Advertisement

அத்தியாயம் – 58

வன்னி பதில் சொல்ல முடியாமல் முகம் சோர்ந்து நின்றாள். அங்கு மீண்டும் சில நிமிடங்கள் அமைதி நிலவியது. வன்னி சந்திரரின் வார்த்தைகளை கேட்ட போதும் அவள் முடிவில் பின்வாங்க ஒரு நொடிக்கூட எண்ணவில்லை போலும்.

தீர்க்கமாக அதே இடத்தில் எதுவும் சொல்லாமல் முகம் இறுக சந்திரரை பார்த்து நின்றாள். அவள் பிடிவாதமான முகத்தை பார்த்த சந்திரர் மறுப்பாக தலையசைத்து, ‘இளவரசியின் பிடிவாதத்தை என்ன சொல்வது?’ என்று மனதில் நினைத்து பெருமூச்சுவிட்டார்.

“சரிங்க இளவரசி. தங்களுக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன். மகர அரசிலிருந்து, நம் அரசுக்கு ஒரு பணி கோப்பை(file) சில காலத்திற்கு முன்பு அனுப்பினர்.” என்று எழுந்து அவர் அறையில் இருந்த பல கோப்புகள் அடங்கிய அடுக்கை(bookshelf) நோக்கிச் சென்றார்.

பல கோப்புகளை கைகளால் கடந்து கடைசியாக அந்த மகர அரசின் பணிக்கான கோப்பை எடுத்து, “முதலிலே எச்சரிக்கை தருகிறேன் இளவரசி. இது தாங்கள் இதுவரை முடித்த பணிகள் போல் அல்ல.

குறைந்தது ஐந்து சக்கர நிலைக் கொண்டவர்களுக்கே இது போன்ற பணிகள் பொதுவில் கொடுக்கப்படும். தாங்கள் முயற்சிக்க விரும்பினால், நான் மேலும் விவரங்கள் தருகிறேன். என்ன சொல்கிறீர்கள் இளவரசி. மேலும் பேசலாமா?” என்று வன்னியை திரும்பி பார்த்து கேட்டார் சந்திரர்.

வன்னி வியந்து தன் புருவங்கள் உயர்த்தி, ‘ஐந்து சக்கர நிலையா!’ என்று கேள்வியாக தன் குருவை பார்த்தாள். அவர் முகத்தில் எதையும் அறிய முடியாமல் குரலில் லேசான தயக்கம் வர, “ச…சரிங்க குருவே. நான் முயன்று பார்கிறேன். நீங்க மேலும் விவரங்கள் சொல்லுங்க.” என்றாள்.

வன்னி சரி என்றுதான் சொல்வாள் என்று யூகித்துவிட்டவராக சந்திரர் புன்னகைத்து, “இளவரசி இது மகர அரசின் இரகசியமான பணிக்கான கோப்பு. நாம் அதிக ஆட்களின் கவனம் ஈர்க்காமல் இந்த பணியை செய்ய வேண்டும்.” என்று மகர அரசின் பணிக்கான கோப்பை வன்னியிடம் கொடுத்தார்.

வன்னி கோப்பை கைகளில் வாங்கியபடி சந்திரரை பார்த்தாள். வன்னி எதுவும் கேட்குமுன்னே, “முதலில் அமருங்கள் இளவரசி.” என்று தன் மேஜைக்கு முன் போடப்பட்டிருந்த நாற்காலியை காண்பித்தார். பின் அந்த அறையில் இருந்த சேவகியை அழைத்து தேந்நீர் கொண்டு வர பணித்தார்.

பின் அவரும் வன்னிக்கு எதிர்புரம் அமர்ந்து தன் முகவாயில் தன் கைகளை முஷ்டியாக தாங்கி, மேலும் பேச ஆரம்பித்தார். “தற்போது நான் மட்டுமே இந்த பணியினை ஆராய்ந்துக் கொண்டிருக்கிறேன்.

இளவரசி, அந்தக் கோப்பை முழுதும் படித்து பாருங்கள். மகர அரசின் அந்த நோயுக்கு நாம் மருந்து கண்டறிய வேண்டும். தற்போது மகர அரசில் பதினோறு மகர யாளிகள் இந்த வியாதியால் பாதிக்கபட்டிருக்கின்றனர்.

