Advertisement

வன்னி கண்கள் மட்டும் தெரியுமளவு முகமூடி அணிந்திருந்த போதும் அவள் பெயரை மாற்றவில்லை. பரி அரசிலிருந்து மகர அரசின் இராஜகுருவிற்கு ஏற்கனவே சந்திரர் வன்னியின் வருகை குறித்து தெரிவித்திருந்தார். வன்னி என்ற பெயரை சொல்லியிருந்த போதும், அவளை, சாதாரண பணிப்பெண் என்றே மகர அரசுக்கு தகவல் அனுப்பப்பட்டது.

வன்னி இடமாற்றும் சக்கரத்தில் பரி அரசில் ஏறியதுமே மகர அரசின் இராஜகுரு இமயனும், இளவரசர் துருவனும் அவளுக்காக மகர அரசின் இடமாற்றும் சக்கரத்தின் அருகில் காத்திருந்தனர். சில நாழிகையிலே வன்னியும் அங்கு வந்துச் சேர்ந்தாள்.

வன்னியை இராஜகுரு இமயனும், துருவனும் இணைந்து, “வாருங்கள் பரி அரசின் தூதுவரே!” என்றனர்.

துருவன் கரம் குவித்து, வணங்கி, “வணக்கம் தூதுவர் வன்னி. மகர அரசின் சார்பாக மகர அரசின் இளவரசன், துருவன் அன்புடன் தங்களை மகர அரசுக்கு வரவேற்கிறேன்.” என்றான்.

வன்னியும் பதிலுக்கு வணங்கி, “வணக்கம் இளவரசர் துருவன். வணக்கம் மகர அரசின் இராஜகுரு.” என்று இருவருக்கும் வணக்கம் கூறி புன்னகைத்தாள்.

அவள் வணங்கியதும் பதிலுக்கு வணங்கிய இராஜகுரு, ‘தான் யார் என்று சொல்லாதபோதும், சாதாரண தூதுவராக வந்த 15 வயதுக் கூட நிரம்பாத பரியாளிப் பெண், எப்படி என் அடையாளம் அறிந்து தான் இராஜகுரு என்று அறிந்தாள்.’ என்று வன்னியை கூர்ந்து பார்த்தார்.

அதே சமயம் துருவன், “சேவகர்களே! பரி அரசின் தூதுவரை அவருக்கு ஒதுக்கிய அறைக்கு அழைத்துச் செல்லுங்கள்.” என்று ஆணையிட்டான்.

துருவன் மற்றும் இராஜகுருவுடன் , இரு காவலர்களும் இரு சேவகர்களும் வந்திருந்தனர். துருவனின் ஆணையை கேட்டு அவர்கள், “உத்தரவு இளவரசே! தூதுவர் வன்னி, எங்களை பின் தொடருங்கள். தங்களின் ஓய்வறைக்கு நாங்கள் அழைத்துச் செல்கிறோம்.” என்றனர்.

வன்னியும், “நன்றி இராஜகுரு மற்றும் இளவரசர் துருவன். ஓய்வுக்குப் பின் மீண்டும் சந்திப்போம்.” என்று விடைப்பெற முயன்றாள்.

ஆனால் வன்னியின் அடையாளத்தில் சந்தேகமுற்ற இமயன் வன்னியை எளிதில் அனுப்புவதாக இல்லை. முகத்தில் புன்னகை மலர, “தூதுவரே! இளவரசரும் நானும் கூட அந்த வழியில்தான் செல்ல வேண்டும். பேசிக் கொண்டே செல்வோமே!” என்று கேள்வியாக கேட்டப் போதும், வன்னியுடன் நடக்க ஆரம்பித்தார் இமயன்.

எதுவும் பேதமாக உணராத வன்னி, “இராஜகுருவும் இளவரசரும் உடன் வருவதில், தூதுவர் வன்னிக்கு மிக்க மகிழ்ச்சி. வாருங்கள் செல்வோம்.” என்று அழைத்தாள்.

சில நிமிடங்கள் வன்னியிடம் பேசி பார்க்க எண்ணிய இமயன், “தூதுவர் வன்னியும், பரி இளவரசியும் கிட்டத்தட்ட ஒத்த எலும்பு வயதுடைவர்களாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அவரும், தாங்களும் அநேகமாக சீடர் தோழர்களாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.” என்று ஓரக்கண்ணால் வன்னியின் விழிகளை ஆராய்ந்தார்.

