Advertisement

அத்தியாயம் – 57

வன்னியின் 15வது வயதில்…

வன்னி பரி அரசின் குருகுலத்தில் ஒரு மரத்தடியில் மற்ற சீடர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள். அன்று சந்திரரின் மற்ற சீடர்களுக்கு பாதுகாக்கும் சக்கரத்தை கொஞ்ச ஆன்மீக ஆற்றலில் எப்படி திறம்பட உருவாக்குவது என்று சொல்லிக் கொடுத்திருந்தார்.

அதனை செயல்படுத்துவது எப்படி என்று மற்ற பரி யாளி சீடர்களுக்கு வன்னி செய்து காட்டிக்கொண்டிருந்தாள். அவ்வப்போது அவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் சந்தேகங்களை விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தாள் வன்னி.

அப்போது வன்னியின் சேவகப்பெண் குரு குலத்தின் வாயிலிருந்து அவ்வப்போது எட்டி எட்டி வன்னியை பார்த்துக் கொண்டிருந்தாள். பொதுவில் அவளது சேவகி வன்னியை குருகுலத்தில் பயிலும் நேரத்தில் தொந்தரவு செய்ய மாட்டாள்.

தீடீரென்று அவள் இங்கு வந்திருப்பதை உணர்ந்த வன்னி, “நீங்க எல்லோரும் நீங்களாகவே சில முறை இதனை முயற்சி செய்யுங்கள். ஒருவேளை இன்னமும் சந்தேகங்கள் இருந்தால் நாளை கற்று தருகிறேன். இப்போது நான் கிளம்ப வேண்டும்.” என்று கண் சிமிட்டி சொன்னாள்.

வன்னி இளவரசி என்ற போதும் மற்ற சீடர்கள் அவளுடன் உரிமையுடனும் தோழமையுடனும் இருந்தனர். அதனோடு ஏற்கனவே 4 ஆம் சக்கர நிலையின் முதல் நிலை அடைந்துவிட்டிருந்த போதும் வன்னி எந்தவீத கர்வமும் இல்லாமல் யார் பாடத்தில் சந்தேகம் கேட்டாலும் தயங்காமல் விளக்கம் அளிப்பாள்.

அதனால் அவள் மீது அவர்கள் அனைவருக்கும் மதிப்பும் மரியாதையும் அன்பும் நிறைந்திருந்தது. பொதுவில் வன்னி ஒவ்வொருவரும் ஒரு முறையாவது கற்றதை செயல்படுத்தும் வரை உடனிருப்பாள்.

ஆனால் இன்று அவள் பாதியிலே கிளம்புவதை பார்த்து, “இளவரசி. ஏதேனும் முக்கிய வேலையா?” என்று உரிமையாக கேட்டனர்.

வன்னி நுழைவாயிலில் வழக்கமாக அந்தி மாலையில் வரும் சேவகி சாயும் வேளைக்கு 5 நாழிகைக்கு முன் வந்திருப்பதை மீண்டும் ஒருமுறை பார்த்து, “பெரிதாக ஒன்றுமில்லை. என் சேவகி இங்கு வந்திருக்கிறாள்.

அநேகமாக மதி முகிலன் மற்றும் பிற மூன்று சீடர் தோழர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற தகவலுடன் வந்திருப்பாள் என்று தோன்றுகிறது. இல்லையென்றால் இப்படி நாம் கற்கும் வேளையில் நுழைவாயிலுக்கு வந்து தவித்துக் கொண்டிருக்க மாட்டாள்.

நான் என்னவென்று கேட்டுவிட்டு அவசரம் எதுவும் இல்லையென்றால் மீண்டும் வருகிறேன். இல்லையென்றால் நாம் நாளை பார்ப்போம்.என்றாள் புன்னகையுடன்..

சீடர் தோழர்களில் ஒருவன், “. ஆமாம் அவர்கள் ஐவரையும், ஆறுமாதம் முன்பு வெளியுலக அனுபவம் பயிற்சிக்காக நம் குரு பரி அரசிலிருந்து அனுப்பினார்.என்றான்.

மற்றொருவன், “அவர்கள், இளவரசியை விடவும் பெரியவர்கள் என்ற போதும், அவர்கள் இன்னமும் முதல் சக்கரம் நிலையில் உள்ள அனுபவமற்றவர்கள் தானே. எப்படி வெளியில் சங்கட படுகிறார்களோ!” என்றான். தனை கேட்ட வன்னியின் முகம் சுருங்கியது.

