Advertisement

அத்தியாயம் – 56

வன்னியும் அவளுடன் இரு காவலர்களும் இருந்த பாதுகாப்பு சக்கரம் பொத்தென்று வெள்ளை புல்வெளி போல் இருந்த சரிவான பனி மலையில் விழுந்தது. அவர்கள் விழுந்த அதிர்வில் நிலைபட்டிருந்த பனிமலை, இளகி அவர்கள் மூவரையும் சரிய விட்டது.

இடமாற்றும் சக்கரத்தினுள் இருக்கும் போதே உருவாக்கிவிட்டதால் அந்த பாதுகாப்பு சக்கரம் அத ஆன்மீக ஆற்றல் கொண்ட பனி மலையில் முழுதும் செயலிழக்காமல் மூவரையும் கொண்ட கோளமாக பனி சரிவில் உருள ஆரம்பித்தது.

இரு காவலர்களும் இப்படியே உருண்டுச் சென்றால் சில நிமிடங்களில் இது பெரிய பனி சரிவை ஏற்படுத்தக் கூடும் என்றும், அருகில் உள்ள கிராமங்களையும் இது பாதிக்குமென்றும் உணர்ந்தனர்.

அதனோடு அவர்களது பாதுகாப்பு சக்கரம் அதிக நேரம் தாக்கு பிடிக்காது என்பதையும் அவர்கள் உணர்ந்து மனதுள் முடுவெடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து தலை அசைத்தனர். பின் ஒருவன் உடுக்கையை(1) எடுத்து கண்கள் மூடி வாசிக்க ஆரம்பித்தான்.

மற்றொருவன் கொக்கரையை(2) எடுத்து வாசிக்க ஆரம்பித்தான். இரு காவலர்களின் வாசிப்பில் முன்பு உருவாக்கிய கோள வடிவ பாதுகாப்பு சக்கரம் கனசதுர வடிவிற்கு மாறியது. இருந்தும் பனி சரிவு முழுதும் நிற்கவில்லை.

தொடர்ந்து இருவரும் தங்களின் இசை மூலம் பாதுகாப்பு சக்கரத்திலிருந்த ஆன்மீக ஆற்றலை ஆட்டுவித்தனர். அவர்கள் இசைக்கேற்ப பெரிய கன சதுர வடிவமாக இருந்த பாதுகாப்பு சக்கரம் அதன் கொள்ளளவில் குறைந்த சிறிய கன சதுரமானது.

பின் அதன் ஒரு முனையில் வெள்ளை நிற ஆன்மீக ஒளியில் சங்கலி போல இணைப்பு உருவாகி நீண்டது. அது அருகில் ஏதேனும் பற்றுகோள் இருக்கிறதா என்று சரிவுக்கு பக்கவாட்டில் பாம்பு போல் சீறிச் சென்றது.

வன்னி இரு காவலர்களின் செயலையும் பார்த்து அவர்களுக்கு உதவும் எண்ணமுடன் அவளது குழலை எடுத்து ஊத முயன்றாள். ஆனால் அவளது குழலுக்கு ஏற்ப அங்கிருந்த ஆன்மீக ஆற்றல் அசைய மறுத்தது.

வேறு வழியில்லாமல் குழலூதுவதை நிறுத்திவிட்டு இரு காவலர்களையும் அவர்கள் உருவாக்கிய ஆன்மீக சங்கலியையும் மாறி மாறி பார்த்தாள். நல்ல வேளையாக காவலர்களின் முயற்சி வீணாகாமல் விரைவிலே அந்த சங்கலி ஒரு பற்றுகோலை பற்ற அவர்களது பாதுகாப்பு சக்கரம் மேலும் நகராமல் அப்படியே நின்றது.

அது நின்றதும் பனி சரிவின் வேகம் மெல்ல குறைந்து, லேசாக நிலைபட்டது. பனி சரி நிலைபட்டதை உறுதி கொண்ட காவலர்கள் தங்கள் இசை கருவிகளை வாசிப்பதை விடுத்து பெருமூச்சுவிட்டனர்.

பின் இருவரும், ‘வன்னியை எப்படி எந்தவித பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பான இடம் சேர்ப்பது.’ என்று யோசனையுடன் அவளை திரும்பி பார்த்தனர். வன்னி, அவர்களின் பார்வையை உணர்ந்து அந்த ஆன்மீக சங்கலி பற்றிய இடத்தை பார்த்திருந்தவள் திரும்பி காவலர்களை பார்த்தாள்.

காவலர்களே! நாம் வந்த இடமாற்றும் சக்கரம் உடைவதற்கு இரண்டு காரணம் இருக்க முடியும். ஒன்று இந்த இடம், இடமாற்றும் சக்கரம் உருவாக்க பயன்படுத்தியதை விட அதிக ஆன்மீக சக்தியை கொண்டிருக்க வேண்டும்.

மற்றொன்று இடமாற்றும் சக்கரம் இயங்குவதற்கான ஆன்மீக ஆற்றல் தீர்ந்திருக்க வேண்டும். இதில் எது உண்மை?” என்று யோசனையாக கேட்டாள்.

காவலர்களுள் ஒருவன், “இளவரசி,அநேகமாக இந்த இடம் இடமாற்றும் சக்கரம் உருவாக்க பயன்படுத்தியதை விட அதிக ஆன்மீக சக்தி கொண்டதாக இருக்க வேண்டும். மேலும் இந்த இடத்தில் ஏழு சக்கர ஆற்றல் கொண்டவர்களால் மட்டுமே எந்த வித இடையூறும் இல்லாமல் எந்தவித சக்கரத்தையும் பயன்படுத்த முடியும்.” என்றான்.

அதையே கணித்திருந்த வன்னி, “ம்ம்.” என்று தலையசைத்தாள். பின், “தகுந்த நேரத்தில் இடமாற்றும் சக்கரத்தினுள் இருக்கும் போதே இந்த பாதுகாப்பு சக்கரத்தை உருவாக்கிவிட்டதால் பெரிதாக எதுவும் சேதமில்லாமல் நாம் தப்பினோம்என்றாள்.

அதனை கேட்ட மற்றொரு காவலன், “ஆம் இளவரசி. தக்க நேரத்தில் நம் இராஜகுரு எச்சரிக்கவில்லையென்றால் தங்களின் உயிருக்கே கூட ஆபத்து நிகழ்ந்திருக்கும். தற்காலிகமாக இப்போது நாம் தப்பிவிட்டாலும், இந்த பாதுகாப்பு சக்கரம் அதிக நேரம் தாங்காது.” என்று முகத்தில் கவலை சேர சொன்னான்.