வன்னி இப்படி இமயம் கேட்கக் கூடுமென்று எண்ணியிருக்கவில்லை போலும், ஒரு நொடி திகைத்து விழித்து, “அது…” என்று திணறிக் கொண்டிருக்கும் போதே,

இராஜகுரு, “பாவம் அவருக்கு ஐந்து வருடத்திற்கு முன் மாதங்க அரசின் பனிமலையில் ஆபத்து நிகழ இருந்து தப்பினார். அதிலிருந்து அவரை பரி அரசு வெளியில் எங்கும் அனுப்புவதில்லை என்று கேள்வியுற்றோம். பரி இளவரசி, நலமுடன் இருக்கிறாரா தூதுவர் வன்னி?” என்று சூசகமாக கேட்டு வன்னியை பார்த்தார்.

துருவனுக்கு திடீரென்று ஏன் தன் இராஜகுரு தொடர்பற்று பரி இளவரசியின் நலன் பற்றி விசாரிக்கிறார் என்று புரியாமல் கேள்வியாக தன் குருவை பார்த்தான். அவரது தீவிர பார்வை வன்னியை ஆராய்வதை அவருடன் கிட்டத்தட்ட 400 வருடமாக இருக்கும் துருவன் சட்டென அறிந்துக் கொண்டான்.

இருந்தும், ‘உதவிக்கு வந்திருக்கும் தூதுவரிடம் இராஜகுருக்கு என்ன சந்தேகம் வந்தது?’ என்ற எண்ணம் வர அவனும் வன்னியை ஆராய்ந்து பார்த்தான். இவ்வாறு இருவரும் தன்னையே பார்ப்பதை அசௌகரியமாக உணர்ந்த வன்னி இருமுறை, “கவ்கவ்…” என்று இரும்பி சங்கூச்சத்தை திசைத்திருப்ப முயன்றாள்.

பின் அவசரமாக, “இளவரசி நலமுடன் இருக்கிறார். நான் கொஞ்சம் ஓய்வெடுக்க வேண்டும். என் இன்றைய ஓய்வுக்குப் பின், நோயால் பாதிக்கப்பட்டவர்களை பார்க்கலாம்.” என்று பேச்சை மாற்ற முயன்று துருவன் மற்றும் இமயனை விட்டு விலகி முன் சென்ற சேவகர்களை தொடர்ந்து சற்று வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

இராஜகுரு வன்னியின் உண்மை அடையாளத்தை சிரதையே இல்லாமல் அவளது செயலில்கண்டறிந்துக் கொண்டார். முதலில், ‘ஏன் வெளியில் ஆபத்து ஏற்படக் கூடுமென்று அறிந்தும் பரி இளவரசியை பரி அரசு இங்கு அனுப்பி இருக்கிறது?!’ என்று திகைத்தார். பின் விஷமமாக புன்னகைத்தார்.

அவரை தொடர்ந்து துருவனுக்குமே வன்னியின் கண்களை பார்த்ததுமே, எங்கோ பார்த்த நினைவு வர, அவளது பேசும் தோரணையிலும், ‘வந்திருப்பது சாதாரண பணிப்பெண்தானா?’ என்ற சந்தேகம் வர தன் குருவை மறுமுறை திரும்பி பார்த்தான். இமயனும் துருவனை அப்போது பார்க்க இருவருள்ளும் ஒத்த உணர்வு வர கண்கள் மின்ன இருவரும் கண்ணசைத்துக் கொண்டனர்.

இமயன், துருவனுக்கு மட்டும் கேட்கும் குரலில், “இளவரசி வன்னியின் உண்மை அடையாளத்தை பரி அரசு, மகர அரசில் உள்ளவர்களுக்கு சொல்ல விரும்பவில்லையென்றால், நாமும் அதை மதிக்க வேண்டும். நமது தற்போதைய குறிக்கோள் நம் மகரர்களுக்கு வந்திருக்கும் அந்த ஆன்மீக இதயவேர் புற்று குணமாவதுதான்.