இறுதியாக, “அவர்கள் திரும்ப வந்ததும் அவர்களின் அனுபவம் கேட்டு தெரிந்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்குப்பின் எங்களை குரு வெளியுலக பயிற்சிக்கு அனுப்பிவிடுவார்.” என்று பெருமூச்சுவிட்டான்.

தாங்கள் செல்லுங்க இளவரசி. அங்களுக்கும் அவர்களை பற்றி அறிந்துக் கொள்ள ஆர்வமாக இருக்கிறது. தங்களுக்கு தெரிந்தால் எங்களுக்கும் சொல்லுங்க இளவரசி. நாம் நாளை பார்ப்போம்.” என்றனர்.

வன்னி எதுவும் அவர்களிடம் வளவளக்காமல்,“ம்ம்…” என்று தலையசைத்து அவர்களிடமிருந்து விடைப்பெற்றுக் கொண்டு துள்ளி குதித்துக் கொண்டு குருகுலத்தின் வாயில் நோக்கிச் சென்றாள்.

வன்னி வெளியில் வருவதை பார்த்த சேவகி முகம் மலர, “இளவரசி. தங்களின் சிநேகிதர்கள் சற்றுமுன் பரி அரசின் தகவல் மையத்திற்கு தொடர்பு கொண்டனர். தாங்கள் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்ததால் தகவல் மையத்தில் இருப்பவர்கள் என்னிடம் தகவல் தந்து தங்களை அழைத்து வர அறிவுறுத்தினர்.” என்றாள்.

சேவகி இங்கு வந்ததன் காரணம், உண்மையிலே தன் சிநேகிதர்கள் குறித்த தகவல்தான் என்றதில் வன்னியின் சோர்ந்த முகம் பிரகாசமானது.

சற்றும் தாமதிக்காமல், சேவகியின் கைப்பற்றி உடனே பறக்கும் சக்கரத்தை உருவாக்கி, அப்போது ஏன் நிற்கிறாய்? வா போகலாம்.” என்று கிளுக்கி சிரித்து வழக்கமாக பறக்கும் வேகத்தை விடவும் வேகமாக தகவல் மையம் நோக்கி பறந்தாள்.

15 எலும்பு வயதென்ற போதும், வன்னி நான்கரை அடியுடன் பருவம் எட்டி பார்க்கும் வனப்புடன் இருந்தாள். முன்பிருந்த குழந்தை தனம் சற்று மாறியிருந்த போதும், அவள் முகம் முழுதும் இளம்பெண் உருவிலும் இல்லை.

தன்னைவிட அரை அடி உயரமிருந்த அவளது சேவகியின் கைப்பற்றி வன்னி பறந்து செல்வதை தரையில் இருந்தவர்கள் பார்த்து புன்னகைத்தனர்.நம் இளவரசி இன்னமும் சிறுப்பிள்ளையின் துடுக்குதனம் குறையாமல் சுற்றிக் கொண்டிருப்பதை பாருங்கள்.” என்று ஒருவரும்,

அவசியமில்லாமல் சிறு சிறு தூரத்திற்கும் பறக்கும் சக்கரம் பயன்படுத்துகிறார் நம் இளவரசி. எவ்வளவு ஆன்மீக ஆற்றல் வீணாகும்? அது எதை பற்றியும் கவலையில்லாமல் பறந்து திறிந்துக் கொண்டிருகிறாரே.” என்று குறையாக மற்றொருவரும்,

என்ன இருந்தும் நம் இளவரசியின் திறமைக்கு இதென்ன கடினமா என்ன? சிலர் 500 வருடம் ஆனாலும் மூன்றாம் சக்கர கடை நிலைக் கூட அடைவதில்லை. நம் இளவரசி 15 வயதில் 4ஆம் சக்கர நிலை அடைந்திருப்பது சாதாரண செயல் அல்லவே!

அவருக்கு இந்த பறக்கும் சக்கரம் பெரிய விஷமல்ல.. ” என்று இன்னொருவரும் என ஒருவர் மாற்றி ஒருவர் மெச்சுதலாக வன்னியை பற்றி பேசிக் கலைந்தனர்.

வன்னிக்கு தரையில் அவளை குறித்து மற்றவர்கள் நினைப்பதெல்லாம் கருத்தில் படவில்லை. அவளது சிநேகிதர்களை பற்றி அறிய வேண்டும் என்ற எண்ணமே மேலோங்க தகவல் மையத்திற்கு சில நிமிடங்களில் வந்து சேர்ந்தாள்.