வன்னியின் முகமும் அதனை கேட்டு லேசாக வெளுத்தது. “என்னால் எதுவும் உதவ முடியுமா?” என்று கேட்டாள்.

அதற்கு காவலர்கள் இருவரும், “இல்லை இளவரசி. இந்த பாதுகாப்பு சக்கரத்தை முழுதும் மெல்ல நகர்த்தி சற்று சமதளமான இடம் செல்ல முயற்சிக்கலாம். ஆனால் முழுதும் பாதுகாப்பான இடம் சேருமுன்னே இந்த பாதுகாப்பு சக்கரமும் உடைய வாய்ப்புள்ளது.” என்று உண்மையை உரைத்தான்.

வன்னிக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. குழம்பி நின்றிருந்த போது, காவலர்களுள் ஒருவன், “இளவரசி, இது நம் அரசுக்கு நம் இடத்தை காண்பிக்கும் கருவி. இதனை கையில் வைத்துக் கொள்ளுங்க.” என்று ஒரு கையளவு தடிமனும் ஒரு அடி அளவு நீளமும் கொண்ட உருளையை அவளிடம் கொடுத்தான்.

பாதுகாப்பு சக்கரத்தில் இருக்கும்போது இந்த சமிக்ஞை கருவியை பயன்படுத்த முடியாது என்று வன்னிக்கு தெரியும். அதனால் அவர்களை கேள்வியாக பார்த்தவிதம் அதனை கையில் வாங்கினாள் வன்னி.

வன்னி எதுவும் கேட்குமுன்னே அடுத்த காவலன் தொடர்ந்து பேசினான். “நாங்கள் இருவர் சேர்ந்து உருவாக்கியதால் இந்த பாதுகாப்பு சக்கரம் உங்களின் கட்டளையை ஏற்காது. அதனால் தங்களின் உதவி பயனளிக்காது.” என்றான்.

அதனை கேட்ட வன்னி திகிலுடன், “அப்போது இன்னும் ஏன் தாமதிக்கிறீர்கள். விரைந்து இந்த பாதுகாப்பு சக்கரத்தை நகர்த்துங்கள்.” என்று சுற்றும் முற்றும் பார்த்தவள் முன்பு சக்கலி போய் பற்றிய மரக்கிளையை பார்த்து

இந்த சங்கலியை தொடர்வோம். சமதளம் அருகில் இல்லையென்ற போதும் அந்த இடத்தில் மரங்கள் அடர்ந்திருக்கிறது. அதனால் அங்கு சரிவும் அதிகம் இருக்காது. அங்கு செல்லலாம்.” என்றாள் வன்னி.

காவலர்களும் அதையே நினைத்திருந்தனரோ என்னமோ, “உத்தரவு இளவரசி.” என்று அவர்கள் கருவியை வாசிக்க ஆரம்பித்தனர். வன்னியின் வார்த்தையை கேட்டு மெதுவாக அவர்களது கனசதுர வடிவ பாதுகாப்பு சக்கரத்தை நகர்த்தினர்.

ஆனால் அருகில் போல் தோன்றிய அந்த மரங்களடர்ந்த காடு கிட்டத்தட்ட 2 காததூரம்(3) இருக்கும் போல. எந்தவித பாதிப்பும் இல்லாமல் ஒரு காத தூரத்தை கடந்தபோது அந்த பாதுகாப்பு சக்கரம் விரிசல் விட ஆரம்பித்தது.

உடனே எச்சரிக்கையான காவலர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இருவரும் பரஸ்பர ஒற்றுமையுடன் கண்ணால் செய்தி பரிமாறிக்கொண்டு வன்னி எதுவும் சொல்லும் முன்னே அந்த பாதுகாக்கும் சக்கரத்தை வன்னி மட்டும் அடங்கிய சிறிய கனசதுர அளவில் சுருங்க செய்தனர்.

வன்னி என்ன ஏதேன்று புரிந்து நிமிர்ந்து சக்கரத்திற்கு வெளியில் பார்த்தபோது, அவளுக்கு தெரிந்தது குளிரில் நடுங்கிய விதமாக இரு உருவம் வெள்ளை நிற பனிபடர்வில் மற்றுமிரு வெள்ளை புள்ளிகளாக அவளிலிருந்து தூரம் சென்ற காவலர்களைதான்.

காவலர்களின் செயல் காரணம் உணர்ந்த வன்னி உடனே அதரங்கள் நடுங்க, “காவலர்களே!. ” என்று கத்திக் கொண்டு பாதுகாக்கும் சக்கரத்தின் சுவரில் ஓடிச் சென்று அதனை தட்டி உடைத்திட முயன்றாள். அவளையும் அறியாமல் அவளது கண்ணில் ஈரம் எட்டி பார்த்தது.

இருக்கும் சக்தியெல்லாம் ஒன்றுதிரட்டி, “என்ன செய்ய நினைத்து இப்படி செய்கிறீர்கள். உடனே பாதுகாக்கும் சக்கரத்திற்குள் வாருங்கள். இந்த குளிரில் ஆன்மீக ஆற்றலை பயன்படுத்த முடியாமல் நீங்கள் உடல் உறைந்து இறந்தே போய்விடுவீர்கள். உடனே உள்ளே வாருங்கள்.” என்று கத்தினாள்.

அவளது கண்ணில் நீர் கோடுகள் அதிகரித்து கலங்கிய கண்களுடன் அவளுக்காக உயிர் தியாகம் செய்ய துணிந்த காவலர்களை பார்த்தாள் வன்னி. வன்னியின் குரலையும் அவளது கலங்கிய முகத்தையும் பார்த்த காவலர்களும் லேசாக கலங்கினர்.

வன்னி குழந்தையாக இருந்ததலிருந்து கிட்டத்தட பத்து வருடமாக வன்னியுடன் இருந்த இரு காவலர்களும் அவளது வளர்ச்சியை உடனிருந்து பார்த்தவர்கள். அவளை பிரிய போகிறோம் என்று உணர்ந்தும் வன்னியின் அக்கரையான குரலை கேட்டும் அவர்களின் கண்களும் கலங்கியது.

வாசிக்கும் கொக்கரையை(2) வாயிலிருந்து எடுத்த காவலன், “இளவரசி. எங்களை எண்ணி கவலை கொள்ள வேண்டாம். தங்களுக்காக இறப்பதில் எங்களது பாக்கியம். எங்களின் ஒரே வருத்தம் எங்களால் இனி உங்களது காவலர்களாக இருக்க முடியாது என்பதுதான்.” என்றான்.