தங்களின் பணி, அந்த கோப்பில் இணைக்கப்பட்டுள்ள நோய் மாதிரிக்கு மருந்து கண்டறிய வேண்டும். அது கண்டறிய எந்த மூலிகை வேண்டுமென்றாலும் நம் மருத்துவ மந்திரியிடம் தாங்கள் பெற்றுக் கொள்ளலாம். நான் அதற்கு, நம் அரசரின் அனுமதியையும் வாங்கி தருகிறேன்.

இதில் ஏதேனும் சந்தேகம் வந்தால் என்னிடம் கேட்கலாம். ஆனால் தங்களுக்கு ஒரு வார கால அவகாசம்தான் என்னால் தர முடியும். தாங்கள் பரி அரசிலே நோய் மாதிரியை வைத்து அதற்கான மருந்து கண்டுபிடிக்கலாம். ஒரு வேளை ஒரு வாரத்திற்குள் தங்களால் எந்தவித முன்னேற்றமும் இதில் அடைய முடியவில்லையென்றால்…”

என்று சற்று நிறுத்தி, “மகர அரசுக்கு போவது குறித்து என்னிடம் மீண்டும் கேட்காதீர்கள். இந்த பணியில் மட்டும்தான், என்னால் தங்களின் உண்மை அடையாளமான தாங்கள் இளவரசி என்பதை மறைத்து, சாதாரண பரியாளியாக, வெறும் மருந்து குப்பிகளை கொண்டு செல்லும் சேவகப் பெண்ணாக, மகர அரசுக்கு அனுப்ப முடியும்.

இதல்லாமல் வேறு எந்த பணியையும் தங்களுக்கு கொடுக்க எனக்கு துணிவில்லை. ஏனேன்றால் மற்ற பணிகள் தங்களை பரி இளவரசி என்ற அடையாளத்தை, நான் வெளிப்படையாக சொல்ல வில்லையென்றாலும், தங்களின் சக்தி நிலையை தாங்கள் பயன்படுத்தும் போது தெரியபடுத்திவிடும்.” என்றார்.

அப்போது அறைக்கு சேவகி கொண்டு வந்த தேந்நீரை வன்னிக்கும் கொடுத்தார். வன்னி பெருமூச்சுவிட்டு தேந்நீரை அருந்தியவிதமாக தன் குருவை சொல்வதை தீவிரமாக நெற்றி பொட்டில் சுறுக்கம் தோன்ற கேட்டாள்.

சந்திரர் தொடர்ந்து, “அது மகர அரசுக்கு மட்டுமல்லாமல் தங்களுக்கு தீங்கு விளைவுக்கும் எண்ணம் கொண்டவர்களுக்கும் தாங்கள்தான் இளவரசி என்பதை சொல்லிவிடும். அது உங்களுக்கு மீண்டும் ஒரு ஆபத்தை விளைவிக்க நேரிடலாம்.

அதனால் என்னால் வேறு எந்த மகர அரசின் பணியையும் தங்களுக்கு கொடுக்க முடியாது. தங்களின் பாதுகாப்பே எனக்கு முக்கியம். அதனால் இந்த வாய்ப்பை செவ்வனே பயன்படுத்தி இந்த பணிக்கான தீர்வை காண முயற்சி செய்யுங்கள்.” என்று கோர்வையாக சொல்லி முடித்தார்.

வன்னி தன் குருவின் ஒவ்வொரு வார்த்தைகளையும் கிரகித்துக் கொண்டிருந்தாள். தன் குருவின் வார்த்தையில் அவரது அக்கறையையும் புரிந்துக் கொண்டு, “புரிகிறது குருவே! எனக்கு இந்த வாய்ப்பை தந்ததற்கு நன்றி. நான் இதனை சிறப்புர முடிக்க முயற்சிகிறேன்” என்றாள்.

“ம்ம்.” என்று தலையசைத்தவர், அவரது மேஜையில் முன்பு மூடிவைத்திருந்த கோப்பை பிரித்து பார்த்தவிதமாக, “அப்போது நாம் அடுத்த வாரம் சந்திப்போம். ஒருவேளை இடையில் சந்தேகம் வந்தால் என்னை தயங்காமல் வந்து பாருங்கள் இளவரசி.” என்றார் சந்திரர்.