அதனால் இளவரசி வன்னியின் அடையாளத்தை நாம் அறிந்ததாக காட்டிக் கொள்ளக் கூடாது இளவரசே! அவரை சாதாரண தூதுவ பணிப்பெண் என்றே அழைப்போம். ஆனால் அவருக்கான தங்கும் வசதிகளை ஒருப்படி அதிகமாக்க ஏற்பாடு செய்யச் சொல்ல வேண்டும் இளவரசே!” என்றான்.

துருவனும் தன் குருவின் வார்த்தையை ஆமதிப்பது போல், “நிச்சயம் குருவே! தங்களின் உத்தரவின்படி செய்ய நான் இப்போதே ஏற்பாடுச் செய்கிறேன் குருவே!” என்று அருகிலிருந்த காவலருக்கு கிசுகிசுக்கும் குரலில் ஆணையிட்டான்.

தன் இளவரசரின் வார்த்தைகளை கேட்டதும் அந்த காவலன், அனைவருக்கு முன் சென்றுக் கொண்டிருந்த சேவகர்களிடம் வசதிமிக்க விருந்தாளிகளின் மாளிகைக்கு வன்னியை அழைத்து செல்ல வேண்டுமென்று சொல்லிவிட்டு பின் மீண்டும் வந்து துருவன் பின் வந்து நடக்க ஆரம்பித்தான்.

தன் அடையாளம் ஏற்கனவே மகர இளவரசர் மற்றும் இராஜகுரு அறிந்துவிட்டனர் என்று அறியாத வன்னி சேவகர்கள் அழைத்துச் சென்ற மாளிகை அறைக்குச் சென்று அறையை தாழிட்டுக் கொண்டு பெருமூச்சுவிட்டாள்.

பிறகு முகமூடியை முகத்திலிருந்து கழட்டிய வன்னி அந்த அறையிலிருந்த மெத்தை மீது பொத்தென்று விழுந்தாள். முகம் கருத்து, ‘நான் ஏன் பரி இளவரசி என்று சொல்லக் கூடாது. ஐந்து வருடத்திற்கு முன்பு அந்த இடமாற்று சக்கரம் பழுதாகி பனிமலையில் விழுந்ததிற்கும் என் அடையாளத்தை இப்படி மறைப்பதற்கு என்ன தொடர்பு.’ என்று முனுமுனுத்து புரண்டு படுத்தாள்.

அப்போது அந்த அறையின் மூலையில் தரையில், “தட் தட்என்ற சத்தம் கேட்டது. வன்னி உடனே எச்சரிக்கை உணர்வு வர திடுக்கிட்டு எழுந்து அமர்ந்து அந்த சத்தம் வந்த திசையை நோட்டமிட்டாள். கொலைவெறி எதுவும் அந்த திசையிலிருந்து வராததால் எச்சரிக்கை உணர்வை தளர்த்தினாள்.

ஆனால் அன்னிச்சை செயலாக கண்கள் மூடி கவனிக்கும் சக்கரத்தை அந்த திசை நோக்கி உருவாக்கி நோட்டமிட்டாள். ஆச்சரியம் போல அவளால் எதுவும் உணர முடியவில்லை. அவள் பிரமை என்று தோளை குலுக்கிக் கொண்டு மீண்டும் மெத்தையில் படுத்து உறங்க நினைத்தாள்.

அவள் கண்கள் மூடி லேசாக கண்ணயர்ந்தாள். அப்போது மீண்டும் அந்த அறையின் மூலையில், “தட்தட்…” என்று சத்தம் கேட்டது. வன்னி அரை தூக்கத்தில் நெற்றி சுருக்கி கண் திறந்து மீண்டும் அந்த அறையின் மூளையில் பார்த்தாள். அவள் முழுதும் கண் விழிக்கும் முன்னே, மீண்டும் மீண்டும், யாரோ தரையின் அடியிலிருந்து தட்டுவது போல்,”தட்தட்…” என்று சத்தம் கேட்டது.

வன்னி முழுதும் விழித்துவிட்டாள். மீண்டும் கவனிக்கும் சக்கரத்தை உருவாக்கி சத்தம் வந்த திசையில் பார்த்தாள். எதுவும் அவளாலறிய முடியவில்லை. ஆனால் சத்தம் மட்டும் நின்ற பாடில்லை. சிறுப்பிள்ளையின் ஆர்வகோலாரில் காவலர்கள் யாரையும் கூப்பிடும் எண்ணமில்லாமல் சத்தம் வந்த திசை நோக்கி மெல்ல நடக்க ஆரம்பித்தாள் வன்னி.