அவனை தொடர்ந்து உடுக்கை வாசித்துக் கொண்டிருந்த மற்றொரு காவலன், “ஆனால் உங்கள் உயிரை எங்கள் உயிர் பிரியுமுன் காக்க முடிந்ததில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.” என்று புன்னகைத்தான்.

அப்போது சற்று அடங்கிய பனி சரி மீண்டும் மெல்ல சரிய ஆரம்பித்தது. அவசரம் உணர்ந்து பேசிக் கொண்டிராமல் காவலர்கள் இருவரும் மீண்டும் வாசிக்க ஆரம்பித்தனர். அவர்களது குரல் குளிரில் நடுங்கிய போதும் வன்னியின் செவியில் கணீர் கணீரென்று கேட்டது.

காவலர்களே! ஆ…” என்று ஓவென்று கதர ஆரம்பித்தாள் வன்னி. பாதுகாப்பு சக்கரத்தின் சுவரை ஓங்கி அவளது சின்ன சிறு கைகளால் அடித்து உடைத்திட முயன்றபடி, “வேறு வழி யோசிபோம். உள்ளே வாருங்கள்.” என்று கத்தினாள்.

ஆனால் அவளது குரல் ஏற்கனவே தூரம் நகர்ந்துவிட்டிருந்த பாதுகாக்கும் சக்கரத்திலிருந்து அந்த காவலர்களுக்கு கேட்கவில்லை. அந்த காவலர்கள் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் இடுப்பு வரை ஏற்கனவே சரிந்திருந்த பனியையும் பொருட்படுத்தாமல் வன்னி பாதுகாப்பான சமதளம் அடையும் வரை வாசிப்பதை நிறுத்தவில்லை.

சிறிது நேரத்தில் வன்னி மரங்களடர்ந்த காட்டை அடைந்தது. அவள் பாதுகாப்பாக இருப்பதை அவர்களது சக்கரம் மூலம் உறுதி கொண்ட காவலர்கள் வாசிப்பதை நிறுத்தி பெருமூச்சுவிட்டனர். சற்று நிறுத்தி கொக்கரையை கொண்டு மீண்டும் ஒரு காவலன் மட்டும் வாசிக்க வன்னியிருந்த பாதுகாக்கும் சக்கரத்தின் சுவர் மெல்ல அதிர்ந்து அவன் குரலை அவளுக்கு சேர்த்தது.

இளவரசி இந்த சக்கரம் இன்னும் 5 நாழிகைகள் நீடிக்கும். நாங்க ஏற்கனவே எங்களிடமிருந்த சமிக்ஞையை வானில் வெடிக்க வைத்துவிட்டோம். 5 நாழிகைக்குள் யாரும் வரவில்லையென்றால் மீண்டும் தங்களது சமிக்ஞை கருவியையும் பயன்படுத்துங்கள்.” என்றான்.

சற்று நிறுத்தி இரு காவலர்களின் குரலும் இணைந்து, “தாங்கள் நீடூழி வாழ வேண்டும் இளவரசி.” என்று கேட்டு அதனோடு சக்தியெல்லாம் முடிந்தவன் போல குரல் மெலிந்து நின்றே போனது.

வன்னியின் வயிற்றில் குளிர் பரவியது. குறைந்தது பனியில் நடந்தேனும் வந்துவிடுவார்கள் என்று நம்பியிருந்த வன்னிக்கு அவர்களின் சக்தியற்ற குரல் அச்சத்தை பரப்பியது. மீண்டும்,காவலர்களே! வந்துவிடுங்கள். எதுவென்றாலும் மூவரும் சேர்ந்து சமாளிப்போம். வந்து… விடுங்கள்.” என்று விக்கல் வர அழுதபடி கதறினாள்.

ஆனால் அவள் குரலை கேட்பார் இல்லை. என்ன இருந்த போதும் ஆன்மீக ஆற்றல் அல்லாமல் வன்னி சாதாரண மனித யாளி குழந்தை போலதானே! சிறிது நேரம் பாதுகாக்கும் சக்கர சுவரை கைகளால் அடித்து கதறியவள் கொஞ்ச நேரத்திலே துவண்டு கனசதுரத்தின் தரையில் சரிந்து விழுந்து, “ஆ…காவலர்களே! ஊ…. வந்துவிடுங்கள். என்று அழுக ஆரம்பித்தாள்.

அழுது அழுது சக்தியெல்லாம் குறைந்து வயிற்றில் பசியும் வர உடல் சுருண்டு அழுகையால் விக்கல் நிற்காமல் தொடர மயங்கிவிட்டாள் வன்னி. அதே நேரம் வன்னி இருக்கும் இடத்திலிருந்து சற்று தொலைவில் பனி பள்ளதாக்கில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு யானைகுட்டி கண் விழித்தது.

ஏதோ பழக்கபட்ட மணம் வெகு அருகில் வீச உடனே துடுக்குற்று, “இங்கெப்படி என் இளவரசி வந்தாள். இங்கு ஆன்மீக ஆற்றலை பயன்படுத்த முடியாதே. இந்த குளிரில்?” என்று யோசனையுற்றதுமே இருப்புக் கொள்ளாமல் எழுந்து பள்ளதாக்கின் பிளவில் நுழைந்து வெளியில் வந்தான் யானை குட்டி வடிவில் இருந்த நந்தன்.

உடனே எதுவோ நினைவு வந்தவன் போல மீண்டும் குகையினுள் நுழைந்த நந்தன், பத்து வயதுக் கொண்ட சிறுவனாக(5) மாறி குகையின் சுவரை பார்த்து, “குருவே. நான் தங்களிடம் சொன்ன என் இளவரசி இந்த பனி மலையில் இருப்பதை நான் உணர்கிறேன்.

அவரை பார்த்துவிட்டு வர நான் செல்கிறேன். என்னை தேட வேண்டாம்.” என்றவன் அவன் குரு என்று அழைத்தவரின் பதிலுக்கும் காத்திராமல் சிட்டென்று குதித்து பனி குகையிலிருந்து வெளியில் வந்தான்.

நந்தனின் செயலில் வியப்புற்ற வானதி நீல நிற ஆடையில் நந்தன் முன்பிருந்த அறையில் தோன்றினாள். நந்தன் சென்ற திக்கை பார்த்து பெருமூச்சுவிட்டு, “என் சீடன் பொதுவில் யாரை பற்றியும் கவலையுற்றதில்லை. ஆனால் இன்று..?” என்று முனுமுனுத்தவள் நெற்றி முடிச்சு விழ ஒரு நொடி நின்றாள்.

