யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 54

649

அத்தியாயம் – 54

வன்னி அவளை அறிமுகம் செய்துக் கொள்ளும் முன்னே பேரரசர் பேச ஆரம்பித்தார். “பரி அரசின் இராஜகுரு சந்திரர் ஏன் வரவில்லை? ” என்று முகவாயில் கையை வைத்து கேட்டார்.

கௌரி சந்திரரை பற்றி கேட்டதும், “பேரரசே! பரி அரசின் இராஜகுரு சந்திரர் பேரரசருக்கென்று பரிசளிக்க ஒரு விஷேஷமான மூலிகையை தயாரித்துக் கொண்டிருந்தார். அது நல்ல தரத்துடன் இருக்க பல மூலிகை இலைகளை சேர்த்து அதன் மீது தினமும் 3 மணி நேரம் ஆன்மீக ஆற்றல் என்று 31 நாட்கள் செலுத்த வேண்டும்.

எதிர்பார்ப்பின்படி அது மூன்று தினங்களுக்கு முன்பு முடிந்திருக்க வேண்டும். ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் அது அதிகபடியாக தினங்கள் எடுத்துக் கொண்டது. அவரது கணிப்பின்படி இன்று இரவு அந்த மாத்திரை தயாராகிவிடும்.

அதனை எடுத்துக் கொண்டு அவர் நிச்சயம் இன்று இரவுக்குள் பேரரசரை காண வந்துவிடுவார்.” என்று தலை தாழ்த்தி கூறினாள்.

அதனை கேட்ட பேரரசர், “சந்திரர் எப்போதும் போல இம்முறையும் விஷேச மருந்து தயாரிக்கிறேன் என்று காலம் கடத்திக் கொண்டிருக்கிறாரா. ஹாஹாஹா… அவரது அன்பை நினைத்து யாம் மெச்சுகிறோம்.

இராஜகுரு மருந்து தயாரிப்பதால் தாமதம் ஆனது சரி. ஆனால் பரி அரசின் இளவரசர் வாமனன் ஏன் இங்கு வரவில்லை?” என்றார்

இளவரசரா?’ என்று தன் தாயுடன் பிறந்த சகோதரர் இருப்பதை அறியாத வன்னி குழம்பியபடி தன் அருகில் நின்ற கௌரியை திரும்பி பார்த்தாள். கௌரி, ‘பேரரசர் பரி அரசில் இளவரசியும் பிறந்திருப்பதை அவ்வளவு எளிதில் மறந்திருப்பார்.’ என்று துளியும் எண்ணவில்லை. அதனால் பேரரசரின் கேள்வியில் ஒரு நொடி உடல் விறைப்புற்று இயல்புக்கு மாறினாள்.

கரணியன் வியப்பாக பேரரசரையும் வன்னியையும் மாறி மாறி பார்த்தார். ‘வன்னியின் கையில் இருந்த சக்கரம் மறைக்கும் கருவியை பேரரசர்தான் தந்திருக்க வேண்டும். அப்படி இருக்க எப்படி வன்னியை மறந்தார்.?’ என்று குழப்பம் அவனுள் குடியேறியது.

நெருங்க முடியாதபடி குரலில் இளக்கமே இல்லாமல் உயர்ந்த மேடையில் அமர்ந்த பேரரசரை பார்த்து வன்னி ஏற்கனவே மிகவும் அச்சமுற்றிருந்தாள். அதனால் என்ன சொல்ல வேண்டுமென்று பல முறை தன்னுள் அசை போட்டுக் கொண்டிருந்தாள்.

ஆனால் பேரரசரின் இடைவிடாத கேள்வியில் வன்னியிடம் கொஞ்சம் நஞ்சம் இருந்த தைரியமும் கரைந்து லேசாக நடுக்கமுற ஆரம்பித்தாள். பேரரசரை நிமிர்ந்து பார்க்கவும் முடியாமல் தலைதாழ்த்தி அவர்கள் பேசுவதை மட்டும் செவி கொடுத்து கேட்டாள்.

பேரரசரின் கேள்விக்கு பதில் சொல்ல தளபதி கரணியன் முன் வந்து, “பேரரசே! மாதங்க படைதளபதி கரணியன் தங்களை வணங்குகிறேன். இளவரசர் வாமனன் 400 வருடங்களுக்கு முன்பு தவம் செய்வதற்காக ஆன்மீக சக்தி அதிகமிக்க வனபுரம் சென்றவர் இன்னமும் பரி அரசுக்கு வரவில்லை.

அவரின் இருப்பிடம் அறிபவரும் யாருமில்லை. அதனால் அவருக்கு தங்களின் வரவு குறித்து அழைப்பு கொடுக்க முடியவில்லை. அதனால் தற்போதைய பரி அரசர் அரசிக்கு பத்து வருடங்களுக்கு முன்பு பிறந்த குட்டி இளவரசரி வன்னியை இந்த விழாவிற்கு அழைத்தோம்.என்று விளக்கம் தந்தான்.

