறுடனும் இருந்த அந்த புதியவன் அவளை ஏறிட்டு பார்த்தான். பதிலேதும் சொல்லாமல் மீண்டும் எம்பி அவளது கழுத்து வளைவுக்குள் தன் கழுத்தை வைத்துக் கொண்டான் ஆட்டுக்குட்டி உருவில் இருந்தவன்.

வன்னிக்கு அவனது இந்த அணைப்பு ஏற்கனவே எங்கோ அனுபவித்தது போன்ற உணர்வை தர, அவளையும் அறியாமல் மனம் இளகி அவனது தலை வருடி, “எல்லாம் சரியாகிவிடும். கவலை படாதே!” என்றாள்.

அவனும் மெல்ல முனங்கி இது போதும் என்பது போல அவளை விட்டு விலகவில்லை. என்ன செய்வது என்று புரியாமல், “உன் பெயரென்ன மகரக்குட்டி? உன் வீடு எங்கு?” என்று கேட்டாள்.

பொதுவில் யாளிகள் அவர்களின் பூர்வீக உருவிற்கு மாறினாலும், அவர்களால் பேச முடியும். அந்த எண்ணத்தில் வன்னி அவனிடம் கேட்டாள். ஆனால் அதற்கு பதிலளிக்காமல் அவன் முனங்கி அவளை நிமிர்ந்து பார்த்தான்.

வன்னிக்கு அவனது நீல நிற விழி பார்த்து மனம் கொள்ளை போவது போன்ற பிரமை ஏற்பட்டது. அவளையும் அறியாமல் அவனது விழி வருடி, “உன் கண்கள் நீல நிற பவளம் போல் அழகாக இருக்கிறது மகர குட்டி. ஏன் பேச மாட்டேன் என்கிறாய்?” என்று கேட்டாள்.

ஆனால் அவனால் பேச முடிந்தால்தானே! மெல்லதன் முன் வலது காலை எடுத்து வன்னியின் கன்னத்தில் வைத்து இருமுறை மெல்ல, “மேமே…” என்று முனங்கினான்.

வன்னிக்கு அவனது செயலில் சந்தேகம் வர அவனை தன் இரு கைகளில் ஏந்தி அவளது நெற்றியில் அவனது நெற்றியை வைத்து அவனுள் தன் ஆன்மீக சக்தியை செலுத்தி அவனை ஆராய்ந்தாள்.

அப்படி பார்த்தவள், “கலப்பின யாளி. நான்கு யாளிகளின் இரத்த வகை. நீநீ எப்படி 18 வயதுள்ள மனித உருவிற்கு ஆன்மீக இதய வேர் இல்லாமல் மாறினாய்?” என்று வியந்து பார்த்து கேட்டாள்.

அதற்கு பதிலளிப்பவன் போல மெல்ல தன் தலை குனிந்து தன் வாயல் அவன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த நீல நிற கல்லை கவ்வி அவளிடம் காட்டினான். அவனது செயலில் அந்த கல்லை அவன் வாயிலிருந்து வாங்கி தொட்டு பார்த்த வன்னி, “…” என்று விழி விரித்தாள்.

கூடவே,“மந்திர கல். ஆனால் இதனோடு நான் இதுவரை அறிந்திராத பொருள் ஏதோ கலந்திருக்கிறதே! இதுதான் உன் உடல் நிலை இயல்பாக இருக்க காரணமா?” என்று அதனை வருடியவிதமாக அவனை பார்த்து கேட்டாள்.

அதற்கு அவன் ஆமாம் என்பது போல தலையசைத்துவிட்டு, மீண்டும் இயல்பு போல அவளது கழுத்து வளைவில் தலையை வைத்துக் கொண்டான். வன்னிக்கு தன் கையிலிருந்து மகர குட்டியின் செயலை நினைத்து அழுவதா அல்லது சிரிப்பதாக என்று புரியாமல் புன்னகைத்தாள்.