பின் மனதில் ஏதோ தோன்ற தன் முகத்தில் முகமூடி அணிந்துக் கொண்டு நந்தன் பின் மெதுவாக நடந்துச் சென்றாள். நந்தன் பத்து வயது சிறுவன் உருவிலிருந்து மீண்டும் யானைகுட்டியாக மாறினான்.

அவன் கழுத்தில் அணிந்திருந்த சாம்பல் நிற கல் அவனுக்கு குளிரிலிருந்து பாதுகாப்பு தந்தது. அதனால் பனியால் நடக்கும் போது ஏற்பட்ட தடையை தவிர அவனுக்கு குளிரோ, மூச்சு திணரலோ ஏற்படவில்லை.

தன் குருவும் தன்னுடன் வருவதை உணராத நந்தன் வன்னியின் வாசத்தை நுகர்ந்தவிதமாக அவள் தற்போது இருக்கும் மரங்கள் அடர்ந்த திசை நோக்கி துள்ளி குதித்துக் கொண்டு ஓட ஆரம்பித்தான்.

மூன்று நாழிகைகளுக்கு பிறகு

வன்னி இன்னமும் கண் விழிக்கவில்லை. நந்தனும் வன்னி இருக்கும் இடம் அடையவில்லை. வானதியும் தன் சீடன் பின் சற்று தொலைவில் அமைதியாக வந்தாளே தவிர அவனுக்கு உதவவோ அல்லது அவனை தடுக்கவோ முயலவில்லை.

ஆனால் நந்தன் வருமுன்னே அங்கு கருப்பு முக்காடு அணிந்த உருவம் வந்துவிட்டது. வன்னியின் அழுகை படிந்த முகத்தை பார்த்து சின்ன சிரிப்பை உதிர்த்த முக்காடு உருவம், “சாதாரண காவலர்கள் தானாக இறந்ததை கூட தாங்காமல் இப்படி அழுகிறாய்.

நீ நிச்சயம் சுவாரசயமான பெண்தான்!” என்று நிறுத்தி அவள் அருகில் குத்துகாலிட்டு அமர்ந்தவன், “ நீ தெரிந்தே உன் கையால் பலரை கொன்றால் என்ன செய்வாய். அப்போது எப்படி உன் முகம் இருக்குமென்று பார்க்க எனக்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறது.

நீ வளர்ந்து ஓரளவு விவரம் தெரியும் வரை காத்திருக்க நினைத்தேன். ஆனால் அதுவரை காத்திருக்க ஏனோ இப்போது மனமில்லை.” என்று தன் கையில் சிறிய சிவப்பு நிற பழத்தை எடுத்தான்.

பின் வன்னியின் அருகில் வந்து அவளை சுற்றி இன்னமும் லேசாக மினுமினுத்துக் கொண்டிருந்த பாதுகாக்கும் சக்கரத்தினை உடைத்தான். பின் அவள் உதடருகில் அந்த பழத்தை வைக்க முயன்ற போது எதோ சக்தியால் அவன் வன்னியிலிருந்து கிட்டத்தட்ட 100 அடிக்கும் மேல் தூக்கி வீசபட்டான்.

இதனை எதிர்பாராத முக்காடு உருவம் அவன் வீசபட்டதின் காரணம் அறிய எண்ணி வன்னியை நோக்கி திரும்பி பார்த்தான். வன்னியின் கையில் கரணியன் தந்த மோதிரம் ஒளிர்ந்து அவளை சுற்றி சாம்பல் நிறத்தில் புதிய பாதுகாக்கும் சக்கரத்தை உருவாக்கியிருந்தது.

கூடவே பனி மலையின் அடிவாரத்தில் அனைத்து மாதங்க யாளிகளுடனும் பறந்து வந்துக்கொண்டிருந்த இடத்திலிருந்து கரணியன் மறைந்து வன்னி இருந்த இடத்தில் தோன்றினான்.

அந்த மோதிரம் பாதுகாக்கும் சக்கரத்தை மட்டுமல்லாமல் ஒரு இடமாற்றும் சக்கரத்தையும் இணைத்து உருவாக்கியது. ஆம் அன்று அந்த மோதிரத்தை சாரங்கனிடம் கரணியன் கொடுத்த போது பாதுகாக்கும் சக்கரம் மற்றும் இடமாற்றும் சக்கரம் இரண்டையும் இணைத்த கருவியையே தந்தான்.

விழாவின் பாதுகாப்பு கருதியும், ஆபத்தில் உடனே தான் உதவிக்கு செல்ல எண்ணியும் அந்த மோதிரம் பாதுகாப்பு சக்கரத்தை ஒளிர செய்யும் போது கரணியன் 10 காததூரத்தில் எங்கிருந்தாலும் அந்த மோதிரம் இருக்கும் இடத்திற்கு சேர்க்கும் என்றளவில் இடமாற்றும் சக்கரத்தை இணைத்திருந்தான்.

முக்கியமாக மாதங்க அரசில் இருக்கும் போது வன்னிக்கு எதுவும் நிகழ்ந்துவிட கூடாது என்றெண்ணியே இதனை செய்தான். அது இப்போது அவனுக்கு உதவ கூடுமென்று அவன் துளியும் எண்ணவில்லை.

அவனிருக்கும் இடத்திலிருந்து காணாமல் போனதும் அவனருகில் இருந்த எல்லோரும் குழம்ப கரணியன் வன்னியின் எதிரில் வந்து நின்றான்.

வன்னி பாதுகாப்பாக இருப்பதை உணர்ந்த கரணியன் நொடியும் தாமதிக்காமல் தன்னிடமிருந்த சமிக்ஞை கருவியை வானை நோக்கி எரிய அது வான வேடிக்கை போல வானில் வெடித்து அவனிருக்கும் இடத்தை மலை அடிவாரத்தில் இருந்தவர்களுக்கு காட்டியது.

சத்தம் கேட்டு கரணியனோடு வந்த பரி இராஜகுரு சந்திரரும், மற்ற யாளிகளும் பனி மலையின் அடிவாரத்திலிருந்து சமிக்ஞை வந்த திசை நோக்கி திரும்பி பார்த்தனர். கருவிகள் உருவாக்குவதில் வெகுவாக சிறந்தவர்களான மாதங்க யாளிகள் கொஞ்சமும் தாமதிக்காமல் எப்படி கரணியன் அங்கு சென்றான் என்பதை சந்திரரிடம் எடுத்துரைத்தனர்.