கரணியனின் பதிலில், விக்ரமன் லேசாக தலையசைத்து, “சந்திரர் சொன்ன அந்த இளவரசி இந்த குட்டி பெண்தானா?” என்று அப்போதுதான் வன்னியை பார்த்தார்.

பேரரசரின் பதிலில் முகம் தெளிவுற மனதுள் நிம்மதியடைந்து கௌரி, “ஆம் பேரரசே!” என்றாள்.

வன்னியை பார்த்து புன்னகைத்த பேரரசர், “பரி இளவரசி வன்னி எனதருகில் வாருங்கள்.” என்றார்.

வன்னி தன்னை பேரரசர் விழித்ததும் படப்படத்து மெதுவாக நடந்து அவருக்கு எதிரில் சென்று நின்று, “வணங்குகிறேன் பேரரசே! பரி இளவரசி விக்ரம பேரரசரை வணங்குகிறாள்.” என்று கரம்குவித்து தடுமாறி விக்ரமன் அருகில் நின்றாள்.

வன்னியின் பயந்த முகத்தையும் லேசாக நடுங்கிய குரலையும் கேட்டு விக்ரமனின் முகம் மென்மையானது. லேசான புன்னகையுடன், “வன்னி எனது இருக்கைக்கு அருகில் வாருங்கள்.’ என்றார்.

தன்னை மட்டும் ஏன் பேரரசர் அருகில் அழைக்கிறார் என்று குழம்பி வன்னி அச்சமுடன் நிமிர்ந்து விக்ரமனை பார்த்தாள். பார்த்தவள் விழி விரித்து ஸ்தம்பித்து நின்றாள். முன்பு உணர்ந்த அச்சம் எங்கு என்றதோ, அவரின் முகம் பார்த்ததும், சாந்தமும் அமைதியும் அவளுள் குடியேறியது.

அவளையும் அறியாமல் பேரரசரின் அரியணை நோக்கி அவளது கால்கள் மெல்ல நடந்துச் சென்று அவர் கையருகில் நின்றது. அவளது விழிகள் இன்னமும் மூட விரும்பாமல் பேரரசரின் முகத்தை பார்த்து நின்றது. அவளது உதடுகள் இரண்டு மூன்று முறை மூடி திறந்த போதும் வார்த்தைகள் அரவில்லை.

வன்னியின் தோற்றத்தை பார்த்து சின்ன சிரிப்பை உதிர்த்த பேரரசர் வன்னியை இரு கைக்களில் ஏந்தி அவரது மடி மீது அமர்த்திக் கொண்டு அவள் தலை வருடி, “இப்படி குழந்தைகளை தூக்கி அரவணைத்து எவ்வளவு காலங்கள் ஆகிவிட்டது.

இன்று பரிஅரசின் குழந்தையை கைகளில் ஏந்தியதில் யாம் மகிழ்ந்தோம். வன்னியின் புகழ் மென்மேலும் வாளர என் வாழ்த்துஅள்.என்று வன்னியை வாழ்த்தி சிரிப்புடன் சொன்னார் விக்ரமன். வன்னி பேச்சடைத்து விழிவிரித்து பேரரசரின் மடியில் அமர்ந்தாள்.

பேரரசர் மீது அபரீவிதமான ஈர்ப்பு வன்னிக்கு இருந்த போதும், அவர் தன்னை சாரங்கனை போல தன் தாய் தந்தையை போல கைகளில் ஏந்தக் கூடுமென்று வன்னி துளியும் நினைக்கவில்லை. உடல் சிலிர்க்க சிலை போல பேரரசரின் கைகளில் நின்றாள். மறந்தும் அசைய துணியவில்லை.

யாரும் அருகில் நெருங்க முடியாதபடி உயரத்தில் இருக்கும் பேரரசர் ஒரு சிறு குழந்தையை கைகளில் ஏந்தியதும், அவரது விளக்கத்திலும், அரங்கம் முழுதும் ஆரவாரத்துடன் ஆர்பரித்தது. “பேரரசர் விக்ரமன் வாழ்க! பேரரசரின் அன்பை பெற்ற குட்டி இளவரசி வாழ்க!” என்றனர்.

இவ்வாறு யாரென்றே அறியாத பலவித யாளிகள் பேரரசருடன் தன்னையும் சேர்த்து வாழ்த்தியதில், வன்னியின் முகம் நாணத்தில் சிவந்தது. மாறாக பேரரசர், “ஹாஹா…” என்று வாய்விட்டு சிரித்தார்.