வன்னி, தன்னை கிளம்பு என்று தன் குரு சொல்லாமல் சொல்கிறார் என்பதை அவரது செயலில் உணர்ந்து, லேசாக சங்கூச்சம் (embarrassing) அடைந்தாள். அருந்தி முடித்த தேந்நீர் கிண்ணத்தை அருகிலிருந்த சேவகியிடம் தந்துவிட்டு, அவளது இருக்கையிலிருந்து எழுந்தாள்.

பின், “வருகிறேன் குருவே” என்று கோப்பை கையில் எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.

பாவம் வன்னிக்கு தெரிவதற்கில்லை. அந்த மகர அரசின் பணி பத்தினைந்து வருடங்களுக்கு முன்பே பரி அரசிடம் மகர அரசு தந்தது என்றும். அதற்கு பல முறை சந்திரர் மருந்து கண்டுபிடிக்க முயன்று தோற்றிருக்கிறார் என்றும்.

வெறுமனே, ‘வன்னியை மகர அரசுக்கு அனுப்ப முடியாது.’ என்று சொல்ல மனமில்லாமல், இப்படி தீர்க்க கடினமான பணியை வன்னியிடம் கொடுத்து, அதனை செய்ய முடியாமல் வன்னி வந்து நிற்கும் போது,

‘தங்களுக்கு ஏற்கனவே நான் வாய்ப்பளித்துவிட்டேன். ஒருவேளை தாங்கள் மருந்து கண்டறிந்துவிட்டிருந்தால், நான் தங்களை மகர அரசுக்கு அனுப்பியிருப்பேன். ஆனால் இனி என்னால் எதுவும் செய்யமுடியாது’ என்று சொல்லி மறுத்துவிட சந்திரர் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் சந்திரர் நினைப்பதெல்லாம் நடந்துவிடுமா என்ன? வன்னி சந்திரரின் அறையிலிருந்து மகர அரசின் பணிக்கான கோப்பை கைகளில் ஏந்தி தன் அறைக்கு வந்து இருக்கையில் அமர்ந்தாள். வந்தவள் ஒரு பெருமூச்சுவிட்டு தீர்வு காண வேண்டுமென்ற தீர்க்கமுடன் கோப்பை பிரித்து படிக்க ஆரம்பித்தாள்.

இதற்கு முன் பல மருந்து குப்பிகளை தன் ஆன்மீக ஆற்றலையும், பல மூலிகைகளையும் கொண்டு வன்னி தயாரித்திருந்த போதும், அவையனைத்தும் ஏற்கனவே வரையறுக்கபட்ட மருத்துவ செயல்முறையினை(Recipe) பயன்படுத்தியதால் தயாரிக்கபட்டவை.

இதுவே முதல் முறை, மருந்தின் செயல் முறையை அவளே அறிந்து, மருந்து கண்டுபிடிக்க முயற்சிப்பது. அதனால் அவளுள் ஒருவித புத்துணர்ச்சியும் குதுகலமும் குடியேறியது.

அதே உத்வேகத்துடன் வன்னி, கோப்புடன் இணைத்து கொடுக்கப்பட்ட நோய் கிருமி மாதிரி அடங்கிய கண்ணாடி குப்பியை(4) எடுத்து அதிலிருந்து ஒரு சிட்டிகை அளவு நோய் கிருமியை மந்திர தட்டில்(2) கிடத்தினாள்.

பின் தன் ஆன்மீக ஆற்றலை அதில் செலுத்தி அதன் மூலக்கூறுகளை(particals) ஆராய்ந்தாள். மனதில் மூலகூறுகளின் அடையாளம் அறிந்தவள் அவற்றை நோய் நிலையிலிருந்து(decease) இயல்பு நிலைக்கு(Neutral) மாற்ற எந்த மூலிகைகளை எல்லாம் பயன்படுத்த வேண்டிருக்கும் என்று அவள் படித்த அனுபவதிலிருந்து குறிப்பெடுத்தாள்.