அதனை கேட்ட சந்திரர் வன்னி இருக்கும் இடத்திற்கு கரணியன் சென்றது குறித்து மகிழ்ச்சியடையாமல் மனதுள் குளிர் பரவ சமிக்ஞை வந்த திசை நோக்கி தற்காலிக பறக்கும் சக்கரம் பதித்த பலரை ஒன்றாக ஏந்தி பறந்த பறக்கும் சக்கரத்தை வேகமாக இயக்க ஆணையிட்டார்.

ஆனால் கரணியன் வன்னியை பார்த்த ஆர்வத்தில் ஒன்றை மறந்துவிட்டான். வன்னியின் மோதிரம் சாதாரணமாக ஒளிராது. வன்னியே இயக்கினாலோ அல்லது யாரேனும் தீங்கு நினைக்கும் எண்ணமுடன் அவளை நெருங்கினாலோதான் அது ஒளிர்ந்து பாதுகாப்பு சக்கரத்தை உருவாக்கும்.

அதனால் அங்கு மரத்தின் மேலிருந்து கரணியனை வேடிக்கை போல விஷமமான புன்னகையுடன் பார்த்திருந்த முக்காடு மனிதனை அவன் கவனிக்கவில்லை. நேராக வன்னியின் அருகில் சென்று அவளை அவன் மடியில் கிடத்தி, “இளவரசி வன்னி. இளவரசி..” என்று அவள் கன்னம் தட்டி எழுப்ப முயன்றான்.

அப்போது, “ஹாஹா…” என்று சிரிக்கும் சப்தம் கேட்டது. உடனே திரும்பி குரல் கேட்ட திசையை பார்த்த கரணியன் விக்கித்து போனான். “யார் நீ.?” என்று வன்னியை தரையில் கிடத்தி அவனது கதாயுதத்தை எடுத்து எழுந்து நின்றான்.

கரணியனின் கேள்வியில் தரையில் குதித்த முக்காடு உருவம் இளகுவாக குறுக்கும் நெடுக்குமாக நடந்துபடி, “ம்ம்?!” என்று அவனை நிமிர்ந்து பார்த்து, “யார் நான்?யாராக இருக்க முடியும் என்று நினைக்கிறாய்?” என்று அவனையே கேட்டான்.

கரணியன் பதிலேதும் சொல்லாமல் அவன் கையிலிருந்த மற்றொரு மோதிரத்தை ஒளிர செய்து அவனை சுற்றி மோதிர கருவி பாதுகாக்கும் சக்கரத்தை உருவாக்கினான்.(4)

அதனை பார்த்த முக்காடு மனிதன, “ஹாஹாஹா… ஏழு சக்கர பாதுகாப்பு சக்கரம். உருவாக்கும் கருவி.” என்று சிரிப்பை நிறுத்தி விஷமாக கரணியைனை நோக்கி, “என்னிடம் இது குறித்து படை தளபதி சொல்லவே இல்லையே!” என்றான்.

கரணியனுக்கு அந்த குரல் கேட்டு உடலில் குளிர் பரவியது. யாரென்று யூகம் கரணியனின் மனதில் உருவாக அவன் தடுமாறி, “நீநீ….” என்று கரணியன் முழுவார்த்தை சொல்லும் முன்னே ஓரெட்டில் அந்த முக்காடு மனிதன் கரணியனின் முன் வந்தான்.

பலமுறை போர்களிலே வென்ற கரணியன் அந்த நொடி, செயலிழந்து நகர முடியாமல் எதிரில் இருந்தவனின் முகம் நோக்கி பார்த்தான். பார்த்தவனின் கண்களுக்கு தெரிந்த அந்த முகம் அதிர்ச்சியில் விரிந்து விழித்தது.

அவனது பாதுகாப்பற்ற நிலைக்கொண்டு கரணியன் முக்காடு மனிதனை நோக்கி கதாயுதத்தை உயர்த்துவதற்குள் ஆன்மீக சக்தியாக உருவான மோதிர கருவி கரணியனின் விரலிலிருந்து உடைந்து தூள் தூளானது.

கரணியன் கதாயுதத்தை உயர்த்தி வெல்ல முடியாது என்று தெரிந்த போதும் உயர்த்தி முக்காடு மனிதனின் முகத்தை நோக்கி வீசினான். ஆன்மீக சக்தியில்லாமல் வீசப்பட்ட கதாயுதம் முக்காடு மனிதனின் முகத்தில் பஞ்சு போல பட்டு மீண்டது.

சிறிதும் பாதிக்கபடாத முக்காடு மனிதன், சற்று தள்ளி சென்று, ஹாஹாஹா… நான் யாரென்று தெரிந்தும் என்னை எதிர்க்க துணிவிருக்கிறது. அனைவரும் படை தளபதி கரணியனின் புகழ் பாடுவதில் தவறே இல்லை.

ப்ச் ஆனால் பரிதாபம். இன்றொடு படை தளபதியின் வரலாறு முடிய போகிறது.” என்றவன் அவனது கையினை கரணியன் நோக்கி வீச அவனது கையிலிருந்து நீல நிறத்தில் மின்னல் வெட்டு உருவாகி கரணியனின் வயிற்றை நோக்கி பாய்ந்தது.

கரணியன் அவன் கைக்காப்பிலிருந்து மற்றொரு செயற்கை ஆன்மீக ஆற்றலில் இயங்கும் மற்றொரு கதாயுதத்தை அவன் உடலுக்கு குறுக்காக பிடித்து அந்த மின்னல் வெட்டை தகர்த்தான். லேசாக கண்கள் கலங்க, “ஏன்?” என்றான் கரணியன்.

கலங்கிய கரணியனின் முகம் பார்த்து ஒரு நொடி ஸ்தம்பித்த முக்காடு உருவம் பின் மீண்டும் இயல்பாகி, “ஏன்?!” என்று மீண்டும் கேட்டு கரணியனின் பின் இன்னமும் சாம்பல் நிற மோதிர பாதுகாப்பு சக்கரத்தினுள் மயங்கி கிடந்த வன்னியை எட்டி பார்த்தான்.

வன்னியும் வெள்ளி எலும்புடன் பிறந்த யாளி. ஏன் என்று உன்னால் இப்போது யூகிக்க முடிகிறதா?” என்றான் முக்காடு மனிதன்.

அதனை கேட்ட கரணியன் திடுக்குற்றான். திரும்பி வன்னியை பார்த்தான். பின் மீண்டும் திரும்பி முக்காடு மனிதனை பார்த்த கரணியன், “அவள் குழந்தை. அவளையும் மற்றவர்களை போல் என்று நினைத்தீரா? பால் மனம் மாறாமல் இருக்கும் அவளை அழிக்க எப்படி உங்களுக்கு மனம் வந்தது?” என்று கேட்டான்.