அதன் பிறகு மாதங்க அரசரும் அரசியும் கடந்த 1000 வருடத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை சிறு அறிக்கை போல பேரரசர் அறியும் சித்தமாக அனைவர் முன்னிலையிலும் வாசித்து காட்டினர். பேரரசர் அவ்வப்போது தலையசைத்தும் சில சமயம் கேள்விகள் கேட்டுக் கொண்டும் இருந்தார்.

அவர் மடியில் வன்னி அசைய மறந்த சிறு பொம்மை போல அமர்ந்திருந்தாள். முதலில் உடல் விறைப்புடன் பேரரசரின் மடியில் அமர்ந்திருந்த வன்னி சில நிமிடங்களில் உடல் தளர்வுற தன் பின்னந்தலையை பேரரசரின் மார்பில் சாய்த்துக் கொண்டாள்.

விழாவின் கடைசி நிகழ்வாக, மாதங்க அரசர் நிகழ்வறிக்கை வாசித்ததும், கடந்த ஆயிரம் வருடத்தில் தங்களின் திறமைகளை பிரதேகமாக காட்டி யாளி உலகம் முழுதும் நிகழ்ந்த பிரச்சனைகளை விரைவில் தீர்த்த பலவித யாளிகளுக்கு திறமையின் அடிப்படையில் பரிசுகள் வழங்க ஆரம்பிக்கபட்டது.

கரணியன் பரிசு பெற்ற யாளிகளின் பெயர்களை வாசிக்க, பேரரசரின் முன்னிலையில் மாதங்க அரசர் அரசியர் இருவரும் பரிசுகளை திறமைசாலி யாளிகளுக்குங்க ஆரம்பித்தனர். பேரரசர் ஒவ்வொருவரையும் பார்த்து புன்னகைத்து வாழ்த்துக்கள் சொன்னார்.

வன்னிக்கு கலை நிகழ்ச்சி முடிந்ததுமே சலிப்புற ஆரம்பித்துவிட்டது. பொறுத்து பொறுத்து பார்த்தவள் சில நாழிகையில் பேரரசரின் மார்பில் சாய்ந்து உறங்க ஆரம்பித்துவிட்டாள்.கௌரி திடுக்கிட்டு அவளை எழுப்பிவிட நினைத்து வன்னியை நோக்கினாள்.

ஆனால் பேரரசரின் அருகில் செல்வது அவ்வளவு எளிதல்லவே. சிறு பதட்டமுடன் வன்னி லேசாகவாவது கண்ணை திறக்கிறாளா என்று அவளையே பார்த்தார். ஆனால் நாள் முழுதும் நடந்த விழாவின் கலைப்பினாலோ அல்லது முன்பு பேரரசரின் அருகாமையில் பதட்ட முற்றதாலோ ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்.

அதனால் வன்னிக்கு பதிலாக கௌரியின் பார்வையை பார்த்து அவள்புரம் திரும்யது பேரரசரே. கௌரியின் பதட்டம் புரிய அவர் புன்னகைத்து கண்ணசைவில், ‘கவலை வேண்டாம்.” என்றார்.

பேரரசரின் அந்த புன்னகையிலும் கண்ணசைவிலும் கௌரி இன்னமும் திகைத்து போனாள். உடனே கரம்குவித்து, “உத்தரவு பேரரசே!” என்றாள்.

அதன் பிறகு அந்த விழா இனிதே முடிவுற்றது. தன் மடியில் உறங்கிவிட்டிருந்த வன்னியை பேரரசரின் கைகளிலிருந்து வாங்க, கரணியனின் ஆணைபடி, பேரரசரின் அருகில் இரு சேவகிகள் ஓடி வந்தனர்.

ஆனால் பேரரசர் ஒரு கையசைவில் அவர்களை அனுப்பிவிட்டு வன்னியை லாவகமாக தன் கைகளில் ஏந்தி அவள் தலையை தன் தோள்பட்டையில் அவள் உறங்க ஏதுவாக சாய்த்துக் கொண்டு எழுந்து நின்றார். அவர் எழுந்ததும் அரங்கத்தில் இருக்கும் அனைவரும் மரியாதை நிமித்தமாக அவருடன் எழுந்து நின்றனர்.

பேரரசர் அரங்கத்தில் இருந்த அனைவரையும் ஒருமுறை பார்த்து, தொண்டையை செறுமி, ஆயிரம் வருடம் ஒருமுறை என்ற போதும் யம்மை காண ஆர்வமுடம் இங்கு வந்த அனைவரையும் பார்த்ததில் யாம் மகிழ்கிறோம்.

எமக்காக பல கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றிய நான்கு அரசர் அரசிகளுக்கும் எமது நன்றிகள். விஷேச அலங்காரங்களையும், நிகழ்ச்சிகளின் திட்டங்களையும் செவ்வனே நிகழ்த்தி எமது இந்நாளை திருப்தியுற செய்த மாதங்க அரசர் அரசியர் பலஆயிரம் வருடங்கள் செழித்து வாழ வாழ்த்துகிறேன்.” என்றான்.