அவள் வருவதை பார்த்த தகவல் மைய மந்திரி புன்னகைத்து, “வாங்க இளவரசி. தங்களின் சிநேகிதர்கள் மீண்டும் ஒரு நாழிகையில் தங்களிடம் பேச அழைப்பதாக தகவல் தந்தனர். அதனால் தாங்கள் சற்று நேரம் காதிருங்கள்.” என்றான்.

வன்னி தன் சிநேகிதர்கள் குறித்த தகவலை மட்டுமே எதிர் பார்த்திருந்தாள். அப்படி இருக்க மதி முகிலனிடம் பேச முடியும் என்றறிந்ததும் அவளுக்கு குதுகலத்தில், “அப்படியா? சரிங்க மந்திரியாரே. நான் காத்திருக்கிறேன்.” என்று கிளுக்கி சிரித்த விதமாக அவளுக்காக சேவகர்கள் எடுத்து போட்ட நாற்காலியில் அமர்ந்துக் கொண்டாள்.

அவளது சிநேகிதர்களும் அவளை அதிக நேரம் காத்திருக்க விடாமல் சில நிமிடங்களிலே ஆன்ம இணைப்பில் பரி அரசின் தகவல் மையத்தில் இணைந்தனர்.

அவர்கள் இணைப்பில் வந்ததும், “இளவரசி தங்களின் சிநேகிதர்கள் மகர அரசின் தகவல் மைய இணைப்பிலிருந்து பேசுகின்றனர். தாங்கள் அந்த அறையில் சென்று பேசலாம். அந்த அறையின் சுவரில் மகர அரசின் தகவல் மைய அறையில் இருக்கும் தங்களின் சிநேகிதர்களின் உருவத்தை காண இயலும்.” என்றார் தகவல் மைய மந்திரி.

வன்னி, “நன்றி மந்திரியாரே. நான் உள்ளே சென்று அவர்களிடம் பேசுகிறேன்.” என்று வணங்கிய பின் ஆன்ம இணைப்பு அறைக்குச் சென்றாள்.

அந்த அறையின் சுவரில், மதியும், முகிலனும் மற்ற மூன்று சீடர்களும் வன்னி அவர்கள் எதிரில் இருக்கும் சுவரில் தெரிவதை அங்கிருந்து ஆர்வமாக பார்த்தனர். முதலில் மதியே பேச ஆரம்பித்தாள்.

ஆறுமாதத்திலே வன்னியிடம் தெரிந்த வளர்ச்சி மதிக்கு புன்னகையளித்தது. வன்னி, எப்படி இருக்கிறாய்?” என்று மதி புன்னகைத்தாள்.

மதியின் குரல் கேட்ட வன்னி, “மதி.. நான் நலம். நீங்க எல்லோரும் எப்படி இருக்கீங்க? வழியில் எந்த வித பிரச்சனைகளும் இல்லைதானே.” என்று புன்னகையுடன் கேட்டாள்.

மதி பதில் சொல்லுமுன்னே முகிலன் முந்திக் கொண்டு, “இளவரசி. நாங்க எல்லோரும் நலம். எந்த பிரச்சனையும் இல்லை. எங்களிடம் தந்தவை எல்லாம் சின்ன சின்ன பிரச்சனைகள்தான். அதனால் யாருடைய உயிருக்கும் பாதிப்பு தரும்படியான நிலை எதுவும் ஏற்படவில்லை.

போதாதற்கு எங்களின் பாதுகாப்புக்கென்று இரண்டு நான்கு சக்கர பாதுக்காவலர்கள் உடன் இருக்கின்றனரே. ஒரு குரல் கொடுத்தால் அவர்கள் வந்துவிட போகிறார்கள். அதனால் எங்களை நினைத்து கவலை படாதே. ஆனால் நிறைய கற்றுக் கொண்டோம்! ” என்றான் படப்படவென்று.

மதி கண்களை உருட்டி முகிலனை பார்த்து, “முகிலன். நான் பேசிக் கொண்டிருக்கிறேன் தானே. உன் முறை வரும் போது பேச வேண்டியது தானே.” என்றாள் குரலில் கடுப்பாக.

முகிலன் மதியை பார்த்து, “ஏய் மதி, யார் பேசினால் என்ன? நான் சொல்வதை தானே நீயும் சொல்ல போகிறாய். என்னை அவசியமில்லாமல் சண்டைக்கு இழுக்காதே!” என்றான் வீராப்பாக.