பின், “எது எப்படியோ!. இப்போது இருட்டிவிட்டது. கொஞ்சம் உண்டு விட்டு நாம் உறங்குவோம். நாளை உன்னை உன் வீட்டினரோடு சேர்த்துவிடுகிறேன். இப்போது இருக்கும் சூழலில் உன் செயலை இந்த மகர அரசு காவலர்களிடம் சொன்னால் நீ கெட்ட எண்ணமற்றவனாக இருக்கலாம்.

ஆனால் அத்துமீறி அரண்மனைக்கு நுழைந்த உன்னை என்ன ஏது என்று விசாரிக்கும் முன்னே அவர்கள் சிறையில் அடைத்துவிடுவார்கள். என்ன மணம் என்னிடம் இருக்கிறது என்று என்னை தேடி வந்தாயோ!. உன்னை முன்பு பார்த்தது போல் கூட எனக்கு நினைவில்லை.” என்று புலம்பியபடி அவனை மெத்தையில் கிடத்தி எழுந்தாள்.

அவன் விழுக்கென்று எழுந்து நின்று வன்னியின் அருகில் வந்து அவளது காலை உரசிக் கொண்டு நின்றான். வன்னி மீண்டும் சின்ன சிரிப்பை உதிர்த்து அவனை குனிந்து பார்த்து, “ஆனால் எனக்கும்தான் உன்னை மிகவும் பிடித்திருக்கிறது?” என்று சொல்லி சிரித்து அவனை தன் கைகளில் தூக்கிக் கொண்டாள்.

உன் பெயரென்ன?” என்று நெற்றியோடு தன் நெற்றியை வைத்து கேட்டாள். அவன் இருமுறை, “மேமே…” என்றான். வன்னி சட்டென சிரித்து, “சரி சரிநீ மீண்டும் மனித உருவிற்கு மாறும் போது சொல். அதுவரை, நான் உன்னை பவளன் என்று அழைக்கிறேன்.” என்று கண்கள் சிமிட்டினாள்.

அவன் அதற்கு அந்த பெயர் பிடித்திருப்பது போல, “மேமே…” என்று கத்தி அவள் கன்னத்தில் தன் தலையை வாஞ்சையாக வருடிக்கொண்டான். வன்னி கிளுக்கி சிரித்து , “சரி வா சாப்பிடலாம்.” என்று அந்த அறையிலிருந்த உணவு பலகாரங்களை எடுத்து வைத்தாள்.

பின் இருவரும் உண்டுவிட்டு மெத்தையில் உறங்கினர். அவர்கள் உறங்கி ஓரிரு நாழிகையில் அவர்களது அறையில் ஓர் உருவம் அங்கு இடமாற்றும் சக்கரத்தின் மூலம் வந்துச் சேர்ந்தது.

ஒருவரை ஒருவர் அணைத்தவிதமாக படுத்திருந்த வன்னியையும், மகரக்குட்டியையும் குறுகுறுப்பாக பார்த்து, “நந்தன்இருவரும் ஒருவரை ஒருவர் மறந்துவிட்டிருந்த போதும் இப்படி ஒரு பிணைப்பு எப்படி உருவானது.? விதியை மாற்ற முடியாதுதானோ!” என்று வியந்து முனுமுனுத்தது அந்த உருவம்.

ஆம் வன்னியின் அருகிலிருக்கும் அந்த புதியவன் அவளை பரி அரசிலும் மாதங்க அரசிலும் பார்த்த நந்தனே!. அந்த அறைக்கு புதிதாக வந்த அந்த உருவம் வானதியினது.

வன்னியின் கை மீது தன் தலை வைத்து படுத்திருந்த நந்தனை வன்னியிடமிருந்து பிரித்து கைகளில் தூக்கினாள் வானதி. வன்னியின் அருகாமை விலகியதும் அசௌகரியமாக உணர்ந்து உடல் நெழிந்து கண் விழிக்க இருந்த நந்தனின் நெற்றியில் ஆன்மீக சக்தியை செலுத்தி உறங்க வைத்தாள்.