அவரது வார்த்தைகளை கேட்ட அனைவருமே மகிழ்ச்சியில் ஆராவாரமுடம் சத்தம் எழுப்பினர். “பேரரசர் விக்ரமன் வாழ்க! அவர் புகழ் ஓங்குக! பேரரசரின் மகிழ்விப்பது எங்களின் பாக்கியம்.! பேரரசர் வாழ்க!” என்று ஒருசேர ஆர்பரித்தனர்.

அனைவரையும் புன்னகையுடன் பார்த்த பேரரசர், “அப்போது நான் ஓய்வெடுக்க செல்கிறேன். தாங்கள் அனைவரும் அவரவர் விருப்பபடி செய்ய அனுமதிக்கிறேன்.” என்று பறக்கும் சக்கரத்தை இயக்கினார்.

அவருக்கு முன்பு கரணியன் பறக்கும் சக்கரத்தில் பறந்து, “வாருங்கள் பேரரசே! ஓய்வெடுக்கும் மாளிகைக்கு தங்களை அழைத்து செல்கிறேன்.” என்றான்.

பேரரசர் லேசாக தலையசைத்து கரணியனுடன் பறந்து சென்றார். ஆனால் வன்னியை இறக்கிவிடாமல் அவர் தோள்களில் அவர் மகளை போல அரவணைத்து பறந்துச் சென்ற தோற்றம் கண்டு அரங்கம் முழுதும் நிசப்தமே நிழவியது.

அனைவரும் வாய் பிளந்து பேரரசரின் கைகளில் உறங்கிக் கொண்டிருந்த வன்னியை பார்த்தனர். கௌரிக்கு என்ன செய்வதென்று புரியாமல் பேரரசர் சென்ற திக்கை நோக்கினாள்.

பிறகு மாதங்க அரசர் கௌரியின் அருகில் வந்து, “கவலை வேண்டாம் இராஜகுரு. பேரரசருடன் கரணியன் இருப்பதால், பேரரசர் வன்னியை அனுப்பி வைக்க நினைத்தால் கரணியன் வன்னியை தங்களிடம் சேர்த்துவிடுவார்.” என்றார்.

கௌரி மாதங்க அரசரை பார்த்து, “நன்றி அரசே. என்ன இருந்தும் இளவரசி வன்னி சிறுப்பிள்ளையல்லவா? கண்விழித்ததும், பேரரசரே என்ற போதும் அவள் அறியாதவர்கள் சுற்றி இருப்பது கண்டு அவள் திடுக்கிட கூடும். அதுதான் கவலையுற்றேன்.” என்று தன் மனக் கவலை முகத்திலும் தெரிய சொன்னார்.

அதனை கேட்டு மாதங்க அரசி புன்னகைத்து, “தாங்கள் சிம்ம அரசை சேர்ந்தவர் என்ற போதும், தங்களின் சீடன் பரி இளவரசி மீது தாங்கள் அன்பு அபரீவிதமாக இருக்கிறது. தங்களுக்கு கவலையிருந்தால், இளவரசி வன்னியின் காவலர்களோ அல்லது சேவகர்களோ பேரரசரின் தங்கும் மாளிகைக்கு சென்று காத்திருக்க செய்யலாம்.” என்றாள்.

கௌரி மாதங்க அரசியின் பதிலில் இது நல்ல யோசனை என்று உணர்ந்து, “நன்றி அரசி. இது சரியான யோசனைதான். காவலர்களைவிடவும், இளவரசர் சாரங்கன் சென்றால் வன்னி இயல்பாக இருக்க கூடும்.” என்று சொல்லியபடி தன் அருகிலிருந்து சாரங்கன்புரம் திரும்பினார்.

இளவரசர் சாரங்கன். பேரரசர் மாளிகைக்கு சென்று அவர் சொல்லும் போது வன்னியை அழைத்து வர முடியுமா?” என்று கேட்டாள் கௌரி.

சாரங்கனும் வன்னியின் நிலை குறித்து கொஞ்சம் கவலையுடன்தான் இருந்தான். அதனால் கௌரி அவனிடம் கேட்டதும், “நிச்சயம் குருவே.!” என்று கரம்குவித்து சொல்லிவிட்டு, “மாதங்க அரசர் அரசியே! பேரரசரின் தங்கும் மாளிகைக்கு என்னை அழைத்து செல்ல யாரையேனும் ஏற்பாடு செய்ய முடியுமா?” என்று கேட்டான்.