மதி, “யார் சண்டையிடுவது?” என்று முறைத்தவள், சற்று நிறுத்தி, எதோ நினைவு வந்தவளாக நக்கலாக அவனை பார்த்து, “போன மாதம் அந்த கிராமத்தில் யார் கோழியோடெல்லாம் சண்டை போட்டுக் கொண்டு நின்றது? நானா? நீயே!” என்று கேட்டு சிரித்தாள்.

உடனிருந்த மற்ற சீடர்களும் முன்பு நிகழ்ந்த நினைவில் சிரித்தனர்.

மதியின் வார்த்தைகளில் முகிலனுக்கு சங்கூச்சம் தர முகம் சிவந்தான். அதை நினைவு படுத்தியது மட்டுமல்லாமல் வன்னியிருக்கும் போது மதி சொன்னதில் எரிச்சலுற்று, “நீநீஉன்னை…” என்று பற்களை கடித்துக் கொண்டு மதியை அடிக்க அவள் அருகில் சென்றான்.

அறையிலிருந்த அனைவரும் கலகலவென சிரிக்க, வன்னியும் சிரித்தவிதமாக, “என்ன? கோழியுடன் சண்டையா? முகிலன் என்ன கதை அது?” என்று கற்பனையில் நினைத்து அவளும் கலகலவென்று சிரித்தாள்.

முகிலன் எதுவும் சொல்லாமல் மதியின் பின் ஒழிந்தவிதமாக நிற்க சீடர்களுள் ஒருவன், “இளவரசி அது ஒன்றுமில்லை. முன்பு நாங்க மாதங்க அரசுக்கு சென்றிருந்தோம். அங்கு எங்களுக்கு தந்த இரண்டாவது பிரச்சனை, ஒரு கிராமத்தில் ஒவ்வொரு வாரமும் கோழிகள் காணமல் போனதன் காரணம் கண்டு பிடித்து தீர்வு காண வேண்டும்.

அதன் காரணம், அந்த கிராமத்தின் அருகிலிருந்த நீர்வீழ்ச்சிக்கு அருகில் சில பாம்பு முட்டைகள் உடைந்து புதிதாக குட்டி பாம்புகள் பிறந்திருக்கிறது. அவைகளுக்கு உணவு தர தாய் பாம்பு வாரம் ஒருமுறை ஒரு கோழியை குறிவைத்து ஒருவித நறுமணத்தை ஈர்க்கும் விஷத்தை அந்த கோழியின் உடலில் சேர்த்துவிட்டு சென்றிருக்கிறது.

அதனால் எப்போதெல்லாம் அதன் குட்டிகளுக்கு உணவு வேண்டுமோ அந்த தாய் பாம்பு அந்த நறுமணத்தை வெளியிட, போதையுற்றது போல அந்த விஷத்தால் பாதிக்கப்பட்ட கோழி அந்த தாய் பாம்பின் கூட்டுக்குள் தானாக ஓடி செல்லும் போல.

அன்று அப்படி புத்திகெட்டு சென்ற ஒரு கோழியை தடுக்க நம் சீடர் தோழர் முகிலன் முயன்றார். ஆனால் பாருங்கள் ஏற்கனவே அறிவற்ற கோழி, போதை மயக்கத்தில் முகிலனை ரிஷிமுனி என்றா நினைக்கும்.

அதன் பாதையை மறைத்து நின்ற முகிலனிடம் எதிரியை பார்ப்பது போல் பார்த்திருக்கிறது. முகிலனும் பதிலுக்கு முறைத்துக் கொண்டு அதன் வழி மறைத்து நின்றிறார். அதன் பிறகு இருவருக்கும் சண்டை வர, அவர் ஆடையெல்லாம் கிளிந்து தொங்கும் அளவுக்கு அந்த கோழி அவருடன் போரிட்டது.

அதனை இளவரசி பார்த்திருக்க வேண்டும். இராஜாவை போல் வீராப்பாக சென்ற முகிலன் பிச்சை காரரை போல் திரும்பி வந்தததை நினைத்தால் இப்போதும் சிரிப்பு தாங்க முடியவில்லை. அப்படி சண்டையிட்டும் கோழி முகிலன் கையிலிருந்து தப்பி ஓடிவிட்டது என்றால் பாருங்கள்.” என்று விழுந்து விழுந்து மூன்று சீடர்களும் சிரித்தனர்.