எல்லா நோய் மூலக்கூறுகளுக்கும் இணையான மூலிகைகளை கண்டறிந்தவள், ஒரு மூலக்கூறை மட்டும் இயல்பு நிலைக்கு மாற்ற, மூலிகையை அறிய முடியமால் தவித்தாள். சற்று குழம்பி, பின் எப்படியும் கண்டறிந்துவிட வேண்டும் என்ற ஆர்வமுடன் பல மருத்துவ புத்தகங்களை ஆராய்ந்தாள்.

இருந்தும் எந்த குறிப்பும் அறிய அவளால் முடியவில்லை. பின் ஒரு முடிவுக்கு வந்து, முதலில் உறுதியாக தெரியும் மூலக்கூறுகளுக்கான மூலிகைகளையும், புதிய மந்திர பானையையும்(3) மருத்துவ மந்திரியிடம் வாங்கி வந்தாள்.

பின் வாங்கி வந்த ஒவ்வொரு மூலிகைகளையும் மந்திர பானையில் போட்டு, பானையை தன் இரு உள்ளங்கைகளிலும் தாங்கி, தன் ஆன்மீக ஆற்றலை அதனுள் செலுத்தி, ஒவ்வொரு மூலிகையையும் ஆன்மீக ஆற்றலில் கரைத்தாள்.

இவ்வாறு அனைத்து மூலிகைகளும் கரைந்தப்பின், மந்திர பானையை மேஜை மீது வைத்து, அதிலிருந்து ஒரு துளி மந்திர மருந்தை எடுத்து, முன்பு மந்திர தட்டில் கிடத்திய நோய் கிருமி மீது தெளித்தாள்.

அவளது கணிப்பு சரியாகும் படியாக நோய் கிருமியின் எல்லா மூலக்கூறுகளும் இயல்பானது(neutral).ஆனால் ஒன்றை தவிர. ஓரளவு முன்னேற்றம் அடைந்த போதும். முழுதும் அவளால் மகிழ்ச்சியடைய முடியாதபடி முன்பு குணமான, நோய் மூலக்கூறு, மீண்டும் கிருமிகளால் பாதிக்கப்பட்டது.

வன்னி கோபமுடன் நோய் மூலக்கூறு இருந்த அந்த மந்திர தட்டை முறைத்து பார்த்தாள். ‘என்ன நீ இப்படி செய்கிறாய்.?’ என்று மருந்து துளிகளை பார்த்தாள். கோபமாக மீண்டும் ஒரு முறை மந்திர மருந்தின் ஒரு துளியை எடுத்து அந்த நோய் கிருமி மீது தெளித்தாள்.

அந்த நோய் கிருமி மீண்டும் குணமாகியது. ஆனால் முன்பு போல மீண்டும் கிருமி தன்மையாக மாறியது. ‘ஒரு மூலக்கூறுதானே இயல்பாகவில்லை. அப்படி இருக்க கிருமியின் வீரியம் குறையாமால், இது என்ன பழையபடி முழு நோயும் திரும்பிவிடுகிறது.’ என்று எரிச்சலுற்றாள் வன்னி.

தொடர்ந்து, “இதற்கே ஐந்து நாட்கள் ஆகிவிட்டதே. அந்த ஒரு நோய் மூலக்கூறுக்கான குறிப்புகள் எங்குமே கிடைக்கவில்லையே? எத்தனை முறை நான் மூலிகைகளை வாங்கி வருவது.” என்று புலம்பியபடி, மீண்டும் நூலகத்திற்கு சென்று, இன்னும் சில மருத்துவ புத்தகங்களை எடுத்துக் கொண்டும், மற்றொரு முறை சில மூலிகைகளை வாங்கிக் கொண்டும், தன் அறைக்கு வந்தாள்.