மாதங்க அரசி, “நிச்சயம்.” என்று சொல்லி முடிக்குமுன்னே, “தந்தையே, அன்னையே நான் இளவரசர் சாரங்கனை அங்கு அழைத்து செல்கிறேன்.” என்றாள் அல்லி. அவளது ஆர்வதை பார்த்து வாய்விட்டு சிரித்த மாதங்க அரசர், “சரி அப்படியே செய் அல்லி. கனகன் இளவரசியுடன் செல்.” என்று கனகனுக்கும் ஆணையிட்டான்.

கனகன், “உத்தரவு அரசே!” என்றான். அல்லி கனகன் உடன் வருவதை என்னி முகம் கருத்து உதடு பிதுக்கி அக்கறையில்லை என்பது போல் முன்னோக்கி நடந்தாள். அவள் பின் சாரங்கனும் கனகனும் நடந்துச் சென்று பேரரசர் ஓய்வெடுக்கும் மாளிகைக்கு வந்து சேர்ந்தனர்.

அந்த அறைக்கு வெளியில் நின்று கரணியன் வருவதற்காக மூவரும் காத்திருந்தனர். கொஞ்சம் நேரத்தில் உள் அறையிலிருந்து கரணியனும் வந்தான். அவனை பார்த்ததும் பிரகாசமுடன் முன் சென்ற அல்லி சுற்றம் உணர்ந்து உடனே முகத்தை இயல்பாக்கி, “தளபதி கரணியன். இளவரசி வன்னியை அழைத்துச் செல்ல இளவரசர் சாரங்கன் வந்திருக்கிறார்.” என்றாள்.

கரணியன், “இளவரசி அல்லி. இளவரசர் சாரங்கன் வணக்கம். இளவரசி வன்னி இன்னமும் உறங்கிக கொண்டிருக்கிறார். பேரரசர் பரி அரசின் இராஜகுரு வரும் வரை அவருடன் வன்னி இருக்கட்டும் என்று ஆணையிட்டிருக்கிறார். அதனால் கவலையில்லாமல் தாங்கள் சென்று ஓய்வெடுத்துக் கொள்ளுங்க.” என்றான்.

சாரங்கன் ஒரு நொடி செய்வதறியாது குழம்பி, “தளபதி கரணியன், இது என்னுடைய ஆன்ம இணைப்பு கடவுச் சொல். இளவரசி வன்னியை ஒருவேளை இடையில் அழைத்துச் செல்ல வேண்டுமென்றால் என்னை அழையுங்கள். இளவரசி வன்னியை வேறு யாருடனும் அனுப்ப வேண்டாம்.” என்றான்.

சாரங்கனின் பதிலில், கரணியனின் கண்ணில் ஒரு மின்னல் வந்து மீண்டும், “உத்தரவு இளவரசே!” என்றான். அதன் பிறகு சாரங்கன் அவன் அறை வந்து சேர, அல்லியும் கனகனும், கரணியனிடம் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு அவர்களும் அவரவர் ஓய்விடம் சென்றனர்.

அவர்கள் சென்றதும் பேரரசரின் அறைக்கு வெளியில் காவலர்களுடன் மற்றொரு காவலனாக நின்ற கரணியன் மனதில் முடிச்சு விழ, ‘பரி இளவரசி சாதரணமான பெண்ணல்ல.’ என்று அவனுக்குள்ளே முனுமுனுத்துக் கொண்டான்.

வன்னி எந்தவித இடையூறுமில்லாமால் சில நாழிகைகள் உறங்கி எழுந்தாள். தூக்கம் கலைந்து கண்கள் கசக்கி எழுந்தவள் சட்டென உறங்குவதற்கு முன்பு நிகழ்ந்த நிகழ்வுகள் நினைவு வர திடுக்கிட்டு விழி விரித்து எழுந்து அமர்ந்தாள்.

பேரரசரின் கைகளிலே உறங்கிவிட்டதை எண்ணி சற்று பயந்துதான் போனாள். ஆனால் அதற்கும் மேலாக புது இடமாக ஏதோ அறையில் மெத்தையில் தான் எப்படி வந்து உறங்கினோம் என்று நினைவு வராமல் போக இன்னமும் திகிலுடன் அந்த அறையின் சுற்றும் முற்றும் பார்த்தாள்.

அப்படி பார்த்தவள் அறையின் மத்தியில் மேஜை மீது ஒரு கையை வைத்து தன் கன்னத்துக்கு கையை தாங்கலாக்கி வன்னியை புன்னகையுடன் பார்த்திருந்த பேரரசரை பார்த்து விக்கித்து மெத்தையிலிருந்து இறங்கி தரையில் முட்டிப் போட்டு,

மன்னிக்க வேண்டும் பேரரசே! பரி இளவரசி மரியாதையில்லாமல் பேரரசரின் மடியிலே உறங்கிவிட்டாள். பேரரசர் எனக்கு தண்டனை வழங்குகள்.” என்றாள்.