முக்காடு மனிதன் உடனே, “ஹாஹாஹா… அது தெரிந்து நீ என்ன செய்ய போகிறாய்.” என்றவன் சிரிப்பதை நிறுத்தி விஷமமாக கரணியனை பார்த்து, “அவளும் மாறுவாள். மாற்றுவேன்.” என்றான்.

கரணியன் பற்களை நரநரவென்று கடித்து, “அது நான் உயிருடன் இருக்கும் வரை நடக்காது. நீங்க நல்லவிதமாக மாறிவிட்டதாக நினைத்தது என் தவறு. உங்களின் சுய ரூபத்தை எல்லோரிடம் இப்போதே சொல்கிறேன்.” என்று அவனது கைக்காப்பிலிருந்து மற்றொரு கருவியை எடுத்து அதன் மூலம் செய்தி அனுப்ப முயன்றான்.

ஆனால் அவன் கருவியை எடுக்கும் முன்னே மின்னலென அருகில் வந்துவிட்டிருந்த முக்காடு மனிதன் ஒரு கையால் கரணியனின் கழுத்தை பற்றி அருகிலிருந்த மரத்தில் சாய்த்து அவனை உயர்த்தினான்.

கரணியனின் கால்கள் தரையிலிருந்து உயர்ந்தது. மூச்சுவிட சிரமமுடன் விழி விரித்து எதிரில் இருந்த முக்காடு உருவத்தை பார்த்தான். முயன்று ஒரு கையிலிருந்த கதாயுதத்தை முக்காடு மனிதன் மீது வீசினான் கரணியன். மற்றொரு கையால் அன்னிச்சை செயலாக அவன் கழுத்தை பற்றியிருந்த முக்காடு மனிதனின் கையை விலக்க முயன்றான்.

வெகு சுலபமாக கரணியனின் கதாயுதத்தை நிறுத்திய முக்காடு மனிதன் விஷமமாக சிரித்து கரணியனின் காதருகே குனிந்து, “இறக்குமுன் உனக்கொரு செய்தி. மாதங்க இளவரசி அல்லி அருமருந்த படை தளபதி கரணியனை உயிருக்கு உயிராக நேசிக்கிறாள். நீ இறந்த செய்தி அறிந்த பின் அவள் நிலை என்னவோ.? ” என்று சிரித்தான்.

அல்லி தன்னை விரும்பும் செய்தி அறிந்து கரணியனின் விழிகள் திகைப்பில் விரிந்தது. அவன் திகைப்பில் முக்காடு மனிதனை பார்த்திருக்கும் போதே, “என்னை போல் ஆகிவிடுவாள் என்று கவலைபடாதே படை தளபதி. அவளை மணக்க ஏற்கனவே நான் எனக்கேற்ப ஒரு ஆளை ஏற்பாடு செய்துவிட்டேன்.” என்று சிரித்தான்.

கரணியனின் கண்கள் கோபத்திலும் வெறுப்பிலும் சிவந்தது. ஆனால் முக்காடு மனிதனின் பிடி இன்னும் இறுக கண்கள் சொருக அவன் மயங்கினான். அப்போதுதான் யானைகுட்டி வடிவில் நந்தன் அங்கு மூச்சு வாங்க வந்து நின்றான்.

புதிதாக வந்த யானை குட்டியை பார்த்து பயமில்லாத போதும், அவன் உடலில் இருந்த அந்த சாம்பல் நிற கல் அந்த முக்காடு மனிதனுக்கு ஏதோ கதை சொல்ல நந்தன் முன் நிற்காமல் சட்டென்று நந்தன் பார்த்துவிடாதபடி கையில் கரணியனை பிடித்தவிதமாக மரத்தின் கிளை மீது நின்று அவனை பார்த்தான்.

வன்னி மயங்கி கிடப்பதை பார்த்து சிறிய பையன்(5) உருவிற்கு மாறிய நந்தன், வன்னியின் அருகில் ஓடிச் சென்று, “இளவரசி. இளவரசி.” என்று அவளை அவன் மடி மீது கிடத்தி அழைத்து பார்த்தான். வன்னி நந்தனின் குரலில் லேசாக கண் விழித்து இமைத்து பார்த்தாள்.

பின் சற்று முன்பு நிகழ்ந்தது நினைவு வர புதிதாக வந்திருப்பவன் யார் என்னவென்றும் புரிந்துக் கொள்ளாமல் உதடு பிதுக்கி, “ஊ… என் காவலர்கள்.ஊ… ஊ…” என்று நந்தனை அமர்ந்தவிதமாக அணைத்துக் கொண்டு முன்பு அவளது காவலர்கள் பனியில் புதைந்த இடத்தை நோக்கி கை காண்பித்து தேம்பி தேம்பி அழுக ஆரம்பித்தாள்.

நந்தனுக்கு என்ன நிகழ்ந்தது என்று புரியாமல் குழம்பி தன் கைகளில் அழுத வன்னியையும் அவள் கைக்காட்டிய இடத்தையும் பார்த்தான். பின் தேம்ப ஆரம்பித்த வன்னியின் முதுகு வருடி, “இளவரசி. எல்லாம் சரியாகிவிடும். கவலை படாதீர்கள்.” என்றான்.

நந்தன் பின்னே வந்த வானதி, “இதுதான் உன் இளவரசியா?” என்று கேட்டுக் கொண்டு அங்கு வந்தாள். தன் குருவின் குரல் கேட்டு எழுந்து நின்ற நந்தன் தன் மார்போடு சாய்ந்து அழுதுக் கொண்டிருந்த வன்னியையும் ஒரு கையால் அணைத்தவிதம், “ஆம் குருவே!” என்றான்.

குருவான என் முன்னும் அவனது இளவரசியை விடாமல் பற்றியிருக்கும் நந்தனை பார்த்து சின்ன சிரிப்பை உதிர்த்த வானதி, “நந்தன். என்ன நிகழ்ந்தது என்று உன் இளவரசி அழுகிறாள்?” என்று கேட்டாள் வானதி.

நந்தன் என்றதை கேட்டதும் அழுவதை சற்று நிறுத்தி நந்தனின் மார்பிலிருந்து நிமிர்ந்து வானதியை பார்த்த வன்னி தேம்பலுடன், “..ன் காவலர்கள். ..ங்கிருந்து காத தூரத்தில் பனி சரிவில் மாட்டிக் கொண்டனர்.ஊ…”என்று ஒவ்வொரு வார்த்தைக்கும் தேம்பியபடி சொன்னாள்.