மேஜை மீது மூலிகைகளை வரிசையாக அடுக்கிவிட்டு அதன் அருகிலே அமர்ந்துக் கொண்டு ஒவ்வொரு புத்தகமாக எடுத்து படிக்க ஆரம்பித்தாள். மந்திர தட்டில் இருந்த நோய் கிருமி மூலக்கூறுகளை புத்தகத்தின் குறிப்புகளுடன் ஒப்பிட்டு பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஆனால் ஒரு குறிப்பும் அறிய முடியாமல் போக, கோபமாக கையிலிருந்த புத்தகத்தை டப் என்று மூடினாள். அப்போது எதிர் பாராதவிதமாக அவளது கை புத்தக பக்கங்களுக்கு மாட்டி அவளது மூடிய விசையில் அவளது ஆட்காட்டி விரலை காயமாக்கியது.

“ஸ்ஸ்…” என்று விரலை வலியில் உயர்த்தி அவள் முகத்தின் முன் பார்த்தாள். அவளது விரலிலிருந்து ஒரு துளி இரத்தம் வலிந்து மேஜை மேல் இருந்த மூலிகைகளின் மீது விழுந்தது. அதனை கவனிக்காத வன்னி கண் மூடி தன் விரலில் ஏற்பட்ட காயத்தை ஆன்மீக ஆற்றல் கொண்டு குணப்படுத்தினாள்.

தொடர்ந்து நூலகத்திலிருந்த அனைத்து புத்தகத்தையும் விடாமல் படித்துமுடித்துவிட்டாள். அப்படி இப்படி என்று இராஜகுரு சொன்ன அந்த ஏழு நாளும் முடிந்து கடைசி நாளும் வந்துவிட்டது.

நம்பிக்கையே இல்லாமல் அசட்டையாக கடைசியாக ஒருமுறை முயன்று பார்க்க எண்ணி, முன்பு வாங்கி வந்த மூலிகைகளை, ஒவ்வொன்றாக மந்திர பானையில் போட்டு அதனை ஆன்மீக ஆற்றலால் கறைக்க ஆரம்பித்தாள் வன்னி.

இரு நாழிகைக்குள் மூலிகைகள் முழுதும் கரையந்து மந்திர மருந்து திரவியம் உருவாகியது. அதில் ஒரு துளியை எடுத்து, அக்கறையில்லையென்பது போல் ஒரு கன்னத்தில் ஒருகையை வைத்துக் கொண்டு, நோய் கிருமி இருந்த மந்திர தட்டில் அதனை போட்டாள்.

அப்போது ஆச்சரியம் தரும்விதமாக இம்முறை அந்த நோய் கிருமி முழுதும் மறைந்து முற்றிலும் மாறி குணமாகியது.எதுவும் பெரியதாக மாற்றம் இருக்காது என்று அசட்டையாக மருந்து துளியை சேர்த்தவள், விக்கித்து விழி விரித்து, மந்திர தட்டில் மீண்டும் ஆன்மீக ஆற்றலை செலுத்தி, நோய் குணமாகிவிட்டதா என்று ஆராய்ந்துவிட்டாள்.

‘என்ன நிகழ்ந்தது?! முன்பு போட்ட அதே மூலிகைகளை தான் இம்முறையும் போட்டேன். அப்படி இருக்க இம்முறை மட்டும் எப்படி கிருமிகளை இந்த மருந்து கொன்றது?’ என்று வாய்விட்டே அலற்றினாள் வன்னி.

‘என்னவெல்லாம் போட்டோம்!’ என்று ஒரு நொடி யோசித்தவள், மூலிகைகளை மந்திர பானையில் சேர்த்த நிகழ்வை தன் ஆழ் மனதின் நினைவிலிருந்து அவளுக்கு அவளே கனவுசக்கரமிட்டு மீண்டும் ஒருமுறை ஒளிபடம் போல் ஓட்டினாள்.

அப்போது ஒரு மூலிகையில் பசுமை நிறத்திற்கு மேல் கருஞ்சிவப்பு நிற புள்ளி தென்பட்டது. உடனே ஒளிப்படத்தை நிறுத்தி, உன்னிப்பாக அந்த சிவப்பு புள்ளியை பார்த்தாள். ‘இது என்ன சிவப்பு நிறம். எப்படி மூலிகையில் இது கலந்தது?’ என்று முனுமுனுத்தாள் வன்னி.