வன்னியின் செயலில் சின்ன சிரிப்பை உதிர்த்து, “மன்னிக்கவா? தண்டிக்கவா? பரி இளவரசி இரண்டையும் எம்மிடம் கேட்டு நின்றாள் யாம் என்ன செய்ய இயலும்?” என்றான் விக்ரமன்.

வன்னிக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. குழம்பி நிமிர்ந்து பேரரசரை பார்த்தாள். பேரரசர் வன்னியை பார்த்து புன்னகைத்தவிதமாக இருந்தார். வன்னி தயங்கி, “தங்களின் விருப்பப்படி செயுங்கள் பேரரசே!” என்றாள்.

ம்ம்..” என்ற பேரரசர். “இங்கு வா…” என்றார். வன்னி எழுந்து பேரரசரின் அருகில் சென்று அவர் எதிரில் நின்றாள். பேரரசர், “உமது வலது கையை எம் முன் நீட்டு.” என்றார்.

வன்னியும் அவளது கையை நீட்டினாள். பேரரசர் வன்னியின் மணிகட்டை தொட்டு அவளது உடலில் அவரது ஆன்மீக விழிப்பை செலுத்தினார். உடனே எச்சரிக்கையுற்ற வன்னி உடனே அவளது கைகளை பேரரசரின் கைகளிலிருந்து விலக்க முயன்றாள்.

ஆனால் பேரரசரின் பிடியும், அவளது உடலுள் சென்ற அவரது ஆன்மீக விழிப்பும் அவளை விக்ரமனிடமிருந்து விலக விடவில்லை. கண்கள் மூடி வன்னியின் நாடியை ஆராய்பவர் போல, “சந்திரர் சொல்லியது போல் உமது எலும்புகள் வெள்ளி எலும்பு வகை.

உலகின் எம்மூலையில் இருந்தாலும் எவ்வளவு சிறியதாக ஆன்மீக ஆற்றல் சுற்றத்தில் இருந்தாலும் அதனை எளிதில் உறிஞ்சி விடுவாய். ம்ம்!!” என்று முனுமுனுத்தான் விக்ரமன்.

வெள்ளி எலும்பு என்றதும் நேற்று கனவு சக்கரத்தில் கேட்ட அந்த குரல் நினைவுவர பேரரசர் என்பதையும் மறந்து, “வெள்ளி எலும்பென்றால் என்ன?” என்றாள்.

வன்னியின் கேள்வியில் கண் திறந்தவர், “வெள்ளி எலும்பு பலஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை பல லட்ச கோடி யாளிகளில் ஒருவருக்கு அமையகூடிய விஷேச உடல் நிலை. அது உள்ளவர்கள் அயராது தவம் செய்தால் 15 வருடங்களில் சஞ்சீவ நிலை அடைய முடியும்.

பரி இளவரசி போல அவ்வப்போது தவம் செய்தால் 20 –லிருந்து 30 வருடத்திற்குள் 7 சக்கர நிலைகளையும் அடைந்துவிட முடியும். ஆனால் இதில் ஒரு பிரச்சனை இருக்கிறது.” என்று பீடிகையுடன் முடித்தான் விக்ரமன்.

குழப்பமும், ஆர்வமும் மேலிட, “என்ன பிரச்சனை. அதனோடு ஏன் என் குருவும் தாய் தந்தையரும் என்னை 20 வயதிற்கு 7 சக்கர நிலைகளையும் அடைந்துவிட சொன்னார்கள். அதற்கும் நீங்க சொன்ன பிரச்சனைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?” என்று கேட்டாள் வன்னி.

பாவம் சிறுப்பிள்ளையின் அறியாமையில் பேரரசருக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று மறந்தே போனாள். வன்னியின் கேள்வியில் ஒருபுருவம் உயர்த்தி தீவிரமாக வன்னியை பேரரசர் பார்த்தார்.

அவர் அப்படி பார்த்ததும்தான் தன்னுடைய தவறு புரிய உடனே தரையில் மண்டியிட்டு, “மன்னிக்க வேண்டும் பேரரசே! ஏதோ ஆர்வத்தில்…என்று வன்னி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “ஹாஹாஹ…என்று பேரரசர் சிரிக்க ஆரம்பித்தார்.

கவலை படாதே. எழுந்திரு. உமது பெற்றோர்கள் சொன்னது போல் தொடர்ந்து தவம் செய். அது மற்ற எந்த பிரச்சனைகளையும் வரவிடாமல் தடுத்துவிடும். ஆனால் உமது வெள்ளி எலும்பு குறித்து யாரிடமும் சொல்ல வேண்டாம். அது உமது உயிருக்கே பாதிப்பாக அமையலாம்.” என்றான் விக்ரமன்.