சிரித்தவிதமாக இருந்த வானதியின் முகம் உடனே தீவிரமானது. எதுவோ சரியில்லை என்று அங்கு வந்த உடனே உணர்ந்திருந்த வானதி அழுதிருக்கும் சிறு பெண்ணின் மனம் இளக இயல்பாக பேசினாள்.

ஆனால் இறப்பை வெகு அருகில் பார்த்த சிறுப்பெண் தனியாக இவ்வளவு மன வலிமையில் இருப்பது வானதியின் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. குரலில் தீவிரம் தெரிய, “என்ன நிகழ்ந்தது என்று விளக்கமாக சொல்.?” என்றாள்.

அப்போது நந்தன் வெகு நேரம் மனித உருவில் இருக்க முடியாத்தால் மீண்டும் யானை வடிவிற்கு மாறினான். வன்னி திகைத்து திரும்பி பார்த்து, “நந்தன்?” என்று பழையது நினைவு வர, “பரிகுட்டி.” என்று அவனை ஆசையோடு அனைத்துக் கொண்டாள்.

நந்தன் தன் துதிக்கையால் வன்னியின் இடையை வளைத்துக் கொண்டான். பழைய சிநேகிதனை கண்ட சந்தோஷம் முழுதும் மனதில் அனுபவிக்க முடியாமல், “என்ன நிகழ்ந்தது என்று சொல்.” என்ற வானதியின் குரலில் வன்னியின் கவனம் திரும்பியது.

வன்னி தன்னை மரியாதை இல்லாமல் பேசும் வானதியை ஒரு நொடி விசித்திரமாக பார்த்தாள். இருந்தும் தயங்காமல் என்ன நிகழ்ந்தது என்று எல்லாவற்றையும் எடுத்துரைத்தாள். வானதி வன்னியின் அருகில் வந்து வன்னியின் நெற்றியில் தன் ஆள்காட்டி விரலால் தொட்டு பார்த்து, “வெள்ளி எலும்பு?” என்றாள்.

வன்னி உடல் வெளுத்து திடுக்கிட்டு வானதியை எச்சரிக்கை உணர்வுடன் பார்த்தாள். வன்னியின் மாற்றம் வானதிக்கு சிரிப்பையே தந்தது. “கவலை படாதே! எனக்கு உன் வெள்ளி எலும்பில் ஆர்வமில்லை.

முதலில் உன் காவலர்கள் உயிருடன் இருக்கிறார்களா? என்று பார்ப்போம்.” என்று திரு திருவென விழித்த வன்னியை விடுத்து முன்பு பனி சரிவில் சிக்கிய காவலர்களை நோக்கி பறக்கும் சக்கரத்தில் சென்றாள்.

ஆம் வானதியும் ஏழு சக்கர நிலைக் கொண்ட மகர யாளி பெண். ஒரு வருடத்திற்கு பின் வீதியில் உளவிக் கொண்டிருந்த நந்தனை கண்டுபிடித்து அவனது உடல் நிலையில் உள்ள கலப்பின இரத்ததை உணர்ந்து பரிதாபம் கொண்டு அவன் வாழ் நாள் நீடிக்க எண்ணி அவனை சீடனாக ஏற்றுக் கொண்டாள்.

வானதியின் பூர்வீகம் யாளி உலகில் யாரும் அறிவார் இல்லை. அவளை குறித்த தகவலும் தற்போதைய யாளி உலக வரலாற்றிலும் இல்லை. ஆனால் மரத்தின் உச்சியில் உணர்வற்ற கரணியனை ஒருகையில் பிடித்துக் கொண்டு கீழே பார்த்திருந்த முக்காடு மனிதனின் கண்ணில் ஒரு ஒளிவெட்டு வந்து மீண்டது.

வானதி தன் காவலர்களை காப்பாற்றி விடுவார் என்ற நப்பாசையுடன் வன்னி அழுவதை நிறுத்தி வானதியை வியப்பாகவும் எதிர்பார்ப்புடனும் பார்த்து நின்றாள். முகமூடி அணிந்திருந்த போதும், வானதியின் கண்களும் நெற்றியும் வெளுத்த நிறமும் மெலிந்து கம்பீரமாக நின்ற தோற்றமும் வன்னிக்கு வானதியை பேரழகியாகவே காண்பித்தது.

இமைக்க மறந்து வானதியை பார்த்தாள். பனி சரிவு நோக்கி பறந்துச் சென்ற வானதி கண்கள் மூடி கவனிக்கும் சக்கரம் கொண்டு பனியில் மறைந்த காவலர்களை பார்த்தாள். அவள் கவனிக்கும் சக்கரம் உருவாக்குவதை உணர்ந்த முக்காடு மனிதன் நொடியில் கரணியனுடன் அங்கிருந்து மறைந்தான்.

வானதி அதிக நேரம் கொள்ளாமல் உறைந்துவிட்டிருந்த இரு காவலர்களையும் கொணர்ந்து வன்னியின் முன் கிடத்தினாள். 15 நிமிடத்திற்கு மேல் பனியுனுள் இருந்தால் சக்தியற்ற யாளிகள் பிராண வாயு அல்லாமல் இந்துவிடுவர்.

அப்படி இருக்க மூன்று நாழிகள்(6) கடந்துவிட்டிருக்க அந்த இரு காவலர்களின் உயிர் எப்போதோ கரைந்து போயிருந்தது. அவர்கள் அருகில் ஓடிச் சென்ற வன்னி அவர்களை தொடவும் முடியாதபடி அவர்கள் அருகில் குளிர் வீச மீண்டும் தேம்பலுடன், “காவலர்களே!” என்று உதடு பிதுக்கி அழுக எத்தனித்தாள்.

நந்தன் மீண்டும் மனித உருவிற்கு மாறி ஓரெட்டில் வன்னி முன் வந்து, அவளை தன்னோடு அணைத்துக் கொண்டு, “இளவரசி. அழுக வேண்டாம். அவர்கள் தங்களின் நலன் கருதி உயிர் இழந்திருக்கின்றனர். தாங்கள் இப்படி அழுதால் அவர்களது ஆன்மாவும் கலங்கும். எல்லாம் சரியாகிவிடும்.கவலை படாதீர்கள்.என்று அவள் முதுகு வருடி ஆருதல் சொன்னான்.

அழுகை தொண்டையை எட்டி பார்க்க இருந்த வன்னி திடீரென்று இதமான அணைப்புக்கு அவள் உடல் போக சிறிய தேம்பலுடன், “ம்ம்… ம்ம்…” என்று தேம்பி, “எனக்கு அவர்கள் இருவரையும் மிகவும் பிடிக்கும்.