பின் ஏதோ தோன்ற மருத்துவ மந்திரியிடம் மூலிகை வாங்கியப் போது நிகழ்ந்த நிகழ்வுகளை ஒளிப்படமாக தன் கனவுச் சக்கரத்தில் ஓடவிட்டாள். அப்படி பார்த்தவள் அப்போது அந்த சிவப்பு புள்ளி எந்த மூலிகைகளிலும் இல்லை என்பதை உறுதி படுத்திக் கொண்டாள்.

தொடர்ந்து அவளது நினைவுகளை ஓடவிட்டவள், மேஜை மீது மூலிகைகளை பரப்பியப்போதும் அந்த சிவப்பு புள்ளி இல்லாதது கவனித்தாள். சில நிமிடங்களில் நேற்றைய மொத்த நினைவையும் ஒளிப்படமாக ஓட்டியவள், அவள் விரல் காயமுற்ற நிகழ்வை தன் கனவு சக்கரத்தில் பார்த்தாள்.

உடனே விவரம் அறிந்து, “ஆ…” என்று ஒரு நொடி அலரி, “என் இரத்தம்?!” என்று ஒரு நொடி விழி விரித்தவள், “உடனே தன் விரலை குத்தூசியால் குத்தி அதன் தன்மையை ஆன்மீக ஆற்றல் கொண்டு ஆராய்ந்தாள்.

ஆராய்ந்து உண்மை அறிந்தவள் உடனே முகம் வியர்த்தாள். “என் இரத்தம் இந்த நோயைக் குணப்படுத்தும் என்று நான் எப்படி குருவிடம் சொல்ல முடியும். அப்படி சொன்னாலும் என் இரத்தம் கொண்டு மருந்து தயாரிக்க நிச்சயம் குரு சம்மதிக்க மாட்டார்.” என்று திகிலுற்றாள் வன்னி.

மனதுள் ஒரு சந்தேகம் வர தன் சேவக பெண்ணை அழைத்து அவளது ஒரு துளி இரத்தத்தை எடுத்து அதனை பரிசோதித்தாள். ஆனால் அதில் வன்னியது போன்று மருத்துவ குணமில்லை. அதனால் இந்த நோய் கிருமிக்கும் தனது விஷேச வெள்ளி எலும்பிற்கும் ஏதோ தொடர்பு இருக்கும் என்று யூகித்தாள்.

‘எப்படி குருவிடம் இந்த உண்மை சொல்வது.’ என்று நெற்றி பொட்டில் முடிச்சுவிழ யோசித்து குழம்பி கடைசியில் மகர அரசுக்கு போக வேண்டும் என்ற ஆர்வத்தில் குருவிடம் உண்மையை மறைக்க முடிவெடுத்தாள்.

‘குருவிடம் 11 மருந்து குப்பிகளை தயாரித்து கொடுத்துவிட்டு, என் இரத்தமல்லாத மூலிகைகளை மட்டும் செயல்முறையில் குறிப்பிட்டு விடலாம்.’ என்று மனதுள் முடிவெடுத்தாள். அந்த முடிவெடுத்ததும் வன்னியின் முகம் பிரகாசமாகி, கிளுக்கி சிரித்தாள்.

வன்னியின் செயல் புரியாமல் பார்த்த சேவகி, அவளது முகமாற்றங்களையும் கவனிக்க தவறவில்லை. மனதுள் ஏதோ பிசய, “இளவரசி, என்ன நிகழந்தது.” என்று கேட்டாள் சேவகி.

அப்போதுதான் தன் அறையில் சேவக பெண் இருப்பதையே வன்னி கவனித்தாள். உடனே குரல் தடுமாற, “அ…அது…ஒ…ஒன்றுமில்லை. என் குரு தந்த பணியை நான் முடித்துவிட்டேன். அதனை பரிசோதிக்கவே உன்னை அழைத்தேன்.” என்று பாதி உண்மையும் பாதி பொய்மையும் சேர்த்து உரைத்தாள்.

பிறகு அதே உத்வேகத்துடன், “நீ செல். நான் இந்த மருந்துகளை எடுத்துக் கொண்டு குருவை பார்க்க போகிறேன். நீ போ…” என்று எழுந்து வந்து சேவகியின் முதுகில் கையை வைத்து அவளை அறையின் வாயிலை நோக்கித் தள்ளியபடி, “போ…போ…போ…” என்று விரட்டினாள்.