மதி மற்றவர்களை போல கலகலவென்று சிரிக்கவில்லையென்றபோதும் அடக்க முடியாமல் வாய் மீது கை வைத்து இருமுறை இரும்பி அவள் நிலையை சரி செய்ய முயன்றாள்.

முகிலன் அதற்கு மேலும் பொறுக்க முடியாமல், “ஆமாம். இப்போது என்ன. நான் கோழியுடன் சண்டையிட்டேன்தான். நான் சண்டையிட்டு அதன் உடலில் என் ஆன்மீக விளிப்பை செலுத்தாமல் விட்டிருந்தால் அந்த பாம்பின் சேட்டை அறிய நமக்கு எவ்வளவு காலம் ஆகியிருக்குமோ!.

எனக்கு உதவி செய்யாமல் அருகில் இருந்து அப்போது சிரித்தது போததென்று இளவரசியிடமும் சொல்லி சிரிக்கிறீர்களா?” என்று முகிலன் பற்களை நரநரவென கடித்தான். பின் மதியிடம் திரும்பி, “மதி இதெல்லாம் உன்னால்தான். உன்னை..” என்று கோபமாக பார்த்தான்.

மதி அக்கறையில்லை என்பது போல் தன் தோளை குலுக்கினாள். வன்னி அவர்கள் இருவரின் அருகில் இல்லையென்ற போதும், அவர்களிம் பேசியதில் மனம் லேசாக கலகலவென சிரித்து, மதி, முகிலன். நீங்க இருவரும் எப்போதுதான் மாற போகிறீர்காளோ!. முகிலன், மதி உன்னிடம் விளையாடுகிறாள். அவளிடம் சண்டைக்கு போகாதே!” என்றான்.

வன்னியும் முகிலன் தான் சண்டைக்கு போவதாக சொன்னதில் முகம் சோர்ந்து, “வன்னி நீயும் மதியை போல என்னை குறை சொல்கிறாய் பார். நான் உங்க இருவர் மீதும் கோபமாக இருக்கிறேன்.” என்று முகம் திருப்பி கொண்டு நின்றான்.

18 வயதான போதும், எந்த கஷ்டங்களும் இல்லாமல் ஒரு மந்திரியின் குடும்பத்தில் பிறந்து பரி அரசின் இளவரசியுடனே சுற்றி திறந்த முகிலன் இன்னமும் சிறுப்பிள்ளையின் செல்லத்துடனே இருந்தான்.

அதனால் அவன் சிறுப்பிள்ளைதனமான இந்த செயலில் மதி கண்களை உருட்டி பார்த்தாள். வன்னி, “சரி. சரி முகிலன் கோபம் கொள்ளாதே. நானும் விளையாடினேன். நீ அந்த பிரச்சனைக்கு தீர்வு கண்ட முறை சிறந்தது.

காணமல் போக இருக்கும் பொருளில் நம் ஆன்மீக இணைப்பை வைப்பதால் அதன் இருப்பிடத்தை நாம் கண் மூடினால் அறிய முடியும். உண்மையிலே இது சிறந்த யோசனைத்தான்.” வன்னி அவனது செயலை பாராட்டினாள்.

முகிலன் உடனே அசடு வலிந்து பின்னந்தலையை தவவிய விதமாக, “ஆன்மீக விளிப்பை அந்த கோழியில் பதித்தது என்னமோ நான்தான். ஆனால் அந்த யோசனையை தந்தது மதி.” என்று உண்மையை உரைத்தான். மதி ஒரு நொடி முகிலனை பார்த்தாள். ஆனால் எதுவும் பேசவில்லை.

வன்னி கிளுக்கி சிரித்து, “எனக்கு தெரியும் நீங்க இருவரும் சேர்ந்து ஒரு செயல் செய்தால் அது திறம்பட இருக்கும்.” என்று தன் சிநேகிதர்களை எண்ணி பெருமைக் கொண்டாள் வன்னி.

சற்று நிறுத்தி, “மற்றதெல்லாம் இருக்கட்டும். எப்போது பரி அரசுக்கு வருகிறீர்கள். எனக்கு எப்போது உங்களோடு விளையாட முடியுமென்று இருக்கிறது. நானும் உங்களுடனே இந்த பயணத்தில் வந்திருப்பேன்.

ஆனால் நம் குருக்கள் இருவரும்தான், ‘அது ஒரு சக்கர நிலை உள்ளவர்கள் உலக அனுபவம் பயில வரையறுக்கப்பட்ட பிரச்சனைகள் அடங்கிய தொகுப்பு. நான் சென்றால் எல்லாம் உடனே தீர்வாகிவிடும். உங்களுக்கு கற்க வாய்ப்பிருகாது.’ என்று தடுத்துவிட்டனர்.