சத்தம் வந்த முனையில் சுவரின் ஆளுயர கண்ணாடி மரவேலைப்பாடுடன் இருந்தது. அதன் அருகில் பெரிய மரபலகையும் பல அடுக்குகளும் நிறைந்த மேஜை இருந்தது. அந்த மேஜையின் அடியிலே அந்த சத்தம் கேட்டது. அதன் அருகில் போனதும் மேஜை மீது கை வைத்து ஆன்மீக ஆற்றலை செலுத்தினாள்.

செலுத்தியவள், “மந்திரப்பூட்டு சக்கரம். குறைந்தது ஐந்து சக்கர நிலை உள்ள யாளியால் உருவாக்கப்பட்ட மந்திரப்பூட்டு. அதிசயமாக என்னால் அதன் நுணுக்கத்தை பார்க்க முடிகிறது.” என்று இந்த அறையில் ஏன் மந்திரப்பூட்டு சக்கரம் என்று சந்தேகம் தீருமுன்னே, ஐந்து சக்கர நிலை மந்திரப்பூட்டின் நிலையை தன்னால் கண்டறிய முடிந்ததில் மேலும் திகைத்தாள்.

அதனை திறக்க நான்கு சக்கர நிலையில் உள்ள தன்னால் முடியாது என்று தெரிந்தப் போதும், தொடர்ந்து கேட்ட, “தட்தட்…” என்ற சத்தம் வன்னியை வேறு எதுவும் எண்ண விடவில்லை. உடனே மந்திரப்பூட்டைத் திறக்க நினைத்து தன் ஆன்மீக ஆற்றலை எதிர் திசையில் அந்த மேஜை மீது செலுத்தினாள்.

அவளது தொடர்ந்த முயற்சியாளோ! அல்லது அந்த மேஜையில் அடியில் உள்ளவரும் வன்னிக்கு உதவினாரோ! விரைவிலே அந்த மந்திரப்பூட்டை திறந்து சிறு பிளவு உண்டானது. அந்த பிளவு, உள்ளே இருப்பவரை வன்னி காணுமளவு மெதுவாக பெரிதாகியது.

உள்ளே இருந்த உருவத்தை பார்த்த வன்னி விக்கித்து திகைத்தாள். “நீநீயார் நீஎப்படி இங்கு வந்தாய்?” என்று எச்சரிக்கையுடன் கேட்டாள்.

ஆனால் அவளுக்கு பதிலேதுவும் சொல்லாமல் பதினெட்டு வயதுள்ள ஒருவன் அந்த மந்திரபூட்டு சக்கரத்தின் பிளவில் புகுந்து வெளியில் வந்தான். அவன் வந்ததும் அந்த மந்திரபூட்டு சக்கரம் மீண்டும் மூடிக்கொண்டது.

வன்னியின் கேள்வியை அசட்டையே செய்யாமலும், மீண்டும் மூடிக் கொண்ட மந்திரபூட்டு சக்கரத்தை பற்றிய அக்கறையில்லாமலும், அந்த அறையில் இங்கும் அங்கும் அழைந்து எதையோ தேடுபவன் போல சுற்றினான் அந்த புதியவன்.

வன்னி பொறுமை இழந்து, “ஏய்நீஅத்து மீறி என் அறைக்குள் நுழைந்திருக்கிறாய். நான் காவலர்களை அழைத்தால் என்ன நிகழும் தெரியுமா?” என்று மிரட்டினாள்.

அவளை நொடி திரும்பி பார்த்த அந்த புதியவன், “நான் இந்த அறையுடன் இணைந்த சுரங்க பாதையின் மூலமாக இங்கு வந்தேன். எனக்கு பிடித்த மணம் இந்த அறையில் வீசியதால், அதை தேடி இங்கு வந்தேன்.” என்று வெகு இயல்பு போல சொல்லிக் கொண்டு அந்த அறையின் மூலை முடுக்கில் எல்லாம் சென்று நுகர்ந்து பார்த்தான்.

Advertisement