சேவகி புரியாமல் தன் இளவரசியை திரும்பி திரும்பி பார்த்தவிதமாக, “சரிங்க இளவரசி. நான் போகிறேன்.” என்று அங்கிருந்து கிளம்பினாள். வன்னி பின் மீண்டும் தன் பயிலும் அறைக்கு வந்து மீதமிருந்த மூலிகைகளின் அளவை எடுத்து பார்த்தாள்.

ஒவ்வொன்றாக எண்ணியவள், ‘இதனை கொண்டு இன்னும் 12 மருந்து குப்பிகள் தயாரிக்க முடியும். இதற்கு எனது 12 இரத்த துளிகள் தேவை படும்.’ என்று முனுமுனுத்து மருந்து குப்பிகளை தயாரிக்க ஆரம்பித்தாள்.

முதல் முறை போல் அல்லாமல் இம்முறை திரவ நிலையில் நிறுத்தாமல் மருந்து திட நிலை அடைந்து மத்திரையாகும் வரை ஆன்மீக ஆற்றலை செலுத்தினாள். திட நிலை அடைந்ததும் அதனை கண்ணாடி குடுவைகளில்(4) சேகரித்தாள்.

முதல் மாத்திரை தயாரிக்க இரண்டு நாழிகை எடுத்துக் கொண்டவள், படிப்படியாக வேகத்தை அதிகரித்து, கடைசி மாத்திரை தயாரிக்க அரை நாழிகை மட்டுமே எடுத்துக் கொண்டாள். கடைசியாக 6 நாழிகைக்குள் 12 மாத்திரைகளை தயாரித்தவள் அவளது ஆன்மீக ஆற்றல் முழுதையும் பயன்படுத்திவிட்டிருந்தாள்.

முகமெல்லாம் வெளுத்து வியர்த்து முகம் சோர்ந்து அப்படியே மந்திர பானையின் அருகிலே மயங்கி படுத்துவிட்டாள். அந்த நேரத்தில் தான் வன்னியின் அறையை அவ்வப்போது நோட்டமிட்டிருந்த சேவகி எதுவோ சரியில்லையென்று இராஜகுரு சந்திரரை அங்கு அழைத்துக் கொண்டு வந்திருந்தாள்.

மயங்கி கிடந்த வன்னியை பார்த்து ஒரு நொடி திடுக்கிட்ட சந்திரர் இரெட்டில் வன்னியின் அருகில் வந்து அவள் கை மணிக்கட்டை தொட்டு பார்த்தார். ஆன்மீக ஆற்றலை முழுதும் பயன்படுத்திவிட்டிருந்த வன்னி அவளையும் அறியாமல் தவ நிலைக்குச் சென்றுவிட்டிருந்தாள்.

அவளுக்கு எதுவுமில்லை என்பதை உணர்ந்ததும் பெருமூச்சுவிட்டு வன்னியை கைகளில் ஏந்தி அவளது மெத்தையில் கிடத்தினார். பின் சேவகியை உடனிருக்க பணித்துவிட்டு, வன்னியின் பயிலும் அறைக்கு மீண்டும் வந்தார்.

வன்னியின் பயிலும் அறையும், அவளது உறங்கும் அறையும், அருகருகில் இருக்கும். அதனால் சில வினாடியிலே சந்திரர் அவளது பயிலும் அறைக்கு வந்து அவளது மந்திர பானையின் அருகில் வந்து விட்டிருந்தார்.

அவர் அவசர அவசரமாக, அவரது அறையிலிருந்து இங்கு வந்ததற்கு மற்றொரு காரணம் சேவக பெண், ‘இளவரசி தாங்கள் தந்த வேலைக்கான தீர்வு கண்டுவிட்டார். அது கண்டறிந்தப்பின் அவரது பயிலும் அறையை விட்டு நகராமல் மந்திர பானையில் எதையோ செய்துக் கொண்டிருக்கிறார்.’ என்ற வார்த்தைகளே.