வன்னிக்கு நேற்று பேசிய அந்த குரல் மீண்டும் நினைவுவர நெஞ்சில் குளிர் பரவ ஒரு நொடி நின்றாள். இருந்தும் மனதில் இருந்த நடுக்கம் மறைத்து, “நன்றி பேரரசே. தங்களின் ஆணைபடி பரி இளவரசி நடந்துக் கொள்வாள்.” என்று கரம் குவித்து சொன்னாள் வன்னி.

ம்ம்…” என்று திருப்தியாக தலையசைத்த பேரரசர் வன்னியிடம் ஒரு சிறிய மருந்து குப்பியை கொடுத்தார். “இதனை உட்கொள். இது கருவியல்லாமல் உமது சக்கர நிலையை மறைக்கும். இதனை உட்கொண்ட பிறகு நீ நினைக்கும் சக்கர நிலையில் இருப்பதுபோல் உம்மை மற்றவர்களுக்கு உன் ஆன்மீக இதய வேர் காண்பிக்கும்.” என்றார்.

அதனை கேட்டதும்தான், ‘தான் கையில் அணிந்திருக்கும் அந்த கருவி தளபதி கரணியன் பேரரசருக்கு பரிசளித்தது.’ என்று நேற்று கரணியன் சொன்னது அவளுக்கு நினைவு வந்தது. ‘இனி இந்த கருவியை பயன்படுத்த வேண்டியதில்லை.’ என்று பெருமூச்சிவிட்டு, “நன்றி பேரரசே!” என்றாள்.

ம்ம்… அதனை உட்கொண்ட பிறகு அந்த கருவியை எம்மிடம் கொடு. தளபதி கரணியன் எமக்கு அதனை பரிசளித்தார். அது எமக்கு இனி பயன் அளிக்காத என்ற போதும், பரிசாக பெற்றதை உமக்கு பரிசளிப்பது உத்தமம் அல்ல.

இந்த மருத்துவ குப்பி எம் கைக்காப்பிலிருந்து எடுத்தவுடன் உட்கொள்ளவில்லையென்றால் அதன் பலன் இருக்காது. அதனால் இதனை உமது குருவிடம் எம்மால் அவர் கேட்ட போது அளிக்க முடியவில்லை. இப்போது அந்த கவலையில்லை என்பதால் எமது கருவியை மருந்துண்டபின் எம்மிடம் கொடு.” என்றார்

வன்னி பேரரசரின் விளக்கத்திலும் பொறுமையான பேச்சிலும் திகைத்தாள். ‘கருவியை கொடு என்று ஆணையிட்டால், அவர் மருந்து குப்பி கொடுக்கைவில்லையென்றாலும் அதனை கொடுப்பது வன்னியின் கடமை.

அப்படி இருக்க உலகிலே உயர்ந்தவர். அவரது பொருளை மீண்டும் பெற சின்ன பெண்ணான என்னிடம் விளக்கம் தருகிறார்.’ என்று எண்ணும் போதே வன்னியின் உடல் சிலிர்த்தது.

உடனே தலை வணங்கி, “உத்தரவு பேரரசே!” என்று சட்டென்று தன் கையிலிருந்த மருந்து குப்பியை வாயில் போட்டுக் கொண்டு அவளது கையிலிருந்த கருவியை கழட்டி பேரரசரின் கையில் தந்தாள்.

பிறகு என்ன செய்வதென்று புரியாமல் பேரரசரின் அடுத்த கட்டளைக்காக அவர் முன் தலை தாழ்த்தி நின்றாள். அப்போது, கரணியன் அறைக்கு வெளியிலிருந்து, “பேரரசே பரி இராஜகுரு தங்களை காண வந்திருக்கிறார்.” என்று குரல் கொடுத்தான்.

உடனே முகம் தீவிரம் அடைய, “உள்ளே வரச்சொல்.” என்று சற்று நிறுத்தி, “தளபதி கரணியன், தாங்களும் உள்ளே வாருங்கள்.” என்றார் விக்ரமன்.

அவர் குரல் ஒலித்ததும், சந்திரரும் கரணியனும், பேரரசரும் வன்னியும் இருந்த அறைக்கு வந்தனர். இருவரும் ஒருசேர, “வணங்குகிறோம் பேரரசே!” என்றனர். வன்னி இராஜ குருவை பார்த்து, “வணங்குகிறேன் குருவே!” என்றாள்.

வன்னியை இங்கு எதிர் பார்திராத சந்திரர் ஒரு நொடி திகைத்தார் பின், “இளவரசி வன்னியும் இங்குதான் இருக்கிறாரா? வணக்கம் இளவரசி.” என்றார்.