நீங்க ஓரிரு மாதத்தில் வந்துவிடுவீர்கள் என்று பார்த்தால் ஆறுமாதம் ஆகியும் வரவில்லை. இப்போது எங்கு இருக்கிறீர்கள். எத்தனை பிரச்சனைகளை தீர்வு கண்டிருக்கிறீர்கள். இன்னும் எத்தனை முடிக்க வேண்டும்.” என்று கேள்விகளாக அடுக்கிக் கொண்டுச் சென்றாள்.

முகிலன் சிறுப்பிள்ளைதனம் மறைந்து, “இளவரசி, நாங்க இப்போது மகர அரசில் இருக்கிறோம். அநேகமாக நாங்க மீண்டும் பரி அரசிற்கு வர ஆறுமாதமாவது ஆகுமென்று நினைக்கிறோம். எங்களுக்கும் எப்போது அங்கு வருவோம் என்று இருக்கிறது.” என்று குரலில் சோகம் தோன்ற சொன்னான்.

வன்னி திகைத்து, “ஆறுமாதமா? ஏற்கனவே ஆறுமாதம் ஆகிற்று உங்களை பார்த்து. உங்களோடு விளையாடி. இன்னும் ஆறுமாதம் ஆகுமா?என்று ஆற்றாமையுடன் குறைப்பட்டாள்.

மதி வன்னியின் மனம் புரிந்து அவளிடம் விளக்கமாக எடுத்துரைத்தாள். “வன்னி, நாங்க பரி அரசிலிருந்து கிளம்பியபோதே நம் குரு, நாங்க பறக்கும் சக்கரம் பயன்படுத்திதான் பயணம் செய்ய வேண்டும் என்று உறுதியாக சொல்லிவிட்டார்.

தனோடு நாங்க நான்கு அரசிலும் குறைந்தது இரண்டு சிறிய பிரச்சனைகளையாவது தீர்வுகண்டிருக்க வேண்டும். அப்போதுதான் எங்களின் இந்த பயிற்சி பயணம் வெற்றியடைய முடியும் என்றார்.

நாங்க கிளம்பும் போதும் எங்களிடம் பரி அரசில் அப்போது நிகழ்ந்த இரு சிறிய பிரச்சனைகளின் தொகுப்பை தந்தனுப்பினார். அதனை முடிக்கவே எங்களும் இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. அதனை முடித்து பின் நாங்க மேற்கு நோக்கி பயணித்து மாதங்க அரசுக்குச் சென்றோம்.

உனக்கே தெரியும். ஒரு சக்கர நிலை கொண்ட எங்களால் எவ்வளவு வேகமாக பறக்கும் சக்கரம் கொண்டு பயணிக்க முடியும்? நாங்க பரி அரசிலிருந்து மாதங்க அரசிற்கு செல்ல கிட்டத்தட்ட ஒன்றரை மாதத்திற்கும் மேலாகிவிட்டது.

மாதங்க அரசவையில் நம் குரு ஏற்கனவே எங்களின் வருகைக்குறித்து தகவல் அளித்திருப்பார் போல. எங்கள் ஐவருக்காக ஏற்கனவே இரண்டு மாதங்க அரசை சார்ந்த கிராமங்களில் நிகழ்ந்து வந்த இரண்டு பிரச்சனைகளை எங்களிடம் தந்து முடித்து அறிக்கை தரச் சொன்னனர்.

அது முடிக்க எங்களுக்கு ஒரு மாதத்திற்கும் மேல் ஆகிவிட்டது. அது முடித்ததும் மாதங்க அரசிலிருந்து உன்னிடம் பேச மாதங்க அரசின் தகவல் மையத்தில் அனுமதி கேட்டோம். ஆனால் அவர்களிடம் நம் குருக்கள் என்ன சொன்னார்களோ! எங்களை அனுமதிக்கவில்லை.

வேறு வழியில்லாமல் நாங்க அங்கிருந்து மகர அரசுக்கு அடுத்த பயிற்சி பிரச்சனைகளை தீர்வு காண வந்தோம். இங்கு இன்றுதான் வந்து சேர்ந்தோம். உன்னிடம் பேச மகர அரசின் தகவல் மைத்தில் அனுமதி கேட்டோம்.