‘கிட்டத்தட்ட 15 வருடங்களாக தீர்க்க படாத அந்த வியாதிக்கான மருந்தை வெறும் ஏழு நாளில் இளவரசி கண்டறிந்துவிட்டாரா!’ என்ற வியப்பில் சந்திரருக்கு பேச்சே வரவில்லை. வன்னி முன்பு பரிசோதித்து நோய் தீர்த்த மந்திர தட்டை அவரது ஆன்மீக ஆற்றலில் பரிசோதித்தார்.

ஒரு நொடி மூச்சுவிடவும் மறந்து விழி விரித்தவர், வன்னி எழுதி இன்னமும் மேஜையில் கிடத்தி இருந்த மூலிகைகளின் குறிப்புகளடங்கிய செயல்முறையை படித்தார். ‘இதே மூலிகைகள் தான் நானும் பயன்படுத்தினேன்.

என்ன இந்த இரண்டின் அளவு மட்டும் கொஞ்சம் குறைவு! இருந்தபோதும் இதெப்படி சாத்தியம்.’ என்று குழம்பினார். இருந்தும் வன்னியின் இந்த சாதனையை அரசரிடம் உடனே சொல்ல அவர் உள்ளம் துருதுருத்தது.

உடனே அரசவை நோக்கி செல்ல திரும்பியவர், அப்போதுதான் 12 மாத்திரைகள் அடங்கிய மருந்து குப்பியை மேஜையின் மற்றொரு முனையில் பார்த்தார். அந்த மருந்து குப்பியின் மூடியை விலக்கி அதனை நுகர்ந்து பார்த்தவர், ‘12 மாத்திரைகளும் சிறந்த தரத்தில் இருக்கிறது. வன்னியின் மயக்கத்திற்கான காரணம் இதுதானா.’ என்று உண்மை உணர்ந்தார்.

பின் வன்னியின் அறைக்கு மீண்டும் வந்து அவள் முன் வெள்ளை நிற ஆன்மீக ஆற்றல் பொதிந்த பலிங்கு கல்லை வைத்தார். அந்த கல் ஏற்கனவே வன்னியின் உடலில் கண்ணுக்கு தெரிபடும் ஆன்மீக வெள்ளை நிற துகள்களாக அவளது உடலில் விரைந்து பாய்ந்தது.

வன்னி இதமான உணர்வில், “ம்ம்…” என்று முனுங்கி அப்படியே கண்ண்யர்ந்தாள். வன்னியின் இந்த செயலில் புன்னகை மலர சந்திரர் அரசரை நோக்கிச் சென்றார். அடுத்த நாள் வன்னி எழுந்த போது, அவள் முதலில் அறிந்தது, அவளை மகர அரசுக்கு அனுப்ப அவளது தந்தை மற்றும் குருவின் அனுமதி பதிந்த அரசானையே.

வன்னி குதுகலத்துடன் மெத்தையிலிருந்து எழுந்து குதித்து, இருமுறை அவளது அறையில் சுற்றி வந்தாள். பின் அவளது அன்னையின் அறிவுறைபடி முகத்தில் திரை மறைத்துக் கொண்டும், ஒரே ஒரு சக்கர நிலை கொண்ட பரியாளியை போலவும் மகர அரசுக்கு செல்ல ஆயுத்தமானாள்.

பல அறிவுரைகளுக்கு பின்பு, ஆபத்தில் உடனே பாதுகாப்பான இடத்திற்கு இடமாற்றும் சக்கரம் பதித்த இரு ஆன்மீக கருவிகளை அணிந்துக் கொண்டு, வன்னி பரியரசின் இடமாற்றும் சக்கரத்திலிருந்து தனியாக மகர அரசுக்கு 12 மாத்திரைகளுடன் கிளம்பிச் சென்றாள்.

Author Note:

(1) முந்தைய அத்தியாயங்களில் நான் பணியை(task) பிரச்சனை என்று குறிப்பிட்டிருந்தேன். ஆனால் பிரச்சனை என்பதை விட பணி என்ற தமிழ் வார்த்தையே சரியாக இருக்குமென்று இனி வரும் அத்தியாயங்களில் பணி என்று குறுப்பிடுவேன். குழம்ப வேண்டாம்.

(2) மந்திர தட்டு

(3) மந்திர பானை

(4) மந்திர கண்ணாடி குப்பி

Advertisement