அதன் பின் பேரரசர் கரணியனிடம் வன்னியை அவளது இருப்பிடம் சேர்க்க சொல்லிவிட்டு சந்திரரை அமர சொல்லி பேச ஆரம்பித்தார். வன்னி பேரரசரையும் தனது குருவையும் இருமுறை திரும்பி பார்த்து பின் கரணியனுடன் நடக்க ஆரம்பித்தாள்.

அறையை விட்டு வந்ததும் கரணியன் ஆன்ம இணைப்பில் சாரங்கனை தொடர்புக் கொண்டு அழைத்தான். வன்னியின் மனதுள் பேரரசர் சொன்னது ஓடிக் கொண்டிருந்தது. அதனால் அவளது முகம் சிறுப்பிள்ளையின் வெகுளிதனமில்லாமல் சிந்தனை முடிச்சு நெற்றி பொட்டில் விழ தெரிந்தது.

அவளை பார்த்திருந்த கரணியன், “இளவரசியின் மனதில் என்ன குழப்பம். முகம் சுருங்க வெகு தீவிரமான சிந்தனை போல் தெரிகிறது.” என்று வன்னியின் முன் முட்டி போட்டு அவள் முகத்திற்கு நேராக தன் முகம் தெரியும்படி பார்த்துக் கேட்டான்.

திடீரென்று கரணியன் தன்முகத்தின் முன் வந்து தன்னிடம் பேசக்கூடுமென்று எண்ணாத வன்னி, “அது ஒன்றுமில்லை தளபதி கரணியன்.” என்றவள் கரணியனுக்கு எப்படி விளக்கம் தருவதென்று தடுமாறி,

முன் பின் என்னை பார்த்திராத பேரரசர் ஏன் திடீரென்று அவரது கைகளில் என்னை ஏந்த வேண்டுமென்று குழம்பிக் கொண்டிருந்தேன். வேவேறெதுவுமில்லை.” என்று மலுப்பினாள்.

கரணியன் வன்னி எதையோ மறைத்து பேச்சை மாற்ற எண்ணி இப்படி பேரரசரின் செயல் குறித்து பேசுகிறாள் என்பதை உணர்ந்து, “இளவரசி வன்னி, தாங்கள் உண்மையை மறைக்கும் போது சிவக்கும் தங்களின் முகம் தங்களின் பேச்சு மாற்றத்தை எளிதில் எனக்கு காண்பித்துவிடுகிறது.” என்று உதட்டில் புன்னகையும் கண்ணில் தீவிரமும் தெரிய கேட்டான்.

வன்னி திடுக்கிட்டாள். அவள் மேலும் எதுவும் பேசுமுன்னே சாரங்கன் அங்கு வந்துவிட வன்னி எதுவும் பேசாமல், “இளவரசர் சாரங்கன்.” என்று கரணியனை ஒதுக்கி சாரங்கனின் கைகளில் ஓடிச் சென்று அடங்கினாள். கரணியன் தான் முட்டிப் போட்டிருந்ததிலிருந்து எழுந்து நின்று திரும்பி சாரங்கனை பார்த்தான்.

இளவரசர் சாரங்கன் அழைத்ததும் உடனே இங்கு வந்து சேர்ந்துவிட்டீர்கள். இளவரசி வன்னி எதுவும் உண்ணவில்லை. அது குறித்துத்தான் அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.” என்று வன்னியை ஓரப்பார்வையில் பார்த்துவிட்டு கரணியன் சாரங்கனிடம் சொன்னான்.

சாரங்கன் கரணியனின் பேச்சில் தெரிந்த மாற்றம் உணராமல், “கவலை வேண்டாம் தளபதி. நான் பார்த்துக் கொள்கிறேன். அப்போது நாங்க வருகிறோம்.” என்றான்.

வன்னியும் மரியாதை நிமித்தமாக, “வருகிறோம் தளபதி கரணியன்.” என்றாள். கரணியன், “சரிங்க இளவரசர் சாரங்கன். இளவரசி தாங்கள் கிளம்புவதற்குள் வாய்ப்பிருந்தால் மீண்டும் சந்திப்போம்.” என்று வன்னியை பார்த்து சொன்னான்.

வன்னிக்குள் ஏனோ கரணியனின் குரல் குளிர் பரப்பியது. இருந்தும் எதுவும் சொல்லாமல் சாரங்கனின் கைகளிலே இருந்தபடி அந்த இடத்திலிருந்து நகர்ந்தாள்.

Author Note:

(1) வாமனன் பரி அரசி நண்மலரின் தம்பி. ஞிமிலியின் கணவர். வன்னியின் மாமா. தற்போதைய பரி அரசர். எனக்கு அவருக்கு வேற பெயர் முன்னாடி கொடுத்தேனானானு ஞாபகம் இல்லை. அதனால் வாமனன் புது பெயர் இங்க Add பண்ணிருக்கேன். But readers யாருக்காவது நினைவு இருந்தா சொல்லுங்க.