அநேகமாக இங்கும் எங்களை அனுமதிக்க மாட்டனர் என்றிருந்தோம். ஆனால் அதிருஷ்டவஸ்மாக இங்கு உன்னிடம் பேச அனுமதித்தனர். அதனால் உடனே உன்னை தொடர்பு கொண்டோம். நாளை காலை மகர அரசிடம் இந்த அரசில் நிகழும் பிரச்சனை தொகுப்பை வாங்கி அது நிகழும் இடத்திற்கு சென்று விடுவோம்.

அது முடிந்ததும் மீண்டும் நாங்க இங்கிருந்து கிளம்பும் முன்பு உனக்கு தொடர்பு கொள்கிறோம். உன்னிடம் இன்றுபேச முடிந்ததில் எங்க எல்லோருக்கும் மகிழ்ச்சி.” என்று கோர்வையாக எடுத்துச் சொன்னாள் மதி.

வன்னி, மதி சொன்னதை அமைதியாக கேட்டு, “ம்ம்.புரிகிறது. அப்போது இன்னும் குறைந்தது ஆறுமாதமாவது நான் காத்திருக்க வேண்டும்.” என்று முனுமுனுத்து முகம் சோர்ந்தாள்.

முகிலன் வன்னியின் முக சோர்வு தாங்காமல், “வன்னி நாங்க பரி அரசுக்குள்ளே இருந்தால், நீ வேறு பிரச்சனை தீர்வு காண வெளியில் வரும் வேளையில் எங்களை காண முடிந்திருக்கும். ஆனால் நாங்க இருப்பது மகர அரசில். வேறு வழியும் இல்லை.

நீ கவலை படாதே! இந்த பயணத்தில் நிறைய கற்றுக் கொண்டோம். முதல் பிரச்சனை தீர்வு கண்டதை ஒப்பிடும் போது இப்போதெல்லாம் எங்களின் வேகம் அதிகரித்திருக்கிறது. நாங்க ஆறுமாதத்திற்கு முன்பே கூட வந்தாலும் வந்துவிடுவோம்.” என்றான்.

வன்னி முகிலனின் பதிலில் லேசாக புன்னகைத்து, “சரி முகிலன். நான் காத்திருக்கிறேன். நான் குருவிடம் இடையில் உங்களை காண வேறு ஏதேனும் வழி இருக்கிறதா? என்று கேட்டு பார்கிறேன்.” என்றாள்.

அதன் பிறகு ஓரிரு வார்த்தைகள் பொதுவில் பேசிவிட்டு ஆன்ம இணைப்பை துண்டித்தனர். வன்னி பரி அரசின் தகவல் மையத்திலிருந்து யோசனையுடனே தன் அறைக்கு வந்தாள். பின் மனதில் ஏதோ முடிவெடுத்தவளாக அன்று ஓய்வெடுத்துவிட்டு மறு நாள் தன் குருவை சந்திக்க சென்றாள்.

சந்திரர் அவரது அறையில் அலுவல் பார்ப்பதற்கான மேஜையின் முன் அமர்ந்துக் கொண்டு ஏதோ அறிக்கை புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார். அப்போது, “இராஜகுருவே! தங்கள் சீடர். இளவரசி வன்னி. தங்களை காண வந்திருக்கிறார்.” என்று அறைக்கு வெளியிலிருந்து காவலர் குரல் கொடுத்தார்.

சந்திரர் புத்தகத்திலிருந்து விழி உயர்த்தாமல், “வரச் சொல்.” என்றார்.

வன்னி அறைக்குள் வந்து, “வணக்கம் குருவே!” என்று வணங்கி நின்றாள்.

புத்தகத்திலே கண்ணாக சந்திரர், “வணக்கம் இளவரசரி. தற்போது தங்களின் பயிற்சி நேரம். அப்படி இருக்க தாங்கள் இப்போது என்னை காண வருவதற்கான காரணம் என்ன?” என்று நேரடையாக கேட்டார்.

வன்னி சந்திரரின் நேரடி கேள்வியில் சற்று தயங்கினாள். இருந்தும் தைரியமாக, “குருவே! நாநான் மகர அரசில் நிகழும் ஏதாவது ஒரு பிரச்சனையை தீர்வுகான விரும்புகிறேன். எனக்கு அதற்கான வாய்ப்புகிடைக்குமா?” என்றாள்.