நந்தனின் தலையை வருடி, “நீ அவள் அளவு சக்தி அடையும் வரையாவது நீ இந்த வெள்ளி எலும்புள்ள பெண்ணை பார்ப்பது நல்லதில்லை. அவளுடன் சேர்ந்து நீயும் அழிந்து போவாய் என் சீடனே. அதனால்…” என்று நிறுத்தி,

இரக்கமே இல்லாமல் மீண்டும் வன்னியின் நெற்றியில் தன் சுட்டு விரலை வைத்து கனவு சக்கரம் மூலமாக நந்தனை பற்றிய நினைவை அழித்தாள். தொடர்ந்து நந்தனின் மனதிலிருந்தும் வன்னியின் நினைவை அழித்தாள். பின் அந்த மாளிகை அறையிலிருந்து இடமாற்றும் சக்கரம் மூலமாக நந்தனுடன் காணமல் போனாள்.

அடுத்த நாள் காலை கண் விழித்த வன்னி ஏதோ முக்கியமானதை மறந்த உணர்வுடன் கண்கள் கசக்கியவிதமாக எழுந்தாள். அன்னிச்சை செயலாக, “சேவகரே!” என்று அழைத்தவிதமாக உடல் முறுக்கி நெட்டி முறித்தாள்.

அவள் குரலுக்கு சேவகர் யாரும் வராததும், கண் விழித்து சுற்றும் முற்றும் பார்த்தவள் அப்போதுதான் தான் மகர அரசுக்கு வந்திருப்பது நினைவு வர, ‘தான் இப்பொது இளவரசி அல்ல. சாதாரண தூதுவ பெண். அப்படி இருக்க நான் அழைத்ததும் சேவகர்கள் எப்படி வருவார்கள்.’ என்று தன் தலையில் தட்டிக் கொண்டவிதமாக மெத்தையிலிருந்து தாவி குதித்துக் கொண்டு எழுந்தாள்.

ஆனால் அவள் எண்ணி முடிக்குமுன்னே அவள் எண்ணத்திற்கு மாறாக அவள் அறைக்கு அடுத்த சில நிமிடத்தில் ஒரு சேவகப்பெண் வந்து, “சொல்லுங்க பரி தூதுவரே! தங்களுக்கு சேவை செய்ய நான் இங்கு வந்திருக்கிறேன்!” என்று நின்றாள்.

வன்னி ஒரு நொடி வந்தவளை வியப்பாக பார்த்தாள். ‘மகர அரசு சதாரண தூதுவராக வந்த எனக்கும் சேவை செய்ய ஒரு பெண்ணை அனுப்பிருக்கிறார்களே!’ என்று ஆச்சரியமுற்று கிளுக்கி சிரித்தாள்.

நேசமாக சேவகியை பார்த்து புன்னகைத்து, “நல்லது. என்னை வெளியில் செல்ல தாயார் செய்.” என்றாள் வன்னி.

வந்திருந்த சேவகியும் , “உத்தரவு தூதுவரே!” என்று கேள்வி எதுவும் கேட்காமல் இட்ட கட்டளை போல வன்னி குளிப்பதற்கும் அந்தபுர குளியல் குளத்திற்கு அழைத்துச் சென்றாள்.

பின் உடன் இருந்து வன்னி குளித்து வந்ததும் அவளுக்கென்று எடுத்து வைத்திருந்த வெள்ளை நிற பட்டு துணியை வன்னிக்கு அணிவித்தாள். மீண்டும் அறைக்கு வன்னியை அழைத்து வந்த சேவகி தொடர்ந்து வன்னிக்கு எளிமையாக தலையலங்காரமும் ஆபரண அலங்காரமும் செய்வித்தாள்.

வன்னி தயாரகி முடிக்கும் அதே நேரத்தில் வன்னியின் அறைக்கு வெளியில் நின்று, “பரி தூதுவரே! காலை உணவிற்கு தங்களுக்காக அரசர் அரசி காத்திருக்கின்றனர்.” என்றான் காவலன் ஒருவன்.