அவ..அவர்கள்எப்போதும் என்னுடனே இருப்பர். நான் என்ன கேட்டாலும் உடனே எனக்கு அதை ஏற்பாடு செய்வர். சில நேரம் மதியும் முகிலனும் தவம் செய்துக் கொண்டிருந்தால் அவர்களை தொந்தரவு செய்ய முடியாது.

அப்போதெல்லாம் என் காவலர்காளுடன்தான் நான் விளையாடுவேன். இனி… இ… னி யார் என்னுடன் விளையாடுவார்கள்?” என்று கேட்ட வன்னி மீண்டும் உடைந்து வர இருந்த அழுகையை விழுங்கி உதடை கடித்து நந்தனின் தோள் மீது சாய்ந்து உடல் குலுங்கினாள்.

அவள் அழுவதை நிறுத்த மாட்டாள் போல என்று நினைத்து பெருமூச்சுவிட்டு, வன்னியின் தலை மீது கை வைத்து அவளுள் கொஞ்சம் ஆன்மீக சக்தியை செலுத்திய வானதி வன்னியை உறங்கவும் வைத்துவிட்டாள்.

வன்னி சட்டென உறங்கியதால் நந்தனின் மார்பில் அவள் முழு எடையும் விழ இலாவகமாக அவளை பிடித்துக் கொண்டு தன் குருவை பார்த்து, “குருவே என்ன? ஏன் இப்படி நடந்திருக்கும்.?” என்று புரியாமல் வானதியை பார்த்து கேட்டான் நந்தன்.

வானதி நெற்றியில் சிந்தனை முடிச்சுவிழ சுற்றும் முற்றும் பார்த்தாள். அப்படி பார்த்தவள் கரணியன் முன்பு ஒரு மரத்தில் மோதியதால் அந்த மரத்தின் மீதிருந்த பனியெல்லாம் சரிந்து விழுந்து குவியலாக இருக்க முன்பு இங்கு சண்டை நிகழ்ந்திருக்க வேண்டுமென்று உணர்ந்தாள்.

மனதில் சந்தேகம் தோன்ற, ‘யாரோ இந்த சிறுபெண்ணுக்கு தீங்கிழைக்க முயன்றிருக்கின்றனர்.’ என்று மனதுள் அறிந்தாள். இருந்தும் கவலையோடு கேட்ட நந்தனை மேலும் கவலை பட செய்ய விரும்பாமல் அவன் தலை வருடி, “சாதாரண விபத்து, அநேகமாக அவளை தேடி இன்னும் ஒரு நாழிகையில் இங்கு ஆட்கள் வந்துவிடுவார்கள். கவலை படாதே!” என்றாள்.

வானதியின் பதிலில் நிம்மதி பெருமூச்சுவிட்டு, “சரிங்க குருவே!” என்று வெகு இளகுவாக பனி தரையில் அமர்ந்து வன்னியை தன் மடிமீது கிடத்தி அமர்ந்துக் கொண்டான்.

அவனை பார்த்த வானதிக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. “என்ன செய்கிறாய். வா நாம் போகலாம். அவளை அழைத்துச் செல்ல அவளது ஆட்கள் வருவதால், அவளை இங்கேயே விட்டுவிட்டு வா. நாம் போக வேண்டும்.” என்றாள்.

நந்தன் வானதியின் பதில் புரியாமல் கேள்வியாக அவளை பார்த்து, “குருவே! என்ன சொல்கிறீர்கள். என் இளவரசி இருக்கும் இடத்தில் தானே நானும் இருக்க வேண்டும்.” என்று அதுதான் சரி என்பது போல் வானதியிடம் சொன்னான்.

வானதி நந்தனை விநோதமாக பார்த்தாள். நந்தனின் செயல் அவள் மனதில் யாரையோ நினைவு படுத்த வானதியின் முகம் கருத்தது. நொடியும் தாமதிக்காமல் நந்தனின் நெற்றியை நோக்கி நீல நிறத்தில் ஆன்மீக ஒளியை வீசினாள்.

கூடவே வன்னியின் நெற்றியிலும் ஆன்மீக ஒளியை செலுத்தினாள். ஒளி பட்ட நொடியில் இருவரும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றனர். அந்த நொடி வன்னி நந்தனை குறித்த அனைத்து நினைவுகளையும் இழந்தாள். நந்தனும் அவனது இளவரசி குறித்த அனைத்தையும் மறந்தான்.

வானதி நந்தனை தன் தோள் மீது போட்டுக் கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாள். உறங்கிக் கொண்டிருந்த வன்னியையும் உறைந்துவிட்டிருந்த காவலர்களையும் பரி இராஜகுர் குழுவினர் அழைத்துக் கொண்டுச் சென்றனர்.

ஆனால் மாதங்க அரசின் படை தளபதி கரணியன் இருக்கும் இடமும் தெரியவில்லை. அவனது இறந்த உடலும் அகபடவில்லை. வன்னியால் எப்படி உறைந்த காவலர்கள் வன்னி அருகில் வந்தனர் என்றும் விளக்கம் தர முடியவில்லை. அன்றைய அந்த நிகழ்வு தீர்க்கபடாத ஒரு புதிராகவே நீடித்தது.

Author Note:

(1) உடுக்கை

(2) கொக்கரை

(3) 1 காத தூரம் = 1.667km

(4) கரணியன் மோதிரத்தில் ஏற்கனவே ஆன்மீக சக்தியை சேர்த்துவைத்து பாதுகாக்கும் சக்கரத்தை செயற்கையாக உருவாக்கி வைத்திருக்கிறான். இந்த மோதிரம் ஒரு ஆன்மீக கருவி அவ்வளவே. ஒருமுறை பயன்படுத்தியபின் அது சாதாரண மோதிரமாகும். இந்த பாதுகாப்பு சக்கரமும் தானாக அந்த நேரத்தில் உருவாக்கும் பாதுகாக்கும் சக்க்ரமும் வேறு. குழப்பமாக இருந்த கேளுங்க readers.

(5) நந்தனுக்கு இப்போது 14 எலும்பு வயது. ஆனால் அவன் மனித உருவில் அதிக நாள் வளராததால் 10 எலும்பு வயதில் சிறிய பையனாகவே இருக்கிறான். அதனால் வன்னியும் அவனும் இப்போது ஒரே வயது போன்ற உருவில் இருக்கின்றனர். குழம்ப வேண்டாம்.

(6) 1 நாழிகை =24 நிமிடம்

Advertisement