சந்திரர் கையிலிருந்து புத்தகத்தை மேஜை மீது வைத்துவிட்டு நிமிர்ந்து வன்னியை கூர்ந்து பார்த்தார். வன்னியும் சலிக்காமல் அவரை திருப்பி பார்த்திருப்பதை பார்த்து அவளது நோக்கத்தின் தீவிரம் உணர்ந்த சந்திரர் புன்னகைத்து, “ தீடீரென்று ஏன் மகர அரசுக்கு செல்ல வேண்டும்.

நம் பரி அரசிலே சில பிரச்சனைகள் தங்கள் சக்கர நிலை உள்ளவர்களால் தீர்வு காண முடியும் அளவில் இருக்கிறது. அதில் ஒன்றை முயற்சிக்கலாமே!” என்று தன் முகவாயில் தன் இரு கைகளையும் முஷ்டியாக வைத்து மேஜை மேல் தன் கைகளை ஊன்றி கேட்டார்.

வன்னி அவசரமாக, “குருவே! நான் மகர அரசிற்கு இது வரை சென்றதில்லை. மகர யாளிகளின் கனவு சக்கரத்தை நான் கற்ற போதும், அதனை திறம்பட பயன்படுத்த எனக்கு கொஞ்சம் பயிற்சி வேண்டும்.

அதனோடு கனவு சக்கரத்திலிருந்து விடுப்படும் முறைகளை கற்றப் போதும் எனக்கு இன்னமும் அதில் முழு நம்பிக்கை இல்லை. அதனால் ஒரு பயிற்சிக்காக…” என்று அவள் முழுதும் சொல்லாமல் இழுத்துக் கொண்டிருக்கும் போதே!.

சந்திரர் சின்ன சிரிப்பை உதிர்த்து, “தங்களின் சிநேகிதர்களை காண வேண்டுமென்று நேரடையாக சொல்லுங்க இளவரசி. தங்களின் திறமை எனக்கு தெரியாதா என்ன? தங்களால் 4 சக்கர நிலை உள்ள யாருடைய கனவு சக்கரத்தையும் எளிதில் உடைக்க முடியும்.

தங்களின் பயிற்சி வேகம் எனக்கு தெரியும். என்னிடம் உண்மையை மறைத்து தாங்கள் என்ன செய்ய போகிறீர்கள்ய்? ம்ம்?” என்று கேட்டார். தன் குட்டு வெளிப்பட்டதில் வன்னி முகம் சிவந்தாள். ஆனால் எதுவும் பேசவில்லை.

மதி,முகிலன் மற்ற சீடர்கள்,என்ன செய்துக் கொண்டிருக்கின்றனர் என்று அவ்வப்போது அவர்களுடன் சென்ற காவலர்கள் சந்திரரும் தகவல் அளித்துக் கொண்டிருந்தனர். அதனால் அவர்கள் நேற்று வன்னியிடம் பேசியதை சந்திரரும் அறிவார்.

அதனால் இன்று வன்னி வந்து மகர அரசுக்கு செல்ல வேண்டும் என்று கேட்டதில் அவள் நோக்கத்தை எளிதில் யூகித்துவிட்டார். சற்று நேரம் அந்த அறையில் அமைதி நிலவியது.

தங்களை நான் மகர அரசுக்கு அனுப்பியது தெரிந்தால், தங்களின் மருத்துவ குரு கௌரி, என்னை திட்டி தீர்த்து விடுவார். ஐந்து வருடத்திற்கு முன்பு மாதங்க அரசில் நிகழ்ந்த நிகழ்வின் புதிரே இன்னமும் தீர்ந்த பாடில்லை. தங்களை தேடி வந்த கரணியனின் இருப்பிடம் அறியபடவில்லை.” என்றார்

ஐந்து வருடத்திற்கு முன் நிகழ்ந்த நிகழ்வு என்றதும் வன்னியின் முகம் கருத்தது. இருந்தும் தன் குருவை நிமிர்ந்து அவள் பார்க்கவில்லை.

சந்திரர் தொடர்ந்து , ” அப்படி இருக்க தங்களை உலகின் அடுத்த முனையில் இருக்கும் மகர அரசுக்கு எப்படி என்னால் அனுப்ப முடியும். தங்களுக்கு தீங்கு விளைவிக்க நினைப்பவர்களுக்கு தாங்கள் எங்கள் பாதுகாப்புக்கு வெளியில் இருப்பது தெரிந்தால் என்ன நிகழும் என்று யோசித்து பார்த்தீர்களா இளவரசி?” என்று நிதானமாக கேட்டார்.

Author Note:

Yes. Correct-அ guess பண்ணிடீங்க. next நம போக போரது மகர அரசுக்கு.

Advertisement